Saturday 10 December 2016

தங்கச் சிறகுகளோடும்
வைரம் பொதிந்த தலைச் சீராயோடும் 
புல்லாங்குழல் அலகால்
கீதமிசைத்தபடி
சொர்க்கத்துப் பறவை
வானமிருந்து கீழிறங்குகிறது...
சூரியனை நேசித்தபோழ்தில்
தங்கவொளியையும்
சந்திரனே விரும்புகையில்
குளிர்முத்து மாலையினையும்
மேகம் கனிந்து கொடுத்த
வெண்பனியமுதமும் அருந்திவிட்டு
வான்அலைகளை தழுவியபடி
காதலின் மாலையொன்றை
கழுத்தில் அணிந்துகொண்டு.....
யாரைத்தேடியோ
பூமியில் தேடியபடி.....
பகல் முழுக்க தேடல்முடித்து
சோர்வுடன் பயணிக்கப் போகும்
சொர்க்கத்துப் பறவைக்கு
என்ன கொடுத்தனுப்பலாம்...?
ஒன்றும் வேண்டாம்..
எனைப்பிடித்து தங்கக்கூண்டுக்குள்
அடைக்கத் துடிக்குமாசையை
காதலென்று சொல்லாதொழிக
சொல்லியபடி விண்ணேகியது
சொர்க்கத்து காதற்பறவை...

No comments:

Post a Comment