Monday 12 December 2016

தங்க மழை:
ஆதி சங்கரர் சிறு வயதில் ஒரு வீட்டு வாயிலில் நின்று “பவதி பிக்ஷாம் தேஹி” (தாயே! பிச்சை போடுங்கள்) என்று சொன்னார். அந்த வீட்டுப் பெண்மணி, பரம ஏழை. ஓடிப்போய் சமையல் அறையில் பார்த்தாள்; ஒன்றும் கிடைக்கவில்லை. பாத்திரங்களை உருட்டினாள். ஒரு ஊறுகாய் ஜாடியின் கீழே ஒரே ஒரு நெல்லிக்காய் ஒட்டிக்கொண்டிருந்தது. ஓடோடி வந்து அதைப் பிச்சைப் பாத்திரத்தில் போட்டார். சங்கரனின் கண்களில் இருந்து கண்ணீர் ‘பொல பொல’ என்று உருண்டோடியது. பரம கருணை மிக்க தாயே! உனது நல்லாட்சியில் இப்படி ஒரு வறுமையா? என்று அம்பாளை வேண்டி ஒரு துதி பாடினார். தங்க நெல்லிக்காய்கள் மழையாகப் பொழிந்தது. அந்தத் துதியின் பெயர், ‘தங்க மழை போற்றி’ (கனகதாரா தோத்திரம்).
பூ மழை
தேவர்கள் சந்தோஷப் படும்போதெல்லாம் பூ மாரி பெய்ததாக நமது புராணங்கள் பேசுகின்றன. அது உண்மையோ இல்லையோ நாம் அரசியல் தலைவர்கள் மீது பூ மாரி பெய்யும் பல படங்கள் அவ்வப்போது வெளி வருகின்றன. இதுபோல உற்சவ காலங்களில் கடவுள் சிலை மீது பூ மாரி பெய்கிறோம். திருமணத்தில் ஆசீர்வாத காலத்தில் மணமக்கள் மீது பூ மழை பெய்கிறோம். பிராமணர்கள் ‘யோபாம் புஷ்பம் வேதா’ – என்ற நீண்ட மந்திரம் சொல்லி இறைவனுக்கு பூமாரி பெய்வதுமுண்டு.
மண்மழை
பாலைவனத்தில் அவ்வப்பொழுது மணற் புயல் ஏற்பட்டு விமான சர்வீஸ் ரத்தாவது வட ஆப்பிரிக்க நாடுகளிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் வசிப்போருக்குத் தெரியும். சஹாரா பாலவன மண், ஐரோப்பா வரை வந்து வானிலை மாற்றங்களை உண்டாக்குவதையும் பத்திரிக்கைகளில் காணலாம்.
கல் மழை
சில நேரங்களில் ஐஸ்கட்டி மழை பெய்கையில் அதை ஆலங்கட்டி மழை என்போம். பெரிய பெரிய கூழாங்கற்கள் அளவுக்கு பனிக்கட்டி விழும். ஆனால் சில நேரங்களில் காற்றின் சுழற்சி காரணாமாக மேகங்கள் நீர் நிலைகளிலுள்ள மீன்கள், தவளைகள், கற்களுடன் மழை பெய்த செய்திகளையும் நாளேடுகளில் படிக்கிறோம்.
எரிமலை அருகில் வசிப்போருக்கு கல் மழை மிகவும் சர்வ சாதாரணம். இது தவிர பூமி தனது வட்டப் பாதையில் செல்கையில் ஆண்டுதோறும், சில குட்டி கிரகங்கள், விண்கற்கள் ‘பெல்ட்’டைக் கடக்கையில் எரிகற்கள் மழை பெய்வதுண்டு. அவைகளில் பெரும்பாலானவை காற்று மண்டலத்தில் எரிந்து விடும்.
தீ மழை
சுனாமி வருகையிலும், எரிமலை பொங்குகையிலும் தீ மழை பொழிகிறது. சுனாமி பேரலைகள் மிகவும் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்வதால், கடலில் தீ தோன்றும் அதிசயச் செய்திகளுமுண்டு.
காளிதாசர் தரும் அற்புதச் செய்தி
காளிதாசர், சாகுந்தலம் என்ற நாடகம் செய்திருக்கிறார். அதில் (7-5) காற்று மண்டலம் ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டதில் நமது விமானம் எந்தப் பிரிவில் உள்ளது என்று மன்னர் கேட்கிறார். அதற்கு உரைகாரர்கள் எழுதிய உரையில் இந்து புராணங்கள் வாயு மண்டலத்தை ஏழு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொன்றுக்கும் ஒரு பெயர் கொடுத்திருப்பதை எடுத்துக் காட்டுகின்றனர்.
