Sunday 25 December 2016

மாயப் பானை
++++++++++++++
ஸ்கேண்டி நேவியன் கதை
****************************************
மலை அடிவாரத்தில் அந்தச் சிறுவனின் வீடு இருந்தது. அவனுக்கு அப்பா இல்லை. அப்பா இருந்தபோது நிறைய சொத்து இருந்தது. இறந்தவுடன் அந்தச் சொத்தை எல்லாம் மலையின் உச்சியில் இருந்தவர் ஏமாற்றி எடுத்துக்கொண்டார். அவர்களிடமிருந்தது ஒரே ஒரு "பசு"மட்டும்தான். அம்மாவும் மகனும் சாப்பாட்டுக்கே சிரமப்பட்டனர்.
மக‌னை அழைத்துச் சொன்னார். இந்தப் பசுவை அருகிலுள்ள நகரத்தில் விற்று விட்டு வா, என்று அனுப்பினார். சிறுவன் மாட்டின் கழுத்தில் கயிறு கட்டினான். கயிற்றைப் பிடித்துக்கொண்டு நகரத்துக்கு கூட்டிப்போனான். வழியில்
ஒரு மனிதனை சிறுவன் சந்தித்தான். அந்த மனிதன் துணியால் மூடிய ஒரு பொருளை வைத்திருந்தான். அந்த மனிதன்
"எங்கேயப்பா போகிறாய் என்று கேட்டார்.
"இந்தப் பசுவை விற்பதற்காகப் போகிறேன்,"என்றான்.
"ஓ!அப்படியா, அப்ப பசுவை எனக்கு விற்கிறாயா?"என்று கேட்டார் அவர்.
"நீங்கள் எவ்வளவு தருவீர்கள்?"என்றான் இவன்.
"இந்த வெள்ளிப் பானையை உனக்குத் தருகிறேன்,"என்றார் அவர்.
"பசுவிற்குப் பதிலா பானையா? நான் தரமாட்டேன்,"என்றான் சிறுவன்.
அப்போது ஒரு மெல்லிய குரல் கேட்டது, சிறுவனுக்கு. "என்னை வாங்கிக்க, என்னை வாங்கிக்க,"என்று பானையில் இருந்து குரல் வந்தது. உடனே சிறுவனும் பசுவை அந்த மனிதரிடம் கொடுத்தான்.
பானையை வாங்கிக்கொண்டான். பசுவோடு போனவன் பானையோடு வீட்டுக்கு வந்தான்.
"பசுவை எவ்வளவுக்கு விற்றாய்?,"என்று கேட்டார் அம்மா.
"இதோ இந்தப் பானையை வாங்கி வந்தேன்,"என்றான்.
"உனக்கு மூளையே இல்லையா? யாராவது பானைக்காக பசுவை விற்பார்களா?
வெறும் பானையை வைத்து என்ன செய்வது? என்று சத்தம் போட்டார், அவன் அம்மா.
அந்தப்பானையை வாங்கி வெளியே வீசப்போனார். அப்போது என்னை
அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வையுங்கள், என்றது பானை.
பானை பேசியதைப் பார்த்த அம்மாவுக்கு ஒரே ஆச்சரியம். பானை
சொல்லியபடி அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றினார். அடுப்பை மூட்டி
எரிய விட்டார். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தது.
"இப்ப நான் போய் உங்களுக்கு சாப்பிடக் கொண்டு வருவேன்,"என்றது பானை.
பானை காற்றில் அப்படியே பறந்து மலை உச்சிப்பக்கம் போனது. மலை உச்சியில்உள்ள பணக்காரர் வீட்டு சமையல் அறைக்குப் போனது பானை. பணக்காரர் மனைவியோ பலகாரங்களைச் சுட்டு, வைக்க பாத்திரம் தேடிக்கொண்டிருந்தார். இந்தப் பாத்திரம் எங்கிருந்து வந்தது? என்று யோசித்தார் அந்தம்மா. பானை நல்லாத்தான் இருக்கு என்று செய்த பலகாரங்களை எல்லாம் அந்தப் பானைக்குள் வைத்தார். அதை நன்றாக‌
ஒரு மூடியை வைத்து மூடினார். பணக்காரக் கணவரைச் சாப்பிட அழைக்கப் போனார்.
பானை காற்றில் மிதந்து மலை அடிவாரத்தில் உள்ள சிறுவன் வீட்டுக்கு வந்துவிட்டது. அம்மாவும் மகனும் விதவிதமான பலகாரங்களை ருசித்துச் சாப்பிட்டனர்.
அடுத்த நாள் காலையில் பானை சொன்னது. என்னை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடுங்கள் என்று. அதேபோல சிறுவனின் அம்மா செய்தார்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் காற்றில் மிதந்தவாறு பானை வெளியே போனது.
மலை உச்சியில் பணக்காரரின் ஆட்கள் கோதுமை அறுவடை செய்துகொண்டிருந்தார்கள்.
