Sunday 25 December 2016

வால்கா நதியோரம்
ரஷ்யாவின் துறைமுக நகரம் "நவ்காரட்." வால்கா நதி நகரம் என்றுகூட சொல்லலாம். மாஸ்கோவிற்கும் பீட்டர்ஸ் பர்க் நகரத்துக்கும் இடையிலான ஒரு பழைய நகரம். வணிகம் செழித்து வளர்ந்த நகரமும் கூட. பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைக்கொண்ட நகரம் அது. இசைக் க‌லைஞன், இளைஞன் "ச‌ட்கோ." ச‌ட்கோ கூஸ்லி என‌ப்ப‌டும் இசைக்க‌ருவியை வாசிப்ப‌தில் வ‌ல்ல‌வ‌ன். 12 க‌ம்பி நரம்புகளைக்கொண்ட‌ கூஸ்லியை ச‌ட்கோ வாசிக்கும் வித‌மே அலாதியான‌து. பண‌க்கார‌ர் அல்லது பிர‌புக்க‌ளில் ஒருவ‌ர் ச‌ட்கோவின் வீட்டுக்கு ஆள‌னுப்பி கூஸ்லி வாசிக்க‌ச் சொல்லுவார்க‌ள். அது விருந்து ந‌ட‌க்கும் இட‌மாக‌ இருக்க‌லாம்;திரும‌ண‌ம் போன்ற‌ விசேச‌ம் ந‌ட‌க்கும் இட‌மாக‌வும் இருக்கும். பிரபுக்கள் கூடிவிட்டால் கூப்பிடு சட்கோவை என்பார்கள். சட்கோவும் கூஸ்லியை தூக்கிக்கொண்டு கிளம்பிவிடுவான். சட்கோவின் விரல்கள் கூஸ்லியில் விளையாடும். அடுத்த‌ சில நிமிடங்களில் சட்கோவின் இசைக்கு ஏற்ப அனைவரும் நடனமாடத் துவங்கிவிடுவார்கள்.
பணக்காரப் பிரபுக்களாக இருந்தாலும் சில்லறைக்காசுகளைத்தான் போடுவார்கள்,இவனுக்கு! சாப்பாடு அங்கேயே கிடைத்துவிடும். அவனுக்கு வேறு என்ன வேண்டும்? அவனுடைய நண்பர்கள் அடிக்கடி கேட்பார்கள். சில்லறைக் காசுகள்தான் உனக்கு கிடைக்கிறது. அதைகொண்டு எப்படி உயிர் வாழ்கிறாய்? என்பதுதான் அந்தக் கேள்வி. "நான் ஒருத்தன் தானே, அதற்கு இதுவே போதும்," என்பான். நாள்தோறும் ஒருத்தர் விதவிதமான விருந்துகளுக்கு போகமுடியுமா? விருந்துக்கு போகும் இடங்களில் நல்ல‌ விருந்தைக் கொடுக்கிறார்கள். எனக்கு சாப்பாட்டுப் பிரச்னை என்பதே இல்லை. என் இசையை பணக்காரர்களும், பிரபுக்களும் இரசிக்கிறார்கள். மகுடியின் நாதம் கேட்டு ஆடும் பாம்பாக அவர்கள் ஆடி சந்தோசப்படுவது எனக்குப் பெருமைதானே.
