வணிகன் ஒருவன் பெரும் பணம் சேர்த்தான். ஒருநாள் எல்லாவற்றையும் எண்ணிப்பார்த்தபோது கிட்டதட்ட எட்டு லட்சம் பொன் தன்னிடம் இருந்தது அவனுக்குத் தெரிந்தது.
இதை எதில் முதலீடு செய்தால் ஓரிரண்டு வருடங்களில் அதை இரண்டு மடங்காக்க முடியும் என்று திட்டமிட்டு எழுதுவதற்காக ஓலையையும், தூரிகையையும் எடுத்தான். சுரீரென்று அவனுக்கு நடுமார்பு வலித்தது. அப்படியே பின்னுக்குச் சாய்ந்தான். அவன் கண்ணுக்கு எதிரே மரண தேவதை தோன்றி,
“புறப்படு என்னுடன்” என்று அழைப்பு விடுத்தது...
அம்மனிதன் கெஞ்சினான். அழுது முறையிட்டான். தேவதை சற்றும் மனம் இளகவில்லை. “கொஞ்ச காலம் வாழ அருள் செய்” என்று வேண்டிக் கொண்டான். அது அசைந்து கொடுக்கவில்லை.
“ஒரு நாலு நாளாவது அவகாசம் கொடு. என் சொத்தில் பாதி தருகிறேன்..!” என்று பேரம் பேசிப் பார்த்தான்.
அப்போதும் அது நகரவில்லை.....
“ஒருநாள் - ஒரே ஒருநாள் அவகாசம் கொடு” என்று அழுதான் அப்படியும் அது அசையவில்லை.
“எனது எல்லாச் சொத்துக்களையும் தருகிறேன். ஒரு பகல் அவகாசம் கொடு. வீட்டில் என் பந்துக்கள் யாருமில்லை.”
அப்போதும் அது மசியவில்லை. “இதோபார். உன் சொத்துக்கள் எதுவுமே அங்கே பயன்படாது. உன் உறவுகளைப்பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. உனக்கு இரண்டே இரண்டு விநாடிகள் அவகாசம் தருவேன் அவ்வளவுதான்.” என்றது மரணதேவதை கண்டிப்புடன்.
தன் வியாபாரத்தின் கொள்முதல், விற்பனை, வரவு, செலவு, லாபக்கணக்கு இவற்றைப்பற்றிப் பற்றி எழுதுவதற்காகத் தனது ஓலையை எடுத்தவன் அதில் அவகாசமாக இப்படி எழுதினான்....
“இதைப்படிக்கும் எல்லோருமே உணரவேண்டிய உண்மை என்னவென்றால் பொருள் சேர்ப்பதில் உங்களது வாழ்நாளை வீணடித்துவிடாதீர்கள். எட்டு லட்சம் பொன் இருந்தும் என்னால் ஒரு நாழிகையைக்கூட அதன் மூலம் வாங்க முடியவில்லை” என்று எழுதி முடித்தார்.
No comments:
Post a Comment