Wednesday, 11 January 2017

விவேகானந்தர்-3


பேராசிரியர் ஹேஸ்டியை அவர் சந்தித்து, கடவுளை நேரில் பார்க்க என்ன செய்ய வேண்டுமென கேட்டார்.பேராசிரியர் தனக்குத் தெரிந்த வரையில் தட்சிணேஸ்வரத்தில் இருக்கும் காளிகோயில் பூஜாரி ராமகிருஷ்ணரே கடவுளை நேரில் கண்டவர் என்றார். அவரைசந்திக்க ஆசை கொண்டார்நரேந்திரன். அவர் தட்சிணேஸ்வரத்துக்கு புறப்பட்டு விட்டார். ராமகிருஷ்ணரின் இல்லத்தை அடைந்தததும், அந்த மகானே பரவசமடைந்து விட்டார். வா! மகனே! இத்தனை காலம் காக்க வைக்க உனக்கு எப்படி மனம் வந்தது? என் மனதில் ஏற்படும் ஆன்மிக உணர்வுகளை உலகெங்கும் பரப்ப வந்தவனல்லா நீ? அந்த நாராயணனே நரேன் என்ற பெயரில் வந்ததாக எண்ணுகிறேன்,என்றார்.விவேகானந்தருக்கு ஆச்சரியமாக இருந்தது. இதுவரை நம்மை பார்த்திராத இவர், நீண்டநாள் பழகியவர் போல உளறுகிறாரே! இவரை பைத்தியம் என்று சிலர் சொல்ல கேட்டிருக்கிறேன். நிஜமாகவே அப்படித்தானோ! மேலும், நம் நோக்கம் என்ன? கடவுளை இவர் நேரில் பார்த்திருக்கிறாரா இல்லையா? அப்படி அவரைப் பார்க்க என்ன வழி என்பதற்குரிய ஆலோசனை மட்டுமே! ஆனால், இவர் வேறு என்னவெல்லாமோ பேசுகிறாரே, என்றவராய் அங்கிருந்த சீடர்களிடம் பாயை விரிக்கச் சொன்னார்.

சீடர்கள் அவரை ஆச்சரியமாய் பார்த்தனர்.இவர் இதுவரை யாரிடமும் இவ்வளவு பிரியமாய் பேசியதில்லையே. கல்கத்தாவில் இருந்து வந்த யாரோ ஒருவனிடம் இப்படி பேசிக் கொண்டிருக்கிறாரே! என நினைத்தவர்களாய் பாயைவிரித்தனர். ராமகிருஷ்ணர் நரேனிடம், நரேந்திரா! நீ பாடு, நான் கேட்க வேண்டும், என்றார். நரேந்திரன் சில வங்காளிப் பாடல்களைப் பாடினான். மனமே உன் மனைக்கு ஏகுமண்ணுலகு உனக்கு அந்நியமன்றோ மாறு வேஷமிட்டேன் மயங்குகிறாய் இங்கே பார்க்கும் இப் பாரெல்லாம் பஞ்ச பூதமெல்லாம் பரமே அன்றோ உனக்குமடமனமே! சத்திய சிகரத்தில் ஏறுக மனமே சளைத்து விடாமல் ஏறுக மனமே சாந்தி கொள்வாய் எந்தன் மடமனமே! என்று உச்ச ஸ்தாயியில் பாடினார். இந்தப் பாடலுக்கு சுருக்கமான பொருள் இதுதான்...மனிதன் பூலோகத்திற்கு தற்காலிகமாகத்தான் வந்திருக்கிறான். பஞ்சபூதங்களும், இவ்வுலகில் காணும் இன்பங்களும் தற்காலிகமானவையே. நம்மை அனுப்பிய சக்தியிடம் நாம் போயாக வேண்டும். அதற்கு முன் அனுப்பியவரை பார்த்தாக வேண்டும், என்பதுதான். ராமகிருஷ்ணர் அந்த ஆன்மிக வீரனின் உள்ளத்தைப் புரிந்து கொண்டார். கடவுளைக் காணும் வேட்கை நரேந்திரருக்குள் ஒளிந்திருப்பதைக் கண்டு கொண்டார். ஆனால், நரேனுக்கு சோதனைகள் வைக்க வேண்டாமா? அவர் எதுவும் சொல்லவில்லை.

