Friday, 9 February 2018

முதிர் காதல்

அவள் பெயர் டாக்டர் சரோஜினி.
முப்பத்திரண்டு வயது. திருமணத்தில் ஆர்வமில்லை. தனிமையில் வாழ்கிறாள்.
சிறிய வயதிலிருந்தே தனக்கென்று ஒரு நேர்கோட்டை வகுத்துக்கொண்டு வாழ்பவள். படிப்பில் நிறைய மதிப்பெண்கள் எடுத்து, ஆர்வத்துடன் தாவரவியலில் பி.எச்டி வாங்கி இன்று அவள் டாக்டரேட் பட்டத்துடன் பெங்களூர் யுனிவர்சிடியில் சிறப்பாக பணி புரிகிறாள்.
காலை ஐந்து மணிக்கே எழுந்துவிடுவாள். வீட்டினுள்ளேயே ட்ரெட் மில் வைத்திருக்கிறாள். அதில் தினமும் அரைமணிநேரம் வியர்க்க வியர்க்க ஓடுவாள். பின்பு சற்று ஓய்வு. அதன் பிறகு யோகா; ப்ராணாயாமம்; கடைசியாக ஆழ்ந்த தியானம்.
அதன்பிறகு தன்வீட்டுத் தோட்டத்தில் அரைமணிநேரம் ஒவ்வொரு செடிகொடியாகப் பார்த்து பார்த்து பராமரித்து ரசிப்பாள். அவைகளுடன் சிரித்துப் பேசுவாள். .
பிறகு வீட்டினுள் வந்து, கெய்சர் போட்டுவிட்டு, செய்தித்தாள் மேலாக படிப்பாள். மிதமான வெந்நீரில் குளித்துவிட்டு, நிதானமாக வார்ட்ரோபைத் திறந்து அதில் இருக்கும் விதவிதமான காட்டன் சேலைகளைப் பார்த்து அதிலிருந்து ஒரு சேலையை தேர்ந்தெடுத்து உடுத்திக் கொள்வாள். ஆளுயர கண்ணாடிமுன் நின்றுகொண்டு சேலையை மடிப்புக் கலையாமல் நீவி விட்டுக்கொண்டு, தலைவாரி, முகத்துக்கு மெலிதாக பவுடர் பூசியவுடன் கடைசியாக கொஞ்சமாக காலை உணவு அருந்திவிட்டு, கதவை பூட்டிக்கொண்டு யுனிவர்சிட்டிக்கு கிளம்பிவிடுவாள். அவள் தாவரவியல் ஹெச்.ஓ..டி என்பதால் யுனிவர்சிட்டி குவார்ட்டர்ஸ்லேயே பெரியவீடு கொடுத்திருந்தார்கள்.
மெதுவாக நடந்துசென்று ஒன்பதுமணி யுனிவர்சிட்டிக்கு எட்டரை மணிக்கே சென்றுவிடுவாள். உடம்பை வருடும் மெல்லிய பெங்களூர் குளிரில் நடந்து செல்வதும், நிழலான யுனிவர்சிட்டி காம்பஸில் உள்ள ஏராளமான மரங்களும், செடி கொடிகளும், அதன் பச்சைய வாசனையும் அவளுக்கு மிகவும் பிடிக்கும்.
பூ உதிர்வதுபோல டாக்டர் சரோஜினியின் அறிவுச்சேர்க்கையில் இருந்து தாவரங்கள் பற்றிய தகவல்கள் நிமிடத்தில் கொட்டும். அவளது மொத்த ஆளுமையின் வடிவமே தாவரவியல் ரசனைகள்தான். அவள் சகமனிதர்களிடம் பேச ஆரம்பித்தால், தாவரங்களைப் பற்றித்தான் அதிகம் பேசுவாள். தாவரங்கள் தவிர்த்து வேறு எந்தப் பிரக்ஞையும் அவளுள் எழுந்ததில்லை. அவளின் உலகமே தாவரமயம்.
