Thursday, 5 January 2017

இன்றைய ஊடகங்களின் மாற்றமும்
கலாச்சார சீரழிவும்
முன்னுரை
ஊடகம் என்பது இன்று உலகையே புரட்டிபோட்டு அதன் முகவரியை முற்றிலும் மாற்றிவிட்டது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியே
கலாச்சாரம் என்பது  உலகிலுள்ள  பலப்பல இனங்கள் ,சாதிகள் , மொழிகள் , பழக்கவழக்கங்கள் , மதங்கள் , ஆடை அணிகள் , சடங்குகள் , மரபுகள் , நம்பிக்கைகள் எனும் எத்தனையோ கூறுபாடுகளை உள்ளடக்கியது. இதன் மொத்த தொகுப்பே கலாச்சாரத்தின் அடிப்படையும் அடையாளமும் ஆகும்.
ஊடகம் என்பது மனித குலத்தின் இன்றியமையாத தகவல் பரிமாற்றத்தின் அசுர வளர்ச்சியே ஆதியில் மனிதன் ஓசை என்ற ஒன்றை கண்டு அறிந்த நாள் தொடங்கி தகவல் தொடர்பும் பரிமாற்றமும் அசுரப் பாய்ச்சலில் வாயு வேகம் மனோ வேகம் என்று குறிப்பிடுவது போல வளர்ந்தோங்கி உள்ளன

ஊடகங்களின் தோற்றம் மற்றும் வளர்ச்சி
ஆதி மனிதன் வித விதமான கருவிகளை பயன்படுத்தி ஓசை எழுப்பி தகவல் பரிமாற்றம் அல்லது தகவல் தொடர்பை ஏற்படுத்தி அதை காலம் செல்ல செல்ல பரிணாம வளர்ச்சிப்பாதையில் கொண்டு சென்று அதன் தொடர்ச்சியாய் வளர்ச்சி பெற்று தமிழில் நாம் அறிந்த இயல், இசை, கூத்து அல்லது நாடகம் அதன் பின்னர் வானொலி, தொலைபேசி, தந்தி, கம்பியில்லா தந்தி,  திரைப்படம், தொலைக்காட்சி, இணையதளம், வலைப்பூக்கள், வலைத்தளம், மின்னஞ்சல், கைபேசி என இன்று நீண்டு அகண்டு விரிந்து ஓர் யுகப்புரட்சி நடந்து அதன் பரிணாமம் எல்லையற்று  பரந்து விளங்குகிறது.

கலாச்சாரம் எனும்  கருப்பொருளும் ஊடகம் எனும் பாத்திரமும்
ஒரு கருப்பொருளின் தன்மை அதை உள்ளடக்கிய பாத்திரத்தின் தன்மையை பொறுத்து அமையும் என்பது வெள்ளிடைமலை உண்மை உதாரணமாக வட்டசெவ்வக, கூம்பு, உருளை போன்ற பல வடிவங்களும் கொண்ட பாத்திரம் அது உள்ளடக்கிய அகப்பொருளின் தன்மையாக விளங்குகிறது.அது போன்றே ஊடகம் எனும் பாத்திரத்தின் வடிவை ஏற்று கலாச்சாரம் இன்று விளங்குகிறது

இன்றைய உலகில் ஊடகமும் அதன் தாக்கமும்
இன்று தினசரி பத்திரிகை, வாரம் இருமுறை, வாரம் ஒருமுறை, இரு வாரங்களுக்கு ஒருமுறை ,மாதம் ஒருமுறை இன்னும் இவை போன்ற பலப்பல இதழ்கள் பல மொழிகளில் கிடைக்கும் பேறு உள்ளது தொலைக்காட்சியும் இணையதளமும் உலகையே சுருக்கி உள்ளங்கையில் வைத்து விட்டது எனில் அது மிகை அல்ல. .இவற்றை பயன்படுத்தும் யாவரும் ஓரிடத்தில் இருந்து கொண்டே அனைத்து நாட்டு நடப்புகளையும் அறிந்து அவற்றை விமர்சித்து தமக்கு தோன்றிய மற்றும் பிடித்த கருத்துக்களை பரிமாறிக்கொள்ள வழிவகைகள் பலவும் உண்டு..
கருத்துக்களை மக்களின் மனதில் உருவாக்குவதில் இவை வகிக்கும் பங்கு அசாதாரணமானது .உருவாக்கிய கருத்துக்களை ஆழமாய் வேரோடச்செய்து மக்களை சுயமாக சிந்திக்கவொட்டாமல் செய்து அவர்களை பெரும் சீர்கேட்டுக்கு ஆளாக்குவதில் இவற்றின் பங்கு பெரிது.
உலகின் பல நாடுகள் அங்கு வாழும் மக்கள் நடைபெறும் நிகழ்வுகள் பற்றி ஏராளம் அறியும் மக்களுக்கு அவற்றை குறித்து ஒரு மனோபாவம் மற்றும் கருத்து உருவாதல் இயல்பு அன்றோ?!!

