Sunday 25 December 2016

வால்கா நதியோரம்
ரஷ்யாவின் துறைமுக நகரம் "நவ்காரட்." வால்கா நதி நகரம் என்றுகூட சொல்லலாம். மாஸ்கோவிற்கும் பீட்டர்ஸ் பர்க் நகரத்துக்கும் இடையிலான ஒரு பழைய நகரம். வணிகம் செழித்து வளர்ந்த நகரமும் கூட. பல்வேறு வரலாற்றுச் சிறப்புகளைக்கொண்ட நகரம் அது. இசைக் க‌லைஞன், இளைஞன் "ச‌ட்கோ." ச‌ட்கோ கூஸ்லி என‌ப்ப‌டும் இசைக்க‌ருவியை வாசிப்ப‌தில் வ‌ல்ல‌வ‌ன். 12 க‌ம்பி நரம்புகளைக்கொண்ட‌ கூஸ்லியை ச‌ட்கோ வாசிக்கும் வித‌மே அலாதியான‌து. பண‌க்கார‌ர் அல்லது பிர‌புக்க‌ளில் ஒருவ‌ர் ச‌ட்கோவின் வீட்டுக்கு ஆள‌னுப்பி கூஸ்லி வாசிக்க‌ச் சொல்லுவார்க‌ள். அது விருந்து ந‌ட‌க்கும் இட‌மாக‌ இருக்க‌லாம்;திரும‌ண‌ம் போன்ற‌ விசேச‌ம் ந‌ட‌க்கும் இட‌மாக‌வும் இருக்கும். பிரபுக்கள் கூடிவிட்டால் கூப்பிடு சட்கோவை என்பார்கள். சட்கோவும் கூஸ்லியை தூக்கிக்கொண்டு கிளம்பிவிடுவான். சட்கோவின் விரல்கள் கூஸ்லியில் விளையாடும். அடுத்த‌ சில நிமிடங்களில் சட்கோவின் இசைக்கு ஏற்ப அனைவரும் நடனமாடத் துவங்கிவிடுவார்கள்.
பணக்காரப் பிரபுக்களாக இருந்தாலும் சில்லறைக்காசுகளைத்தான் போடுவார்கள்,இவனுக்கு! சாப்பாடு அங்கேயே கிடைத்துவிடும். அவனுக்கு வேறு என்ன வேண்டும்? அவனுடைய நண்பர்கள் அடிக்கடி கேட்பார்கள். சில்லறைக் காசுகள்தான் உனக்கு கிடைக்கிறது. அதைகொண்டு எப்படி உயிர் வாழ்கிறாய்? என்பதுதான் அந்தக் கேள்வி. "நான் ஒருத்தன் தானே, அதற்கு இதுவே போதும்," என்பான். நாள்தோறும் ஒருத்தர் விதவிதமான விருந்துகளுக்கு போகமுடியுமா? விருந்துக்கு போகும் இடங்களில் நல்ல‌ விருந்தைக் கொடுக்கிறார்கள். எனக்கு சாப்பாட்டுப் பிரச்னை என்பதே இல்லை. என் இசையை பணக்காரர்களும், பிரபுக்களும் இரசிக்கிறார்கள். மகுடியின் நாதம் கேட்டு ஆடும் பாம்பாக அவர்கள் ஆடி சந்தோசப்படுவது எனக்குப் பெருமைதானே.
இந்தப் பெருமை உலகில் எத்தனை பேருக்குக் கிடைக்கும்? அவர்கள் வீசி எறியும் சில்லறைக்காசுகள் என் கைச் செலவுக்கு," என்று சட்கோ எதார்த்தமாகச் சொல்லுவான். ஆனாலும் இதுதான் அவ‌ன் வாழ்க்கை! பெரும் பண‌க்கார‌ர்க‌ள் ஒருபுற‌ம், இன்னொரு புற‌ம் இல‌வ‌ச‌மாக எல்லாம் கிடைக்கிற‌து. என் ந‌க‌ர‌த்தை நினைத்தால் என‌க்குப் பெருமித‌மாக‌ இருக்கிற‌து என்றும் சொல்வான். அனேக நாடுக‌ளிலிருந்து வ‌ர்த்த‌க‌ர்க‌ள் "ச‌ந்தைச் ச‌துக்க"த்தில் கூடுவார்க‌ள். நீண்ட‌ வ‌ரிசைக‌ளில் அவ‌ர்க‌ள் க‌டைக‌ளுக்கு முன் நிற்ப‌தை அவ‌ர்க‌ள் கொண்டுவ‌ந்த‌தை இவ‌ர்க‌ளிட‌ம் கொடுப்பார்க‌ள்; அத‌ற்கு ச‌ரிச‌ம‌மாக‌ இவ‌ர்க‌ளிட‌ம் வேண்டிய‌ பொருட்க‌ளை வாங்குவார்க‌ள். இத்தாலி, நோர்வே,பெர்சியா என்ற‌ ப‌ல‌ க‌ல‌ப்புக்குர‌ல்க‌ளைக் கேட்காம‌ல் ஒருநாளும் ச‌ட்கோ அந்தச் சதுக்க‌த்தைத் தாண்டிய‌தில்லை. அப்ப‌டியே கொஞ்ச‌ம் கீழிற‌ங்கி ந‌ட‌ந்தால் துறைமுக‌ம் வ‌ந்துவிடும்.பயணிகள் க‌ப்ப‌ல்க‌ள், ச‌ர‌க்குக்க‌ப்ப‌ல்க‌ள் போவ‌தும் வ‌ருவ‌தும் க‌ண்கொள்ளாக் காட்சியாக‌ இருக்கும். நிற்கும் க‌ப்ப‌ல்க‌ளிலிருந்து ம‌ர‌ங்க‌ள், தானிய‌ங்க‌ள்,ம‌ட்பாண்ட‌ங்க‌ள்,வாச‌னை திர‌விய‌ங்க‌ள்,ந‌றும‌ண‌ப்பொருட்க‌ள், உலோக‌த் த‌க‌டுக‌ள் க‌ப்ப‌ல்க‌ளிலிருந்து இற‌க்கப்ப‌டுவ‌தும் ஏற்ற‌ப்ப‌டுவ‌தும் ந‌ட‌ந்துகொண்டே இருக்கும்.
அப்ப‌டியே வேடிக்கைபார்த்துக்கொண்டே வால்கா ந‌தியின் குறுக்கே செல்லும் பிர‌ம்மாண்ட‌மான‌ பால‌த்தில் ந‌ட‌க்க‌ ச‌ட்கோவுக்கு மிக‌வும் பிடிக்கும். பால‌த்தின் இரும்புப் பாள‌ங்க‌ள் ஊடாக‌ வ‌ரும் சூரிய‌க்க‌திர்க‌ள்! த‌ங்க‌மாய்த் த‌க‌த‌க‌க்கும் அந்த‌க் க‌திர்க‌ள் இவ‌னுக்காக‌வே வான‌த்திலிருந்து இற‌ங்கி வ‌ருவ‌தாக‌ க‌ற்ப‌னை செய்து அத‌னைப் பிடிக்க‌ முய‌ல்வான். இத்த‌கைய‌ த‌ருண‌ங்க‌ளில் உல‌க‌த்தில் எங்காவ‌து "ந‌வ்கார‌ட்" ந‌க‌ர‌ம் மாதிரி ஒரு ந‌க‌ர‌ம் இருக்குமா? இருக்க‌வே இருக்காது என்று அவ‌னுக்குள் சொல்லிக்கொள்வான். கூஸ்லி வாசிக்காத நாட்களில் தனிமையில் தவிப்பதாக உணர்வான்.
கூஸ்லி வாசிக்கும்போது இவனது இசைக்கு ஏற்ப சில பணிப்பெண்களும் ஆடுவது உண்டு. அப்படி ஆடுபவர்கள் இவனிடம் வரும்போது சிரிப்பார்கள். இவனும் புன்னகைத்து வைப்பான். இவனோ ஏழை! அவர்களோ வசதியானவர்கள். இவன் ஏழையாக இருப்பதாலேயே இவனைத் திருமணம் செய்ய ஒருவரும் முன்வரவில்லை. ஒருநாள் அகண்டு பரந்து ஓடும் வால்கா நதியோரம் நடந்துகொண்டிருந்தான், சட்கோ. அவனது முகம் வருத்தம் நிரம்பிப்போயிருந்தது. நதிக்கரையில் வழக்கமாக‌ உட்காரும் இடம் வந்தது. உட்கார்ந்தான். கூஸ்லியை எடுத்து மடியில் வைத்துக்கொண்டான். நதி அலைகள் கரை மணல்களைக் கடத்தும் வேலையைச் செய்து கொண்டிருந்தது. நிலா அனுப்பிய‌ ஒளியில் வால்கா ந‌திக்கு கூடுத‌ல் அழ‌கைக் கொடுத்த‌து. எட்டாத‌ வ‌ட்ட‌ நிலா அலைக‌ளில் ப‌ட்டுத் த‌ட்டுத் த‌டுமாறி மித‌ப்ப‌தையும் கொஞ்ச‌ம் இர‌சித்தான். "என்ன‌ருமை வால்கா ந‌தியே!உன‌க்கு ஏழை,ப‌ண‌க்கார‌ன் எல்லாம் ஒன்றுதான்! ஆனால் நீ ம‌ட்டும் ஒரு பெண்ணாயிருந்தால் உன்னையே திரும‌ண‌ம் செய்து நான் விரும்பும் இந்த‌ ந‌க‌ர‌த்திலேயே வாழ்வேன்," என்று வாய்விட்டுச் சொன்னான்,ச‌ட்கோ. அடுத்த‌ நொடி,"ஒரு சோக‌ இழையை த‌ன் குஸ்லியில் மீட்டினான்.தொட‌ர்ந்து ஒரு ச‌மாதான‌ கீத‌ம் ஒலித்தான்; அது முடிந்த‌தும் ஒரு ச‌ந்தோச‌ கீத‌ம் மீட்டினான். வால்கா ந‌திக்கே புல்ல‌றிப்பு ஏற்ப‌ட்டிருக்க‌வேண்டும். கூஸ்லியின் நாத‌த்தை அலைக‌ள் உள்வாங்கிக்கொண்டு ஓடுவ‌து போலிருந்த‌து. திடீரென்று..... கடல் கொந்தளித்தது. ஆள் உயரத்துக்கு அலை எழும்பியது. சட்கோ பயந்து,"ஆகா, இன்றைக்கு கடலரக்கனுக்கு நான் உணவாகப் போகிறேனா?"என்று கத்தினான். சட்கோ எழுந்து கரைப்பக்கம் ஓடத் துவங்கியபோது,"சட்கோ ஓடாதே நில்!,"என்ற குரல் கேட்டது. சட்கோ நின்று திரும்பிக் கடலைப் பார்த்தான். அங்கே.... தண்ணீருக்குள்ளிருந்து ஒரு இராட்சச உருவம் மெல்ல மேலே வந்து கொண்டிருந்ததைக் கண்டான்,சட்கோ. தலையில் முத்துக்களால் ஆன கிரீடம் ஒன்று இருந்தது. உடம்பெல்லாம் கடற்பாசியால் ஆன உடை. சட்கோவைப் பார்த்து அந்த உருவம் ,"இசை ஞானியே, நான் கடல் அரசன்....உன் இசை கேட்டு இங்கு வந்தேன்," என்றது. " இந்த நதியின் இளவரசி வால்கா என் மகள். அவளைப் பார்ப்பதற்காக வந்திருந்தேன். அப்போது உன் இசையை நதியின் அடி ஆழத்தில் நாங்களெல்லாம் கேட்டு மகிழ்ந்தோம். யார் அந்த இசை ஞானி என்று பார்க்கவே யான் இங்கு வந்தேன். உன்னுடைய அற்புதமான இசைக்கு என் கடலளவு பாராட்டுக்கள்"என்றார் கடலரசன். "மிக்க நன்றி, அரச பிரபு,"என்று சொல்லி தலை தாழ்த்தி கடலரசனை வணங்கினான், சட்கோ. "நான் எனது அரண்மனைக்கு விரைவில் செல்லப் போகிறேன். அங்கு ஒரு நாள் வந்து உன் இசையை எனக்காக இசைக்க வேண்டும் என்பது என் ஆசை,"என்றார் கடலரசன். "கண்டிப்பா வந்து இசைப்பேன். ஆனால், கடலில் உங்கள் அரணமனை எங்கே இருக்கிறது? நான் எப்படி அங்கு வருவது?" என்று சட்கோ சட்டென்று கேட்டான். "கடலுக்கு அடியில்தான் என் அரண்மனை, அதிலென்ன சந்தேகம்? அரண்மனைக்கு வரும் வழியை உன்னால் கண்டுபிடித்து வரமுடியும். உன் இசைக்கான பரிசை இப்போதே உனக்கு நான் வழங்குகிறேன்,"என்று கடலரசன் சொன்னார். அடுத்த நொடி வால்கா நதியிலிருந்து ஒரு பெரிய மீன் துள்ளிவந்து சட்கோவின் காலடியில் வந்து வீழ்ந்தது.
அதன் செதில்கள் எல்லாம் தங்கமாக மின்னியது. துள்ளிய மீன் திடீரென விறைத்து மீனே தங்கமாக மாறியது. "ஈரேழு கடல்களுக்கும் சக்கரவர்த்தியே! உங்களின் தாராளமான வள்ளல் தன்மைக்கு என் நன்றியும் வணக்கமும்," என்று சொல்லி சட்கோ குனிந்து வணங்கினான். "என்னைப் புகழ வேண்டாம். தங்கத்தை விட இசை விலை மதிப்பில்லாதது. உன் இசையை இந்த உலகத்தில் உள்ளோருக்கு மதிக்கத் தெரியவில்லை; தெரிந்திருந்தால் இந்நேரம் நீ உலகப் பணக்காரனாகி இருப்பாய். நான் இசையை மதிப்பவன்; அதனால்தான் நானே உன்னைத் தேடிவந்தேன். சரி நான் வருகிறேன்,"என்று சொல்லி வால்கா நதியில் கடல் அரசன் மறைந்து போனார். சட்கோவுக்கு அந்த இன்ப அதிர்ச்சியிலிருந்து மீள வெகு நேரமானது. அடுத்த நாள்.... சட்கோ, சதுக்கச் சந்தைக்குச் சென்றான். திறந்திருந்த கடைகளில் பெரிய கடை ஒன்றுக்குப் போனான்.
