Sunday, 25 December 2016

மரியாளும் சூசையும் நீண்ட பயணத்தின் பின் பெத்லகேமுக்குள் நுழையும்போதே மிகவும் சோர்வுற்றிருந்தனர். பயணத்தில் ஆடைகள் அழுக்காகி கசங்கியிருந்தன. மரியாள் நிறைமாதக் கர்பிணியானதால் மிகவும் சோர்வுற்று தான் பயணித்து வந்த கழுதையின் மீதே படுத்திர்ந்தாள். பெத்லகேமில் பல்வேறு ஊர்களிலிருந்தும் யூதேயாவுக்கு வரி கட்ட வந்தவர்களின் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது.
இருவரும் ஒவ்வொரு விடுதியாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தனர். எங்கேயும் தங்க இடம் கிடைக்கவில்லை. கடைசியாக ஊரின் ஒதுக்குப்புறமிருந்த விடுதி ஒன்றிற்கு வந்து சேர்ந்தனர். சூசைக்கு அந்த விடுதியில் அறைகள் காலியாக இருந்ததைப் போலத் தோன்றியது. கடுகடுப்பான முகத்துடன் விடுதிக் காப்பாளன் வந்து ‘என்ன வேண்டும்’ எனக் கேட்டான். அவன் பெயர் திமோத்தி. சூசை மரியாளின் நிலையை எடுத்துச் சொல்லி ‘இன்றிரவே இவளுக்கு குழந்தை பிறக்கும் போலத் தோன்றுகிறது. இங்கே தங்க இடம் கிடைக்குமா?’ என்றார். அவன் கழுதைமேல் படுத்திருந்த பெண்ணை ஏற இறங்க பார்த்தான். இவர்களிடம் காசும் பணமும் ஏதும் இருக்காது என்பதைப் புரிந்து கொண்டான். இன்னும் மாலையானால் ஊருக்குள் இடம்கிடைக்காதவர்கள் இங்கே வரக்கூடும் என்பதுவும் அவனுக்குத் தெரியும். ‘விடுதியில் இடமில்லை.’ என்று பொய் சொன்னான். அவன் மனைவி இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அவள் இரக்கப்பட்டு இவர்களுக்கு விடுதியில் இடம் கொடுக்கச் சொல்வாள் என்று நினைத்தான். ‘நீங்கள் போய் ஏதேனும் மாட்டுத் தொழுவத்தில் இருக்கலாமே. கொஞ்சம் தள்ளிப் போனால் என் மாட்டுத் தொழுவமே உள்ளது’ என்று வழிகாட்டினான்.
சூசை வேறு செய்வதறியாது மரியாளை அழைத்துக்கொண்டு மாட்டுத் தொழுவத்திற்குச் சென்றார். அன்றிரவு திமோத்தியின் விடுதி நிறைந்து வழிந்தது. மீதமானவர்களை தன் வீட்டிலேயும் தங்க வைத்து பணம் சம்பாதித்தான். வியாபார பரபரப்பில் அவன் தன் தொழுவத்தில் தங்கியிருந்தவர்களை நினைக்கவேயில்லை.
ஐந்து நாட்கள் கழிந்து கூட்டம் கொஞ்சமாய் குறைந்திருந்தது. மாலையில் தன் தொழுவத்துக்குச் சென்றான் திமோத்தி. அங்கே ஒரு குழந்தை படுத்திருக்கும் அளவுக்கு படுக்கை ஒன்று செய்யப்பட்டிருந்தது. பலகைகளையும் மரத் துண்டுகளையும் கொண்டு அந்த படுக்கையின் அடிப்பகுதி உருவாக்கப்பட்டிருந்தது அதன் மேல் வைக்கோல் போடப்பட்டிருந்தது. அந்தப் படுக்கையின் நேர்த்தியை அவன் வியந்துகொண்டிருக்கையில் ஆடு மேய்ப்பர்களின் கூட்டம் ஒன்று தொழுவத்திற்கு வந்தது.
‘என்ன வேண்டும் உங்களுக்கு?’ என்றான் திமோத்தி. ‘இங்கே ஒரு குழந்தை பிறந்திருந்ததே.’ என்றான் மேய்ப்பர் கூட்டத்தின் தலைவன். ‘இருக்கலாம். அது உங்களுக்கெப்படித் தெரியும்?’ என்று கேட்டான். மேய்ப்பர் தலைவன் சற்று தயக்கத்துடன் ‘ஐயா. அது ஒரு தெய்வீகக் குழந்தை. அது பிறந்த விஷயத்தை தேவ தூதர் எங்களுக்குச் சொன்னார். நாங்கள் ஏற்கனவே வந்து அவரைத் தொழுதுவிட்டுச் சென்றோம்.’ என்றார்.
