Tuesday 27 February 2018

இயற்கை

நதி வட்டப்பனையோலைத்
தடுக்குகளை முடைகிறது
கர அலையால்..

மரம் கலைத்துக் கலைத்து
சீட்டுகளாய் வீசுகிறது
கொத்து கொத்து இலைகளை..

வானில் உலவும் நிலா
வெள்ளிக்கிண்ணமாய்க் கவிழ்கிறது
ஓடும் புனல் நதியில்

சில்வண்டுகள் ஒளிந்திருந்து
மீட்டிக் கொண்டிருக்கின்றன
இசைக் கோர்வையை ..

கோட்டான்கள் உச்சஸ்தாய் ஓசையில்
ஆக்குகிறது நெளிக்கோலங்களாய்
நீர் நிரம்பிய குளத்தை..

துருவன் இருக்கும் இடம் மாறாது
நோக்குகிறான் அச்சில் சுழலும்
அகண்ட பூமியை..

Sunday 25 February 2018

மொட்டை போடுதல்

அட என்னய்யா திருப்பதிக்கு போய் மொட்டை போடுகிறிர்கள் பழனிக்கு சென்று முடி காணிக்கை செலுத்துகிறீர்கள் உடம்பில் உள்ளதை கடவுளுக்கு அர்பணிக்க வேண்டுமென்றால் நாக்கை வெட்டிக்கொள்கிறேன் கையை துண்டித்துக் கொள்கிறேன் என்று வேண்ட வேண்டியதுதானே அதில் என்ன வெட்டிபோட்டால் மீண்டும் வளரும் முடியை காணிக்கையாக தருகிறேன் என்று கடவுளையும் உங்களையும் ஏமாற்றிக்கொள்கிறீர்கள் என்று சில அதிமேதாவிகள் கிண்டல் அடிக்கிறார்கள் அவர்களின் அறியாமையை பார்த்தால் நமக்கு சிரிப்புத்தான் வருகிறது
அர்பணிப்பு காணிக்கை நேர்த்திக்கடன் என்றால் என்ன? எனக்கு பிரிமானத்தை நான் நேசிப்பதை நான் உயர்வாக மதிப்பதை துறந்துவிடுவது தான் அர்பணிப்பு மற்றும் காணிக்கையாகும் ஆப்பிரிக்கா நீக்ரோவும் சரி நம் ஊர் அமிதாப்பச்சனும் சரி மனிதனாக பிறந்த அனைவருமே தான் அழகாக இருப்பதாக நம்புகிறார்கள் அந்த நம்பிக்கையில் தான் தினசரி ஒரு வேளையாவது கண்ணாடி முன் நின்று நம்மை அழகு பார்த்துக்கொள்கிறோம் அலங்காரப்படுத்தியும் கொள்கிறோம் தலைமுடியை வித விதமாக சீவி சிங்காரித்து பார்ப்பதில் நமக்குள்ள சந்தோசம் வேறு எந்த அலங்கார வேலையிலும் கிடைப்பதே இல்லை
ஒரு காலத்தில் தலையில் எண்ணெய் தேய்த்து முன்நெற்றியில் சுருள் விழ எம்.ஜி.ஆர்,சிவாஜி போல தலைவாரிகொள்வது தமிழக இளைஞர்களுக்கு நாகரீகத்தி சிகரம் அதன் பிறகு ரஜினி காந்த் போல முன்நெற்றி முற்றிலுமாக மறையும்படி தலைவாருவது பெரிய அழகு பெண்களை பற்றி கேட்கவே வேண்டாம் சரோஜா தேவி கொண்டை ஸ்ரீதேவி பின்னல் நதியா கிராப் என்று ஏகப்பட்ட மாடல்களை சொல்லிக்கொண்டே போகலாம் இன்றைய இளைஞர்களும் இதற்கு விதிவிலக்கல்ல தனக்கு பிடித்தமான திரைப்பட நடிகர்களை பின்பற்றி முடி அலங்காரம் செய்து கொள்கிறார்கள்
இதை ஏன் இந்த இடத்தில் சொல்கிறேன் என்றால் தலைமுடியை அலங்காரம் செய்து பார்ப்பதில் நமக்கு அதிகப்பிரியம் என்பது ஒருபுறம் இருந்தாலும் நமது அழகை கூட்டி தருவதோ குறைத்து காட்டுவதோ தலைமுடியில் தான் இருக்கிறது என அழகு கலை நிபுணர்களும் நாமும் கூட சொல்கிறோம் எவ்வளவு தான் புத்திசாலியாக இருந்தாலும் தலையை வாராமல் பரட்டையாக போட்டுக்கொண்டு திரிபவர்களை என்ன இவன் சுத்த பயித்தியமாக இருப்பானோ என்றுதான் விமர்சிக்கிறோம் அந்த அளவு மனித தோற்ற பொலிவிற்கு முடி என்பது அத்தியாவசியமாக இருக்கிறது
அத்தகைய தலைக்கேசத்தை கடவுளுக்கு காணிக்கையாக செலுத்துவதில் நிறைய அர்த்தம் இருக்கிறது தான் என்ற ஆணவம் நான்தான் அழகு என்ற கர்வம் மொட்டை போடுவதால் அழிகிறது இறைவனின் சன்னிதானத்தின் முன் அவன் அருள்பிரவாகத்தின் முன் எதுவுமே ஒரு பொருட்டல்ல என்ற ஞானம் பிறக்கிறது சரீரத்தின் அழகின் மீது மறையும் இச்சை சரீரத்தின் மீதே இச்சை இல்லாமல் போய்விட செய்கிறது மனம் ஒருஞான வைராக்கியத்தை பெறுகிறது அந்த மனமாற்றத்தை தான் கடவுளும் விரும்புகிறார் நமது இந்து மதமும் விரும்புகிறது
மனிதர்களின் உடல்கள் மாறி முன்னேறி எந்த பயனும் இல்லை மனது மாறவேண்டும் மனமாற்றம் நடந்தால் மட்டும் தான் சமூகமாற்றம் ஏற்ப்படும் நாட்டில் உள்ள பிரச்சனைகள் எல்லாம் தலைகாட்டாமலே பறந்து போய்விடும் அதனால் மட்டுமே இந்து மதம் எந்த சடங்கையும் மனமாற்றத்தை மையமாக கொண்டே செய்கிறது இதை புரிந்து செய்தாலும் புரியாமல் செய்தாலும் நிச்சயம் காலம் கடந்தாவது பலன் கிடைக்கும் எனவே ஏளனம் செய்வதற்கோ ஏகடீகம் பேசுவதற்கோ இந்து மத சடங்கில் எந்த குறையும் இருக்காது வேண்டுமானால் மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கு அது தெரியாது என்று சொல்லலாம்
நினைத்தவுடன் திருப்பதிக்கோ பழனிக்கோ சென்று மொட்டை போட்டுக்கொள்பவர்கள் நம்மில் ஏராளம் பேர் உண்டு அவர்களில் சிலர் என்னிடம் ஒரு கேள்வியை கேட்கிறார்கள் நாம் நினைத்தவுடன் மொட்டை போட்டுக்கொள்கிறோம் அதை பற்றி கவலை இல்லை ஆனால் நமக்கு குழந்தை பிறந்தவுடன் அந்த குழந்தைக்கு எந்த வயதில் முதல் மொட்டை போடுவது என்று நம்மில் பலருக்கு தெரியவில்லயே அதை நீங்கள் தெரிவிக்கலாமே என்று கேட்டார்கள் அதானால் தான் இந்த பதிவே எழுதுகிறேன்
இது வாஸ்தவம் தான் இன்றைய இளைஞர்கள் பலர் அம்மா அப்பாவோடு வாழ வில்லை வாழவிரும்பினாலும் பல தொழில் காரணங்களால் முடிவதில்லை திருமணமானவுடன் மனைவியுடன் தொழில் நிமித்தம் வெளியூர் சென்றுவிடுகிறார்கள் அங்கே நமது சாஸ்திர சம்பிராதயங்கள் தெரியாமல் அல்லல் படுகிறார்கள் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டியது நமது கடமையல்லவா!
குழந்தைக்கு முதல் முறையாக முடியிறக்குவதை சூடாகர்ம சமஷ்காரம் என்று நமது இந்து மத சாஸ்திரங்கள் சொல்கின்றன இந்த சமஷ்காரத்தை குழந்தை பிறந்து ஒருவருடம் பூர்த்தியான பிறகு செய்ய வேண்டும் இரட்டைபடை வயதில் குழந்தைக்கு சடங்கு செய்யக்கூடாது என்று பெரியவர்கள் சொல்வதால் மூன்று வயதிலோ ஐந்து வயதிலோ செய்ய வேண்டும் சிலர் முடியிறக்குவது என்றவுடன் தலைமுடியில் சிறுபகுதியை மட்டும் கோவிலில் வெட்டிவிட்டால் போதும் என நினைத்து செய்கிறார்கள் இது தவறு குழந்தையின் தலையை முழுமையாக மளித்து மொட்டை போட்டு விடவேண்டும்
மொட்டை போட்டவுடன் தலையில் வெண்ணை அல்லது தயிர் ஆடையை தேய்த்த பிறகே சந்தனம் பூசவேண்டும் இப்படி சந்தனம் பூசுவது குழந்தையின் தகப்பனார்தான் செய்யவேண்டும் என சாஸ்திரங்கள் வலியுறுத்துகின்றன இதன் தத்துவம் இறைவனின் சித்தமும் தன் சித்தமும் குழந்தையை வழி நடத்தட்டும் என்பதாகும் அதாவது இந்த குழந்தைக்காக இதன் வளர்ச்சிக்காக இதன் பாதுகாப்பிற்காக நான் பாடுபடுவேன் என தகப்பனார் சத்திய பிரமாணம் எடுத்து கொள்வதே உள்ளர்த்தம்.

ஐம்பெருங்காப்பியங்கள்

சிரமதில் திகழ்வது சீவக சிந்தாமணி
செவிகளில் மிளிர்வது குண்டலகேசி
திருவே நின் இடையணி மணிமேகலையாம்
கரமதில் மின்னுவது வளையாபதியாம்
கால் தனில் ஒலிப்பது சிலப்பதிகாரம்
கண் கண்ட ஐம்பெரும் காவியத்திலகமே

ஆபரணங்கள்

தமிழர்கள் அணிந்து வந்த அணிகளின் (நகைகளின் பெயர்):
தலையணி
தாழம்பூ, தாமரைப்பூ, சொருகுப்பூ, சாமந்திப் பூ, அடுக்குமல்லிப் பூ, இலை, அரசிலை, பதுமம், சரம், பூரப்பாளை, கோதை, வலம்புரி.
காதணி
தோடு, கொப்பு, ஓலை, குழை, இலை, குவளை, கொந்திளவோலை, கன்னப்பூ, முருகு, விசிறி முருகு, சின்னப்பூ, வல்லிகை, செவிப்பூ, மடல்.
கழுத்தணிகள்
கொத்து, கொடி, தாலிக்கொடி, கொத்தமல்லிமாலை, மிளகு மாலை, நெல்லிக்காய் மாலை, மருதங்காய் மாலை, சுண்டைக்காய் மாலை, கடுமணி மாலை, மாங்காய் மாலை, மாதுளங்காய் மாலை, காரைப்பூ அட்டிகை, அரும்புச்சரம், மலர்ச்சரம், கண்டசரம், கண்டமாலை, கோதை மாலை, கோவை.
புய அணிகலன்கள்
கொந்திக்காய்.
கை அணிகலன்
காப்பூ, கொந்திக்காய்ப்பூ, கொலுசு.
கைவிரல் அணிகலன்கள்
சிவந்திப் பூ, மோதிரம், அரும்பு, வட்டப்பூ.
கால் அணிகலன்கள்
மாம்பிஞ்சு கொலுசு, அத்திக்காய் கொலுசு, ஆலங்காய் கொலுசு.
கால்விரல் அணிகள்
கான் மோதிரம், காலாழி, தாழ், செறி, நல்லணி, பாம்பாழி, பில்லணை, பீலி, முஞ்சி, மெட்டி.
ஆண்களின் அணிகலன்கள்
வீரக்கழல், வீரக் கண்டை, சதங்கை, அரையணி, அரைஞாண், பவள வடம், தொடி, கங்கணம், வீரவளை, கடகம், மோதிரம், கொலுசு, காப்பு, பதக்கம், வகுவலயம், கழுத்தணி, வன்னசரம், முத்து வடம், கடுக்கண், குண்டலம்

கொக்கு Vs பசு

பசுமையான புல்வெளி அது. அங்கு பசுக்கள் பல மேய்ந்து கொண்டிருந்தன. கொக்குகள் அவற்றின் அருகே நின்று பறக்கும் பூச்சிகளை பிடித்துத் தின்றன.
கொக்குகள் அவ்வப்போது மாடுகளின் முதுகில் ஏறும், வாய் அருகில் செல்லும். இது மாடுகளுக்குத் தொல்லையாக இருந்தது.
அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு பசுவிற்குக் கொக்குகளின் இந்தச் செயல் பிடிக்கவில்லை.
ஒருநாள் அந்தப் பசு கொக்குகளைக் கண்டித்தது. “நான் புற்களைக் கடிக்கும் இடத்தில் நீங்கள் நின்று கொண்டு என்னைத் தொல்லை செய்யக்கூடாது” என்று எச்சரித்தது.
‘இல்லை நண்பா!, எங்களை விரட்டாதீர்கள். புற்களின் அடியில் பூச்சிகள் மறைந்து கொள்ளும் எங்களால் அவைகளை எளிதாகப் பிடிக்க முடியாது. ஆனால் நீங்கள் புற்களை மேயும்போது உங்கள் மூச்சுக்காற்று பட்டுப் புற்கள் அசையும். அப்பொழுது மறைந்திருக்கும் பூச்சிகள் அங்குமிங்கும் ஓடும். அதை நாங்கள் எளிதாகப் பிடித்து உண்டு எங்கள் பசியாற்றிக் கொள்வோம். உங்களுக்கு எந்தத் தொல்லையும் கொடுக்க மாட்டோம்’ என்று கொக்கு பணிவுடன் சொன்னது.
“அப்படியானால் நீங்கள் பூச்சி பிடித்துச் சாப்பிட நாங்கள் உதவணுமா? முடியவே முடியாது. எனக்கு இடையூறாக இருக்கும் எதையும் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். கடைசியாக நான் கொக்கு கூட்டத்தையே எச்சரிக்கிறேன். என் பக்கம் யாருமே வரக்கூடாது. மீறி வந்தீர்களென்றால் என் கால்களால் உங்களை மிதித்து நாசம் செய்துவிடுவேன். ஜாக்கிரதை” என்று கடும் கோபத்தோடு அந்தப் பசு கொக்குகளை விரட்டியடிக்கப் கொக்குகள் பயந்தோடின.
அன்றிலிருந்து அந்தப் பசு புல்மேயும் இடத்திற்கு எந்த கொக்கும் செல்லவில்லை. அந்தப் பசு ஒரு முறை தன்னுடன் மேய்ந்து கொண்டிருந்த இன்னொரு பசுவிடம், “பார்த்தாயா நண்பா, என்பக்கம் எந்தக் கொக்கும் வருவதில்லை. எந்தத் தொல்லையும் எனக்கு இல்லை. நான் இப்போது மகிழ்ச்சியாகப் புல் மேய்கிறேன். உனக்கு அந்தக் கொக்குகளை விரட்ட தைரியமில்லை. அதனால்தான் உன்னிடம் அவைகள் வாலாட்டுகின்றன” என்றது.
“நீ சொல்லுவதுபோல் கொக்குகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை” என்றது மற்றொரு பசு.
“சரி உன் விருப்பம்” என்று சொல்லிவிட்டு அந்தப் பசு மேயத் தொடங்கியது.
சில நாட்கள் கழித்து, கொக்கு நெருங்காத பசு மிகுந்த பசியுடன் புற்களை மேய்ந்து கொண்டிருந்தது.
அப்போது அதன் மூக்கினுள் ஒரு விட்டில் பூச்சி நுழைந்து விட்டது. உடனே பசு மூச்சுவிட முடியாமல், பங்கர வலியால் அலறித் துடித்தது.
அருகில் அமர்ந்து இரை தேடிக் கொண்டிருந்த கொக்கு ஒன்று பறந்து வந்து, ‘பசு நண்பா, எதற்காக இப்படிக் கத்துகிறாய்’ என்றது.
‘என் மூக்கினுள் ஏதோ ஒரு பூச்சி நுழைந்துவிட்டது. என்னால் வலி தாங்க முடியவில்லை’ என்றது.
“கவலைப்படாதே நண்பா, நீ கிழே படுத்துக்கொள். நான் என்னவென்று பார்க்கிறேன்’ என்றது கொக்கு.
பசு சாய்ந்து படுத்ததும், பசுவின் மூக்கைப் பார்த்த கொக்கு, “ஒன்றுமில்லை நண்பா, பூச்சி உள்ளே தள்ளி செல்லாமல் ஓரமாகத்தான் இருக்கிறது. இதோ நான் அதை எடுத்துவிடுகிறேன்” என்ற கொக்கு தனது நீண்ட அலகால், மூக்கினுள் நுழைந்த பூச்சியை எடுத்து வெளியேப் போட்டது.
பசு வேதனை குறைந்து நிம்மதி அடைந்தது. “நண்பா உன் உதவிக்கு நன்றி. உங்களை என்னருகே சேர்க்காத போதும், ஆபத்து என்று வந்த போது எனக்கு உதவி செய்து விட்டீர்கள். பூச்சிகள் எங்கள் மூக்கினுள் புகுந்து விடக்கூடாது என்ற இயற்கை ஏற்பட்டால்தான் நீங்கள் எங்களுடன் அமர்ந்து இரை தேட அனுமதிக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை இப்போது புரிந்து கொண்டேன். என்னை மன்னித்து விடுங்கள். மீண்டும் உங்கள் இனத்தினர் என்னுடன் அமர்ந்து இரை தேட வேண்டும்” என்றது பசு.