அந்த வியாபாரிக்கோ பேராச்சரியம். சட்கோவே எதிர்பாராத பெருந்தொகை கிடைத்தது. வீட்டுக்குப் போனான். தனக்கு வேண்டிய பணத்தை எடுத்துக்கொண்டு மீதியை தனது பழைய மரப்பெட்டியில் வைத்துவிட்டு துறைமுகம் நோக்கிக் கிளம்பினான்,சட்கோ. கடலரசன் அரண்மனை பால்டிக் கடலில்தான் இருக்க வேண்டும். அதுதான் ஆழமான கடல். அவன் உள்மனம் அதுவே சரி என்று சொல்ல தீர்மானித்துவிட்டான்,சட்கோ. அன்றே புறப்படும் கப்பல் எது என்று தேடிப்பார்த்தான்.
லடோகா நதிவழியாக ஃபின்லாந்து வளைகுடாவில் நுழைந்து பால்டிக் கடல் தாண்டிப் பயணப்படும் கப்பலைக் கண்டுபிடித்துப் பயணச் சீட்டை வாங்கினான். வழிநெடுக யோசித்துக்கொண்டே போனான் சட்கோ. கடலரசன் அரண்மனை எந்த இடம் என்று கடலில் எப்படிக் கண்டு பிடித்துப் போவது? என்பதே அவன் சிந்தனை. கரை தெரியாக் கடலில் கடல் அலைகள் உறுமும் சத்தம் தவிர எதுவும் தெரியாத தண்ணீர் பிரதேசத்தில் கப்பல்பயணப்பட்டுக்கொண்டிருந்தது. அமைதியான கடற்பரப்பில் கப்பலை அதன் தலைவன் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தினார். கப்பலின் மேல் தளத்தில் நின்றுகொண்டு பயணிகள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். எங்கு திரும்பினாலும் தண்ணீர்....தண்ணீர்...தண்ணீர். தூரத்தில் செல்லும் கப்பல்கள் புள்ளிகள் போல் தெரிந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாக மீன்கள் தண்ணீருக்கு மேல் தலைகாட்டிக்கொண்டிருந்தது. சட்கோவுக்கு திடீர் என்று ஒரு யோசனை வந்தது. குஸ்லியை வாசித்தால் ஒருவேளை கடலரசன் எதாவது வழிகாட்டக்கூடும் என்று நினைத்தான். கப்பலின் கீழ்தளத்துக்கு ஓடி கூஸ்லியை எடுத்து வந்து வாசித்தான். "ஒரு சோக‌ இழையை த‌ன் கூஸ்லியில் மீட்டினான்.தொட‌ர்ந்து ஒரு ச‌மாதான‌ கீத‌ம் ஒலித்தான்; அது முடிந்த‌தும் ஒரு ச‌ந்தோச‌ கீத‌ம் மீட்டினான். அப்போது...... திடீரென ஒரு புயல் போல பெருங்காற்று. கப்பலையே கவிழ்த்துவிடும்போல சாய்ந்தாடியது.
பயணிகள் அலறியடித்துக்கொண்டு இங்குமங்கும் ஓடினார்கள். நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்தால் நம் கதி என்ன ஆகுமோ என்று சிலர் பயத்தில் கடவுளைக் கும்பிடத் துவங்கினர். அப்போது கப்பல் தலைவன்,"கடலுக்கெல்லாம் அரசன் வாழும் இடம் இதுவாகத்தான் இருக்கவேண்டும்,"என்று கத்தினார். இதைத்தானே சட்கோ எதிர்பார்த்தான். உடனே எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் கூஸ்லியை மட்டும் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கப்பலின் மேல் தள கைப்பிடியைப் பிடித்து ஏறினான். கப்பல் தலைவன்,"ஏய்,யாராவது அந்த ஆளைப் பிடிச்சு நிறுத்துங்கப்பா,"என்று கத்தினார். ஆனால், அதற்குள் சட்கோ சட்டென்று கடலை நோக்கிக் குதித்துவிட்டான். கடலின் ஆழத்துக்குப் போய்க்கொண்டே இருந்தான். ஒருவழியாக கடலின் அடி ஆழம் சென்றபோது அவன் நின்ற இடம் வெள்ளை நிற பிரம்மாண்ட அரண்மனை! பவளத்தால் ஆன கதவைத் தள்ளித் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தான் சட்கோ.
அங்கே அரண்மனையின் பிரம்மாண்டமான கதவுகள் தென்பட்டது. அதன் அருகில் சென்ற‌தும் கதவுகள் தானாகத் திறந்து வழிவிட்டது. சட்கோ நடந்து போகப்போக ஒவ்வொரு கதவாகத் திறந்து கொண்டே போனது. ஒரு பிரம்மாண்டமான‌ அறையைக் கடந்த சட்கோ நின்றான். அவனது வலது பக்கத்தில் இருந்த பெரிய கலையரங்க நுழை வாயில்தெரிந்தது.
வெளிப்புறமும் உட்புறமும் கடற் பாசிகளாலும் செடிகொடிகளாலும் வரவேற்புத் தோரணங்கள்கட்டப்பட்டிருந்தது. கடற்செடிகளின் வண்ணவண்ண மயமான பூக்கள் விழா மேடையை அலங்கரித்திருக்க‌ பார்க்கவே சட்கோவிற்கு ஆனந்தமாக இருந்தது. அங்கிருந்து சட்கோ சற்றுத் தூரத்தில் கலையரங்கம் ஒன்றின் நுழை வாயில் தென்படவே அதை நோக்கி நடந்தான். கலையரங்கம் முழுக்க அரச விருந்தினர்கள், பார்வையாளர்கள் என்று நிரம்பி வழிந்து இருந்தன. கடல் என்றால் மீன்கள் இல்லாமலா? கலையரங்க நுழைவாயிலில் இருந்து மேடை வரை கடற்கன்னிகள் இருபுறமும் வரிசைவரிசையாக நின்று மலர் தூவி சட்கோவை வரவேற்றனர்.
கடற்குதிரைகள்,கடற்பசுக்கள்,திமிங்கிலங்கள்,சுறா மீன்கள், நட்சத்திரமீன்கள், நண்டுகள்,ஆமைகள், லாப்ஸ்டர்கள், ஈல் மீன்கள், தட்டையான‌ பெரிய திருக்கை மீன்கள், அயிரை மீன் போன்ற பொடிப்பொடியான மீன்கள் கூட்டம் என்று அந்த அரங்கம்நிறைந்து காணப்பட்டது. கடல் அரசனும் அரசியும் கடற்கிளிஞ்சல் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தனர். அருகில் அரசனின் மகள்கள் அமர்ந்திருந்தனர். அந்த இடம் வரை இரு புற‌மும் கடற்கன்னிகள் நின்றுகொண்டு வண்ண வண்ணக் கடற்பாசிப்பூக்கள் தூவி "சட்கோ"வை வரவேற்றனர். "மிகச் சரியான நேரத்திற்கு வந்திருக்கிறீர், இசைக்கலைஞரே! உம் வரவு எமக்கெல்லாம் மிகுந்த‌ மகிழ்வை அளிக்கிறது. வருக!வருக!! தருக! தருக!! நல்லிசை தருக,"என்றார் கடல் அரசர். அமைச்சர் ஒருவர் சட்கோவை அழைத்துச் சென்று அரசரின் அரியணைக்கு அருகில் அமரவைத்தார். "ம்ம்ம்..நடக்கட்டும்..நாட்டியம் முதலில்! நம் விருந்தினரைக் கெளரவிப்போம்,"என்றார் அரசர். அற்புதமான நட்டியம். ஆடியது கடற்குதிரை மற்றும் கடல் தேள் குழுவினர். சட்கோ எழுந்து ஒரு சந்தோச இசையை வாசித்தான். அந்த இசை மழையில் நனைந்த கடல் மீன்கள் இசைக்கு ஏற்றபடி ஆடத்துவங்கியது. டால்பின்களும் திமிங்கிலங்களும் அந்த அரங்கை அதிரவைக்கும் வகையில் ஆடின. திடீரென்று அரசர் எழுந்து,"இந்த இசை எனக்குப் பிடித்திருக்கிறது. இந்த இசைக்கு நான் ஆடியே ஆக வேண்டும்," என்று சொல்லி எழுந்து ஆடத் துவங்கிவிட்டார். அரசர் ஆடத் துவங்கியதும் நதி மங்கையர்களும் ஆட ஆட்டம் களை கட்டியது. அரசரோ,"ம்...இந்த இசையைஇன்னும் வேகமாக வாசியுங்கள் சட்கோ...இன்னும் வேகமாக....,"என்று மிகப் பயங்கரமான வேகத்தில் சுழன்று சுழன்று ஆட ஆரம்பித்துவிட்டார். ஒரு கட்டத்தில் சட்கோவை உடனே வாசிப்பதை நிறுத்தும்படி அரசி உத்தரவிட்டாள். அரசர் ஆடும் ருத்ர தாண்டவத்தால் கடலின் மேற்பரப்பில் கப்பல்கள் எல்லாம் கவிழ்ந்து போகும் அபாயம் உள்ளது. படகுகள் எல்லாம் பொம்மைகள் போல ஆடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலை நீடிக்கக்கூடாது என்றார். உடனே சட்கோ நிலைமையைப் புரிந்துகொண்டு கூஸ்லியின் ஒரு இழையைப் பலமாக இழுத்தான். அது அறுந்துவிட்டது. "மேன்மைதாங்கிய அரசரே தங்கள் வேகத்திற்கு ஈடுகொடுக்கமுடியாமல் நரம்பு அறுந்துவிட்டது,"என்று சொன்னான் சட்கோ. "வெட்கம்...வெட்கம்...சட்கோ, இன்று நாள் முழுவதும் நான் உன் இசைக்கு ஆடுவேன். இப்படி உன் இசைக்கருவி கெடுத்துவிட்டதே. இழை அறுந்துபோனால் நீங்கள் என்ன செய்ய முடியும்? நீங்கள் ஒரு அற்புதமான‌ இசைக்கலைஞர். உங்களை நான் இழக்க விரும்பவில்லை. என் மகள்களில் ஒருத்தியை உங்களுக்குத் திருமணம் செய்து வைத்து இங்கேயே வைத்துக்கொள்ள ஆசைப்படுகிறேன்,"என்றார் அரசர். "மாட்சிமை பொருந்திய அரசே! இந்தச் சமுத்திரத்தில் உங்கள் வார்த்தைகள்தான் சட்டம்;ஆனால் இது என்னுடைய வீடு அல்லவே. நான் விரும்புவது என் நவ்காரட் நகரமல்லவா,"என்று மிகப்பணிவாகச் சொன்னான் சட்கோ. "சொல்லாதீர்கள்,இன்னொரு முறை எனக்கு கோபம் வரும். என்னருமை மக்களே இப்படி வந்து நில்லுங்கள்,"என்று அரசர் உத்திரவிட வரிசையாக வந்து நின்றார்கள் இளவரசிகள். சட்கோ பார்த்தான். ஒவ்வொருவரும் அழகாக இருந்தனர். ஒருவரை விட இன்னொருவர் அழகாக இருந்தனர். "என்ன இசைஞானியாரே தேர்வு செய்வதில் சிக்கலா? அப்படியானால் உங்களுக்குப் பொருத்தமான இளவரசியை நானே காட்டுகிறேன். வால்கா.."என்று அழைக்கவும் செய்தார் அரசர். வால்கா அரசரின் அருகே மகிழ்ச்சியோடு வந்து நின்றாள். வால்காவின் பச்சை நிறக் கண்கள் பளபளப்பாக இருந்தது. அவள் முகத்தில் சிரிப்பு.
"நீங்கள் என் கரையோரம் உட்கார்ந்து நீங்கள் இசைத்த இசைக்கு முதல் ரசிகை நான். உங்களையே திருமணம் செய்து வாழப்போகிறோம் என்பதே சந்தோசமாக இருக்கிறது,"என்றாள் வால்கா. "வால்கா...உன் நதியைப் போலவே நீயும் அழகு!,"என்று சட்கோ சொன்னான். அந்த நேரத்தில் கடல் அரசி அவன் காதில் ஒரு இரகசியம் சொன்னாள். "நீங்கள் மிக நல்லவர் சட்கோ. நீங்கள் உங்கள் நகரத்துக்கு திரும்பிப் போக வேண்டும் என்றால் என் மகள் வால்காவைத் தொடாதீர்கள். தொட்டால் என்றைக்கும் நீங்கள் உங்கள் நவ்காரட் நகரத்தைப் பார்க்கவே முடியாது. இதை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்,"என்றார். அன்று இரவு சட்கோ மெத்தையில் படுத்து இருந்தான். வால்கா அழகானவள்; அவளோடு நான் ஏன் வாழக்கூடாது? அப்புறம் என் நகரம்..அந்த வாழ்க்கை அவ்வளவுதானா? அரசி சொன்னதையும் யோசித்துக்கொண்டே இருந்தான். இளவரசி வால்கா,"ஏன், என்னைத் தொடாமல் இருக்கிறீர்கள்?" என்று கேட்டாள். எங்கள் நவ்காரட் நகர பழக்கம்; திருமணம் ஆன முதல் நாள் மனைவியைத் தொடமாட்டார்கள்,"என்றான் சட்கோ. "முதல் நாள் தானே! நாளைக்குத் தொடுவீர்கள், இல்லையா?"என்றாள் வால்கா. "ஆமாம், நாளை தொடுவேன்,"என்றான் சட்கோ! காலையில் சட்கோ கண்விழித்தான். சூரியக் கதிர்கள் அவன் முகத்தில் பிரகாசமாகப் பட்டது. அவன் அருகில் வால்கா இல்லை! நான் எங்கிருக்கிறேன்? அவன் வால்கா நதிக்கரையோரம் இருந்தான். அவனுக்குப் பின்னால் நவ்காரட் நகரத்தின் பெருஞ் சுவர் இருந்தது. "ஆ! என் சொந்த நகரத்துக்கு வந்துவிட்டேன்,"என்று வாய்விட்டுச் சொன்னான், சட்கோ. அவன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. ஆனால் அவன் கண்கள் இரண்டு செய்திகள் சொல்லுவது போலிருந்தது.