மீண்டும் ஒருமுறை நரேந்திரன் ராமகிருஷ்ணரை சந்திக்க வந்தார். இப்போது ராமகிருஷ்ணரின் நடவடிக்கை வேறு மாதிரியாக இருந்தது. அவரை அறைக்குள் அழைத்துச் சென்று, தன் கால் பெருவிரலால் நரேந்திரனின் உடலில் அழுத்தினார். இதுவரை விவேகானந்தர் ஐயோ! என்னை விடுங்கள், என்னை காப்பாற்றுங்கள், எனக்கு வலிக்கிறது, என்ற வார்த்தைகளைக் கூட தெரிந்து வைத்துக் கொண்டதில்லை. இப்போது அவரே கத்திவிட்டார். சுவாமி! என்னை விடுங்கள். நான் எங்கோ செல்கிறேன். தங்கள் பாத ஸ்பரிசம் என்னை எங்கோ இழுத்துச்செல்கிறது. என்னை விட்டு விடுங்கள். என்னைப் பெற்றவர்களுக்கு நான் பிள்ளையாக திரும்பிப்போய் சேர வேண்டும், என கதறினார். ராமகிருஷ்ணர் காலை எடுத்தார். அதன்பிறகே தன்னிலைக்கு திரும்பினார் நரேந்திரன். சிரித்தபடியே நரேந்திரனின் மார்பில் தடவிக்கொடுத்து ஆசுவாசப்படுத்தினார். நரேந்திரா! உன் எண்ணம் ஈடேறும். நீ இதையே தாங்கிக் கொள்ள முடியாத போது, கடவுளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையை எப்படி பூர்த்தி செய்து கொள்ள இயலும்? சரி...எதற்கும் ஒரு காலம் இருக்கிறது. நிர்ணயிக்கப்பட்ட அந்தக்காலம் வரும்போது தான், உன் எண்ணம் நிறைவேறும், என்றார்.நரேந்திரனுக்கும் அதிசயமாக இருந்தது. இப்போது நான் சுயநினைவுக்கு திரும்பி விட்டேன். ஆனால், சற்றுமுன் என்ன நடந்தது? நான் இந்த பிரபஞ்சத்துக்குள் கரைந்து விடுவது போன்ற உணர்ச்சி ஏற்பட்டதே! அது எப்படி நடந்தது.

ஒருவேளை இவர் மாயவித்தை செய்பவரோ? மெஸ்மரிசம் என்று சொல்கிறார்களே! அதை அறிந்தவரோ? எது எப்படியோ போகட்டும். இனிமேல் இவர் அருகே போனால், இவரது ஸ்பரிசம் நம் மீது படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், என முடிவெடுத்தார்.அதேநேரம் மற்றொரு கோணத்திலும் நரேந்திரன் சிந்தித்தார். ஒரு நிமிடத்தில் வலிமை பொருந்திய நம் மனதைச் சிதறடித்த இந்த மனிதரை சாதாரணமாக எடை போட்டு விட முடியாது. இவரை பித்தர் என சொல்வதை ஏற்கமாட்டேன். நான் என்னவோ என்னை பலசாலி என கருதிக் கொண்டிருந்தேன். பகுத்தறிவு கருத்துக்களை சிந்தித்தேன். அவற்றை எல்லாம் ஒரு நொடியில் நொறுக்கிவிட்டாரே இந்த மகானுபாவர்? என்றும் சிந்தித்தார்.மீண்டும் மீண்டும் அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆசை விவேகானந்தரை உந்தித்தள்ளியது. ராமகிருஷ்ணருக்கும் இதே நிலை. அந்த தெய்வக்குழந்தை மீண்டும் வரமாட்டானா என்று. நினைத்தது போல, மூன்றாம் முறையாகவும் தட்சிணேஸ்வரம் வந்தார் நரேந்திரர். அவரை அழைத்துக் கொண்டு ஒரு தோட்டத்திற்கு சென்றார் ராமகிருஷ்ணர். அப்போது அவரது நினைவலைகள் பின்னோக்கி சென்றன.

ஒருமுறை அவர் தியானத்தில் இருந்த போது ஏழு ரிஷிகள் அவரது கண்களில் தென்பட்டனர். அப்போது வானத்தில் இருந்து வந்த ஒரு தெய்வக்குழந்தை ஒரு ரிஷியின் மடியில் அமர்ந்தது. தவத்தில் இருந்த அவர் பாதிகண்களைத் திறந்தார். மடியில் இருந்த குழந்தை அவரிடம், நான் பூலோகம் செல்கிறேன். அங்கே என்னுடன் வா, என்றது. மகரிஷி குழந்தையிடம், துன்பம் நிறைந்த அந்த உலகத்திற்கு போவதில் உனக்கு இத்தனை ஆனந்தமா? என்று கேட்டபடியே அவர் கண்மூடிவிட்டார். பூலோக வாழ்வுடன் போராடிக் கொண்டிருக்கும் பல உயிர்களை மீட்டு, தன் உலகுக்கு அழைத்துச் செல்ல வருகிறது என்பதை யார் அறிவார்? அந்தக் குழந்தை ஒளிவடிவாக மாறி நேராக பூலோகம் வந்தது. கல்கத்தாவின் சிம்லா பகுதியிலுள்ள கவுர்மோகன் முகர்ஜி தெருவிற்குள் புகுந்தது. விஸ்வநாததத்தரின் வீட்டுக்குள் புகுந்து, அவர் மனைவி புவனேஸ்வரியின் வயிற்றில் புகுந்தது. அந்த தாய் பெற்ற தெய்வீகப்பிள்ளையுடன் தான் நாம் இப்போது தோட்டத்தில் உலவிக் கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொண்டார் ராமகிருஷ்ணர்.

No comments:

Post a Comment