விதுர நீதி.


ஒருவன், ஒரு பெருங்காட்டுக்குள் நுழைந்தான். எவராலும் சுலபமாக நுழையமுடியாத காடு அது. அங்கு போன அந்த மனிதன், நன்றாகச் சுற்றுமுற்றும் பார்த்தான். சிங்கம், புலி, கரடி முதலான துஷ்ட மிருகங்கள் கூட்டம் கூட்டமாக இருந்தன. ஒரே கூச்சல். அந்த மிருகங்களின் நடமாட்டத்தையும் கூச்சலையும் கண்டு, மனிதன் மிகவும் பயந்துபோய் அங்குமிங்குமாக ஓடித் தப்பிக்க முயற்சி செய்தான்.
அப்போது மிகவும் கோரமான அவலட்சணமான - யாவரும் வெறுக்கக்கூடிய பெண் ஒருத்தி ஓடி வந்து, தன் இரு கைகளாலும் அந்த மனிதனைக் கட்டிப் பிடித்தாள். அவளைப் பார்த்துப் பயந்துபோன அந்த மனிதன், திமிறிக்கொண்டு இன்னும் வேகமாக ஓடினான். அவ்வாறு ஓடும்போது, புற்களும் காட்டுக்கொடிகளும் மூடி மறைத்திருந்த பாழுங்கிணறு ஒன்றில் தொபுக்கடீரென விழுந்தான். நல்லவேளையாக, கிணற்றுக்குள் நெருங்கி வளர்ந்திருந்த கொடிகளைப் பிடித்துத் தொங்கி, தப்பித்தான். அவன் மனம் தடக் தடக் என்று பயங்கரமாக அடித்துக் கொண்டது. அப்பாடா! எப்படியோ தப்பிவிட்டோம்! என்ற எண்ணத்தில், கிணற்றில் தொங்கிய மனிதன் கீழே பார்த்தான்.
அங்கே... அவன் காலடியில் பெரிய பாம்பு தலையைத் தூக்கியபடி பார்த்துக்கொண்டிருந்தது. தொங்கிக்கொண்டிருந்த மனிதன், அந்தப் பாம்பைப் பார்த்ததும் மேலும் நடுங்கினான். எப்படியாவது மேலே போய்விடலாம் என்ற எண்ணத்தோடு தலை உயர்த்தி மேலே பார்த்தபோது, கிணற்றின் மேலே இன்னொரு ஆபத்து காத்துக் கொண்டிருந்தது. ஆறு முகங்களும் பன்னிரண்டு கால்களுமாக, பல வண்ணங்களுடன் காணப்பட்ட ஒரு பெரிய விசித்திர யானைதான் அது.
அந்த மனிதன் செய்வதறியாது திகைத்துக்கொண்டிருக்க... கரக்... கரக்... என்று சத்தம் கேட்டது. பார்த்தால்... அவன் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்த வேர்களைக் கறுப்பும் வெளுப்புமான எலிகள் கடித்து, அறுத்துக் கொண்டிருந்தன. இவ்வளவு சோதனைகளும் ஒருபுறம் இருக்க, அவன் சற்றும் எதிர்பார்க்காத இன்னொன்றும் நடந்தது. ஆம்... உச்சியில் இருந்த தேன்கூடு ஒன்று திடீரென்று சிதைந்து, அதில் இருந்து ஒரு சில தேன் துளிகள், ஆபத்தான நிலையில் தொங்கிக்கொண்டு இருந்த அந்த மனிதனின் நாவில் விழுந்தன. அவ்வளவுதான்... அனைத்து துயரங்களையும் மறந்தவன், தேன் துளிகளைச் சுவைக்க ஆரம்பித்து விட்டான்.
என்னய்யா மனுஷன் அவன்! பைத்தியக்காரன்! தேனைச் சுவைக்கும் நேரமா இது! அந்த மனிதன் வேறு யாருமல்ல; நாம்தான்! கதையை மற்றொரு முறை நன்றாகப் படியுங்கள். அது சொல்லும் எச்சரிக்கை புரியும்.
கதையில் வரும் காடு என்பது சம்சாரக்காடு. பிறப்பும் இறப்பும் நிறைந்தது. காட்டில் உள்ள துஷ்ட மிருகங்கள் பலவிதமான நோய்களைக் குறிக்கும். அந்த நோய்களில் இருந்து தப்பிப் பிழைப்பதற்காக நாம் படாத பாடுபடுகிறோம். அப்போது அனைவராலும் வெறுக்கப்படும், கோரமான பெண் ஒருத்தி கட்டிப் பிடிக்கிறாள் என்று கதையில் பார்த்தோம் அல்லவா? அந்தப் பெண்- முதுமை, கிழத்தனம் என்பதன் குறியீடு. முதுமை வந்து நம்மைத் தழுவிக் கொள்கிறது. அதில் இருந்தும் தப்பிப் பிழைத்து ஓடலாம் என்று பார்க்கிறோம். ஆனால், உடம்பு நம்மை விடமாட்டேன் என்கிறது. கிணறு என்பது உடம்பைக் குறிக்கும். செயலற்றுப் போய் அதில் விழுந்து விட்டோம். கிணற்றில், கீழே இருக்கும் பெரும் பாம்பு எமன். அவன் எல்லாப் பிராணிகளின் உயிரையும் வாங்கும் அந்தகன். மனிதன் பிடித்துக்கொண்டு தொங்குவதாகச் சொன்ன வேர்கள், நமக்கு உயிர் வாழ்வதில் இருக்கும் ஆசைகள். அதனால்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆறு முகங்கள், பன்னிரண்டு கால்கள் உள்ள யானை என்று ஒன்றை பார்தோமே.. அந்த யானை என்பது ஓர் ஆண்டு; ஆறு முகங்கள் என்பது (2 மாதங்களைக் கொண்ட) ஆறு விதமான பருவங்களைக் குறிக்கும்; பன்னிரண்டு கால்கள் என்பது பன்னிரண்டு மாதங்களைக் குறிக்கும். மனிதன் பிடித்துத் தொங்கிக்கொண்டிருந்த வேர்களை அறுக்கும் கறுப்பு - வெளுப்பு எலிகள், இரவையும் பகலையும் குறிக்கும். இரவும் பகலும் ஆன காலம் நம் வாழ்நாட்களை அரித்துக்கொண்டிருக்கின்றன.
தேன் துளிகள் என்பது காமச்சுவை. பலவிதமான விஷயங்களிலும் ஈடுபட்டு ஏதாவது சந்தோஷம் துளி அளவு கிடைத்தாலும் போதும்; அனைத்தையும் மறந்துவிடுகிறோம். அதாவது, தப்பவே முடியாத நோய்கள், முதுமை, காலம் போன்றவற்றில் இருந்தெல்லாம் தப்பிவிட்டதாக நினைத்து, சின்னஞ் சிறு சந்தோஷங்களில் நம்மை மறந்து இருக்கிறோம்.

Thursday 22 February 2018

கீதோபதேசம்

" சொல்வதெல்லாம் கீதை என்று
நினைப்பவன் அல்ல
ஆனால் கீதையை சொல்ல வேண்டும்
என்று நினைப்பவன் "

பார்வையே ....

‘பார்க்கும் பார்வை சரியாக இருந்தால்,
காணும் காட்சி நல்லனவாக இருக்கும்…’
என்றனர் மகான்கள்.

மனித மனங்களை ஆசை, கோபம், ஆணவம்
ஆட்டி வைப்பது போல், பிறரிடம் குறை காணும்
மனோபாவமும் சிலரை ஆட்டி வைக்கிறது.
இத்தகைய குறை காணும் மனோபாவம்
நீங்கினால், அவன் எல்லாருடைய அன்புக்கும்,
மரியாதைக்கும் உரிய மனிதன் ஆகி விடுவான்.
இதற்கு ஒரு கதையே இருக்கிறது…

பூலோகத்தில், கிருஷ்ண தேவன் என்று ஒரு
அரசன் ஆட்சி புரிந்து வந்தான். அவன் நற்
குணங்களின் பிறப்பிடம்; எத்தகைய கெட்ட
தன்மையிலும் நல்லதையே காணும் சிறப்பு
குணம் கொண்டவன்.

இம்மன்னனின் குணங்களைப் பற்றி ஒருநாள்
தேவர்களிடம் சிலாகித்து பேசினான் தேவேந்திரன்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த தேவர்களில்
ஒருவன், ‘இந்த தேவேந்திரன் சொல்லும் அந்த
அரசனை சோதித்து பார்க்க வேண்டும்…’ என்று
நினைத்தான்.

அதன்படி, கிருஷ்ணதேவன் நாட்டிற்கு வந்தவன்,
அரசன் வரும் வழியில், ஒரு நாயைப் போல் தன்
வடிவத்தை மாற்றி, இறந்து கிடப்பது போல்
படுத்திருந்தான்.
கெட்டதிலும் நல்லதையே பார்

செத்துக் கிடந்த நாயின் உடம்பில் இருந்து துர்
நாற்றம் வீசியது. அந்தப் பக்கம் போன அனைவரும்,
நாற்றத்தை தாங்க முடியாமல், மூக்கை பொத்திய
படி சென்றனர்.

அதேசமயம் அந்தப்பக்கம் வந்த அரசன், நாயின்
துர்நாற்றத்தை பொருட்படுத்தாமல், ‘இறந்துபோன
இந்த நாய்க்குத்தான் எத்தனை அழகான பல்வரிசை…’
என்று சொல்லி, ஆச்சரியப்பட்டான்.

அதைக்கேட்டதும், நாயாக இருந்த தேவன், தன்
சுயவடிவோடு, மன்னன் முன் தோன்றி, ‘மன்னா…
பிறர் குற்றத்தைப் பார்க்காத நீயே உண்மையில்
நற்பண்புகள் வாய்ந்தவன்…’ என்று சொல்லி
பாராட்டினான்.

அந்த மன்னன், கிருஷ்ண தேவனைப்போல, இறந்து
கிடக்கும் விலங்குகளிடம் கூட, நல்லதை பார்க்கும்
மன பக்குவம் நமக்கு இல்லாவிட்டாலும்,
பரவாயில்லை. நம்முடன் இருக்கும் சக மனிதர்களின்
குற்றங்குறைகளைப் பார்க்காமல், அவர்களிடம்
இருக்கும் நல்லதையே பார்க்கும் அளவிற்குப்
பக்குவம் பெற முயல்வோம்.

புழு

காட்டில் முனிவர் ஒருவர் இருந்தார். அவருக்கு புழு பூச்சிகளிடம் பேசும் திறன் உண்டு.
ஒரு நாள் ஒரு புழு அவர் இருந்த வழியே வேகமாக ஊர்ந்து போனது. இவர் பாட்டுக்கு இருக்க வேண்டியது தானே சும்மா இருக்காமல் அந்தப் புழுவிடம் பேச்சுக்கொடுத்தார்.
சிலருடைய குணாதிசயமே இதுதான் சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி என்கிற கதையாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிடுவதே வேலை. இந்த முனிவரும் வம்புக்கென்றே புழுவிடம் பேச்சுக்கொடுத்தார்.
ஏ புழுவே என்ன கொள்ளை போகிறதாம் இவ்வளவு வேகமா போறே மெதுவா போக வேண்டியது தானே என்றார். சாமி கொஞ்சம் கிழக்கே திரும்பிப் பாருங்க அங்கே வேகமாக ஒரு வண்டி வர்றது தெரியுதா? அது என் மேலே ஏறினா நான் நசுங்கிப் போயிடுவேன். என்னை காப்பாத்த நான் வேகமாக ஊர்ந்து கிட்டு இருக்கேன். உமக்கென்ன அதில் கஷ்டம் ? என்றது புழு.
நீ இருந்து என்ன பண்ண போறே? செத்து தான் தொலையேன் உன்னாலே இந்த உலகத்துக்கு என்ன லாபம்/ என்று புழுவிடம் சொன்னார் முனிவர்.
சாமி உமக்கு என் மேலே பொறாமை. அதனால் கோபத்துலே ஏதேதோ பிதற்றுகிறீர் உம்மைப் போல நான் காலையிலே சந்தியாவந்தனம் பண்ணனுமினு கட்டாயமில்லே. மத்தியானம் சாப்பிடும் முன் சுவாமிக்கு பூஜை காட்ட அவசியமில்லே. எனக்கு சொந்தக்காரங்களையோ நண்பர்களையோ உபசரிக்கணும்ங்கற தேவையுமில்லே. என் பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சு வைக்கணுங்கிற கடமையும் இல்லே.
எந்த தேவையும் இல்லாத என்னைப் பார்த்து எல்லாத்தேவையும் உடைய உம்மைப் போன்ற மானிட ஜென்மங்களுக்கு பொறாமை இருக்கத்தானே செய்யும் என்று சொல்லிவிட்டு வேகமாக போய்விட்டது அந்தப் புழு.
இந்த உலகத்திலேயே பொறாமைப்படுகிற ஒரே ஜென்மம் மனித ஜென்மம் தான். முனிவரைப் போல அடுத்தவன் என்ன செய்கிறான் என்று நாம் கவனிக்கக் கூடாது. நம் வேலையை நாம் ஒழுங்காகப் பார்த்தால் போது. அவன் தான் நல்ல மனிதன். இதை விட்டு அடுத்தவர் வாழ்வில் மூக்கை நுழைத்தால் புழு கூட மனிதனை மதிக்காது.

