Monday 12 December 2016

நம்மிடையே நீண்ட காலமாக இருக்கம் பழமொழி ‘குன்றிலிட்ட விளக்குபோல’ என்பதாகும். குன்றிலிட்ட விளக்கு பரந்துபட்ட ஒளியைத் தரும்.அண்ணாமலைத் தீபத்தை இதற்குச் சான்றாகக் கொள்ள முடியும். என்றாலும் இந்தப் பழமொழி தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வழங்குவதால் திருவண்ணமலைக்கு மட்டும் சொந்தமானதாக இருக்க முடியாது. குன்றில் ஏற்றிய விளக்கு ஒரு வரலாற்றுச் சம்பவத்தின் அடிப்படையில்தான் இருந்திருக்க வேண்டும். அது கார்த்திகை தீபத்தின் மர்ம்மத்தையும் அவிழ்க்கலாம் அல்லவா?
இந்நிலையில் இதற்கு கைக் கொடுப்பவர் அயோத்திதாசப் பண்டிதர் அவர்கள் மட்டும்தான். அவர் என்ன சொல்கிறார் என்பதை இனி பார்ப்போம்.
மலாடபுரம் என்ற ஊரில் இருந்த பௌத்த சங்கத்தின் சேர்ந்த பிக்குகள் மக்களுக்குப் பயன்தரும் பல ஆய்வுகளைச் செய்து வந்தனர். பல மருந்துகளையும் கண்டுபிடித்து மக்களுக்கு அளித்தனர். அவ்வாறான பணியில் பேராமணக்கு விதையிலிருந்தும், சிற்றாமணக்கு விதையிலிருந்தும் நெய்யை வடித்து எடுத்தனர். அது அக்காலத்திற்கு பெரிய கண்டுபிடிப்பாக இருந்தது. அந்த நெய்கள் பலவாறாக பயன்படுத்த முடியும் என்பதுடன் அப்போது பெரிய பிரச்சனையாக இருந்த இரவின் இருளைப் போக்க அது பெரிதும் உதவும் என நம்பினர். ஏனெனில் இருட்டில் விளக்கை ஏற்றும் பழக்கம் அப்போது இல்லை.
காய்ந்த மரத்தினை வெட்டி அதைக் தீயிட்டு, அதன் மூலம் கிடைக்கும் வெளிச்சத்தைத்தான் மக்கள் பயன்படுத்த முடியும், ஆனால் அதிலும் பிரச்சனை இருந்தது. விறகின் வெளிச்சத்தை பரலாக்க முடியாது, அதில் அனல் அதிகமாக இருக்கும், வெளிச்சமும் நீண்ட நேரம் கிடைக்காது, அவிந்துப் போனால் உண்டாகும் புகை பலவகையான மூச்சு நோய்களை உருவாக்கியது, திணருலும் வரும். எப்படிப்பார்த்தாலும் விறகின் வெளிச்சப்பயன்கள் குறைவுதான், அந்த கையறு நிலையில்தான் ஆமணக்கு விதைகளில் கிடைத்த நெய் பெரிய வரமாக அமைந்தது.
பிக்குகள் கண்டறிந்த நெய்யில் தீபத்தை ஏற்றி சோதனை செய்தனர். அப்போது பிரகாசமான ஒளி கிடைத்தது, அனல் மிகக்குறைவாக இருந்தது. சுருக்கமாக சொல்வதென்றால் குளிர்ந்த ஒளி கிடைத்தது. சிறிய இடத்திலிருந்து பெரிய ஒளி.. இது பிக்குகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது, தமது கண்டுபிடிப்பை மக்களுக்கு பயன்படுத்த முனைந்தார்கள். ஆனால் மக்கள் உடனே ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் முதலில் மன்னனின் இசைவைப் பெற விரும்பினார்கள்.
மன்னன் உடனே இசையவில்லை. ஏனெனில் நெருப்பினால் உண்டாகும் புகை பலவிதமான நோய்களை உருவாக்கும் என்பது மட்டுமல்ல, நெருப்பைக் காத்து வருவது என்பது ஒரு கிராமத்தின் கடமையாகவே இருந்து வந்த அக்காலத்தில் எளிதில் கொண்டு செல்லத்தக்க ஒரு நெருப்பினால் பலவித பிரச்சனைகள் உண்டாகலாம் என்று மன்னன் அச்சப்பட்டான். அதனால் அந்த நெய்களை சோதிக்க விரும்பினான்.
அதன்படி யாருக்கும் தீங்கு நேராவண்ணம், தனது நகருக்கு அருகில் உள்ள அண்ணாந்து குன்றின் உச்சியில் ஒரு பள்ளத்தை வெட்டச் செய்தான். அதற்குள் நிறைய ஆமணக்கு நெய்யை தயாரிக்கச் செய்து அதை குன்றின் உச்சிக்கு கொண்டுபோய் வெட்டிய பள்ளத்தில் ஊற்றி, பெரிய திரியை ஏற்றி கொளுத்தச் சொன்னான், அதன்படி சேவுகர்கள் செய்தார்கள். குன்றின் உச்சியில் பெரிய தீபம் எரிந்ததைப் பார்த்த மக்கள் மகிழ்ச்சியில் குதூகலித்தனர். அந்த ஒளியினால் எந்த மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் எந்தவிதமான தீங்கு விளையாதைத் கண்டனர். அனைவருக்கும் ஒளி கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்தது.
