Sunday 25 December 2016

அந்தக் கிராமத்தில் 5 முட்டாள் சகோதரர்கள் இருந்தனர். புத்திசாலித்தனத்துக்கும் அவர்களுக்கும் வெகுதூரம். எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் அதை திறமையாகச் செய்யாமல் கோணங்கித்தனமாக எதையாவது செய்துவிடுவார்கள்.
ஒரு நாள் காலையில் ,"நம்ம ஊர் காட்டு ஆற்றில் மீன்
பிடிச்சுட்டு வர்றோம்," என்று அம்மாவிடம் சொன்னாங்க.
"நல்ல மீனா புடிச்சுட்டு வாங்க; அருமையா சமைச்சுத் தாரேன்,"அப்டீன்னாங்க,அம்மா.
"இரவுச் சாப்பாட்டுக்கு நாங்க பிடிச்சுட்டு வர்ற மீன் தான்,"என்று மூத்த மகன் சொன்னான்.
"எனக்கும் மீன் ரெம்பப் பிடிக்கும். கவனமா குளத்துல மீன் பிடிங்க. தண்ணீருக்குள் தவறி விழுந்துடப்போறீங்க;கவனம்,"என்று அம்மா புத்திமதி சொல்லி அனுப்பினார்.
"நான் இருக்கேன்;அதெல்லாம் கவலைப்படாதீங்க,"என்றான் மூத்த மகன்.
அடந்த காட்டுக்குள் சென்று அந்த நதியை அடைந்தனர் சகோதரர்கள்.
ஆற்றங்கரையை ஒட்டிய இடத்திலிருந்து தேவையான மண்புழுக்களைச்
சேகரித்தனர்.
மீன் பிடிக்கத் துவங்கினர்; ஒவ்வொருவரும் தங்கள் தூண்டிலை வீசினர்.
"ப்ளாப்"...ப்ளாப்" என்று தூண்டில் தண்ணீரில் விழுந்த சத்தம் கேட்டது.
"ஸ்விஷ்" என்ற சத்தத்தோடு தூண்டிலை எடுத்தான் மூத்தவன். பெரிய‌
வெள்ளிக்கெண்டை மீன் வந்தது.
கடைசித் தம்பி தூண்டிலில் விழும் மீனை எடுத்து பாத்திரத்தில்
போடும் வேலையைச் செய்தான்.
ஒரு மணி நேரம் ஆனது.
"மொத்தம் எத்தனை மீன் இதுவரை கிடைத்துள்ளது?"என்றான் மூத்த அண்ணன்.
கடைசித் தம்பி மீனை எண்ணி,"இதுவரை 15 மீன்கள் கிடைத்திருக்கிறது,"என்றான்
"அம்மா, ரெம்ப சந்தோசப்படுவாங்க இன்னைக்கு,"என்றான் இரண்டாவது சகோதரன்.
"நேரமாச்சு;மீன் பிடிச்சது போதும். போகலாம்,"என்றான் மூன்றாமவன்.
"நாம எல்லோரும் இங்க இருக்கோமா?"என்றான் நான்காமவன்.
"அஞ்சு பேர் இருக்கிறோமான்னு எண்ணிப்பாத்துட்டாப் போகுது,"என்றான் ஐந்தாவது சகோதரன்.
உடனே மூத்தவன் எண்ணத் துவங்கினான். தனக்கு எதிரில் இருந்த தம்பிகளை
ஒன்று,இரண்டு,மூன்று, நான்கு..."என்று சொல்லி நிறுத்தினான். ஒருத்தன் குறைகிறானே என்றான்..
அடுத்தவன் எண்ணிப்பார்த்தான். ஒன்று,இரண்டு,மூன்று, நான்கு... அட...நான்கு பேர்தான் இருக்கோம்,"என்றான்.
அடுத்தவனும் அதே போல எண்ணினான் அவனுக்கும் நான்கு பேர்தான் எண்ணிக்கை வந்தது.
கடைசியாக ஐந்தாவது சகோதரனும் எண்ணிபார்த்துவிட்டு அழ ஆரம்பித்துவிட்டான்.
"அண்ணே, நாலு பேர்தானே இருக்கோம். அம்மா சொன்னமாதிரி நம்மில் ஒருத்தர் தண்ணீரில்தான் விழுந்திருக்கனும்,"என்று சொல்லி அழுதான்.
"ஆமா..நீ சொல்றது சரிதான்..நம்மில் ஒருத்தரை தொலைத்துவிட்டோம். வாங்க,ஆத்தங்கரை ஓரமா ஓடித் தேடுவோம். தண்ணீரில் தான் விழுந்திருக்க வேண்டும்," என்று மூன்றாமவன் அழுதுகொண்டே சொன்னான்.