அசைவமும் சைவமும்

ஒரு அடர்ந்த காட்டில் சிறந்த ஞானமும் தபோவலமும் மிக்க ஒரு முனிவர் காட்டில் ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார்.
அந்த ஞானியானவர் எல்லா மிருகங்களிடமும் அன்போடு பழகுவார் மற்றும் உடல்நலம் இல்லாத மிருகங்களுக்குத் தன் தவ வலிமையால் மூலிகைச்சாறு கொண்டு மருத்துவம் செய்வார் இதனால் கொடிய குணம் கொண்ட புலி, சிறுத்தை போன்ற மிருகங்கள் எல்லாம் அந்த ஞானியை தினந்தோறும் அவரை வணங்கிச் செல்லும்.
இப்படி நடந்து கொண்டிருக்கும் வேளையில் பக்கத்து நாட்டு மன்னன்  வேட்டை என்ற பெயரால் காட்டில் வாழும் விலங்குகளையெல்லாம் கொன்று குவித்து வந்தார் இப்படி காட்டில் வாழும் மிருகங்களின் எண்ணிக்கை குறையக் குறைய காட்டில் மக்கள் நடமாட்டம் அதிகரித்தது மனிதர்கள் எல்லாம் அங்கேயே வீடு கட்டிக் கொண்டும் காட்டில் உள்ள மரங்களை எல்லாம் வெட்டி விற்பனை செய்தும் மற்றும் முயல் மான் போன்ற சாதுவான பிராணிகளைக் கொன்று புசித்துக் கொண்டும் வாழத் தொடங்கினார்கள் காடு மெல்ல மெல்ல அழியத் தொடங்கியது.
நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியது அப்பொழுது சைவஉணவையே உண்டு வாழும் ஒரு முயல் குட்டி தவம் செய்து கொண்டிருந்த முனிவரின் முன் வந்து கை கட்டி நின்றது. நிஷ்டை முடித்த முனிவர் முயல் குட்டியைப் பார்த்து நலம் விசாரித்தார்.
முயல், “ஐயா இந்த மனிதர்கள் எல்லோரும் என் போன்ற சாதுவான முயல், மான் போன்ற பிராணிகளைக் கொன்று புசிக்கத் தொடங்கி விட்டார்கள். அதனால், நாட்டில் எங்கு பார்த்தாலும் பாலைவனம் போல் காட்சி அளிக்கிறது. இதற்குத் தாங்கள் தான் ஒரு நல்வழி செய்ய வேண்டும் என்றது.
இதை கேட்டமாத்திரத்தில் முனிவரின் கண்களில் நீர் வழிந்தது. முனிவர் இதைத் தடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார்.

அப்பொழுது காயப்பட்டு நலிந்த உடலோடு ஒரு நரி அவ்வழியாக வந்து கொண்டிருந்தது.
இதைக் கவனித்த முனிவர் அந்த நரியைத் தன் அருகில் அழைத்து அதற்கு மருந்து போட்டுக் குணப்படுத்தினார். தன் உடல் முழுமையாகக் குணம் அடைந்ததும், நரி முனிவரைப் பார்த்து, “ஐயா, நான் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் கூறுங்கள்” என்றது.
முனிவர், “நீ தான் தந்திரத்தில் சிறந்தவன் ஆயிற்றே… பக்கத்து நாட்டில் வசிக்கும் மன்னனிடம் சென்று தந்திரமாகப் பேசிக் காட்டில் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் சென்றால், சிறிய நாட்டை ஆளும் தாங்கள் பேராசனாக வாழாலாம் என்று கூறு…” என்றார்.
“அப்படியே செய்கிறேன்” என்று முனிவரிடம் விடைபெற்ற நரி நாட்டை நோக்கிப் புறப்பட்டது.
அரண்மனையை வந்தடைந்த நரியானது வாயிலில் நிற்கும் காவலாளியைப் பார்த்து ஐயா நான் வெகுதொலைவில் இருந்து வருகிறேன். ஒரு முக்கியமான செய்தி கொண்டு வந்துள்ளேன் மன்னரை அவசரமாகப் பார்க்க வேண்டும் என்றது.
அதற்கு காவலாளி பக்கத்து அறையில்தான் மன்னர் உள்ளார், ஆகையால் நீ சீக்கிரம் செய்தியைக் கூறி வா என்று மன்னர் இருக்கும் இடத்தை காண்பித்தார்.
நரியானது உள்ளே சென்று முனிவர் கூறிய செய்தியை மன்னரிடம் கூறியது. நரி கூறிய செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் பேராசை கொண்ட மன்னன் காட்டிற்கு நரியுடன் புறப்பட்டான்.
மன்னன் வருவதை உணர்ந்த முனிவர் மன்னனுக்கு நற்சிந்தனை வர அவன் வரும் போதே அவனுக்கு நோயை வரவழைத்தார்.
நோயால் அவதிப்பட்ட உடலோடு முனிவர் இருப்பிடத்தை அடைந்தான் மன்னன். முனிவரைப் பார்த்து மன்னன் தபோசிலரே எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. என்னால் எப்படி பக்கத்து நாட்டோடு போரிட்டு ஜெயிக்க முடியும் என்று சொல்லிக் கொண்டே முனிவரின் காலில் விழ்ந்து வணங்கினான்.
முனிவர் மன்னனைப் பார்த்து, “நீங்கள் காட்டில் வாழும் முயல், மான் போன்றவற்றின் இறைச்சிகளை உண்பீர்களா…?” என்று கேட்டார்.
“ஆமாம்” என்றான் மன்னன்.
“அதுதான் உங்கள் நோய்க்குக் காரணம். இன்று முதல் நீங்கள் சைவ உணவையே சாப்பிடத் தொடங்குங்கள். நீங்கள் முன்பிருந்ததை விட அதிகப் பலம் வாய்ந்தவராக விளங்குவீர்கள்” என்றார் முனிவர்.
மன்னனும் முனிவர் கூறியது போல் சைவ உணவையே உண்டு மகாபலம் வாய்ந்தவனாக விளங்கினான். பல நாடுகளைத் தன் வீரத்தால் வென்று பேரரசனாக வாழ்ந்து வந்தான்.
மன்னன் சைவ உணவுக்கு மாறியதைக் கண்டு மக்களும் சைவ உணவுக்கு மாறி விட்டனர்.
காட்டிலிருந்த முயல்,மான் போன்ற சாதுவான விலங்குகளும் பிழைத்துக் கொண்டன

கிருஷ்ணர் உதங்கருக்கு...???!!!!

கிருஷ்ணர் பயணம் செய்து கொண்டிருந்தார். மகாபாரதப் போர் முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. நாடெங்கும் சண்டை சச்சரவு இல்லாமல் மக்களும் மன்னர் களும் அமைதியாக இருந்த சமயம் அது.
அப்போது உதங்கர் என்னும் முனிவர் வழியில் எதிர்ப்பட்டார். அவர் கிருஷ்ணரின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர். பல ஆண்டுக் காலம் காட்டில் தவத்தில் மூழ்கியிருந்த அவர் நாட்டைச் சுற்றிப் பார்க்க வந்திருந்தார்.
பல ஆண்டுகள் கழித்துக் கிருஷ்ணனைக் கண்டதில் அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. இருவரும் அன்போடு குசலம் விசாரித்துக்கொண்டார்கள். பல காலம் காட்டில் இருந்த உதங்கர் நாட்டு நடப்பு பற்றிக் கிருஷ்ணனிடம் கேட்டார். அப்படியே பேச்சு ஹஸ்தினாபுரம் பற்றித் திரும்பியது.
“கவுரவர்களும் பாண்டவர்களும் எப்படி இருக்கிறார்கள்?” என்று கேட்டார் உதங்கர்.
இந்தக் கேள்வியைக் கேட்டுச் சிரித்த கிருஷ்ணர், “உங்களுக்கு விஷயமே தெரியாதா?” என்று சொல்லிவிட்டுப் போரைப் பற்றியும் அதன் முடிவையும் சொன்னார்.
உதங்கருக்குப் பெரும் அதிர்ச்சி. “பீஷ்மர், துரோணர் எல்லாரும் செத்துப்போய்விட்டார்களா? கவுரவர்கள் எல்லாரும் செத்துவிட்டார்களா?” என்று கேட்டார்.
கிருஷ்ணர் மீண்டும் விவரமாகச் சொன்னார். சூதாட்டத்திலிருந்து தொடங்கிப் பொறுமையாக எல்லாவற்றையும் விளக்கினார்.
உதங்கருக்குக் கடும் கோபம். “கிருஷ்ணா, நீ இருந்துமா இப்படியெல்லாம் நடந்தது? நீ ஏன் தடுக்கவில்லை?” என்று கேட்டார்.
தன்னால் முடிந்த அளவு தடுத்துப் பார்த்ததாகவும் கவுரவர்கள் தன் பேச்சைக் கேட்கவில்லை என்றும் கிருஷ்ணர் சொன்னார்.
உதங்கர் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. “நீ நினைத்திருந்தால் தடுத்திருக்கலாம். எனவே இந்தப் போருக்கும் இத்தனை கொலைகளுக்கும் நீதான் காரணம்” என்று சொன்னவர், “உன்னை சபிக்கப்போகிறேன்” என்றார்.
கிருஷ்ணர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். நடந்தவை அனைத்தும் கடவுளின் விருப்பம். யாரும் அதைத் தடுத்திருக்க முடியாது என்று சொன்னார். முனிவர் கேட்பதாக இல்லை. வேறு வழியில்லை என்று நினைத்த கிருஷ்ணர் தன் விஸ்வரூபத்தைக் காட்டினார்.
விஸ்வரூப வரம்
பிரபஞ்சம் முழுவதையும் தன்னுள் அடக்கிய அந்தப் பேருருவைக் கண்டு உதங்கர் பிரமித்துப்போனார். திக்குமுக்காடினார். கண்களில் நீர் வழிய கைகளைக் கூப்பியபடி சாஷ்டாங்கமாகக் கீழே விழுந்து வணங்கினார்.
அடுத்த வினாடி கிருஷ்ணன் மீண்டும் தன் புன்சிரிப்புடன் நின்றுகொண்டிருந்தார். “கிருஷ்ணா என்னை மன்னித்துவிடு. நீ யாரென்று தெரியாமல் பேசிவிட்டேன்” என்று உதங்கர் கெஞ்சினார்.
அவர் கைகளை அன்போடு பற்றிக்கொண்ட கிருஷ்ணர், “உங்கள் கோபம் நியாயமானதுதான். உங்கள் நிலையில் இருந்திருந்தால் நானும் அப்படித்தான் பேசியிருப்பேன்” என்றார். தெய்வத்தின் திட்டத்தை யாராலும் மாற்ற முடியாது என்று மீண்டும் விளக்கினார். உதங்கர் புரிந்துகொண்டார்.
“அது போகட்டும். என்னுடைய விஸ்வரூபத்தைப் பார்த்த உங்களுக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன். ஏதாவது கேளுங்கள்” என்றார் கிருஷ்ணர்.
அதெல்லாம் வேண்டாம் என்றார் முனிவர். கிருஷ்ணர் வற்புறுத்தினார்.
“நான் சுற்றிக்கொண்டே இருப்பவன். சில சமயம் தாகத்துக்குத் தண்ணீர் கிடைப்பதில்லை. அதற்கு ஏற்பாடு செய்தால் நல்லது” என்றார் உதங்கர்.
கிருஷ்ணர் அதை ஒப்புக்கொண்டார். அதே சமயம் ஒரு நிபந்தனையும் விதித்தார்.
“தாகம் எடுக்கும்போது என்னை நினைத்துக்கொள்ளுங்கள். தண்ணீர் கிடைக்கும். ஆனால் நான் எப்படித் தண்ணீரை அனுப்பினாலும் நீங்கள் வாங்கிக்கொள்ள வேண்டும்” என்றார் கிருஷ்ணர். உதங்கர் ஒப்புக்கொண்டார்.
நாட்கள் கடந்தன. உதங்கர் ஒரு முறை பாலைவனத்தில் பயணம் செய்துகொண்டிருக்கும்போது அவருக்குத் தாகம் எடுத்தது. பக்கத்தில் தண்ணீர் கிடைக்க வழி இல்லை. அப்போது கிருஷ்ணனை நினைத்தார்.
கிருஷ்ணரின் திருவுள்ளம்
தொலைதூரத்தில் இருந்தாலும் உதங்கரின் எண்ணத்தை உணர்ந்த மாயக்கண்ணன் உடனே தேவேந்திரனைத் தொடர்புகொண்டார். உதங்கருக்கு தேவாமிர்தம் தரும்படி சொன்னார். தேவேந்திரன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. “மனிதர்களுக்கு தேவாமிர்தம் தருவதில்லையே” என்றான். கிருஷ்ணரின் வற்புறுத்தலின் பேரில் சம்மதித்தான்.
“ஆனால் என் விருப்பப்படிதான் செல்வேன்” என்றான். கிருஷ்ணர் ஒப்புக்கொண்டார்.
இந்திரன் ஒரு புலையரின் வடிவத்தில் உதங்கரிடம் சென்றான். அழுக்கான உடல், அதைவிட அழுக்கான ஒற்றை ஆடை, பஞ்சடைந்த தாடி, மீசை, கையில் அழுக்குப் பிடித்த ஒரு தகரக் குவளை, பக்கத்தில் சொறி பிடித்த நாய். இந்தக் கோலத்தில் சென்றான். உதங்கரிடம் சென்று தகரக் குவளையை நீட்டினான்.
அருவருப்படைந்த முனிவர் அவனை விரட்டிவிட்டார். மாற்றுருவில் வந்த இந்திரன் வற்புறுத்தினான். முனிவர் கேட்கவில்லை. இந்திரன் சென்றுவிட்டான்.
உதங்கருக்கு மகா கோபம். கிருஷ்ணன் இப்படிச் செய்துவிட்டானே என்று வருந்தினார். எப்படியோ சமாளித்துச் சற்றுத் தொலைவில் உள்ள ஊருக்குச் சென்று தாகத்தைத் தணித்துக்கொண்டார்.
வேறொரு நாளில் கிருஷ்ணன் மீண்டும் அவரது வழியில் எதிர்ப்பட்டார். உதங்கர் முகத்தைத் திருப்பிக்கொண்டார். புன்சிரிப்போடு நெருங்கிய கிருஷ்ணர், “என்ன முனிவரே, உங்களுக்காக இந்திரனிடம் தேவாமிர்தம் கொடுத்து அனுப்பினேன், நீங்கள் அவனை விரட்டிவிட்டீர்களே” என்றான்.
தவறை உணர்ந்த உதங்கர்
உதங்கருக்குத் தன் தவறு புரிந்தது.விஸ்வரூபம் காட்டிய பரந்தாமனே அனுப்பிய நீர் என்றால் யோசிக்காமல் எடுத்துக் குடிக்க வேண்டியதுதானே? அப்படிச் செய்ய விடாமல் உதங்கரைத் தடுத்தது எது? அவர் எவ்வளவு பெரிய ஞானி! எவ்வளவு பெரிய தவயோகி! ஆனால் ஏன் அவரால் கண்ணபிரான் அனுப்பிய அமிர்தத்தைக் குடிக்க முடியவில்லை?
ஒருவர் எவ்வளவு தவம் செய்கிறார் என்பது முக்கியமல்ல. எவ்வளவு சாஸ்திரங்களைப் படித்துக் கரைத்துக் குடிக்கிறார் என்பதும் முக்கியமல்ல. புறத் தோற்றம் முக்கியமல்ல, தோற்றத்துக்குப் பின் என்ன இருக்கிறது என்பதை உணர்வதே முக்கியம் என்பதுதான் தத்துவத்தின் பால பாடம். இதைத்தான் கிருஷ்ணர் உதங்கருக்கு உணர்த்தினார்.
உதங்கர் எவ்வளவுதான் ஞானியாக இருந்தாலும் அவருக்கு மனிதர்களிடத்தில் பேதம் பாராட்டும் தன்மை இருந்தது. தோற்றத்தை வைத்து ஒருவரை எடைபோடும் தன்மை இருந்தது. அது இருக்கும்வரை ஒருவர் கடவுளை நெருங்க முடியாது. இதைத்தான் கிருஷ்ணர் உணர்த்தினார்.