இந்தப் பெருமை உலகில் எத்தனை பேருக்குக் கிடைக்கும்? அவர்கள் வீசி எறியும் சில்லறைக்காசுகள் என் கைச் செலவுக்கு," என்று சட்கோ எதார்த்தமாகச் சொல்லுவான். ஆனாலும் இதுதான் அவ‌ன் வாழ்க்கை! பெரும் பண‌க்கார‌ர்க‌ள் ஒருபுற‌ம், இன்னொரு புற‌ம் இல‌வ‌ச‌மாக எல்லாம் கிடைக்கிற‌து. என் ந‌க‌ர‌த்தை நினைத்தால் என‌க்குப் பெருமித‌மாக‌ இருக்கிற‌து என்றும் சொல்வான். அனேக நாடுக‌ளிலிருந்து வ‌ர்த்த‌க‌ர்க‌ள் "ச‌ந்தைச் ச‌துக்க"த்தில் கூடுவார்க‌ள். நீண்ட‌ வ‌ரிசைக‌ளில் அவ‌ர்க‌ள் க‌டைக‌ளுக்கு முன் நிற்ப‌தை அவ‌ர்க‌ள் கொண்டுவ‌ந்த‌தை இவ‌ர்க‌ளிட‌ம் கொடுப்பார்க‌ள்; அத‌ற்கு ச‌ரிச‌ம‌மாக‌ இவ‌ர்க‌ளிட‌ம் வேண்டிய‌ பொருட்க‌ளை வாங்குவார்க‌ள். இத்தாலி, நோர்வே,பெர்சியா என்ற‌ ப‌ல‌ க‌ல‌ப்புக்குர‌ல்க‌ளைக் கேட்காம‌ல் ஒருநாளும் ச‌ட்கோ அந்தச் சதுக்க‌த்தைத் தாண்டிய‌தில்லை. அப்ப‌டியே கொஞ்ச‌ம் கீழிற‌ங்கி ந‌ட‌ந்தால் துறைமுக‌ம் வ‌ந்துவிடும்.பயணிகள் க‌ப்ப‌ல்க‌ள், ச‌ர‌க்குக்க‌ப்ப‌ல்க‌ள் போவ‌தும் வ‌ருவ‌தும் க‌ண்கொள்ளாக் காட்சியாக‌ இருக்கும். நிற்கும் க‌ப்ப‌ல்க‌ளிலிருந்து ம‌ர‌ங்க‌ள், தானிய‌ங்க‌ள்,ம‌ட்பாண்ட‌ங்க‌ள்,வாச‌னை திர‌விய‌ங்க‌ள்,ந‌றும‌ண‌ப்பொருட்க‌ள், உலோக‌த் த‌க‌டுக‌ள் க‌ப்ப‌ல்க‌ளிலிருந்து இற‌க்கப்ப‌டுவ‌தும் ஏற்ற‌ப்ப‌டுவ‌தும் ந‌ட‌ந்துகொண்டே இருக்கும்.
அப்ப‌டியே வேடிக்கைபார்த்துக்கொண்டே வால்கா ந‌தியின் குறுக்கே செல்லும் பிர‌ம்மாண்ட‌மான‌ பால‌த்தில் ந‌ட‌க்க‌ ச‌ட்கோவுக்கு மிக‌வும் பிடிக்கும். பால‌த்தின் இரும்புப் பாள‌ங்க‌ள் ஊடாக‌ வ‌ரும் சூரிய‌க்க‌திர்க‌ள்! த‌ங்க‌மாய்த் த‌க‌த‌க‌க்கும் அந்த‌க் க‌திர்க‌ள் இவ‌னுக்காக‌வே வான‌த்திலிருந்து இற‌ங்கி வ‌ருவ‌தாக‌ க‌ற்ப‌னை செய்து அத‌னைப் பிடிக்க‌ முய‌ல்வான். இத்த‌கைய‌ த‌ருண‌ங்க‌ளில் உல‌க‌த்தில் எங்காவ‌து "ந‌வ்கார‌ட்" ந‌க‌ர‌ம் மாதிரி ஒரு ந‌க‌ர‌ம் இருக்குமா? இருக்க‌வே இருக்காது என்று அவ‌னுக்குள் சொல்லிக்கொள்வான். கூஸ்லி வாசிக்காத நாட்களில் தனிமையில் தவிப்பதாக உணர்வான்.