சகோதரர்கள் அனைவரும் இப்போது அழுதுகொண்டே வெகுதூரம் ஓடிப்போய்ப் பார்த்தனர். தண்ணீர்தான் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.
என்ன செய்வது என்று தெரியாமல் சோகமாக சகோதரர்கள் அழுது கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஒரு சிறுமி பூக்கூடையுடன் வந்தாள்.
"ஏன் எல்லோரும் அழுகிறீர்கள்? என்ன நடந்தது? "என்று கேட்டாள்.
"மீன் பிடிச்சுக்கிட்டு இருந்தோம். எங்களில் ஒரு சகோதரன் காணோம். தண்ணீரில் தவறி விழுந்து விட்டான் போல. தேடியும் பாத்துட்டோம்,"என்று சொல்லி அழுதான்.
"நான், இப்போது எண்ணிப் பார்க்கிறேன், ஒன்று,இரண்டு,மூன்று,நான்கு.."என்று
எண்ணினான். அவன் எண்ணியதை அந்தச் சிறுமி பார்த்துக்கொண்டிருந்தாள்.
"நீங்க மொத்தம் எத்தனை சகோதரர்கள்?"என்று சிறுமி கேட்டாள்.
"நாங்கள் ஐந்து பேர்கள்,"என்றான் இரண்டாமவன்.
பூக்கூடையுடன் வந்த சிறுமி இப்போது புன்னகைத்தாள். "இப்ப நான்,
காணாமல் போன ஐந்தாவது சகோதரனைக் கண்டுபிடித்துத் தரப்போகிறேன்,"என்றாள்.
"எப்படி?"எல்லோரும் ஒரே நேரத்தில் கேட்டனர்.
"இதோ இந்தப் பூக்கள் உதவியுடன்,"என்றாள் சிறுமி.
"பூக்கள் எப்படி உதவி செய்யும்?" அப்பாவியாய்க் கேட்டான் ஐந்தாமவன்.
"இப்ப பாக்கத்தான போறீங்க,"என்றாள் சிறுமி.
"நான் ஒவ்வொரு " பூ" வா கொடுப்பேன். நான் ஒரு பூ கொடுத்ததும் ஒன்று, இரண்டு என்று சொல்வேன். நீங்கள் சொல்லிக்கொண்டே வரவேண்டும் சரியா?"என்று சொல்லி முதலவதாக ஒருவனிடம் பூவைக் கொடுத்தாள்.
"ஒன்று" பூவை வாங்கிக்கொண்டு அவனும் ஒன்று என்றான்.
"இரண்டு" பூவை வாங்கிய இரண்டாமவனும் "இரண்டு"என்றான்.
"மூன்றாவது பூவை வாங்கியவன் மூன்று, நான்காவது பூவை வாங்கியவன்
நான்கு, ஐந்தாவது பூவை வாங்கியவன் ஐந்து என்றான்.
"பார்த்தீர்களா? காணாமல் போன ஐந்தாவது சகோதரனைக் கண்டுபிடித்துவிட்டேன், இல்லையா?"என்றாள்.
"ஆமாம். நீ, கண்டுபிடிச்சுக் குடுத்திட்ட," என்று மூத்தவன் சந்தோசமாகக் கத்தினான்.
"உனக்கு ரெம்ப நன்றி" என்றான் ஒருவன்.
"இப்ப எங்க அம்மா சந்தோசப்படுவாங்க" என்றான் இன்னொருவன்.
"எங்களுக்கும் இப்ப சந்தோசம். காணாமல் போன சகோதரனைக் கண்டு
பிடித்ததற்காக உனக்கு இரண்டு மீன்,"என்று மூத்தவன் அந்தச் சிறுமிக்கு கொடுத்தான்.
அந்தச் சிறுமியும் இரண்டு மீன்களோடு சந்தோசமாக அவளுடைய வீட்டை
நோக்கிப் போனாள்.
மீனோடு சகோதரர்கள் ஐவரும்,உற்சாகமாக வீடு திரும்பினார்கள்.
"என் செல்லங்கள் இவ்வளவு மீன் பிடிச்சிருக்கீங்களே; நீங்கள்
கெட்டிக்காரர்கள்,"என்று அம்மா பாராட்டினாள்.
"நாங்க யாரும் தண்ணீரில் விழவில்லை. வேணும்ன்னா இந்தப் பூவை
வச்சு எங்களை எண்ணிப்பாத்துக்கங்கம்மா,"என்றான் கடைசி மகன்.
ஆனால்,அம்மாவுக்குத் தெரியுமோ!?காணாமல் போன சகோதரனைக் கண்டு
பிடிக்க உதவியது அந்தப் பூக்கள்தான் என்று!

No comments:

Post a Comment