சொந்த நகரத்துக்கு திரும்பிய சந்தோசம் கண்களில் மின்னியது. அதே நேரத்தில் இளவரசி வால்காவை இழந்துவிட்டோமே என்ற ஏக்கமும் தெரிந்தது. ஒருவேளை சட்கோவின் கண்ணீரிலும் இந்த இரண்டும் வெளிப்பட்டிருக்குமோ! அந்த வருடம் சட்கோவுக்கு அதிர்ஷ்டமான வருடம் என்றே சொல்லவேண்டும். அவன் வீட்டில் விட்டுச் சென்ற தங்க மீன் விற்ற பணத்தை வைத்து ஒரு கப்பல் வாங்கினான்.
அதில் நவ்காரட்டின் சந்தைச் சதுக்கத்தில் இருந்து விலை மதிப்புள்ள பொருட்களை நிரப்பினான். தூர நாடுகளுக்கு கப்பலில் போய் வணிகம் செய்தான். அந்த வருடத்திலேயே நவ்காரட்டின் மிக முக்கியமான பிரபுக்களில் ஒருவனாகிவிட்டான்.
அந்த நகரத்தின் பெரு வணிகனின் மகளை திருமணம் செய்தான். நகரத்தில் அடிக்கடி விருந்துகொடுப்பவர்களில் ஒருவன் ஆனான். அந்த விருந்தில் கூஸ்லியை சட்கோ வாசிக்க அவன் குழந்தைகள் நடனமாடுவதை இரசித்தான். இப்போது வயாதாகிவிட்டது சட்கோவிற்கு! இருந்தாலும் அகண்டு பரந்து ஓடும் வால்கா நதியோரம் நடந்துபோவான். நதிக்கரையில் வழக்கமாக உட்காரும் இடம் வந்ததும் உட்காருவான். கூஸ்லியை எடுத்து மடியில் இசைக்கத் துவங்கிவிடுவான். எப்போதும் போல நதி அலைகள் கரை மணல்களைக் கடத்தும் வேலையைச் செய்து கொண்டிருக்கும். நிலா அனுப்பிய‌ ஒளியில் வால்கா ந‌திக்கு கூடுதலான‌ அழகாகத் தெரியும். எட்டாத‌ வ‌ட்ட‌ நிலா அலைக‌ளில் ப‌ட்டுத் த‌ட்டுத் த‌டுமாறி மித‌ப்ப‌தையும் தவறாமல் இரசிப்பான். சில நேரங்களில் இவன் இசை கேட்டு தண்ணீருக்கு மேல் வந்து மிதப்பது இளவரசி வால்காவின் தலையாகவும் இருக்கலாம்;இல்லை அந்த எட்டாத அழகு வட்ட நிலாவாகக்கூட இருக்கலாம்!
முன்னொருகாலத்தில் ஏழை விறகுவெட்டி ஒருவன் இருந்தான். காலையில் காட்டுக்கு விறகு வெட்டப்போவான்.மாலையில் வெட்டிய விறகை விற்க பக்கத்து நகரத்துக்குப் போவான். விறகை விற்றுக் கிடைக்கும் பணத்தில்வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கிச் செல்வான்.
அவன் மனைவியோ "ருசியா" சமைச்சுச் சாப்பிட வாங்கிவருவதில்லை என்று சண்டை போடுவாள்.விறகுவிற்ற காசுக்கு இவ்வளவுதான் வாங்க முடிந்தது என்பான். சுள்ளி விறகா வெட்டி வித்தா இதுதான்கிடைக்கும். அடுத்த வீட்டு வீரன் பாருங்க எவ்வளவு சம்பாதிச்சுட்டு வருகிறார். நீங்களும் இருக்கீங்களேஎன்று திட்டுவாள்.
"வீரன் நாலுபேரை ஏமாத்திச் சம்பாதிக்கிறான். இன்னைக்கு நல்லா இருக்கலாம். ஒருநாள் இல்லாட்டிஒருநாள் வீரன் ஜெயிலுக்குத்தான் போகணும்.
நமக்கு வயிறார சாப்பாடு கிடைக்குது. அத வச்சு சந்தோசமா இருக்கக் கத்துக்க என்பான்," விறகு வெட்டி.
"பசியாரச் சாப்பிட்டால் போதுமா? நாம நாலு காசு சம்பாதிச்சு வசதியா வாழ வேண்டாமா? காட்டுல பெரியமரமாப் பாத்து வெட்டி வித்தா நமக்கும் நாலு காசு சேரும்," என்பாள்.
"எதோ, சுள்ளிவிறகு வெட்டி தினமும் வயித்தைக் கழுவுறதே அந்தப் பெரிய மரங்களால் தான்! உன் பேச்சைக்கேட்டு பெரிய மரமா வெட்டி வித்தா கொஞ்ச நாளைக்கு நாம நல்லா இருக்கலாம்.
அப்புறமா, பெரியமரங்களும் இருக்காது; சுள்ளி வெறகுக்கும் வழி இருக்காது. நாம பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான்," என்பான்விறகுவெட்டி.
இதைக் கேட்டதும், " நாம உருப்புடாம இருக்கிறதுக்குக் காரணமே இதுதான் என்று அழத் தொடங்கிவிடுவாள்.விறகுவெட்டி மனைவியைச் சமாதானப்படுத்துவான்.
"சரிசரி...இனிமே பெரிய மரமா பாத்து வெட்டுறேன்,என்று சொல்வான். அப்புறம் வழக்கம்போல் சுள்ளிவிறகு வெட்டிப் போய் விற்று வருவான். மனைவி சண்டைபோடுவதும் இவன் சமாதானப்படுத்துவதும் வாடிக்கையாக நடப்பதுதான்.
அன்று விறகுவெட்டி நீண்ட நேரம் காட்டில் அலைந்து திரிந்தும் போதுமான விறகு கிடைக்கவில்லை. மிகவும்களைத்துப் போய் வீடு திரும்பலாம் என நினைத்தான்.
அப்போது ஒரு பெரிய மரம் ஒன்றைப் பார்த்தான். சரி. இன்றாவது மனைவி சொன்னமாதிரி இந்த மரத்தை வெட்டி விற்போம். மீன், அது இதுன்னு வாங்கீட்டுப்போவோம் என்று நினைத்துக் கொண்டான்.
மரத்தை வெட்ட வேண்டாம்; அதன் கிளைகளை வெட்டினால் போதும் என்று மரத்தில் ஏறி ஒரு கிளையை வெட்ட‌ கோடாலியை ஓங்கினான்.
" வெட்டாதே! " என்ற சப்தம் கேட்டது. விறகுவெட்டி சுற்றும் முற்றும் பார்த்தான். ஒருவரும் இல்லை. மீண்டும்வெட்ட கோடாலியை ஓங்கினான். மீண்டும், "வெட்டாதே ! நில்! என்று சத்தம் வந்தது.
விறகுவெட்டிக்கு ஒன்றும் புரியவில்லை. அப்போது, " நான் தான் மரம் பேசுகிறேன். என்னை நீ வெட்டாமல்விட்டுவிடு, நான் உனக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்கிறேன்," என்றது மரம்.
மரம் பேசியதைக் கேட்டு ஆச்சரியமடைந்தான், விறகுவெட்டி. சரி, இன்று பட்டினி தான் என்று சோர்ந்தும் போனான்.
"கவலைப்படாதே! உனக்கு என்ன வேண்டுமோ கேள். நான் தருகிறேன்..... ,"மீண்டும் மரம் பேசியது.
எனக்கு ஒன்றும் வேண்டாம். என் மனைவிக்குத்தான் வசதியா வாழணும்னு ஆசை! எனக்கு எதுவும் வேண்டாம்.என் மனைவி நச்சரிப்பு இல்லாம இருந்தா அதுவே போதும், என்றான் விறகு வெட்டி.
உன் நல்ல மனசு எனக்கு ரெம்பப் பிடிச்சிருக்கு. நீ விரும்பியது போல எல்லாம் நடக்கும். நீ, வீட்டுக்குப் போய்பார்! என்றது மரம்.
விறகு வெட்டி வீட்டிற்குப் போனான். அவன் வீடு இருந்த இடத்தில் பெரிய பங்களா இருந்தது. வீட்டுக்குவெளியே தயங்கி நின்றான். அப்போது அவன் மனைவி கழுத்து நிறைய நகைகளுடன், பட்டுச் சேலை உடுத்தி வெளியே வந்தாள்.
மரத்தின் மகிமையை எண்ணி வியந்து வீட்டுக்குள் நுழைந்தான். வீட்டுக்குள் நுழைந்ததும்அவனும் பட்டு வேட்டி, மோதிரம் என்று விறகு வெட்டி பணக்காரனாக மாறிப் போனான்.
நடந்ததை மனைவியிடம்சொன்னான். நல்லவேளை, இதையாவது புத்திசாலித்தனமா கேட்டீங்களே என்று மனைவி சொல்லிச்சந்தோசப் பட்டாள்.
கொஞ்ச நாள் ஆனது. விறகுவெட்டியின் மனைவிக்கு இந்த வாழ்க்கையும் சலித்துப்போனது.
இந்த ஊர்ல நம்மைப்போல் பணக்காரர்கள் இருக்கிறார்கள். எல்லாப் பணக்காரர்களும் மதிக்கிற மாதிரி இந்த ஊர் ஜமீன்தாரா ஆகணும்.அப்பத்தான் நம்மை எல்லாரும் மதிப்பாங்க. நீங்க அந்த மரத்திடம் போய் சொல்லி ஜமீன்தாரா ஆக்கச் சொல்லுங்க,என்றாள்.
விறகுவெட்டி மறுத்தான். ஆனால் மனைவியின் பிடிவாதம் வேறுவழியில்லாமல் மரத்திடம் போனான்.
மரம் முன்பாக விறகுவெட்டி போனதுமே, என்ன ஜமீன்தாராகணுமா? என்று கேட்டது.
அது என் மனைவியோட ஆசை, என்றான்.சரி. வீட்டிற்கு போ, என்றது மரம்.
விறகுவெட்டி வீட்டிற்கு திரும்பினான். அந்த நாட்டு ராஜா, இவனை ஜமீன்தாராக்கிய செய்தி காத்திருந்தது.
கொஞ்ச நாள் சென்ற பின் ஜமீன்தார் வாழ்க்கையிலும் சலிப்புத் தட்டிப் போக இந்த நாட்டுக்கே ராஜா ஆக்கிட மரத்திடம் இன்றே போய்க் கேளுங்கள் என்றாள் அவன் மனைவி.
அவனும், "வேண்டாம், இந்த வாழ்க்கையில்என்ன குறை கண்டாய்?" என்று சொல்லிப் பார்த்தான். அவளின் பிடிவாதம், மீண்டும் மரத்தின் முன் வந்து நின்றான்.
"ராஜாவாக்கிப் பார்க்க ஆசை வந்துவிட்டதா? உன் மனைவிக்கு," என்று கேட்டது மரம்.
உன் மனைவியின் ஆசைப்படியே நீ ராஜா ஆவாய்! ஆனால் ஒரு நிபந்தனை.
உன் மனைவிக்கு இந்த ராஜா வாழ்க்கையிலும் சலிப்புத் தட்டி என்றைக்காவதுவிறகு வெட்டி வாழ்க்கையே மேல் என்று எப்போது எண்ணினாலும் நீ மறுபடியும் விறகு வெட்டியாகிவிடுவாய் என்று சொல்லிஅனுப்பியது மரம்.
வீட்டுக்கு வந்தான். அரண்மனையின் பட்டத்து யானை மாலையுடன் வீட்டு முன் நின்றது.
விறகுவெட்டி இப்போது அந்த நாட்டு ராஜா!
ராஜாவாகப் பொறுப்பு ஏற்றதும் ராஜாங்க அலுவல் அதிகமாக இருந்தது. அதனால் விறகுவெட்டி ராஜா தனது மனைவியிடம்பேசக்கூட நேரம் இல்லாமல் போனது. பகலில் அமைச்சர்கள், அதிகாரிகள் என்று எந் நேரமும் ஓய்வின்றி இருந்தான்.
இரவில் நகர்வலம், ஒற்றர்களுடன், படைத்தலைவர்களுடன் ஆலோசனை; இப்படியாக ராஜா இரவு எந்த நேரத்தில் வந்து படுப்பார் என்றே தெரியாது.
காலையில் மனைவி எழுந்திருக்கும் முன்பு நீராடி கோட்டை கொத்தளங்களைப் பார்வையிடப் போய்விடுவார், ராஜா.
இதனால் கொஞ்ச நாளில் ராஜ வாழ்க்கையும் விறகுவெட்டியின் மனைவிக்கு வெறுத்துப் போக பேசாமல்"விறகுவெட்டி குடும்ப வாழ்க்கையே மேல்" என்று வாய்விட்டே சொன்னாள்!
அன்று எதிரி நாட்டு மன்னன் படைஎடுத்து வந்துதேசத்தைக் கைப்பற்றினான். விறகுவெட்டி தலை தப்பினால் போதும் என்று மனைவியை அழைத்துக் கொண்டு தான் முன்புவசித்த ஊருக்கே ஓடி வந்துவிட்டான்.
இப்போது, விறகுவெட்டி காட்டுக்குப் போய் முன்பு போல் விறகு வெட்டி சந்தோசமாக வாழ்க்கை நடத்தினான். அவன்மனைவியும் பேராசையை விட்டுவிட்டு கிடைப்பதை வைத்து சந்தோஷமாக வாழ்க்கை நடத்தப் பழகிக் கொண்டாள்.
நீதி:- தம்பி, தங்கைகளே! நமக்குக் கிடைத்ததை வைத்து சந்தோஷமாக இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். உங்களிடம் இருக்கும் வசதி வாய்ப்பை விட கூடுதல் வசதி வாய்ப்பு உள்ளவர்களைப் பார்த்து நமக்கு அவர்களைப் போல இல்லையே என்று ஏங்கக் கூடாது!

மரியாளும் சூசையும் நீண்ட பயணத்தின் பின் பெத்லகேமுக்குள் நுழையும்போதே மிகவும் சோர்வுற்றிருந்தனர். பயணத்தில் ஆடைகள் அழுக்காகி கசங்கியிருந்தன. மரியாள் நிறைமாதக் கர்பிணியானதால் மிகவும் சோர்வுற்று தான் பயணித்து வந்த கழுதையின் மீதே படுத்திர்ந்தாள். பெத்லகேமில் பல்வேறு ஊர்களிலிருந்தும் யூதேயாவுக்கு வரி கட்ட வந்தவர்களின் கூட்டம் அலைமோதிக்கொண்டிருந்தது.