கூஸ்லி வாசிக்கும்போது இவனது இசைக்கு ஏற்ப சில பணிப்பெண்களும் ஆடுவது உண்டு. அப்படி ஆடுபவர்கள் இவனிடம் வரும்போது சிரிப்பார்கள். இவனும் புன்னகைத்து வைப்பான். இவனோ ஏழை! அவர்களோ வசதியானவர்கள். இவன் ஏழையாக இருப்பதாலேயே இவனைத் திருமணம் செய்ய ஒருவரும் முன்வரவில்லை. ஒருநாள் அகண்டு பரந்து ஓடும் வால்கா நதியோரம் நடந்துகொண்டிருந்தான், சட்கோ. அவனது முகம் வருத்தம் நிரம்பிப்போயிருந்தது. நதிக்கரையில் வழக்கமாக‌ உட்காரும் இடம் வந்தது. உட்கார்ந்தான். கூஸ்லியை எடுத்து மடியில் வைத்துக்கொண்டான். நதி அலைகள் கரை மணல்களைக் கடத்தும் வேலையைச் செய்து கொண்டிருந்தது. நிலா அனுப்பிய‌ ஒளியில் வால்கா ந‌திக்கு கூடுத‌ல் அழ‌கைக் கொடுத்த‌து. எட்டாத‌ வ‌ட்ட‌ நிலா அலைக‌ளில் ப‌ட்டுத் த‌ட்டுத் த‌டுமாறி மித‌ப்ப‌தையும் கொஞ்ச‌ம் இர‌சித்தான். "என்ன‌ருமை வால்கா ந‌தியே!உன‌க்கு ஏழை,ப‌ண‌க்கார‌ன் எல்லாம் ஒன்றுதான்! ஆனால் நீ ம‌ட்டும் ஒரு பெண்ணாயிருந்தால் உன்னையே திரும‌ண‌ம் செய்து நான் விரும்பும் இந்த‌ ந‌க‌ர‌த்திலேயே வாழ்வேன்," என்று வாய்விட்டுச் சொன்னான்,ச‌ட்கோ. அடுத்த‌ நொடி,"ஒரு சோக‌ இழையை த‌ன் குஸ்லியில் மீட்டினான்.தொட‌ர்ந்து ஒரு ச‌மாதான‌ கீத‌ம் ஒலித்தான்; அது முடிந்த‌தும் ஒரு ச‌ந்தோச‌ கீத‌ம் மீட்டினான். வால்கா ந‌திக்கே புல்ல‌றிப்பு ஏற்ப‌ட்டிருக்க‌வேண்டும். கூஸ்லியின் நாத‌த்தை அலைக‌ள் உள்வாங்கிக்கொண்டு ஓடுவ‌து போலிருந்த‌து. திடீரென்று..... கடல் கொந்தளித்தது. ஆள் உயரத்துக்கு அலை எழும்பியது. சட்கோ பயந்து,"ஆகா, இன்றைக்கு கடலரக்கனுக்கு நான் உணவாகப் போகிறேனா?"என்று கத்தினான். சட்கோ எழுந்து கரைப்பக்கம் ஓடத் துவங்கியபோது,"சட்கோ ஓடாதே நில்!,"என்ற குரல் கேட்டது. சட்கோ நின்று திரும்பிக் கடலைப் பார்த்தான். அங்கே.... தண்ணீருக்குள்ளிருந்து ஒரு இராட்சச உருவம் மெல்ல மேலே வந்து கொண்டிருந்ததைக் கண்டான்,சட்கோ. தலையில் முத்துக்களால் ஆன கிரீடம் ஒன்று இருந்தது. உடம்பெல்லாம் கடற்பாசியால் ஆன உடை. சட்கோவைப் பார்த்து அந்த உருவம் ,"இசை ஞானியே, நான் கடல் அரசன்....