அதனாலேயே வேறு எந்தக் கிலேசத்தாலும் உந்தப்பட்டு எந்த ஆண்மகனும் அவளின் முப்பத்திரண்டு வருட வாழ்க்கையில் தயக்கத்துடன் கூட அவளை அணுகியதில்லை. அவளினுள்ளும் அப்படியொரு எண்ணம் எந்த ஒரு ஆடவனிடத்திலும் ஏற்பட்டதில்லை.
இப்படி இருக்கும்போதுதான் பெங்களூர் யுனிவர்சிட்டிக்கு கெமிஸ்ட்ரி ஹெச்.ஓ.டியாக டாக்டர் சிதம்பரநாதன் புதிதாக நியமிக்கப்படார். தமிழகத்தின் அண்ணாமலை யுனிவர்சிட்டியிலிருந்து ரிசைன் பண்ணிவிட்டு வந்திருந்தார்.
அவருக்கு வயது முப்பத்தி ஐந்து. ஆர்கானிக் கெமிஸ்ட்ரியில் டாக்டரேட் பெற்றவர். ஊட்டி சொந்த ஊர். இன்னமும் திருமணமாகவில்லை. தனி மனித ஒழுக்கத்துடன் வாழ்ந்துவரும் சிறந்த பண்பாளர். அமைதியானவர். புதியவர் என்பதால் அவருக்கு குவார்ட்டர்ஸ் அலாட் ஆக குறைந்தபட்சம் மூன்று வருடங்கள் ஆகும்.
சேர்ந்த ஆறு மாதங்கள் கழிந்த பிறகுதான் டாக்டர் சரோஜினியை அறிமுகம் செய்துகொண்டார். இருவரும் பரஸ்பர மரியாதையுடன் பழக ஆரம்பித்தனர். சரோஜினி தமிழ்நாட்டைச் சேர்ந்தவள் என்பதால் சிதம்பரநாதனுக்கு அவள்மேல் ஒரு தனிப்பட்ட வாஞ்சை ஏற்பட்டது.
அவர்கள் சந்திக்கும்போது தமிழில்தான் பேசிக்கொள்வார்கள்.
ஒருமுறை டாக்டர் சிதம்பரநாதன் காய்ச்சலால் சில நாட்கள் அவதிப்பட்டபோது, டாக்டர் சரோஜினி ஒரு ஞாயிற்றுக்கிழமை ராஜேஸ்வரி நகரிலுள்ள அவர் வீடு தேடிச்சென்று சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு வந்தாள்.
அன்றிலிருந்து சிதம்பரநாதன் அவளை சற்றுக் கூர்ந்து கவனிக்கலானார்.
லஞ்ச் இடைவெளியின் போது அவளுடன் நிறைய பொது விஷயங்களை விவாதிக்கலானார். ஒருநல்ல சினிமாவைப் பார்த்தால், நல்ல கட்டுரை, கதைகளைப் படித்தால் அதுபற்றி சரோஜினியிடம் நிறையப் பேசுவார்.
தன் ஊட்டி வீட்டிற்கு வரச்சொன்னார். ஹில் பங்க் ரோடில் விஜய்மல்லையா பங்களாவிற்கு எதிர் பங்களாவில் அவர் வீடு என்றும்; பொட்டானிகல் கார்டன், சிம்ஸ்பார்க் அவள் பார்க்க வேண்டிய இடமென்றும் சொல்லி அழைத்தார்.
அவளுடைய பழகும் தன்மை; பொறுமை; நிதானம்; ரெளத்ரம் பழகாத அமைதி, அளவான புன்னகை ஆகியவற்றை தன் மனதிற்குள் அடிக்கடி சிலாகித்துக் கொண்டார். அவருக்குள் அவளுடைய ஆக்கிரமிப்பு அதிகரித்துக்கொண்டே வருவதை நன்கு உணர்ந்தார்.