இருவரும் ஒவ்வொரு விடுதியாக ஏறி இறங்கிக்கொண்டிருந்தனர். எங்கேயும் தங்க இடம் கிடைக்கவில்லை. கடைசியாக ஊரின் ஒதுக்குப்புறமிருந்த விடுதி ஒன்றிற்கு வந்து சேர்ந்தனர். சூசைக்கு அந்த விடுதியில் அறைகள் காலியாக இருந்ததைப் போலத் தோன்றியது. கடுகடுப்பான முகத்துடன் விடுதிக் காப்பாளன் வந்து ‘என்ன வேண்டும்’ எனக் கேட்டான். அவன் பெயர் திமோத்தி. சூசை மரியாளின் நிலையை எடுத்துச் சொல்லி ‘இன்றிரவே இவளுக்கு குழந்தை பிறக்கும் போலத் தோன்றுகிறது. இங்கே தங்க இடம் கிடைக்குமா?’ என்றார். அவன் கழுதைமேல் படுத்திருந்த பெண்ணை ஏற இறங்க பார்த்தான். இவர்களிடம் காசும் பணமும் ஏதும் இருக்காது என்பதைப் புரிந்து கொண்டான். இன்னும் மாலையானால் ஊருக்குள் இடம்கிடைக்காதவர்கள் இங்கே வரக்கூடும் என்பதுவும் அவனுக்குத் தெரியும். ‘விடுதியில் இடமில்லை.’ என்று பொய் சொன்னான். அவன் மனைவி இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அவள் இரக்கப்பட்டு இவர்களுக்கு விடுதியில் இடம் கொடுக்கச் சொல்வாள் என்று நினைத்தான். ‘நீங்கள் போய் ஏதேனும் மாட்டுத் தொழுவத்தில் இருக்கலாமே. கொஞ்சம் தள்ளிப் போனால் என் மாட்டுத் தொழுவமே உள்ளது’ என்று வழிகாட்டினான்.
சூசை வேறு செய்வதறியாது மரியாளை அழைத்துக்கொண்டு மாட்டுத் தொழுவத்திற்குச் சென்றார். அன்றிரவு திமோத்தியின் விடுதி நிறைந்து வழிந்தது. மீதமானவர்களை தன் வீட்டிலேயும் தங்க வைத்து பணம் சம்பாதித்தான். வியாபார பரபரப்பில் அவன் தன் தொழுவத்தில் தங்கியிருந்தவர்களை நினைக்கவேயில்லை.
ஐந்து நாட்கள் கழிந்து கூட்டம் கொஞ்சமாய் குறைந்திருந்தது. மாலையில் தன் தொழுவத்துக்குச் சென்றான் திமோத்தி. அங்கே ஒரு குழந்தை படுத்திருக்கும் அளவுக்கு படுக்கை ஒன்று செய்யப்பட்டிருந்தது. பலகைகளையும் மரத் துண்டுகளையும் கொண்டு அந்த படுக்கையின் அடிப்பகுதி உருவாக்கப்பட்டிருந்தது அதன் மேல் வைக்கோல் போடப்பட்டிருந்தது. அந்தப் படுக்கையின் நேர்த்தியை அவன் வியந்துகொண்டிருக்கையில் ஆடு மேய்ப்பர்களின் கூட்டம் ஒன்று தொழுவத்திற்கு வந்தது.
‘என்ன வேண்டும் உங்களுக்கு?’ என்றான் திமோத்தி. ‘இங்கே ஒரு குழந்தை பிறந்திருந்ததே.’ என்றான் மேய்ப்பர் கூட்டத்தின் தலைவன். ‘இருக்கலாம். அது உங்களுக்கெப்படித் தெரியும்?’ என்று கேட்டான். மேய்ப்பர் தலைவன் சற்று தயக்கத்துடன் ‘ஐயா. அது ஒரு தெய்வீகக் குழந்தை. அது பிறந்த விஷயத்தை தேவ தூதர் எங்களுக்குச் சொன்னார். நாங்கள் ஏற்கனவே வந்து அவரைத் தொழுதுவிட்டுச் சென்றோம்.’ என்றார்.
திமோத்தி சிரித்தான்.’தெய்வக் குழந்தையா? மாட்டுத் தொழுவத்திலா? என்னையா உளறுகிறீர்கள். நீங்கள் கனவேதும் கண்டீர்களா? தெய்வமாவது தொழுவத்தில் பிறப்பதாவது? எங்கேயாவது இடையர்களுக்கு தேவ தூதன் தோன்றுவதுண்டா? இங்கே குழந்தை பிறந்தது உண்மைதான் ஆனால் அது ஒரு சாதாரணக் குழந்தைதான். அவர்கள் நேற்றே இங்கிருந்து கிளம்பியிருக்க வேண்டும்.’ என்றான்.
மேய்ப்பர்கள் வந்த வழியே திரும்ப திமோத்தியின் மனதில் சந்தேகம் எழுந்தது. ஒரு வேளை இவர்கள் சொல்வது சரிதானோ? ஏதோ மூன்று ராஜாக்கள் வந்தனர் என்று ஊரில் பேசிக் கொண்டது உண்மையோ என்று எண்ணினான். நம் தொழுவத்தில் இந்த மாட்டுக் குடிசையில் பிறந்த குழந்தை தெய்வக் குழந்தையா? நிச்சயம் இருக்காது. தங்குவதற்க்குக்கூட இடமில்லாமல், பணமில்லாமல் பிறந்த ஏழைக் குழந்தை தெய்வக் குழந்தையா. என்று மறு எண்ணம் தோன்றியது. தெய்வக் குழந்தையானால் தங்கிப் போனதுக்கு காசு தந்துவிட்டுச் சென்றிருக்கலாமே என்று நினத்து சிரித்தான் திமோத்தி.
அவன் திரும்பி நடக்க நினைக்கையில் மீண்டும் அந்த படுக்கையை பார்த்தான். அது இப்போது மினுங்கிக்கொண்டிருந்தது. அருகே சென்றான். படுக்கையிலிருந்த வைக்கோல் புல் ஒன்றை கையில் எடுத்தான். அது தங்கப் புல்லாகியிருந்தது. படுக்கையில் இருந்த அத்தனை புற்களும் தங்கமாகி மின்னிக் கொண்டிருந்தன. அவன் மனது மகிழ்ச்சியில் துள்ளியது. ஒரு கணம் திணறிவிட்டான். ஒன்று விடாமல் எல்லா தங்கப் புற்களையும் அள்ளிக்கொண்டான். கடவுளென்றால் இந்தத் தொழுவத்திலிருக்கும் எல்லா புற்களும் தங்கமாயிருக்க முடியுமே. என்று நினைத்தான் அப்படியே அவையெல்லாம் தங்கமாயின. இன்னும் மகிழ்ந்தான். கொண்டாடினான். சந்தோஷத்தில் துள்ளினான். இவன் துள்ளலைக் கண்டு ஆடுகள் மிரண்டு கத்தின.
குதித்து ஓய்ந்த பொழுதில் அவன் மனம் வருந்தலானான். ஒரு தெய்வக் குழந்தைக்கு தன் வீட்டில் இடம் தராமல் விட்டுவிட்டோமே? இந்த ஆடும் மாடும் கழுதையும் கண்ட தெய்வீகக் காட்சியை தான் காண கொடுத்துவைக்கவில்லையே? தன்னைத் தேடி வந்த தெய்வத்தை திருப்பி அனுப்பிவிட்டோமே என்று அங்கலாய்த்தான். அதுமுதல் அந்தக் குழந்தையை தேடத் துவங்கினான். தன் கையிலிருந்த தங்கத்தை விற்றுத் தேடினான். பல இடங்களுக்கும் சுற்றித் திர்ந்து தேடினான்.
பல வருடங்கள் கழித்து அவன் கையிலிருந்த கடைசித் தங்கப் புல்லும் தீர்ந்துபோனது. கடவுள் தன் அருகாமையில் வந்திருந்தும் காணமுடியாமல் போனதை எண்ணி வருந்தி கண்ணீர் விட்டழுதான். ‘இனியும் தேட சக்தியில்லை. பயனுமில்லை. வீடுபோய் சேர்வோம்’ என்றெண்ணினான். கையிலிருந்த கடைசிக் காசை ஒரு குருட்டு பிச்சைக் காரனின் சட்டியிலிட்டான்.
அப்போது வானம் கறுத்து இடி இடித்து சூழல் மாறியது. காற்று சுழன்றடித்தது. மக்களெல்லாம் சிதறி ஓடிக்கொண்டிருந்தனர். தூரத்தில் மலை மீது மூன்று சிலுவைகள் நின்று கொண்டிருப்பதைக் கண்டான் திமோத்தி. மலை நோக்கி நடக்கலானான்.
"அந்தி மழை பொழிகிறது"
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது...."
சுகமான, மனதுக்கு இதமாக இருந்த பாடல் வரிகளைத்
திரும்பத் திரும்ப வின்சியின் உதடுகள் உச்சரித்துக்
கொண்டிருந்தது.
girl.jpg
தெருமுனை டீக்கடையில் எப்போதோ கேட்ட
அந்தப் பாடலில் அவளுக்கு மிகப் பிடித்த வரிகளாகிப்
போனது இந்த வரிகள் மட்டுமே. பாடலின் மற்ற
வரிகளில் வின்சிக்கு ஈர்ப்பு இல்லை.
இன்றைக்கு ஒரு கவிதை எழுத வேண்டும் என்று
மனதுக்குள் அசை போட்டுக்கொண்டாள்.
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது... என்ற
வரிகளோடு அவளுக்குள் கிளர்ந்தெழும் அந்த
உருவத்தோடு ஐக்கியப்பட்டுப் போவாள்.
அந்த உருவத்தோடு அப்படி என்ன ரகசியம் பேசுவாளோ
தெரியாது. அவள் சுய உணர்வுக்குத் திரும்பும் போது
இழந்த உற்சாகத்தை மீட்டெடுத்தது போன்ற வெளிச்சம்
முகமெங்கும் நம்பிக்கைக் கீற்றுகள்
முற்றுகையிட்டிருக்கும்.
அன்றும் அப்படித்தான் தெருமுனை டீக்கடையில்
அந்தப் பாடலைக் கேட்டதும் அவளின் ஐம்புலன்களில்
ஒன்றைத் தவிர மற்ற எல்லாம் இயங்குவதை நிறுத்திக்
கொண்டன.
அந்தப் பாடல் அவளுக்குள் ஏற்படுத்திய உற்சாகப் பீறிடல்
மழையில் நனைந்து தன்னை மறந்திருந்தபோதுதான் திடீரென
மயங்கிச் சரிந்தாள்.
அடாடா... யாரது? என்ற குரல்களைத் தொடர்ந்து விழுந்து
கிடந்த வின்சியைச் சுற்றி ஒரு கூட்டம் கூடி விட்டது.
"அடடே, நம்ம அமலோட மக, தள்ளுங்க, தள்ளுங்க..."
"அமல் வீட்டுக்கு யாராவது போய் தகவல் சொல்லுங்கப்பா..."
"ஏங்காணும், அமல் வீட்டுக்கு ஆள் அனுப்பி அவரு வந்து... நானே தூக்கிக் கொண்டு போறேங்கே..." என்று விசுவாசம் சொல்ல அந்த நேரம் அங்கே ஒரு ஜீப் வந்து நின்றது.
அந்த ஜீப் அந்தக் கிராமத்தில் இயங்கிவரும் "ரியல்" என்ற
சமூக சேவை நிறுவனத்துக்குச் சொந்தமானது. அந்தச் சமூக
சேவை நிறுவனம் சுத்துப் பட்டிக் கிராமங்களில் ஏழை எளியவர்களுக்காக நடத்தும் சுகாதார மையங்களைப்
பார்வையிட கனடா நாட்டிலிருந்து வந்திருந்த வெள்ளைக்கார
டாக்டர் ஜோவும் "ரியல்" நிர்வாக இயக்குனர் பீட்டரும் தான் ஜீப்பிலிருந்து இறங்கி கூட்டத்தை நோக்கி வந்தனர்.
அந்தக் கூட்டத்திலிருந்த ஊர் நாட்டாமை சுந்தரம் தான்
சொன்னார். "பீட்டர் ஸார், நல்ல நேரத்துல வந்தீங்க,
நம்ம அமலு மக கடைக்கு வந்தது திடீர்னு மயங்கி
விழுந்துருச்சு. ஒங்க கூட வந்துருக்குற வெள்ளைக்கார
டாக்டரைக் கொஞ்சம் பாக்கச் சொல்லுங்கன்னார்,
சற்றே பதற்றத்துடன்"
பீட்டர், டாக்டரிடம் விபரத்தைச் சொல்ல, அவரும்
நிலைமையைப் புரிந்துகொண்டு, ஜீப்பிலிருந்த தன்
"கிட்டை" எடுத்து வந்து வின்சியை அங்கேயே பரிசோதிக்க ஆரம்பித்தார்.
மயக்கம் தெளிய ஊசியும் போட்டார். சிறிது நேரத்தில் வின்சி
எழுந்து உட்கார்ந்து மலங்க மலங்க விழிக்கவும், வின்சியின்
அப்பாவும் அம்மாவும் கண்ணீரும் கம்பலையுமாக அங்கே
வந்து சேரச் சரியாக இருந்தது.
ரியல் சுகாதார மையத்துக்கு வின்சியைக் கொண்டு
சென்று மேலும் சில பரிசோதனைகளைச் செய்த டாக்டர்
ஜோ சொன்ன தகவல் வின்சியின் பெற்றோரை மிகுந்த
அதிர்ச்சிக்குள்ளாகியது. பெயர் தெரியாத ஒரு வியாதியைச்
சொல்லி உடனே டவுன்ல உள்ள ஆஸ்பத்திரியில கொண்டு போய்ச் சேர்க்கணும்ன்னு சொல்லீட்டார்.
வின்சியின் அப்பா, சாதாரண பஞ்சாயத்து குமாஸ்தா. அவரால்
டாக்டர் சொல்ற மாதிரி டவுன்ல உள்ளபெரிய மருத்துவமனையில் சேர்த்து கவனிக்க முடியாது.
