Friday 9 March 2018

யானையின் துயரக்கதை

"உங்கள் பாவங்களை மன்னித்ததற்கான தண்டனையா இது?" - தூக்கிலிடப்பட்ட யானையின் துயரக்கதை!
=========================================================
அன்றுதான் தனக்கு கடைசி நாள் (செப்டம்பர் 13, 1916) என்று அந்த மேரிக்குத் தெரியாது. ஆனால், ஏதோ ஓர் உள்ளுணர்வு அவளுக்குள் உன்னைப் பார்த்துக் கைகொட்டி சிரிப்பார்கள் எனச் சொல்லிக்கொண்டிருந்தது. அந்த மேரி ஓர் அழகான பெண் யானை. அதுவும் ஆசிய யானை. அவளுக்கெனத் தனியாக ஒரு ரசிகர் கூட்டமே அக்காலகட்டத்தில் இருந்தது. மேரி மற்ற யானைகளைப்போல சாதாரணமானது அல்ல. அதற்குள் பல திறமைகள் பொதிந்து கிடந்தன. மேரியால் ஹார்ன் இசைக் கருவியைப் பயன்படுத்தி 25-க்கும் மேற்பட்ட மெட்டுகளை வாசிக்க முடியும். இப்படிப்பட்ட யானையின் திறமையைப் பார்க்கக் கூட்டம் கூடத்தானே செய்யும்? மேரியும் ஒவ்வொரு நாளும் ரசித்து ரசித்துத்தான் செய்து வந்தாள். ஆனால், அந்த நாள் மற்ற நாள்களைப் போல இல்லை. அதற்குக் காரணம் அதே வருடம் செப்டம்பர் 12-ம் தேதி அன்று நடந்த அந்தச் சம்பவம்.
அன்று அவளைக் கட்டுப்படுத்தும் பாகனுக்கு உடல் நிலை சரியில்லை. அதனால் புதிதாக ஒருவரை நியமித்தனர். அவனது பெயர் வால்டர் எல்ரிட்ச். அவனைச் செல்லமாக ரெட் என்று எல்லோரும் அழைப்பார்கள். ஏனெனில் வளர்ச்சியடையாத அக்காலகட்டத்திலேயே தலைமுடிகளுக்குச் சிவப்பு வண்ண நிறம் பூசி புதிய ஃபேஷனுக்கு வித்திட்டவன். அவனைப் பார்க்கவே மேரிக்குப் பிடிக்கவில்லை. அவனும் அவன் தலை நிறமும் என்று அன்று குனிந்தே தனது பெட்டியில் இருந்து இறங்கினாள். அந்த ரெட்டுக்கு யானையைக் கட்டுப்படுத்தும் திறமை அவ்வளவாகக் கிடையாது. ஒருநாள் சம்பளம் கிடைக்குமே என்று பொய் சொல்லி வேலைக்கு வந்து விட்டார். அவரது கையில் யானையைக் கட்டுப்படுத்த ஒரு கம்பு தரப்பட்டது. கம்பின் நுனியில் ஊசி போன்ற கத்தியும் இருந்தது. யானையால் அசம்பாவிதம் நேர்ந்தால் கத்தியை வைத்துச் சமாளித்துவிடலாம் என்று எண்ணினார் ரெட். சர்க்கஸ் ஆரம்பிக்கும் நேரம் நெருங்கியது. ரெட்டும் மேரி மீது ஏறி அமர்ந்தார். ஆனால், மேரி ஓர் அடிகூட முன்னால் எடுத்து வைக்கவில்லை. யானை நகரவில்லை என்றால் எங்கே தன்னை தொழில் தெரியாதவன் என நினைத்து விடுவார்களோ என்று நினைத்து தன்னிடம் இருந்த குச்சியால் மேரியின் மீது சரமாரியாகக் குத்தினான்.
இதுநாள் வரை பழைய பாகனிடம் ஒரு நாள்கூட குச்சியில் அடி வாங்கியதில்லை, மேரி. தன் உடலில் ரத்தம் வழியக் கண்ணீருடன் நகரத் தொடங்கினாள். ஆனால், வழக்கம்போல நடக்காமல் அன்னநடை போட்டு மெதுவாக நகர்ந்தாள். இதனால் ஆத்திரமடைந்த ரெட் இடைவிடாமல் அரை மணி நேரம் மேரியைக் குச்சியால் குத்திக்கொண்டே இருந்தான். மேரியால் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையாக இருக்க முடியவில்லை. தன்மீது அமர்ந்திருந்த ரெட்-ஐ தனது தும்பிக்கையால் தூக்கி வீசினாள். தனது தலையால் அவனை முட்டிச் சாய்த்தாள். இதனால் ரெட் தலை சிதறி பலியானார். சர்க்கஸைக் காணக் கூடியிருந்த மக்கள் தெறித்து ஓடினர். கூட்டத்தில் இருந்த ஒரு காவலர் தனது துப்பாக்கியால் ஐந்து முறை மேரியை சுட்டார். மேரியின் தோல் கடினமாக இருந்ததால், துப்பாக்கி தோட்டாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சிறிது நேரம் கழித்து மக்கள் ஒன்றாகக் கூடி சர்க்கஸ் முதலாளியிடம் "இந்த யானைக்கு மதம் பிடித்துவிட்டது. மேரி இங்கிருந்தால் எங்கள் உயிருக்குத்தான் ஆபத்து. அதனால் இதைக் கொன்று விடுங்கள். அப்படி இல்லையென்றால் ஊரைக் காலி செய்து கொள்ளுங்கள்" என்று கூச்சலிட்டனர்.
இங்கிருந்து பொருள்களை எடுத்துக்கொண்டுபோய் பக்கத்து ஊரில் சர்க்கஸ் போட முதலாளி கையில் காசு இல்லை. கையில் இருந்த பணம் முழுவதையும் இங்கேயே செலவு செய்திருந்தார். அதில் பாகன் ரெட்டுக்கான சம்பளமும் அடங்கும். அதனால் ஒரே முடிவாக மேரியைக் கொன்றுவிட முடிவு செய்தார். துப்பாக்கியால் சுட்டே ஒன்றும் செய்ய முடியாத மேரியை எப்படிக் கொல்வது என்பதுதான் அவரின் யோசனையாக இருந்தது. "முதலில் விஷம் வைத்துக் கொன்றுவிடுங்கள்" என்று ஒருவர் யோசனை சொன்னார். "யானைகளுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமான சுவை உணரும் திறன்கள் தும்பிக்கையில் இருப்பதால் அது முடியாது, எளிதில் கண்டுபிடித்துவிடும்" என்று பதிலளித்தார், சர்க்கஸ் முதலாளி. "மின்சாரம் வைத்துக் கொன்றுவிடலாம்" என்று இன்னொருவன் சொல்ல, "யானையைக் கொல்ல அதிக மின்சாரம் தேவைப்படும் அதுவும் வேலைக்கு ஆகாது" என்று முதலாளி சொன்னார். இறுதியாக ஒரு பெண் யோசனையை முன்வைத்தார். ''பேசாமல் முன் தலையை ஒரு கிரேனிலும், பின்னங்கால்களை ஒரு கிரேனிலும் கட்டி முன்னும், பின்னுமாக இழுக்கலாம்" என்பதுதான் அந்த யோசனை. "இது வலி மிகுந்ததாக இருக்கும்" என்று முதலாளி சொன்னார். அந்நகர மக்கள் அனைவரும் கூடி இந்தக் கொடிய முறையை நிறைவேற்றுவது என முடிவு செய்தனர்.
அடுத்த நாளும் (செப்டம்பர் 13, 1916) விடிந்தது. அன்று காலை முதலே சூரிய வெப்பம் இதமாக இருந்ததால் சூரியனையே பார்த்துக் கொண்டு, தனது வாயை அசைத்துக்கொண்டிருந்தாள் மேரி. மற்ற யானைகள் மேரியின் பின்னால் அமர்ந்திருந்தன. அன்று எப்போதும் போல சர்க்கஸ் ஆரம்பிப்பதற்கு முன்னால் யானைகள் அணியும் உடையை ஒருவன் எடுத்து வந்தான். மற்ற யானைகளுக்குக் கொடுக்கப்படும் உடைகள் வழக்கமாக அணிவிக்கப்பட்டன. மேரிக்கு மட்டும் மஞ்சள் நிற ஆடை கொடுக்கப்பட்டது. மேரியும் உடையை மறுக்காமல் அணிந்து கொண்டாள். யானைகளை அழைத்துச் செல்ல மற்றொரு பாகன் வந்தான். மேரி முன்னால் செல்ல மற்ற யானைகள் ஒன்றன்பின் ஒன்றாகப் பின் தொடர்ந்தன. சிறிது தூரம் சென்ற பின்னர்தான் தெரிந்தது இது நாம் சர்க்கஸுக்கு செல்லும் பாதை இல்லை என்று. ஆனால், தூரத்தில் இருந்து வந்த மக்களின் குரலால் மேரி இன்று புதிய இடத்தில் சர்க்கஸ்போல என நினைத்துக்கொண்டது.
கூட்டம் நிறைந்த இடத்தை அடைந்தாள் மேரி. சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் அங்கு கூடியிருந்தார்கள். அதிகமான கூட்டத்தைக் கண்ட மேரி மகிழ்ச்சியை அவர்களுக்கு வெளிப்படுத்தினாள். அதன் பின்னர் மேடையைத் தேடினாள். அங்கு மேடைக்குப் பதிலாக ஒரு மிகப்பெரிய கிரேன் நின்று கொண்டிருந்தது. கூட்டமாக நின்றிருந்த யானைகளில் மேரியைத் தவிர மற்ற யானைகளைப் பாகன் ஒருவன் தனியாக அழைத்துச் சென்றான். இதனைக் கவனித்த மேரி, மக்களின் குரல்களையும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தாள். மேரி கேட்ட குரல்கள் எப்போதும் கேட்கும் பாராட்டுக் குரல் அல்ல. அவளைக் கொலை செய்ய எழும் குரல் என்பதை உணர்ந்தாள். கிரேனில் மாட்டப்பட்டிருந்த சங்கிலியால் மேரியின் கழுத்து இறுக்கப்பட்டது. மேரி தப்பிக்காமல் இருக்க அவளது காலிலும் சங்கிலிகள் கட்டப்பட்டன. இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த மேரி அங்கிருந்து ஓடச் சிறு முயற்சிகூட எடுக்கவில்லை. மேரியும் உணர்ந்திருப்பாள் போலும், 'நேற்று நாம் செய்த தவறுக்குத்தான் தண்டனை கொடுக்கப் போகிறார்கள்' என்று.
முதலாளி கண் அசைக்கக் கண்ணாடி அறைக்குள் இருந்தவன் கிரேனை இயக்கினான். மேரியின் கழுத்து இறுகத் தொடங்கியது. மேரி தன்னால் முடிந்தவரைப் பிளிறினாள். தூரத்தில் நின்றிருந்த யானைகள் சட்டென்று மேரியை திரும்பிப் பார்த்தன. அவற்றின் கண்களுக்குத் தெரியும்படி மேரி கிரேன் சங்கிலியால் கட்டித் தூக்கப்பட்டாள். ஐந்தடி தூர உயரத்தில் மேரியை தூக்கும்போது கிரேன் பழுதாகிச் சங்கிலி பிய்த்துக்கொண்டு கீழே விழுந்தாள் மேரி. இதில் அவள் முதுகெழும்பு உடைந்தது. இதனால் வாய் திறக்க முடியாமல் தன் கண்ணீரால் பூமியை முத்தமிட்டுக்கொண்டிருந்தாள் மேரி. மீண்டும் கிரேன் சரி செய்யப்பட்டு இப்போது பத்தடி உயரத்தில் தூக்கிலிடப்பட்டாள் மேரி. கால்கள் தளர்ந்தன. கடைசி மூச்சும் நின்றது. இதனைக் கண்ட அவளது நண்பர்களால் கண்ணீர் மட்டுமே வடிக்க முடிந்தது. இரக்கத்தனம் இல்லாமல் வரலாற்றில் நிகழ்ந்த இந்த நிகழ்வு கறுப்புச் சரித்திரமாகவே இருக்கிறது. இந்தச் சம்பவம் நடந்த இடம் அமெரிக்காவின் Erwin, Tennessee. அவ்வளவு அழகும், திறமையும் வாய்ந்த மேரி அதன் பின்னர் எந்த சர்க்கஸிலும் இல்லை என்பதுதான் உண்மை.
-------------------------------------------------------------------------------------------------------------------
"உங்களின் பொழுதுபோக்கிற்காக என்னைப் போன்ற யானைகள் மற்றும் விலங்குகளுக்குக் கொடுமை செய்தீர்கள். அதை நான் பொறுத்துக் கொண்டேன். உங்கள் பாவங்களையும் மன்னித்தேன். என்னையே அறியாமல், என்னைக் காத்துகொள்ள நான் செய்த செயலை நீங்கள் ஏன் மன்னிக்கவில்லை?" சர்க்கஸ் யானைகளை இன்று பார்த்தாலும் மேரி கேட்காமல் விட்டுச் சென்ற இந்தக் கேள்வி நெஞ்சில் தைக்கிறது!