உன் இசை கேட்டு இங்கு வந்தேன்," என்றது. " இந்த நதியின் இளவரசி வால்கா என் மகள். அவளைப் பார்ப்பதற்காக வந்திருந்தேன். அப்போது உன் இசையை நதியின் அடி ஆழத்தில் நாங்களெல்லாம் கேட்டு மகிழ்ந்தோம். யார் அந்த இசை ஞானி என்று பார்க்கவே யான் இங்கு வந்தேன். உன்னுடைய அற்புதமான இசைக்கு என் கடலளவு பாராட்டுக்கள்"என்றார் கடலரசன். "மிக்க நன்றி, அரச பிரபு,"என்று சொல்லி தலை தாழ்த்தி கடலரசனை வணங்கினான், சட்கோ. "நான் எனது அரண்மனைக்கு விரைவில் செல்லப் போகிறேன். அங்கு ஒரு நாள் வந்து உன் இசையை எனக்காக இசைக்க வேண்டும் என்பது என் ஆசை,"என்றார் கடலரசன். "கண்டிப்பா வந்து இசைப்பேன். ஆனால், கடலில் உங்கள் அரணமனை எங்கே இருக்கிறது? நான் எப்படி அங்கு வருவது?" என்று சட்கோ சட்டென்று கேட்டான். "கடலுக்கு அடியில்தான் என் அரண்மனை, அதிலென்ன சந்தேகம்? அரண்மனைக்கு வரும் வழியை உன்னால் கண்டுபிடித்து வரமுடியும். உன் இசைக்கான பரிசை இப்போதே உனக்கு நான் வழங்குகிறேன்,"என்று கடலரசன் சொன்னார். அடுத்த நொடி வால்கா நதியிலிருந்து ஒரு பெரிய மீன் துள்ளிவந்து சட்கோவின் காலடியில் வந்து வீழ்ந்தது.
அதன் செதில்கள் எல்லாம் தங்கமாக மின்னியது. துள்ளிய மீன் திடீரென விறைத்து மீனே தங்கமாக மாறியது. "ஈரேழு கடல்களுக்கும் சக்கரவர்த்தியே! உங்களின் தாராளமான வள்ளல் தன்மைக்கு என் நன்றியும் வணக்கமும்," என்று சொல்லி சட்கோ குனிந்து வணங்கினான். "என்னைப் புகழ வேண்டாம். தங்கத்தை விட இசை விலை மதிப்பில்லாதது. உன் இசையை இந்த உலகத்தில் உள்ளோருக்கு மதிக்கத் தெரியவில்லை; தெரிந்திருந்தால் இந்நேரம் நீ உலகப் பணக்காரனாகி இருப்பாய். நான் இசையை மதிப்பவன்; அதனால்தான் நானே உன்னைத் தேடிவந்தேன். சரி நான் வருகிறேன்,"என்று சொல்லி வால்கா நதியில் கடல் அரசன் மறைந்து போனார். சட்கோவுக்கு அந்த இன்ப அதிர்ச்சியிலிருந்து மீள வெகு நேரமானது. அடுத்த நாள்.... சட்கோ, சதுக்கச் சந்தைக்குச் சென்றான். திறந்திருந்த கடைகளில் பெரிய கடை ஒன்றுக்குப் போனான்.
அந்த வியாபாரிக்கோ பேராச்சரியம். சட்கோவே எதிர்பாராத பெருந்தொகை கிடைத்தது. வீட்டுக்குப் போனான். தனக்கு வேண்டிய பணத்தை எடுத்துக்கொண்டு மீதியை தனது பழைய மரப்பெட்டியில் வைத்துவிட்டு துறைமுகம் நோக்கிக் கிளம்பினான்,சட்கோ. கடலரசன் அரண்மனை பால்டிக் கடலில்தான் இருக்க வேண்டும். அதுதான் ஆழமான கடல். அவன் உள்மனம் அதுவே சரி என்று சொல்ல தீர்மானித்துவிட்டான்,சட்கோ. அன்றே புறப்படும் கப்பல் எது என்று தேடிப்பார்த்தான்.