முதலாவது வாயு ஆவாஹ என்றும் அது புவர்லோகத்தில் பாயும் என்றும் அந்தப்பிரிவில் பூலோகம், பாதாள லோகம், மற்றும் சூரியன் வரையுள்ள வாயு மண்டலம் அடங்கும் என்றும் உரைகாரர் கூறுவர். மற்ற ஆறு வாயு மண்டலங்களும் சுவர் லோகத்தில் (சுவர்க) இருப்பதாகவும் சொல்லுவர். இதிலுள்ள இரண்டாவது வழி ப்ரவாக என்றும் இந்த வாயுதான் சூரியனைச் சுற்றச் செய்கிறது என்றும் சொல்கின்றனர். மூன்றாவது வாயு சம்வாஹ- அது சந்திரனை இயங்கச் செய்கிறது. நாலாவது நட்சத்திர மண்டலம்; அங்கே உத்வாஹ என்னும் காற்றுள்ளது. ஐந்தாவது கிரகங்கள் அருகிலுள்ள காற்று; அதன் பெயர் விவாஹ; ஆறாவது காற்று சப்தரிஷி மண்டலத்தில் இயங்கும் அதன் பெயர் பரிவாஹ. அதுதான் பால்வளி மண்டலம் – மில்கி வே – நட்சத்திரப் பகுதி. அங்கேதான் இப்பொழுது இந்திரனுடைய விமானம் சென்று கொண்டிருக்கிறது.
ஏழாவது வாயு துருவ நட்சத்திரப் பகுதியில் உள்ளது. அந்த துருவன் தான் எல்லா நட்சத்திரங்களியும் கிரகங்களையும் சக்கரத்திலுள்ள ஆரம் எல்லாம் அச்சாணியில் இணைக்கப்பட்டிருப்பது போல கட்டி வைத்திருக்கிறான். அங்கே இயங்கும் காற்று பரவாஹ.
அறிவியல் சிந்தனை:
விஷ்ணு புராணத்திலும் இக்கருத்துள்ளதால் 2000 ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் மில்கி வே, சப்தரிஷி மண்டலம் வரை சிந்தித்துள்ளனர் என்று தெரிகிறது. எல்லாம் ஓவியத்தில் வரைந்த படங்கள் போலில்லாமல் இயங்குவதையும் அறிந்திருந்தனர். அவர்கள் சொல்லும் வாயுவை நாம் காற்று என்று மொழிபெயர்க்காமல் பலவித கதிர்கள், அலைகள், ஒலிகள் என்று பொருள் கொள்ள வேண்டும். முதலில் இப்படி மேகங்களையும் காற்று மண்டலத்தையும் பிரித்த முதல் விஞ்ஞானிகள் இந்துக்களே. இப்போது நாம் மேகங்களை வேறுவிதமாகப் பிரிப்ப்தை வானிலை இயல் நூல்களில் காண்கிறோம். அறிவியல் சிந்தனை இருந்தால்தான் இப்படிப் பலவகை பிரிவுகளைச் செய்திருக்க முடியும்.
அமரகோசத்தில் 15 பெயர்கள்
உலகின் முதல் நிகண்டான (திசாரஸ்) அமரத்தில் கீழ்கண்ட பெயர்கள் மேகம் என்ற பொருளில் வழங்கப் படுவதாக அமர சிம்மன் சமஸ்கிருதத்தில் எழுதியுள்ளார்:–
அப்ரம், மேக:, வாரிவாஹ:, ஸ்தனயுத்னு:,
பலாஹக:, தாராதர:, ஜலதர:, தடித்வான், வாரித:, அம்புப்ருத், கண:, ஜீமூத:, முதிர:, ஜலமுக், தூமயோணி:.
மேகக் கூட்டத்துக்கு மேக மாலா, காதம்பினி என்று பெயர்.
தமிழில்:– கொண்டல், கொண்மூ, புயல், கார், மாரி, முகில், மங்குல், விண்டு, ஊரி, மாசு, மஞ்சு, எழில், செல், மை என்ற சொற்கள் மேகத்துக்கு உண்டு.
சிலப்பதிகாரத்தில் கடவுள் வாழ்த்தில், ஞாயிறு, திங்கள் ஆகியவற்றுடன் மழைக்கும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
வள்ளுவர் வான் சிறப்பு என்று பத்து குறள் பாடி கடவுள் வாழ்த்துக்கு அடுத்த அதிகாரமாக வைத்திருப்பதும் மேகத்தின், மழையின் சிறப்பை விளக்கும்.
காளிதாசனும் தமிழ் புலவர்களும் கடல், ஆறு, ஏரி, குளம் ஆகியவற்றின் நீர்தான் ஆவியாகி, மேகமாகி, மழையாகப் பொழிகிறது என்று தெள்ளத் தெளிவாகப் பாடி வைத்துள்ளனர். ஓரிடத்தில் அல்லது ஈரிடத்தில் மட்டுமல்ல. பல நூறு இடங்களில் பாடிவைத்துள்ளனர்.அவர்கள் முதல் முதல் தோன்றிய வானிலை இயல்துறை நிபுணர்கள் என்றால் மிகையாகாது!!

No comments:

Post a Comment