வின்சியின் குடும்பச் சூழ்நிலையைக் கேள்விப்பட்ட அந்த வெள்ளைக்கார டாக்டரே மருத்துவச் செலவு முழுக்க நானே ஏற்றுக்கொள்கிறேன் என்று வின்சியை சென்னையிலுள்ள ஏழடுக்கு மாடி மருத்துவமனை ஒன்றில் சேர்த்துவிட்டார்.
வின்சி படுத்துக்கொண்டே அந்த அறையை நோட்டம் விடுகிறாள்.
நேர் எதிரேயுள்ள சுவற்றில் ஒரு சிலுவை. பக்கம் பக்கமாக இந்து, முஸ்லிம் மதச் சின்னங்கள். திறந்திருந்த ஜன்னலின் பாதி வரை மறைத்துப் போடப்பட்டிருந்த திரைச் சீலை.
திரைச் சீலையைத் தாண்டித் தெரியும் நீல வானம்; இதை வைத்து
ஒரு கவிதை புனைந்திட வேண்டுமே...என்று எண்ணியவளின்
பார்வை, தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் அம்மா லூசி தென்பட அவளின் கவிதா
ஆராய்ச்சியும் அறுந்து போகிறது.
" என்னம்மா, ஏதும் வேணுமா? என்ற அம்மாவின் கரிசனத்திற்கு
பதிலாக தலை அசைத்து ஒன்றும் வேண்டாம்மா, நாம எப்ப
வீட்டுக்குப் போவோம்? நான் நல்லாத் தான இருக்கேன்," என்று
வின்சி கேட்டபோது, " நல்லாத்தாம்மா இருக்க, டாக்டர்
போலாம்ன்னு சொன்னா அடுத்த நிமிசமே வீட்டுக்குப்
போயிறலாம்," என்று மகளுக்கு ஆறுதலாச் சொல்லி
வின்சியின் முன் நெற்றியில் படர்ந்திருந்த முடிக்கற்றைகளை
பக்குவமாக லூசி ஒதுக்கினாள்.
" அப்பா இன்னிக்கு வர்றதா சொன்னாங்கள்ல, வந்ததும் டாக்டர்கிட்ட கேக்கச் சொல்லுங்கம்மா. கிறிஸ்மஸ் வரப் போகுது, நாம ஆஸ்பத்திரியே கதின்னு இருந்தா எப்டிம்மா? என்று மீண்டும் வின்சி விடாப்பிடியாக் கேக்கவே, " சரி கேக்கச் சொல்றேம்மா " என்று லூசி சொன்னதில் திருப்திப் படாமல் வின்சி கண்களை மூடிக் கொண்டாள்.
தலைப் பக்கம் இருந்த மேஜையில் வைத்திருந்த பூங்கொத்திலிருந்த வாசம் வின்சியின் நாசியைத் தொட்டது. அந்த மகரந்த மலர்களின் நறுமணம், மருத்துவமனைக்கே உள்ள மருந்து நெடிக்குக் கூட கவசமிட்டிருக்க வேண்டும்.
நாட்கள் நகர்ந்து கொண்டே இருந்தது; நாளும் ஒரு பரிசோதனை, நாளும் தினுசுதினுசான சிறிதும் பெரிதுமான மாத்திரைகள், வண்ணங்களில் திரவ மருந்துகள், மாற்றி மாற்றி உடம்பைத் துளையிடும் ஊசிகள் என்று பொழுது மறைந்து பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. வின்சியின் அப்பாவும் வந்தார்.
வந்த அன்றே ஊருக்குப் போக வேண்டும் என்று வந்தவர் நாலைந்து நாளாக அவரும் ஊருக்குப் போகாமல் இங்கேயே இருக்கிறார். அம்மாவும் அப்பாவும் கூடிக்கூடிப் பேசுகிறார்கள். அப்படி என்ன பேசுகிறார்கள்? வின்சிக்கு விடை தெரியவில்லை. அப்படியே எண்ணிக் கொண்டு தூங்கியும் போனாள்.
திடீரென்று மருத்துவமனை பரபரப்பானது. மருத்துவர்களும் செவிலியர்களும் குறுக்கும்நெடுக்குமாக ஓடினர். என்ன ஏது என்று விசாரித்துவிட்டு வந்த அமல், லூசியிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
"எதோ, ஆக்சிடெண்ட்டாம். சின்னப்பையன் தலையில் பலத்த அடியாம். கொண்டாந்துருக்காங்க."
"அடப் பாவமே! ரெம்பச் சின்னப்பையனா?"
"நம்ம வின்சி வயசிருக்கும். ஒரே பையனாம்; அப்பா வேற
இல்லையாம். அந்தம்மா அழுதழுது மயங்கி விழுந்துட்டாங்க.
அது சரி..வின்சி தூங்கி ரெம்ப நேரமாச்சா?"
"ம்... அது அப்பாவை எங்க காணோம்? வீட்டுக்குப் போகணுமேன்னு படுத்தி எடுத்துட்டு இப்பத்தான் தூங்க ஆரம்பிச்சது."
"இனிமே நான் எங்கயும் போகல. தகவல் சொல்ல வேண்டிய
வங்களுக்கு எல்லாம் சொல்லீட்டேன். ஒலகத்துல யாருக்கும்
இந்த மாதிரி ஒரு சோதனை வரப்படாது.
" அமலின் கண்கள் கண்ணீரைச் சிந்த கைக்குட்டையை வாயில் வைத்து மூடிக்கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதார்.
லூசியும் அமலோடு சேர்ந்து அழத்துவங்க.... தற்செயலாய் உள்ளே
வந்த நர்ஸ்...."என்ன நீங்க அந்தப்பெண்ணை கொஞ்சம் நிம்மதியா தூங்க விடமாட்டீங்க போலிருக்கே" என்று சொல்ல
"சிஸ்ட்டர்... எப்படிங்க சிஸ்ட்டர்....?" என்று விம்மத் துவங்கியவரை நர்ஸ், தணிந்த குரலில் சமாதானப்படுத்தி அறைக்கு வெளியே இருந்த பெஞ்சில் கொண்டு வந்து உட்கார வைத்தார்.
மறுநாள் மாலை மருத்துவர் குழு ஒன்று வின்சியை சோதித்துப் பார்த்தது. பின்னர் வின்சியின் அப்பாவை தனியே அழைத்துப்
போய்," நீங்க வின்சியை வீட்டுக்கு கூட்டீட்டுப் போயிறலாம்.
ஸாரி....எங்களால முடிஞ்சதை எல்லாம் செஞ்சுட்டோம். இன்னும் எட்டுல இருந்து 12மணி நேரம் வரைதான் உயிர் தங்கும்..."
"டாக்டர்.... என்று அமல் பெருங்குரலெடுத்து அழ டாக்டர்,
" மனசைத் தைரியப்படுத்திக்கங்க...இப்பவே வீட்டுக்கு கொண்டு போனீங்கன்னா உங்க நெருங்கிய சொந்தபந்தம் பாக்கக் கொள்ள வசதியா இருக்கும். அதான் சொன்னேன். எல்லாம் முடியிற
வரை இங்க வச்சிருந்து என்ன பண்ணப் போறீங்க?" என்றார்.
"வெள்ளைக்கார டாக்டர் காப்பாத்தீரலாம்ன்னு தைரியம் சொன்னாருங்களே? இப்ப நீங்க ஒரேயடியா இப்டிச் சொல்றீங்க. கடைசிவரை இங்கயே வச்சுப்பார்க்கலாம் டாக்டர். வின்சிக்கு நாம சாகப்போறோம்கிற விசயம் கடைசிவரை தெரிய வேண்டாம்ன்னு நெனைக்கிறேன்.
ஊருக்கு கொண்டு போனா எப்படியாச்சும் நாலு பேர் வந்து பேச அழன்னு அவளுக்குத் தெரிஞ்சு போயிரும். அந்தப் பிஞ்சுக்கு கடைசிவரை தெரியக்கூடாதுன்னுதான்.....இங்கயே இருக்கட்டும்ன்னு சொல்றோம்....நாளை விடிஞ்சா கிறிஸ்மஸ்...நல்லதோ கெட்டதோ...அது இங்கயே நடக்கட்டும்...டாக்டர்...." கண்ணீர் வழிய அமல் கெஞ்சும் குரலில் சொன்னார்.
"எங்க கையை மீறுன விசயமாயிருச்சுங்களே! பில்லு செட்டில்மெண்ட் பத்திக் கவலைப்படாதீங்க. அந்த டாக்டர் பிளாங்க் செக் குடுத்திருக்கார். நீங்க உங்க சம்சாரத்துக்கிட்ட பேசீட்டு என்ன ஏதுன்னு சொல்லுங்க...சரியா..என்று சொல்லிவிட்டு டாக்டர் அங்கிருந்து நகர்ந்தார்.
வின்சிக்கு இரவுச் சாப்பாட்டைக் கொடுத்துக்கொண்டே
"நீங்க மத்தியானமே சாப்பிடல...எதாச்சும் சாப்பிட்டுட்டு வாங்களேன்..." லூசி அமலிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.
அப்போது உள்ளே நுழைந்த நர்ஸ்...சாப்பாடு ஆகுதா....ஒரு அஞ்சு நிமிசம் கழிச்சு இந்த மாத்திரையை வின்சிக்கு குடுத்துருங்க என்றார்.
"நான் நல்லாத்தானே இருக்கேன். எனக்கு மாத்திரையெல்லாம் வேண்டாம் சிஸ்ட்டர்"
"அப்டி எல்லாம் சொல்லக்கூடாது. இந்த மாத்திரையை சாப்பிட்டா நல்லா தூக்கம் வரும்."
"நான் குடுத்துர்றேன் சிஸ்டர்....அந்த ஆக்சிடெண்ட் பையன் எப்படி இருக்கான் சிஸ்டர்?"
"பாவம் கண் பார்வை போயிருச்சு.... யாராவது கண்தானம் செஞ்சாத்தான் அந்தப் பையனுக்கு இனி பார்வை....!?"
"அடப்பாவமே...!"
"வயாசாகி இப்டி ஏதாச்சும் ஆயிருந்தாப் பரவாயில்ல...அந்த எளம் குருத்துக்கு இப்டி ஒரு சோதனை! ம்ம்ம்...எல்லாம் விதிம்மா...விதி..." என்று நர்ஸ் சொல்லிக்கொண்டே போய்விட்டார்.
"அப்பா....எனக்கு அந்தப் பையனைப் பாக்கணும் போல இருக்கு. கூட்டீட்டுப் போறீங்களா?"
"டாக்டர்கிட்ட கேட்டுகிட்டுத்தான் கூட்டீட்டுப் போகணும்."
அதற்குள் அந்த வழியாக வந்த டாக்டர் ஒருவரை
டாக்டர் ஸார்....என்று வின்சி கூப்பிட அவரும்
"என்ன வின்சி என்றவாறே வந்தார். வின்சியின் அப்பா
விசயத்தைச் சொல்ல....."ஓ!...தாராளமா பாக்கலாம் வா... நானே அழைச்சுட்டுப்போறேன்" என்று கூட்டிப் போனார்.
தலையிலும் கண்களிலும் கட்டோடு படுத்திருந்த அந்தச் சிறுவனைப் பார்த்தாள் சிறிது நேரம் இமைக்காமல். சிறுவனின் தாயார் அழுத கண்ணும் சிந்திய மூக்குமாக இருந்தார்.
"அழாதீங்க...ஒங்க மகனுக்கு ஒன்னும் ஆகாது..." என்றாள்
வின்சி பெரிய மனுசி போல.
"எம்புள்ள இனிமே என்னைப் பாக்க முடியாதாமே? பச்சைப்புள்ள கண்ணை ஆண்டவன் அநியாயமா பறிச்சுக்கிட்டானேம்மா. அழாம என்ன செய்யிறதும்மா?"
"கவலைப்படாதீங்க எந்த ஆண்டவர் அநியாயமா கண்ணை எடுத்தாரோ அந்த ஆண்டவரே ஒங்க மகனுக்கு கண்ணைக் குடுப்பார்"
"எந்தங்கம்...என் இராசாத்தி...ஒன்னோட வாய் வார்த்தை அப்படியே பலிக்கட்டும்."
"ஒங்க மகன் பேர் என்ன?"
"எம்மவன் பேரு ஆறுமுவம்ம்மா..!"
"டாக்டர் அங்கிள்.....நீங்களே சொல்லுங்க ஆறுமுகத்துக்கு என்னோட கண் ரெண்டையும் நான் குடுக்கலாமில்ல...?"
"அது வந்து....நீ...." டாக்டர் குழப்பமாக வின்சியின் அப்பாவைப் பார்க்க... அதிர்ச்சியில் அவரோ திகைத்து நிற்க....
"சொல்லுங்க டாக்டர்....என்னோட கண்ணை நா குடுக்கலாமா? கூடாதா?
இல்லம்மா...உயிரோட இருக்கிறவங்க கண்ணை எடுத்து வைக்க முடியாது. இறந்தவங்ககிட்ட இருந்து கண்ண எடுக்க அனுமதி வாங்கி ஆறுமுகத்துக்கு பொருத்த முடியும்....அத..."
"அய்யோ...டாக்டர் அங்கிள் எறந்தவங்ககிட்ட போய் ஒங்க கண்னைக் குடுங்கன்னு கேப்பீங்களா? நானே, இன்னைக்கோ, நாளைக்கோ சாகப்போறேன். எங் கண்ணை ஆறுமுகத்துக்கு எடுத்து வச்சிருங்க. என்னோட "கிறிஸ்மஸ் பரிசா" ஆறுமுகத்துக்கு குடுத்ததாச் சொல்லுங்க..."
"வின்சி.... என்று அமல் கதறியதில் அந்த மருத்துவமனையே செவிடாகி இருக்க வேண்டும்.
"ஏம்ப்பா அழறீங்க? நாஞ் சாகப்போறதை எங்கிட்டச் சொன்னா நான் அழுவேன்னுதான நீங்க எங்கிட்ட சொல்லாம, நாந் தூங்கினப்புறமா அம்மாவும் நீங்களுமா அழுதீங்க இல்லையா? ஒவ்வொரு கிறிஸ்மசுக்கும் நான் ஒங்ககிட்ட பரிசு கேப்பேன்?
இந்தக் கிறிஸ்மசுக்கு நானே பரிசு கொடுக்கப்போறேன்.
