Monday 12 December 2016

ஒரு முறை தூர்வாச முனி சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது எதிரே இந்திரன் தனது யானையின் மேலமர்ந்து பவனி வருவதைக் கண்டார். மனம் மகிழ்ந்த அவர் தனது கழுத்தில் இருந்த மலர் மாலையை எடுத்து இந்திரனிடம் தருகிறார், இது கிடைப்பதற்கரிய ஒரு பரிசாகும். மமதையில் இருந்த இந்திரனோ அதைப் பெற்றதும் தனது யானையின் தும்பிக்கையின் மேல் போடுகிறான், ஒன்றுமறிய மிருகமான யானை என்ன செய்யும்? வாங்கி காலில் போட்டு மிதித்தது. இதைக் கண்டு வெகுண்ட தூர்வாசர், இந்திரனைப் பார்த்து, "உன்னுடைய செல்வங்கள் அனைத்தையும் இழந்து ஆண்டியாகி தரித்திரம் பிடித்தலைவாயாக" என்று சாபமிட்டார். அதன் விளைவாக கொஞ்சம் கொஞ்சமாக தங்களது செல்வச் செழிப்பை மூவுலகிலும் இழந்த இந்திரனுக்கும் பிற தேவர்களுக்கும் அந்நிலையில் இருந்து மீண்டு வர வழி ஏதும் தெரியவில்லை. அதே சமயம் அரக்கர்கள் செல்வச் செழிப்பில் கொழிக்க ஆரம்பித்தனர். இதற்க்கு விமோசனம் வேண்டிய தேவர்கள் அனைவரும் சுமேரு மலையின் உச்சியில் பிரம்மாவைச் சந்தித்து அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, நடந்தவற்றையும் தங்களது நிலையையும் எடுத்துக் கூறி, தங்கள் செழிப்பிழந்த நிலையில் இருந்து மீழ வழி கேட்டு வேண்டி நின்றனர்.
நடந்ததை பொறுமையுடன் கேட்டறிந்த பிரம்மா அனைத்து தேவர்களையும் அழைத்துக் கொண்டு பாற்கடலில் அமைந்துள்ள ஸ்வேத தீவுக்கு சென்று அங்கு பள்ளி கொண்டிருக்கும் விஷ்ணுவிடம் பல்வேறு பாசுரங்களைப் புகழ்ந்து பாடி பிரார்த்தனைகளைச் செய்தார். அதற்க்கு செவிசாய்த்த பகவான் அவர்கள் முன்னர் தோன்றினார், அவரது தோற்றம் எல்லோரையும் கண்களை கூசச் செய்யும் வண்ணம் இருந்தது. முதலில் பிரம்மாவும், சிவனும் அவரைப் பார்க்க தங்களது பாசுரங்களால் புகழ் மாலை பாடினர். அதில் அகமகிழ்ந்த பகவான், இனி என்ன செய்யவேண்டுமென அறிவுரைகளை தேவர்களுக்கு வழங்கினார்.
அதன்படி, தேவர்கள் முதலில் அசுரர்களிடம் சென்று போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களை தங்களுடன் இணைந்து பாற்கடலை கடைய அழைப்பு விடுக்க வேண்டும். மந்தார மலை மத்தாகவும், வாசுகி என்ற நாகம் மத்தை சுழற்றும் கயிராகவும் பயன்படுத்தப் படும். பாற்கடலைக் கடையும் போது கொடிய விஷம் உருவாகும். ஆனாலும், சிவன் அதை உட்கொண்டு உலகை காப்பார், எனவே யாரும் பயம்கொள்ளத் தேவையில்லை. கவனத்தை ஈர்க்கும் பல்வேறு விஷயங்கள் பாற்கடலைக் கடையும் போது வெளிப்படும், ஆனால் தேவர்கள் யாரும் அவற்றால் தங்கள் மனம் அலைக்கழிக்கப் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், மேலும் எதைக் கண்டும் ஆத்திரப் படாமல் இருக்க வேண்டுமென்றும் எச்சரிக்கப் பட்டனர். இவ்வாறு அறிவுரைகள் வழங்கிய விஷ்ணு அங்கிருந்து மறைந்தார்.