கோதுமையை பிரித்து ஓரிடத்தில் குவியலாக வைத்திருந்தனர். அந்த இடத்திற்குப் போனது பானை. பானை பெரிய பானையாக தன்னை மாற்றிக்கொண்டது. அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர் அந்தப் பானையில் கோதுமையை எடுத்துக் கொட்டினார். மூட்டைக்
கணக்கில் கொட்டிக்கொண்டே இருந்தார். பானைக்குள் எட்டிப்பார்த்தால் இடம் இருந்துகொண்டே இருந்தது. அங்கிருந்த கோதுமை எல்லாம் இப்போது பானைக்குள்!
அந்த வேலையாள் அங்கிருந்து போனார். உடனே பானை காற்றில் மிதந்து சிறுவனின்வீட்டிற்கு வந்துவிட்டது. சிறுவனின் அம்மா, அந்தக் கோதுமையில் பலகாரங்கள்செய்தனர். ரொட்டி செய்தனர். பானையிலிருந்த கோதுமையை அங்கிருந்த தானியக் கிடங்கில் சேமித்தனர். அந்த வருடத்துக்குப் போதுமான கோதுமை அது.
மறு நாள் காலையில் பானை, தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கச் சொன்னது.
சிறுவனின் அம்மா அப்படியே செய்தார். தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும் பானைகாற்றில் மிதந்து வெளியே போனது.
பணக்காரர் கட்டுக்கட்டாக பணத்தை வைத்து எண்ணிக்கொண்டிருந்தார்.
பானை அங்கே போய் இருந்துகொண்டது. மற்றொரு அறைக்குப் போய் அங்கிருந்த பணத்தைஎல்லாம் எடுத்து வந்தார். இனி இந்தப் பணத்தை எல்லாம் ஒரே இடத்தில் வைக்க வேண்டும் என்று நினைத்தார். அப்போதுதான் அந்தப் பானையைப் பார்த்தார்,பணக்காரர்.
அடடே, இந்தப் பானையில் எல்லாப் பணத்தையும் வைக்க‌ வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டார். தன் முன் இருந்த பணத்தை எல்லாம் பானைக்குள் எடுத்து அடுக்கினார். பணத்தை வைக்க வைக்க இடம் இருந்துகொண்டே இருந்தது. அவரிடம் வேறு பணமே இல்லை; எல்லாப் பணத்தையும் வைத்துவிட்டார்.
பணக்காரர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே பானை காற்றில் மிதந்து
செல்ல ஆரம்பித்தது. ப‌ணக்காரர் பானையைத் துரத்திக்கொண்டே ஓடினார்.
பானை அவரை அங்குமிங்குமாக அலைக்கழித்தது. பணக்காரர் கண்ணிலிருந்து மறைந்து சிறுவன் வீட்டிற்கு பானை வந்தது.
"அம்மா, பசுவை யாராவது பானைக்கு விற்பார்களா? என்று கேட்டீர்கள்.
இப்போது பானைதான் நாம் இழந்ததை எல்லாம் மீட்டுக்கொடுத்துள்ளது,"
என்றான் மகன்.
தங்களுக்குச் சொந்தமான பணம் திரும்பக் கிடைத்ததில் அம்மாவும் மகனும் சந்தோசப்பட்டார்கள்.
மறு நாள் காலையில் பானை, தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கச் சொன்னது.
இனிமேல் எதற்கு? எங்களுக்குச் சேரவேண்டியது கிடைத்துவிட்டது. நீ, எங்கும் போக வேண்டாம். எங்களுடனேயே இருந்துவிடு என்று சிறுவனின் அம்மா சொன்னார்,பானையிடம்!
"இனி உங்களுக்கு நான் தேவைப்படமாட்டேன். உங்களை ஏமாற்றி மோசடி செய்தவருக்கு ஒரு பாடம் கற்பிக்கப் போகிறேன். எனவே நான் சொன்னபடி செய்யுங்கள் என்றது பானை.
சிறுவனின் அம்மாவும் அப்படியே செய்தார். தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும் பானை காற்றில் மிதந்து வெளியே போனது.
பணக்காரர் கண்ணில் படும்படியாக பானை போனது.
"என் பணத்தைத் திருடிக்கொண்டு போன பானை இதுதான்...!"என்று
பணக்காரர் கத்தினார். பானையைப் பிடித்து கையை விட்டு பணத்தைத்
தேடினார். பணம் தட்டுப்படவில்லை. பணக்காரர் தன் தலையை உள்ளே
நுழைத்து பணம் இருக்கிறதா என்று பார்த்தார். பணம் எதுவும் இல்லை.
அவரால்,தலையை வெளியே எடுக்க முடியவில்லை.
பானை காற்றில் மிதந்து சென்றது. பணக்காரர் ஏதேதோ சொல்லிக்
கத்தினார். வெளியே எதுவும் கேட்கவில்லை. பானை காடு,மலை,கடல்
எல்லாம் தாண்டிப் போய்க்கொண்டே இருந்தது.

No comments:

Post a Comment