Wednesday 21 February 2018

நானிலம்

இந்தியாவின் வேறெந்த மொழிக்கும் இல்லாத பெருமை என்று நான் கருதுவது, மனிதகுல
வரலாற்றின் தொடக்கக் காலச் செய்திகளை உடைய மொழி தமிழ்மொழி ஒன்று மட்டுமே என்பதே
ஆகும்.





உதாரணமாக


மனிதகுல
வரலாறு கூறுவோர், மனிதனின் ஆதி வரலாற்றை நான்கு வகை வாழ்க்கையாக வகுத்துச்
சொல்கிறார்கள் -


(1)  
உணவு தேடும் நிலை


(2)  
வேட்டை நிலை


(3)  
உணவு பயிரிடும் நிலை


(4)  
உபரி கண்டு வணிகம்
தோன்றிய நிலை


இவை நான்குமே தமிழ் இலக்கணத்தில் வரும்

(1)  
குறிஞ்சி – உணவு தேடும்
மலைசார்ந்த மக்கள் நிலை


(2)  
முல்லை –
வேட்டையாடும் காடுசார்ந்த வாழ்க்கை


(3)  
மருதம் – உணவு பயிரிடும்
வயல்சார்ந்த வாழ்க்கை


(4) நெய்தல் – வணிகம் (உபரி)கண்ட கடல்சார் வாழ்க்கை

என இதனைச் சொல்லலாம். ஐந்தாவதான பாலை தமிழ்நாட்டில் இல்லை என்பதாலேயே
பாலை தவிர்த்த நான்கு நிலத்தையுமே “நானிலம்“ என –உலகமெனும் பொருளில்- சொல்வதுண்டு.
(பின்னர் மற்ற இடங்களில் பாலை இருப்பதால், ஐந்து நிலப்பிரிவுகளாகத் தமிழர்
சொல்வாராயினர்)

கௌரவமாக ஒரு கொள்ளை – நகைச்சுவை நாடகம்

கௌரவமாக ஒரு கொள்ளை – நகைச்சுவை  நாடகம்

                                                                     காட்சி 1

இடம்: ஜோதியின் வீடு

பாத்திரங்கள்: மீனா – ஜோதியின் தோழி மற்றும் பக்கத்து வீட்டுப்பெண். இரண்டு குழந்தைக்கு தாய்.

ஜோதி: மீனாவின் தோழி, ஒரு குழந்தைக்கு தாய்

நிலை: பரிட்சைக்கு படிப்பது போல் சீரியசாக புத்தகம் வைத்து படித்தபடி ஒரு நோடபுக்கில் குறிப்பும் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

நேரம்: காலை சுமார் 11 மணிவாக்கில்

-------------------------------------------------------------------------------------------------------------------------
மீனா:-- என்ன ஜோதி நர்சரி புஸ்தகத்தை வச்சி படிச்சிக்கிட்டிருக்கே ?

ஜோதி:-- பையனை நர்சரி பள்ளியில் போடலாம் ன்னு  முடிவு பண்ணி
யிருக்கோம். அதான் அவனுக்கு சொல்லி  குடுக்கணும்ல....?

மீனா:-- உங்க பையனுக்கு என்ன வயசாச்சு  ....?

ஜோதி:-- பத்து மாசம்தான் ஆச்சு.
 
மீனா:-- ஏன் இவ்ளோ நாள் என்னா பண்ணீங்க ...?   என் பையனை
நான் அஞ்சி மாசத்திலேயே  சேர்த்தேன்.

ஜோதி:-- குழந்தைங்கள  பத்துமாசத்துலதான  நர்சரியில சேக்கணும் ?

மீனா:-- அதெல்லாம் ஹைதர்காலம் ஜோதி.  இப்பல்லாம் பால் மறந்தா
போதும். எந்த ஸ்கூல்லயும் சேர்க்கலாம்.  ஆனால் பால்மறந்த குழந்தைன்னு டாக்டர்கிட்ட சர்ட்டிபிகேட் வாங்கணும். அதுசரி ஒம்பையன  எந்த ஸ்கூல்ல சேர்க்கப்போற ...?

ஜோதி:-- அதான் அந்த அரோகரா நர்சரி ஸ்கூல்ல சேர்க்கலாம்ன்னு
இருக்கேன்.

மீனா:-- அதுசரி  ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணி எவ்ளோ நாளாச்சி  ?

ஜோதி:-- என்னது ..? ரிஜிஸ்ட்ரேஷனா ..? எதுக்கு .... ? 

மீனா:-- ஆமாம் ஜோதி முதல்லயே ரிஜிஸ்ட்டர் பண்ணாத்தானே இப்போ அட்மிஷன் பண்ண முடியும். அப்போ ரிஜிஸ்ட்டரே பண்ணலையா ...? 

ஜோதி:-- இல்லையே 

மீனா:-- அப்போ வேற ஸ்கூல்ல ட்ரை பண்ணுங்க. ஏன்னா, நான் எனக்கு கல்யாணம் பண்ணி பத்தாவது நாளே ரிஜிஸ்டர்       பண்ணேன்.  அப்புறம் குழந்தை பிறந்தவுடனே கன்பர்ம் ரிஜிஸ்ட்ரேஷன் பண்ணேன்.. அப்புறம்தான் சீட் கெடைச்சது.

ஜோதி:-- அப்படியா  அதுசர்p  இப்போ உன்பையன் என்னா படிக்கிறான் ..? 
மீனா:-- எல்.கே.ஜி.

ஜோதி:-- எப்படி படிக்கிறான்  ?

மீனா:-- என்ன ஜோதி ஒண்ணுமே தெரியாத மாதிரி கேக்கற……?  அரோகரா ஸ்கூல்ல எல்லா கிளாஸ்லயும் எல்லா ஸ்டுடண்ட்சுமே ஃபர்ஸ்ட் மார்க்குதான்.

ஜோதி:-- அது எப்படி முடியும் ..?

மீனா:-- அதுதான் அரோகரா ஸ்கூலோட  ஸ்பெஷாலிட்டி.

ஜோதி:-- என்ன லேங்வேஜ்ல டீச்சங் ? இங்கிலீஷ்தானே  ..?

மீனா:-- அரோகரா நர்சரியில சோசியல சொமேலியா மொழியிலயும்,
சையன்ச சைபீரியன் மொழியிலயும், கணக்கை கஜகஸ்தான் மொழியிலயும், தமிழை இங்கிலீஷ்லயும்,  இங்கிலீஷை தமிழ்லயும் சொல்லித் தராங்க.

                                                                    காட்சி 2

இடம்: ஜோதியின் வீடு

பாத்திரங்கள்: ஜோதி சந்நியாசியின் மனைவி

சந்நியாசி: ஜோதியின் கணவன், மனைவியின் திருபதி செய்யவேண்டி பகல் கொள்ளைக்காரனாக மாறியவன்.

நிலை: எவ்வளவு சம்பாதித்தும் தனது குழந்தையை பள்ளியில் சரியான சமயத்தில் சேர்க்கவில்லை என சந்நியாசியை குறைசொல்லி சண்டைபோடும் ஜோதி  

நேரம்: இரவு சுமார் 8 மணிவாக்கில்

-------------------------------------------------------------------------------------------------------------------------
ஜோதி:-- எங்கப்பா அப்பவே  தலைப்பாடா அடிச்சிக்கிட்டார். எனக்கு
வேணாம்மா இந்த மாப்பிள்ளை. பேருதான் சந்நியாசின்னா, ஊருபேரு ஆண்டிப்பட்டின்னு சொல்றான். வேணாமான்னு சொன்னாரு.. அதை நான் கேட்டேனா..?  பேய்க்கு வாழ்க்கைப் பட்டா  புளியமரத்திற்கு புளியமரம்  ஏறணும்னு  பெரியவங்க சும்மாவா சொன்னாங்க..?

சந்நியாசி: தோ பாரு  ஜோதி.. ஒரு காலத்தல, சத்தியவந்தனா இருந்தேன்… கவர்மெண்ட்டு வேலையில வாங்குற சம்பளம் எனக்கு  கண் மை வாங்கக்கூட பத்தலைன்னு நீ சொன்ன… நான் அந்த வேலையை விட்டுட்டு உனக்காக கொள்ளையடிக்க ஆரம்பிச்சேன்..  சாதாரண கொள்ளை இல்ல.. அதுவும் பகல்கொள்ளை. நாய் வித்த காசு நாறாது.  பூ  வித்த  காசு  மணக்காதுன்னு சொல்லி என்னை சமாதானப்படுத்தினெ.  உனக்காக நான் பண்ண தியாகம் ஒண்ணா ரெண்டா ?

ஜோதி:-- பிச்சைக்காரன்கூட அவன் பையனை.. பொறந்த அஞ்சாவது
மாசத்திலேயே டான்னு பள்ளிக்கூடத்துல சேர்க்கிறான்…என் ஆம்படையான் லெச்ச லெச்சமாய் சம்பாதிக்கிறார்ன்னு சொல்ற.  குழந்தை பொறந்து பத்து மாசமாச்சி.  இன்னும் பள்ளிக்கூடத்துல சேர்க்கறதுக்கு வழி இல்லன்னு என் மூஞ்சயில காறித்துப்பிட்டு  போயிட்டா மீனா…... 

சந்நியாசி:-- நீ ஒண்ணுக்கும் கவலைப்படாத…….நான் உடனடியா நம்ம பையன ஒரு நல்ல ஸ்கூல்ல சேக்கறதுக்கு ஏற்பாடு பண்றேன்..

ஜோதி: அது எப்படிங்க முடியும் ?

சந்நியாசி: ஜோதி………அரோகரா ஸ்கூல் இல்லன்னா என்னா? கோவிந்தா த்ரீ இன் ஒன் ஸ்கூல் இருக்கு.. 

                                                                    காட்சி 4

இடம்: ஜோதி – சந்நியாசி வீடு

பாத்திரங்கள்: சந்நியாசி - ஜோதியின் கணவன், அய்யார்எட்டு – ஒரு பள்ளியில் பயிற்சி பெறாத பட்டதாரி ஆசிரியர். சந்நியாசியின் மனைவி ஜோதி. 

நிலை: சந்;நியாசியின் குழந்தையை பள்ளியில் சேர்க்க உதவுவதற்காக அவரை சந்திக்க வருகிறார் அய்யார் எட்டு. அவரிடம் குழந்தையை பள்ளியில் சேர்ப்பது பற்றி  ஆலோசனை பெறுகிறார் சந்நியாசி.

நேரம்: ஞாயிற்றுக்கிழமை கலை சுமார் 11 மணிவாக்கில்
-------------------------------------------------------------------------------------------------------------------------
அய்யார்எட்டு: வணக்கம் சார்…

சந்நியாசி: வா தம்பி வணக்கம்… நீ ..? 

அய்யார் எட்டு:-- அய்யார் எட்டுங்க. 

சந்நியாசி:-- அய்யார்  முப்பதுதானே வரும்  ? 

அய்யார்:-- அது இல்ல சார்.  எம்பேரு  அய்யார்  எட்டு.

சந்நியாசி:-- பி.ஏ. மெட்ராஸ் யுனிவர்சிட்டியில பண்ணிட்டு. எம்.ஏ. அண்ணாமலை யுனிவர்சிட்டியில் பண்ணிட்டு,  டாக்டரேட் மதுரை காமராஜர் யுனிவர்சிட்டியில் பண்ணிட்டு ஸ்கூல்ல வாத்தியாரா வேலைபாக்கற டாக்டர் அய்யார் எட்டா…? உக்காருப்பா.    

அய்யார்:-- ஆமா சார் அந்த டாக்டர் அய்யார் எட்டுதான்.

சந்நியாசி:-- ஏம்பா  உங்க ஸ்கூல்ல எவ்ளோ சம்பளம்  குடுக்கறாங்க ..? 

அய்யார்:;:-- பணமா குடுக்கறது இல்ல சார்.  பொருளா குடுத்துடுவாங்க.

சந்நியாசி:-- ஆச்சர்யமா இருக்கே...பொருளாவா குடுப்பாங்க….?

அய்யார்:;-- ஆமா சார்.  காலைல 11 மணிக்கு சிங்கிள்; டீ 1 மணிக்கு சத்துணவு. அப்புறம் 3 மணிக்கு சுண்டலும் டீயும். அப்புறம் ஸ்கூல்விட்டு வரும்போது ரெண்டு ஆழாக்கு பொரி அவல்கடலை ராத்திரிக்கும் அடுத்தநாள் காலைக்கும் அது.

சந்நியாசி:-- என்னய்யா  இது அநியாயமா இருக்கு ? அதுசரி ட்ரெய்ண்டு
டீச்சர்ஸ் ...அவங்களுக்கெல்லாம் எப்படி .?

அய்யார்: அவங்களுக்கெல்லாம் பரவால்ல சார்.  எங்களவிட கூடுதலாக 
ரெண்டுஆழாக்கு அவல் கடலை கொடுக்கறாங்களே. ;டுhடு; துர்னு;

சந்நியாசி: அதுசரிப்பா…  சிவசிவா  நர்சரிகூட நல்ல ஸ்டேண்டர்ட்hமே ?
அய்யார்: அதுவும் நல்ல ஸ்டேண்டர்;ட்தான்.  ஆனால் அதற்கு  ரெக்கமண்டேஷன் வேணும்.

சந்நியாசி: எம். எல். ஏ.  வா ...எம். பி.  யா ...மந்திரியா ...?  யார் வேணும் ...?

அய்யார்: ரீகன் , சதாம் உசேன் ,  இடிஅமீன்  இவங்ககிட்ட வாங்க
முடியுமா ..?

ஜோதி: நீங்க சொல்றதை எங்களால நம்பவே  முடியல.


அய்யார்: இதாவது பரவால்ல. ராபரி  நர்சரி ஸ்கூல்ல  புலிப் பால்
கொண்டுவந்தால்தான் அட்மிஷன்.

(சந்நியாசியும் ஜோதியும் அய்யார்எட்டு சொன்னதைக்கேட்டு அதிர்ச்சிமேல் அதிர்ச்சி அடைந்து மௌனமாகிறார்கள்)
                                                                  
                                                                    காட்சி 5

இடம்: மதுரையில் ஒரு நர்சரி பள்ளிக்கூடம்.

பாத்திரங்கள்: சந்நியாசி, ஜோதி, அய்யார்எட்டு மற்றும் பள்ளியில் அட்மிஷனுக்காக வந்திருக்கும் பெற்றோர்கள் சிலர்.

நிலை: பிரபலமான ஒரு நர்சரி பள்ளியில் குழந்தைகள் அட்மிஷன் நடந்துகொண்டிருக்கிறது. முன்னதாக ரிஜிஸ்ட்ரேஷன் செய்யாததால் சந்நியாசி எப்படியாவது அட்மிஷன் வாங்க முடியுமா என்று சுற்றிசுற்றி வருகிறார். பள்ளியின் அட்மிஷன் போர்ட் முன்னால் நின்று சந்நியாசி அதை படித்துக்கொண்டிருக்கிறான். அவனுடன் ஜோதி மற்றும் அய்யார் 

நேரம்: காலை சுமார் 10 மணிவாக்கில்

-------------------------------------------------------------------------------------------------------------------------

ஒருவர்: போர்ட்ல  என்ன போட்டிருக்கு ...? ஆயாபீஸ் ஆயிரம் ரூபாய்,  
தாத்தா பீஸ்  ஆயிரம்ரூபாய் ...

