Wednesday, 11 January 2017

விவேகானந்தர்-2

புவனேஸ்வரி அம்மையார் மகனுக்கு சூட்டிய பெயர் விரேஸ்வரன். அந்தப் பெயரிலேயே அவரை அழைத்தார். ஆனால், ஊரார் முன் அவர் குடும்பத்தினர் வைத்த நரேந்திரநாத் தத்தா என்ற பெயர் தான் நிலைத்தது. அதுவும் சுருங்கி, நரேன் என்ற பெயர் தான் நிலைத்தது. குழந்தை நரேனுக்கு ஐந்து வயது எட்டிவிட்டது. அந்த சமயத்தில் அவன் செய்த சேஷ்டைகள் அதிகம். சேஷ்டை என்றால் சாதாரணமான சேஷ்டை அல்ல...வெறித்தனமான சேஷ்டை. அவன் செய்யும் சேஷ்டையில் புவனேஸ்வரி மட்டுமல்ல, பொறுமை மிக்க சகோதரிகள் இருவரும் கூட எரிச்சலடைந்து விடுவார்கள். உறவினர்கள் யாராவது வீட்டுக்கு வந்தால், உடனே கிளம்பி விடுவார்கள். அவர்களை பாடாய்படுத்தி விடுவான். சில சமயங்களில் அவனது சப்தம் பக்கத்து வீடுகளையே கலக்கி விடும். அதுபோன்ற சமயங்களில் புவனேஸ்வரி ஒரு பானை தண்ணீரை எடுத்து வந்து நரேனின் தலையில் கொட்டி விடுவார். அதற்கும் அவன் அடங்கமாட்டான். அவனை சகோதரிகள் இருவரும் பிடித்துக் கொள்ள, புவனேஸ்வரி அவனது காதில் நம சிவாய, நமசிவாய என ஓதுவார். அந்த மாய மந்திரம் மட்டுமே அவனைக் கட்டுப்படுத்தும்.

அப்படியே பெட்டிப்பாம்பாய் அடங்கி விடுவான். மறுநாள் மீண்டும் சேஷ்டை ஆரம்பித்து விடும், ஒரு சமயத்தில் அவனது சகோதரிகளிடம் வம்புச்சண்டை இழுத்தான் நரேன். அவர்கள் அவனை விரட்டினர். பிடிபடாமல் தப்பி ஓடினான். ஓரிடத்தில் கழிவுநீர் ஓடை குறுக்கிட்டது. நரேனால் தப்ப முடியாத நிலை. சகோதரிகளிடம் சிக்கிக் கொள்வோமே என்ன செய்யலாம் என கடுகளவு நேரம் தான் சிந்தித்தான். அவனது குட்டி கால்களைக் கொண்டு, அந்த ஓடையை தாண்டுவது என்பது இயலாத காரியம். உடனே சாக்கடைக்குள் குதித்து விட்டான். உள்ளேயே நின்று கொண்டான். அந்தப் பெண்களால் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. அந்தக் குட்டிப்பயலைப் பிடிப்பதற்காக அவர் களும் சாக்கடைக்குள் இறங்க முடியுமா என்ன!

