Sunday, 4 February 2018

ரோஜாப்பூ

"என்ன மாதிரி யாருமே அவ்ளோ தில்லா தன் காதல சொல்லிருக்க மாட்டாங்க......"

ஆம்.... என்னை மாதிரி யாருமே தன் காதலை அத்தனை துணிச்சலாக காதலிக்கும் பெண்ணிடம் சொல்லி இருக்க மாட்டார்கள்.....

நான் உன்னிடம் காதல் சொன்ன நாளை நினைவிருக்கிறதா.... அது ஒரு கனா காலம்..... நம்மில் அனைவருமே அந்தக் காலத்தை கடந்துதான் வந்து இருக்கிறோம்........சிலருக்கு அது ஓடை.... சிலர்க்கு அது நீர்வீழ்ச்சி.... எனக்கு.. இரண்டும் கடந்த பெருங்காட்டு பேரருவி.......நினைவுகளை அசை போடுவதில் உள்ள சுவாரஸ்யமே அந்த நினைவுகளில் அவ்வப்போது உள்ளே புகுந்து சரி செய்து கொள்ளலாம் என்பதுதான்..... வெறும் நினைவுகளில் சிக்கிக் கொண்ட காதலின் முனையில் தொங்கிக் கொண்டிருக்கும் சிறு பிள்ளையின் மனதை தேடித்தான் இந்தப் பயணமே.... பயணங்கள் எப்போதுமே சாலைகள் சார்ந்தது அல்ல.... தூரங்கள் சார்ந்தது....

நானும் நீயும் நமக்கான பயணத்தில் வெகு தூரம்.... நினைவுகளில் கூட புள்ளியாகத் தெரியும் தூரத்தில் ஆளுக்கொரு திசையில் வந்து விட்டோம்.... வந்து விட்ட எல்லாமுமே வந்து விட்டவைகளா.. என்ற கேள்வி நொடியில் எல்லாம்... முதல் முறை பார்த்த ஞாபகம்... முகம் முழுக்க பூத்த ஞாபகம்.... வந்து வந்து போவதை எத்தனை தூரங்களினாலும்.... மறைக்கவே முடியாத அதியசத்தைதான் இங்கே காதல் என்கிறேன்.... காதல் ஒன்னும் கடவுள் இல்லையடா .... என்று கூறும் அதே சமயத்தில் அது நினைவுகளின் கூடாரம் என்பதை மறுக்க முடியுமா....அது உதிர்ந்து விழுந்த சருகுகளின் உடைதலின் கதறல் என்பதை கடந்து விட முடியுமா.... காற்றுக்கும் கவிதைக்கும் பொருள் கூறிய காதலை சுமக்கத்தான் வேண்டியுள்ளது, காலம் மட்டும்.... பேரழுகையை தரும் அதே காதலில்... சிறு புன்னைகையும் சாத்தியமே.... நீ என் சுண்டு விரல் பற்றிக் கொண்ட பொழுதை கடந்து விடும் மறதியைத் தேடியே ஆண்டுகள் இத்தனை ஓடி விட்டன.. ஆனாலும்.. தோள் சாய்ந்து கொண்ட உன் சுவாசம். இன்னும் பேரலையாய் என் செவி எங்கும் இரைகிறது.....

உன் வகுப்பறைக்கு வந்து உன் டெஸ்கில் ரோஜா பூவை வைத்து விட்டு.." நான் உன்னை காதலிக்கிறேன்... நீ என்னை காதலிப்பதாக இருந்தால் இந்த பூவை தலையில் சூடிக் கொண்டு வா....."- என்று சொல்லி விறு விறுவென வெளியே வந்த அந்த நாள்.. இப்போது நினைத்தாலும் பயந்து கொண்டே பூக்கள் உதிரும் நாள்....இதுல என்ன தில் என்று யோசிக்கும் நொடியில் இன்னொன்றையும் கூற வேண்டும் அல்லவா.......... நீ 12வது படிக்கிறாய்.... ... நான் 11வதுதான் படிக்கிறேன்... அதன் பிறகு அந்த பூ வகுப்பறைக்கு வெளியே மண் பூசிய இதழ்களாக சிதறிக் கிடந்தது, கண்ணீரின் ஆழ் கடல்....அதன் பிறகு 2 மாதங்கள் உன்னை நான் பார்க்கவே இல்லை.. நீ அப்படி வந்தால் நான் இப்படி போய் விடுவேன்... நீ எப்படி வந்தாலும் நான் எப்படியும் போய் விடுவேன்.... சட்டென ஒரு நாள், ஒரு பெண் புத்தரைப் போல... கடிதம் கொடுத்திருந்தாய்.. காதல் எல்லாம் செய்யும் என்று நம்பிய தருணம் அது... மிதக்க தோன்றியது..... அடுத்த நாளே வகுப்பறையில், காலையில் நேரத்திலேயே சந்தித்துக் கொண்டோம்.. ஆனால் அன்று மதியமே நமது காதல் பள்ளி முழுக்க பரவி இருந்தது... நாம் அதை சந்தோசமாகத்தான் எதிர் கொண்டோம்... காதல்.... காதல்...... கமல் சொல்வதைப் போல.. காதல்...எல்லா புனிதங்களின் ஒட்டு மொத்தம்..... அவ்ளோ அழகு...இல்லையா.... மூக்குத்திக்காரி!