லடோகா நதிவழியாக ஃபின்லாந்து வளைகுடாவில் நுழைந்து பால்டிக் கடல் தாண்டிப் பயணப்படும் கப்பலைக் கண்டுபிடித்துப் பயணச் சீட்டை வாங்கினான். வழிநெடுக யோசித்துக்கொண்டே போனான் சட்கோ. கடலரசன் அரண்மனை எந்த இடம் என்று கடலில் எப்படிக் கண்டு பிடித்துப் போவது? என்பதே அவன் சிந்தனை. கரை தெரியாக் கடலில் கடல் அலைகள் உறுமும் சத்தம் தவிர எதுவும் தெரியாத தண்ணீர் பிரதேசத்தில் கப்பல்பயணப்பட்டுக்கொண்டிருந்தது. அமைதியான கடற்பரப்பில் கப்பலை அதன் தலைவன் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தினார். கப்பலின் மேல் தளத்தில் நின்றுகொண்டு பயணிகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். எங்கு திரும்பினாலும் தண்ணீர்....தண்ணீர்...தண்ணீர். தூரத்தில் செல்லும் கப்பல்கள் புள்ளிகள் போல் தெரிந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மீன்கள் தண்ணீருக்கு மேல் தலைகாட்டிக்கொண்டிருந்தது. சட்கோவுக்கு திடீர் என்று ஒரு யோசனை வந்தது. குஸ்லியை வாசித்தால் ஒருவேளை கடலரசன் எதாவது வழிகாட்டக்கூடும் என்று நினைத்தான். கப்பலின் கீழ்தளத்துக்கு ஓடி கூஸ்லியை எடுத்து வந்து வாசித்தான். "ஒரு சோக‌ இழையை த‌ன் கூஸ்லியில் மீட்டினான்.தொட‌ர்ந்து ஒரு ச‌மாதான‌ கீத‌ம் ஒலித்தான்; அது முடிந்த‌தும் ஒரு ச‌ந்தோச‌ கீத‌ம் மீட்டினான். அப்போது...... திடீரென ஒரு புயல் போல பெருங்காற்று. கப்பலையே கவிழ்த்துவிடும்போல சாய்ந்தாடியது.
பயணிகள் அலறியடித்துக்கொண்டு இங்குமங்கும் ஓடினார்கள். நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்தால் நம் கதி என்ன ஆகுமோ என்று சிலர் பயத்தில் கடவுளைக் கும்பிடத் துவங்கினர். அப்போது கப்பல் தலைவன்,"கடலுக்கெல்லாம் அரசன் வாழும் இடம் இதுவாகத்தான் இருக்கவேண்டும்,"என்று கத்தினார். இதைத்தானே சட்கோ எதிர்பார்த்தான். உடனே எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் கூஸ்லியை மட்டும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கப்பலின் மேல் தள கைப்பிடியைப் பிடித்து ஏறினான். கப்பல் தலைவன்,"ஏய்,யாராவது அந்த ஆளைப் பிடிச்சு நிறுத்துங்கப்பா,"என்று கத்தினார். ஆனால், அதற்குள் சட்கோ சட்டென்று கடலை நோக்கிக் குதித்துவிட்டான். கடலின் ஆழத்துக்குப் போய்க்கொண்டே இருந்தான். ஒருவழியாக கடலின் அடி ஆழம் சென்றபோது அவன் நின்ற இடம் வெள்ளை நிற பிரம்மாண்ட அரண்மனை! பவளத்தால் ஆன கதவைத் தள்ளித் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான் சட்கோ.
அங்கே அரண்மனையின் பிரம்மாண்டமான கதவுகள் தென்பட்டது. அதன் அருகில் சென்ற‌தும் கதவுகள் தானாகத் திறந்து வழிவிட்டது. சட்கோ நடந்து போகப்போக ஒவ்வொரு கதவாகத் திறந்து கொண்டே போனது. ஒரு பிரம்மாண்டமான‌ அறையைக் கடந்த சட்கோ நின்றான். அவனது வலது பக்கத்தில் இருந்த பெரிய கலையரங்க நுழை வாயில்தெரிந்தது.