சிறுவயதிலேயே உனக்கு எவ்வளவு தைரியம்? என்றுகத்தினர் சகோதரிகள்.தப்பிக்க வேண்டும் என நினைத்து விட்டால் கடலுக்குள் கூட குதிப்பேன், என்றான் நரேன்.நிஜம் தான்...பிற்காலத்தில் வாழ்க்கைக் கடலில் இருந்து தப்பித்து ஆன்மிக ஞானம் பெற அவர் தென்குமரிக் கடலில் குதித்தும் விட்டாரே!தாய் புவனேஸ்வரிக்கு இந்த தகவல் சென்றது. அவள் கண்ணீர் வடித்தாள். சிவபெருமானே! நான் உன்னிடம் கேட்டது பிள்ளை வரம். ஆனால், நீ உன் பூதகணங்களில் ஒன்றை அனுப்பி என் வயிற்றில் பிறக்கச் செய்து விட்டாயே! என்று சொல்வாள்.தாயும், சகோதரிகளுமாய் சேர்ந்து ஒரு முடிவெடுத்தனர். இவனை அடக்க நாம் மூவர் மட்டும் போதாது. இன்னு இரண்டு பணிப்பெண்களை வேலைக்கு சேர்க்க வேண்டும் என்று. அதன்படியே ஐந்து பேர் சேர்ந்து ஒரு ஐந்து வயது சிறுவனை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்படியானால், விவேகானந்தர் சின்னவயதில் சேஷ்டைகள் மட்டும தான் செய்திருக்கிறாரா? அந்த வீரக்குழந்தையிடம் நல்ல குணங்கள் எதுவுமே இல்லையா? என்று சிந்திக்கலாம். எந்தளவுக்கு நரேன் சேஷ்டை செய்வானோ, அதே அளவுக்கு நல்ல குணங்களையும் கொண்டிருந்தான். யார் எதைக் கேட்டாலும் கொடுத்து விடுவான். அதன் மதிப்பைப் பற்றி அவன் கவனிப்பதில்லை. தன் வயதை ஒத்த சிறுவர்களுக்கு தன்னிடமுள்ள விளையாட்டு பொருட்களை வாரி வழங்கி விடுவான். சாதுவான மிருகங்கள் என்றால், அவனுக்கு அளவு கடந்த பிரியம். தன் வீட்டில் வளர்க்கப்பட்ட பசுக்களைத் தடவிக் கொடுப்பான். அவை மா என கத்தும்போது, அவற்றின் தேவையை அறிந்து புல், வைக்கோல் போடுவான். தண்ணீர் கொண்டு வந்து வைப்பான். வீட்டுக்கு வரும் புறாக்களுக்கு இரை போடுவான். வீட்டில் வளர்த்த மயில் ஒன்றின் மீது அவனுக்கு ரொம்ப இஷ்டம். அதை தன் நட்பு போலவே கருதினான். மேலும் வீட்டில் இருந்த குரங்கு, ஆடு, வெள்ளை பெருச்சாளி ஆகியவற்றுக்கு இலை, காய்கறிகள், உணவு கொடுத்து மகிழ்வான். தர்மசிந்தனை அவனிடம் அதிகம். துறவிகள் யாரையாவது கண்டுவிட்டால், அவர்களுக்கு உணவோ, உடையோ எதைக் கேட்கிறார்களோ அதைக் கொடுத்து விடுவான். ஒருமுறை வீட்டில் இருந்த விலைஉயர்ந்த பட்டு சால்வையை ஒரு துறவிக்கு கொடுத்து விட்டான். இதையறிந்த தாய், இவனை இப்படியே விட்டால், வீட்டிலுள்ள எல்லாவற்றையும் தானம் செய்து, நம்மை ஒன்றுமில்லாமல் செய்து விடுவான் போல் இருக்கிறதே! என நினைத்தார்.

ஒருமுறை நான்கைந்து துறவிகள் வீட்டுப் பக்கமாக வந்தனர். ஒவ்வொருவரும் தங்கள் தேவையை நரேனிடம் சொன்னார்கள்.நரேன் அவற்றை எடுக்கப் போன சமயம் புவனேஸ்வரி கவனித்து விட்டார். அவனை ஒரு அறையில் பூட்டி வைத்து விட்டாள். நரேன் விடாக்கண்டன் ஆயிற்றே! அந்தத் துறவிகளை தன்னை அடைத்து வைத்த அறை ஜன்னல் பக்கமாக வந்தான். அந்த அறையில் இருந்த சில ஆடைகளை ஜன்னல் வழியாக துறவிகளை நோக்கி வீசி எறிந்தான். ஒரே ஒருவருக்கு மட்டும் ஒன்றும் கொடுக்க வழியில்லை. சற்றே யோசித்த நரேன், தான் அணிந்திருந்த ஆடையை அவிழ்த்து அவரிடம் கொடுத்து விட்டான். வயதும் கூடியது. பத்து வயதைக் கடந்து விட்டான். சேஷ்டை, தானம் என்ற மாறுபட்ட குணங்களின் வடிவமாகத் திகழ்ந்த நரேன், பாடம் படிக்கும் போது மட்டும் நல்ல பிள்ளையாகி விடுவான். அம்மா கதை சொன்னால் போதும். உம் கொட்டிக்கொண்டு கவனமாகக் கேட்பான்.அம்மாவுக்கு ராமாயணமும், மகாபாரதமும் அத்துப்படி. ராமனின் கதையை உருக்கத்துடன் அவள் சொல்வதைக் கேட்பான் நரேன். சீதாதேவி பட்டபாடுகளை அவள் விவரித்த போது, நரேன் நெஞ்சம் நெகிழ்ந்து போவான்.அம்மா! அவளுக்கு ஏற்பட்ட சிரமம் யாருக்கும் வரக்கூடாது, என்பான். ராமபிரான் சீதையைப் பிரிந்து தவித்தது அவன் மனதில் பாதிப்பை ஏற்படுத்தினாலும், அவரது வில்வித்தை அவனுக்குள் வீரத்தை ஊட்டியது.சீதாராமன் மீது ஏற்பட்ட பக்தியில், அவர்களது மண்சிலையை கடைக்கு போய் வாங்கி வந்தான். அவனுக்கு ஒரு நண்பன் இருந்தான். அவனுக்கு மந்திரங்கள் தெரியும். அவன் ராமன் சிலைக்கு பூஜை செய்வான்.ஒருநாள் இருவரும் ராமன் சிலையுடன், இருவரும் மாயமாகி விட்டனர். அவனது நண்பன் வீட்டாரும், நரேனுடன் விளையாடப் போன தங்கள் மகனைக் காணவில்லையே என வந்து விட்டனர். வீட்டில், உறவினர்கள் வீடுகளில் தேடியலைந்தனர். எங்குமே அவர்கள் இல்லை. புவனேஸ்வரியும், சகோதரிகளும் தவித்தனர்.


பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. ஒரேயொரு அறை மட்டும் பூட்டிக்கிடந்தது. அந்த அறையை தள்ளிப்பார்த்தனர். உள் பக்கமாக தாழிடப்பட்டிருந்தது தெரிந்தது. எல்லா உறவினர்களும் வந்து விட்டனர். அவர்கள் தங்கள் பலம் கொண்ட மட்டும் கதவை தட்டிப் பார்த்தனர். பதில் ஏதும் இல்லை. பயம் ஆட்டிப் படைத்தது. வேறு வழியின்றி கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். ஒரு மூலையில் நரேந்திரனும், அவனது தோழனும் நிஷ்டையில் இருப்பதை பார்த்தனர். தாய் புவனேஸ்வரி மகனை அன்புடன் அணைத்துக் கொண்டாள். இப்படியாக ராமன் மீது இளம் வயதிலேயே அபார பக்தி வைத்திருந்தார் விவேகானந்தர்.ஆனால், இது நீண்ட நாள் நிலைக்கவில்லை. ஒருமுறைஇல்லறவாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களைப் பற்றி யாரோ சிலர் பேசிக்கொண்டிருக்கும் போது நரேந்திரன் கேட்டுவிட்டான். அவனது சிறிய மூளை வேறுவிதமாக சிந்தித்தது. 

திருமண வாழ்வில் இவ்வளவு கஷ்டங்கள் இருக்கிறது என்றால் நாம் வணங்கும் ராமரே இதே தவறை அல்லவா செய்திருக்கிறார். அப்படியானால் ராமர் தவறு செய்திருக்கிறார். தவறு செய்த ராமன் எப்படி கடவுளாக முடியும். இனிமேல், இந்த ராமனை வணங்க மாட்டேன் என கூறிவிட்டு, சீதாராமர் பொம்மையை தூக்கி வீசினான். பொம்மை நொறுங்கி விட்டது. அம்மாவிடம் ஓடிச் சென்றான். கதறி அழுதான். எனது ராமன் தவறு செய்துவிட்டான். அவன் இல்லறத்தில் இறங்கியது தவறு. அதன் காரணமாக அவன் பல கஷ்டங்களை அனுபவித்திருக்கிறான். எனவே, ராமனை வணங்க மாட்டேன். எனக்கு வேறு ஏதாவது வழி சொல் என்றான். புவனேஸ்வரி அவனைத்தேற்றினாள். இதற்காக கவலைப்படாதே! உனக்கு கல்யாணம் செய்த சுவாமிகளை பிடிக்கவில்லை என்றால் திருமணம் செய்து கொள்ளாத சுவாமியின் பொம்மையை தருகிறேன். காசியில் இருக்கும் கைலாசநாதர் தவயோகத்தில் இருப்பவர். அவரது சிலையை உனக்கு தருகிறேன். அந்த துறவி பொம்மையை வைத்து விளையாடு. அந்த பொம்மைக்கு பூஜை செய், எனச் சொல்லி விஸ்வநாதரின் தவக்கோல பொம்மையைக் கொடுத்தாள்.