தேளும் ஆமையும்

ஓர் காட்டில் கெட்ட சுபாவமுள்ள தேள் ஒன்று வசித்து வந்தது. அந்தக் காட்டின் நடுவில் ஒரு நீரோடை இருந்தது.அந்தத் தேளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்கு போக வேண்டி இருந்தது.
அக்கரைக்குப் போவதற்காக அந்த நீரோடையில் இருக்கும் பெரிய மீன்கள், நண்டு, தவளை போன்றவைகளிடம் தேள் உதவி கேட்டது, ஆனால் அந்த பொல்லாத தேள் தமக்குக் கொட்டிவிடும் என்று அவை மறுத்து விட்டன.
எப்படி நீரோடையைக் கடப்பது என்று தேள்யோசித்துக்கொண்டு இருந்தபோது அந்த நீரோடையில் ஆமை ஒன்று வந்து கொண்டிருந்தது. ஆமையைக் கண்ட தேள்.
ஆமையாரே! நான் அக்கரைக்குச் செல்லவேண்டும் என்னை அங்கு கொண்டு போய் விட்டு விடுவீரா? என்று கேட்டது.
நானும் அக்கரைக்குத்தான் போகிறேன், என் முதுகில் ஏறிக்கொள்ளும் உம்மை நான் அக்கரையில் விட்டுவிடுகிறேன்! என்றது ஆமை,தேளும் ஆமையின் முதுகில் ஏறிக்கொண்டது
ஆமை நீரில் நீந்திச்செல்ல அரம்பித்தது
சிறிது தூரம் தான் ஆமை சென்றிருக்கும் தேளுக்கு ஒரு யோசனை வந்தது ,நான் பல பேரைக் கொட்டியிருக்கிறேன்.அவர்கள் வலியால் துடித்ததையும் பார்த்திருக்கின்றேன்.ஆனால நான் ஒரு நாளும், ஆமைக்கு கொட்டவில்லை ,இந்த ஆமையைக் கொட்டினால் எப்படித் துடிக்கும்? இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடையாது .என்று ஆமைக்கு கொட்டிப் பார்க்க நினைத்தது
தேள் ஆமையின் முதுகில் கொட்டியது .அனால் ஆமை பேசாமல் போய்க்கொண்டிருந்த்து. உடனே தேள் ஆமையைப் பார்த்து
ஆமையாரே! உமது முதுகு கடினமாக இருக்கிறதே. உமது உடம்பில் வலியே வருவதில்லையா? என்று கேட்டது.
தேளின் கெட்ட எண்ணத்தைப் புரிந்துகொள்ளாத ஆமை , எனது முதுகு கடினமான ஓட்டினால் மூடப்பட்டுள்ளது அதனால் எனக்கு அந்த இடத்தில் வலியே வருவதில்லை, அனால் எனது கழுத்துப்பக்கம் மென்மையாக இருக்கும் . இதில் தான் எனக்கு வலிகள் காயங்கள் ஏற்படும் என்று சொன்னது ஆமை.
ஓகோ ;அப்படியா?என்று கேட்ட தேள் ,மெதுவாக ஆமையின் கழுத்துப் பகுதியை நோக்கிச் சென்றது . கழுத்தில் இருந்து தலைப்பகுதிக்குச் சென்ற தேள் ஆமைக்கு கொட்ட ஆரம்பித்த்து .
தலையில் ஏதோ குத்தியதால் விடுக்கென்று தலையை உள்ளே இழுத்துக் கொண்டது ஆமை . தேள் நீரோடையில் விழுந்து விட்டது.
தனக்கு உதவி செய்த ஆமைக்கு கேடுவிளைவிக்க நினைத்த தேள் .தண்ணீரில் மூழ்கி இறந்தது .ஆமை கரையை நோக்கி நீந்திச் சென்றது.
ஒருவர் எவ்வித பலனையும் எதிர்பாராமல் எமக்கு உதவி செய்தாராயின்,அவரின் உதவியை நாம், எம் வாழ் நாளில் என்றுமே மறந்துவிடலாகாது. அவருக்கு நன்றியுடையவனாக இருத்தல் வேண்டும்.மாறாக அவருக்கு கெடு செய்ய நினைப்போமாயின், அது எம்மையே வந்து சேரும்

சுல்தான்

துருக்கிய ஆட்சி உச்சத்திலிருந்த காலம். துருக்கியின் சுல்தான், ஐரோப்பாவில் இருக்கும் ஒரு நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்றுவர விரும்பினார். அதுகுறித்து வசீரிடம் (முக்கிய அமைச்சர்) தெரிவித்தார். வசீருக்கோ கவலை வந்துவிட்டது.
‘மேன்மையானவரே! தங்கள் பயணம் நிச்சயம் சர்வதேச பிரச்னையில் கொண்டுபோய் விட்டு விடும்’ என்று எச்சரித்தார் வசீர்.
‘ஏன்?’
‘நம் நாட்டில் பாரம்பரியமான விதி ஒன்று உண்டு. துருக்கிய சுல்தான் எந்த மண்ணை மிதிக்கிறாரோ, அது துருக்கியின் ஆளுகைக்குள் வந்துவிடும். எனவே, இந்த விதியை நடைமுறைப்படுத்தினால் எல்லைப்பிரச்னையோ, போரோ ஏற்பட வாய்ப்பு உண்டு’ என்று தயங்கியவாறே தெரிவித்தார் வசீர்.
ஆனால், சுல்தான் விடுவதாக இல்லை. ‘நான் இந்தப் பயணத்தை மேற்கொள்வது என்று முடிவுசெய்துவிட்டேன். எக்காரணம் கொண்டும் என் திட்டத்தை மாற்றிக்கொள்ளப் போவதில்லை. எனவே, எந்த சர்வதேசப் பிரச்னையும் இதனால் ஏற்படாத வண்ணம் நான் பயணம் மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்க!’ என்று ஆணையிட்டார் சுல்தான்.
வசீர் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினார். தலைமை நீதிபதி ஷேக்அல் இஸ்லாம் அவர்களிடம் இதுகுறித்து கலந்தாலோசிக்க முடிவு செய்தார்.
தலைமை நீதிபதி நிறையப் படித்தவர். அதிக ஞானம் உள்ளவர். எந்தப் பிரச்னைக்கும் சாதுரியமாகத் தீர்வு காண்பதில் வல்லவர்.
‘பழங்கால விதியை மீறுவதோ, மாற்றுவதோ நடக்காத காரியம். நம் சுல்தான் எந்த மண்ணை மிதிக்கிறாரோ, அது துருக்கிய எல்லைக்குட் பட்டதாகிவிடும் என்பது சட்டபூர்வமான ஒன்று. ஆனால், இந்த விதியை உடைக்காமல் தவிர்க்க ஒரு வழி உண்டு. இந்தப் பயணத்தின்போது சுல்தான் அணிவதற்காக விசேஷமான காலணிகளைச் செய்ய வேண்டும். அந்தக் காலணிக்கு இரண்டு அடிப்பகுதிகள் இருக்க வேண்டும். அந்த இரண்டு அடிப்பகுதிகளுக்கு நடுவில் உள்ள காலி இடத்தில் துருக்கிய நாட்டு மண்ணை நிரப்ப வேண்டும். அப்படிச் செய்தால், நம் சுல்தான் எந்த வெளிநாட்டில் பயணம் செய்தாலும் அவர் உண்மையில் துருக்கிய மண்ணையே மிதித்தவர் ஆவார். எனவே, வேறொரு நாட்டின் எல்லையை நம்முடையதாக்கிக்கொள்கிற சட்டபூர்வமான பிரச்னையும் ஏற்பட வாய்ப்பில்லை’ என்று ஆலோசனை சொன்னார் அவர்.

பாலை

பாலைவன வாழ்க்கை துயரமானது. தற்சமயம் அங்கு தாராளமாக பெட்ரோலியம் கிடைப்பதால், பொருளாதார நிலையில் கடல்நீரையும் குடிநீராக மாற்றிக்கொள்ளும் அளவுக்கு வசதி வாய்ப்புகள் அதிகம். ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மிகக் கடுமையான வாழ்க்கை அவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் துயரமான சூழலிலும் வித்தியாசமான சிந்தனைகள் அவர்கள் வாழ்க்கையை வளப்படுத்தின.
பார்வையற்ற யாசகன் ஒருவன் பிச்சை கேட்டவாறு தெருவில் சென்றுகொண்டிருந்தான். அப்போது, அவன் தட்டில் முழு ரொட்டி ஒன்று விழுந்தது. ‘கடவுள் உங்களுக்கு நன்மைகள் செய்வாராக. உங்களுக்கு அவருடைய ஆசிகள் கிடைப்பதாக. நீங்கள் உங்கள் நாட்டுக் குப் பாதுகாப்பாகவும் ஆரோக்கியத்துடனும் திரும்பிச்செல்ல அல்லா உதவுவாராக!’ என்றான் அந்த யாசகன்.
‘நான் இந்தப் பகுதிக்கு அந்நியன் என்பதை எப்படி நீங்கள் அறிந்தீர்கள்?’ என்று வியப்புடன் கேட்டார், ரொட்டி தர்மம் செய்தவர்.
‘நான் இந்த நகரத்தில் இருபது வருடங்களாக யாசகம் கேட்டு வருகிறேன். ஒருமுறைகூட யாரும் முழு ரொட்டியைத் தந்ததில்லை’ என்றான் யாசகன்.
முழு ரொட்டியைப் போடுகிறவன் கட்டாயம் வேறு தேசத்தைச் சேர்ந்தவனாகத்தான் இருக்க வேண்டும் என்று, எவ்வளவு அகப் பார்வையோடு அவன் சிந்தித்திருக்கிறான், பாருங்கள்!
மாற்றி யோசித்தால், தந்திரமாகச் சிந்திப்பவர்களையும் தோற்கடித்து விடலாம் என்பதற்கு, அரேபியக்கதை ஒன்று உண்டு.
அரேபியர்கள் எப்போதும் இசையையும் கவிதைகளையும் நேசிப்பவர்கள். மன்னர்களைப் புகழ்ந்து பாடல்களை இயற்றினால், பரிசுகள் பெறலாம் என்பது தெரிந்ததுதான். ஓர் அரசன் மிகச் சிறந்த ஞாபகசக்தி உடையவன்; அதோடு கூர்மையான அறிவும் நிரம்பப் பெற்றவன். ஒரு கவிதையை ஒருமுறை கேட்டால் போதும்; அதை வரி மாறாமல், வார்த்தை மாறாமல் அப்படியே திருப்பிச்சொல்ல அவனால் முடியும். அவன் சபையில் விதூஷகன் ஒருவன் இருந்தான். அவனும் நினைவாற்றலில் சிறந்தவன்தான். எதையும் இரண்டு முறை கேட்டால், அப்படியே திருப்பிச் சொல்லும் சக்தி உடையவன் அவன். அந்த அவையில் அடிமைப்பெண் ஒருத்தி இருந்தாள். மூன்று முறை கேட்டால், அதை அட்சரம் பிசகாமல் திருப்பிச் சொல்வாள் அவள்.
அந்த அரசன் ஓர் அற்பன். எந்தப் புலவன் வந்து மன்னனைப் புகழ்ந்து பாடினாலும், ‘நீ பாடவிருக்கும் பாடல் இதுவரை நான் கேள்விப்படாத, உன்னுடைய சொந்தப் பாடலாக இருந்தால், அதன் எடைக்குச் சமமாக தங்கக் காசுகள் தருவேன்’ என்பான்.
வந்த புலவனும், தன் கவிதையைப் படிப்பான். ஒருமுறை கேட்டதுமே மன்னனுக்குத்தான் அது மனப்பாடம் ஆகிவிடுமே! எனவே, ஏதோ ஒரு பெயரைக் குறிப்பிட்டு, ‘அந்தக் கவிதை அவர் எழுதியது; நான் ஏற்கெனவே படித்திருக்கிறேன்’ என்று சொல்லி, அதை அப்படியே மளமளவென்று ஒப்பிப்பான். புலவன், ”இல்லை. இந்தக் கவிதை என் சொந்தக் கவிதை” என்று சாதித்தால், ‘கிடையவே கிடையாது! இந்தக் கவிதை என் விதூஷகனுக்குக்கூடத் தெரியும்’ என்று சொல்லி, விதூஷகனைப் பாடச்சொல்வான் மன்னன். புலவன் பாடி ஒருமுறை, மன்னர் திரும்பச் சொல்லி ஒருமுறை என விதூஷகன் அந்தக் கவிதையை இரண்டு முறை உன்னிப்பாகக் கவனித்திருப்பதால், அவனும் அதை வரி மாறாமல் சொல்லுவான். அப்போதும், ”இருக்க முடியாது! இந்தக் கவிதையை நான் நேற்றுத்தான் புனைந்தேன்!” என்று புலவன் அழாக்குறையாகச் சொன்னால், ‘இல்லை. நீ பொய் சொல்கிறாய். என்னுடைய அடிமைப்பெண்கூட இந்தக் கவிதையைச் சொல்வாள்’ என்று சொல்லி, அவளைச் சொல்லச் சொல்லுவான் அரசன். மூன்று முறை கேட்டதால், அவளும் வார்த்தை பிசகாமல் அந்தக் கவிதையைத் திரும்பச் சொல்ல, புலவன் குழம்பிப்போய் சித்தம் கலங்கி, புத்திசுவாதீனத்தை இழக்கும் அளவுக்கு வந்துவிடுவான்.
‘அல் அஸ்மாய்’ என்கிற கவிஞனுக்கு மட்டும் இந்த உண்மை தெரியும். அரசனுடைய நினைவாற்றல் குறித்தும் தெரியும். எனவே, இதுவரை யாரும் உபயோகிக்காத வித்தியாசமான சொற்களைப் பயன்படுத்தி, அவர் ஒரு கவிதையைத் தயார் செய்தார். அதை அரசனோ, விதூஷகனோ, அடிமைப்பெண்ணோ மனப்பாடம் செய்து திரும்பச்சொல்லவே முடியாது என்கிற அளவில் மிகக் கடினமான ஒரு கவிதையை உருவாக்கினார் அவர். பின்பு, ஒரு வழிப்போக்கரைப்போல மாறுவேடம் பூண்டு, அரசவைக்குச் சென்றார்.
‘மன்னரே, நான் உங்களைப் புகழ்ந்து ஒரு கவிதை தயாரித்திருக்கிறேன். உங்களுக்கு படித்துக்காட்ட விரும்புகிறேன்’
‘புலவரே! என் நிபந்தனை உங்களுக்குத் தெரியும் அல்லவா?’
‘நன்றாகத் தெரியும். அந்த நிபந்தனைக்கு நான் ஒப்புக் கொள்கிறேன்’ என்றவர், அந்தப் பாடலைப் பாடிக் காண்பித்தார். கடினமான பதங்களுடன்கூடிய, கரடுமுரடான வரிகள் கொண்ட அந்தப் பாடலைக் கேட்ட மன்னனால், திருப்பிச் சொல்ல முடியவில்லை. மன்னரே தடுமாறியதால், விதூஷகனும் மலங்க மலங்க விழித்தான். அடிமைப்பெண்ணாலும் எதுவும் செய்ய முடியவில்லை. மன்னன் தோல்வியை ஒப்புக்கொண்டான்.
‘புலவரே, இது உங்கள் சொந்தப்பாடல் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. நான் சொன்னதுபோல் உங்களுக்குத் தங்கக் காசுகள் பரிசு தருகிறேன். நீங்கள் பாடல் எழுதிய அந்த ஏட்டைத் தாருங்கள். எங்கள் பொருளாளர் அதன் எடைக்குத் தகுந்தவாறு உங்களுக்குத் தங்கக் காசுகள் தருவார்’ என்றான் மன்னன்.
‘மன்னரே, இதை நான் காகிதத்தில் எழுத வில்லை. என் வீட்டில் உள்ள பளிங்குத் தூணில்தான் இந்தக் கவிதையைச் செதுக்கி வைத்தேன். அதை இங்கே கொண்டு வந்துள்ளேன்” என்று சொல்லி, அரண்மனை வாயிலுக்குச் சென்று குரல் கொடுக்க, மிகப் பெரிய பளிங்குத் தூண் ஒன்றை நான்கு பேர் தூக்கி வந்து, அரசவையில் மன்னன் முன் நிறுத்தினர்.
வேறு வழியின்றி, அந்தப் பளிங்குத் தூண் எடை போடப்பட்டு, மன்னனின் கஜானாவிலிருந்து அத்தனை தங்கமும் காலியாகியும், இன்னும் போதாத நிலைமை ஏற்பட்டது. மன்னன் தன் அற்பத்தனத்துக்குத் தலைகுனிந்து வருந்த, அல் அஸ்மாய் பெரிய மனத்துடன் சிறிதளவே தங்கத்தை எடுத்துக்கொண்டு, மன்னனிடமிருந்து விடைபெற்றார்.

