Sunday 4 March 2018

அகத்தியர் லோபாமுத்திரை

தாமிரபரணி நதியை உருவாக்கிய பொழுது, இறைவன் உத்தரவால், தாமிரபரணி தாயை திருநெல்வேலியும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள, புண்ணியம் நிறைந்த அனைத்து கோவில்களின் வழியாகவும் அழைத்துச் சென்று கடைசியில் கடலில் சங்கமிக்கும்படிச் செய்தார், அகத்தியப் பெருமான்.
நதியை உருவாக்கியது முழுமை பெற்றபின், தொடங்கிய இடத்திலிருந்து, கடலில் சங்கமிக்கும் இடம் வரையில் உள்ள அனைத்து கோவில்களிலும் ஒரு சில காலம் தங்கியிருந்து, இறைவன் மூர்த்தங்களுக்கு அபிஷேக பூசை செய்து வரலானார். அப்படி ஒரு முறை சீவலப்பேரி அழகர் கோவிலில் இறைவனுக்கு பூசை செய்திருந்த காலத்தில், தினமும் கடலில் (சங்கமத்தில்) ஸ்நானம் செய்து, சூரியன், பித்ருக்கள் போன்றவர்களுக்கு செய்ய வேண்டிய நித்ய அனுஷ்டானங்களை, அங்கேயே கடலிலிருந்து நீரை எடுத்து, சூரிய உதயத்தின் பொழுது செய்து வந்தார்.
ஒரு நாள், இருகைகளையும் சேர்த்து வைத்து, கடல் நீரை எடுத்து தாரை வார்த்திட நீரை எடுத்த பொழுது, அவர் கைக்குள், ஒரு சங்கு வந்து அமர்ந்தது.
"அடடா! இது என்ன இறைவனுடைய திருவிளையாடல்? எத்தனையோ கோடி கல்பத்தில் இதுபோல் ஒரு சங்கு உருவாகும் என்று கேட்டிருக்கிறேன். அது, இப்பொழுது, அடியேன் கைக்கு ஏன் வந்து சேர்ந்தது? என்று யோசித்தார்? அகத்தியப் பெருமான்.
இதற்குள், இவர் செல்லும் வழியில் அவரை தொடர்ந்து வந்து அனைத்து இடங்களிலும் ஸ்நானம் செய்து இறைவனுக்கு அகத்திய பெருமான் செய்கிற பூசைக்கு உதவுகிற, அனைத்து சித்தர்களும் ஒன்று கூடிவிட்டனர்.
அகத்திய பெருமானின் கையில் இருந்த சங்கை கண்டு, "அடடா! எத்தனை பாக்கியம் செய்தவர் நீங்கள். எத்தனையோ கோடி கல்பங்களில், இது போல் ஒரு சங்கு உருவாகும். அது உங்கள் கைக்கு வந்து சேர்ந்து நாங்கள் அனைவரும் இன்று பார்க்கும் பாக்கியம் பெற்றோம். என்னே, இறைவன் திருவிளைய
இது என்ன இறைவனுடைய திருவிளையாடல்? என்றனர்.
அகத்தியப் பெருமானோ "இது ஏன் அடியேன் கைகளில் வந்து அமரவேண்டும் என்று தெரியவில்லையே. இதை நான் வைத்துக் கொள்வது சரியல்லவே. இதற்குப் பின் இறைவனின் திருவிளையாடல் ஏதோ இருக்கும், என்று நினைக்கிறேன்" என்றார்.
"ஆம்! இதற்குப் பின் உள்ள காரணத்தை அறிய, தாங்களே, இறைவனிடம் பிரார்த்தனை செய்து விடுங்கள்" என்று அனைத்து சித்தர்களும் கூறினர்.
இதற்குள், அகத்தியப் பெருமானின் கைகளிலிருந்து அந்த சங்கை வாங்கி ஒவ்வொருவராக, அதை ஸ்பரிசித்து, கண்களில் ஒற்றிக்கொள்ளத் தொடங்கினர்.
அகத்திய பெருமான் இறைவனை தியானித்து தன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க, விண்ணிலிருந்து ஒரு அசரீரி வெளிப்பட்டது.
"அகத்தியனே! யாமே, எமக்காக, அதை உருவாக்கினோம், உம் கைகளில் தவழவிட்டோம். எத்தனையோ கோடி கல்பங்களில் இது போல் ஒரு சங்கை எம் எண்ணத்திலிருந்து உருவாக்கி தருவிப்போம். யாம், நாட்டுக்கும், நதிக்கும், அதன் பின்னே உள்ள காட்டுக்கும் நடுவில், நதிக்கரையில் அமர்ந்துள்ளோம். நீ இப்பொழுது பூசை செய்யும் கோவிலில்
இதை சமர்ப்பித்துவிடு. எம்மை வழிபட வரும் ஒவ்வொரு ஜீவனையும் காப்பாற்றவே, இதை தருவித்துள்ளோம். "கலி"யுகம் தொடங்கி, அவனின் விளையாட்டு அதிகமாகி வருகிறது. பாவம் மனிதர்கள், அவன் சூழ்ச்சியை அறியாது, பாவங்களை செய்து மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகப் போகிறார்கள். உடலால், எப்படிப்பட்ட உபாதைகளை அனுபவிப்பவர்களும், எம் ஷேத்திரத்தில் வந்து இந்த சங்கில் துளசி தீர்த்தத்தை வாங்கி அருந்திட, யாம் அனைத்து உபாதைகளும் விலகிட அருளுவோம். நலம் உண்டாகட்டும்!" என்று கூறி மறைந்தார்.