இந்த பொம்மைதான் நரேன் என்ற சிறுவன், விவேகானந்தர் என்ற மாபெரும் சக்தியாக உருவெடுக்க காரணமாயிற்று.கைலாசநாதரின் துறவிக்கோலத்தை நரேன் பெரிதும் ரசித்தான். அவரைப் போலவே தாமும் ஒரு துறவியாக வேண்டும் என நினைத்தான். அந்த பொம்மையின் முன்னால் அமர்ந்துவிட்டால் எதைப்பற்றியும் கவலைப்பட மாட்டான். தன் நண்பர்களை தியான விளையாட்டுக்கு வருகிறாயா? எனச் சொல்லி அழைப்பார். பல நண்பர்கள் வருவார்கள். ஒருநாள் தியானம் செய்துகொண்டிருந்த போது, ஒரு நல்ல பாம்பு அந்த வழியாக வந்தது. அது சீறும் சத்தம் கேட்டு மற்ற நண்பர்கள் ஓடிவிட்டனர். நரேந்திரனையும் எழுப்பினர். ஆனால், நரேந்திரன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தான். அவனை யாராலும் எழுப்ப முடியவில்லை. நல்ல பாம்பு அவனருகே வந்தது. படமெடுத்து அவன் முன்னால் நின்றது. என்ன நினைத்ததோ தெரியவில்லை. மீண்டும் ஊர்ந்து சென்றுவிட்டது. இப்படி எதற்கும் கலங்காமல் இளம் வயதிலேயே விவேகானந்தரின் தியான வாழ்க்கை அமைந்தது. 1870ல் ஈஸ்வரசந்திர வித்யாசாகர பள்ளியில் நரேன் சேர்ந்தான். மிகவும் துடிப்பாக இருப்பான். 

கோலி விளையாட அவனுக்கு மிகவும் பிடிக்கும். மல்யுத்தம் அதைவிட பிடித்த விளையாட்டு. வகுப்பு இடைவேளையில் மைதானத்தில்தான் அவனைப் பார்க்க முடியும். அதுமட்டுமின்றி, ஏதேனும் தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலேயே அவனது மனதில் இருந்தது. அதற்கு அச்சாரமாக கல்கத்தாவில் ஒரு கேஸ் தொழிற்சாலையையும், சோடா கம்பெனியையும் வைத்தான். பள்ளியில் படித்துக் கொண்டே இந்த தொழிலையும் அவன் கவனித்துக் கொண்டான். ஒரு கட்டத்தில் பள்ளியில் ஆங்கில வகுப்பு துவங்கினர். அந்நிய மொழி என்பதால் நரேந்திரனுக்கு அது பிடிக்கவில்லை. இருந்தாலும் ஆசிரியர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க அதையும் கருத்தூன்றி படித்தான். பிற்காலத்தில் சிகாகோ நகரில் அரியதொரு சொற்பொழிவை நிகழ்த்த இந்த மொழி அவனுக்கு கை கொடுத்தது.பிறருக்கு ஒரு துன்பம் வந்தால் நரேந்திரனுக்கு பொறுக்க முடியாது. பள்ளியில் படிக்கும் காலத்தில் ஒரு ஆசிரியர் தன் சக மாணவனை அடித்து விட்டார் என்பதற்காக விவேகானந்தர் ஒரு பெரும் போராட்டமே நடத்தி விட்டார். 

ஒருநாள் ஏதோ ஒரு காரணத்திற்காக ஆசிரியர் ஒரு மாணவனை கடுமையாக அடித்து விட்டார். அதைப் பார்த்து விவேகானந்தரின் நாடி நரம்புகள் துடித்தன. அவர் ஆசிரியரை கேலி செய்யும் வகையில் சத்தம் போட்டு சிரித்தார். உடனே, ஆசிரியரின் கோபம் விவேகானந்தர் மீது திரும்பியது. நீ உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் உன்னையும் அடித்து நொறுக்குவேன் என ஆசிரியர் எச்சரித்தார். விவேகானந்தர், அதை கண்டுகொள்ளவே இல்லை. தொடர்ந்து சிரித்துக் கொண்டிருந்தார். ஆசிரியருக்கு ஆத்திரம் அதிகமாயிற்று. விவேகானந்தரின் காதைப் பிடித்து திருகினார். விவேகானந்தர், சற்றும் கண்டு கொள்ளவில்லை. காதில் இருந்து ரத்தம் வடிந்தது. அப்போதுதான், நிலைமையை புரிந்து கொண்ட விவேகானந்தர் ஆத்தரமும், அழுகையும் பொங்க, இனிமேலும் என் காதை திருகினால் நான் சும்மா விட மாட்டேன். என்னை அடிக்க நீங்கள் யார்? ஜாக்கிரதையாக இருங்கள். இனிமேல் என் அருகில் நீங்கள் வரக்கூடாது, என சப்தம் போட்டான். அந்த சமயத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளே வந்தார். அவரிடம் நடந்ததை தைரியமாக சொன்னார். இனிமேல் பள்ளிக்கே வரமாட்டேன் என சொல்லிவிட்டு கிளம்பி விட்டார். ஆனாலும், தலைமையாசிரியர் அவரை சமாதானம் செய்து வகுப்பில் இருக்க வைத்தார். அவரது விசாரணையில் ஆசிரியரின் பக்கம் நியாயம் இல்லை என்பது தெரியவந்தது. ஆசிரியரை அவர் கண்டித்தார். 