ஒற்றைப் பார்வைக்கு காத்திருக்கும் நிஜமான அன்பும்... விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும்... அந்த வயதில் மட்டுமே நிஜமாக இருப்பதாக நான் உணர்கிறேன்... நமக்குள் தன் முனைப்பு சார்ந்த சண்டையே வந்தது கிடையாது... நாம் பழகிய 1 வருட காலத்தில்,நாம் பரி மாறிக் கொண்டது அன்பு மட்டுமே... அதிகாரம் கூட இல்லாத வயது அது.. மிக அற்புதமான காதலை சுமந்து திரிந்தோம்...... ஆளுக்கொரு பட்டாம் பூச்சி அல்லது ஒரே பட்டாம் பூச்சியை சேர்ந்தே சுமந்து கிடந்தோம் என்பதே நினைவுகளின் ரீங்காரம்......நீ எழுதிய கடிதங்களை எல்லாம் கவிதையாக்கி விட்டேன்... நான் எழுதிய கடிதங்களை என்ன செய்தாய் பெண்ணே....?

நீ சென்ற தட்டச்சு நிலையத்துக்கே நானும் வந்தேன்.. நம் இருவரின் செருப்பும் அருகருகே இருக்கும்....... நம் மிதிவண்டிகள் வெளியே அருகருகே முட்டிக் கொண்டு நிற்கும்... எங்கு இருந்தாலும் இருவரின் பார்வையும் மாறி மாறி சந்தித்துக் கொண்டேயிருக்கும்...... மிக, மிக சந்தோசமாக நான் இருந்த நாட்கள் அவை...நீயும் தான். ஒரு நாள் அருகருகே அமர்ந்து தட்டச்சு செய்து கொண்டிருந்த போது காகிதம் முழுக்க உந்தன் பெயரையே தட்டச்சு செய்து கொண்டிருக்க, "விஜி என்ன டைப் பண்ற"- என்று சார் அருகே வர.. சர சரவென பேப்பரை மாற்றி விட்டு வேறு பேப்பர் வைத்து தடுமாறிய பொழுதில்... யாரும் அறியா நேரத்தில் என்னைப் பார்த்து.... சடக்கென்று கண் அடித்து விட்டு, சத்தமே வராமல் குலுங்கி சிரித்த உன் முகமும்.. மனமும்....... அது தான் தீரவே முடியாத நதியை கொட்டிக் கொண்டே இருக்கிறது என் காலமெங்கும்.........

கழுத்தை என் பக்கமாகவே பார்த்தபடி அத்தனை ஒய்யாரமாக நீ நடக்கையில்..... அதுவும் ஜடையைத் தூக்கி முன்னால் போட்டுக் கொள்ளும் லாவகம்... சின்ன மூக்கில் மூக்குத்தி மின்ன, பெரிய விழிகளில்... கண் சுருக்கி சிரிக்கும் தருணம்,... முழுக்கவே என் கவிதைகளின் மிகப் பெரிய ஏதேன் தோட்ட விதைகளாகவே இன்று யோசிக்கிறேன்....ஒரு பெரு மழை நாளில்.. அல்லது... ஒரு அடர் வெயில் நாளில்.. அல்லது.. ஒரு ஏதோ ஒரு பெண்ணின் மிதி வண்டிப் பயணம் கூட என்னை உன்னைப் பற்றிய சிந்தனைக்குள் கொண்டு சென்று விடும்..... நான் செல்லும் தூரங்களில் எல்லாம் நீ ஏதோ ஒரு மைல் கல்லில் கண் சுருக்கி சிரித்துக் கொண்டுதான் இருக்கிறாய்... முதல் முறையாக உன்னைப் பிடித்து போய் உன்னைப் பின் தொடர்ந்த நாள் இன்றும் ஒரு சனிக்கிழமை மதியமாகவே இருக்கிறது....

எனக்காகவே பரிட்சை சரியாக எழுதாமல் தேர்ச்சி பெறாமல் போக நினைத்தவள் நீ... உந்தன் அன்பில் ஒரு போதும் துளி கூட குறைந்தது இல்லை...நீ ஒரு போதும் என்னை ஒதுக்கியதே இல்லை.. நான்தான்.. காரணமே இல்லாமல் கடந்து வந்தேன்.. இன்று வரை எனக்கே தெரியாத விளையாட்டுத்தனம் நிறைந்த ஒரு கரடு முரடான, ஒரு வழிப் பாதையை சுமந்த சில நாட்களில் உன்னை விட்டு வெகு தூரம் வந்திருந்தேன்.....

