Sunday, 4 March 2018

பரிசு - வாரிசு ============

ஆறுமுகம்அவசரவசரமாகஓடிவந்தும் அந்தப்பேருந்தை தவறவிட்டுவிட்டான்.
அவனுக்கு என்ன செய்வதுஎன்று தெரியவில்லை.
அந்தப் பேருந்தைப் பிடித்தால்தான் பத்து மணிக்கு அவன் போய்ச் சேரவேண்டிய அலுவலகத்துக்கு
போக முடியும். அவன் முதலாளி படித்துப் படித்துச் சொல்லியிருந்தார்.
நீ என்ன செய்வியோ தெரியாது, கரெக்ட்டா பத்து மணிக்கு இந்தக் கவரைக் கொண்டுபோய் டவுன் ஆபீசில் கொடுத்துட்டு வந்துடு. கொஞ்சம் நீ, லேட்டாப்போனாலும் காரியம் கெட்டுப் போயிடும்ன்னு சொல்லித்தான் அனுப்பியிருந்தார்.
அவனும் காலையில் சைக்கிள்ள போய் பேப்பர் போடுற வேலையைக்கூட அரைமணி நேரம் முன்னதாகவே முடித்துவிட்டு, கடைகளுக்கு பால் சப்ளை பண்ற வேலையை எல்லாம் முடிச்சுட்டு, காய்கறி மார்க்கெட்டுக்கு போய் முதலாளி வீட்டுக்கு வேண்டிய காய்கறிகளை எல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டு, ரெண்டுவாளித் தண்ணீரை மொண்டு உடம்பை நனைத்துக்கொண்டு துணி மாற்றி கெளம்பும்போது,
" ஆறுமொவம் ஒரு வாய் பழசு சாப்புட்டுட்டுப் போடான்னு அம்மா சொன்னதைக்கூட காதில் வாங்காமல் விர்ரென்று சிட்டாய் பறந்து வந்தான், என்ன பயன்? பஸ் போயிருச்சே!?
ஆறுமுகத்துக்கு அவன் மேலேயே கோபம், கோபமாய் வந்தது.
குறுக்கு வழியாய் ஓடி நாட்டரசன் கோட்டைக்கு 15 நிமிசத்துல போனா அங்கருந்து டவுனுக்கு போற பஸ்ஸைப் புடிச்சிடலாமேன்னு ஒரு யோசனை ஆறுமுகத்துக்கு பளிச்சுன்னு ஞாபகத்துக்கு வர, அடுத்த வினாடியே வில்லிலிருந்து பொறப்பட்ட அம்பு மாதிரி நாட்டரசன் கோட்டைக்குப் போற ஒத்தையடிப் பாதையில ஓடத்துவங்கினான்.
ஆறுமுகத்துக்கு கொஞ்சம் நல்ல நேரம், டிரைவர் பஸ்ஸை மெதுவா நகர்த்திக்கொண்டிருந்தபோது ஓடிப்போய் ஏறிவிட்டான். பஸ்ஸில ஏறி உக்காந்ததும் தான் அவனுக்குச் சற்று நிம்மதி ஏற்பட்டது.
பஸ் காரைக்குடி வந்து சேர்ந்த போது மணி பத்து. அங்க இருந்து செக்காலைத் தெருவுக்கு மீண்டும் ஓட்டமும் நடையுமாக ஓடி ஒரு வளைவில் திரும்பிய போது கால் இடறி கீழே விழுந்தான். அவன் விழுந்த இடத்தருகே ஒரு தோல் பை ஒன்று கண்ணைப் பறிப்பது போல கிடந்ததைப் பார்த்தான்.
சுற்றுமுற்றும் பார்த்தான். ஆள் நடமாட்டமே இல்லை.
ஆறுமுகம், அந்தத் தோல்பையை எடுத்துத் திறந்து பார்த்தான். உள்ளே நூறு ரூபாய் நோட்டுக் கட்டுகள்.
ஒரு நிமிடம்.....ஆறுமுகத்துக்கு கையும் ஓடலை. காலும் ஓடலை. காய்ச்சலில் படுத்திருக்கும் தம்பிக்கு மருந்து வாங்க காசில்லாமல் நேற்று அவதிப் பட்டது நினைவுக்கு வந்தது. நம்மோட கஷ்ட்டத்தைப் போக்கவே கடவுள் இப்படி பஸ்ஸைத் தவறவைத்து நம்மை இந்தவழியா வரவழைச்சிருப்பாரோ, என்றெல்லாம் அந்தச் சில வினாடிகளில் அவன் எண்ணங்கள் ஓடியது.