பள்ளியில் மட்டுமல்ல... வெளியில் பழகும் தன் நண்பர்களுக்காகவும்உயிரையே கூட கொடுப்பார் விவேகானந்தர்.அவருக்கு அப்போது வயது 11. ஒருமுறை கங்கையை சுற்றியுள்ள பகுதிகளை சுற்றிப்பார்க்க சென்றனர் நரேனும் அவனது தோழர்களும். கங்கையின் அக்கரைக்கு படகில் போய்விட்டு அதே படகில் திரும்புவதற்காக ஏறினர். அந்த நேரம் பார்த்து உடன் வந்தவர்களில் ஒருவனுக்கு திடீர் மயக்கம்...என்ன செய்வதென்றே தெரியவில்லை. இருந்தாலும் அவனைத்தூக்கிப் படகில் போட்டனர்.படகுக்காரன் பயந்துவிட்டான். தம்பிகளா! போகிற வழியில் இந்தப் பையனுக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா, என் படகில் யாருமே ஏறமாட்டாங்க! நீங்க எல்லாரும் இறங்கிடுங்க, என்றான்.எல்லாரும் அவனைக்கெஞ்சினர். நரேந்திரன் மிக பவ்யமாக அவனிடம் பேசி, இரண்டு மடங்கு கட்டணம் தருவதாகச் சொல்லி, ஒரு வழியாக படகில் ஏற்றியாயிற்று. கரை அருகே நெருங்கவும் படகுக்காரன் கூலியைக் கேட்டான். இவர்கள் பேசிய கூலியைக் கொடுத்தனர். அவன் தகராறு செய்தான். இன்னும் அதிகம் வேண்டும். இல்லாவிட்டால் கரைக்கு போகமாட்டேன். 

இந்த சுகமில்லாதவனையும் தூக்கிக் கொண்டு நீந்தி கரைக்கு போங்கடா, என்றான். விவேகானந்தர் பிற்காலத்தில் குமரிக்கடலில் குதித்து நீந்தப் போகிறவர் ஆயிற்றே! விடுவாரா என்ன! கங்கையில் குதித்து விட்டார். நீச்சலடித்து கரைக்கு வந்தார். அங்கே இரண்டு ஆங்கில சிப்பாய்கள் உலவிக் கொண்டிருந் தனர். அவர்களிடம் தனக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில் பேசி, படகுக்காரன் தகராறு செய்வதை விளக்கினார். புரிந்துகொண்ட அவர்கள் படகுக் காரனை சைகை காட்டி கரைக்கு அழைத்தனர். பையன்களை இறக்கிவிடும்படி கட்டளை யிட்டனர். படகுக்காரன் அலறிவிட்டான். உடனடியாக வந்து எல்லாரையும் இறக்கிவிட்டான். இப்படி சிறுவயதிலேயே நினைத்ததை சாதிக்கும் குணம் விவேகானந் தரிடம் ஏற்பட்டது. இன்னொரு முறை, அவரது நண்பர்கள் கல்கத்தா துறைமுகத்திற்கு வந்திருந்த ஆங்கிலேய போர்க்கப்பலை சுற்றிப்பார்க வேண்டுமென்ற விருப்பத்தை அவரிடம் தெரிவித்தனர்.