வெளிப்புறமும் உட்புறமும் கடற் பாசிகளாலும் செடிகொடிகளாலும் வரவேற்புத் தோரணங்கள்கட்டப்பட்டிருந்தது. கடற்செடிகளின் வண்ணவண்ண மயமான பூக்கள் விழா மேடையை அலங்கரித்திருக்க‌ பார்க்கவே சட்கோவிற்கு ஆனந்தமாக இருந்தது. அங்கிருந்து சட்கோ சற்றுத் தூரத்தில் கலையரங்கம் ஒன்றின் நுழை வாயில் தென்படவே அதை நோக்கி நடந்தான். கலையரங்கம் முழுக்க அரச விருந்தினர்கள், பார்வையாளர்கள் என்று நிரம்பி வழிந்து இருந்தன. கடல் என்றால் மீன்கள் இல்லாமலா? கலையரங்க நுழைவாயிலில் இருந்து மேடை வரை கடற்கன்னிகள் இருபுறமும் வரிசைவரிசையாக நின்று மலர் தூவி சட்கோவை வரவேற்றனர்.
கடற்குதிரைகள்,கடற்பசுக்கள்,திமிங்கிலங்கள்,சுறா மீன்கள், நட்சத்திரமீன்கள், நண்டுகள்,ஆமைகள், லாப்ஸ்டர்கள், ஈல் மீன்கள், தட்டையான‌ பெரிய திருக்கை மீன்கள், அயிரை மீன் போன்ற பொடிப்பொடியான மீன்கள் கூட்டம் என்று அந்த அரங்கம்நிறைந்து காணப்பட்டது. கடல் அரசனும் அரசியும் கடற்கிளிஞ்சல் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தனர். அருகில் அரசனின் மகள்கள் அமர்ந்திருந்தனர். அந்த இடம் வரை இரு புற‌மும் கடற்கன்னிகள் நின்றுகொண்டு வண்ண வண்ணக் கடற்பாசிப்பூக்கள் தூவி "சட்கோ"வை வரவேற்றனர். "மிகச் சரியான நேரத்திற்கு வந்திருக்கிறீர், இசைக்கலைஞரே! உம் வரவு எமக்கெல்லாம் மிகுந்த‌ மகிழ்வை அளிக்கிறது. வருக!வருக!! தருக! தருக!! நல்லிசை தருக,"என்றார் கடல் அரசர். அமைச்சர் ஒருவர் சட்கோவை அழைத்துச் சென்று அரசரின் அரியணைக்கு அருகில் அமரவைத்தார். "ம்ம்ம்..நடக்கட்டும்..நாட்டியம் முதலில்! நம் விருந்தினரைக் கெளரவிப்போம்,"என்றார் அரசர். அற்புதமான நட்டியம். ஆடியது கடற்குதிரை மற்றும் கடல் தேள் குழுவினர். சட்கோ எழுந்து ஒரு சந்தோச இசையை வாசித்தான். அந்த இசை மழையில் நனைந்த கடல் மீன்கள் இசைக்கு ஏற்றபடி ஆடத்துவங்கியது. டால்பின்களும் திமிங்கிலங்களும் அந்த அரங்கை அதிரவைக்கும் வகையில் ஆடின. திடீரென்று அரசர் எழுந்து,"இந்த இசை எனக்குப் பிடித்திருக்கிறது. இந்த இசைக்கு நான் ஆடியே ஆக வேண்டும்," என்று சொல்லி எழுந்து ஆடத் துவங்கிவிட்டார். அரசர் ஆடத் துவங்கியதும் நதி மங்கையர்களும் ஆட ஆட்டம் களை கட்டியது. அரசரோ,"ம்...இந்த இசையைஇன்னும் வேகமாக வாசியுங்கள் சட்கோ...