நா, செத்தாலும் என்னோட கிறிஸ்மஸ் பரிசு உயிரோட இருந்து உங்களைப் பாக்குமே! என்னைப் பாக்கத் தோணும்போது நீங்க ஆறுமுகத்தைப் போய் பாத்துக்கங்க...சரியா? என்னம்மா..சரின்னு சொல்லுங்க.....பேசிக்கொண்டே இருந்தவள் மயங்கிச் சரிந்தாள்.
வின்சி கண்களைத் திறக்கவே இல்லை.
ஆறுமுகம் கண்களைத் திறக்கிறான் வின்சியின் கிறிஸ்மஸ்பரிசு ஒளி வீசுகிறது!
மாயப் பானை
++++++++++++++
ஸ்கேண்டி நேவியன் கதை
****************************************
மலை அடிவாரத்தில் அந்தச் சிறுவனின் வீடு இருந்தது. அவனுக்கு அப்பா இல்லை. அப்பா இருந்தபோது நிறைய சொத்து இருந்தது. இறந்தவுடன் அந்தச் சொத்தை எல்லாம் மலையின் உச்சியில் இருந்தவர் ஏமாற்றி எடுத்துக்கொண்டார். அவர்களிடமிருந்தது ஒரே ஒரு "பசு"மட்டும்தான். அம்மாவும் மகனும் சாப்பாட்டுக்கே சிரமப்பட்டனர்.
மக‌னை அழைத்துச் சொன்னார். இந்தப் பசுவை அருகிலுள்ள நகரத்தில் விற்று விட்டு வா, என்று அனுப்பினார். சிறுவன் மாட்டின் கழுத்தில் கயிறு கட்டினான். கயிற்றைப் பிடித்துக்கொண்டு நகரத்துக்கு கூட்டிப்போனான். வழியில்
ஒரு மனிதனை சிறுவன் சந்தித்தான். அந்த மனிதன் துணியால் மூடிய ஒரு பொருளை வைத்திருந்தான். அந்த மனிதன்
"எங்கேயப்பா போகிறாய் என்று கேட்டார்.
"இந்தப் பசுவை விற்பதற்காகப் போகிறேன்,"என்றான்.
"ஓ!அப்படியா, அப்ப பசுவை எனக்கு விற்கிறாயா?"என்று கேட்டார் அவர்.
"நீங்கள் எவ்வளவு தருவீர்கள்?"என்றான் இவன்.
"இந்த வெள்ளிப் பானையை உனக்குத் தருகிறேன்,"என்றார் அவர்.
"பசுவிற்குப் பதிலா பானையா? நான் தரமாட்டேன்,"என்றான் சிறுவன்.
அப்போது ஒரு மெல்லிய குரல் கேட்டது, சிறுவனுக்கு. "என்னை வாங்கிக்க, என்னை வாங்கிக்க,"என்று பானையில் இருந்து குரல் வந்தது. உடனே சிறுவனும் பசுவை அந்த மனிதரிடம் கொடுத்தான்.
பானையை வாங்கிக்கொண்டான். பசுவோடு போனவன் பானையோடு வீட்டுக்கு வந்தான்.
"பசுவை எவ்வளவுக்கு விற்றாய்?,"என்று கேட்டார் அம்மா.
"இதோ இந்தப் பானையை வாங்கி வந்தேன்,"என்றான்.
"உனக்கு மூளையே இல்லையா? யாராவது பானைக்காக பசுவை விற்பார்களா?
வெறும் பானையை வைத்து என்ன செய்வது? என்று சத்தம் போட்டார், அவன் அம்மா.
அந்தப்பானையை வாங்கி வெளியே வீசப்போனார். அப்போது என்னை
அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வையுங்கள், என்றது பானை.
பானை பேசியதைப் பார்த்த அம்மாவுக்கு ஒரே ஆச்சரியம். பானை
சொல்லியபடி அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றினார். அடுப்பை மூட்டி
எரிய விட்டார். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தது.
"இப்ப நான் போய் உங்களுக்கு சாப்பிடக் கொண்டு வருவேன்,"என்றது பானை.
பானை காற்றில் அப்படியே பறந்து மலை உச்சிப்பக்கம் போனது. மலை உச்சியில்உள்ள பணக்காரர் வீட்டு சமையல் அறைக்குப் போனது பானை. பணக்காரர் மனைவியோ பலகாரங்களைச் சுட்டு, வைக்க பாத்திரம் தேடிக்கொண்டிருந்தார். இந்தப் பாத்திரம் எங்கிருந்து வந்தது? என்று யோசித்தார் அந்தம்மா. பானை நல்லாத்தான் இருக்கு என்று செய்த பலகாரங்களை எல்லாம் அந்தப் பானைக்குள் வைத்தார். அதை நன்றாக‌
ஒரு மூடியை வைத்து மூடினார். பணக்காரக் கணவரைச் சாப்பிட அழைக்கப் போனார்.
பானை காற்றில் மிதந்து மலை அடிவாரத்தில் உள்ள சிறுவன் வீட்டுக்கு வந்துவிட்டது. அம்மாவும் மகனும் விதவிதமான பலகாரங்களை ருசித்துச் சாப்பிட்டனர்.
அடுத்த நாள் காலையில் பானை சொன்னது. என்னை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடுங்கள் என்று. அதேபோல சிறுவனின் அம்மா செய்தார்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் காற்றில் மிதந்தவாறு பானை வெளியே போனது.
மலை உச்சியில் பணக்காரரின் ஆட்கள் கோதுமை அறுவடை செய்துகொண்டிருந்தார்கள்.
கோதுமையை பிரித்து ஓரிடத்தில் குவியலாக வைத்திருந்தனர். அந்த இடத்திற்குப் போனது பானை. பானை பெரிய பானையாக தன்னை மாற்றிக்கொண்டது. அங்கு வேலை செய்து கொண்டிருந்தவர் அந்தப் பானையில் கோதுமையை எடுத்துக் கொட்டினார். மூட்டைக்
கணக்கில் கொட்டிக்கொண்டே இருந்தார். பானைக்குள் எட்டிப்பார்த்தால் இடம் இருந்துகொண்டே இருந்தது. அங்கிருந்த கோதுமை எல்லாம் இப்போது பானைக்குள்!
அந்த வேலையாள் அங்கிருந்து போனார். உடனே பானை காற்றில் மிதந்து சிறுவனின்வீட்டிற்கு வந்துவிட்டது. சிறுவனின் அம்மா, அந்தக் கோதுமையில் பலகாரங்கள்செய்தனர். ரொட்டி செய்தனர். பானையிலிருந்த கோதுமையை அங்கிருந்த தானியக் கிடங்கில் சேமித்தனர். அந்த வருடத்துக்குப் போதுமான கோதுமை அது.
மறு நாள் காலையில் பானை, தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கச் சொன்னது.
சிறுவனின் அம்மா அப்படியே செய்தார். தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும் பானைகாற்றில் மிதந்து வெளியே போனது.
பணக்காரர் கட்டுக்கட்டாக பணத்தை வைத்து எண்ணிக்கொண்டிருந்தார்.
பானை அங்கே போய் இருந்துகொண்டது. மற்றொரு அறைக்குப் போய் அங்கிருந்த பணத்தைஎல்லாம் எடுத்து வந்தார். இனி இந்தப் பணத்தை எல்லாம் ஒரே இடத்தில் வைக்க வேண்டும் என்று நினைத்தார். அப்போதுதான் அந்தப் பானையைப் பார்த்தார்,பணக்காரர்.
அடடே, இந்தப் பானையில் எல்லாப் பணத்தையும் வைக்க‌ வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டார். தன் முன் இருந்த பணத்தை எல்லாம் பானைக்குள் எடுத்து அடுக்கினார். பணத்தை வைக்க வைக்க இடம் இருந்துகொண்டே இருந்தது. அவரிடம் வேறு பணமே இல்லை; எல்லாப் பணத்தையும் வைத்துவிட்டார்.
பணக்காரர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே பானை காற்றில் மிதந்து
செல்ல ஆரம்பித்தது. ப‌ணக்காரர் பானையைத் துரத்திக்கொண்டே ஓடினார்.
பானை அவரை அங்குமிங்குமாக அலைக்கழித்தது. பணக்காரர் கண்ணிலிருந்து மறைந்து சிறுவன் வீட்டிற்கு பானை வந்தது.
"அம்மா, பசுவை யாராவது பானைக்கு விற்பார்களா? என்று கேட்டீர்கள்.
இப்போது பானைதான் நாம் இழந்ததை எல்லாம் மீட்டுக்கொடுத்துள்ளது,"
என்றான் மகன்.
தங்களுக்குச் சொந்தமான பணம் திரும்பக் கிடைத்ததில் அம்மாவும் மகனும் சந்தோசப்பட்டார்கள்.
மறு நாள் காலையில் பானை, தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கச் சொன்னது.
இனிமேல் எதற்கு? எங்களுக்குச் சேரவேண்டியது கிடைத்துவிட்டது. நீ, எங்கும் போக வேண்டாம். எங்களுடனேயே இருந்துவிடு என்று சிறுவனின் அம்மா சொன்னார்,பானையிடம்!
"இனி உங்களுக்கு நான் தேவைப்படமாட்டேன். உங்களை ஏமாற்றி மோசடி செய்தவருக்கு ஒரு பாடம் கற்பிக்கப் போகிறேன். எனவே நான் சொன்னபடி செய்யுங்கள் என்றது பானை.
சிறுவனின் அம்மாவும் அப்படியே செய்தார். தண்ணீர் கொதிக்கத் தொடங்கியதும் பானை காற்றில் மிதந்து வெளியே போனது.
பணக்காரர் கண்ணில் படும்படியாக பானை போனது.
"என் பணத்தைத் திருடிக்கொண்டு போன பானை இதுதான்...!"என்று
பணக்காரர் கத்தினார். பானையைப் பிடித்து கையை விட்டு பணத்தைத்
தேடினார். பணம் தட்டுப்படவில்லை. பணக்காரர் தன் தலையை உள்ளே
நுழைத்து பணம் இருக்கிறதா என்று பார்த்தார். பணம் எதுவும் இல்லை.
அவரால்,தலையை வெளியே எடுக்க முடியவில்லை.
பானை காற்றில் மிதந்து சென்றது. பணக்காரர் ஏதேதோ சொல்லிக்
கத்தினார். வெளியே எதுவும் கேட்கவில்லை. பானை காடு,மலை,கடல்
எல்லாம் தாண்டிப் போய்க்கொண்டே இருந்தது.
அந்தக் கிராமத்தில் 5 முட்டாள் சகோதரர்கள் இருந்தனர். புத்திசாலித்தனத்துக்கும் அவர்களுக்கும் வெகுதூரம். எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் அதை திறமையாகச் செய்யாமல் கோணங்கித்தனமாக எதையாவது செய்துவிடுவார்கள்.
ஒரு நாள் காலையில் ,"நம்ம ஊர் காட்டு ஆற்றில் மீன்
பிடிச்சுட்டு வர்றோம்," என்று அம்மாவிடம் சொன்னாங்க.
"நல்ல மீனா புடிச்சுட்டு வாங்க; அருமையா சமைச்சுத் தாரேன்,"அப்டீன்னாங்க,அம்மா.
"இரவுச் சாப்பாட்டுக்கு நாங்க பிடிச்சுட்டு வர்ற மீன் தான்,"என்று மூத்த மகன் சொன்னான்.
"எனக்கும் மீன் ரெம்பப் பிடிக்கும். கவனமா குளத்துல மீன் பிடிங்க. தண்ணீருக்குள் தவறி விழுந்துடப்போறீங்க;கவனம்,"என்று அம்மா புத்திமதி சொல்லி அனுப்பினார்.
"நான் இருக்கேன்;அதெல்லாம் கவலைப்படாதீங்க,"என்றான் மூத்த மகன்.
அடந்த காட்டுக்குள் சென்று அந்த நதியை அடைந்தனர் சகோதரர்கள்.
ஆற்றங்கரையை ஒட்டிய இடத்திலிருந்து தேவையான மண்புழுக்களைச்
சேகரித்தனர்.
மீன் பிடிக்கத் துவங்கினர்; ஒவ்வொருவரும் தங்கள் தூண்டிலை வீசினர்.
"ப்ளாப்"...ப்ளாப்" என்று தூண்டில் தண்ணீரில் விழுந்த சத்தம் கேட்டது.
"ஸ்விஷ்" என்ற சத்தத்தோடு தூண்டிலை எடுத்தான் மூத்தவன். பெரிய‌
வெள்ளிக்கெண்டை மீன் வந்தது.
கடைசித் தம்பி தூண்டிலில் விழும் மீனை எடுத்து பாத்திரத்தில்
போடும் வேலையைச் செய்தான்.
ஒரு மணி நேரம் ஆனது.
"மொத்தம் எத்தனை மீன் இதுவரை கிடைத்துள்ளது?"என்றான் மூத்த அண்ணன்.
கடைசித் தம்பி மீனை எண்ணி,"இதுவரை 15 மீன்கள் கிடைத்திருக்கிறது,"என்றான்
"அம்மா, ரெம்ப சந்தோசப்படுவாங்க இன்னைக்கு,"என்றான் இரண்டாவது சகோதரன்.
"நேரமாச்சு;மீன் பிடிச்சது போதும். போகலாம்,"என்றான் மூன்றாமவன்.
"நாம எல்லோரும் இங்க இருக்கோமா?"என்றான் நான்காமவன்.
"அஞ்சு பேர் இருக்கிறோமான்னு எண்ணிப்பாத்துட்டாப் போகுது,"என்றான் ஐந்தாவது சகோதரன்.
உடனே மூத்தவன் எண்ணத் துவங்கினான். தனக்கு எதிரில் இருந்த தம்பிகளை
ஒன்று,இரண்டு,மூன்று, நான்கு..."என்று சொல்லி நிறுத்தினான். ஒருத்தன் குறைகிறானே என்றான்..
அடுத்தவன் எண்ணிப்பார்த்தான். ஒன்று,இரண்டு,மூன்று, நான்கு... அட...நான்கு பேர்தான் இருக்கோம்,"என்றான்.
அடுத்தவனும் அதே போல எண்ணினான் அவனுக்கும் நான்கு பேர்தான் எண்ணிக்கை வந்தது.
கடைசியாக ஐந்தாவது சகோதரனும் எண்ணிபார்த்துவிட்டு அழ ஆரம்பித்துவிட்டான்.