கப்பலைப் பார்க்க வேண்டுமென்றால் துரையிடம் அனுமதி வாங்க வேண்டும். அவரைப் பார்ப்பது குதிரைக் கொம்பு.அதிலும் ஒரு சிறுவனை யாராவது அனுமதிப்பார்களா? நம் சின்ன நரேந்திரன் கிளம்பி விட்டார். துரையின் அலுவலகத்துக்கு சென்றார். வாசலில் நின்ற காவலன் அவரைத் தடுத்து விட்டான்.டேய்! உள்ளே துரை இருக்கிறார். இங்கே என்னடா உனக்கு வேலை? என்றான்.நானும் என் நண்பர்களும் கப்பலைப் பார்க்க வேண்டும். எனக்கு வழிவிடுங்கள், என்றார் விவேகானந்தர்.போடா! பெரிய பெரிய ஆட்களுக்கே அந்த அனுமதி கிடைக்காது. நீ கப்பலில் ஏறுவதாவது. உழக்கு மாதிரி இருக்கிறே!ஆசையைப் பாரேன், என விரட்டி விட்டான்.முடியாது என்ற வார்த்தையே விவேகானந்தரின் வாழ்க்கை சரிதத்தில் ஒருமுறை கூட இடம் பெற்றதில்லை. சின்ன நரேன் யோசித்தார்.துரையின் அலுவலகத்திற்கு செல்ல குறுக்கு வழி இருக்கிறதா என சுற்றுமுற்றும் பார்த்தார். துரை அந்தக் கட்டடத்தின் மாடியில் இருப்பதை புரிந்து கொண்டார். கட்டடத்தின் பின்பகுதிக்குச் சென்றார். அங்கே மாடி படிக்கட்டு இருந்தது. அங்கே காவலர்கள் இல்லை. 

இதில் ஏறினால், துரை இருக்கும் அறையை அடைந்து விடலாம் என அனுமானித்தான். பூனை போல பதுங்கி ஏறிவிட்டான்.அந்த படிக்கட்டு ஒரு அறையின் வாசலை அடைந்தது. உள்ளே எட்டிப்பார்த்தால் துரை இருந்தார். அங்கே ஒரு சிறிய வரிசை நின்றது. எல்லாரும் கப்பலைப் பார்க்க அனுமதி வாங்க வந்தவர்கள். நம் குட்டியும் வரிசையில் நின்று கொண்டார். துரை தலை நிமிராமலே எல்லாருக்கும் கையெழுத்து போட்டுக் கொண்டிருந்தார். விவேகானந்தரும் தனது விண்ணப்பத்தை நீட்ட ஏறிட்டு பார்த்தார் துரை. சிரித்து கொண்டார். கையெழுத்து போட்டு விட்டார். நன்றி சொல்லிவிட்டு வெளியேறினார் விவேகானந்தர்.இது மட்டுமா! அவரிடம் அச்சம் என்பதே இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக இன்னொரு முக்கிய சம்பவத்தையும் சொல்லலாம். நமது குழந்தைகள் மாடிப்படியில் இருந்து இறங்கினாலே பார்த்து இறங்குடா, வழுக்கிடாமே என்போம். விவேகானந்தர் வீடும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர்களும் விவேகானந்தரைதிட்டிக்கொண்டும், பயமுறுத்திக் கொண்டும் தான் இருப்பார்கள். ஆனால், தனிப்பிறவியான விவேகானந்தர் இதையெல்லாம் காது கொடுத்து கேட்கவே மாட்டார்.

மரம் விட்டு மரம் தாவுவது அவரது அன்றாடப் பழக்கங்களில் ஒன்று.இதை நரேந்திரனின் தாத்தா கண்டிப்பார்.டேய் நரேன்! மரத்தில் இருந்து குதிக்காதே, என்பார். நரேனோ தாத்தா முன்னிலையிலேயே மரத்தில் இருந்து குதிப்பார். தாத்தாவுக்கு கடும் ஆத்திரம். அவரைத் தடுத்து நிறுத்த, நரேன்! அந்த மரத்தின் பக்கம் இனிமேல் போகாதே. அதன்மேல், ஒரு பிரம்மராட்சஸ் (பேய்) இருக்கிறது. அது உன் கழுத்தை நெரித்து விடும், என்றார். விவேகானந்தரும் தாத்தாவிடம், அப்படியா என்றார். அதன்பின் மற்ற பையன்கள் அந்த மரத்தின் பக்கம் போவதையே தவிர்த்து விட்டனர்.விவேகானந்தர் அடுத்த நிமிடமே மரத்தில் ஏறப்போனார். நண்பர்கள் தடுததனர். ஏறாதே நரேன். தாத்தா சொல்வது நிஜமாகத்தான் இருக்கும், என்று.நரேன் அவர்களிடம், அட மடையர்களா! நாம் இத்தனை நாளும் இந்த மரத்தில் ஏறியிருக்கிறோம். ஏதும் நடக்கவில்லை. இன்று புதிதாக என்ன நடந்து விடும்? ஒருவேளை தாத்தா சொன்ன ராட்சஸ் இதில் இருக்குமானால் அது நம்மை இதற்குள் பிடித்திருக்க வேண்டுமல்லவா? கொஞ்சமாவது யோசியுங்கள், எனச் சொல்லிவிட்டு மரத்தில் விறுவிறுவென ஏறினார். உச்சியில் இருந்து டைவ் அடித்தார். தாத்தா! இப்போ நான் என்ன செய்தேன் தெரியுமா? நீங்கள் சொன்ன ராட்சஸூக்கு டைவ் அடிக்க கற்றுக் கொடுக்கிறேன், என்று சொல்லி, சிரித்துக் கொண்டே ஓடிவிட்டார்
இளவயதைத் தாண்டி வாலிப பருவம் வந்ததும் வேறென்ன...விஸ்வநாத தத்தருக்கு மகனுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. மகன் நரேந்திரனோ...திருமணமா... உஹூம்.. என்றார். ஆனாலும், அவர் மனதில் குடும்பநிகழ்வுகள் ஊசலாடாமல் இல்லை. குடும்பம், மனைவி, குழந்தைகள் என்று தன் மனதிற்குள் ஒரு படம் வரைந்து பார்த்தார். இதெல்லாம் வேண்டாம்...சத்திய சொரூபனான இறைவனை நேரில் காண வேண்டும், அதற்கு இல்லறம் சரி வராது. ஒரே ஒரு காவிஆடையுடன் உலகம் முழுக்க சுற்றியேனும் கடவுளைக் கண்டுவிட வேண்டும் என்றும் ஒரு படம் போட்டார்.விஸ்வநாததத்தர் தன் மகனிடம், நரேன்! நான் இப்போது ஒரு பெரிய பணக்கார சம்பந்தம் பேசி முடிக்க இருக்கிறேன். அவர்கள் உன்னை ஐ.சி.எஸ்.படிக்க இங்கிலாந்துக்கு அனுப்ப பணம் தருகிறார்கள். இதுதவிர ஏராளமான வரதட்சணையும் தருகிறார்கள். பெண்ணும் பேரழகி. நீ படித்து கலெக்டராக வேண்டும். உன்னை இந்த ஊரே பார்க்க வர வேண்டும், என்றார் கண்களில் கனவலைகள் மிதக்க.