சந்நியாசி: ஆமாங்க ஆயாபீஸ் சரி ...  அதுஎன்ன தாத்தா பீஸ்... ?

இரண்டாமவர்: இந்த பள்ளிக்கூடத்துலதான் பாடத்தை கதை மூலமா சொல்லித் தர்றாங்க.  இந்த மாதிரி கதை சொல்றதுக்கு 25 தாத்தா மார்களை பள்ளிக்கூடத்துல அப்பாயிண்ட்  பண்ணி  இருக்காங்க.      

முதலாமவர்: சாக்பீஸ்  பீஸ் சரி...  அது என்ன  சாக்லெட்பீஸ்  ...? 

இரண்டாமவர்: அதுங்க கொழந்தைகளுக்கு கண்ட கண்ட கடையில்  சாக்லெட்  வாங்கி குடுத்தா அதுங்களோட ஆரோக்கியம்  கொறைஞ்சிடும்.  அதனால  இவங்களே நல்ல சத்துள்ள சாக்லெட்டா தயார் பண்ணிக் கொடுக்கறாங்க. 

முதலாமவர்:பள்ளிக்கூடம்ன்னா  இப்படி இருக்கணும். மேல படிங்க.

இரண்டாமவர்: மேஜை நாற்காலி பீஸ்,  10 ஆயிரம் ரூபாய்.  வெளையாடற பீஸ் 10 ஆயிரம் ரூபாய்.  டிராக்டர் பீஸ் ஒரு லட்சம் ரூபாய். 

சந்நியாசி: அது என்னங்க டிராக்டர் பீஸ்  ?

இரண்டாமவர்: எல்கேஜி புஸ்தகம் மட்டும் ஒரு டன்.  நோட்டு முக்கால் டன், ஹோம் ஒர்க் கால் டன். அதனாலதான் அத எடுத்துட்டுப் போகத்தான் டிராக்டர் பீஸ்.

சந்நியாசி: பணம் ஒண்ணரை லட்சம்  எதுக்கு ?

அய்யார்: அதுதான் அட்மிஷன் சார்.

சந்நியாசி: அய்யார்எட்டு சார்…..நல்லா கவனிங்க ...  இன்னும் ஒரு மாசத்துல  நானே தொடங்கறேன் சந்நியாசி  த்ரி இன் ஒன் மெட்ரிகுலேஷன் ஸ்கூல்.. முதல்  அட்மிஷன்  என் பையனுக்குத்தான்…. 

ஜோதி: (ஆச்சரியத்துடன்) என்னங்க சொல்றீங்க நீங்க..?

சந்நியாசி: ஜோதி நீ தான் கரஸ்பாண்டண்ட்…

அய்யார்: சார் என்ன சார்  இது  ?

சந்நியாசி: நான் முடிவு பண்ணா பண்ணதுதான்…அய்யார்எட்டு சார் …நீங்கதான் ஹெட்மாஸ்ட்டர்.

ஜோதி: என்னங்க இதெல்லாம்  ?

சந்நியாசி: (தன் மனைவிக்கு மட்டும் கேட்கும் குரலில் காதில் சொன்னான்) இன்னையோட என்னோட கொள்ளையடிக்கிற தொழிலை தலை முழுகிட்டேன்… ஆனா இது…ஒரு கௌரவமான கொள்ளை….

                                                                  காட்சி 6

இடம்: சந்நியாசியின் இன்கம் வெல்கம் திரீ இன் ஒன் நர்சரி பள்ளி

பாத்திரங்கள்: சந்நியாசி, ஜோதி, அய்யார்எட்டு மற்றும் பள்ளியில் அட்மிஷனுக்காக வந்திருக்கும் பெற்றோர்கள் பெருந்திரளாக.

நிலை: சந்நியாசியின் இன்கம் வெல்கம் திரீ இன் ஒன் நர்சரி பள்ளியின் முதலாண்டு விழா. ஆண்டுவிழாவில் கல்வி அமைச்சர் கலந்துகொண்டு சந்நியாசியை பாராட்டி பேசுகிறார்.

நேரம்: காலை 11 மணி
-------------------------------------------------------------------------------------------------------------------------


அமைச்சர்:தாய்க்குலங்களே தந்தைக்குலங்களே ஆசிரியக் குலங்களே  மாணவக்குலங்களே...இந்த சந்நியாசி இன்கம் வெல்கம்   திரி இன் ஒன்   பள்ளியின் ஆண்டுவிழாவினை  சீரோடும் சிறப்போடும் கொண்டாடுகின்ற
இந்த சமயத்திலே  இந்திய துணைக் கண்டத்திலேயே  இந்த இன்கம் வெல்கம் பள்ளி மிச்சிறந்த பள்ளியாக தேர்ந்தெடுக்ப்பட்டுள்ளது  என்ற மகிழச்;சியான செய்தியை தெரிவிக்கின்ற வேளையிN;ல இந்த பள்ளியின் நிறுவனர்  அய்யா சந்நியாசி அவர்களுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதில் நான் பெருமைப்படுகிறேன்.

( வெகுநேரம் ஆனது, பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளின் கைத்தட்டல் அடங்க)

தொட்டுவிடும் தூரம்


ஈடிபஸ் & ஸ்பிங்க்ஸ்


அரிக்கேன் விளக்கும் அற்புதம்


Saturday 10 February 2018

நீல புறா

வட்டமிட கூட சத்தில்லாமா தான் அது இன்னும் சுத்துது; அசராம சுத்துது. இது நாள் வரைக்கும் இறக்கைய பரப்ப விரிச்சு தனக்கு வட்டமிட தெரியும்னே அப்பதான் அதுக்கே விளங்குச்சு. கடலம்மா மேனில இருந்து அதுகேத்த தெம்பான உசரதுல நிதானமா சுத்துது, கூட்ட விட்டு இரை தேடி போன பிஞ்சு இன்னைக்கு  சுறாக்கு  இறையாகுதேனு அழுக கூட தெரியமா தான் சுத்துது, அந்த கடல்புறா. போன பிஞ்ச நினைச்சு இழுவாம போய் மத்த பிஞ்ச பாருனு கரையோர புன்னை மரத்த காட்டவும் எவனுக்கு வக்கில்ல அது அழுகய கேக்கவும் ஒரு நாதியில்ல அங்க தான் பருந்து ஒன்னு காத்திருக்குனு சொல்ல எவனுக்கும் வாயுமில்ல அது விதி இவ்வளவு தான்னு தேவனும் நினைக்கான் போல அவன் நினச்சுபுட்டா மறுவார்த்த ஏது. சுத்தி சுத்தி ஓயுர நேரத்துல கிழக்கா வசவான காத்து ஒன்னு அத அடிச்சு ஓரங்கட்ட பார்த்ச்சு.
அந்த உப்புகாத்து கிழக்கா கரையோரம் வீசயில அம்மியும் கொஞ்சம் ஆடி தான் போச்சு. ஆடி மாச காத்துல அமாவாசையும் சோடி சேர அந்த கடலம்மா ரெம்பவே பொங்கி போய்ட்டா. “அவ பொங்குறது இன்னைக்கு நேத்தா காலம் காலமா வந்து தான போறா அந்த பாவி மக, அவ மட்டும் இல்லையின இங்க சோறு எப்படி பொங்கும்னு” புலம்பிட்டே கிடந்தா ராக்காயி. ராக்காயிக்கு தேகம் நிலை கொள்ளல வழக்கத்தவிட கூட்டத்த கண்டதும் அவளுக்கு சந்தோஷம் தாளல.
மீன்வாடை ஒரு ஓரமா வருடையில அம்மில நல்லா வரமுளகாயா கிள்ளி போட்டு அரைக்கையில உப்புகாத்து படல் படலா மணல மேவயில கொஞ்சம் விசும்பி போன மவ எதையும் கண்டுக்குறாம அறைச்சிட்டு இருந்தா.
‘உடுப்பதற்கோ உடையுமில்லை
உண்பதற்கோ உணவுமில்லை
படுப்பதற்கோ பாயுமில்லை
பறக்குதுபார் வெள்ளத்திலே
பார்க்க பார்க்க துக்கம்
பார்த்துப் போனாலுமே ஏக்கம்’
இதையே நினச்சு வேற முனுமுனுத்துட்டே இருந்தா, அன்னிக்குனு புயல்ல சிக்கி சிதைஞ்ச வடுவ பாக்க கூட்டம் அலைமோதுச்சு. எவனுக்கு இப்படி ஆயிடுச்சேனு ஈவு இல்லமா புயலோட கைவண்ணத்த கண்டு சிலிர்த்தாய்ங்க. “ஆஹா ! என்னா அலைனு” ரசிச்சாய்ங்க அப்ப கூட அது அங்க சுத்திகிட்டு தான் இருந்துச்சு.
‘கண்ணுக்கெட்டுன தூரம் வரைக்கும் நீலமும் வானமுமாதான் இருக்குது, சொல்ற மாறி ஒன்னும் காண கிடைக்கல….
இத பாக்கவ இம்புட்டு கூட்டமுனு’ இராமன் தான் செஞ்ச பாவத்த தொலைச்ச இடத்த பாக்க வந்தவன் உரக்க சொல்லி ராக்காயி கடையாண்ட இருந்த கல் அணைகட்டுல உக்காந்தான்.
“இங்காருங்கயா! என்ன இப்படி சொல்லிபுட்டிங்க, பொத்தாம் பொதுவா  பேசாதிங்கயா இந்த மண்ணு எத்தனை பேர வாழ வச்ச மண்ணு தெரியுங்களா! இந்த மண்ணு எங்க உசுரு மாறியா அப்படி பொசுக்குனு வார்த்தைய விடாதிக.
ஒரு காலத்துல இந்த கடலும் மண்ணும் அவ்வளவு பரபரனு இருக்கும் பாக்கவே கோடி கண்ணு வேணும்…
ம்ம் யாரு கண்பட்டுச்சோ இன்னைக்கு இப்படி கிடக்கு.
நீங்களா படிச்சவுக உங்களுக்கு நான் சொல்லி தெரியவேண்டியதில்ல ம்ம்” சொல்லிபுட்டு பதமா சோத்த வடிச்சிட்டு இருந்தா ராக்காயி.
“அட கோச்சுக்காதிங்கமா! நான் பார்த்தத சொன்னேன் அம்புட்டு தான் தப்பா நினைச்சுகாதிங்க….
நல்ல சில்லுனு ஒரு சர்பத் போடுங்க தாகமா இருக்கு”
“சோறு திங்கிற வேளையில சர்பத் கேக்குறீகளே இந்த பத்து நிமிசம் பொறுத்தீகனா மீன் சோறே சாப்டலாம்”
“குடியே கெட்டுச்சு போ! ஆத்தா நான் சுத்த சைவம் என்கிட்ட மீன் சாப்பாட பத்தி சொல்றீகளே”
“அடி ஆத்தி மன்னிச்சுகக! சைவ சாப்பாடு இன்னைக்கு கிடைக்குமானு தெரிலீங்களேனு”…. சொல்லிபுட்டு கத்துனா ரக்காயி.
“அடியேய்ய்ய்ய் பொட்டுகண்ணி! அங்க என்ன சைவ சாப்பாடா??” அங்கயும் இல்லயுனு கையசவுல தெரிஞ்சுகிட்டா.
“சொல்றேனேனு தப்பா நினைக்காதிக இந்த மீன் சோறு திங்களயேனு ரொம்ப வருத்தபடுவீக பாருங்க” னு சொல்லி சிரிச்சா, அந்த சிரிப்புல தான் எவ்வளவு வெகுளி. தூக்கிகட்டுன நீலசீலையும் அதுக்கு பொருந்தாத சாக்கெட்டும் பரட்டை தலைனு அவ மொத்த தேகத்துலயும் இரண்டே விசயம் தான் வெள்ளை ஒன்னு அவ சிரிக்க அப்ப தெரியுற பல்லும் இன்னொன்னு அவ வெள்ளந்தி மனசும் தான்.
“அது கிடக்கட்டும்! சர்க்காரே உதவாத இந்த ஊருல கூறைய போட்டு இருக்கிங்களே இதலாம் சகிசிட்டு இங்க கிடக்கனுமா? அத சொல்லுங்க”னு பரிதாபமா தான் கேட்டான் அந்த ஆசாமி.
“ஏய்யா பிள்ளைய பெத்துபோட்டாமேனு எவளாச்சும் சுமந்தத அறுத்து போட்டுருவாளா
இங்க வாழவே வக்கில்லனாலும் எதுவுமே கிடைக்கலனாலும் இங்க இருக்குற மனுச மக்க கட்டை இந்த உப்புகாத்துல தான் கலக்கும்.
நாங்க போறதா இருந்த அம்பது வருசத்துக்கு முன்னாடியே போயிருக்க மாட்டோமா! இது எங்க மண்ணுயா அத எந்த கொம்பனும் தடுக்க முடியாது அது எங்க அழிஞ்சாலும் சரி”
“ஒ அது நடந்தப்ப நீங்க இங்க இருந்திகளா!”
“ஆமாங்கய்யா! ஆமா இங்க தான் கிடந்தேன்
அப்ப எனக்கு ஏழு வயசிருக்கும்..
இந்தா! இந்த சர்சுல அன்னிக்கு ஏசப்பன் திருவிழா நடந்துட்டு கிடந்துச்சு ஊரே இங்க தான் இருந்துச்சு என்னிக்கும் இல்லாமா அன்னிக்குனு காத்து வெறசா அடிச்சுசு
அன்னிக்கு எங்க ஆத்தா சத்தத்த கேக்கனுமே ஏன் ஈர குலையே நடுங்கி போச்சு அவ அந்த மாறி கொந்தளிச்சு நான் பார்த்ததேயில்ல
அப்பவே தெரிஞ்சுச்சு என்னமோ நடக்க போதுனு ஊருகாரவுக எல்லோரும் கொஞ்சம் பதுசா பயந்து போய் தான் படுத்தோம்.
விடியகால ஒரு நாலு மணிக்கு இருக்கும் அப்படி ஒரு சத்தம் பேய் மழை புயலு நரியலாம் கத்துது அம்மா ஆத்தானு ஒரே கூச்சல் காதகிளிக்க அந்த நேரம் தான் ஆத்தா பொங்குனாஆஆஆ!!!!” சொல்லி ஒரு பெருமூச்சுவிட்டா ரக்காயி. அவ கண்ணுல தான் இன்னும் பீதி தெரியுது அந்த கிலி இன்னும் அவ கண்ணுல நிழலாடுது அன்னைக்கு நடந்தத இம்மி பிசகாம அப்படியே ஒப்புவிச்சா.
“அப்புறம் என்னமா ஆச்சு” ஆசாமிக்கு ஆர்வம் தாங்கல.
“சூரியன் வந்தப்ப தான் தெரிஞ்சுசு  நம்ம நடந்தது மணல்ல இல்ல என் மக்க தலையிலனு ஒரே பொண குவியலு எங்க சாதி சணம் எல்லா கிடந்துச்சு அப்புறம் ரொம்ப நாளா கடலுக்கும் போல எங்க தொழிலையும் பாக்கல அந்த சமயம் போட் மெயில் வேற கட்டிட்டு இருந்தாக புயல்ல அதும் அடிச்சிட்டு போக பின்ன நாங்க தான் போய் வேலை பார்த்தோம்
அப்ப தான் எங்க அய்யா கிட்ட சொன்னேன் பேசமா கடலுக்கு போறதவிட்டுபுட்டு இந்த கொலுத்து வேலைய பார்ப்போம்னு சட்டுனு கோபபட்டு எறிஉளில அடிச்சாப்ல அது தான் இந்த காயம்”னு சிரிச்சிட்டே நெத்தி தழும்ப காட்டுனா அதுலயும் அவ அழகு தான் உத்தம சோழன் பெண்சாதி மாறி.
இதலாம் கேட்டு தாகத்த மறந்தவனுக்கு மறுபடியும் நாவரண்டு போக மறுக்கா கேட்டான்.
“அம்மா சர்பத் கேட்டேன்ன்……
ஆமா உங்களுக்கு எத்தன புள்ளைக”
அவன் கேட்டத கொடுத்துபுட்டு “எனக்கு இரண்டு புள்ளைக ஒன்னு கடலுக்கு போயிருக்கு இன்னொன்னு பள்ளிகூடம் போயிருக்கு” சொல்லிபுட்டு கடலயே பார்த்தா….
உசரதுல இன்னும் அது சுத்திகிட்டு தான் கிடந்துச்சு.
பிறவு மண்சட்டில பேரிக்கா கணக்கா புளிய எடுத்து கரைகயில கண்ணம்மா வந்து எத கரைக்க போறாளோனு தூரத்துல அவளயே பார்த்து கரைச்சிட்டு இருந்தா ராக்காயி.
“என்னக்கா ஊரே அடங்கி கிடந்தாலும் நீ அசர மாட்டுறியே, ஊருகாரி கடைலலாம் கருவாடு குழம்பு கொதிக்கையில இங்க மட்டும் மீன் வாடை வீசுதே”
“அடி போடி! குசலக்காரி இத கேக்கதான் வந்தியாக்கும்”
“கடலுக்கு போனவுக இன்னும் வரல
நீ எங்க இருந்து வாங்கியாந்த”
“இன்னிக்கு மவன் வந்தாலும் வருவான் அதான் விடியகாலை வெறச சந்தைக்கு போய்ட்டு வாங்கியாந்தேன் அங்கயும் ஒன்னுமே இல்லடி
உளுவை தான் கிடந்துச்சு அத தான் அள்ளி போட்டு வந்தேன்” னு சொல்லி அரச்ச முளகாயில ஊற வச்ச மீன் துண்ட பதுவா எடுத்து போட்டு கொதிக்கவிட்டா ராக்காயி நெப்பும் நிழலுமா மிதந்துச்சு நெய்யில போட்ட தேன் மாறி.
ஒரு வழியா மதிய வேளை வர கூட்டம் அலைமோதுச்சு சோறு திங்க, ரக்காயி கடை மீன் குழம்பு வாடை எட்டுதிக்கு பரவ கூட்டம் கட்டி ஏறுச்சு. கூட்டத்துக்கு பந்தி வைக்கும் நேரம் படக்குனு எந்திரிச்சு ஓடுனா ராக்காயி அவ ஓட்டத்த பார்த்த கண்ணம்மா கனிச்சு பரிமாற தொடங்குனா.
“எங்கமா இந்தம்மா இப்படி ஒடுது” னு அந்த ஆசாமி பதறி போய் கேக்க அவ சிலுப்பாம சொன்னா.
“போட்டு சத்தம் கேக்குதுல மவன் வர்றானானு பாக்க போயிருக்கும்,
ம்ஹூம் நாலு நாளுக்கு முன்ன கடலுக்கு  போனவுகளாம் வந்துடாக அவ மவன் இன்னும் வரல
இன்னும் எந்த நம்பிக்கையில போய் பாக்குறோளோ ம்ம்”
“இது என்னமா போனவுங்க வந்து தான ஆகனும்”னு கேட்டவனுக்கு எப்படி பதில் சொல்லுவா.
இராவணன் ஆண்ட மண்ண கண் எட்டுனாப்லே பாக்கலாம்னும் அப்படி பார்த்தவுக திரும்பி வந்ததில்லனும்.
ஒரு சிரிப்ப மட்டும் விட்டுபுட்டு போனவ கிட்ட வெறசா ஓடி வந்தவன் கேட்டான் “ஏய் இரக்காயி எங்க!”
“இப்ப ஏன் இப்படி பதற என்னாச்சு”
“ஸ்கூலு பிள்ளைக மேல கவர்மன்ட் பஸ்சுகாரய்ங்க ஏத்திடாய்ங்க” அதான் எங்கனு சொல்லு. கடல கை காமிச்சு வழி காட்டுனா கண்ணம்மா.
அந்த கடல பார்த்தபடி தான் அவளும் நின்னுட்டு இருந்தா யாரயோ தேடி பார்த்துட்டு இருந்தா.
உலகம் பூரா ஓடுற இந்த உப்பு தண்ணியவே பேர் வச்சு பிரிச்ச பயலுக கடலுக்கு வேலி போட்டு தடுக்க மாட்டாய்ங்கள என்ன? இப்படி இந்த கெட்ட ஈன சாதி மனுஷக கிட்ட மாட்டிகிட்டு தனிமரமா அவளும் நிக்குறா அந்த கரையில. கண்ணுக்கு தெரிஞ்ச எதிரி வந்தா கடலுக்கு போன மவன் எறிஉளி கொண்டு எறிஞ்சிடுவான் இந்த பசியெனும் எதிரி வந்தா எத கொண்டி எறியனும்னு தேவன் சொல்லலியே நினைச்சு புலம்புனா.
மிதமா ஒரு உப்புக்காத்து அலையோட வந்துச்சு அவ கால நனச்சுச்சு அவ முகத்த வருடுச்சு நீல இறகோட. அவ கண்ணு ரெண்டும் ரங்க ரங்கமா சுத்துது அந்த கடல, அதுவும் தான்.

