Friday 2 March 2018

ராஜ யோகம்

ஒரு கதை சொல்லப் போகிறேன் என்று ஆரம்பித்தார்,
ஒரு காலத்தில் ஒரு நாட்டு அரசனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை பிறந்தவுடன் அந்த நாட்டில் இருந்த மிக உயர்ந்த ஜோதிட ஆசானை அழைத்த மன்னன், குழந்தையின் ஜாதகத்தைக் கணித்துச் சொல்லச் சொன்னான்.
ஆசான் ஜாதகம் கணித்துவிட்டு மன்னனிடம், மன்னா இந்த உங்களுடைய மகனுக்கு ஒரு யோகம் இருக்கிறது. இவன் உங்களைப் போல பலமடங்கு உயர்ந்தவனாக ஒரு பேரரசசானகத் திகழ்வான் எனச் சொன்னார்.
ஜோதிடர் சொல்லிவிட்டுப் போன பிறகு மன்னனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. இதே நேரத்தில் பிறந்த அத்தனைக் குழந்தைகளுக்கும் இந்த யோகம் இருக்குமல்லவா? அவை தன் மகனின் பாதையில் குறுக்கிடக் கூடாதே என்று கவலை வந்தது. உடனே அந்த நேரத்தில் பிறந்த அனைத்துக் குழந்தைகளையும் கொல்ல ஆணையிட்டான்.
மொத்தம் ஐந்து வேறு குழந்தைகள் பிறந்திருந்தன. நான்கு குழந்தைகளை வீரர்கள் கொல்ல, ஒரு குழந்தையை தூக்கிக் கொண்டு அதன் தந்தை தலைமறைவாக அண்டை நாட்டுக்கு தப்பியோடி விட்டான்.
இருபத்தி ஐந்து ஆண்டுகள் ஓடின. ஜோதிடர் சொன்ன மாதிரியே மன்னன் மகன் பேரரசன் ஆகிவிட்டான். ஜோதிடரின் சீடனுக்கு தப்பிப் போன அந்தக் குழந்தை என்ன ஆகியிருக்கும் என யோசனை வந்தது. ஜோதிடரிடம் அவன் வினவ ஜோதிடரும் அவனும் தீவிரத் தேடலின் மூலம் அந்தக் குழந்தை இருக்குமிடம் அறிந்து அவனைப் பார்க்கப் போனார்கள்.
அங்கே அவன் நாடக மேடையில் ஒரு அரசனாக நடித்துக் கொண்டிருந்தான், சகல பரிவாரங்களோடு.
இத்தோடு கதையை நிறுத்திய அவர் இப்பொழுது தாமரைச் செல்வனுக்கு இந்தக் கேள்வி...
ஒரே நேரத்தில், ஒரே கோள் அமைப்புகளுடன் பிறந்த அவர்களில் ஒருவன் நிஜ ராஜாவாகவும் இன்னொருவன் நாடக ராஜாவாகவும் இருக்கிறான். அப்படியானால் அவன் விஷயத்தில் யோகம் ஏன் பலிதம் ஆகவில்லை. அல்லது அந்த ஜோதிடமே தவறா? இந்தக் கேள்விக்கான பதிலை நாளை எனக்கு அவர் தரவேண்டும் என விண்ணப்பித்தார்.
சட்டென்று நானும், உங்களின் உத்தரவு நாளை பதில் தரவேண்டும் என்பதால் நாளை பதிலுடன் வருகிறேன் என்று பணிந்தேன்.
அடுத்த நாள்.... பொறுங்கள் நாளை மிச்சம் சொல்கிறேன்.

No comments:

Post a Comment