பகவான் விஷ்ணுவின் கட்டளைப் படி தேவர்கள் அரக்கர்களின் மன்னரான பலி மகாராஜாவிடம் போய் சமாதனம் செய்து கொண்டு பாற்கடலை கடைய அழைப்பு விடுத்தனர். இருதரப்பும் சேர்ந்து மந்தார மலையைச் சுமந்து கொண்டு பாற்கடலை நோக்கி நடந்தனர். ஆனால் அது மிகவும் பாரமாக இருந்ததால் வழியிலேயே பலர் களைப்படைந்து வீழ்ந்தனர், சிலர் செத்தும் போயினர். அப்போது அங்கே விஷ்ணு தோன்றி அவர்களை மீண்டும் உயிர்ப்பித்தார், மந்தார மலையை தனது வாகனமான கருடன் மேல் எடுத்து வைத்து பாற்க்கடலுக்குச் கொண்டு சென்று அதன் நடுவில் நிலை நிறுத்தினார். பின்னர் கருடனை அந்த இடத்திலிருந்து செல்லுமாறு கட்டளையிட்டார். [கருடன் அங்கேயே இருந்தால் வாசுகி நாகம் வர மாட்டார், காரணம் கருடன் நமக்கு நல்ல விருந்துடா..... என்று அவரை துண்டு போட்டு சாப்பிட்டு விடுவார்!!] கருடனும் தனது தலைவனின் கட்டளையை ஏற்று இடத்தை காலி செய்தார்.
அதன் பின்னர் வாசுகி நாகத்தை அழைத்து, கிடைக்கப் போகும் அமிர்தத்தில் உனக்கும் பங்கு உண்டு என்று வாக்குறுதியைத் தந்து மலையைச் சுற்றி கயிறாகக் கட்டி அதன் தலைப் பகுதியை தேவர்கள் பிடித்துக் கொண்டு வால் பகுதியை அசூரர்களுக்குத் தந்தனர்.
ஆனால் அசுரர்கள் அதை ஏற்க மறுத்து, நாங்க வால் பிடிக்கிறவனுங்க இல்லை, அது கேவலம். தலையைப் பிடிப்பது தான் சாலச் சிறந்தது என்று சாஸ்திரத்தை கற்ற எங்களுக்குத் தெரியும், நீங்கள் வேண்டுமானால் வால் பிடியுங்கள் என்று தலைப் பகுதியில் நின்று இழுக்கும் உரிமையை கேட்டு பெற்றுக் கொண்டனர். தேவர்களும் மறுப்பே பேசாமல் ஒப்புக் கொண்டனர். இது பின்னால் பெரிய ஆப்பாக அமையும் என்று அசுரர்களுக்கு அப்போது தெரியவில்லை.
எந்தப் புறம் யார் நின்று செயல்படுவது என்ற விவாதம் முடிவுக்கு வந்து மந்தாரமலையை மத்தாக வைத்து பாற்கடலைக் கடையும் வேலை ஆரம்பமானது. ஆனால், மலை அடிப்பகுதியில் எந்த ஆதாரமும் இல்லாதபடியால் அது உடனே மூழ்கிப் போனது. இதைப் பார்த்த இருபுறமுள்ளவர்களின் முகங்களும் வாடிப் போனது. இதையறிந்த விஷ்ணு கூர்ம அவதாரம் எடுத்து [ஆமை] மந்தார மலையை தன முதுகால் சுமந்து நின்றார். இதைப் பார்த்ததும் குதூகலமடைந்த இரு சாராரும் மீண்டும் பணியில் இறங்கினர். கூர்மத்தின் முதுகு எட்டு லட்சம் மைல் விசாலமாக ஒரு பெரிய தீவு போல பரந்திருந்தது. இரு சாராரும் வாசுகியை கயிறாக மந்தார மலையை சுற்றிக் கட்டி மாறி மாறி இழுக்க அது அவரின் முதுகின் மேல் சுழலுவது முதுகைச் சொரிந்து விடுவது போல சுகமாக இருந்ததாம்!!
மந்தார மலையின் உச்சியின் மேல் தனது ஆயிரக் கணக்கான கரங்களுடன் பகவான் விஷ்ணு அமர்ந்து காட்சியளிக்க பிரம்மன், சிவன் உட்பட அனைத்து தேவர்களும் அவரைப் பூஜித்தனர்.
தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெற வேண்டுமே என்ற உத்வேகத்தில் கண்ணா பின்னாவென்று வாசுகியை இழுத்து மலையைச் சுழற்ற ஆரம்பித்தனர், பாற்கடலில் இருந்த பல்வேறு உயிரினங்களும் அச்சமுற்றன. ஆயினும் வேகம் குறையாமல் வேலை மும்முரமாகச் சென்றது. அவ்வேகத்தால் வாசுகியின் வாயில் இருந்து புகையும், தீப்பிழம்பும் கிளம்பியது, தலைப் பகுதியைப் பிடித்திருந்த அசுரர்களை அது தாக்கி அவர்கள் காட்டுத் தீயால் கருகிய மரங்களைப் போல காட்சியளித்தனர், அவர்களது உடல் பலமும் குன்றியது. இச்சூழ்நிலையில் விஷ்ணுவின் அருளால் மழை வந்து அனைவரையும் குளிர்சியடையச் செய்தது. வெகுநேரம் இவ்வாறு கடைந்தும் எதுவும் தோன்றவில்லை. பகவான் விஷ்ணுவே வந்து தானும் கயிற்றைப் பிடிக்க இன்னமும் வேகமாக கடல் அலைக்கலைக்கப் பட்டது. அதன் பின்னர் முதன் முதலாக ஆலஹால விஷம் என்னும் கொடிய நஞ்சு தோன்றியது.
இச்சமயம் விஷ்ணு தேவர்களை அழைத்து சிவனிடம் சென்று இந்த நஞ்சை உண்டு தங்களைக் காக்குமாறு வேண்டுங்கள் என்று அறிவுறுத்த அவர்களும் அவ்வாறே செய்தனர். சிவ பெருமான் எளிதில் திருப்தியடைந்து விடுபவர் ஆதலால், உடனே சம்மதித்து எல்லா நஞ்சையும் சேர்த்து கையில் அள்ளி உண்டார். அது அவரது கழுத்தில் தங்கி அந்த இடம் நீல நிறத்தில் காட்சியளித்தபடியால் நீலகண்டன் என்ற பெயர் பெற்றார். அவர் பருகும் போது சிந்திய சிறிதளவு நஞ்சை பாம்புகள், தேள் போன்ற உயரினங்கள் கொஞ்சம் உண்டன.
சிவபெருமானின் இச்செயலால் மிகவும் மகிழ்ந்த தேவர்களும் அசுரர்களும் புத்துணர்வோடு மீண்டும் பாற்கடலைக் கடைவதில் மும்முரமாக ஈடுபட்டனர். அப்போது சுரபி என்னும் பசு பாற்கடலில் இருந்து தோன்றியது. வேதங்களின்படி யாகம் செய்யும் முனிவர்கள், தங்களுக்கு தூய நெய், இன்னபிற பால் பொருட்கள் போன்றவை தேவை என்பதால் தங்களுக்கே வேண்டுமென்று பெற்றுக் கொண்டனர். அதையடுத்து உச்சைஸ்ரவா என்ற குதிரை, பால் நிலவையொத்த வெண்ணிறத்துடன் தோன்றியது, அதை பலி மகாராஜா தனக்கு வேண்டுமென்று கேட்க, இந்திரன், முன்னரே பகவான் விஷ்ணு அறிவுறுத்திய படி, மறுப்பேதும் இன்றி ஒப்புக் கொண்டான்.
அதையடுத்து ஐராவதம் என்ற வெண்ணிற யானை நான்கு தந்தங்களுடன் தோன்றியது, அதன் பெருமை சிவன் வாழும் கைலாயத்தையும் தோற்கடிக்கும் வண்ணம் இருந்தது. தொடர்ந்து கௌஸ்தபா, பத்மராக மணிகள் தோன்ற அவற்றை விஷ்ணு தனது மார்பில் அணிந்து கொண்டார். அதையடுத்து பாரிஜாத மலர் தோன்ற அது தேவலோகத்தை அலங்கரிக்கப் பயன்படுத்தப் பட்டது. தொடர்ந்து அப்சரஸ்கள் எனும் பரத்தையர்கள் தோன்றினர்.