இன்னும் வேகமாக....,"என்று மிகப் பயங்கரமான வேகத்தில் சுழன்று சுழன்று ஆட ஆரம்பித்துவிட்டார். ஒரு கட்டத்தில் சட்கோவை உடனே வாசிப்பதை நிறுத்தும்படி அரசி உத்தரவிட்டாள். அரசர் ஆடும் ருத்ர தாண்டவத்தால் கடலின் மேற்பரப்பில் கப்பல்கள் எல்லாம் கவிழ்ந்து போகும் அபாயம் உள்ளது. படகுகள் எல்லாம் பொம்மைகள் போல ஆடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலை நீடிக்கக்கூடாது என்றார். உடனே சட்கோ நிலைமையைப் புரிந்துகொண்டு கூஸ்லியின் ஒரு இழையைப் பலமாக இழுத்தான். அது அறுந்துவிட்டது. "மேன்மைதாங்கிய அரசரே தங்கள் வேகத்திற்கு ஈடுகொடுக்கமுடியாமல் நரம்பு அறுந்துவிட்டது,"என்று சொன்னான் சட்கோ. "வெட்கம்...வெட்கம்...சட்கோ, இன்று நாள் முழுவதும் நான் உன் இசைக்கு ஆடுவேன். இப்படி உன் இசைக்கருவி கெடுத்துவிட்டதே. இழை அறுந்துபோனால் நீங்கள் என்ன செய்ய முடியும்? நீங்கள் ஒரு அற்புதமான‌ இசைக்கலைஞர். உங்களை நான் இழக்க விரும்பவில்லை. என் மகள்களில் ஒருத்தியை உங்களுக்குத் திருமணம் செய்து வைத்து இங்கேயே வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்,"என்றார் அரசர். "மாட்சிமை பொருந்திய அரசே! இந்தச் சமுத்திரத்தில் உங்கள் வார்த்தைகள்தான் சட்டம்;ஆனால் இது என்னுடைய வீடு அல்லவே. நான் விரும்புவது என் நவ்காரட் நகரமல்லவா,"என்று மிகப்பணிவாகச் சொன்னான் சட்கோ. "சொல்லாதீர்கள்,இன்னொரு முறை எனக்கு கோபம் வரும். என்னருமை மக்களே இப்படி வந்து நில்லுங்கள்,"என்று அரசர் உத்திரவிட வரிசையாக வந்து நின்றார்கள் இளவரசிகள். சட்கோ பார்த்தான். ஒவ்வொருவரும் அழகாக இருந்தனர். ஒருவரை விட இன்னொருவர் அழகாக இருந்தனர். "என்ன இசைஞானியாரே தேர்வு செய்வதில் சிக்கலா? அப்படியானால் உங்களுக்குப் பொருத்தமான இளவரசியை நானே காட்டுகிறேன். வால்கா.."என்று அழைக்கவும் செய்தார் அரசர். வால்கா அரசரின் அருகே மகிழ்ச்சியோடு வந்து நின்றாள். வால்காவின் பச்சை நிறக் கண்கள் பளபளப்பாக இருந்தது. அவள் முகத்தில் சிரிப்பு.
"நீங்கள் என் கரையோரம் உட்கார்ந்து நீங்கள் இசைத்த இசைக்கு முதல் ரசிகை நான். உங்களையே திருமணம் செய்து வாழப்போகிறோம் என்பதே சந்தோசமாக இருக்கிறது,"என்றாள் வால்கா. "வால்கா...உன் நதியைப் போலவே நீயும் அழகு!,"என்று சட்கோ சொன்னான். அந்த நேரத்தில் கடல் அரசி அவன் காதில் ஒரு இரகசியம் சொன்னாள். "நீங்கள் மிக நல்லவர் சட்கோ. நீங்கள் உங்கள் நகரத்துக்கு திரும்பிப் போக வேண்டும் என்றால் என் மகள் வால்காவைத் தொடாதீர்கள். தொட்டால் என்றைக்கும் நீங்கள் உங்கள் நவ்காரட் நகரத்தைப் பார்க்கவே முடியாது. இதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்,"என்றார். அன்று இரவு சட்கோ மெத்தையில் படுத்து இருந்தான். வால்கா அழகானவள்; அவளோடு நான் ஏன் வாழக்கூடாது? அப்புறம் என் நகரம்..