நரேன் எப்படி இதற்கு ஒத்துக்கொள்வார்? இந்த கல்கத்தா நகரம் மட்டுமல்ல...இந்த உலகமே என்னை பார்க்க வரப்போகிறது? என்று எப்படி சொல்ல முடியும்? அவர் அமைதியாக மறுத்துவிட்டார்.இல்லை தந்தையே! திருமணம் என்ற பந்தத்துக்குள் என்னை தள்ளாதீர்கள். ஐ.சி.எஸ். என்ற படிப்பு வெறும் சம்பளத்தையும், அதிகாரத்தையும் தான் தரும். நான் ஞானம் என்ற பெரிய படிப்பைக் கற்றுக் கொள்ளப்போகிறேன். என்னை என் வழியில் விட்டு விடுங்கள், என்று சொல்லிவிட்டார். திருமணம் தொடர்பான நரேனின் பெற்றோர் விருப்பம் கானல்நீராகவே போய்விட்டது. நரேந்திரன் கல்கத்தாவில் சிறந்து விளங்கிய பிரம்மசமாஜத்தில் சேர்ந்தார். இந்த இயக்கத்தை ஸ்தாபித்தவர் ராஜாராம் மோகன்ராய். அதன்பின் பலர் நிர்வாகம் செய்தனர். விவேகானந்தரின் காலத்தில் அதை ஆட்சி செய்தவர் தேவேந்திரநாத் தாகூர். இவர் யார் தெரியுமா? இந்த தேசம் இன்றும் இசைத்துக் கொண்டிருக்கிறதே ஜனகணமன என்ற தேசியப்பாடல். அதனை இயற்றிய ரவீந்திரநாத் தாகூரின் தந்தை. இந்த இயக்கம் இந்துமதத்தில் அதுவரை இருந்த சில மூடப்பழக்க வழக்கங்களை களைந்தெறிந்து புதிய பாதையில் நடைபோட்டது. பல தெய்வ வழிபாடு வேண்டாம். ஒரே தெய்வம் என்பது இதன் கொள்கை.

