Monday, 9 January 2017

நானும் கூன் பாட்டி மற்றும் கையேந்திபவன் இட்லிக்கடையும்
******************************************************************
நள்ளிரவைக்கடந்தும் விழித்து இருந்து, டான் பிரவுனின் ஏஞ்சல் அண்ட் டெமொன்ஸ் புத்தகத்தை வாசித்து விட்டு அப்படியேத் தூங்கிப்போன நான், எழுந்தபோது மணி எட்டரை. கூன்பாட்டியின் நினைவு வந்தது. அவசர அவசரமாகக் குளித்துவிட்டு நான் வழக்கமாக காலை உணவு சாப்பிடும் உணவகத்தை நோக்கி வண்டியை விரட்டினேன். என்னை என் அலுவலக மக்கள் கஞ்சன் என அழைப்பதற்கு இந்த உணவகத்தில் சாப்பிடுவதும் ஒரு காரணம்.
நடைபாதையின் மேல் ஏற்றி நிறுத்தப்பட்டிருக்கும் தள்ளுவண்டி. அதில் ஒரு பக்கம் மண்ணென்னெய் அடுப்பு, இட்லிப்பானை , வண்டியை சுற்றி, மரப்பெஞ்சுகள் காலை ஏழரை மணியில் இருந்து 10 வரை படு சுறுசுறுப்பாக வியாபாரம் நடக்கும். சாம்பார், காரச்சட்னி. தேங்காய் சட்னி உடன் தோசை நாலு ரூபாய் ,4 இட்லி ஆறே ரூபாய்தான்.
ஒரு வாரத்திற்கு முன்னால் இப்படி 10 ரூபாயில என் காலை சாப்பாடை முடித்துக்கொண்டிருக்கும் பொழுது தான் அந்த கூன் பாட்டியை முதன் தடவையாக பார்த்தேன். கையில் மூங்கில் கம்பை வைத்துக்கொண்டு என் பக்கத்தில் வந்து நின்றார். எதுவும் பேசவில்லை ஆனால் கண்களில் பசி தெரிந்தது,
“அண்ணே, அந்தப் பாட்டிக்கு நாலு இட்லி கொடுங்க, அதுக்கும் சேர்த்து இந்தாங்க காசு”
மறுநாள் சாப்பிடப்போகும்போது அந்த தள்ளுவண்டி இருக்கும் இடத்தில் இருந்து பத்தடி தள்ளி இருந்த மரத்தினடியில் உட்கார்ந்திருந்த. அந்தப் பாட்டி நான் கடையில் வண்டியை நிறுத்தியவுடன் மெதுவாக எழுந்து என்னருகே வந்து நின்றார். அன்றில் இருந்து கடைசி ஒரு வாரமாக தினமும் நான் சாப்பிடப்போகும்பொழுது அந்த பாட்டிக்கும் சாப்பாடு வாங்கித் தருவது வழக்கமாகிவிட்டது.
இப்பொழுது ”அந்த பாட்டி. நான் வருவேன் இட்லி வாங்கித்தருவேன்னு காத்திருக்குமே!!.. அந்தக் கடைக்காரர் பாட்டியை விரட்டி இருப்பாரோ,” என நினைத்துக் கொண்டே அரை மணிநேரம் தாமதமாக அந்தக் கடைக்கு வந்துசேர்ந்த பொழுது ,
பாட்டியை ஓரமாக உட்கார வைத்து, இட்லி வைத்து பரிமாறிக்கொண்டிருந்த அந்த நடைபாதை
இட்லிக்கடைக்காரர் என்னைப்பார்த்ததும்.
“வாங்க தம்பி, என்ன லேட், கிழவி நீங்க வருவீங்களான்னு எல்லா பைக்கையும் பார்த்துக்கிட்டே இருந்துச்சு, பார்க்கவே மனசு கஷ்டமாஇருந்துச்சு, அதான் நானே சாப்பிடக்கூப்பிட்டுட்டேன்”

No comments:

Post a Comment