கலாச்சார சீரழிவு ஒரு விவரணமும் விளக்கமும்
கலாச்சார சீர்கேடு என்பதை  ஒரு வரியில் சொல்வதென்றால் புலியைப்பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டபழமொழியை நினைத்துக்கொள்ளவேண்டியதுதான்.
 உணவை எடுத்துகொண்டால் தமிழர்கள் ஆகிய நாம்  நமது பாரம்பர்யமான உணவு வகைகளை புறம் தள்ளி பீட்சா மற்றும் அதைப்போன்ற பல  துரித  வகை உணவுகளை ஒரு கை பார்க்கிறோம். அதன் பின்னர் அது நம்மை பத்து தலை ராவணன் போல படுத்தும் பாடுகள் ஏராளம் என்பதை அறியாதார் யாரேனும் உண்டோ?
நாம் வாழும் இடம் அது சார்ந்த தட்ப வெப்பம் சூழலை உணர்ந்து அதற்கு ஏற்ற உணவை உண்டு ஆரோக்கியம் பேனா வேண்டிய நாம் பல வகை சிக்கல்களில் மாட்டி அல்லலுறுகிறோம்.
மேலும் இன்று பலப்பல எந்திரங்கள் நமது உடல் உழைப்பை இல்லாமல் செய்து ஆரோக்கியத்தை மாபெரும் சீர்கேட்டுக்கு இட்டுச்சென்று நம்மை பெரும் நோயாளிகள் ஆக்கிய அவலமும் ஒரு சீர்கேடு அல்லவா?
இது போன்றே ஆடை அணிகள் கதையும் உள்ளது. அமெரிக்க ஐரோப்பியர்கள் பாணி உடையை அணிந்து நமது அடையாளம் தொலைந்து போனது.  சடங்குகள் சம்பிரதாயங்கள் பலவும் பொருள் அழிந்து உருமாறி அல்லது தொலைந்தே போயின என்பது நாம் எண்ணி எண்ணி வருந்த வேண்டிய ஒரு நிலை ஆகிப்போனது.
தகவல் பரிமாற்றம் எனும் முகத்துக்கு முகம் கண்டு பேசும் வழக்கம் இன்று கைபேசி மின்னஞ்சல் போன்ற நவீன சாதனங்களால் பாழ் பட்டு சீரழிந்து பொய் விட்ட அவலம் ஐயகோ ! என மனதை பதற வைக்கிறது.
அர்த்தம் பொதிந்த சடங்குகள் சம்பிரதாயங்கள் இன்று அவை ஏதும் புரியாமல் சபையில் நடைபெறும் சீர்கேடும் சகிக்கமுடியாத அவலம் அன்றோ?

முடிவுரை
மனவியல் ரீதியாக இன்றைய ஊடகங்களின் தாக்கம் அங்கிங்கெனாதபடி எங்கும் ஊடுருவி மக்களின்  மனதில் விரும்பத்தகாத விளைவுகள் பலவற்றை உண்டாக்கியுள்ளது.. நன்னடத்தை என்பது திரிந்து இன்று கேடு பயக்கும் பண்புகள் நடைமுறையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு நிர்வாண மனிதர்கள் மத்தியில் கோவணம் கட்டியவன் கோமாளி என்பது போன்ற சூழல. சமூகத்திற்கு  பயன் ஏதும் இன்றி பாதிப்புக்களையே பரிசாக கொடுக்கும் கேட்டினை இனி யார் தான் தட்டி கேட்கவோ தடை செய்யவோ இயலும்?. மனித மாண்பு மரித்துப்போனது ஊடகங்களின் கைங்கர்யமே. தவறை அல்லது எதிர்மறை நிகழ்வுகளை சரி என்று சொல்லும் தவறான மனப்பான்மை அதாவது பெரும்பான்மை என்பது சரியானதும் ஆகும் எனும் சித்தாந்தம் வலுப்பெற காரணி ஊடகங்களே.
பத்திரிகையும் வானொலி மற்றும் தொலைக்காட்சியும் திரும்பத் திரும்ப பொய்களை கூறி மக்களை மூளைச்சலவை செய்து பல்வேறு சீர்கேடுகளை விளைவித்து உலகையே இன்று பாழ் படுத்துகிறது. தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் சித்தரிக்கும் முறை பிறழ்ந்த அவலங்களை பட்டியலிடவும் கூடுமோ?

இறுதியாக ஆனால் மிக உறுதியாக இன்றைய கலாச்சார சீர்கேடுகளுக்கு ஊடகமே மிகப்பெரும் காரணம் ஆகும்   

No comments:

Post a Comment