பின்னர் பாற்கடலில் இருந்து கையில் மாலையுடன் இலக்குமி தோன்றினாள். அவளது அழகில் எல்லோரும் மயங்கினாலும் அவள் பகவான் விஷ்ணுவே தனக்குத் தகுதியானவர் என தேர்ந்தெடுத்து அவர் கழுத்தில் மாலையைச் சூடி அவர் அருகில் நாணத்தோடு ஒட்டி நின்றாள். தொடர்ந்து வருணி என்னும் இளநங்கை தோன்ற அவளை விஷ்ணுவின் அனுமதியோடு பலி மகாராஜா ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து தேவர்களும், அசுரர்களும் பாற்க்கடலைக் கடைய இறுதியில், அழகிய அங்க அவயங்களுடனும், வலிமையான உடலமைப்போடும் தன்வந்தரி என்னும் அற்புதமான ஆண்மகன் அமிழ்தம் நிரம்பிய கலசத்தைக் கையில் ஏந்தியவாறு தோன்றினார்.
இதைக் கண்டதும் அசுரர்கள் அவர் கையிலிருந்து அமுதக் கலசத்தைப் பிடுங்கிக் கொண்டு ஓடினர், பின்னர் யார் முதலில் பருகுவது என்று சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அதிலும் சிலர், தேவர்களும் இதில் உழைத்திருப்பதால் அவர்களுக்கும் பங்கு தருவது தான் முறை என வாதிட்டனர். அமுதக் கலசம் பறிபோனாதால் கலக்கமடைந்த தேவர்கள் பகவான் விஷ்ணுவிடம் உதவி நாடி நின்றனர். கவலை வேண்டாமென அவர்களைத் தைரியமூட்டிய விஷ்ணு , ஒர் அழகான பெண்ணாக மோகினி மூர்த்தி அவதாரமெடுத்தார். இதைக் கண்ட அசுரர்கள் மோகினியின் அழகில் மயங்கி அமிழ்தை மறந்து அவளை எப்படியாவது அடைந்தால் போதும் என்று மதியிழந்து நின்றனர்.
மோகினியின் வசீகரத்தில் மயங்கிய அசுரர் தலைவன், பேசலானான். "அழகிய பெண்ணே, நாங்கள் [அசுரர்கள், தேவர்கள்] இருசாராரும் கஷ்யப முனியின் வழித் தோன்றல்களே. தற்போது எங்களுக்கு இந்த அமிழ்தை பங்கிடுவதில் பிரச்சினை வந்துவிட்டது. நீயே ஒரு நல்ல தீர்வைத் தருவாயாக" என்று கேட்டுக் கொண்டான். அதற்க்கு மோகினி, "நானே ஒரு நடத்தை கெட்டவள், கற்றறிந்த அறிஞர்கள் ஒருபோதும் பெண்கள் மீது நம்பிக்கை வைப்பதில்லை அவ்வாறிருக்க என் மேல் நீங்கள் நம்பிக்கை கொள்ளலாமா?" என்று வினவினாள். இதைக் கேட்ட அசுரர்கள் மோகினி சும்மா தமாசுக்கு அவ்வாறு பேசுவதாக நினைத்துக் கொண்டு அமிழ்தக் கலசத்தை அவளிடம் ஒப்படைத்தனர். அதை வாங்கும் முன்னர் மோகினி ஒரு நிபந்தனையை விதித்தாள். "நான் என் விருப்பப் படிதான் இந்த அமிழ்தை பங்கிட்டுத் தருவேன், அதில் நியாயம், அநியாயம் எது வேண்டுமானாலும் இருக்கலாம், அதற்க்கு நீங்கள் யாரும் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கக் கூடாது, இதற்க்குச் சாம்மதம் என்றால் என்னிடம் இக்கலசத்தை தரலாம்" என்றாள். மோகினியின் அழகில் முற்றிலும் மதி மயங்கிய அசுரர்கள், "நீங்கள் என்ன செய்தாலும் ஏற்றுக் கொள்கிறோம்" என ஒப்புக் கொண்டு கலசத்தை அவளிடம் கொடுத்தனர்.
