Thursday, 22 February 2018

அசைவமும் சைவமும்

ஒரு அடர்ந்த காட்டில் சிறந்த ஞானமும் தபோவலமும் மிக்க ஒரு முனிவர் காட்டில் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார்.
அந்த ஞானியானவர் எல்லா மிருகங்களிடமும் அன்போடு பழகுவார் மற்றும் உடல்நலம் இல்லாத மிருகங்களுக்குத் தன் தவ வலிமையால் மூலிகைச்சாறு கொண்டு மருத்துவம் செய்வார் இதனால் கொடிய குணம் கொண்ட புலி, சிறுத்தை போன்ற மிருகங்கள் எல்லாம் அந்த ஞானியை தினந்தோறும் அவரை வணங்கிச் செல்லும்.
இப்படி நடந்து கொண்டிருக்கும் வேளையில் பக்கத்து நாட்டு மன்னன்  வேட்டை என்ற பெயரால் காட்டில் வாழும் விலங்குகளையெல்லாம் கொன்று குவித்து வந்தார் இப்படி காட்டில் வாழும் மிருகங்களின் எண்ணிக்கை குறையக் குறைய காட்டில் மக்கள் நடமாட்டம் அதிகரித்தது மனிதர்கள் எல்லாம் அங்கேயே வீடு கட்டிக் கொண்டும் காட்டில் உள்ள மரங்களை எல்லாம் வெட்டி விற்பனை செய்தும் மற்றும் முயல் மான் போன்ற சாதுவான பிராணிகளைக் கொன்று புசித்துக் கொண்டும் வாழத் தொடங்கினார்கள் காடு மெல்ல மெல்ல அழியத் தொடங்கியது.
நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது அப்பொழுது சைவஉணவையே உண்டு வாழும் ஒரு முயல் குட்டி தவம் செய்து கொண்டிருந்த முனிவரின் முன் வந்து கை கட்டி நின்றது. நிஷ்டை முடித்த முனிவர் முயல் குட்டியைப் பார்த்து நலம் விசாரித்தார்.
முயல், “ஐயா இந்த மனிதர்கள் எல்லோரும் என் போன்ற சாதுவான முயல், மான் போன்ற பிராணிகளைக் கொன்று புசிக்கத் தொடங்கி விட்டார்கள். அதனால், நாட்டில் எங்கு பார்த்தாலும் பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது. இதற்குத் தாங்கள் தான் ஒரு நல்வழி செய்ய வேண்டும் என்றது.
இதை கேட்டமாத்திரத்தில் முனிவரின் கண்களில் நீர் வழிந்தது. முனிவர் இதைத் தடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார்.

அப்பொழுது காயப்பட்டு நலிந்த உடலோடு ஒரு நரி அவ்வழியாக வந்து கொண்டிருந்தது.
இதைக் கவனித்த முனிவர் அந்த நரியைத் தன் அருகில் அழைத்து அதற்கு மருந்து போட்டுக் குணப்படுத்தினார். தன் உடல் முழுமையாகக் குணம் அடைந்ததும், நரி முனிவரைப் பார்த்து, “ஐயா, நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் கூறுங்கள்” என்றது.
முனிவர், “நீ தான் தந்திரத்தில் சிறந்தவன் ஆயிற்றே… பக்கத்து நாட்டில் வசிக்கும் மன்னனிடம் சென்று தந்திரமாகப் பேசிக் காட்டில் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் சென்றால், சிறிய நாட்டை ஆளும் தாங்கள் பேராசனாக வாழாலாம் என்று கூறு…” என்றார்.
“அப்படியே செய்கிறேன்” என்று முனிவரிடம் விடைபெற்ற நரி நாட்டை நோக்கிப் புறப்பட்டது.
அரண்மனையை வந்தடைந்த நரியானது வாயிலில் நிற்கும் காவலாளியைப் பார்த்து ஐயா நான் வெகுதொலைவில் இருந்து வருகிறேன். ஒரு முக்கியமான செய்தி கொண்டு வந்துள்ளேன் மன்னரை அவசரமாகப் பார்க்க வேண்டும் என்றது.
அதற்கு காவலாளி பக்கத்து அறையில்தான் மன்னர் உள்ளார், ஆகையால் நீ சீக்கிரம் செய்தியைக் கூறி வா என்று மன்னர் இருக்கும் இடத்தை காண்பித்தார்.
நரியானது உள்ளே சென்று முனிவர் கூறிய செய்தியை மன்னரிடம் கூறியது. நரி கூறிய செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் பேராசை கொண்ட மன்னன் காட்டிற்கு நரியுடன் புறப்பட்டான்.
மன்னன் வருவதை உணர்ந்த முனிவர் மன்னனுக்கு நற்சிந்தனை வர அவன் வரும் போதே அவனுக்கு நோயை வரவழைத்தார்.
நோயால் அவதிப்பட்ட உடலோடு முனிவர் இருப்பிடத்தை அடைந்தான் மன்னன். முனிவரைப் பார்த்து மன்னன் தபோசிலரே எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. என்னால் எப்படி பக்கத்து நாட்டோடு போரிட்டு ஜெயிக்க முடியும் என்று சொல்லிக் கொண்டே முனிவரின் காலில் விழ்ந்து வணங்கினான்.
முனிவர் மன்னனைப் பார்த்து, “நீங்கள் காட்டில் வாழும் முயல், மான் போன்றவற்றின் இறைச்சிகளை உண்பீர்களா…?” என்று கேட்டார்.
“ஆமாம்” என்றான் மன்னன்.
“அதுதான் உங்கள் நோய்க்குக் காரணம். இன்று முதல் நீங்கள் சைவ உணவையே சாப்பிடத் தொடங்குங்கள். நீங்கள் முன்பிருந்ததை விட அதிகப் பலம் வாய்ந்தவராக விளங்குவீர்கள்” என்றார் முனிவர்.
மன்னனும் முனிவர் கூறியது போல் சைவ உணவையே உண்டு மகாபலம் வாய்ந்தவனாக விளங்கினான். பல நாடுகளைத் தன் வீரத்தால் வென்று பேரரசனாக வாழ்ந்து வந்தான்.
மன்னன் சைவ உணவுக்கு மாறியதைக் கண்டு மக்களும் சைவ உணவுக்கு மாறி விட்டனர்.
காட்டிலிருந்த முயல்,மான் போன்ற சாதுவான விலங்குகளும் பிழைத்துக் கொண்டன

No comments:

Post a Comment