அகத்தியப் பெருமானும் மிக மனம் மகிழ்ந்து, பெருமாளின் உத்தரவுப்படி, தற்போதைய சீவலப்பேரி சௌந்தர்ராஜ பெருமாள் (அழகர்) கோவிலில் அதை சமர்ப்பித்தார்.
அப்படி எத்தனையோ கோடி கல்பங்களில் பெருமாள் உருவாக்குகிற அந்த சங்கு நம் வாழ்நாளில், இங்கு இருக்கிறது என்று அறிந்தவுடன், அதை பார்க்காமல், அதில் தீர்த்தத்தை வாங்கி அருந்தாமல் சும்மா இருக்கலாமா? என்று யோசித்துத்தான், சீவலப்பேரி அழகர் கோவிலுக்கு புறப்பட்டு சென்றேன்.
உள்ளேயிருந்து வந்த அர்ச்சகரிடம், வாங்கி சென்ற பழங்களை கொடுத்து, பெருமாள் பெயருக்கே, லோக ஷேமத்துக்காகவும் அர்ச்சனை பண்ணுங்கள் என்றேன்.
மந்திரோக்தரமாக அர்ச்சனை செய்து, தீபாராதனை காட்டிய பொழுது, கண் கொள்ளாக்காட்சி. அவருக்கு அணிவித்திருந்த அனைத்து ஆபரணங்களிலும் உள்ள கற்கள், அந்த தீப ஒளியை உள்வாங்கி வெளியிட்டது. பெருமாள் ஏதோ நட்சத்திர கூட்டத்துக்குள் அமர்ந்திருப்பது போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கியது.
அடியேன் மனதுள் ஒரு விண்ணப்பம் உருவாகியது. அதை பெருமாளிடம் சமர்ப்பித்தேன்.
"பெருமாளே! நீங்கள் உருவாக்கிய அந்த சங்கு தீர்த்தம் அடியேனுக்கும் கிடைக்க வேண்டும். அது போதும்!" என்றேன்.
உள்ளிருந்து சங்கில் துளசியை போட்டு, தீர்த்தத்தை கொண்டு வந்து என் முன் நீட்டினார், அர்ச்சகர்.
ஆள்காட்டி விரலை மடக்கி பெருவிரலால் அழுத்திப்பிடித்து, கைகளில் குழியை உருவாக்கி, கை நிறைய அவர் விட்ட தீர்த்தத்தை அருந்தினேன். அப்பா! இப்படி ஒரு தீர்த்தத்தை இதுவரை அடியேன் அருந்தியது இல்லை, என்கிற அளவுக்கு ஒரு அலாதியான உள்ளுணர்வை அது உருவாக்கியது. என்னென்னவோ உடலைவிட்டு போய், உடல் மென்மையாகி போனது போல் உணர்ந்தேன். மனமோ, நனைந்த துணிபோல் மென்மையானது. ஒரு புதுவித சக்தி உடலெங்கும் பரவியது. அதன் முடிவில், புதிதாக பிறந்தது போல் ஒரு உணர்வு தோன்றத் தொடங்கியது.
இப்படிப்பட்ட உணர்வில் பெருமாளின் மூலஸ்தானத்திலிருந்து 10 அடி தூரத்தில் இருந்து, பெருமாளின் பாதத்தை கவனித்தபடி நின்று கொண்டிருந்தேன். ஏதோ ஒரு சிந்தனை உந்த, திரும்பி பார்த்தால், எனக்கு பின்னே நின்று கொண்டிருந்த 25லிருந்து 30 பேருக்கு, அந்த ஒரு சங்கு தீர்த்தத்தை அர்ச்சகர் கொடுத்துக் கொண்டிருந்தார். இது என்ன ஆச்சரியம்? சங்கில் தீர்த்தம் தீர்ந்து போய் விடாமல் அனைவருக்கும் கிடைக்கும்படி உள்ளதே, என்று வியந்தேன்.
அவர் தீர்த்தத்தை தரும் பொழுதே, நன்றாக உற்றுப் பார்த்தபடிதான் அதை வாங்கினேன். அந்த சங்கு வித்யாசமாக இருந்தது. ஒரு சங்குக்குள், ஒரு சங்கு. அந்த இரண்டாவது சங்குக்குள் இன்னொரு சங்கு என மூன்று சங்குகளும் ஒரே சங்காக அமைந்திருந்தது. மூன்றுமே, வலம்புரி சங்குகள். பெருமாள் உருவாக்கி, அகத்தியர் கையில் தவழ்ந்து, சித்தர்கள் கைபட்டு, இப்பொழுது அர்ச்சகரின் கைகளில் உள்ளது.
