Sunday 8 January 2017

நாகேஷ்.

நடிகர்கள் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் மனதில் பதிவது என்பது அவ்வளவு பெரிய விஷயமல்ல. பாட்ஷா, வேலு நாயக்கர், அலெக்ஸ் பாண்டியன், etc etc. ஹீரோக்களுக்கு இது சரி, எத்தனை நகைச்சுவை நடிகர்களின் பாத்திரப்பெயர் நமக்கு நினைவில் இருக்கின்றது. அவ்வளவாக நினைவில் இருக்காது. ஏனென்றால நாம் அங்கு பார்ப்பது நகைச்சுவை நடிகர்களைத்தான், பாத்திரங்களை அல்ல. அதற்கு பெயர் அவ்வளவாக அவசியமில்லாதது. விதிவிலக்கு வெகு சிலர் நாகேஷ், வடிவேலு.

நாகேஷ் என்றவுடன் நினைவில் வருவது படங்களல்ல, தருமியும், வைத்தியும், ஓஹோ ப்ரொடெக்‌ஷன் செல்லப்பாவும்தான்.

தில்லானா மோகனாம்பாள் படத்தை பார்த்துவிட்டுதான் புத்தகத்தை படித்தேன். படிக்கும் போது சிவாஜி, பத்மினி உருவங்கள் எல்லாம் மறைந்து, என் கற்பனை உருவமே கதை முழுக்க நிறைந்தது. ஆனால் வைத்தியை பற்றி படிக்கும் போது நாகேஷ்தான் என் கண்ணில் தெரிந்தார். இத்தனைக்கும் ஒரிஜினலுக்கும் சினிமாவிற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் இருந்தும் சினிமாவில் இல்லாத காட்சியில் கூட நாகேஷ்தான் தெரிந்தார். அந்தளவிற்கு அதற்கு உயிரை கொடுத்திருக்கின்றார்.


வைத்தியாக நடித்துக் கொண்டிருக்கும் போது கேமராவிற்கு பின்னால் அவருக்கு இருந்த கஷ்டங்களை படிக்கும் போது அதனோடு எப்படி நடிக்க முடிந்தது என்று ஆச்சர்யமளிக்கின்றது. 

இது போன்று பல விஷயங்களை கொண்ட தொகுப்பு நான் நாகேஷ் என்னும் இப்புத்தகம். நாகேஷின் வாழ்க்கை வரலாறு எல்லாம் அல்ல. நாகேஷுடன் அமர்ந்து கொண்டு அவரது பழங்கதைகளை பேசி, அதில் கிடைத்ததை வைத்து தேற்றியிருக்கின்றார்கள்.


குண்டுராவ் நாகேஷ், தாராபுரத்தில் பிறந்து வளர்ந்த கன்னட பிராமணர். அப்பா ரயில்வே உத்தியோகஸ்தர், நாகேஷும் ரயில்வே க்ளார்க். அலுவலக நாடகத்தில் சிறு வேடத்தில் நடிக்க ஆரம்பித்து, சினிமாவில் நுழைந்து தனி இடத்தை பிடித்தவர்.

நகைச்சுவையுணர்ச்சி இயல்பாக இருக்க வேண்டும், பயிற்சியினால் எல்லாம் வராது. நாகேஷின் இயல்பான குறும்புதான் அவருக்கு அப்படிப்பட்ட ஸ்கீரின் ப்ரெசென்ஸை தந்திருக்கின்றது. விடுமுறை தர மறுத்தவரை கடுப்படிக்க உள்ளாடைகளுடன் அலுவலகத்திற்கு செல்வது, தாலுகா ஆபிசில் அமர்ந்து கொண்டு, செய்யாத வேலைக்கு ராஜினாமா தருவது என்று குசும்பு கொப்பளிக்கும் ஆசாமியாகவே இருந்திருக்கின்றார்.