வியாத கீதை

தரும வியாதன் வழங்கிய வியாத கீதை
=======================================
கடமைகளைச் செய்வதுதான், நாம் உயர்வு பெறுவதற்கு உரிய ஒரே வழியாகும். அவ்விதம் நமது கடமைகளைச் செய்வதன் மூலம் நம்மிடம் இருக்கும் வலிமையைப் பெருக்கிக்கொண்டே சென்று, இறுதியில் நாம் உயர்ந்த நிலையை அடைந்துவிடலாம். இளம் துறவி ஒருவர் காட்டிற்குச் சென்றார். அங்கு அவர் தியானம், வழிபாடு, யோகப்பயிற்சி போன்றவற்றில் நீண்ட காலம் ஈடுபட்டிருந்தார். ஒரு நாள் அவர் ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தார். அப்போது அவர் தலைமீது சில உலர்ந்த சருகுகள் வீழ்ந்தன. அவர் நிமிர்ந்து பார்த்தார். அங்கே மரக்கிளை ஒன்றில் ஒரு காகமும் கொக்கும் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. அவருக்கு வந்ததே கோபம்! கோபத்துடன் அவர், என்ன! எவ்வளவு துணிச்சல் இருந்தால் என் தலைமீது சருகுகளை உதிர்ப்பீர்கள்! என்று கூறியபடியே, அந்தப் பறவைகளைப் பார்த்தார். யோகி அல்லவா! அவரது கண்களிலிருந்து ஒரு நெருப்பு மின்னல்போல் மேலெழுந்து சென்று, அந்தப் பறவைகளை எரித்துச் சாம்பலாக்கிவிட்டது! அவருக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. பார்வையாலேயே பறவைகளை எரிக்கும் தமது ஆற்றலைக் கண்டு, அவருக்குத் தலைகால் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது.
சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தத் துறவி, உணவிற்காக அருகில் இருக்கும் ஊருக்குச் சென்றார். அங்கு ஒரு வீட்டின் முன்நின்று, அம்மா, பிச்சை இடுங்கள்! என்று கேட்டார். மகனே! கொஞ்சம் இரு என்று வீட்டின் உள்ளே இருந்து ஒரு குரல் வந்தது. இதைக் கேட்ட அந்தத் துறவி தனக்குள், பெண்ணே, என் சக்தியை நீ அறியவில்லை! என்னைக் காக்க வைக்கிறாயே! உனக்கு எவ்வளவு தைரியம்! என்று நினைத்தார். இப்படி அவர் நினைத்ததுமே உள்ளே இருந்து, மகனே, உன்னைப்பற்றி அவ்வளவு பெரிதாக நினைத்துக்கொள்ளாதே! இங்கே இருப்பது காக்கையும் அல்ல, கொக்கும் அல்ல! என்று குரல் வந்தது. துறவி திகைத்துவிட்டார். எப்படியானாலும் அவர் காத்திருக்கத்தான் வேண்டியிருந்தது. கடைசியாக அந்தப் பெண் வெளியில் வந்தாள். துறவி அவள் கால்களில் வீழ்ந்து வணங்கி, அம்மா, நான் மனதில் நினைத்ததை நீங்கள் எப்படி அறிந்தீர்கள்? என்று வினவினார். அதற்கு அவள், மகனே, உன்னைப்போல் எனக்கு யோகமோ தவமோ எதுவும் தெரியாது. அன்றாடம் என் கடமைகளைச் செய்துகொண்டிருக்கும் ஒரு சாதாரணப் பெண் நான். என் கணவர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார். நான் அவருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தேன். அதனால்தான் உன்னைக் காக்க வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
நான் என் கடமைகளை வாழ்நாள் முழுவதும் மனபூர்வமாகச் செய்துவருகிறேன். திருமணத்திற்கு முன்பு பெற்றோருக்கு என் கடமையைச் செய்தேன்; இப்போது என் கணவருக்குச் செய்து வருகிறேன். என் கடமைகளை நான் செய்து வந்த காரணத்தால் என் ஞானக்கண் திறந்துவிட்டது. அதன்மூலம்தான் நான் உன் எண்ணங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது, காட்டில் உனக்கு நடந்ததையும் தெரிந்துகொண்டேன். இதற்கு மேலும் நீ ஏதாவது தெரிந்துகொள்ள விரும்பினால், இன்ன நகரத்திலுள்ள கடைத்தெருவுக்குச் செல். அங்கே ஒரு வியாதனை (இறைச்சி வியாபாரி) நீ சந்திப்பாய். அவன் உனக்குப் போதிப்பான் என்று கூறினாள். முதலில் அந்தத் துறவி, ஒரு வியாதனிடம் நான் போவதா? என்றுதான் நினைத்தார். ஆனால் சற்றுமுன்பு நடந்த நிகழ்ச்சியால் அவரது ஆணவம் சற்று விலகியிருந்தது. எனவே நகரத்திற்குச் சென்றார். கடைத்தெருவைத் தேடிக் கண்டுபிடித்து அங்கே சென்றார். அங்கே கொழுத்த பருமனான ஒருவன் பெரிய ஒரு கத்தியால் இறைச்சியை வெட்டியபடியே, இறைச்சியை விலை பேசுவதும் விற்பதுமாக இருந்தான்.
அடக் கடவுளே! இந்த மனிதனிடமிருந்தா நான் உயர்ந்த கருத்துகளைக் கற்றுக்கொள்ளப் போகிறேன்! இவனைப் பார்த்தால் அசுரனின் அவதாரம்போல் தோன்றுகிறதே! என்று நினைத்து துறவி அதிர்ச்சி அடைந்தார். இதற்கிடையில் வியாதன் துறவியைக் கவனித்துவிட்டு, ஓ சுவாமி, அந்தப் பெண்மணி உங்களை இங்கே அனுப்பினார்களா? இங்கு சிறிது நேரம் அமர்ந்திருங்கள், என் வியாபாரத்தை முடித்துவிட்டு வருகிறேன் என்றான். இங்கே என்ன நடக்கப் போகிறதோ? என்று நினைத்துக்கொண்டே துறவி அங்கு உட்கார்ந்திருந்தார். நீண்ட நேரம் கழிந்தது. வியாதனின் வேலை முடிந்தது. அவன் பணத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு துறவியிடம் வந்து, வாருங்கள், நாம் வீட்டிற்குப் போகலாம்! என்றான். வியாதன் வீட்டை அடைந்ததும் துறவி அமர்வதற்கு இருக்கை ஒன்றை அளித்து, இங்கேயே இருங்கள், வந்துவிடுகிறேன்! என்று கூறிவிட்டு உள்ளே சென்றான். பின்னர், அவன் வயது முதிர்ந்த தன் தந்தையையும் தாயையும் குளிப்பாட்டி, உணவூட்டி, அவர்கள் மனம் மகிழும்படி பலவகையான சேவைகளைச் செய்தான். பிறகு துறவியிடம் வந்தான்.
துறவி அவனிடம் ஆன்மாவைப் பற்றியும் இறைவனைப் பற்றியும் சில கேள்விகளைக் கேட்டார். வியாதன் அதற்குத் தந்த விளக்கம் வியாத கீதை என்ற பெயரில் மகாபாரதத்தில் இடம் பெற்றிருக்கிறது. பின்னர் துறவி வியாதனைப் பார்த்து, நீங்கள் ஏன் வியாதனாக இருக்கிறீர்கள்? இது இழிவான தொழில் ஆயிற்றே! என்று வினவினார். அதைக் கேட்ட வியாதன் துறவியை நோக்கி, மகனே, கடமைகளில் எதுவும் இழிந்ததும் இல்லை, கேவலமானதும் இல்லை. என்னுடைய பிறப்பு, கசாப்புத் தொழில் செய்யும் இந்தச் சூழ்நிலையில் என்னை வைத்திருக்கிறது. எனக்குப் பற்று எதுவும் இல்லை. என் பெற்றோரை மகிழ்விப்பதற்கு உரிய சேவைகள் எல்லாவற்றையும் நான் செய்கிறேன். உங்கள் யோகம் எனக்குத் தெரியாது, நான் வீட்டைத் துறந்து காட்டிற்குப் போகவில்லை. என் நிலைக்கு உரிய என் கடமைகளை நான் பற்றின்றி செய்தேன். அதனால் எனக்குக் கிடைத்தவற்றையே நீங்கள் என்னிடம் பார்க்கிறீர்கள், கேட்கிறீர்கள் என்று கூறினான்.

