Monday, 5 February 2018

மூணு சக்கர வண்டி

ரயில் நிலையம் செல்லும் பாதை. ஐம்பது வயது மதிக்கத்தக்க பிச்சைக்காரன் ஒருவன் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். அப்போது அந்தப் பாதையில் அறுபது வயதுள்ள ஒருவர் வந்தார். அவரிடம் பிச்சைக்காரன் கை நீட்டினான்.
""உனக்கெல்லாம் பிச்சை போட்டா பாவம்'' என்றார் பெரியவர்.
பிச்சைக்காரன், ""ஏன்?'' என்று கோபத்துடன் கேட்டான்.
""உன்னைவிட வயசு எனக்கு அதிகம். நான் என்ன வேலை செய்றேன் தெரியுமா?'' என்று கேட்டார் பெரியவர்.
பிச்சைக்காரன் விழித்தான்.
""மூணு சக்கர வண்டியில தண்ணீர்க் குடங்களை ஏற்றி வீடு வீடாகப் போடுறதுதான் என் வேலை. என் கூட வேலை செய்ய வர்றீயா?'' என்றார் அவர்.
பிச்சைக்காரன் அந்த இடத்தைவிட்டு அவசரமாக நடையைக் கட்டினான்.
====================================================================
பிறர் எழுதும் கடிதங்களைப் படிப்பதில் முரளிக்கு ரொம்ப ஆர்வம். இது தவறான செயல் என்று பலரும் கண்டித்தார்கள். இருந்தாலும் சந்தர்ப்பம் கிடைக்கும்போது பிறர் கடிதங்களைப் படித்து வந்தான்.
அலுவலகத்தின் உணவு இடைவேளை. வெளியூரில் உள்ள தன் மனைவிக்கு சுப்பையா கடிதம் எழுதிக் கொண்டிருந்தார். அப்போது முரளி ஃபைலைத் தேடுவதைப் போல சுப்பையாவின் பின்புறம் நின்று கடிதத்தைத் திருட்டுத்தனமாகப் படித்துக் கொண்டிருந்தான்.
திடீரென்று தேள் கொட்டியதைப் போல அந்த இடத்தைவிட்டு அவசரமாக நகர்ந்தான்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த சுப்பையாவின் அடுத்த சீட்காரரான சேகர், ""சுப்பையா சார்... நீங்க எழுதிக்கிட்டிருந்த லெட்டரைத் திருட்டுத்தனமாப் படிச்சுக்கிட்டிருந்த முரளி, திடீரென்று அந்த இடத்தைவிட்டுப் போயிட்டான். ஏன்னு தெரியலை''
""எனக்குத் தெரியும்'' என்ற சுப்பையா, புன்முறுவலுடன் சொன்னார்:
""நான் என் வொய்ஃபுக்குக் கடிதம் எழுதியதை முரளி படிக்கிறான்னு எனக்குத் தெரியும். உடனே இப்படி எழுதினேன். நான் கடிதம் எழுதிக் கொண்டிருப்பதை ஓர் அயோக்கியன், முட்டாள் ரகசியமாக படித்துக் கொண்டிருக்கிறான். எனவே முடித்துக் கொள்கிறேன் என்று எழுதினேன்''

No comments:

Post a Comment