நாம் பார்க்கும் நாகேஷின் முகத்திற்கு பின்னால் இருப்பது மூன்று முறை அடுத்தடுத்து தாக்கிய அம்மையின் திருவிளையாடல். அந்த தாழ்வுணர்ச்சி அவரிடம் பல காலம் இருந்திருக்கின்றது. அதை மீறி வென்றது அவருக்குள் இருக்கும் கவலையில்லாத மனிதன். எதற்கும் துணிந்த, கவலைப்படாத, சரி என்று பட்டதை செய்யும் குணம். அந்த தைரியம் இருந்ததால்தான், சாதரண வயிற்றுவலிக்காரனாக வந்து "வயிறு வலிங்க" என்னும் ஒரு வரி வசனத்தை பேச வேண்டிய காட்சியை, தயங்காமல் விஸ்தாரித்து, சிறந்த நடிகர் பரிசையும் தட்டி செல்ல முடிந்தது. அதுவும் எம்.ஜி.ஆரிடம் இருந்து. அதே தைரியம்தான் "நீ புது நடிகன், பெரிய நடிகரோடு நடிக்கிறோம்னு பயப்படாம நடி" என்ற சிவாஜியிடம் "புது நடிகனோட நடிக்கிறோம்னு நீங்க உங்க நடிப்ப கோட்ட விட்டுடாதீங்க" என்று கூற வைத்துள்ளது.

நாகேஷை உருவாக்கியது பாலச்சந்தர் என்ற ஒரு பிம்பம் உண்டு, ஆனால் கே.பிக்கு முன்னரே அவர் பல நாடகங்களில் நடித்துள்ளார் என்பதும், திரைப்படத்தில் முக்கிய வேஷத்தை தந்து ஒரு புதிய பாதையை அமைத்தவர் ஶ்ரீதர் என்பதும் புதிய தகவல்கள்.

நாகேஷ் என்ன செய்தார், இயக்குனர் சொன்னதை செய்தார், நடித்தார் என்று கூறலாம். ஆனால் இயக்குனரையும் மீறி பல இடங்களில் அவரது சொந்த சரக்கும் உள்ளது. தருமியின் பல வசனங்கள் அவரது சொந்த வசனங்கள். "அவனில்லை அவன் வரமாட்டான்", வைத்தி பேசும் "மெயினே சும்மா இருக்கு, சைடு நீ ஏம்பா துள்ற" இது எல்லாம் அவரது சொந்த சரக்கு. சிவாஜியுடனான அவரது உரையாடல் அப்படியே சர்வர் சுந்தரத்திலும் இருக்கும், சிவாஜிக்கு பதில் மனோரமா.

நாகேஷுக்கு பொருத்தமானது நகைச்சுவை பாத்திரங்களும், சாதரணர் பாத்திரங்களும்தான். சோக பாத்திரங்கள் என்றால் கொஞ்சம் அதிகமாகவே பிழிந்துவிடுவார். சும்மா இல்லாமல் அவரை அம்மாதிரி பாத்திரங்களில் நடிக்க வைத்து கொஞ்சம் வீணடித்து விட்டனர். நடுவே மதுவால் துவண்டு மீண்டு வந்தும் கலக்கியுள்ளார். அதைப் பற்றி அவர் கூறுவது, அவருக்கும் ஒரு பெண்ணிற்குமான உரையாடல்

"நாகேஷா நீங்கதான் போய்ட்டீங்களாமே"

"உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரியில இருந்தேன், இப்போ எல்லாம் சரியாடுச்சி"


"அதான் நீங்க போய்ட்டீங்கனு பேப்பர்க்காரனே போட்டுட்டானே"

நிஜ வாழ்க்கையில் கற்பனையை விட சுவாரஸ்யமான நகைச்சுவை கிட்டும்.

கட்டுரைகளுக்கு தொடர்ச்சி எல்லாம் ஏதுமில்லை. துண்டு துண்டான விஷயங்கள். கல்கியில் தொடராக வந்தது. ரஜினி கமல் இல்லாமல் சினிமா ஏது, அதனால் அவர்களை பற்றி இரண்டு பகுதிகள். ஜெயகாந்தனை பற்றி ஒரு பகுதி, பல பிரபலங்களை பற்றிய விஷயங்கள் என்று போகின்றது. சில விஷயங்கள் போரடித்தாலும், பல சுவாரஸ்யமானவை. குறை என்றால்  கட்டுரைகளை சரியாக முடிக்காததுதான். ஒரு விஷயத்தை படித்தால் ஏதாவது மனதில் தோன்ற வேண்டும், பல கட்டுரைகளை படித்தால், "அப்படியா அதுக்கு என்ன இப்போ" என்றுதான் தோன்றுகின்றது.

நாகேஷ் என்னும் ஒரு மனிதனை முழுவதும் தெரிந்து கொள்ள இது உதவாது. நாகேஷ் பற்றி சில தகவல்களை, சினிமாதாண்டிய நாகேஷை, சினிமா உலகை பற்றி சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாம். 

No comments:

Post a Comment