குபேரன் மக்கள்

வெண்ணெய் திருடி, தயிர் பானையை உடைத்த கண்ணனை, தாய் யசோதை உரலில் கட்டினாள். மகனைக் கட்டிப் போட்டுவிட்டு அன்னை யசோதை வீட்டு வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள்.
அவ்வாறு மர உரலில் கட்டப்பட்டிருந்த கிருஷ்ணர், தன் முன் இரண்டு அர்ஜுன மரங்கள் நிற்பதைக் கவனித்தார். இந்த இரண்டு அர்ஜுன மரங்களும் பிரபலமான தேவர்களான நளகூபரனும் மணிக்கிரீவனும், தேவர்களின் பொக்கிஷதாரனும் சிவபெருமானின் பெரும் பக்தனுமான குபேரனின் இரு மகன்கள் ஆவார்கள்.
இரு மைந்தர்களும் மது, மாது விடயங்களில் நாடியிருந்தனர். ஒரு முறை நாரதர் முன் இவ்விருவரும் இழி நிலையிலிருந்ததால் அவர்கள் இருவர் மீதும் கருணை கொண்டு, அவர்கள் நற்கதி அடைய வேண்டும் என்பதற்காக அவ்விருவரும் மரங்களாக, தேவர்களின் காலக் கணக்கின்படி நூறு ஆண்டுகளுக்கு இருந்து, பின்னர் முழுமுதற் கடவுளை நேருக்கு நேர் கண்டு நற்பேறு அடைய வேண்டுமென்று நாரதரால் சபிக்கப்பட்டிருந்தார்கள்.
அந்த இரு தேவர்களும் இரட்டை அர்ஜுன மரங்கள் என்று பெயர் பெற்ற மரங்களாக மாறி, நந்த மகாராஜாவின் அரண்மனை முற்றத்தில் தோன்றி வளாந்து, ஸ்ரீ கிருஷ்ணரை நேரில் காணும் நல் வாய்ப்பைப் பெற்றார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் அவ்விரு மரங்களின் இடை வெளியில் புகுந்து சென்றபோது, மரங்களினிடையே உரல் சிக்கிக் கொண்டதும் அதை பலமாக இழுத்தார். அப்போது மரங்கள் வேரோடு சாய்ந்ததும் அவைகளில் இருந்து நளகூபரன், மணிக்கிரீவன் என்னும் அழகான தேவர்கள் தோன்றினார்கள். அவர்கள் ஸ்ரீ கிருஷ்ணரை பலமுறை வலம் வந்து, சிரம் தாழ்த்தி வணங்கி துதித்து மறைந்தனர்.
சத்தத்தைக் கேட்டு நந்த மகாராஜாவும் கோகுலவாசிகளும் ஓடி வந்தனர். கிருஷ்ணர் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள், தேவர்கள் தோன்றியதை கூறினார்கள். நந்தகோபர், கிருஷ்ணரை உரலில் இருந்து விடுவித்து மார்புடன் அணைத்துக் கொண்டார்.

பாண்டியன்

பாண்டிய மாமன்னன் ராஜேந்திரன், சிவபெருமான் மீது மிகுந்த மன வருத்தத்துடன் இருந்தான். பட்டத்தரசி சுவர்ண மீனாட்சி எத்தனையோ முறை ஆலய தரிசனத்திற்கு அழைத்துப் பார்த்தாள். அவன் பிடிவாதமாக மறுத்துவிட்டான். ‘‘தேவி, நீ சென்று சொக்கநாதனை வணங்கி வா; நான் தடுக்கவில்லை. ஆலயத்திற்கு அளிக்க வேண்டிய எந்த உதவிகளையும் நான் நிறுத்தவில்லை. ஆனால், சொக்கேசனை வணங்கும்படி மட்டும் என்னை வற்புறுத்தாதே…’’ என்று உறுதிபடக் கூறிவிட்டான். ‘‘அப்படி என்னதான் சிவன் மீது உங்களுக்குக் கோபம்?’’ என்று விடாப்பிடியாக வினவினாள் பாண்டிமாதேவி.
ராஜேந்திர பாண்டியனின் தந்தை குலபூஷண பாண்டியன் காலத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. சோழர்கள் அப்போது காஞ்சியிலிருந்து ஆண்டு கொண்டிருந்தனர். சோழன் சிவநேசனுக்கு மதுரை சென்று ஆலவாய் அண்ணலைத் தரிசிக்க வேண்டுமென்று ஆவல். ஆனால் பாண்டியனோடு பகை. எப்படி அங்கு செல்வது? சிவநேசச் சோழன் உறையூர் வந்திருந்தான். எப்படியும் ஒரு நடை மதுரை சென்று மகேசனைத் தரிசிப்பது என்று முடிவும் செய்து விட்டான். மாறுவேடம் பூண்டு, ஒரு சாதாரண யாத்ரீகன் போன்று மதுரைக்குப் புறப்பட்டான்.
வைகைக் கரைக்கு வந்து சேர்ந்தபோது, இருள் பரவத் தொடங்கியிருந்தது. வைகையில் வெள்ளமும் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றைக் கடக்க வழி புரியாமல் மனம் கலங்கி நின்றான், சோழன். அப்போது எங்கிருந்தோ திடீரென வந்து நின்ற ஓர் ஓடக்காரன், வைகையைக் கடக்க சோழனுக்கு உதவினான். அதுமட்டுமல்ல, ஆலயம் வரை வழிகாட்டியபடி வந்தான். ஆனால் ஆலயமோ அர்த்தஜாம பூஜை முடிந்து பூட்டப்பட்டு விட்டது. சிவநேசன் பரிதவிப்பதைக் கண்ட ஓடக்காரன் மனமிரங்கி, ‘‘கவலை வேண்டாம். ஆலயத்தின் காவல்காரன் எனக்கு மிகவும் வேண்டியவன். நான் போய் அவனிடமிருந்து சாவி வாங்கி வருகிறேன். நீங்கள் சொக்கேசப் பெருமானைத் தரிசிக்காமல் ஊர் திரும்ப நேராது’’ என்றான்.
அவ்வாறே திறவுகோலை வாங்கி வந்து, ஆலயக் கதவுகளைத் திறந்து விட்டான். அர்த்தஜாம வழிபாடு முடிந்து, ஆலய நடை சார்த்தப்பட்டால், அதை இரவில் மீண்டும் திறக்கும் வழக்கமில்லை. அப்படி வழிபடுவதும் தவறு. எல்லாம் தெரிந்திருந்தும் சிவநேசச் சோழன் ஆர்வ மிகுதியால், சொக்கேசனை மகிழ்வுடன் வணங்கினான். ஆலயக் கதவை பழையபடி மூடிச் சாவியை ஒப்படைத்துவிட்டு வந்த ஓடக்காரன், சோழனை வைகையின் மறுகரையில் கொண்டு விட்டான். சோழன் கொடுத்த பொற்காசுகளையும் வாங்க மறுத்துவிட்டான், அந்த அதிசய ஓடக்காரன்.
மறுநாள் ஆலயத்தைத் திறக்க வந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி. வழக்கமாக ஆலயக் கதவுகள் மூடப்பட்டதும் அவற்றில் பாண்டிய இலச்சினையான மீன முத்திரையைப் பதிப்பார்கள். ஆனால், அன்று அங்கே காணப்பட்டதோ நந்தி முத்திரை! அது பல்லவ நாட்டிற்குரியது. பல்லவம் அப்போது சோழராட்சியில் இருந்ததால் அது சோழ முத்திரையாகவும் பயன்பட்டது. அதை மதுரை ஆலயக் கதவுகளில் பொறித்தது யார்? செய்தி தெரிந்ததும் பாண்டிய மன்னன் கொதித்தான். ‘‘எனக்குத் தெரியாமல் எதிரி இங்கே வந்து போயிருக்கிறான். இது பாண்டிய நாட்டின் மானத்திற்கும் வீரத்திற்கும் மகா இழுக்கு. எப்படி நடந்தது இந்த அநியாயம்? இப்பழியைத் துடைக்க நாம் உடனே சோழ நாட்டின் மீது போர் தொடுத்தேயாக வேண்டும்’’ முழங்கி, படைதிரட்ட உத்தரவிட்டான்.
போர் ஆயத்தங்கள் மும்முரமாக நடந்தன. விடிந்தால் படைகளுடன், சோழநாட்டை நோக்கிப் புறப்பட வேண்டியதுதான்… இரவு ஒரு கனவு. அதில் சோமசுந்தரப் பெருமான் தோன்றினார். ‘‘குலபூஷணா! சோழன் மீதுள்ள சினத்தை விடு, பகையை மற. அவனும் உன்போல் ஒரு சிவபக்தன். அவன் பக்தியை மெச்சி, நான்தான் ஓடக்காரனாகச் சென்று அவனை இங்கு அழைத்து வந்தேன். மூடி, முத்திரையிட்ட ஆலயக் கதவுகளைத் திறந்து, சோழன் சிவதரிசனம் செய்யவும் நானே உதவினேன். திரும்ப மூடி, முத்திரையிட்டபோது, நந்தி முத்திரையை இட்டுவிட்டேன். பாண்டிய மன்னா, நீ நினைப்பதுபோல் ‘நந்தி முத்திரை’ பல்லவ நாடாளும் உரிமையால் சோழனுக்கு வந்ததல்ல. அது சிவராஜதானியின் சிறப்பு அடையாளம்.
இதை ஒரு காரணமாக்கி, நீ சோழன் மீது போர்த்தொடுக்க வேண்டாம். குற்றம் சோழனுடையதல்ல; என்னுடையது. ராஜ தண்டனை அளிப்பது என்றாலும் நீ எனக்கே அளிக்க வேண்டும்!’’ கனவில் வந்து சிவன் பேசப்பேச, மெய் சிலிர்த்து விதிர் விதிர்த்துப்போனார், பாண்டிய வேந்தர். பிறகு போராவது, பூசலாவது! சிவநேசச் சோழனுக்குத் தூதனுப்பி, நட்பு பேசினார். அதன் அடையாளமாக சோழன் மகளை பாண்டிய குமாரன் மணந்தான். பகை இப்போது உறவாக மலர்ந்து விட்டது. குலபூஷண பாண்டியர் சிவபதம் அடைந்தார். ராஜசேகரன், பாண்டிய மன்னன் ஆனான். ஆனால், ஈசன் சோழனுக்கு ஆதரவாகவே இருந்து விட்டார் என்பது அவன் மனக்குறை.
இந்த வஞ்சகமே தன் தந்தையின் உயிரைக் குடித்துவிட்டதாக எண்ணினான். அதனாலேயே ஈசனை வணங்கவும் மறுத்தான். சோழன் மகளை மணந்தது பாண்டியனின் இளைய குமாரன், ராஜசிம்மன். மூத்தவன் ராஜசேகரன் மணந்திருப்பதோ சேரன் செல்வியை. இளையவன் சோழ சைன்யத்தோடு சேர்ந்து, ஒருமுறை அண்ணனை எதிர்க்க எண்ணிச் சதி வேலைகள் செய்தான். அவை பாண்டிய ராஜதந்திரிகளால் முறியடிக்கப்பட்டன. பாண்டிய ராணி, ‘‘பிரபு! பழசையெல்லாம் மறந்துவிடுங்கள். உங்கள் தம்பி தன் குட்டு வெளிப்பட்டுவிட்டதால், உங்கள் முகத்தில் விழிக்கவே அஞ்சி, உறையூரே கதியென்று சோழநாட்டில் போய்க்கிடக்கிறாரே; பிறகு ஏன் கவலை? சிவன் மீதான ஊடலையும் விட்டு விடுங்கள்’’ என்றாள்.
‘‘இல்லை தேவி! தம்பியை வேண்டுமானால் மன்னிக்கலாம். சிவபெருமான் செய்தது பெரிய அநீதி. எங்களுக்குள் ஒரு வழக்கு நடப்பதாக வேண்டுமானாலும் வைத்துக்கொள். குலதெய்வமாக எண்ணிய எங்களுக்கு அவர் ஓரவஞ்சனை செய்துவிட்டார். சோழனுக்கு ஓடக்காரனாக நேரிலேயே சென்று உதவினார். என் தந்தையின் கனவில் தோன்றினார் – அதுவும் சோழனுக்காக வாதிட. எங்கள் சிவபக்தி எதில் குறைந்தது? இதுவே என் தந்தையை மனம் நலியச் செய்து, மரணத்தில் தள்ளியது. இவ்வளவு வருந்துகிறேனே, என் கனவில் ஏன் வரவில்லை சிவன்? அவர் சோழன் ஆதரவாளர். அதனால்தான் நான் வெறுக்கிறேன்.’’
இந்த முறையீடு மதுரைச் சொக்கநாதப் பெருமானின் செவிகளில் விழாமலா இருக்கும்?
சோழன் மகளை மணந்து, உறையூர் ராஜமாளிகையில் தங்கியிருந்த பாண்டிய இளவல் ராஜசிம்மன், மீண்டும் ஒருமுறை மதுரை மீது படையெடுக்கத் திட்டமிட்டான். மதுரை நோக்கிப் புறப்பட்டு விட்டன சோழ சைன்யம். பொழுது புலர்ந்தால், மதுரைக் கோட்டையை முற்றுகையிடுவது அவர்கள் திட்டம்.
முன்னிரவில் மனைவியிடம் சிவபிரான் மீது ஏகப்பட்ட வசைமொழிகளை அர்ச்சித்துவிட்டு கண்ணயரத் துவங்கியிருந்தான் ராஜசேகரப் பாண்டியன். நள்ளிரவில் அவன் கனவில் சிவன் தோன்றினார். ‘‘குலபூஷண பாண்டியனின் புதல்வனே! என் மீது சினம் கொண்டு, பிணங்கிக் கிடக்கும் பிள்ளையே! எழுந்திரு. இது நீ உறங்க வேண்டிய தருணமல்ல.
அங்கே சிவநேசச் சோழனின் மனத்தைக் கெடுத்து, அவனையும் சோழப் படைகளையும் அழைத்துக்கொண்டு உன் தம்பி ராஜசிம்மன் உன்மீது போர்தொடுக்க வருகிறான். விடிந்தால் உன் கோட்டை முற்றுகை இடப்படும் நிலை. நீ என்னை வசை பாடினாலும் நான் உன்னைக் கோபித்ததில்லை. உன் வேண்டுகோள்படி இதோ உன் கனவில் தோன்றி, உனக்கு நல்லதைச் செய்துள்ளேன். எழு, விழி, போராடு. என் எதிரியை வெற்றிக் கொள்…’’ சிவபிரான் பேசக்கேட்டு, சிலிர்த்து எழுந்தான் பாண்டியன். விடியும்வரை காத்திருக்க அவன் விரும்பவில்லை. நிலைப்படையாக இருக்கும் சில நூறு வீரர்களை அழைத்துக்கொண்டு, அப்பொழுதே புறப்பட்டான். சோழர் படையுடன் வரும் தம்பியை மதுரையின் எல்லைக்குள் நுழையவே விடக்கூடாது என்பது அவன் எண்ணம்.
வழியெங்கும் அவனுக்கு வியப்பூட்டும் விந்தை காத்திருந்தது. ஆங்காங்கே ஊருக்கு நூறுபேர் ஆயுதங்களும், தீப்பந்தங்களும் ஏந்தி நின்று, காத்திருந்து, மதுரைப் படையோடு தங்களை இணைத்துக் கொண்டனர். எப்படி நிகழ்ந்தது இந்த அதிசயம்! மதுரைப்படை ஒரு போர்ப்பயணம் புறப்பட்டு வருவதை இவர்கள் எப்படி அறிவார்கள்? விசாரித்தான் பாண்டியன். எங்கும், எல்லோரும் கூறியது ஒரே தகவல்: ‘‘ஆஜானுபாகுவான ஒரு மனிதர் பாயும் புரவிமீது வந்தார். ஒவ்வொரு சிற்றூரிலும் மக்களை எழுப்பி, சோழ சைன்யம் மதுரையைத் தாக்க வருகிறது. அவர்களை வழிமடக்கிப் போரிட இதோ பாண்டியன் சிறிய படையுடன் வருகிறான். இளம் சிங்கங்கள் எழுந்து, ஆயுதம் ஏந்தி வந்து மதுரைப் படையுடன் சேர்ந்து கொள்ளுங்கள் என அறிவித்தார்.
அவர் பாண்டிய ராஜமுத்திரையான மீன இலச்சினை பொறித்த மோதிரத்தைக் காட்டினார். கையில் மீன் கொடியும் ஏந்தியிருந்தார். அவர் பேச்சை ராஜ கட்டளையாக எண்ணியே நாங்கள் திரண்டோம்…’’ யார் அந்த மாய மனிதன்? ராஜசேகரப் பாண்டியனால் ஊகிக்க முடியவில்லை. அந்தப் புதிர் அவிழ அவன் மறுநாள் இரவு வரை காத்திருக்க நேர்ந்தது. சோழர் படை முறியடிக்கப்பட்டது. தம்பியும் தம்பிக்கு உதவிய சோழவேந்தனும் சிறைப்பட்டனர். இரவில் நிம்மதியாகக் கண்ணுறங்கப் போனான் ராஜசேகரன். ‘யார் அந்த மாய மனிதன்?’ என்கிற வினா மட்டும் இன்னமும் அவன் மண்டையைக் குடைந்து கொண்டிருந்தது. அந்த மாய மனிதன் அதே உருவில் அவன் கனவில் தோன்றினான். என்னவொரு கம்பீரம்! ‘‘பிரபோ! தங்கள் கட்டளையை மக்களிடம் அறிவித்த ஊழியன் அடியேன்தான்’’ என்றான்.
‘‘யார் நீ? என் ஊழியரில் எவரும் உன்போல் இல்லையே? நான் எப்போது உன்னிடம் கட்டளையிட்டேன்…?’’
‘‘இதோ இப்போது பார் என்னை. உன் ஐயம் அனைத்தும் விலகும்…’’
புரவி நந்தியாக மாற, பாண்டிய வீரன் சிவனாகிறார்! ‘‘ஆ! ஐயனே! தாங்களா எனக்கு ஊழியம் பார்த்தீர்கள்?’’
‘‘பதற்றம் வேண்டாம், பாண்டிய மன்னா! ‘பரிகாரம்’ என்பது மனிதர்கள் செய்ய வேண்டியது மட்டுமன்று, பக்தனுக்காக இறைவனும் செய்யலாம்! நான் சோழனுக்கு ஓடக்காரனாக வந்து ஊழியம் புரிந்தேன். உனக்கு உன் சேவகனாக இதோ வந்தேன்; உன் ராஜ இலச்சினைகளை ஏந்தி ஊழியம் புரிந்தேன். போதுமா, இல்லை இன்னும் என்மீது உனக்குச் சினம்தானா? நான் எதும் ராஜ தண்டனை ஏற்க வேண்டுமா?’’
‘‘சிவ சிவா! என்ன பேச்சு சுவாமி இது… தாங்கள் எனக்கு ஊழியம் பார்த்தீர்களா? எவ்வளவு பெரிய அபசாரத்துக்கு என்னை ஆளாக்கிவிட்டீர்கள். இதற்கு நான் ஏதேனும் பரிகாரம் செய்ய விரும்புகிறேன். என்ன செய்ய வேண்டும்? ஆணையிடுங்கள்…’’
‘‘நீ சினம் தணிந்தால் போதும். போய் சிவநேசச் சோழனை விடுதலை செய். உன் தம்பியையும் விடுவித்து, மன்னித்து ஏற்றுக்கொள்.’’
‘‘அப்படியே ஆகட்டும் ஐயனே! இப்போதும் தங்கள் கருணை அவர்கள் பக்கம்தான் இருக்கிறது. ஓடக்காரனாக வந்தீர்கள். மக்கள் முன் பாண்டிய வீரனாக வந்தீர்கள். எனக்கு மட்டும் கனவுக் காட்சிதானா?’’
விண்ணும் மண்ணும் அதிர வாய்விட்டு நகைத்தார் அரன். பிறகு, ‘‘ராஜசேகரா! என்னிடம் வாதிப்பதிலேயே இன்பம் காணும் முரட்டு பக்தன் நீ. உன் மனைவியிடம் என்ன சொன்னாய்? ‘சிவன் என் கனவில் வரவேண்டும்’ என்றுதானே? வந்து விட்டேன்! சரிதானே? வாழ்வே ஒரு கனவுதான்; கனவு ஒரு வாழ்வுதான். கவலையைவிடு கடமையைச் செய்…’’
சிவன் ஜோதிமயமானார். பாண்டியன் கனவிலிருந்து சந்தோஷமாக விடுபட்டான். கிழக்கு வெளுத்தது. சிவன் கட்டளைப்படி சிறைக் கதவுகள் திறக்கப்பட்டன. பண்பு சிறந்து, பகை மறைந்தது. உறவின் உன்னதம் மலர்ந்தது. சோழ மன்னனை அழைத்துச் சென்று, சொக்கேசப்பெருமானைத் தரிசிக்க வைத்தான் ராஜசேகரப் பாண்டியன். அவன் கண்ட கனவு விருத்தாந்தங்கள், வரலாற்றுப் பக்கங்களில் பதிவாயின.