அன்று ஒரு சனிக்கிழமை…
அரைநாள் விடுமுறை என்பதால் பலர் யுனிவர்சிட்டி பஸ்ஸில் கிளம்பிச் சென்றுவிட்டனர். இருவரும் சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு கிளம்புவதற்காக கேண்டீன் சென்றனர். அங்கு டாக்டர் சரோஜினியிடம் தனிமையில் நிறையப் பேச சிதம்பரநாதனுக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
பேச்சினிடையே தெளிவான தைரியத்துடன், “டாக்டர், உங்களை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஒரு மரியாதையான காதல் ஏற்பட்டிருக்கிறது. நீங்கள் விரும்பினால் நாம் இருவரும் திருமணம் செய்துகொண்டு ஒன்றாக வாழலாம். ஒரு நல்ல, திட்டமிட்ட அழகான வாழ்க்கையை உங்களுடன் அமைத்துக்கொள்ள விரும்புகிறேன். என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்டார்.
டாக்டர் சரோஜினி இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
எனினும் சமாளித்துக்கொண்டு உறுதியான குரலில், “நோ நோ டாக்டர் சிதம்பரநாதன், எனக்கு திருமணம் செய்துகொள்ளும் ஐடியாவே இல்லை. காதலுக்கு அடிப்படையே செக்ஸ்தான். திருமணம் என்பது ஒரு ஆணுடன் சமரசம் செய்துகொண்டு, அவனுடன் கலவி புரிந்து, பிள்ளைகள் பெற்றுக்கொண்டு…. ஐயாம் ஸாரி, கலவி என்றாலே எனக்கு மிக அசிங்கமாகத் தோன்றுகிறது. மிக அருகருகே மனிதர்களுக்கு கழிவை அகற்றத் தேவையான இரண்டு ஓட்டைகள். அந்த ஓட்டையின் ஒன்றில் கலவியாம்….உவ்வே எனக்கு அருவருப்பாக இருக்கிறது டாக்டர். ப்ளீஸ், இந்த டாப்பிக்கை இத்துடன் விட்டுவிடுங்கள். நட்பு என்கிற ஒரு புரிதலில்தான் நான் உங்களுடன் பழக முற்பட்டேன். அப்படியே நாம் தொடர்ந்தால்தான் நமக்கு நல்லது.” என்றாள்.
அதன்பிறகு அடுத்த ஒருவாரம் அவர்கள் சந்தித்துக் கொள்ளவில்லை. கேண்டீன் போனால் டாக்டர் சரோஜினி தன் நேரத்தை மாற்றிக்கொண்டு அவரை முற்றிலுமாக அவாய்ட் செய்தாள்.
அடுத்த சனிக்கிழமை காலை சரோஜினிக்கு சிதம்பரநாதனிடமிருந்து ஒரு இ-மெயில் வந்தது. அதில் –
டியர் டாக்டர் சரோஜினி,
நான் ஒருவார லீவில் ஊட்டிக்குச் செல்கிறேன்.
என் காதலை ஏற்றுக் கொள்வதும், கொள்ளாததும் உங்கள் விருப்பம். . ஆனால் காதல் என்றாலே செக்ஸ்தான் என்று நீங்கள் சொன்னதை கண்டிப்பாக மாற்றிக் கொள்ளவேண்டும்.
தாவரவியலும், உடம்பை வருடும் மெல்லிய குளிர் காற்றும் உங்களது ரசனை. அந்த ரசனை சுகமானது; ஆனந்தமானது. உங்கள் மனசுக்கு. அதன் உணர்வுகளுக்கு, இந்த சுகானுபவமான ரசிப்புக்குச் சரியான அர்த்தம்தான் காதல்.
உங்கள் வீட்டுத் தோட்டத்தின் புல்வெளியில் ஓடி ஓடி வண்ணத்துப் பூச்சி பிடிக்கின்ற உங்களுடைய ரசனை; லதா மங்கேஷ்கரின் குரலில் மயங்கும் உங்கள் ரசனையின் சுகம் – இவற்றிலெல்லாம் செக்ஸ் இருக்கின்றதா? இல்லை. ரசனை என்பது காதல்தான். செக்ஸ் அல்ல. காதல் வேறு செக்ஸ் வேறு. இரண்டையும் பிணைத்து நோக்காதீர்கள்.