திமோத்தி சிரித்தான்.’தெய்வக் குழந்தையா? மாட்டுத் தொழுவத்திலா? என்னையா உளறுகிறீர்கள். நீங்கள் கனவேதும் கண்டீர்களா? தெய்வமாவது தொழுவத்தில் பிறப்பதாவது? எங்கேயாவது இடையர்களுக்கு தேவ தூதன் தோன்றுவதுண்டா? இங்கே குழந்தை பிறந்தது உண்மைதான் ஆனால் அது ஒரு சாதாரணக் குழந்தைதான். அவர்கள் நேற்றே இங்கிருந்து கிளம்பியிருக்க வேண்டும்.’ என்றான்.
மேய்ப்பர்கள் வந்த வழியே திரும்ப திமோத்தியின் மனதில் சந்தேகம் எழுந்தது. ஒரு வேளை இவர்கள் சொல்வது சரிதானோ? ஏதோ மூன்று ராஜாக்கள் வந்தனர் என்று ஊரில் பேசிக் கொண்டது உண்மையோ என்று எண்ணினான். நம் தொழுவத்தில் இந்த மாட்டுக் குடிசையில் பிறந்த குழந்தை தெய்வக் குழந்தையா? நிச்சயம் இருக்காது. தங்குவதற்க்குக்கூட இடமில்லாமல், பணமில்லாமல் பிறந்த ஏழைக் குழந்தை தெய்வக் குழந்தையா. என்று மறு எண்ணம் தோன்றியது. தெய்வக் குழந்தையானால் தங்கிப் போனதுக்கு காசு தந்துவிட்டுச் சென்றிருக்கலாமே என்று நினத்து சிரித்தான் திமோத்தி.
அவன் திரும்பி நடக்க நினைக்கையில் மீண்டும் அந்த படுக்கையை பார்த்தான். அது இப்போது மினுங்கிக்கொண்டிருந்தது. அருகே சென்றான். படுக்கையிலிருந்த வைக்கோல் புல் ஒன்றை கையில் எடுத்தான். அது தங்கப் புல்லாகியிருந்தது. படுக்கையில் இருந்த அத்தனை புற்களும் தங்கமாகி மின்னிக் கொண்டிருந்தன. அவன் மனது மகிழ்ச்சியில் துள்ளியது. ஒரு கணம் திணறிவிட்டான். ஒன்று விடாமல் எல்லா தங்கப் புற்களையும் அள்ளிக்கொண்டான். கடவுளென்றால் இந்தத் தொழுவத்திலிருக்கும் எல்லா புற்களும் தங்கமாயிருக்க முடியுமே. என்று நினைத்தான் அப்படியே அவையெல்லாம் தங்கமாயின. இன்னும் மகிழ்ந்தான். கொண்டாடினான். சந்தோஷத்தில் துள்ளினான். இவன் துள்ளலைக் கண்டு ஆடுகள் மிரண்டு கத்தின.
குதித்து ஓய்ந்த பொழுதில் அவன் மனம் வருந்தலானான். ஒரு தெய்வக் குழந்தைக்கு தன் வீட்டில் இடம் தராமல் விட்டுவிட்டோமே? இந்த ஆடும் மாடும் கழுதையும் கண்ட தெய்வீகக் காட்சியை தான் காண கொடுத்துவைக்கவில்லையே? தன்னைத் தேடி வந்த தெய்வத்தை திருப்பி அனுப்பிவிட்டோமே என்று அங்கலாய்த்தான். அதுமுதல் அந்தக் குழந்தையை தேடத் துவங்கினான். தன் கையிலிருந்த தங்கத்தை விற்றுத் தேடினான். பல இடங்களுக்கும் சுற்றித் திர்ந்து தேடினான்.
பல வருடங்கள் கழித்து அவன் கையிலிருந்த கடைசித் தங்கப் புல்லும் தீர்ந்துபோனது. கடவுள் தன் அருகாமையில் வந்திருந்தும் காணமுடியாமல் போனதை எண்ணி வருந்தி கண்ணீர் விட்டழுதான். ‘இனியும் தேட சக்தியில்லை. பயனுமில்லை. வீடுபோய் சேர்வோம்’ என்றெண்ணினான். கையிலிருந்த கடைசிக் காசை ஒரு குருட்டு பிச்சைக் காரனின் சட்டியிலிட்டான்.
அப்போது வானம் கறுத்து இடி இடித்து சூழல் மாறியது. காற்று சுழன்றடித்தது. மக்களெல்லாம் சிதறி ஓடிக்கொண்டிருந்தனர். தூரத்தில் மலை மீது மூன்று சிலுவைகள் நின்று கொண்டிருப்பதைக் கண்டான் திமோத்தி. மலை நோக்கி நடக்கலானான்.

No comments:

Post a Comment