மக்களின் நம்பிக்கையை உணர்ந்த மன்னர் அனைவரும் தத்தமது வீடுகளில் ஆமணக்கு நெய்யைப் பயன்படுத்தி தீபம் ஏற்றிக் கொள்ள அனுமதித்தான். அதன்படி முதல் மூன்று நாட்கள் மக்கள் தீபத்தை வீட்டுக்கு வெளியே வைத்து சோதித்துக் கொண்டனர். அதனால் தீங்கேதும் விளையாததைக் கண்ட பின்னரே வீட்டுக்குள் கொண்டு சென்றனர்.
அதுமுதற்கொண்டு அனைவருக்கும் வீட்டிலேயே நெருப்பை வைத்துக் கொள்ளும் வழக்கம் வந்தது. பணக்காரர்களின் அல்லது ஒரு கிராமத்தின் சொத்தாக இருந்த நெறுப்பு அனைத்து வீடுகளுக்கும் வந்தது என்பது எப்பேர்பட்ட கண்டுபிடிப்பு.
அப்படி பௌத்த பிக்குகள் கண்டுபிடித்த அந்த ஆமணக்கு நெய்கள் சோதிக்கப்பட்ட இடம் அண்ணாந்துமலை என்ற திருவண்ணாமலையாகும் என்பதைச் சொல்லத்தேவையில்லை.
பிக்குகள் தமது கண்டுபிடிப்பை சோதித்த காலம் முன்பனிக்காலமாகும். பௌத்த வழக்கப்படி எதையும் அவர்கள் பௌர்ணமி அன்றுதான் தொடங்குவார்கள். அதனால் மழைக்காலம் முடிந்து முன்பனித் தொங்கும் காலத்தின் முதல் பௌர்ணமியில் அவர்கள் தமது சோதனையைச் செய்தனர். கார்காலமும் முன்பனிக் காலமும் இணையும் நாட்கள் குளிராகவும் இருட்டாகவும் இருக்கும். கார் என்பதற்கு இருள், கருமை என்று பொருள். கரிய கார் காலத்தின் இருட்டை துலக்கும் ஆமணக்கு நெய் கண்டுபிடிக்கப்பட்டதால் அம்மாதத்திற்கு காரை துலக்கும் எனப் பொருள்படும் கார்த்துல மாதம் என்ற பெயர் உண்டானது. இந்த பெயரே மருவி காத்திகை மாதம் என்றானது.
பௌத்தர்களின் கண்டுபிடிப்புகள் பௌத்த மதம் பரவிய நாடுகளில் பரவுவதுபோல இந்த கண்டுபிடிப்பும் பரவியது. சீனப் பயணிகள் இதைப்பற்றினக் குறிப்பை எழுதியுள்ளனர். அவர்கள் நாட்டிலும் ஆமணக்கு நெய்யை அறிமுகப்படுத்தினர். அவர்களும் அந்நாளைக் கொண்டாடி வருகின்றனர் என்று பண்டிதர் எழுதுகிறார்.
எள்நெய்யை கண்டுபிடித்து அது மனித குலத்திற்கு பயனுள்ளதாக மாறியதோ அப்படித்தான் ஆமணக்கு நெய்யும் மாறியது. மக்கள் தமக்கு பயன் விளைவிக்கும் யாவற்றையும் கொண்டாடத்தானே செய்வார்கள். அப்படித்தான் கார்த்துலக்கும் தீப நாளையும் கொண்டாடி வருகின்றனர். இப்போது குன்றின் மேலிட்ட விளக்கு என்பதற்கான விளக்கமும் புரிந்திருக்கும்.
எனவே. கார்த்திகை பண்டகை என்பது பௌத்தர்கள் அறிமுகப்படுத்திய பண்டகை என்பதை யார் மறுக்க முடியும். ஆனால் இதில் எழும் கேள்வி என்னவென்றால். மலாட புரம் என்ற இடம் எங்கிருக்கிறது. திருவண்ணமாலை நகருக்கு அருகே ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மல்லவாடி எனும் கிராமமாக இருக்கலாம் .
பக்தி இயக்கம் தோன்றுவதற்கு முன்பு திருவண்ணமலை அண்ணாமலை என்றுதான் அழைக்கப்பட்டது. சைவக் குரவர்கள் அங்குள்ள சிவன் கோயிலை பாடியப் பிறகுதான் அது திருவண்ணமாலை என்றானது.
அண்(ணா) என்றால் உயர்ந்த என்று பொருள், அதானால்தான் மூத்த உடன்பிறப்பை அண்+அவன் = அண்ணன் என்று அழைக்கிறோம். எனவே செங்குத்தாய் உயர்ந்த குன்று அண்ணாந்து பார்க்க வைப்பதால் அது அண்ணாமலை என்றானதில் வியப்பில்லை.
ஆனால் மலாடப்புரத்தின் அரசன் யார் என்பதுதான் ஒரு கேள்வியாகத் தொக்கி நிற்கும், அது பற்றி பண்டிதர் சொல்லும்போது அதற்கான குறிப்பு அழிந்து விட்டதாக தெரிவித்துள்ளார். ஏனெனில் அவர் காட்டிய ஆதாரங்கள் பெரும்பாலும் .ஓலைச்சுவடிகளை மையமாகக் கொண்டதுதான். எனவே அது அழிந்திருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.

No comments:

Post a Comment