தென்னை

நாங்கள் சிறு பிள்ளைகளாக இருந்த போது அவரை ‘செல்லரம்மான்’ என்று தான் கூப்பிடுவோம். அவருடைய இயற்பெயர் செல்லத்தம்பி. அப்போதெல்லாம் ‘சாண்டோ செல்லர்’ என்றால்தான் எல்லோருக்கும் தெரியும்; அவ்வளவு பிரபலமாக இருந்தார்.
அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார். வந்ததும் நாங்கள் அவரைப் போய் மொய்த்துக் கொள்வோம். என்ன அவசரமாயிருந்தாலும் எங்களுக்கெல்லாம் கதைகள் சொல்லாமல் போகவே மாட்டார்.
அவருக்கு ‘கோடா’ காய்ச்சுவதுதான் தொழில். காய்ச்சி அதைப் பல சுருட்டுக் கொட்டில்களுக்கும் வினியோகம் செய்வார். அந்தத் தொழிலில் அவருக்கு வெறுப்பு. ஆனால் என்ன செய்வது? வேறு வழியின்றித்தான் அதைச் செய்து வந்தார்.
அவர் இளவயதாக இருந்தபோது மல்யுத்தம், தடியடி, சிலம்பம் என்று எல்லாவற்றிலும் தேர்ச்சி பெற்று இருந்தாராம். எத்தனையோ போட்டிகளில் பங்கெடுத்து வெற்றியும் பெற்றிருக்கிறார். பின்னால் தெருக்கூத்துகளிலும், நாடகங்களிலும் கூட நடித்து வந்தார்; ஆனால் அவருக்கு நிரந்தரமான வருவாய் என்று மட்டும் இருந்ததில்லை.
அவருடைய தேகம் அந்த வயதிலும் கல்லுப்போல இருக்கும். நாங்கள் தொட்டுத் தொட்டுப் பார்ப்போம். அவர் இருபது வயதாயிருந்த போது அவர் ‘கையாலேயே’ தென்னை மரத்தை அடித்து தேங்காய் வீழ்த்தியதாகச் சொல்லுவார்கள்; அவ்வளவு பலசாலியாம்.
அந்தக் காலத்தில், தான் நடித்த நாடகங்களை சில நேரங்களில் எங்களக்கு நடித்துக் காட்டுவார். பாடுவதென்றால் நல்ல பிரியம். எப்பவும் ஒரு ராகத்தை முணுமுணுத்த படியேதான் இருப்பார்.
கதை சொல்லும் போது மிகவும் விஸ்தாரமாகவும் சுவை படவும் கூறுவார். அங்கங்கே ஹாஸ்யம் மிளிரும். அவருடைய கதைகளை சிறு பிள்ளைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் ஆர்வமுடன் கேட்பார்கள். அந்தக் கதைகள் அநேகமாக அவரைப் பற்றியதாகவே இருக்கும். நாங்கள் சில கதைகளை அவரிடம் சொல்லும் படி திருப்பித்திருப்பிக் கேட்போம். அவரும் சளைக்காமல் சொல்லுவார். அவருடைய அந்த ‘இளநீர்க்’ கதைகள் மிகவும் பிரசித்தமானவை.
* * *
அம்மன் கோவில் திருவிழா முடிந்து இந்த நாலுபேரும் வீட்டுக்கு போய்க் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில மணி நேரத்தில் பலபலவென்று விடிந்து விடும். இவர்கள் ‘உடையார்’ வீட்டு வளவைக் கடந்துதான் போக வேண்டும். திருவிழா முடிந்து வீட்டுக்குப் போகும் போது இளநீர் குடிக்காமல் போனால் அதில் ஒரு திருப்தியே கிடைக்காது.
அதிலும் உடையார் வீட்டு தென்னை இளநீர் பிரசித்தமானது. எந்த மரத்தில் எந்த இளநீர் சுவையானது என்ற புள்ளி விவரங்கள் சோதிநாதனுக்கு மனப்பாடம். அவன் “அந்த நெட்டை மரம் கன நாளாக ஏமாத்திக் கொண்டு வருகுது. அந்த இளநீர் ருசியே தனி. இந்த ஜன்பத்திலேயே கிடைக்காது” என்பான் அடிக்கடி.
எல்லோருக்கும் ஆசைதான். ஆனால் உடையார் வீட்டுப் பயம். உடையார் என்றால் யார்? அந்த ஊரிலேயே மூன்று சால்வை போடுபவர் அவர் ஒருவர்தான்; இடுப்பில் ஒன்று, தோளிலே ஒன்று, தலையிலே ஒன்று தலைப்பாகையாக. ஊரே அவரைப் பார்த்தால் ஒரு மரியாதை.
“எங்களிலே செல்லத்தம்பியைப் போல மரம் ஏற ஆர் இருக்கினம்?” என்று ‘சட்டி’ போட்டான் கனகு. உடனே செல்லத்தம்பி வற வறவென்று மரத்தில் ஏறத் தொடங்கினான்.
செல்லத்தம்பி உடம்பை வளர்த்த அளவுக்கு மூளையை வளர்க்கவில்லை. அரை நிமிடம் கூட யோசிக்காமல் உச்சிக்கு போய் விட்டான். இரவிலே களவாக இளநீர் பிடுங்குவதில் ஒரு கஷ்டம் இருக்கிறது. தேங்காய் ‘பொத்’ தென்று தரையில் விழுந்தால் வீட்டுக்காரர் எழும்பி விடுவார். ஆகையினால் நைஸாகத் தான் இளநீரைக் கீழே இறக்க வேண்டும்.
அதனால் ‘வட்டுக்குள்ளே’ செல்லத்தம்பி, ஒரு கொஞ்சம் கீழே சோதினாதன், பிறகு சண்முகம், நிலத்திலே கனகு என்று ‘அசெம்பளி லைன்’ போல அணி வகுத்துக கொண்டார்கள். செல்லத்தம்பி ஒவ்வொரு தேங்காயாக பறித்து கீழே கொடுக்க, மற்றவன் அதைக் கீழே கொடுக்க தேங்காய் அலுங்காமல் நலுங்காமல்’ கீழே வந்து சேர்கிறது.
பத்துத் தேங்காயுடன் நிறுத்தியிருக்கலாம். ஆனால் ஆசை ஆரை விட்டது? அடுத்த தேங்காய் கைதவறி விட்டது; ‘தொம்’ என்ற சத்தத்துடன் கீழே விழுந்தது.
ஆரடா?’ என்று உள்ளே இருந்து ஒரு சத்தம். சோதினாதனும், மற்றவர்களும் ‘பொத், பொத்’ என்று குதித்து வேலி பாய்ந்து கண நேரத்தில் மறைந்து விட்டார்கள். செல்லத்தம்பி பாவம் வட்டுக்குள்ளே; குதிக்க முடியுமா அவ்வளவு உயரத்தில் இருந்து? வருவது வரட்டும்’ என்று கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறான்.
கொக்குவிலில் முதன் முதலில் ‘டார்ச் லைட்’ வைத்திருந்ததே உடையார் தான். உடையார் வெளியே வந்தார். லைட்டை அப்படியும் இப்படியும் அடித்து விட்டு மேலே உயர்த்திப் பார்த்தார். அங்கே செல்லத்தம்பி சிலந்தி போல வட்டைக் கட்டிப் பிடித்தபடி இருந்தான். “ஆரடா அது, இறங்கு” என்றார் உடையார், உரத்த குரலில்.
பல பல என்று விடிந்து விட்டது. ஆட்களம் சேர்ந்து விட்டார்கள். இளம் பெண்டுகள் எல்லாம் மறைவாக நின்று எட்டி எட்டிப் பார்க்கிறார்கள். செல்லத்தம்பிக்கு உயிர் போனால் கூட பரவாயில்லை என்று பட்டது.
இளநீரையெல்லாம் ஒரு கடகத்தில் போட்டு இவன் தலையில் ஏற்றி வைத்தார், உடையார். ஒரு குடையை எடுத்துக் கொண்டார். தலைக்கு மேல் அதை விரித்தபடி ‘சரி, நட விதானையார் வீட்டுக்கு’ என்றார்.
செல்லத்தம்பி “முருகா, இந்த இக்காட்டில் இருந்து என்னைக் காப்பாற்றினால் உனக்கு இளநீர் அபிஷேகம் செய்கிறேன்” என்று வேண்டிக் கொண்டான். பிறகு “இளநீர் என்றால் என சொந்தக் காசில் வாங்கிய இளநீர், களவெடுத்ததல்ல” என்பதையும் சேர்த்துக் கொண்டான்.
“இளநீர் குடிச்சவன் குடிச்சிட்டு போக கோம்பை திண்டவனுக்கு அடி” என்றது என் விஷயத்தில் பலித்துவிட்டதே என்று தன்னைத்தானே நொந்து கொண்டான்.
இப்ப சாடையாக மழை தூறத் தொடங்கி விட்டது. உடையார் பின்னால் குடை பிடித்த பிடி. அப்ப பார்த்து உடையாருக்கு ஒண்ணுக்கு நெருங்குகிறது. ‘கொஞ்சம் நில்’ என்று விட்டு குடையையும் படி வேலி ஓரத்தில் குந்தினார்.
செல்லத்தம்பி இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் திரும்பிப் பார்க்கிறான். ஆரெண்டாலும் பெண்டுகள் பார்க்கினமோ என்ற பயம்.
“என்னடா பார்க்கிறாய்? ஓடப் போறியோ?”
செல்லத்தம்பிக்கு அந்த எண்ணமே வரவில்லை. ஆனால் இப்ப முழித்து முழித்து விட்டான். கடகத்தில் இருந்த தேங்காயெல்லாவற்றையும் உடையார் தலை மேல் கொட்டி விட்டு எடுத்தான் ஓட்டம். நேரே தண்டவாளத்தில் எறி அதன் வழியாக ஓரேடியாக ஓடி தப்பி விட்டான்.
உடையார் என்ன செய்வார்? ஒண்ணுக்கு போறதை பாதியிலே நிற்பாட்டுகிற வித்தையை இன்னும் அவர் கற்கவில்லை; ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டே இருந்தார்.
* * *
இது நடந்து கொஞ்ச நாள் ஊர் முழுக்க இதே பேச்சுத்தான். ஆனால் இதையும் தோற்கடிக்கும் ஒரு சம்பவம் வெகு சீக்கிரத்திலேயே அங்கே நடந்தது. அது சோதினாதன் ‘அட்டாளை முருகேசரிடம்’ தனிமையில் போய் இளநீர் திருடி மாட்டிக் கொண்டது தான்.
அட்டாளை முருகேசர் விதானையாரிடம் போய் மினக்கெடும் ஆளில்லை. சோதினாதனைக் கையும் களவுமாகப் பிடித்தவுடன் அப்படியே மரத்தோடு கட்டிக் வைத்து சவுக்கினால் விளாசி விட்டார். நண்பர்கள் எல்லோருக்கம் சரியான துக்கம்; இப்படிப் போய் அநியாயமாக மாட்டிக் கொண்டானே என்று.
‘அட்டாளை’ என்றால் கனபேருக்கு என்னவென்று தெரியாது. இது கால் உயரமான காட்டில்; கால்கள் ஒரு ஆள் உயரத்துக்கு இருக்கும். இதைச் சுற்றி தட்டி கட்டிமேலே கூரை வேய்ந்திருக்கும். இந்த அட்டாளையைத் தூகக நாலு பேர் வேண்டும். தூக்கிக் கொண்டு போய் எந்த இடத்திலும் வைத்துக் கொள்ளலாம்.
இரவிலே இப்படியே அட்டாளைக்குள் படுத்திருந்து தோட்டத்தை காவல் காப்பார்கள். மழையோ, பனியோ அட்டாளைக்குள் சுகமாக இருக்கலாம். இன்னும் சொல்லப் போனால் ஒரு நடமாடும் குடிசை (portable Cottage).
முருகேசர் எப்பவும் இந்த அட்டாளையில் தான் படுப்பார். அவர் வீட்டுத் தோட்டத்தில் களவு போனதென்பதே கிடையாது. அவ்வளவு கெடுபிடியான ஆள்.
அவருடைய தோட்டத்து இளநீர் அவ்வளவு ருசியானதல்ல. இருந்தும் அங்கே களவெடுத்ததென்று சொன்னால் இளவட்டங்களுக்கிடயில் ஒரு மவுசு வந்து விடும். முருகேசர் வீட்டுத் தோட்டத்தில் திருடுவதற்கு எப்படி ஒரு தைரியம் வேண்டும். மனிதர் தான் கண் கொத்திப் பாம்பாக இருப்பாரே?
இப்படிப்பட்ட அட்டாளை முருகேசனுடைய தோட்டத்தில் தான் சோதினாதன் திருடப் போய் வகையாக மாட்டிக் கொண்டான்; அடியும் வாங்கினான்.
நண்பர்கள் நாலு பேரும் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினார்கள். எப்படியும் முருகேசரைப் பழி வாங்கி விடவேண்டும் என்பது தான் அது. அதற்கு வேண்டிய சமயம் பார்த்திருந்தார்கள்.
கச்சான் காற்று வீசும் காலத்தில் ஒரு அமாவாசை இருட்டு நாளைத் தேர்ந்து எடுத்தார்கள். விடிகாலை மூன்று மணிக்கு நண்பர்கள் நாலு பேரும் தோட்டத்துக்குள் களவாக நுழைந்தார்கள். பதுங்கி பதுங்கி அட்டாளைக்கு கிட்ட போனால் முருகேசர் அயர்ந்து குறட்டை விடும் சத்தம் கேட்கிறது.
