Thursday, 5 January 2017

மகத நாட்டில் சிரேனிக் என்ற மகாராஜா இருந்தார். தாரிணி என்பது அவருடைய ராணியின் பெயர். அவள் கர்ப்பமாக இருந்த போது, மழையில் நனைய வேண்டுமென்று ஓர் ஆசை ஏற்பட்டது. (பொதுவாகவே கர்ப்பிணிகளுக்கு விசித்திர விசித்திரமான ஆசைகள் ஏற்படுவதுண்டு. ராணி என்றால் கேட்க வேண்டுமா?) சிரேனிக் மகாராஜா அவளுக்காக விசேடப் பாதுகாப்புக்கள் ஏற்படுத்தி, மழையில் சிறிது நேரம் அவளை உலாவ விட்டார். நல்ல காலமாய், உடல் நலம் கெடாமல் ஒரு புத்திரனைப் பெற்றெடுத்தாள் ராணி. மேகத்தின் அருளினால் புத்திரன் பிறந்தாக மகிழ்ச்சியடைந்த மகாராஜா அவனுக்கு மேககுமார் என்று சூட்டினார்.
அரசர்களுக்குரிய எல்லாக் கலைகளையும் தேர்ச்சி பெற்று, யாவர்க்கும் பிரியமுள்ள அரசகுமாரனாக அவன் இருந்த சமயம், ஜைன மத ஸ்தாபகரான மகாவீரர் மகத நாட்டுக்கு விஜயம் செய்தார். அவருடைய நற்போதனைகளைக் கேட்ட மேககுமார், அரச போகங்களைத் துறந்து துறவியாக வேண்டுமென்று ஆசைப் பட்டான். தந்தையும் தாயும் எவ்வளவோ தடுத்துப் பார்த்தும் கேட்கவில்லை. அவன் தனது சீடனாக வரட்டும் என்று கூறி மகாவீரர் அவனைத் தன் பரிவாரத்தில் சேர்த்துக் கொண்டு புறப்பட்டார்.
முதல் நாள் ஏதோ ஒரு பழைய வீட்டில் எல்லாரும் தங்கினார்கள். அன்றிரவு கழிப்பறைக்கு வெளியே, தரையில்தான் மேககுமார் படுக்க வேண்டியிருந்தது. ராத்திரி பூரா அவனுடைய பாயை மிதித்துக் கொண்டும், சில சமயம் அவனையே மிதித்துக் கொண்டும் போவோரும் வருவோருமாக இருந்தார்கள். ஒரு நிமிடம் கூடத் தூங்க முடியாமல் நரக வேதனையில் மூழ்கியவன், மறுநாள் குருவிடம் சென்று, ‘என்னால இப்படிப்பட்ட கஷ்டத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனக்குத் துறவு வாழ்க்கை வேண்டாம். நான் பழையபடி அரண்மனைக்குப் போய்விடுகிறேன்,’ என்று வேண்டிக் கொண்டான்.
மகாவீரர் புன்னகை செய்தார். ‘குழந்தாய், உன்னுடைய பூர்வ ஜன்மக் கதை உனக்குத் தெரியமா? முந்தின பிறவியில் நீ யார் என்று அறிவாயா?’ என்று கேட்டார்.
‘தெரியாது, சுவாமி,’ என்றான் மேககுமார்
சொல்கிறேன், கேள். முன் ஜன்மத்தில் நீ ஒரு காட்டில் யானையாக இருந்தாய். சாதாரண யானையாக அல்ல. ஏராளமான யானைகளுக்கும் பற்பல விலங்குகளுக்கும் அரசனாக இருந்தாய். அந்தக் காட்டில் அடிக்கடி தீ விபத்து நிதழ்வதுண்டு. தப்பித்து ஒதுங்கிக் கொள்ள இடமில்லாமல் விலங்குகள் நெருப்பில் மடியும். இதைக் கண்ட நீ, காட்டின் நடுவே பல மரங்களை வெட்டி சாய்த்து, தரைமட்டமாக்கி, பரந்த மைதானம் போல ஓர் இடத்தை ஏற்படுத்தினாய். காட்டில் தீ பரவும் போது விலங்குகள் அங்கே ஒடி வந்து தஞ்சம் புகுந்து உயிரைக் காத்துக் கொண்டன.
அப்படி ஒரு முறை தீ பரவிய போது பல விலங்குகள் அங்கே வந்து சேர்ந்தன. அவைகளுக்குக் காவல் போல நீ படுத்திருந்தாய். அப்போது உன் வலது காலில் கொஞ்சம் அரித்தால், சொறிந்து கொள்வதற்காகத் தூக்கிளாய். தும்பிக்கையால் சொறிந்து கொண்டுவிட்டு, காலைக் கீழே இறக்க நினைத்தபோது, சரியாய் அந்த இடத்தில் ஒரு முயல் குட்டி ஒண்டிக் கொண்டிருப்பதைக் கண்டாய். காலை இறக்கினால் அது நசுங்கி இறந்து விடும் என்கிற நிலைமை. நீ அதன் மீது இரக்கம் கொண்டு, காலை இறக்காமல் தூக்கியது தூக்கியபடியே வைத்துக் கொண்டிருந்தாய். ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரமல்ல. இரண்டரை நாள்! காட்டுத் தீ அடங்கி, எல்லா மிருங்கங்களும் திரும்பிச் சென்றன. அந்த முயலும் தான் உயிர் தப்பிய அபாயத்தைப் பற்றி அறியாமலே ஓடி விட்டது.
அதன் பின் நீ காலைக் கீழே இறக்கினாய். ஆனால் இரண்டரை நாட்கள் தூக்கியபடியே வைத்திருந்ததால் காலில் ரத்த ஒட்டம் இல்லாமல் போகவே உன்னால் நிற்க முடியவில்லை. நடக்க முடியவில்லை. தடுமாறிக் கீழே விழுந்தாய். எழுந்திருக்க முடியாமல் கொஞ்ச நாளில் தவித்துப் பிராணனை விட்டாய்.
ஒரு முயல் குட்டியைக் காப்பாற்றுவதற்காக முன் ஜன்மத்தில் நீ செய்த தியாகத்தினால்தான் இந்த ஜன்மத்தில் மானிடப் பிறவியை அடைந்தாய். அதிலும் உன்னதமாக மகத நாட்டின் அரசகுமாரனாகப் பிறந்தாய். அப்படிப்பட்ட நீ இரண்டு மணி நேரம் துன்பத்தைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்கிறாயே? இந்தப் பிறவியில் நீ இரக்க சிந்தனை உள்ளவனாக, ஈ எறும்புக்கும் தீங்கு செய்யாதவனாக, துன்புற்றோருக்கு உதவுகிறவனாக வாழ்ந்தாயானால், இன்னும் எவ்வளவு சிரேஷ்டமான பாக்கியங்கள் அடுத்த பிறவியில் கிடைக்கும் என்படித யோசித்துப் பார்.’
மேககுமார் அவர் காலடியில் விழுந்து, ‘என்னை மன்னியுங்கள், மகா குருவே,’ என்றான். மாற்றாரின் துன்பத்தைத் துடைப்பதில் மகிழ்ச்சி கொள்பவனாக, துறவியாகவே வாழ்க்கையைத் தொடர்ந்தான்.

No comments:

Post a Comment