கணவனை இழந்தபெண்கள் மீண்டும் திருமணம் செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை இந்த இயக்கம் எதிர்த்தது. இப்படிப்பட்ட முற்போக்கான கொள்கைகள் நரேந்திரனை ஈர்த்தன. எனவே தான் இந்த இயக்கத்தில் சேர்ந்தார்.ஒருமுறை நரேந்திரன் தேவேந்திரநாத் தாகூரைச் சந்தித்தார். அவனது மனதுக்குள் ஒரு தாகம்.எல்லோரும் கடவுளைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால், அவரை நேரில் பார்த்திருக்கிறார்களா? அப்படி யார் ஒருவர் பார்த்தாரோ அவரே எனது குரு. அவரிடம் இருந்து கடவுளைக்காணும் அந்த வித்தையை கற்பேன் என அடிக்கடி சொல்வார்.தேவேந்திரநாத்திடம் ஓடினார்.சுவாமி! தாங்கள் பிரம்ம சமாஜத்தின் மூத்த உறுப்பினர். தியானத்தில் கை தேர்ந்தவர். கடவுளின் கல்யாண குணங்களை பற்றி அதிகம் தெரிந்தவர். சொல்லுங்கள். நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா? என்னால் அவரைப் பார்க்க முடியுமா? அதற்காக நான் செய்ய வேண்டும்? என்று சரமாரியாக கேள்விகளை அடுக்கினார்.

தேவேந்திரநாத் தாகூர் அந்த இளைஞனின் கண்களை உற்று நோக்கினார்.மகனே! நீ சிறந்த யோகியாவாய், என்றார்.நரேந்திரனுக்கு இந்த பதில் எரிச்சலை அளித்தது. நான் கேட்டதற்கு இவரிடம் பதில் கிடைக்கவில்லை. அப்படியானால், இவர்களெல்லாம் கடவுள் என்ற ஒருவர் இருப்பதாக நாடகமாடுகிறார்களா? கருணையின் வடிவம் கடவுள் என்பதெல்லாம் போலியான வாதமா? அவர் சிந்தித்தார்.விவேகானந்தரிடம் இருந்து நம் நாட்டு குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உண்டு. எவ்வளவு பெரிய மனிதர் தேவேந்திரநாத்! அவரிடம் இருந்து நேரடி பதில் கிடைக்கவில்லை என்றதும், விவேகானந்தர் எப்படியெல்லாம் சிந்தித்திருக்கிறார் பாருங்கள். பெரியவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக எல்லாவற்றையும் இளைஞர்கள் ஏற்க வேண்டும் என்பதில்லை. அவர்கள் சொல்வது சரிதானா என்று சிந்திக்க வேண்டும்.இளம் வயதில் தாத்தா, மரத்தில் பூதம் இருக்கிறது, பிசாசு இருக்கிறது என்று சொன்னதை அவர் எப்படி நம்பவில்லையோ, அதே போல வாலிபப்பருவத்திலும், தேவேந்திரநாத் தாகூர் சொன்ன எதிர்மறை பதிலை விவேகானந்தர் ஏற்கவில்லை.

அப்படியானால் தேவேந்திரநாத் விபரம் தெரியாதவரா என்ற சந்தேகம் உங்களுக்கு எழக்கூடும். இது அந்தப் பெரியவர் ஒருவர் விவேகானந்தருக்கு வைத்த டெஸ்ட் என்று சொல்லலாம்.மார்க் அட்டையுடன் வீட்டுக்கு வரும் மகன் அதிக மார்க் பெற்றிருந்தால் பெற்றவர்கள் உன்னை விட உயர்ந்தவர் யாருமில்லை என பாராட்டும் போது குளிர்ந்து விடுகிறான். ஒரு அரசியல்வாதியை உம்மை விட சிறந்த நிர்வாகஸ்தர் யாருமில்லை என்றால், புகழ்ந்தவரை வாரியத்தலைவராக்கி விடுகிறார். புகழ்ச்சிக்கு மயங்காத உயிர்கள் இல்லை. நீ பெரிய யோகி என சொன்னவுடன் விவேகானந்தர் அந்த சொல்லில் மயங்கி, கடவுளைக் கண்டுவிட்டவர் போல நடிக்கப் போகிறாரா? அல்லது கடவுளைக் காணும் முயற்சியில் இறங்கப்போகிறாரா? என்று தேவேந்திரநாத் வைத்த தேர்வில் விவேகானந்தர் பாஸாகி விட்டார்.பின் அவர் என்ன செய்தார் தெரியுமா? தன் கேள்விக்கு பதிலளிக்காத பிரம்மசமாஜத்தில் உறுப்பினராக இருப்பதே வீண் என நினைத்து, அதிலிருந்து விலகி விட்டார். அவரது தாகம் அதிகரித்தது. கடவுளைப் பார்த்தாக வேண்டும்... அவரை நேரில் சந்தித்து பேசியாக வேண்டும். என்ன செய்யலாம் என யோசித்தார். அப்போது அவரது நினைவில் வந்தார் பேராசிரியர் ஹேஸ்டி.

No comments:

Post a Comment