முதல் வேலையாக அட்டாளையின் கீழ் தொங்கும் அரிக்கன் லாம்பை அணைக்கிறார்கள். பிறகு அவர்கள் முன்பே பேசி வைத்த படி, நாலு பேருமாக அட்டாளையின் நாலு கால் பக்கமும் போய் நின்று கொண்டார்கள். ஒருவன் கைகை கொடுக்க, அலுங்காமல், அசையாமல் அட்டாளையைத் தூக்கிக் கொண்டு அப்படியே நடந்து போய் பத்தடிதள்ளி இருக்கும் கிணற்றுப் பக்கம் மெதுவாக வைக்கிறார்கள். இப்போது அட்டாளையின் வாசல் கிணற்றுப் பக்கமாக இருக்கிறது.
நாலு பேரும் தங்களை கொஞ்சம் ஆசுவாசப் படுத்திக் கொண்டார்கள். பின் மெதுவாக வேலிப்பக்கம் போய் நின்று பலமாகச் சத்தம் போடத் தொடங்கினார்கள்:
“போடு, போடு”
“எடு, எடு”
“ஓடு, ஓடு”
அயர்ந்து போய் தூங்கிக் கொண்டிருந்த முருகேசர் பக்கென்று விழித்துக் கொண்டார். “ஆரது, ஆரது?” என்று தூக்கக் கலக்கத்தில் கத்திக் கொண்டே கீழே குதித்தார். நேரே கிணற்றுத் தண்­ருக்குள் தான் போய் விழுந்தார். உடனே நண்பர்கள் நாலு பேரும் வேலி பாய்ந்து ஓடத் தொடங்கினார்கள்.
கிணற்றிலோ தண்­ர் சரியாண ஆழம். முருகேசருக்கோ நீந்தத் தெரியாது. கத்தோ கத்தென்று கத்தினார். ஊர் சனங்கள் விழித்துக் கொண்டார்கள். எப்படியோ அவரைக் கிணற்றில் இருந்து காப்பாற்றி கரை சேர்த்து விட்டார்கள்.
(பின்னொரு காலத்தில் முருகேசர் பழி வாங்கியதை விவரித்தால் இந்தக் கதை இன்னும் விரிந்து விடும்; அது இன்னொரிடத்தில் வரும்)
* * *
ஒரு நாள் செல்லரம்மாள் என்னை அவர் வீட்டுக்கு வரும்படி அழைத்தார். இது பெரிய கௌரவமான விஷயம். ஏனென்றால், அவர் ‘என்னைமட்டும்’ தான் வரச் சொல்லியிருந்தார்.
எனக்குத் தேனீரும் பனங்கட்டியும் கொடுத்தார். அவருடைய மூன்று வயது மகள் மழலைக் குரலில் இவர் சொல்லிக் கொடுத்த தேவாரம் ஒன்றைப் பாடினாள்.
இது தவிர, எனக்கு ஞாபகம் வருவது அவர் குடிசையைச் சுற்றி இருந்த தென்னை மரங்கள் தான். அந்த மரங்கள் எல்லாவற்றிலும் ‘தாரினால்’ பாம்புப் படம் கீறியிருக்கிறது; பாம்பின் தலை மேலும், வால் கீழுமாக. நான் ‘ஏன் அப்படி?’ என்று கேட்கிறேன். அதற்கு அவர் “இந்த மரங்களில் எல்லாம் நல்ல தேங்காய்; அணில் அரிச்சுப் போடும். இந்த பாம்பு படம் கீறினால் அணில் பயந்து மரம் ஏறாது. தேங்காய் தப்பிவிடும்.” என்றார்.
செல்லரம்மான் ஏறாத தென்னை மரம் இல்லை. ஆனால் தன் வீட்டு மரத்தில் அணில் கூட ஏறுவதைப் பொறுக்காதது எனக்குப் புதுமையாக இருந்தது. இந்த அணில் சாத்திரம் விஞ்ஞான ரீதியாக உண்மையா என்று பின் காலத்தில் நான் பல முறை யோசித்ததுண்டு.
ஒரேயொரு முறை அவர் தன் மனைவியை எங்கள் வீட்டுக்கு கூட்டி வந்திருக்கிறார். எனக்கு ஞாபகமிருப்பதெல்லாம் அவர் மனைவி நல்ல சிவப்பாய் இருந்தது தான்.
அவருக்கு பத்தொன்பது வயது நடக்கும் போதே கல்யாணம் நடந்து விட்டதாம். அது ‘பேசி வைத்த’ கல்யாணமென்றாலும் இவர் காதல் வயப்பட்டு பல வீரப்பிரதாபங்களைச் செய்திருக்கிறார். இதை அவரே பலதரம் சுவைப்படக் கூறியிருக்கிறார்.
முதலில் இவருடைய தாயாரும் தமக்கையாரும் தான் போய் பெண் பார்த்தார்கள். பெண் வீடு அச்சுவேலியில். இவருக்கோ பெண்ணைப் பற்றிய விபரங்களை அறிய ஒரு துடிப்பு. ஆனால் அவர்களோ ஒன்றும் சொல்வதாகத் தெரியவில்லை. கடைசியில் தமக்கையாரை மடக்கி கேட்டுவிட்டார். அதற்கு அவருடைய அக்கா அந்த பெண்ணின் தலைமயிரைத் தான் வர்ணித்தாள். ஒரு பெண் இன்னொரு பெண்ணைப் பார்க்கும் போது முதலில் பார்ப்பது தலைமயிரைத் தான் போலும்.
எங்கள் தந்தையார் ஒரு கணக்கு வைத்திருந்தார். ஒரு பெண்ணின் தலைமயிர் ஆரோக்கியமாக இருந்தால் பெண்ணும் ஆரோக்கியமாக இருப்பாளாம்.
இவருடைய தமக்கையார் அந்தத் தலைமயிரின் நீளத்தை வர்ணித்தாள், பிறகு அதன் அடர்த்தியைப் பற்றி சொன்னாள்; பிறக அதன் கருமையைச் சொல்லிச் சொல்லி மாய்ந்தாள். தலைமயிரை அவிழ்த்து விட்டால் அது பிருஷ்டத்தின் கீழ் வந்து நிற்குமாம்; ஆஹா! ஆஹா!
தலைமயிரை வைத்து அவர் என்ன செய்வார். அவருக்க பெண் என்ன நிறம், அவள் கண்கள், அவள் வதனம், அவள் இடை, நடை எல்லாவற்றையும் பற்றி அறிய ஆசை. அக்காவைத் துளைத்தும் பயனில்லை. அவளுக்கு தலைமயிரைத் தவிர வேறு ஒன்றும் ஞாபகமில்லை.
செல்லத்தம்பிக்கு தவிப்பாக இருந்தது. எப்படியும் அந்தப் பெண்ணைப் பார்த்து விட வேண்டும் என்று துடித்தார். அந்தக் காலத்தில் அவ்வளவு தூரம் துணிந்து போய், ஒரு பெண்ணை அவள் அறியாமல், பார்ப்பது என்பது என்ன லேசான காரியமா?
அவருடைய அக்காதான் ஒரு யோசனை சொன்னாள். நந்தாவில் அம்மன் கோவில் திருவிழாவுக்கு அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த சவுந்தரவலில்யின் சதிர் கச்சேரி ஏற்பாடாகியிருக்கிறது. சவுந்தரவல்லியென்றால் அது இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட பேர் போன சதி ‘செட்’. அவள் ஆட்டம் இல்லாத திருவிழா ஒரு திருவிழாவா?
“இந்த திருவிழாவைப் பார்க்க எப்படியும் பெண் வீட்டார் வருவார்கள். அப்ப நீ பார்த்துக் கொள்ளலாம்.” என்றாள் அக்கா.
திருவிழாவும் வந்தது. பெண் வீட்டார் அச்சுவேலியில் இருந்து ஒற்றை மாட்டு வண்டி கட்டி வந்திறங்கனார்கள்.
பெரிய பந்தல் போட்டு, சிகரம் எல்லாம் வைத்து கோயிலை அலங்கரித்திருந்தார்கள். பச்சை, சிவப்பு, நீலம், மஞ்சள் என்று விளக்குகள் எங்கும் ஜகஜோதியாக எரிந்து கொண்டிருந்தது. பெண்கள் எல்லாம் ஒரு பக்கம்; ஆண்கள் மறுபக்கம்.
மேளச்சமா முடிந்ததும் சதிர் ஆட்டத்திற்கு பெண்கள் வந்து குவிவது வழக்கம். கொஞ்சம் கொஞ்சமாக இப்போது பெண்கள் பகுதியும் நிரம்பி விட்டது. செல்லத் தம்பி முன்பே இடம் பிடித்து வசதியான ஒரு எல்லையில் நின்று கொண்டிருந்தார். அந்த இடத்தில் இருந்து பெண்கள் பகுதியை எல்லாக் கோணத்திலும் பார்க்க முடியும்.
சவுந்தரவல்லியின் ஆட்டம் தொடங்கியது. இவர் கண்கள் பெண்கள் பக்கம் துழாவிய படியே இருந்தது. தலைமயிரை மட்டுமே வைத்து பெண்ணைக் கண்டு பிடிப்பது எப்படி? ஒவ்வொரு பெண்ணிடமும் போய் ‘உன்னுடைய மயிரை அவிழ்த்து விடு, பிருஷ்டத்தை தொடுகிறதா பார்ப்போம்’ என்று கேட்க முடியுமா? இவர் பயமெல்லாம் தவறான பெண்ணின்மேல் காதல் வயப்பட்டு விடக்கூடாதே என்பது தான்.
செல்லத்தம்பியின் அக்கா தன் மூன்று வயதுப் பெண் குழந்தையிடம் ஒரு பூவைக் கொடுத்து அதைக் கொண்டு போய் அந்தப் பெண்ணிடம் கொடுக்கும்படி அனுப்பினாள். இது முன் கூட்டியே செல்லத்தம்பியிடம் பேசி வைத்த ஒரு சமிக்ஞை. அந்தப் பெண் குழந்தையும் வெகு உஷாராக வெளிக்கிட்டது. ஆனால் பாதி வழியிலேயே மறந்து போய் நின்று ‘திரு திர’ வென்று விழித்தது. பிறகு திரும்பி வந்து தாய் மடியில் பொத்தென்று குந்தி விட்டது. செல்லத்தம்பியின் ஆசையில் மண் விழுந்தது.
அப்போதுதான் அவன் தமக்கையார் அவன் மேல் மனம் இரங்கி, ஒவ்வொரு அடியாக வைத்துப் போய் அந்தப் பெண்ணிடம் ஏதோ பேசி விட்டுத் திரும்பவும் வந்து உட்கார்ந்தாள்.
செல்லத்தம்பியின் பார்வையை ஒரு தூண் மறைத்தது. தலைநிறைய பூ, சிவப்பு பாவாடை, சருகை வைத்த பச்சை சட்டை. செல்லத்தம்பியின் நெஞ்சு படு வேகத்தில் அடிக்கத் தொடங்கியது. தனக்காகப் பிறந்த அந்தப் பெண்ணை முழுமையாகப் பார்க்க முடியாமல் அவஸ்தைப் பட்டார். இந்தப் பக்கம் பார்த்தால் தலையும், பூவும், மறுபக்கம் பார்த்தால் தோளும், பாவாடையும். தவணை முறையில் அவளைப் பார்த்து மனதைத் திருப்திப் படுத்திக் கொண்டார்.
ஒரு முறை அவள் தலை திரும்பிய போது அவள் கண்களையும், பல்வரிசைகளையும் பார்த்தார். ஆஹா! அப்படியே மோகித்து விட்டார்.
சவுந்தரவல்லியின் சதிர் ஆட்டம் முடிந்து பெண்கள் கூட்டம் கலையத் தொடங்கியது. அந்தப் பெண்ணும் பெற்றோருடன் வண்டியில் ஏறிக் கொண்டாள். செல்லத்தம்பி ஒரு நண்பனின் காலில் விழுந்து சைக்கிளை எடுத்துக் கொண்டு வண்டியைத் தொடர்ந்தார்.
சாக்கு படுதா போட்டு மூடியபடி வண்டி முன்னே போகிறது. அரிக்கன் லாந்தர் கீழே கட்டியிருக்கிறது. செல்லத்தம்பி பின்னாலே சைக்கிளில் போகிறார். வெகு கிட்டப் போனால் கண்டு கொள்வார்கள்; தூரத்தில் தொடர்ந்தாலோ ஒரு பிரணோசனமும் இல்லை.
ஒரு வண்டி மாட்டை சைக்கிளில் பின் தொடருவதென்பது மிகவும் கஷ்டமான காரியம். செல்லத்தம்பி மிக்க கவனமாக கண் பார்க்கும் தொலைவில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். இவர் சைக்கிளை மிதித்தாலும் உண்மையிலே ஆகாயத்தில் தான்போய்க் கொண்டிருந்தார்.
அந்த மயக்கமான வேளையில், வளையல் அணிந்த சிவந்த கரம் ஒன்று படுதாவை சிறிது நீக்கியது போன்ற பிரமை. இவர் நேரே சைக்கிளை விட்டார். அந்த நேரம் பார்த்து ரோட்டு ஓரத்தில் ‘கல்லு கும்பி’ ஒன்று இருந்தது. இவர் அதைப் பார்க்கவில்லை. கல்லுக் கும்பியும் இவரைக் கவனிக்கவில்லை. சைக்கிள் மோதி இவர் கீழே விழுந்தார்; சைக்கிளும் விழுந்தது; செல்லத்தம்பியுடைய காதல் சாம்ராஜ்யமும் சரிந்தது.
இதன் விளைவு? செல்லத்தம்பி ‘ஒட்டகப்பிலத்தில்’ கையுக்கு பத்துப் போட்டு கொண்டது தான். அநியாயமாக இவருடைய கல்யாணம் இரண்டு மாதத்துக்கு தள்ளிப் போடப்பட்டது.
செல்லரம்மான் விஸ்தாரமாக இந்தக் கதையைச் சொல்லக் கேட்டுக் கொண்டிருந்த சுப்பிரமணியம் பிள்ளை தான் கேட்டார்: “அது சரி, நேரமோ இருட்டு; பெண்ணோ படுதாவுக்குள் இருக்கிறாள். நீ என்ன நினைவோடு சைக்கிளில் தொடர்ந்து போனாய்? என்னதான் சாதிப்பதற்கு கிளம்பினாய்?”