வருஷ நாட்டு ஜாமீன் கதை

புத்தக முகப்பில் இருந்த ஒரிஜினல் படத்தைக் கண்டவுடன் எடுத்து புரட்ட ஆரம்பித்தேன். உள்ளே மேலும் சில பழமையான படங்களோடும் ஓரமாய் இருக்கும் சிறு குறிப்புகளும் கவரும் வண்ணம் இருந்தன. சரி படித்துப் பார்க்கலாம் என்ற முடிவுக்கு வந்தேன். வடவீர பொன்னையா என்ற எழுத்தாளரின் எழுத்தை முதல் முறை வாசித்தேன்.
இதைக் கதை என்று சொல்வதை விட நீள் சரித்திரக் கட்டுரை என்று தான் சொல்ல வேண்டும். சாபத்தால் சரிந்த ஒரு சாம்ராஜ்யத்தின் உண்மைக் கதை எனும் கோடிட்ட வார்த்தைகளை முன்னமே தெரிவித்து விடுகிறார்கள். மூன்று தலைமுறையில் ஜமீனில் நடக்கும் சம்பவங்கள் தான் கதை. கதையை கொஞ்சமும் சுவாரசியம் குறையாமல் இட்டுச் சென்றிருப்பது ஆசிரியரின் பலம்.
இக்கதை சம்பந்தப்பட்ட மனிதர்களையும், குடும்ப நண்பர்களையும், வாரிசுகளையும் ஆசிரியர் நேரில் கண்டு சம்பவங்களை உறுதி செய்து சம்பவங்களை லாவகமாக கோர்த்து எழுதி இருக்கிறார். ஜமீன் மிரட்டல், ஏழை மக்கள், பளியர்கள், கவுடள் நம்பிக்கை, சாபம் என கதையில் ஒவ்வொரு பக்கத்திலும் ஈர்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
ஜமீன்கள் பெண்கள் விசயத்தில் பாரபட்சம் பார்க்காமல் ஏக போகமா வாழ்ந்ததை ஒளிவு மறைவு இல்லாமல் விலாவாரியா விவரிச்சு எழுதப்பட்டிருக்கிறது. சுவாரசியத்துக்காக சில புனைவுகள் சேர்க்கப்பட்டிருப்பதை உணர முடிகிறது. ஜமீன் அழிந்து போவதற்கு முழுக் காரணம் சாபம் என்பதை விட ஜமீன் வாரிசுகளின் ஏகாந்த வாழ்க்கை முறையும், கணக்கு வழக்கு இல்லாமல் கடன் வாங்கும் போக்கும் காரணமாக அமைந்தது என்று தான் சொல்ல வேண்டும்.
வெள்ளையர் காலத்தில் ஆராய்ச்சியின் போது கண்டு பிடிக்கப்பட்ட தொல் பொருள் செய்திகளும் கதை போக்கில் சொல்லப்படுகிறது. கதையை படித்து முடித்த பிறகும் சில கதாப்பத்திரங்களும், சில இடங்களில் சொல்லப்படும் கருத்தும் இன்னமும் அழியாமலே இருக்கிறது.
சமூகத்திலும் பொருளாதாரத்திலும் ஒரு மனிதன் மனதளவில் சுதந்திரமாக செயல்படவும் வல்லமை பெறவும் துடிக்கிறான், எனவே மனிதர்கள் மனதில் தான் யுத்தங்கள் தொடங்குகின்றன. அவர்களின் மனங்களிலேதான் அமைதியும் உண்டாக வேண்டும் என சில வரிகள் நெஞ்சில் பதிகின்றன.
மூன்றாவது சாம்ராஜியத்தில் இருக்கும் ஜமீன் மைனர் பாண்டியன். இவரின் இறப்போடும் அதன் பின் இன்றளவில் அவர்களின் பரம்பரையினர் எப்படி இருக்கிறார்கள் என்பதாக கதை முடிக்கப்படுகிறது. இக்கதை எழுதும் போது மைனர் பாண்டி திருமணம் செய்து கொண்ட பெண் உயிரோடு இருந்திருக்கிறார். 73 வயது அவருக்கு.
அவருடைய புகைப்படத்தோடும் சில பேட்டிகள் போடப்பட்டிருக்கின்றன.மைனர் பாண்டிக்கு 34 வாயதாக இருந்த போது அவர் திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கு 13 வயது. மாட்டு வண்டியில் போய் கொண்டிருக்கும் போது பார்த்தவுடன் பிடித்துப் போய் தூக்கிக் கொண்டு சென்று திருமணம் செய்துக் கொள்கிறார். கேட்க கேளியாகவும் கொடுமையாகவும் தான் இருக்கும்.
பாலிய விவாகம் என்பது அக்காலகட்டத்தில் பெரிய விசயமாக இருந்ததாக தெரியவில்லை. அவ்வளவு சின்ன வயதில் திருமணம் செய்து வைத்தே அந்த ஆசாமிகளுக்கு அத்தனை மனைவிகளும் வைப்பாட்டிகளும் என்றால் இன்றய நிலையில் 29 அல்லது 30 வயதில் திருமணம் செய்வார்கள் என்றால் என்னாவது? சற்று சிந்த்திக்க வேண்டிய விசயம் தான். இல்லை அக்காலத்தில் வாழ்க்கை முறை சுமையில்லாமல்(வேலை வெட்டி) இருந்திருக்குமோ? 
அன்றைய நிலையிலேயே பெண்கள் விழிப்படைந்தார்கள் என்பதாக சித்தரிக்கப்பட்டிருப்பவர் வேலுத்தாயம்மா. இவர் கொண்டமனூர் சாமியப்ப நாயக்கரின் முதல் மனைவி. மைனர் பாண்டியனின் அம்மா. சுகபோகியாக இருக்கும் கணவனை விட்டுச் சென்று வாழ்கிறார். மைனர் பாண்டியும் பொறுப்பில்லாமல் இருக்கவும், அவரை விட்டும் தனித்து வாழ்கிறார். மைனர் பாண்டி இறந்தது 1951-ஆம் வருடம். வேலுதாயம்மா இறந்தது 1956-ஆம் வருடம். மைனர் பாண்டியின் இறப்புச் சடங்கிலும் அவர் கலந்துக் கொள்ளவில்லை. அப்படி ஒரு மனோதிடமான பெண். கணக்கு வழக்குகளை சீராக எழுதி கையெப்பம் இட்ட பிரதியையும் ஸ்கேன் செய்து போட்டிருக்கிறார்கள். இன்னும் பல விடயங்கள் பார்க்க படிக்க திகட்டாத தேனாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
உண்ணாம கெட்டுப் போச்சி உறவு,
பார்க்காம கெட்டுப் போச்சி பயிரு,
ஏறாம கெட்டுப் போச்சி குதிரை,
அடிக்காம கெட்டுப் போச்சு பிள்ளை,
முறுக்காம கெட்டுப்போச்சி மீசை.
சாபத்தோட வீரியத்துக்கு
சாம்ராச்யம் உரமாச்சு..
பூமியில பொதஞ்ச கதை
மறுபடியும் கருவாச்சு..
நல்ல சனங்க போற பாதையில
நல்ல விதை முளைக்கும்..
சரித்திரத்த சொல்லுகிற
சாட்சியாக இருக்கும்..
இப்படியாக சில கிராமிய பழமொழிகளும் மிக இலகுவாக கோர்க்கப்பட்டிருக்கின்றன. புத்தகத்தை இன்னும் சிறப்பாக அச்சிட்டிருக்கலாம். ஆனந்த விகடன் சைசில் சிறுவர் புத்தகத்தை போல் இருக்கிறது. கள்ளிக் காட்டு இதிகாசத்தை போன்ற அளவில் அச்சிடப்பட்டிருந்தால் பக்கங்களும் கூடி இருக்கும். கையடக்கமாக படிப்பதற்கும் வசதியாக இருக்கும். எப்படி இருப்பினும், படித்து முடித்ததும், ஏதோ ஒரு தேடலுக்காக மீண்டும் படிக்கச் சொல்கிறது வருச நாட்டு ஜமீன் கதை.