அந்த வாழ்க்கை அவ்வளவுதானா? அரசி சொன்னதையும் யோசித்துக்கொண்டே இருந்தான். இளவரசி வால்கா,"ஏன், என்னைத் தொடாமல் இருக்கிறீர்கள்?" என்று கேட்டாள். எங்கள் நவ்காரட் நகர பழக்கம்; திருமணம் ஆன முதல் நாள் மனைவியைத் தொடமாட்டார்கள்,"என்றான் சட்கோ. "முதல் நாள் தானே! நாளைக்குத் தொடுவீர்கள், இல்லையா?"என்றாள் வால்கா. "ஆமாம், நாளை தொடுவேன்,"என்றான் சட்கோ! காலையில் சட்கோ கண்விழித்தான். சூரியக் கதிர்கள் அவன் முகத்தில் பிரகாசமாகப் பட்டது. அவன் அருகில் வால்கா இல்லை! நான் எங்கிருக்கிறேன்? அவன் வால்கா நதிக்கரையோரம் இருந்தான். அவனுக்குப் பின்னால் நவ்காரட் நகரத்தின் பெருஞ் சுவர் இருந்தது. "ஆ! என் சொந்த நகரத்துக்கு வந்துவிட்டேன்,"என்று வாய்விட்டுச் சொன்னான், சட்கோ. அவன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. ஆனால் அவன் கண்கள் இரண்டு செய்திகள் சொல்லுவது போலிருந்தது.
சொந்த நகரத்துக்கு திரும்பிய சந்தோசம் கண்களில் மின்னியது. அதே நேரத்தில் இளவரசி வால்காவை இழந்துவிட்டோமே என்ற ஏக்கமும் தெரிந்தது. ஒருவேளை சட்கோவின் கண்ணீரிலும் இந்த இரண்டும் வெளிப்பட்டிருக்குமோ! அந்த வருடம் சட்கோவுக்கு அதிர்ஷ்டமான வருடம் என்றே சொல்லவேண்டும். அவன் வீட்டில் விட்டுச் சென்ற தங்க மீன் விற்ற பணத்தை வைத்து ஒரு கப்பல் வாங்கினான்.
அதில் நவ்காரட்டின் சந்தைச் சதுக்கத்தில் இருந்து விலை மதிப்புள்ள பொருட்களை நிரப்பினான். தூர நாடுகளுக்கு கப்பலில் போய் வணிகம் செய்தான். அந்த வருடத்திலேயே நவ்காரட்டின் மிக முக்கியமான பிரபுக்களில் ஒருவனாகிவிட்டான்.
அந்த நகரத்தின் பெரு வணிகனின் மகளை திருமணம் செய்தான். நகரத்தில் அடிக்கடி விருந்துகொடுப்பவர்களில் ஒருவன் ஆனான். அந்த விருந்தில் கூஸ்லியை சட்கோ வாசிக்க அவன் குழந்தைகள் நடனமாடுவதை இரசித்தான். இப்போது வயாதாகிவிட்டது சட்கோவிற்கு! இருந்தாலும் அகண்டு பரந்து ஓடும் வால்கா நதியோரம் நடந்துபோவான். நதிக்கரையில் வழக்கமாக உட்காரும் இடம் வந்ததும் உட்காருவான். கூஸ்லியை எடுத்து மடியில் இசைக்கத் துவங்கிவிடுவான். எப்போதும் போல நதி அலைகள் கரை மணல்களைக் கடத்தும் வேலையைச் செய்து கொண்டிருக்கும். நிலா அனுப்பிய‌ ஒளியில் வால்கா ந‌திக்கு கூடுதலான‌ அழகாகத் தெரியும். எட்டாத‌ வ‌ட்ட‌ நிலா அலைக‌ளில் ப‌ட்டுத் த‌ட்டுத் த‌டுமாறி மித‌ப்ப‌தையும் தவறாமல் இரசிப்பான். சில நேரங்களில் இவன் இசை கேட்டு தண்ணீருக்கு மேல் வந்து மிதப்பது இளவரசி வால்காவின் தலையாகவும் இருக்கலாம்;இல்லை அந்த எட்டாத அழகு வட்ட நிலாவாகக்கூட இருக்கலாம்!

No comments:

Post a Comment