தேவர்கள் அசுரர்கள் இருபாலரும் விரதங்களை மேற்கொண்டு, பூஜை புனஸ்காரங்களையும் முடித்து அமிழ்தை உண்ண வந்து சேர்ந்தனர். குஷா என்னும் தர்ப்பையால் ஆன பாயை விரித்து கிழக்கு நோக்கி அமர்ந்தனர். தேவர்களையும், அசுரர்களையும் தனித்தனியே உட்கார வைத்த மோகினி, தேவர்களுக்கு மட்டும் அமிழ்தை வழங்க ஆரம்பித்தாள். அநியாயமே நடந்தாலும் எதிர்த்துக் கேட்க மாட்டோம் என வாக்கு தந்திருந்த படியால், அசுரர்கள் வாய் பேசாமல் அமர்ந்திருந்தனர். [இப்போது தகராறு செய்தால், அவளிடம் நமது இமேஜ் பாதிக்கப் படும், அப்புறம் அவளை இம்ப்ரெஸ் செய்வது கஷ்டம் என நினைத்தும் சும்மாயிருந்தனர்!!]. இதில் ராகு மட்டும் தேவர்களைப் போல உடையணிந்து சூரியனுக்கும், சந்திரனுக்கும் அருகில் போய் அமர்ந்தான். அமிழ்தை வாங்கி வாயில் சுவைத்தான். அப்போது அவன் அரக்கன் என உணர்ந்த விஷ்ணு தனது சக்ராயுதத்தால் அவனது தலையை சீவி எறிந்தார். தலை வெட்டப் பட்டாலும் அமிழ்தைச் சுவைத்திருந்த படியால் அவன் சாகவில்லை. இவ்வாறாக அமிழ்து முழுவதும் தேவர்களுக்கே வழங்கப் பட்ட பின்னர் மோகினி விஷ்ணுவாக மாறி காட்சியளிக்கிறார். அசுரர்களுக்கு அமிழ்ந்து வழங்குவது பாம்புக்கு நஞ்சு வார்ப்பது போல என நங்கறிந்திருந்த விஷ்ணு அவர்களை நயமாக ஏமாற்றினார்.
இந்த லீலைக்குப் பின்னர், இது குறித்து அறிந்த சிவன் உமையவளுடன் தனது காளை வாகனத்தின் மீதேறி , பூதகணங்கள் சூழ விஷ்ணுவைச் சந்திக்கிறார். அவரைப் புகழ்ந்து பாசுரங்களைப் பாடி, மோகினி அவதாரத்தை தானும் காண வேண்டுமென்ற விருப்பத்தைத் தெரிவித்தார். அதற்க்கு இசைந்த விஷ்ணு அங்கிருந்து மறைந்து போகிறார். பின்னர் தூரத்தில் ஒரு அழகிய வனத்தில் பேரழகியான ஒரு பெண் பந்து விளையாடிக் கொண்டிருக்கிறாள். அவளது உடலைச் சுற்றியிருக்கும் சேலையைத் தவிர வேறு ஆடைகள் எதுவும் அவள் அணிந்திருக்கவில்லை. அவ்வப்போது சிவனை தனது ஓரக்கண்ணால் புன்னகையுடன் பார்க்கிறாள். இதைக் கண்ட சிவன் தன்னை அவளுக்குப் பிடித்துவிட்டது போல என நினைத்து அவள்பால் மிகவும் ஈர்க்கப் படுகிறார்.
அவளது பேரழகில் மயங்கிய சிவன் உமையவள் தன்னுடன் இருகிறாள் என்பதையும் மறந்து அவள் பின்னர் செல்கிறார். ஆனால் அவள் மீண்டும் விலகி சற்று தூரம் போய் விடுகிறாள். சிவனும் விரட்டிச் செல்கிறார். அப்போது காற்று பலமாக வீச அவளது ஆடை காற்றில் பறந்து செல்ல முழு நிர்வானமாகிறாள். விரட்டிச் சென்ற சிவன் அவளது ஜடையை கையில் பிடித்து இழுத்து அணைக்கிறார், ஆனாலும் உடனே அவர் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு மோகினி தப்பித்துச் சென்று விடுகிறாள். அவளை மீண்டும் விரட்டிய சிவன் அவளைப் பிடிக்க இயலாமல் விந்துவை வெளியிடுகிறார். சிவன் வெளியிட்ட அது ஒரு போதும் வீணாகாது. பூமியில் எங்கெல்லாம் அது விழுந்ததோ அங்கெல்லாம் தங்கம், வெள்ளிச் சுரங்கங்களாக மாறின.
இவ்வாறு யாராலும் அசைக்க முடியாத மன உறுதியைக் கொண்ட சிவனையும் மதிமயக்கச் செய்யும் லீலைகளைப் புரிந்த பகவானை நான் வணங்குகிறேன் என சுகமுனி கதையை முடிக்கிறார்.

No comments:

Post a Comment