Friday, 2 March 2018

இரவுகள்

இரவுகளை பரிகாசிக்காதீர்கள்
பயமுறுத்துவதற்கல்ல …
பக்குவப்படுத்த வருபவை அவைகள்
சித்தார்த்தனை புத்தனாக்கியது
நித்திரை இரவு

சித்தர்களையும் சூஃபிக்களையும்
முக்திபெற வைத்ததும் இரவுதான்
கணக்கற்ற காப்பியங்களின்
கற்பனைச் சுரங்கம் அது
களங்களின் பிறப்பிடம்
கனவுகளின் உறைவிடம்
சகாப்த கோலங்களின் தொடக்கப் புள்ளி
சரித்திர ஓட்டங்களின் ஜீவஜோதி
இரவுகளை பரிகாசிக்காதீர்கள்…..
இரவுகள்……..
சாத்தான்களின் நடமாற்றத்திற்கல்ல
சாதனைகளின் நிறைவேற்றத்திற்கு
என் தேசத்திற்கு
விடியலைப் பெற்றதும் இரவில்தானே !
வெ|ளிச்சத்தையே விரட்டியடிக்கும்
வீரியம் ……
நட்சத்திரங்களை பிரகாசிக்க வைக்கும்
தைரியம் …..
சபாஷ் போட
இரவுகளுக்கு
முதுகுகள் இல்லை.
இரவுகள்……
விழிகளுக்கு ஒத்தடம் தரும்
மண்முடிச்சு.
நிசப்தங்களை வருடிக்கொடுக்கும்
மயிலிறகு.
யதார்த்தங்களை புரியவைக்க
இறைவன் அளித்த நன்கொடைதான்
இரவும் பகலும்.
வாழ்க்கை அத்தியாயத்தில்
முன்னுரையும் இருட்டு
முடிவுரையும் இருட்டு
ஆம்..
கருவறையும் இருட்டு
கல்லறையும் இருட்டு
இரவும் பகலும்
மாறி மாறி வருவது
இன்பத்தையும் துன்பத்தையும்
யதார்த்தமாக பிரதிபலிக்கத்தான்
இரவுகள் எப்போதும் உறங்குவதில்லை
விடியலை எதிர்கொள்ள
விழித்துக் கொண்டே இருக்கும்.
அதனால்தான்
இரவுகளுக்கு
மின்சார அலங்காரம்.
“மாலை”யுடன் வரவேற்கப்படுவது
இரவுகள்தானே தவிர
பகற்பொழுதுகள் அல்ல
இரவுகளை பரிகாசிக்காதீர்கள்…..
பகற்கொள்ளையர்கள் இல்லாததினால்தான்
தங்கமுலாம் பூசிய பெளர்ணமிநிலாகூட
பயமில்லாமல் வருகிறது உலா.
ஒவ்வொரு அஸ்தமணத்திற்குப் பின்பும்
ஒரு விடியல் உத்தரவாதம்
இரவுகள் மீது
யாருக்குத்தான் ஆத்திரம் இல்லை?
வேறென்ன? பொறாமைதான்
அந்தியின் சிவப்பு
வானத்தின் கோபம்
இரவுகள் …..
அமைதியின் கர்ப்பக்கிரகம்
மோன நிலையின் முகத்துவாரம்
யாரும் அறியாவண்ணம்
இறைவனை நினைந்துருகும் அரியாசனம்
இரவுகளை பரிகாசிக்காதீர்கள்.

No comments:

Post a Comment