நீ கடைசிக்கு முன்பாக எழுதிய கடிதத்தில்.....
"ஒரு முறை பார்க்க வில்லை என்றால் உயிர் போய் விடும் என்பாயே..
இன்று ஒரு முறைப் பார்த்து விட்டால்
உயிர் போய் விடும் என்றா ஒதுங்கிப் போனாய்..."- என்று எழுதி இருந்தாய்.......

இன்றும் செத்து விட சொல்லும் வரிகள் அவை...
தெரியாத காட்டுக்குள் பறவைக் கூட்டைக் கலைத்து விட்டு ஓடி வந்துவிட்ட வேட்டைக்காரன் என்ற பெயரைத்தான் விதியாகப் பெற்று இருக்கிறேன்......

எத்தனை அழகாய் ட்ரெஸ் போட்டுக் கொண்டு போனாலும்... "இத விட.. உனக்கு யூனிபார்ம்தான் அழகு"- என்பாயே.. ஒரு முறை வா போ என்பாய் .. மறு முறை வாங்க போங்க என்பாய் .. கேட்டால்... அதற்கும் சிரிப்பாய் .... கடையாக உன்னை சந்தித்த நாளில் சிலுவை டாலர் போட்ட கயிறை உன் கழுத்தில் போட்டு விட்டேன்.... அது இன்னும் இருக்கிறதா என்று தெரியவில்லை.... குறைந்தபட்சம் வீட்டில் ஒரு மூலையில் அல்லது உன் நினைவுக் குறிப்பிலாவது இருக்குமா என்று யோசிக்கிறேன்.....

நினைவுகள் முன் பின்னாக ஒரு முரணைப் போல உடன் பட்டுக் கொண்டே பயணிக்கிறது தோழி...... தேடும் சாயல்களில் எல்லாம் நான் உன்னையே கொண்டாடுகிறேன்.. நீ எங்கு இருக்கிறாய்.. என்ன செய்கிறாய்....எதுவும் தெரிய வேண்டாம்.. இது உனக்காக எழுதிய ஆனால் நீ படித்து விடவே கூடாத கடிதமாகவே இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.. கிளறிக் கொண்டே இருப்பதில் ஆறாத வடுவான என் சுமைக்குள் நீ பொக்கிஷமாகவே இரு.. இருக்க வேண்டும் என்பதே என் ஆவல்...... நீ என் தேசத்து ராணியாக நம் பள்ளி சாலைகளில், நம் வகுப்பறைகளில்... நம்மை அங்கீகரித்த நம் நண்பர்களின்... உறவுகளின்.. மனதுக்குள் ஏதாவது ஒரு மூலையில் உன் புன்னைகையோடு என் கண்ணீரும், அல்லது என் வழி மறந்த கண்களுடன் உன் பேரழுகையும் இருக்கும் என்றே நம்புகிறேன்...

இருள் சூழ்ந்த வெளி எங்கும்.. என் எண்ணச் சிறதல்கள்... யாருடனும் பகிரவே முடியாத முழுக் கதையையும்.... மாற்றி மாற்றி எழுதி கடிதமாக்கிய வர்ணங்களின் குழைவாக உன் முகம் காணும் ஒரு நொடி வேண்டும்.... தூரத்தில் இருந்து பார்த்து விட்ட ஞாபகங்கள் இன்னும் இன்னும் உயிர் கொடுக்கும் என்றே மீண்டும் மீண்டும் நம்புகிறேன்... நீ இல்லாத என் சாலையெங்கும் நான் பெரிதாக அல்லாத மௌனங்களாகவே உன்னை கண்டு கொண்டிருக்கிறேன்... அந்த ஒற்றை மூக்குத்தியின் மினுக்கில் என் கதையும் இருக்கும் என்றே நம்புகிறேன்......குறைந்த பட்சம் என் ஞாபகம்.... கடப்பதும் கடந்தவைகளும் காதலில் ஒரு புள்ளிதானே தவிர முழுக் காதலும் அல்ல.... சொல்லவும் முடியாத சொல்லிவிட்ட ஒன்றாகவும் ஒரு போதும் இருப்பதில்லை.. கூடடைந்த பறவைக்கு வழியெங்கும் தெரிந்த கடலில் மிச்சம் இருப்பது உயிர் மட்டுமே. உயிர் என்பதே இங்கு காதல் தான்... சுகமான நினைவுகளின் புள்ளிக்குள் குவிவது என் காதலின் பறவையாகவும் உன் நினைவுகளின் கடலாகவும் இருக்கிறது....

இதைக் கடிதம் என்று எடுத்துக் கொண்டு படிக்கும் போது... கண்ணுக்கே தெரியாத இறகொன்று அசைக்கும் காற்றோடு.. உன் சுவாசமும்..... பார்வையும்.. என்னை வந்து கொண்டேயிருப்பது போல.. நீண்ட நினைவுக்குள் ஒரு கடிதமாகவே நீள்கிறேன்....

உனக்கு சேர்த்து இனி நானே எழுதும் கடிதத்தில் முதல் வரி இப்படித்தான் இருக்கும்...

"என்னமோ தெரில உன்ன பிடிக்கும்...."

No comments:

Post a Comment