திரும்ப வந்து அடியேனிடம் சங்கை காட்டிய அர்ச்சகர் "இதன் வித்யாசத்தை பாருங்கள்" என்றார்.
நானும் "நீங்கள் முதலில் தீர்த்தம் தரும் பொழுதே கவனித்துவிட்டேன். எதற்கும், மற்றவர்களுக்கு, தீர்த்தம் கொடுத்துவிட்டு வரட்டும். பிறகு நிறுத்தி நிதானமாக பார்க்கலாம், என்றிருந்தேன்" என பதில் கூறினேன்.
சற்று நேரம் நன்றாக கவனித்துக் கொண்டிருந்த எனக்கு ஒரு ஆவல். அவரிடமே கேட்டுவிட்டேன்.
"சுவாமி, தப்பா எடுத்துக்காதீங்கோ! சங்கை அடியேன் தொட்டு பார்க்கலாமா?" என்றேன்.
"அதுக்கென்ன! தொட்டு பாருங்க! சங்குக்கு தீட்டு கிடையாது!" என்று கூறியபடி சற்று கையை உயர்த்தி காட்டினார்.
அடியேன் உடனேயே, இரு கைகளையும் உயர்த்தி, சங்கின் இரு பக்கத்திலும் விரல்களால் தாங்கி பிடித்து ஸ்பரிசித்தேன். ஒரு நிமிடத்தில், ஒரு அதிர்வு உடலெங்கும் பரவுவதை உணர முடிந்தது. இவ்வளவுக்கும், அந்த சங்கு மிக மென்மையாகத்தான் இருந்தது. சங்கு அவர் இரு கைகளின் குவிப்புக்குள் சுகமாக அமர்ந்திருந்தது. என் கைகளை அவர் கைகளுக்கு கீழே கொண்டு சென்று, அவர் கையை அப்படியே உயர்த்தி, முக உயரத்துக்கு கொண்டு வந்தபின், அடியேனின் நெற்றியை அந்த சங்கில் பதித்து, பெருமாளுக்கு, அகத்தியருக்கு, அனைத்து சித்தர்களுக்கு, ஆத்ம நமஸ்காரம் செய்தேன். இதை தட்டச்சு செய்யும் பொழுது கூட, அந்த சங்கு நெற்றியில் பதித்த உணர்வு இன்னும் உள்ளதை, உணர்க
பக்கத்திலும் விரல்களால் தாங்கி பிடித்து ஸ்பரிசித்தேன். ஒரு நிமிடத்தில், ஒரு அதிர்வு உடலெங்கும் பரவுவதை உணர முடிந்தது. இவ்வளவுக்கும், அந்த சங்கு மிக மென்மையாகத்தான் இருந்தது. சங்கு அவர் இரு கைகளின் குவிப்புக்குள் சுகமாக அமர்ந்திருந்தது. என் கைகளை அவர் கைகளுக்கு கீழே கொண்டு சென்று, அவர் கையை அப்படியே உயர்த்தி, முக உயரத்துக்கு கொண்டு வந்தபின், அடியேனின் நெற்றியை அந்த சங்கில் பதித்து, பெருமாளுக்கு, அகத்தியருக்கு, அனைத்து சித்தர்களுக்கு, ஆத்ம நமஸ்காரம் செய்தேன். இதை தட்டச்சு செய்யும் பொழுது கூட, அந்த சங்கு நெற்றியில் பதித்த உணர்வு இன்னும் உள்ளதை, உணர்கிறேன்.
"பெருமாளே! அகத்தியரே! சித்தர்களே! இது போதும். உங்களை கண்டு தரிசித்து, உங்கள் பாதத்தில் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ததாக இதை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று மனம் ஒன்றி ஒரு நிமிடம் அப்படியே இருந்தேன். அதன் பின், என் சகஜ நிலைக்கு வரவே வெகு நேரமாகியது. எதுவும் பேச தோன்றவே இல்லை.
அங்கிருந்து நேராக கோடகநல்லூர் சென்று பெருமாளிடம் நன்றி தெரிவித்து, அவர் தந்த பிரசாதத்தை வாங்கி கொண்டு, ஊர் வந்து சேர்ந்தேன்.
இதை வாசிக்கும் அகத்தியர் அடியவர்கள் அனைவரும், ஒரு முறை சீவலப்பேரி சௌந்தர்ராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று, சங்கு தீர்த்தத்தை பருகி, விதி இருந்தால், அதை ஸ்பரிசித்து பார்த்து, அந்த உயர்ந்த உணர்வை பெற வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
இப்படிப்பட்ட சூழ்நிலையை அமைத்துத்தந்த, பெருமாள், அகத்தியப் பெருமான், அகத்திய அடியவர் (சங்கு இருக்கிறது என்று தகவல் தந்தவர்) அனைவருக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளுக்கு, சமர்ப்பணம்!

No comments:

Post a Comment