செக்ஸ் என்பது ஒரு biological need. காதல் அப்படியல்ல. உடல் பூர்வமான தேவையும் அல்ல. பாலுணர்வு எல்லோருக்குமே பொதுவானது. ஆனால் காதல், ரசனை எல்லோருக்கும் பொதுவானதா? இல்லை. எல்லா மனிதர்களுமா காதலிக்கிறார்கள்? இல்லை. எனவே காதலையும், செக்ஸையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.
காதல் வயப்படும் ஆண், பெண் இருவரிடையே பாலுணர்வே கிடையாது என்பதல்ல என்னுடைய கூற்று. அந்தக் காதலுக்கு அடிப்படை அர்த்தம் செக்ஸ் அல்ல என்பதுதான் நான் சொல்ல வந்தது…
பாலுணர்வு நம் உடலில் ஏற்படுவது – அதாவது physical; ஆனால் காதலுணர்வு நம் உள்ளத்தில் உண்டாவது – அதாவது psychical. காதலே இல்லாமல் ஒருத்தியிடம் முயங்க முடியும் – அதனால்தான் சில ஆண்கள் பரத்தையரை தேடிச்செல்கிறார்கள். அதன்பிறகு அவர்களை முற்றிலுமாக மறந்தும் விடுகிறார்கள்.
உடலின் உஷ்ணமான எழுச்சியும்; இதயத்தின் ஆன்ம ரசிப்பும் ஒருகாலும் ஒன்றாகிவிடாது.
காதல் ஒரு ரசனைதான்; ஆனால் ரசனைகள் எல்லாமே காதலா? ஒரு பொருளின், இசையின், நபரின் மீது நமக்கு ரசனை உள்ளது என்றால் அந்த ரசனை என்பதுதான் முதல் கட்டம் என்பதல்ல, ரசனை நமக்கு ஏற்பட்டிருக்கிற பொருளின் மீது முதலில் ஏற்படுவது அட்மிரேஷன்தான். அந்த அட்மிரேஷன் நேற்று இன்று நாளை என்கிற தொடர்ந்த அப்பியாசத்தில்தான் ரசனையாக மலர்கிறது.
ரசனைகளின் நீட்சிதான் காதல்; காதலின் நீட்சிதான் கல்யாணம்; கல்யாணத்தின் புரிதல்கள்தான் தாய்மை. தாய்மைதான் ஒரு பெண்ணின் உச்சகட்ட ஏகாந்தம்.
ஒரு பெண்ணின் இயல்புகளை ரசிக்கின்ற ஆண்மகனை, அதே பெண்ணும் ரசிக்கும்போது ஒருமிக்கின்ற ரசனைதான்; அந்த ரசனையின் பரிவர்த்தனைதான் காதல்.
அதனால்தான் காதலில் ஜாதி, மதம், நிறம், தேசம், வயது, செல்வம், ஏழ்மை, கல்வித்தகுதி என்று எதற்குமே முக்கியத்துவம் கிடையாது.
அடுத்து நம் உடம்பில் கழிவு ஓட்டைகள் அருகருகே இருக்கின்றன என்றீர்கள். நம் உடம்பில் மொத்தம் ஐந்து ஓட்டைகள் இருக்கின்றன. அவைகளில் மூன்று நம் தலையில் அமைந்துள்ளது. அவற்றில் வாய் மட்டும்தான் நம் கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த வாயால்தான் சென்ற சனிக்கிழமை என்னை ஹர்ட் செய்தீர்கள்.
அடுத்து உடம்பின் கீழ்பகுதியில் அருகருகே இரண்டு ஓட்டைகள். அவைகளை நாம் சுத்தமாக பராமரித்து வைத்துக்கொண்டால் அதில் அசிங்கமேது? கடவுளின் படைப்பில் எல்லாமே அழகுதான். அசிங்கம், ஆபாசம் என்பது எதிலுமே கிடையாது டாக்டர்.