செல்லரம்மான் சொன்னார்; “காதல் பிரதாபத்தில் மயங்கி நிற்கும் ஒருவன் தர்க்க சாஸ்திரத்தையா பார்ப்பான்? அவள் சுவாசிக்கும் காற்றைத் தான் நானும் சுவாசிக்க வேணும் என்று பட்டது. அவளிடமிருந்து பத்தடிக்கு மேல் தள்ளி நிற்க என்னால் தாக்குப் பிடிக்க முடியவில்லை, அந்த நேரம்.”
* * *
சங்கீதத்தில் அவருக்கு இருந்த காதலும் அப்படிப்பட்டதுதான். ஒரு குருவிடம் முறைப்படி கற்கவில்லையென்றாலும் அவருடைய சங்கீத ஞானமானது அசரவைக்கும். ஒரு ராகத்தைப் பாடி “இது என்ன ராகம்?” என்று கேட்பார். நான் ஒவ்வொரு ராகத்துக்கும் ஒரு பாட்டு முடிச்சுப் போட்டு வைத்திருப்பேன்; படக்கென்று சொல்லி விடுவேன். பத்துக்கு ஒன்பது சரிவரும்.
அப்போதுதான் காபி ராகத்தில் பி.எஸ்.ராஜா ஐயங்காருடைய ‘ஜகதோ தாரண’ இசைத் தட்டு வந்திருந்தது. அதை யார் வீட்டிலோ அடிக்கடி கேட்பார் போலும். அதைப் பற்றியே பேசுவார். அது தவிர, மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளையின் வயலினிலும் அவருக்கு ஒரு பக்தி.
ஒரு நாள் ‘யெவரிக அவதாரமு’ என்ற தியாகராயர் கிருதியை அவர் தேவமனோஹரி ராகத்தில் பாடியது ஞாபகமிருக்கிறது. அன்று அவருக்கு என்ன சங்கடமோ? அவர் கண்களில் கண்­ர் பொல பொல வென்று கொட்டியது. அவர் கூறினார்;
“ஒரு ராக தேவதை தன்னுடைய முழு சௌந்தர்யத்தையும் இலகுவில் காட்டி விட மாட்டாள். மெள்ள மெள்ளத்தான் உன் சாமர்த்தியத்தை பிரயோகித்து அவள் பூரண அழகையும் வெளியே கொண்டுவர வேண்டும்.”
எப்படியான வார்த்தை?
சங்கீதம் என்றால் அந்தக் காலத்து விவகாரமே வேறு. இந்தக் காலத்தில் என்றால் சங்கீத வித்வானும் பக்கவாத்தியக் காரர்களுமாகச் சேர்ந்து ரஸ’கர்களை திருப்திப்படுத்தும் நோக்கத்தோடு ஒரு உயர்ந்த சங்கீதத்தை அளிப்பார்கள்.
செல்லரம்மான் காலத்தில் சங்கீத வித்வான், பக்கவாத்தியக்காரன் அசந்திருக்கும் சமயத்தில் அவனைக் குழிதோண்டிப் புதைக்ப் பார்ப்பான். பக்க வாத்தியக்காரன் என்ன சாமான்யப்பட்டவனா? அவனும், தன்னுடைய வித்தை எல்லாத்தையும் காட்டி வித்துவானை மட்டந்தட்ட சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருப்பான்.
சபையோரும் இரண்டு பக்கமாகப் பிரிந்து தங்கள் தங்கள் வித்வான்களை ஆதரிப்பார்கள்; சில வேளைகளில் இது பெரிய அடிதடியில் கொண்டு போய் விடும்.
அப்போது யாழ்ப்பாணத்தில் ‘சின்னமேனை, சின்ன மேனை’ என்று ஒரு பெரிய வித்துவான் இருந்தார். பல்லவி பாடுவதில் இவரை விழுத்த இனி மேல் தான் ஒருவர் பிறக்க வேணும். அப்படி ஒரு பேர். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவருக்கு. செல்லரம்மான் அதில் முதன்மையானவர்.
அப்போதுதான் இந்தியாவில் இருந்து ஒரு பிரபல வயலின் வித்துவான் வந்திருந்தார். சின்னமேனைக்க அவரை எப்படியும் மட்டந்தட்ட வேண்டும் என்று ஒரு உத்வேகம். அந்தக் காலத்தில் அப்படிச் செய்தால்தான் ஒருவன் தன் புகழை நிலை நாட்ட முடியும். சின்னமேனையின் ரசிகர்களுக்கு உற்சாகம் தலைக்கு மேல் போய்விட்டது. செல்லரம்மாள் அவருடைய பிரதம ரசிகர்.
சின்னமேனைக்கு அந்த இந்திய வித்வான் வயலின் வாசிக்கும் படியாக ஒரு கச்சேரி ஒழுங்கு பண்ணினார்கள். சின்னமேனை முன்பின் கேள்விப்படாத ஒரு தாளத்தில் ஒரு புதுப் பல்லவியை உருவாக்கினார். அதை இரவு பகலென்று பாராமல் ரகஸ்யமாக ஆயிரம் தடவை சாதகம் செய்து வைத்துக் கொண்டார்.
கச்சேரி வழக்கம் போலத் தொடங்கி களைகட்டிக் கொண்டே வந்தது. வயலின்காரரும் ஈடு கொடுத்து வாசித்துக் கொண்டே வந்தார். கடைசியில் பல்லவி பாடும் நேரம். சபையில் மூச்சுவிடக் கூட ஒருதரும் துணியவில்லை.
சின்னமேனை, அங்கவஸ்திரத்தை இழுத்து தாளம் போடும் கையை மறைத்தவாறு, ஆரம்பிக்கிறார். சபையிலே அப்படி ஒரு நிசப்தம்.
“மா….மரமும்….நிழலும்….குயிலும் மருவி அணையத் தருணமிதுவே.
இது தான் பல்லவி; இதைத் திருப்பித் திருப்பித் தன் வித்தை எல்லாத்தையும் காட்டி பாடுகிறார்; வயலின் காரரும் சளைக்காமல் பக்கத்து பக்கத்தில் நெருக்கிக் கொண்டே வருகிறார். இவர் பாட, அவர் வாசிக்க, சபையோர் ஆனந்த பரவசத்தில் மூழ்கி இருக்கிறார்கள். என்ன நடக்குமோ என்ன நடக்குமோ, என்ற ஆவல்?
இப்போது பாடகர் சமயம் பார்த்து “குயிலும்….. நிழலும், குயிலும்”
என்று பாடுகிறார் துரித காலத்தில், வயலின் காரரும் தாளத்துடன் ஒத்துப்போக படக்கென்று கையை இழுக்கிறார். ஆனால், ஈடு கொடுக்க முடியாமல் வயலின் கம்பி அறுந்து விடுகிறது.
அவ்வளவு தான். சபையோரின் கரகோஷம் வானைப் பிளக்கிறது. அன்றிலிருந்து வித்துவானுக்கு ஒரு புதுப்பெயர், ‘வயலின் அறுத்த சின்னமேனை’. சின்னமேனை இறக்கும் வரை சங்கீதத்தில் ஒரு முடிசூடா மன்னனாகவே இருந்தார்.
* * *
ஒரு நாள் நாங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் செல்லரம்மான் திடீரென்று வந்து விட்டார். அப்போதுதான் அழுது கொண்டிருந்தேன். எனக்கு பதினொரு வயது. பரீட்சைக்கு மிகவும் கஷ்டப்பட்டுத்தான் படித்தேன். பெரிய பள்ளிக்கூடம் போக வேண்டும் என்று அப்படி ஒரு ஆசை. ஆனால் பூபாலன் ஒரு ‘மார்க்’ வித்தியாசத்தில் என்னை முந்திவிட்டான். எனக்கு அந்த சான்ஸ் போய் விட்டது.
அன்றுதான் எனக்கு அபிமன்யு கதையைச் சொன்னார். அது நான் மறக்க முடியாத நாள்; அதுதான் நான் மறக்க முடியாத கதையும் கூட
“பதின்மூன்றாம் நாள் போர். துரோணர் பத்மவியூகம் வகுத்து சேனைகளை எல்லாம் அணி வகுத்து நிற்கிறார். அர்ஜுனனோ தெற்குத் திசையில் மும்முரமாக யுத்தம் செய்கிறான். பாண்டவ சேனையில் பெரிய சேதம்; ஆயிரக் கணக்கில் மடிகிறார்கள்.”
“பதினாறு வயதுப் பாலகன் அபிமன்யுவுக்கு பத்ம வியூகத்தை உடைக்கத் தெரியும்; ஆனால் திரும்பி வரும் வித்தையை இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. தருமர் சொற்படி பத்மவியூகத்தை உடைத்து உள்ளே போய் விடுகிறான். கொடுத்த வாக்குப் பிரகாரம் தருமரும், வீமனும் மற்ற பாண்டவ சேனையும் தொடர்ந்து போக முயற்சிக்கிறார்கள்; ஆனால் ஜயந்திரதன் தடுத்து விட்டான்; எப்படி முயன்றும் அவர்களால் அபிமன்யுவைத் தொடர்ந்து உள்ளே போக முடியவில்லை.”
“பாவம், அபிமன்யு! சூரியனைப் போல ஒளி வீசிக் கொண்டு யுத்தம் புரிகிறான். கௌரவ சைனியங்களையெல்லாம் துவம்சம் செய்கிறான். அவனுக்குத் துணை அவனுடைய வீரம் மட்டும்தான்.”
“அப்போது, கௌரவ சேனையின் ஆறு மகாரதர்களும் ஒன்று சேர்ந்து கொண்டு, கர்ணன் உட்பட, சதிசெய்து அபிமன்யுவைக் கொன்று விடுகிறார்கள்.”
இதைக் கேட்டு நான் கண் கலங்குகிறேன், அப்ப செல்லரம்மான் சொல்கிறார்:
“சில நேரங்களில், பெரிய வெற்றியைத் தேடிப் போகும் போது சில சிறிய தோல்விகளை நாங்கள் சந்திக்கத் தான் வேணும். உள் பெரிய வெற்றியிலே இது ஒரு சிறு தோல்வி”
இந்த அறிவுரை எனக்கு அன்று மாத்திரமல்ல பிறகும் எத்தனையோ சந்தர்ப்பங்களில் என் நினைவுக்கு வந்திருக்கிறது.
* * *
இவ்வளவு கூறிய நான் செல்லரம்மானுடைய இறுதிக் காலத்தைப் பற்றியும் சொல்லத்தானே வேண்டும்.
சில சாவுகள் தவிர்க்க முடியாதவை. வருத்தம் வந்து சாகிறான்; படுக்கையில் படுத்து சாகிறான்; நித்திரையில் சாகிறான்; மரம் வெட்டும் போது மரம் விழுந்து சாகிறான். ஆனால் செல்லரம்மானுடைய சாவு அநியாயச் சாவு; தவிர்க்கக் கூடிய சாவு.
யாழ்ப்பாணத்தில் ஊரடங்குச் சட்டம் இருந்த காலம் அது. ஒரு நாள் மாலை நேரம். இவர் வேலையை முடித்து விட்டு ஒட்டமும் நடையுமாக வீட்டுக்கப் போகிறார்.
பட்டாளத்துக்காரன் இவரைப் பார்த்து ‘நில்’ என்று சொல்கிறான். இவருக்கு கேட்கவில்லை. அந்த நேரத்தில் இவருடைய வாய் காவி ராகத்தில் ஒரு பாட்டை முணுமுணுத்திருக்குமோ, என்னவோ? அவன் இன்னொரு முறை சத்தம் போடுகிறான். இவருக்கு அதுவும் கேட்கவில்லை. மூன்று தரம் சுடுகிறான். மூன்று குண்டுகளும் தவறாமல் இவர் முதுகைத் துளைத்தபடி போகிறது.
கேட்பாரற்று, அநியாயமாகக் கீழே விழுந்தார் செல்லரம்மான். அவருடைய கடைசி சுவாசம் என்ன கதையைச் சொல்லிக் கொண்டு வெளியே போனதுவோ!
* * *
முப்பது வருடங்களுக்கு பிறகு நான் செல்லரம்மானைத் தேடிப் போன போது அவரைத் தெரிந்தவர்கள் இந்த விபரங்களைச் சொன்னார்கள். அவருடைய மனைவியும், மகளும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை. மகள் வளர்ந்து, பெரியவளாகி அவளுக்கும் பிள்ளைகள் இருந்திருக்க வேண்டுமே?
என்னுடைய வாழ்க்கையில் எத்தனையோ இக்கட்டான சந்தர்ப்பங்களில் அவரை நினைவு கூர்ந்திருக்கிறேன். சந்தோஷமான நேரங்களிலும் அவரை நான் மறக்கவில்லை. அப்படியான அவருடைய ஒரு தாக்கம் என் வாழ்க்கையில் இருந்தாலும் அவர் இறப்பதற்கு முன்னர் ஒரு முறை கூட என்னால் அவரைச் சந்திப்பதற்கு முடிய வில்லையே!
சிறு வயதில் ஒரே ஒரு முறை போன ஞாபகத்தை வைத்துக் கொண்டு அவர் வீடு தேடிப் போகிறேன். அங்கே உள்ள குடிசைகள் எல்லாம் சிதைந்து போய் கேட்பாரற்று கிடந்தன. ஒருவரையும் காணவில்லை. எல்லாம் பட்டாளத்துக்காரர்களினால் ஏற்பட்ட அழிவு தான். எது அவர் வீடாக இருக்கும் என்று ஞாபகப் படுத்தி தேடித் தேடிப் பார்க்கிறேன்.
அப்போது பாம்பு கீறிய தென்னை மரமொன்று என் கண்ணிலே படுகிறது. கிட்டப்போய் அந்தப் பாம்பையே பார்த்தபடி நிற்கிறேன்.

DIVINE