கூடவே, அவனின் அம்மா சொல்வதும் நினைவுக்கு வந்தது.
"எதாருந்தாலும் சரி, நமக்குச் சொந்தமில்லாத பொருளை எடுக்கக்கூடாது; உயிரே போனாலும் அடுத்தவங்க காசுக்கு ஆசைப் படக்கூடாதுன்னு அம்மா சொன்னது நினைவுக்கு வர ஆறுமுகம் நடந்து கொண்டே யோசித்தான்.
என்ன இருந்தாலும் இவ்வளவு பணத்தை தொலைச்சவங்க என்ன பாடு படுறாங்களோ என்று எண்ணியவன், அடுத்த நிமிடம், அந்தத் தோல் பையின் மேலிருந்த முகவரியைப் பார்த்தான்.
முதலாளி கொடுத்த கவரை முதல்ல ஆபீசில் சேர்த்துட்டு, அடுத்த வேலை, இந்தப்பையை அந்தப் பைக்கு உரியவங்ககிட்ட ஒப்படைக்கிறதுதான், என்று முடிவு செய்துகொண்டான். அதே போல வந்தவேலையை முடித்துவிட்டு, அந்த தோல்பையிலிருந்த முகவரிக்குச் சென்றான்.
அது பெரிய பங்களா. அந்த வீட்டிலிருந்த கூர்க்காவிடம் ( காவல்காரனிடம் ) ஆறுமுகம் பேசிக்கொண்டிருந்தபோது உள்ளிருந்து ஒருவர் வந்து விசாரித்தார்.
ஆறுமுகம் தோல் பை பற்றிச் சொல்ல, ஆறுமுகத்தை உள்ளே அழைத்துச் சென்றார்.
அங்கு இருந்த பெரியவர், பையை வாங்கிக் கொண்டு, தம்பி, இந்தப் பையை திறந்து பார்த்தாயான்னு கேட்டார். ஆமாங்க பார்த்தேன்னு ஆறுமுகம் சொல்ல, இவ்வளவு பணம் இருந்தும் அதை நீ எடுத்துட்டுப் போகாம இங்க கொண்டுவந்து சேக்கணும்ம்ன்னு நெனைச்சியே இந்த மனம் எல்லாருக்கும் வராது.
இந்தப் பையில எவ்வளவு பணம் இருந்துச்சு தெரியுமா? அஞ்சு லட்ச ரூபா... அதிலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டுக்கட்டை எடுத்து ஆறுமுகத்திடம் நீட்டினார், அந்தப் பெரியவர்.
" எதுக்குங்க? அது ஒங்க பணம். எனக்கு அந்தப் பணம் வேண்டாங்க. நான் வர்றேன்னு, சொல்லீட்டு ஆறுமுகம் கிளம்ப முற்பட்டபோது, தம்பி, இந்தக் காலத்துல இப்படி உன்னை மாதிரி ஒரு பையனை பாக்குறது அபூர்வம். உன்னை மாதிரி எனக்கு ஒரு பையன் இல்லையேன்னு தான் இத்தனை நாளும் கவலைப் பட்டேன். இன்னைக்கு அந்தக்கவலை தீர்ந்தது. உன்னை என்னோட வளர்ப்பு மகனா எடுத்துக்க முடிவு இப்பவே செஞ்சுட்டேன்.
வா முதல்ல உங்க வீட்டுக்கு போய் உங்க அப்பா அம்மாக்கிட்ட மத்ததப் பேசிக்கிர்றேன்னு சொல்லீட்டு ஆறுமுகத்தோட அவங்க வீட்டுக்கு கிளம்பினார் அந்தப் பணக்காரர்.
கால் ரெண்டும் தேய நடந்தும் ஓடியுமே பழக்கப்பட்ட ஆறுமுகம் இப்போது படகு போன்ற சொகுசுக் காரில் போய்க்
கொண்டிருக்கிறான்.
கதை தரும் நீதி : - பிறர் பொருளுக்கு ஆசைப்படக்கூடாது; ஆறுமுகம் போல இருக்கக் கற்றுக்கொண்டால் சொகுசான வாழ்க்கை எல்லோருக்கும் தானாகத் தேடிவரும்.

No comments:

Post a Comment