"அண்ணே, நாலு பேர்தானே இருக்கோம். அம்மா சொன்னமாதிரி நம்மில் ஒருத்தர் தண்ணீரில்தான் விழுந்திருக்கனும்,"என்று சொல்லி அழுதான்.
"ஆமா..நீ சொல்றது சரிதான்..நம்மில் ஒருத்தரை தொலைத்துவிட்டோம். வாங்க,ஆத்தங்கரை ஓரமா ஓடித் தேடுவோம். தண்ணீரில் தான் விழுந்திருக்க வேண்டும்," என்று மூன்றாமவன் அழுதுகொண்டே சொன்னான்.
சகோதரர்கள் அனைவரும் இப்போது அழுதுகொண்டே வெகுதூரம் ஓடிப்போய்ப் பார்த்தனர். தண்ணீர்தான் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.
என்ன செய்வது என்று தெரியாமல் சோகமாக சகோதரர்கள் அழுது கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக ஒரு சிறுமி பூக்கூடையுடன் வந்தாள்.
"ஏன் எல்லோரும் அழுகிறீர்கள்? என்ன நடந்தது? "என்று கேட்டாள்.
"மீன் பிடிச்சுக்கிட்டு இருந்தோம். எங்களில் ஒரு சகோதரன் காணோம். தண்ணீரில் தவறி விழுந்து விட்டான் போல. தேடியும் பாத்துட்டோம்,"என்று சொல்லி அழுதான்.
"நான், இப்போது எண்ணிப் பார்க்கிறேன், ஒன்று,இரண்டு,மூன்று,நான்கு.."என்று
எண்ணினான். அவன் எண்ணியதை அந்தச் சிறுமி பார்த்துக்கொண்டிருந்தாள்.
"நீங்க மொத்தம் எத்தனை சகோதரர்கள்?"என்று சிறுமி கேட்டாள்.
"நாங்கள் ஐந்து பேர்கள்,"என்றான் இரண்டாமவன்.
பூக்கூடையுடன் வந்த சிறுமி இப்போது புன்னகைத்தாள். "இப்ப நான்,
காணாமல் போன ஐந்தாவது சகோதரனைக் கண்டுபிடித்துத் தரப்போகிறேன்,"என்றாள்.
"எப்படி?"எல்லோரும் ஒரே நேரத்தில் கேட்டனர்.
"இதோ இந்தப் பூக்கள் உதவியுடன்,"என்றாள் சிறுமி.
"பூக்கள் எப்படி உதவி செய்யும்?" அப்பாவியாய்க் கேட்டான் ஐந்தாமவன்.
"இப்ப பாக்கத்தான போறீங்க,"என்றாள் சிறுமி.
"நான் ஒவ்வொரு " பூ" வா கொடுப்பேன். நான் ஒரு பூ கொடுத்ததும் ஒன்று, இரண்டு என்று சொல்வேன். நீங்கள் சொல்லிக்கொண்டே வரவேண்டும் சரியா?"என்று சொல்லி முதலவதாக ஒருவனிடம் பூவைக் கொடுத்தாள்.
"ஒன்று" பூவை வாங்கிக்கொண்டு அவனும் ஒன்று என்றான்.
"இரண்டு" பூவை வாங்கிய இரண்டாமவனும் "இரண்டு"என்றான்.
"மூன்றாவது பூவை வாங்கியவன் மூன்று, நான்காவது பூவை வாங்கியவன்
நான்கு, ஐந்தாவது பூவை வாங்கியவன் ஐந்து என்றான்.
"பார்த்தீர்களா? காணாமல் போன ஐந்தாவது சகோதரனைக் கண்டுபிடித்துவிட்டேன், இல்லையா?"என்றாள்.
"ஆமாம். நீ, கண்டுபிடிச்சுக் குடுத்திட்ட," என்று மூத்தவன் சந்தோசமாகக் கத்தினான்.
"உனக்கு ரெம்ப நன்றி" என்றான் ஒருவன்.
"இப்ப எங்க அம்மா சந்தோசப்படுவாங்க" என்றான் இன்னொருவன்.
"எங்களுக்கும் இப்ப சந்தோசம். காணாமல் போன சகோதரனைக் கண்டு
பிடித்ததற்காக உனக்கு இரண்டு மீன்,"என்று மூத்தவன் அந்தச் சிறுமிக்கு கொடுத்தான்.
அந்தச் சிறுமியும் இரண்டு மீன்களோடு சந்தோசமாக அவளுடைய வீட்டை
நோக்கிப் போனாள்.
மீனோடு சகோதரர்கள் ஐவரும்,உற்சாகமாக வீடு திரும்பினார்கள்.
"என் செல்லங்கள் இவ்வளவு மீன் பிடிச்சிருக்கீங்களே; நீங்கள்
கெட்டிக்காரர்கள்,"என்று அம்மா பாராட்டினாள்.
"நாங்க யாரும் தண்ணீரில் விழவில்லை. வேணும்ன்னா இந்தப் பூவை
வச்சு எங்களை எண்ணிப்பாத்துக்கங்கம்மா,"என்றான் கடைசி மகன்.
ஆனால்,அம்மாவுக்குத் தெரியுமோ!?காணாமல் போன சகோதரனைக் கண்டு
பிடிக்க உதவியது அந்தப் பூக்கள்தான் என்று!
ஒரு காட்டில் முயல் குடும்பம் வாழ்ந்து வந்தது. முயல் அப்பா, அம்மாவுக்கு அன்று ரெம்ப மகிழ்ச்சியான நாள்! காரணம், முயல் அம்மாவுக்கு இரண்டு முயல் குட்டிகள் பிறந்த சந்தோசம்!
முயல் குட்டிகள் கொழுக் மொழுக்கென்று பார்க்க அழகாக ருந்தது. சீமா, பூமா என்று இரண்டு முயல் குட்டிகளுக்கும் பெயர் வைத்து, அக்கம் பக்கம் உள்ள உறவு முயல்களைஎல்லாம் அழைத்து மெகா காரட் விருந்து வைத்துக் கொண்டாடியது, முயல் அப்பா,அம்மா.
சீமாவும் பூமாவும் பக்கத்து காரட் தோட்டத்தில் விளையாடுவதென்றால் ஒரே சந்தோசம். ஆனால், அப்பா, அம்மா முயல்கள் அப்படி அதிக நேரம் விளையாட அனுமதிப்பதில்லை.
ஆட்கள் நடமாட்டம் அறிந்து குட்டி முயல்களுக்கு வேகமாக ஓடி வராமல் ஆபத்தில்சிக்கிக்கொண்டால் என்னசெய்வது என்ற கவலையால் அனுமதிப்பதில்லை.அப்பா,அம்மா உணவு தேடச் சொல்லும்போது சீமவையும் பூமாவையும் வீட்டிலேயே இருக்கச் சொல்லிவிட்டு போவார்கள். ஆனால் அவர்கள் தலை மறைந்ததும்சீமாவும் பூமாவும் காரட் தோட்டத்துக்கு விளையாட ஓடிவிடுவார்கள்.
இப்படி ஒருநாள் சீமா, பூமா முயல் குட்டிகள் விளையாடச் சென்றபோது அந்தத் தோட்ட விவசாயி கவனித்து பிடித்து விட்டார். அப்போது தந்தை முயலும், அம்மா முயலும் அங்கே வந்து சேர்ந்தன. அப்பா முயல் விவசாயியிடம் வந்து, எங்க குட்டிகள் ரெண்டையும் விட்டுவிடுங்கள் என்றுகெஞ்சிக் கேட்டது.
விவசாயியோ, ரெண்டு முயல் குட்டியையும் கொண்டு போய் முயல் கறி செஞ்சு சாப்பிட ஆசைப்பட்டுத்தான் பிடிச்சு இருந்தார். எனவே விவசாயி ரெண்டு குட்டிகளையும் விட்டுவிடுகிறேன். அதற்குப் பதிலாக நான் உன்னைப் பிடிச்சுக்கிட்டுபோக சம்மதம் சொன்னா விட்டுவிடுகிறேன் என்றார். சரி, என்று அப்பா முயல் சொல்லஅப்பா முயலைப் பிடித்துக்கொண்டு குட்டி முயல்களை கீழே விட்டுவிட்டார்.
உடனே அம்மா முயல் வந்து விவசாயியிடம், இந்தக் குட்டிகள் அப்பா இல்லாம தூங்காது. என்னைப் பிடிச்சுக்கிட்டு அவரை விட்டுவிடுங்கள் என்று அம்மா முயல் கெஞ்சியது. விவசாயியும் மனம் இரங்கி அப்பா முயலை விட்டுவிட்டு அம்மா முயலைப் பிடித்துக் கொண்டார்.
இப்போது அப்பா முயலும், குட்டி முயல்களும் விவசாயி முன்னால் வந்து, எங்க அம்மாவை நீங்க பிடிச்சுட்டுப் போனா எங்களுக்கு அம்மா இல்லாம கஷ்டமா இருக்கும். அதனால எங்க எல்லாரையுமே நீங்க கொண்டு போயிருங்க என்று சொல்லி கண்ணீர் வடித்தது குட்டிகள். அப்பா முயலும் என்னோட குட்டி சொல்றதுதான் சரி. நாங்களும் வர்றோம் என்று சொன்னது.
முயல் குட்டிகளின் கண்ணீரும், குட்டிகள் மீது பெரிய முயல்களுக்கும் உள்ள அன்பையும் கண்டு விவசாயி திகைத்துப் போனார்.
" சே! என்ன காரியம் பண்ண இருந்தோம். சாப்பிடும்வரைதான் ருசியான சமாச்சாரம் நமக்கு. ஆனால் முயல்களுக்கோ தங்கள் குடும்பத்திலிருந்து ஒருவரை நிரந்தரமாக இழந்து தவிக்கும் உணர்வு எப்போதும் ஏற்பட்டுவிடுமே. விவசாயிமனம் மாறினார். அம்மா முயலை கீழே இறக்கி விட்டார்.
இனிமேல் இது போன்று உயிர்களைக்கொன்று புசிக்கும் வழக்கம்
இன்றோடு சரி என்றும் முடிவு செய்துகொண்டார். முயல்கள் எல்லாம் தங்கள் கைகளைக் கூப்பி விவசாயிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டது.
முயல் குடும்பம் சந்தோசமாக வீட்டுக்குத் திரும்பியது. சீமாவும் பூமாவும் அப்பா, அம்மா பேச்சைக் கேட்காமல் போய்த்தானே வம்பில் மாட்டிக்கொண்டோம். இனிமேல் அப்பா, அம்மா சொல்வதைத் தட்டாமல் கேட்க வேண்டும் என்று தீர்மானித்தது. அப்பா,அம்மா விடம் சீமாவும் பூமாவும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டது.
"உன் பெயரென்ன?"
"............"
"டேய், வாயில என்ன கொழுக்கட்டையா வெச்சிருக்க.....
ஒம் பேரு என்னடா?
"து....ரை.."
"தொரை....வாயைத் தெறக்கமாட்டீங்களோ...அப்பா பேரு, அட்ரஸ் என்ன?"
"........."
"எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு ஒன்ன...."
" ஏய்...செவன் நாட் சிக்ஸ்... இங்க வாய்யா...."
"அய்யா..வந்துட்டம்யா.."
"ஏய்யா, நாளைக்கு கோர்ட்டுக்கு எத்தனை கேஸ் தேத்திவச்சிருக்க?
"அய்யா கேசு ரெடிபண்ணீர்றங்கய்யா..."
"எப்பக் கேட்டாலும் இப்படியே சொல்லுய்யா...இப்ப நான் ரிப்போர்ட் எழுதணும். இல்லைன்னு எழுத முடியுமா? எழுதுனா, என்னய்யா ஸ்டேசன்ல வேலை செய்யிறியா? செறைக்கிறியாம்பாரு மேலதிகாரி....?"
"அய்யா..ஒரு கேசுன்னு எழுதிக்குங்க அய்யா..அஞ்சு நிமிசத்துல கேசு டீட்டெய்ல்ஸ் கொண்டாறேங்கய்யா?"
"ம்ம்ம்ம்...எல்லாம் வெறட்டுனாத்தான் வேலையாகுது..." எஸ்.ஐ.கோபால் என்ற கோவாலு சற்றே நிம்மதியாய் நாற்காலியில் சரிந்து உட்கார்ந்து கொள்கிறார்.
செவன் நாட் சிக்ஸ் என்ற ஏட்டு ஏகாம்பரம் எஸ்.ஐ.கோபால் கொடுத்த வேலையை நிறைவேற்ற துரையை நெருங்கினார்.
"எலே, என்ன கேட்டாலும் சொல்ல மாட்டேங்குற. எனக்கும் கேசு வேணும். பிக்பாக்கெட் கேசுல இப்ப உள்ள போகப்போற.
ஓம் தலையெழுத்து..நான் என்ன செய்ய?" என்று சொல்லிக்கொண்டே மளமளவென்று கோர்ட்டுக்கான கச்சாத்து தயார் பண்ணும் வேலைகளில் எறங்கிவிட்டார்.
அக்யூஸ்ட் நேம்....துரை...·
பாதர் நேம்...நாட் நோன்...
அட்ரஸ்...நாட் நோன்....
ரீசன்..பிக்பாக்கெட்...
ஏகாம்பரம் மளமளவென்று படிவங்களை பூர்த்தி செய்வதில் கண்ணும் கருத்துமாய் இருந்தார்.
தலைகவிழ்ந்தபடி துரை அந்தக் காவல் நிலையத்தில் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்தான். அவன் மனம் மட்டும் அங்கில்லை; "பாவம், அம்மா இந்நேரம் அழுதுகிட்டு இருக்கும். அப்பா....!?
"டேய் இந்தப் பொட்டலத்துல இருக்குறத சாப்புட்டு அந்த டீயைக் குடி. காலையில இருந்து கொலைபட்டினியா கெடக்கே. செத்துக்கித்துப் போயிடாத....." என்ற அதட்டல் கேட்டு கைகள் நடுங்க ஏட்டு நீட்டிய பொட்டலத்தை வாங்கிக்கொண்டான்.
"இந்த வயசுல உனக்கு எதுக்கு இந்தத் தொழில்....பிச்சை கூட எடுக்கலாம். இந்தத் திருட்டுத்தனம் மட்டும் கூடவே கூடாது....கத்தைப் பேப்பர்களில் மளமளவென்று எழுதி கோர்ட் கிளார்க்கிடம் நீட்டினார் மாஜிஸ்ட்ரேட். அவர் அந்தக் கேஸ்கட்டை பவ்யமாக வாங்கிப் பிரித்து ஆறுமாசம் சிறுவர் சீர்திருத்தப்பள்ளி, மதுரை என்று உரக்கப் படித்தார்.