எழுபதில்

நீண்ட நாட்கள் கழித்து எனது பழைய நண்பன் ஒருவனைச் சந்திக்க நேர்ந்தது. நண்பர்களின் சந்திப்பே ஒரு உற்சாக ஊற்றுதான். குன்ஹா தீர்ப்பு, சொத்துக் குவிப்பு வழக்கு, ஊழல், தண்டனை என்று அவன் அப்போது நிகழ்ந்தவைகளை சூடாக விவாதிக்க ஆரம்பித்தான். எனக்கோ இந்த அரசியல் பார்வைகளில் அதிக ஈடுபாடு எப்போதுமே கிடையாது. நீதி, நேர்மை என்பதெல்லாம் நம் நாட்டில் நேர்மையாக இருப்பதாக நான் என்றுமே தீவிரமாக எண்ணியதேயில்லை. மேலும் என்னிடம் அரசியல் பேசினால் எனது எதிர்வினை கடைசியில் "அப்படியா? இருந்துவிட்டுப் போகட்டுமே." என்பதாகத்தான் இருக்கும். என் நண்பனோ முன்னை விட முனைப்பாக அரசியல் கட்சிகளை சாடத் துவங்க நான், "அரசியல் மதம் இரண்டும் பொதுவெளியில் தவிர்க்கப்படவேண்டிய விவாதங்கள்." என்றேன் அவனிடம். "நீ சொல்வது சரிதான்" என்று உடனே ஒத்துக்கொண்டவன் ."வேறு என்ன பேசலாம்?" என்று கேட்டான். "பொதுவாக இசை பற்றி பேசலாம். உனக்குப் பிடித்த ஐந்து பாடல்களைக் குறிப்பிடு" என்று வேறு பாதைக்கு அவனை இழுத்து வந்தேன். இன்னும் துடிப்பாக உடனே என் யோசனைக்கு செவிசாய்த்தான். இரண்டு நிமிடங்கள் செலவழித்து ஐந்து பாடல்களை குறிப்பிட்டான். கீழ்க்கண்டவைகள் எப்போதும் ரசிக்கும் அவன் விருப்ப ஐந்து.
நினைவோ ஒரு பறவை-சிகப்பு ரோஜாக்கள்.
ஒரு இனிய மனது இசையை அழைத்துச் செல்லும்-ஜானி.
காதல் ஓவியம் பாடும் காவியம்-அலைகள் ஓய்வதில்லை.
பூ மாலையே தோள் சேரவா-பகல் நிலவு.
காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரிப் பொட்டுவைத்து- வயசுப்பொண்ணு.
நாங்கள் 70-80களைச் சார்ந்தவர்கள் என்பதால் இது எனக்கு வியப்பாக இல்லை. அவன் குறிப்பிட்ட பாடல்கள் எல்லாமே எனக்கும் விருப்பமானவையே. குறிப்பாக நினைவோ ஒரு பறவை என்ற பாடலை நான் அதிகம் நேசித்ததுண்டு. சாலையில் நின்றுகொண்டும் எதோ கடைக்கருகில் சதைத்தூணாக மாறி செய்யவேண்டிய வேலையைச் செய்யாதும் வானொலியில் ஒலித்த பல பாடல்களை நான் என் பால்ய பருவத்தில் ரசித்துக் கேட்டவன். அவை பெரும்பாலும் இளையராஜாவின் பாடல்களாகத்தான் இருக்கும். பள்ளிப் பருவத்தில் நாம் கேட்கும் கானங்கள்தானே பசுமையாக நம்மில் துளிர்த்துக்கொண்டிருகின்றன!
"அதெல்லாம் சரி. அது ஏன் காஞ்சிப் பட்டுடுத்தி பாடல்? இது உன் தேர்வு போல தெரியவில்லையே?" என்றேன். "எப்படி சரியாக கண்டுபிடித்தாய்?" என்றவன், "எனக்குப் பிடிக்கும் ஏனென்றால் என் ஆளுக்கு ரொம்பப் பிடிக்கும்." என்றான் கண் சிமிட்டியபடி. நான் எதிர்பார்த்ததுதான். "உன் மனைவிக்குத் தெரியுமா இது?" என்று கேட்டேன். ஏனென்றால் அவன் காதல் கதை நம் சமூகத்திலிருக்கும் ஏராளமான தோல்வியடைந்த அமர காவியங்களில் ஒன்று.
சற்று நேர மவுனத்திற்குப் பிறகு, "ஆனால் என்ன ஒன்று பார்த்தாயா? இது ஐந்துமே இளையராஜா பாடல்கள்." என்றான் உணர்சிவசப்பட்டவனாக. அது ஒரு தேவையில்லாத உணர்ச்சியாக எனக்குத் தோன்றியது. ஏனென்றால் அது உண்மையில்லை என்று எனக்குத் தெரியும். அவன் சொன்னதில் நான்கு இளையராஜா இசையில் வந்த பாடல்கள். கடைசியில் அவன் குறிப்பிட்ட காஞ்சிப் பட்டுடுத்தி கஸ்தூரிப் பொட்டு வைத்து என்ற பாடல் 78 இல் வந்த வயசுப் பொண்ணு என்ற படத்தில் இடம் பெற்றது. அதற்கு இசை அமைத்தது எம் எஸ் விஸ்வநாதன். இதை நான் அவனிடம் தெரிவித்த போது இரண்டு முறை நம்பாத சிரிப்பு சிரித்தான். சரிதான். சிலர் மண்டைகளைத் திறந்து நேரடியாக கபாலத்தில் உண்மையை ஊற்றினாலும் ஒரு பலனுமில்லை என்று என் முயற்சியை கைவிட்டுவிட்டேன். என் நண்பனைப் போலவே பலரும் இந்தக் காஞ்சிப் பட்டுடுத்தி பாடலை இளையராஜாவின் இசை என்றே கருதுகிறார்கள். இது நானறிந்த ஒன்றுதான். ஏன் நானே எனது பால்ய வயதில் இந்தப் பாடலை அப்படித்தான் நினைத்திருந்தேன். படத் தலைப்பும் வயசுப் பொண்ணு என்று பாரதிராஜா வகையறாக்களின் தலைப்பு போல இருந்ததும் இந்தப் பிழை நிகழ்ந்ததற்கு ஒரு முக்கிய காரணம்.
புதிதாக திருமணமான பெண்ணொருத்தி தன் கணவன் வீட்டில் எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்ற மூளை மழுங்கிய ஆணாதிக்க சிந்தனை வரிக்கு வரி தெறித்தாலும் கேட்பதற்கு மந்திர மயக்கத்தைக் கொடுக்கும் கானம். ஒரு இடத்தில் கூட நம் ரசனையை சிதைக்காத வகையில் நளினமாக நடை பயிலும் மிக அலாதியான பாடல் இது.
இப்போது பாதியில் விட்டுவிட்டு வந்த என் நண்பனை மீண்டும் பார்ப்போம். "என் பட்டியல் முடிந்தது. இப்போது நீ சொல்." என்று என்னைக் கேட்டான். இதைச் சொல்லிவிட்டு உடனே, "நீ டி ஆர் மகாலிங்கம் பாட்டையெல்லாம் சொல்லுவியே" என்று கலவரமடைந்தான் . எனக்கு அது சற்று ஆச்சர்யமாக இருந்தது. அடடே என்னைப் பற்றி கொஞ்சமேனும் சரியாகக் கணித்திருக்கிறானே என்று எண்ணினேன். "டி ஆர் மகாலிங்கம் வரை போகமாட்டேன்." என்ற உறுதிக்குப் பிறகு நான் சொன்னேன், "சொன்னது நீதானா? பாடல் எனக்குப் பிடித்த ஒன்று." உடனே , "நான் அடுத்து இதைத்தான் சொல்ல நினைத்தேன்." என்றான் அவன். "ஏன் இதையும் உன் ஆள் ரொம்பவும் விரும்பிக் கேட்பாளோ?" என்றேன். "அதில்லை. நல்ல பாடல். அப்பறம் பாச மலர் படத்தில் ஒரு அருமையான பாடல்..." அது என்ன பாடல் என்பதை அவன் மறந்துவிட்டான். "மலர்ந்தும் மலராத பாதி மலர்போல.." என்று நான் ஆரம்பித்ததும் "அதேதான். ச்சே சான்சே இல்லை." என குதூகலித்தான்: "கேட்டா அழுகை வந்துரும். இல்ல?" என்றான். "உண்மைதான். ஆனால் ஒன்று. இதையும் இளையராஜா பாடல் என்று சொல்லிவிடாதே." என்றேன். "அப்ப இல்லியா?" என்று போலியாக வியப்பு காட்டினான். எனக்கு எரிச்சல்தான் வந்திருக்கவேண்டும் மாறாக சிரிப்பு வந்தது. " நாம் அரசியல் பற்றியே பேசியிருக்கலாம்." என்றேன்.
எழுபதுகளின் நேர்த்தியான இன்னிசை அதிகம் விவாதிக்கப்படாத ஒன்று. பெரும்பாலும் இந்த காலகாட்டம் ஹிந்தி இசையின் ஆதிக்கம் நிறைந்ததாகவும் தமிழிசை பின் இருக்கைக்கு போய்விட்டதாகவும் ஒரு நிரூபனமற்ற கருத்து பரவலாக சிலரால் பரப்பப்படுகிறது. எழுபதுகளின் இன்னிசையை என்னால் முடிந்த அளவுக்கு வெளிப்படுத்தும் முயற்சியில் நான் எழுதும் ஏழாவது பதிவு இது. இவற்றில் மொத்தமாக நான் சேகரித்துச் சொல்லியிருக்கும் பாடல்கள் அப்போது வந்ததில் பாதி அளவு கூட இருக்காது. இருந்தும் ஒரு சிறிய எண்ணிக்கையையாவது பதிவு செய்வது அவசியம் என்பதைத் தாண்டி சில முரட்டுக் கருத்துகளுக்கு முடிவு கட்டவும் சில மூடப்பட்ட கதவுகளை திறக்கவும் தேவைப்படும் ஆயுதம் என்றே நான் எண்ணுகிறேன்.
மதன மாளிகையில் மந்திர மாலைகளா உதய காலம்வரை உன்னத லீலைகளா என்ற பாடல் ராஜபார்ட் ரங்கதுரை என்ற படத்தில் இடம்பெற்ற கனவு கானம். அப்போது அதிகம் கேட்டதில்லை. ஏனோ பிடித்ததில்லை. 75ஆம் ஆண்டு காலில் நடந்த அறுவைச் சிகிச்சை ஒன்று என்னை ஏறக்குறைய ஒரு மாதம் மருத்துவமனையில் முடக்கிப்போட்டது. அம்மா மட்டும் என்னுடன் இருக்க என் சகோதரனும் சகோதரிகளும் தினமும் என்னை வந்து வேடிக்கைப் பார்த்துவிட்டு போவது எனக்குப் பழகியிருந்தது. அடுத்த வார்டில் தனியாக இருந்த ஒரு வயதான தாய் ட்ரான்சிஸ்டரில் பாடல்கள் கேட்டுக்கொண்டிருப்பார். குறிப்பாக மதன மாளிகையில் என்ற இந்தப் பாடலை அப்போதுதான் முழுமையாகக் கேட்டேன். அதன் மெட்டும் ராக தாள நுணுக்கங்களும் முழுதும் புரியாவிட்டாலும் எதோ ஒரு வசீகரம் அந்தப் பாடலை ரசிக்கவைத்தது. இன்றும் இந்தப் பாடல் எனக்கு நான் தங்கியிருந்த மருத்துவமனையின் வாசனையையும் அந்த நீண்ட தாழ்வாரங்களையும், காலில் தினமும் எதோ ஒரு கூர்மையான கம்பி கொண்டு டிரெஸ்ஸிங் செய்தபோது அனுபவித்த வலியையும் அப்படியே திரும்ப கொண்டுவருகிறது. நாஸ்டால்ஜ்யா! நினைத்தை முடிப்பவன் படத்தின் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து ஓடம் போல ஆடலாம் பாடலாம் என்ற பாடலும் இதே மருத்துவமனை நினைவுகளை என்னுள் புதுப்பிக்கும்.
