Sunday, 1 January 2017

தலைமைப் பண்பு என்றால் என்ன?

அடிக்கடி வேலைக்கான விளம்பரங்களில் ‘Leadership qualities’ என்கிற வார்த்தைகளைப் பார்த்திருப்பீர்கள்.
leader என்பதைப் பலர் பலவிதமாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
அரசிலில் தலைவர் என்றால் ஹீரோ. எதையாவது பண்ணி மக்கள் கூட்டத்தைக் கவர வேண்டும். அந்தக் கவர்ச்சியில் ஓட்டு வாங்க வேண்டும். ஒரு மாநிலமோ, நாடோ முன்னேறுவதற்கு என்ன வேண்டும் அதை எத்தனை வருஷத்தில் சாதிக்கலாம் அதற்கு அரசாங்கம் என்ன செய்ய வேண்டும், மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை எல்லாம் அறிந்த தலைவர்கள் யாரும் இப்போது இல்லை.
நாம் பேச வந்தது அரசியல் தலைவர்கள் பற்றி இல்லை, ஆர்கனிசெஷன் தலைவர்கள் பற்றி.
இங்கேயும் நிறைய தப்பான புரிதல்கள் இருக்கின்றன.
அடிப்படைத் தவறு leader என்பது ஒரு பதவி என்பது. உதாரணமாகத் திகழ்கிறவன், பொறுப்பு ஏற்கிறவன்தான் லீடர். பொறுப்பேற்கிற போதுதான் பிரச்சினைகளுக்கு யார் காரணம் என்பதற்கு பதில் என்ன காரணம் என்கிற கோணத்தில் பார்க்க முடியும்.
சில தலைவர்கள் உதவியாளர்கள் தங்களுக்கு இருப்பதே அந்தந்த வேலைகள் தமக்குத் தெரியாததால் என்கிற மாதிரி நடந்து கொள்வார்கள். எதிலும் இன்வால்வே ஆக மாட்டார்கள். ‘அதெல்லாம் எனக்குத் தெரியாது, மெஷின் ஏழரை மணி நேரம் ஓடியாகணும்’ என்கிற ரீதியில் பேசுவார்கள். நரசிம்மன் வராவிட்டால் ப்ராஜக்ட் பற்றி என்ன கேட்டாலும் ‘இன்னைக்கு நரசிம்மன் லீவு’ என்பதுதான் பதிலாக இருக்கும். உதவியாளர்கள் இருப்பது எல்லாவற்றையும் ஒருத்தரே செய்ய முடியாது என்பதால்தான். இப்படிப்பட்ட தலைவர்களிடம் ஒரு நாள் லீவு வாங்குவதற்குள் தாலி அறுந்து விடும்.
இன்னும் சிலர் எல்லாவற்றையும் தாங்களே இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வார்கள். இப்படிச் செய்கிறவர்கள் இரண்டு ரகம். ஒன்று டெலிகேட் செய்யத் தெரியாதிருப்பவர்கள். ஒருத்தருக்கு ஒரு வேலையைக் கொடுத்து அவருடைய தவறுகளை சுட்டிக் காட்டி சரியான ரிசல்ட்டைப் பெறுவது ஒரு கலை. இன்னொரு ரகம் நம்பிக்கை இல்லாதவர்கள்.
நல்ல லீடர் என்கிறவன் ஒரு டார்கெட்டை சின்னச் சின்ன இலக்குகளாகப் பிரிப்பான். அதை ஒவ்வொருத்தரிடம் தருவான். ஒவ்வொருத்தரும் தங்கள் இலக்கை அடைய என்ன செய்ய வேண்டும் என்று சொல்லித் தருவான். தெளிவான தீர்வுகள் தெரிகிற போது அதைத் தனக்காக காத்திராமல் செய்து கொள்கிற அதிகாரத்தைக் கொடுப்பான். அவன் எடுக்கிற முடிவுகள் தவறாகப் போகிற போது அதற்கான பொறுப்பை தான் ஏற்றுக் கொள்வான். ஏன் தவறாயிற்று என்று எடுத்துச் சொல்வான். மறுபடி முடிவெடுக்கிற சந்தர்ப்பத்தைக் கொடுப்பான்.
ம்ம்க்கும்… இப்படி எல்லாம் இருந்தா வேலை ஆகாது. நம்மளை யாரும் மதிக்கவே மாட்டாங்க என்று சிலர் சொல்வார்கள். மதிப்பது என்றால் பார்த்து பயப்படுவதோ, தரையளவு தாழ்ந்து ‘குட் மார்னிங்’ சொல்வதோ இல்லை.
அறிவும், இன்வால்வ்மேன்ட்டும்தான் நமக்கு மதிப்பைத் தரும்.
சரியாகச் செய்தால் பாராட்டு கிடைக்கும், தப்பாய்ப் போனால் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்கிற போதுதான் வேலையில் தைரியம் வரும். தைரியம் இருந்தால்தான் ரிஸ்க் எடுப்பார்கள். ரிஸ்க் எடுத்தால்தான் சாதிப்பார்கள். அவர்கள் சாதித்தால்தான் நீங்கள் நல்ல தலைவர்!

No comments:

Post a Comment