துரையின் கண்களிலிருந்து கண்ணீர்துளிகள் வழிய...ஏட்டு ஏகாம்பரம் விசாரணைக்கூண்டிலிருந்து துரையை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.
கோர்ட்டிலிருந்தோ,பஸ் ஏறி மதுரை வந்ததோ, சீர்திருத்தப்பள்ளி வந்ததோ எதிலும் கவனமில்லாமல் வெறித்த பார்வையோடு இருந்த துரை, சீர்திருத்தப்பள்ளி வந்த மூன்றாவது நாள்தான் வாயைத் திறந்தான்.
அதுவும் அவன் இருந்த அறையில் மற்றவர்கள் வெளியே சென்ற பிறகு படுத்திருந்த பாபுவிடம். இந்த மூன்று நாளில் பாபுவைத் தவிர மற்ற சிறுவர்கள் துரையைச் செய்த கலாட்டாவால் மனம் நொந்து போயிருந்தான்.
"என்ன, பிளேடு கேசா?"
"என்னம்மா, நாலு பர்ஸ் பாக்கவுடாம இங்க இட்டாந்துட்டாங்களேன்னு கவலையாகீதா?"
"தியேட்டரா, பஸ்ஸா? எதுல தொழில் பண்ற?"
"லாட்ஜுக்கு ஆளுங்களை புக் பண்ற கேசா?"
"தொழிலுக்குப் புதுசா? கவலைய வுடு, வெளிய போனதும் நம்ப குரூப்ல சேந்துரு. நம்பாளு ஒனக்குஎல்லாத்தையும் அத்துபுடியா கத்துகுடுத்துருவான்..."
- இப்படி ஆளாளுக்கு துரையை துவம்சம் செய்து கொண்டிருக்க
பாபு மட்டும் பாயில் ஒன்றும் பேசாமல் புரண்டுகொண்டே இருந்தான். ஒருவழியாக மற்றவர்கள் எல்லாம் வெளியே போனதும் துரை,பாபுவிடம் பேசினான்.
"என்ன? ஒடம்புக்கு ஜுரமா?"
"ம்..."
"எத்தனை நாளா?"
"அஞ்சு நாளா..."
"ஆஸ்பத்திரிக்கு கூட்டீட்டு போகமாட்டாங்களா?"
"இன்னைக்கு காச்சல் கொறையலேன்னா கூட்டிப்போறதா வாடன் சொன்னாரு."
"இங்க வந்து எத்தனை நாளாச்சு?
"நாலுமாசம் ஆச்சு"
"எதுனால இங்க வந்த?
"மாங்காய் சுண்டல் வித்துகிட்டு இருந்தேன்; ஒரு ஆள் தெனம் கடன் வாங்குவார்; வாரக் கடைசியிலமொத்தமா குடுத்துருவார். முப்பது ரூவாயிக்கு மேல கடன் குடுத்தேன். திடீருன்னுட்டு அந்தாள் வர்றதில்ல.ஒருநா, ஒரு பொம்பள கூட வர்றதப் பாத்தேன்.
காசைக் கேட்டேன்; கன்னத்துல அறைஞ்சு யாருகிட்டகுடுத்தியோ அவங்கிட்ட கேளுன்னார். நாளைக்கு கூட குடுங்க, இல்லன்னு மட்டும் சொல்லீடாதீங்க.அந்தக் காசுல எந்தங்கச்சிக்கு பாவாடைத் துணி வங்கணும்ன்னு சொல்லி அழுதேன்.
அந்த வழியா வந்த போலீசுக்கிட்ட பொய்சொல்லி காசு கேக்குறேன்னு புடிச்சுக்குடுத்துட்டார். போலீசு நான் சொல்றதைக் கேக்கவே இல்லை. போலீசு என்னை ரெண்டுநாள் ஸ்டேசன்ல வச்சிருந்துட்டு பிக்பாக்கெட் அடிச்சிட்டேன்னு கேஸ் போட்டு இங்க கொண்டாந்து தள்ளீட்டுப் போயிட்டாங்க.....ஆமா, நீ எதுனால இங்க வந்த? மூச்சுவிடாமல் சொல்லிய பாபு இப்ப துரையின் கதையை தெரிந்துகொள்ளும் ஆவலில் பார்க்கிறான்.
"நீ, இங்க இருக்கிறது உங்க வீட்டுக்கு தெரியுமா?"
"தெரியாது.
நான் மதுரையில சுண்டல் விப்பேன்; அய்யர் சுண்டல், முறுக்கு டின்னுல போட்டுக் குடுப்பார். ரூவாய்க்கு பத்துபைசா கமிசன்.ஒருநாளைக்கு அம்பதுக்கும் விக்கும்; அஞ்சுக்கும் விக்கும். சாப்பாடு அய்யர் வீட்டுல போட்டுருவாங்க. திண்னையில தெருவுல படுத்துக்குவேன். கெடைக்கிற கமிசனை மாசம் சேத்து வச்சு நூறு, நூத்தம்பது ஊருக்கு அம்மாவுக்கு அனுப்பீருவேன். வீட்டுல அம்மாவும் தங்கச்சியும்தான். பாவம் இந்த நாலு மாசம் எம் பணமும் அவங்களுக்கு இல்ல; என்னையத் தேடி வந்தாங்களா? எதுவும் தெரியாது.
அய்யர் என்னைப் பத்தி என்ன நெனைச்சாரோ? சரக்கோட போயிட்டானேன்னு பொலம்பீருப்பார். என்னைய இனிமே எப்படி நம்புவார்?தங்கச்சிய எப்டியாச்சும் படிக்க வச்சிரும்மா, எந்த வேலைக்கும் அனுப்பாதே. நான், மாசாமாசம் பணம் அனுப்புறேன்னு பொங்கலுக்கு ஊருக்குப் போயிருந்தப்போ சொல்லீட்டு வந்தேன். இன்னும் ரெண்டுமாசம் பல்லைக் கடிச்சுக்கிட்டு இங்க கெடக்கணும்." பாபுவின் கண்கள் ஈரமாகியிருந்தது.
"ம்ம்ம்... எங்கதைதான் சோகக் கதைன்னு நெனைச்சேன். என்னைவிட நீ சோகமா இருக்கே. கவலைப்படாதே. நாலுமாசத்தை ஓட்டீட்ட. இன்னும் ரெண்டுமாசம்தான... அதுவும் ஓடீரும். இனிமே அங்க இங்க போகாம ஒங்க அம்மாவும் தங்கச்சியும் இருக்க எடத்துக்கே போய் இதே சுண்டல் முறுக்கை ஒங்க அம்மாவைச் செஞ்சு தரச் சொல்லி வித்துக் கெடைக்கிற காசை ஒங்க அம்மாட்ட கொடுத்துட்டு நிம்மதியா இரு..." பெரியமனுசன் போல துரை பாபுவுக்கு புத்திமதி சொன்னான்.
"அம்மா இருக்குற கிராமத்துல சுண்டல் முறுக்கு செஞ்சு நாங்களே சாப்புட்டுக்கிட்டாத்தான். அங்க வழி இல்லாததுனாலதான மதுரைக்கு வந்தேன்."
"பக்கத்துல இருக்கிற டவுனுல எதாவது செய்யமுடியுமா?"
"செய்யலாம். எல்லாத்துக்கும் வெள்ளையப்பன் வேணுமே?"
"எவ்வளவு இருந்தா செய்யலாம்ன்னு நெனைக்கிற?"
"ஒரு சுமாரான சைக்கிள், ஒரு அம்பது டீ புடிக்கிற மாதிரி ஒரு எவர்சில்வர் பாத்திரம், ஒரு வாளி, அரை டஜன் டம்ளர்.... சீனி, டீ தூள், பால்....இதுக்கு மட்டும் காசு கெடைச்சா, எங்க கிராமத்துல இருந்து டவுனுக்கு காலையில ஒரு டிரிப், மாலையில ஒரு டிரிப்...." சொல்லும்போதே பாபுவின் கண்களில் ஒளிமயமான எதிர்காலம் மின்னலிட்டது.
"இவ்வளவுக்கும் ஒரு ஆயிரம் ரூபாயாவது இருந்தால்தான் இந்தத் தொழிலைச் செய்ய முடியும், இல்லையா? இதுல சைக்கிள்தான் கொஞ்சம் செலவு.....ஆமா...இப்படிச் செய்யலாமே.
வாடகைக்கு கொஞ்ச நாள் சைக்கிள் எடுத்து ஓட்டிச் சமாளிச்சா தொழில் நல்லபடியா அமைஞ்சா ஒரு சைக்கிளை வாங்கிக்கலாமே?"
"அப்படியும் செய்யலாம். என்ன, சம்பாதிக்கிற காசை சைக்கிள் கடையில குடுக்க வேண்டி வருமே. அதான்.." சொல்லிக்கொண்டிருக்கும்போதே யாரோ வரும் காலடி ஓசை கேட்க பேச்சு தற்காலிகமாய் தடைபட்டது. வார்டன்தான் வந்தார்.
"என்ன பாபு காய்ச்சல் எப்படி இருக்கு?"
"இப்ப பரவாயில்லங்கண்ணா. இன்னைக்கு கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தாப் போதும்."
"அட, கொஞ்சம் முன்னாடி காய்ச்சல் அனலா கொதிச்சுது. சொரத்தே இல்லாம இருந்த. இப்ப மொகம் பாக்கவே தெளிவா இருக்க மாதிரி இருக்கே!?" வார்டன், பாபுவின் நெற்றியைத் தொட்டுப்பார்த்து விட்டு, காய்ச்சலும் இல்ல. சரி, சாயாந்திரமா எதுக்கும் பாத்துக்குவோம். என்ன, துரை நாளையில இருந்து மத்த பசங்களோட கிளாசுக்குப் போகணும்..." என்று சொல்லிக்கொண்டே வார்டன் போனார்.
"ம்..என்ன சொன்ன, சைக்கிளுக்கு வாடகை குடுத்தாலும், உங்க அம்மா, தங்கையோட இருக்கிற தெம்புல பத்து டீ சேத்து வித்தா வாடகைக் காசு; ஒவ்வொருநாளும் ஒரு தொகைய சைக்கிள் வாங்க சேத்துவா, காசு சேந்ததும் சைக்கிளை வாங்கிடு"
"நல்ல ஐடியாதான். ஆனா மத்ததுக்கு பணம்?"
"நா, ஒரு ஐநூறு ரூபா தர்றேன்."
"இங்க எப்டி ஒனக்கு பணம்?"
"நீ, ரெண்டு மாசம் கழிச்சு ஊருக்குப் போறப்ப நான் தர்றேன்"
"இவ்வளவு நல்லவனா இருக்குற நீ, ஒன்னைப் பத்தி சொல்லவே இல்லையே?"
"என்னைப்பத்திச் சொல்றதுக்கு என்ன இருக்கு?"
"அப்ப, நீயும் திருடுற தொழில்தானா?"
"நான், அந்தமாதிரிப் பட்டவன் இல்லை."
"அப்ப, எனக்கு நீ தர்றதாச் சொன்ன பணம் யாரோட பணம்?"
"ஒருவகையில அது திருடுன பணம்தான். ஒரு நல்ல காரியத்துக்கு ஒனக்கு பயன்படட்டும்ன்னுதான் குடுக்கிறேன்னு சொன்னேன்."
"எனக்கு திருட்டுப் பணமா? வேண்டவே வேண்டாம்ப்பா!"
"பாபு, நீ நினைக்கிற மாதிரி அது திருடுன பணம் இல்ல. எங்கப்பா ஒரு குடிகாரர். குடிச்சுட்டு எங்க அம்மாவையும் என்னையும் திட்டாத அடிக்காத நாளே இல்லை. ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். கொஞ்ச காலம் பல்லைக்கடிச்சுகிட்டு படிச்சு முடிச்சுருவோம்ன்னு நெனைச்சேன். விதி, அன்னைக்கு விளையாடிருச்சு. அப்பா, வேலையில இருந்து வரும்போதே குடிக்க வாங்கி வந்துருவாரு. அன்னைக்கு வந்ததும், அம்மா மளிகை சாமான் வாங்க அப்பாட்ட பணம் கேட்டாங்க. அம்மாவுக்கு அடிதான் கிடைச்சது. என்னைக் கூப்பிட்டு ஒரு அய்நூறு ரூபா நோட்டைக் குடுத்து பிராந்தி வாங்கீட்டு வாடா என்று அனுப்பினார். பணத்தை வாங்கிப் போன நான் இருட்டா இருந்த இடத்துல போய் உக்காந்து அழுதுகிட்டு இருந்தேன். அந்தப்பக்கமா வந்த போலீஸ்காரர் என்னை பாத்துட்டு ஸ்டேசனுக்கு கூட்டீட்டுப் போனார்; வீட்டைப்பத்திச் சொன்னா அப்பாட்ட இன்னும் அடி விழும். அதுக்குப் பயந்து ஸ்டேசன்ல வீட்டைப்பத்தி எதுவும் சொல்லல. போலீஸ் என்னை அனாதைன்னு நெனைச்சு பிக்பாக்கெட் கேஸ் போட்டு இங்க கொண்டாந்துட்டாங்க. போலீஸ் கண்ணுல படாம இருக்குறதுக்காக பணத்தை சட்டை தையல் மடிப்பில வச்சிருந்தேன். அந்தப் பணத்தைத்தான் ஒனக்கு குடுப்பதாச் சொன்னேன்."
"துரை, உன்னை மாதிரி எனக்கு ஒரு நண்பன் இங்கே கிடைத்ததற்காக சந்தோசப்படுறேன். நான் வெளியே போய் டீ தொழிலை செய்து, நீ வெளியே வரும்போது ரெண்டு சைக்கிளோடு இருப்பேன். நீயும் உங்க அம்மாவை அழைச்சுகிட்டு எங்க கூடவே வந்துரு. என்ன, சரியா, ஆனந்தத்தோடு பாபு எழுந்து துரையை அணைத்துக் கொள்கிறான். இருவரின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்
சில ஜோடனை வழக்குகள் கூட நிஜத்தில் தோற்று, நிழலில் ஜெயிக்கிறது.