நான் உள்ளே இருந்து வெளியே வந்தேன் உலகம் தெரியுதடா என்ற பாடலைக் கேட்கும்போதெல்லாம் எனக்கு எங்கள் ஊரிலிருந்த பிரகதாம்பாள் என்ற திரை அரங்கில் இருப்பது போன்ற நினைவே வரும். பட இடைவேளையின் போது மிகப் பொருத்தமாக இந்தப் பாடல் ஒலிக்கும். இது மணிப்பயல் என்ற படத்தில் வந்தது என்று அறிந்தேன். ஆனால் உறுதியாகத் தெரியவில்லை. இசை எம் எஸ் வி யாக இருக்கலாம்.
பொன்னென்றும் பூவென்றும் தேனென்றும் சொல்வேனோ, நிலவே நீ சாட்சி மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம், தை மாதப் பொங்கலுக்கு தாய் தந்த செங்கரும்பே - நிலவே நீ சாட்சி படத்தின் இந்தப் பாடல்கள் தரமானவை. குறிப்பாக பொன்னென்றும் பூவென்றும் பாடலில் எஸ் பி பியின் இளமை துள்ளும் வசீகரக் குரலை ரசிக்கலாம்.
நீல மலர்கள் ( அனுராக் என்ற ஹிந்திப் படத்தின் நகல்) என்று ஒரு படம் 79 இல் வந்தது. கமலஹாசன்-ஸ்ரீதேவி நடித்தது. இதில் ஒரு காவியப் பாடல் உண்டு. வசியம் செய்யும் இசை கொண்ட தாலாட்டும் மெலடியுடன் எம் எஸ் வி அமைத்த இது இரவா பகலா நீ நிலவா கதிரா என்ற பாடல்தான் அது. பார்வையற்ற பெண்ணொருவள் தன் காதலன் வழியே இந்த உலகைப் பார்க்கும் நெகிழ்ச்சியான அனுபவத்தை இப்பாடல் மிகச் சிறப்பாக நமக்கு உணர்த்தும். எத்தனை அழகான கற்பனை! அதை இன்னும் அழகேற்றும் என்ன அபாரமான காவியக் கவிதை வரிகள்! பல்லவியைத் தாண்டி சரணத்துக்குள் செல்லச் செல்ல பார்வையற்ற உலகின் இருண்ட சோகத்தைக் கூட ரசிக்கும் இன்ப மனநிலை நமக்கு வந்துவிடக்கூடிய ஒரு இதயமில்லா இன்னிசை.
கல்யாணமே ஒரு பெண்ணோடுதான் இதில் யார் என்ன சொன்னாலும் ஊர் என்ன சொன்னாலும் என் வாழ்க்கை உன்னோடுதான் லலிதா (76) என்ற படத்தில் வந்த இந்தப் பாடல் ரேடியோ நாட்களின் சுவையை பலருக்கு இன்னமும் உணர்த்தக்கூடியது. மரபிசையை விட்டு விலகாத மெட்டும் வாணியின் வெள்ளிக்குரலும் துருத்தாத இசையமைப்பும் எத்தனை அழகாக ஒன்றுசேர்ந்து விருந்து படைக்கின்றன! இதே படத்தில் வரும் சொர்கத்திலே முடிவானது சொந்தத்திலே நிலையானது பாடலும் கேட்பதற்கு சுகமானது.
நான் சில எம் எஸ் வி பாடல்களை இளையராஜாவின் இசையாக நினைத்ததுண்டு. அதில் ஒன்றுதான் அடியேனைப் பாரம்மா பிடிவாதம் ஏனம்மா வணக்கத்துக்குரிய காதலியே என்ற பாடல். வணக்கத்துக்குரிய காதலியே என்ற படத்தில் வரும் பாடலிது. இது மாலைமதி பத்திரிகையில் (ஆரம்பத்தில் மாலைமதியில் ஆங்கில காமிக்ஸ் கதைகள் வந்ததன.) எழுத்தாளர் ராஜேந்திர குமார் எழுதிய ஒரு புதினம். இதே படத்தின் அதிகம் கேட்கப்படாத மற்றொரு இனிமையான கீதம் ஸ்விங் ஸ்விங் உனது ஊஞ்சல் நான். இந்தப் பாடல் செல்லும் விதமே ஒரு ஊஞ்சலில் ஆடுவதைப் போலிருக்கும். இரண்டும் செழுமையாகச் செதுக்கப்பட்ட இசைச் சிற்பங்கள்.
79இல் வந்த படம் ஒரே வானம் ஒரே பூமி. ஐ வி சசி இயக்கத்தில் ஜெய்ஷங்கர் நடித்த இந்தப் படம் முக்கால்வாசி அமெரிக்காவில் படமாக்கப்பட்டது. இதற்கு இசையமைத்தது எம் எஸ் விஸ்வநாதன். அந்நிய மண்ணில் எடுக்கப்படும் படங்களுக்கான சிறப்பான பொருத்தமான மேலும் இனிமையான இசையை கொடுப்பதில் எம் எஸ் வியை விட்டால் அப்போது வேறு யார் இருந்தார்கள்? எண்பதுகளில் ஜப்பானில் கல்யாணராமன் என்று ஒரு படம் வந்தது. அதில் இருக்கும் ஒரு பாடலில் கூட ஜப்பானை நினைவு படுத்தும் எந்த சங்கதியும் இருக்காது. எதோ அமிஞ்சிகரையில் எடுக்கப்பட்டதைப் போன்ற உணர்வுதான் வரும். ஒரே வானம் ஒரே பூமி படத்தின் கும்மாள கீதமாக ஒலிக்கும் சொர்கத்திலே நாம் அடியெடுத்தொம் வெகு சுகமோ சுகமாக என்ற பாடல் குதூகல முத்திரையை கொண்டது. பிரமாண்டமான இசையமைப்பு கொண்ட மிகச் சிறப்பான பாடல். உலக சகோதரத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் கொஞ்சம் காம்யுனிஸ்ட் சிவப்பு தென்படும் அட்டகாசமான பாடல் ஒரே வானம் ஒரே பூமி ஒரே ஜாதி ஒரே நீதி. சொல்லும் கருத்தைக் கொண்டு இது ஏறக்குறைய யாதும் ஊரே யாவரும் கேளிர் பாடலின் தொனியைக் கொண்டது என்று சொல்லலாம். இதிலுள்ள மற்றொரு அழகான பாடல் மலைராணி முந்தானை சரிய சரிய. இதை முதலில் கேட்டபோது இதில் ஜாலி ஆபிரகாம் வாணி ஜெயராமின் ஒவ்வொரு வரிக்கும் லலல லலலா ( படத்தில் ஒரு அமெரிக்க ஆசாமி நம்மூர் கே ஆர் விஜயாவை காதலிப்பார். இந்த லலல அவர் பாடுவது.) என்று பின்பாட்டு பாடுவது பெருத்த நகைச்சுவையாக இருந்தது. நயாகரா நீர்வீழ்ச்சியை குறிக்கும் பாடலிது என்று நினைக்கிறேன். அந்த அமெரிக்க காதலன் கே ஆர் விஜயாவை நினைத்து லலலா என்று பாடுவது ஒரு வேடிக்கை. நீர்வீழ்ச்சியின் நீர்த்துளிகள் நம் மீது படியும் சிலிர்ப்பைக் கொடுக்கக்கூடிய பாடல்.
அவன் அவள் அது என்று எழுத்தாளர் சிவசங்கரியின் கதை படமானது. இதில் ஒரு தென்றலாக வீசும் கானம் உண்டு. இப்படிப் போகும் இல்லம் சங்கீதம் அதில் ராகம் சம்சாரம். உண்மையில் தம்பதிகள் இவ்வாறுதான் தங்கள் வாழ்க்கையைப் பற்றி கனவு காண்கிறார்களா என்ற சந்தேகத்தை ஒதுக்கிவிட்டு இந்தப் பாடலை ரசிக்கலாம். மார்கழிப் பூக்களே இளந்தென்றலே கார்மேகமே என்று மற்றொரு அருமையான பாடலும் இதிலுண்டு. அந்தக் காலம் முதற்கொண்டு என்ற பாடல் கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கும். அதிகம் நான் கேட்டதில்லை அப்போது. ஜிஞ்சினக்க சின்னக்கிளி சிரிக்கும் பச்சைக் கிளி என்ற ராஜபார்ட் ரங்கதுரை பாடலின் மெட்டில் அமைந்த பாடல்.
76 இல் வந்த ஒரு படம் பேரும் புகழும். இசை எம் எஸ் வி. இதில் அவளே என் காதலி கொடி நீருக்குள்ளே மலர் மேலே என்ற ரம்மியமான பாடல் இருக்கிறது. வழக்கமான எம் எஸ் வி பாணிப் பாடல். இதுவும் அதிகம் airplay அடையாத பாடல். ஆனால் எத்தனை நளினமான கீதம்!
நீ வருவாய் என நான் இருந்தேன்- சுஜாதா என்ற படத்தில் வரும் இந்தப் பாடல் மெலடியின் மேகத் தடவல். ஒரு முறை கேட்டுப்பாருங்கள். அசாதரணப் பாடல். இதன் ராகமும் மெட்டும் வரிகளும் ஒருசேர துளித்துளியாக கசிந்து மனதை நிரப்பும்.
அப்போது ஹிட்லர் உமாநாத் படத்தில் வரும் சுருளிராஜனின் வில்லுப்பாட்டொன்று மிகப் பிரபலமடைந்தது. எம் எஸ் வி பலவிதமான இசை வடிவங்களை அளிப்பதில் கைதேர்ந்தவர் என்பதை மீண்டும் நிரூபித்த பாடல். அப்படிப்பட்ட ஒரு வித்தியாசமான இசை முயற்சியாக உருவான இந்தப் பகடிப் பாடல் அப்போது இளவட்டங்களில் அதிக பிரசித்திப் பெற்றது. பூப்பறிச்சு மாலை கட்டி ஆமாடி தங்கம் எனத் துவங்கி ஒரு பாரம்பரிய வில்லுப்பாட்டுக்கான எல்லா விழுமியங்களையும் ஒருங்கே கொண்டு இடையிடையே சுருளிராஜனின் முத்திரை நகைச்சுவையுடன் (பெரியோர்களே தாய்மார்களே உங்க மனைவிமார்களே, தப்பா எழுதினாதானே அழி ரப்பர் தேவை, மகாத்மா காந்தி என்ன சொன்னார் என்ன சொன்னார் டேய் என்னடா சொன்னாரு?, வில்லை எடுத்தவன் வில்லன், புல்லரிக்குதுண்ணே-பாத்து மாடு மேஞ்சிறப்போகுது ) கேட்பதற்கே அதகளமாக இருக்கும். இந்தப் படத்தின் ஒரே saving grace இந்தப் பாடல்தான் என்று நினைக்கிறேன். இதில் ஒரு நம்பமுடியாத பாடல் உண்டு. நம்பிக்கையே மனிதனது சாதனம் அதை நடத்தி வைக்கும் கருவிதானே ஜாதகம் என்ற இப்பாடல் குறிக்கும் நாயகன் யார் தெரியுமா? கொஞ்சம் தயாராகுங்கள் அதிர்ச்சிக்கு. அடால்ப் ஹிட்லர். ஜெர்மனியில் கூட ஹிட்லருக்கு இப்படியொரு வந்தனப் பாடல் இருக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது. கோழையான கணவனுக்கு தன்னம்பிக்கையூட்ட மனைவி ஹிட்லரைக் கொண்டு வீரம் கற்பிக்கும் அபூர்வப் பாடல். இந்தப் படத்தைப் பற்றி விகடன் விமர்சனத்தில் "ஹிட்லர் என்ன அவ்வளவு நல்லவரா? அவரை எதோ காந்தி ரேஞ்சுக்கு புகழ்கிறார்கள் இந்தப் படத்தில்! " என்றொரு ஆச்சர்ய வாக்கியம் இருந்தது.