மறுபடியும் என் காதலுக்கு வருகிறேன்…
உங்களுடைய சிறந்த நல்ல பழக்க வழக்கங்கள், நேர்மை, தன்னம்பிக்கை , முனைப்பு ஆகியவைகளை நான் கடந்த ஒருவருடமாகப் பார்க்கிறேன். நம் திருமணத்தின் மூலம் உங்களுடைய நிரந்தர அருகாமை எனக்கு யானைபலம் என்று தோன்றியது. அவ்வளவுதான்.
நீங்கள் என்னை விரும்புகிறீர்களா இல்லையா என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியாவிடினும், என்னை நீங்கள் வெறுக்கவில்லை என்பது மட்டும் நம்முடைய நட்பின்மீது உறுதியாகச் சொல்ல முடியும்.
ஒருவார லீவு முடிந்து அடுத்த திங்கட்கிழமை நான் யுனிவர்சிட்டிக்கு வருவேன். அப்போது நீங்கள் அந்த மஞ்சள் நிறப் பூக்கள் போட்ட, வெள்ளை நிற காட்டன் புடவையை அணிந்து வந்தால் நீங்கள் என் காதலை ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் கொள்வேன். அந்தப் புடவையில்தான், நான் சுகவீனமுற்றபோது என்னைப் பார்க்க என் வீட்டிற்கு வந்தீர்கள். ஞாபகம் இருக்கிறதா? அதில் ஒரு தேவதையைப்போல் இருந்தீர்கள். அதன்பிறகு அந்தப் புடவையை தாங்கள் அணியவில்லை. அடுத்ததடவை நான் உங்களைப் பார்க்கும்போது அந்தப் புடவையில்தான் நீங்கள் இருக்கவேண்டும்.
என்னுடைய இந்த அணுகுதலில் நேர்மை இருப்பதாக நம்புகிறேன். நம்முடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கும் உங்களுடைய பதில் மெயில் எதிர்பார்த்து காத்திருப்பேன்.
ரசனையுடன்,
எஸ்.சிதம்பரநாதன்
அந்தக் கடிதத்தை சரோஜினி திரும்பத்திரும்ப படித்தாள். தனக்குள் சிரித்துக்கொண்டாள். அவருக்கு பதில் மெயில் அனுப்பக் கூடாது; திங்கட்கிழமை அவர் சொன்ன புடவையைக் கட்டிக் கொள்ளக்கூடாது என்று நினைத்துக் கொண்டாள்.
ஒருவாரம் சென்றது…
அடுத்த சனிக்கிழமை காலை தன்னுடைய ஊட்டி வீட்டில் சிதம்பரநாதன் பல் தேய்த்துக் கொண்டிருக்கும்போது அவரது நினைவு சரோஜினியைச் சுற்றி சுற்றியே வந்தது.
ஈ.மெயில் அனுப்பி ஒருவாரமாகியும் அவளிடமிருந்து பதில் இல்லை. தவித்துப்போனார். மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. இனி கடைசி சந்தர்ப்பம் திங்கட்கிழமை அவள் அணிந்துவரும் அந்தப் புடவைதான்….
யோசனையில் இருந்தபோது வாசலில் ஒரு டாக்ஸி வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய டாக்டர் சரோஜினியைப் பார்த்ததும் மகிழ்ச்சியில் அதிர்ச்சியடைந்தார்.
“என்ன டாக்டர்… ஆச்சரியமாக இருக்கா? உங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கத்தான் திடீர்னு கிளம்பி உங்க வீட்டுக்கே வந்தேன். காதல் என்றாலே ஆச்சர்யங்களுடன் தொடரும் இன்பமான ரசனைதானே? அதனால்தான் சனிக்கிழமையே உங்களைப் பார்க்க ஓடி வந்துவிட்டேன்.”
அழகாகச் சிரித்தாள்..
மஞ்சள் நிறப் பூக்கள் போட்ட அதே வெள்ளைநிற காட்டன் சேலையை அணிந்திருந்தாள்.

No comments:

Post a Comment