ஆலயம் நாயகன் கோபுரம் நாயகி- 79இல் வந்த நங்கூரம் என்ற படப் பாடலிது. வானொலிகளில் அப்போது அதிகம் மிதந்தாலும் நிறைய பேருக்கு இப்போது ஞாபகமிருக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது. கைகளில் பிடிபடும் வண்ணத்துப் பூச்சியின் உணர்வை கொடுக்கும் பாடல்.
79ஆம் ஆண்டு வில்லன் நடிகர் பி எஸ் வீரப்பாவின் தயாரிப்பில் வந்த ஒரு படம் திசை மாறிய பறவை. இதில் ஒரு அபாரமான கானம் கேட்ட முதல் நொடியிலேயே என்னைக் கவர்ந்தது. கிழக்குப் பறவை மேற்கே பறக்குது அது கிழக்கு வானை மறக்கப் பார்க்குது என்று பல்லவி துவங்கி ஒரு லயமான வசியப்படுத்தும் தாளக்கட்டுடன் சரணம் சரணமாக பயணித்து ஒரு மோக நிலையை கேட்பவர்க்கு கொடுக்கும் மந்திர கானம். குறிப்பாக காவிரி என்ன கொள்ளிடமென்ன என்று டி எம் எஸ் கணீரென்று பாடும் அந்த இரண்டாவது சரணம் மற்றும் சரணத்தின் முடிவில் வேறு மெட்டுக்குத் தாவும் காரிருள் தேடுது நிலவை அது திசை மாறிய பறவை என்ற இடம் கேட்பதற்கு சுகமான ஆனந்தம். என்ன ஒரு தாளம்! என்ன ஒரு பாவம்! மரபை மீறாத மந்திர இசை.
ரதிதேவி சந்நிதியில் ரகசிய பூஜை ரசமான நினைவுகளின் இதழ் மணி ஓசை ஒரு வீடு இரு உலகம் (80) என்ற படத்தில் வரும் இந்தப் பாடல் எ ல் மகாராஜன்- சசிரேகா பாடியது. எம் எஸ் வி இசையில் இருக்கும் நீர்த்துப் போகாத நமது பாரம்பரிய இசை இழைகள் இந்தப் பாடலை ராக தூரிகை கொண்டு ரம்மியமாக வரைவதைக் கேட்கலாம். ஒரு ஆழமான ரசிப்பிற்கான மிகப் பொருத்தமான பாடல்.
குழலும் யாழும் குரலினில் ஒலிக்க கும்பிடும் வேளையிலே சிறு வயதில் இதை ஒரு திரைப்படப் பாடல் என்று எண்ணியிருந்தேன். பல அருமையான கிருஸ்துவ கானங்களை படைத்த எம் எஸ் வி யின் பரவசப்படுத்தும் பரலோக கீதம்.
எண்பதுகளின் துவக்கத்தில் நான் அதிகமாக இளையராஜா பாடல்களைக் கேட்க ஆரம்பித்திருந்த நேரத்தில் ஒரு நாள் வழக்கம்போல சிலோன் வானொலியின் ஒரு நிகழ்ச்சியில் ஒரு புதிய பாடலொன்றைக் கேட்டேன். கேட்டதும் வியப்பு மேலிட்டது. இவர் இப்படியெல்லாம் கூட பாடல்கள் அமைப்பாரா என்ற சந்தேகம் எழுந்தாலும் அதை மீறிய ரசனைக்கான பாடலாக அது என்னைத் தீண்டியது. இன்றும் அதே தீண்டல் என்னை சுகமாக அணைப்பதை இந்தப் பாடலைக் கேட்கும்பொழுதெல்லாம் உணர்கிறேன். அந்தப் பாடல் உனக்கென்ன மேலே நின்றாய் ஒ நந்தலாலா. 82இல் வந்த சிம்லா ஸ்பெஷல் என்ற படத்தின் துடிப்பான இசையுடன் கூடிய துயரப் பாடல். எம் எஸ் வியின் இன்னிசை இன்னும் இளைக்கவில்லை என்ற செய்தியை ரசிகர்களுக்கு உணர்த்திய பாடல். தாய் மடியில் பிறந்தோம் தமிழ் மடியில் வளர்ந்தோம் என்ற வரிகளுக்குப் பிறகு எஸ் பி பியின் மின்னல் ஆலாபனை மேலிருந்து கீழிறங்குவது ஒரு அழகியலின் நேர்த்தி. இதே படத்தின் தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம் ஒரு டப்பாங்குத்துப் பாடலாக இருந்தாலும் அப்போது வரிசை கட்டிவந்த அதே வகைப் பாடல்கள் போலில்லாது சற்று நளினமாக இருக்கும். இதை விட லுக் லவ் மீ டியர் லவ்லி பிகர் லாஸ்டிங் கலர் வெண்மேகமே ஓடிவா என்றொரு மிகச் சிறப்பான பாடல் இதிலுண்டு. கண்ணியமான காதல் கானம். மெட்டை உடைக்காத அழகான வார்த்தைகள். தழுவும் இசை. பரவசப்படுத்தும் பாடல். ஒரு பாடலை நம் மனதருகே கொண்டு வருவதற்கு எம் எஸ் வி அமைக்கும் மெட்டுக்கள்தான் எத்தனை நுணுக்கமானவை! ரசனைமிக்கவை! அவைகள் அற்புதத் தருணங்கள் என்னும் கருத்தோடு முரண்பட முடிந்தால் உங்களுக்கு ஒரு நோய் பிடித்த இசை ரசனை இருந்தால் மட்டுமே முடியும்.
பில்லா என்ற ஹிந்தி டான் படத்தின் நகல் 80இல் வந்தது. இதிலிருந்துதான் ரஜினிகாந்த் வேறு அரிதாரம் பூசிக்கொண்டார். அதுவரை எதோ கொஞ்சமாவது இயல்பான நடிப்பை அவரிடம் காணமுடிந்தது. பில்லாவிற்குப்பின் அமிதாப்பச்சனை அப்படியே நகல் எடுக்க ஆரம்பித்தார். பாதை மாறியது. இந்தப் படத்தின் பாடல்கள் பெரிய வெற்றி பெற்றவை. இருந்தும் நான் அடிக்கடி கேட்க விரும்பாத பாடல்களாகவே அவை இருந்தன. நாட்டுக்குள்ள எனக்கொரு பேருண்டு என்ற பாடல் அப்போது ரஜினிகாந்தைப் பற்றி பத்திரிகைகளில் வந்துகொண்டிருந்த சில கறுப்புக் கருத்துக்களை பகடி செய்வதுபோல இருக்கும். மை நேம் இஸ் பில்லா சற்று விறுவிறுப்பான நேர்த்தியான பாடல்.
இதே ஆண்டில் பொல்லாதவன் என்றொரு படம் ரஜினிகாந்த் நடிப்பில் வந்தது. இசை எம் எஸ் வி. இதில் நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன் என்ற பாடல் பரபரப்பாக பேசப்பட்டது. ரஜினி ரசிகர்கள் இந்தப் பாடலை கொண்டாடினார்கள். நல்ல பாடல்தான். அதோ வாராண்டி வராண்டி வில்லேந்தி ஒருத்தன் என்றொரு காதல் பாடல் இதிலுண்டு. கேட்பதற்கு சுவையாக இருக்கும். வழக்கமான எம் எஸ் வி மெலடி. ஆனால் நான் இவற்றைவிட அதிகம் ரசிப்பது நானே என்றும் ராஜா ஆனால் முள்ளில் ரோஜா என்ற மிக மென்மையான கீதத்தைதான். கேட்கத் திகட்டாத பாடல்.
82இல் போக்கிரி ராஜா என்ற படம் வெளிவந்தது. ஏ வி எம் முரட்டுக்களைக்குப் பிறகு ரஜினியை வைத்து எடுத்த இரண்டாவது படம் என்று ஞாபகம். கடவுள் படச்சான் உலகம் உண்டாச்சு மனுஷன் குடிச்சான் உலகம் ரெண்டாச்சு, நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா பக்கத்துல பட்டுல ரோஜா போன்ற அப்போதைய காலத் தேவைக்கான பாடல்கள் அதில் இருந்தன. எனக்கு சற்றும் பிடிக்காத பாடல்கள். இளையராஜாவின் அதிரடியான பொதுவாக எம்மனசு தங்கம் பாடல் பாணியோடு எம் எஸ் வியால் ஈடு கொடுக்க முடியவில்லை என்றாலும் விடிய விடிய சொல்லித் தருவேன் என்ற பாடல் ஒரு குளுமையான நிலவின் சுகத்தையும், ஒரு எரிந்து முடிந்த நெருப்பின் கதகதப்பையும் கொண்டது.
அஞ்சலி என்றொரு படம் மணிரத்னம் இயக்கத்தில் வந்த சமயத்தில் அதிலுள்ள அஞ்சலி அஞ்சலி எங்கள் கண்மணி என்ற பாடலைச் சிலாகித்து என் நண்பர்கள் பேசுவது வழக்கம். நான் அப்போது தமிழ்ப் பாடல்களை கேட்கும் விருப்பங்களை விட்டு வெகு தூரம் வந்திருந்தேன். விரும்பாவிட்டாலும் அந்த அஞ்சலி பாடல்கள் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் காதில் விழுந்த வண்ணமாக இருந்தன. ஒரு பாடல்கூட என் ரசனைகேற்றதாகவோ, நவீனமாகவோ அல்லது கேட்கத் தூண்டும்படியாகவோ எனக்குப் படவில்லை. எல்லா பாடல்களும் இளையராஜாவின் வழக்கமான வறட்டு மேற்கத்திய பூச்சு கொண்ட mundane music. இம்மாதிரியான நீர்த்துப்போன சக்கைகளை ரசிக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிர்ப்பந்தத்தில் தமிழ் இசை ரசிகர்கள் இருந்ததற்காக சற்று வேதனை கூட வந்தது. அப்போது தமிழ்வாணன் என்றொரு நண்பர் சுசீலா பாடிய மற்றொரு குழந்தைப் பாடலைக் குறிப்பிட்டு, "இது அதைவிட நன்றாக இருக்கும்." என்றார். அது முன்பு நான் கேட்ட பாடல்தான். ஆனால் என்னால் அப்போது அந்த ஒப்பீட்டை பூரணமாக உள்வாங்கிக்கொள்ள முடியவில்லை. பல வருடங்கள் கழித்து அவர் சொன்ன அந்தப் பாடலை மீண்டும் கேட்டபோது அவர் கூறியது உண்மைதான் என்று உணர்ந்தேன். அது மண்ணில் வந்த நிலவே என் மடியில் பூத்த மலரே என்ற 86இல் வந்த நிலவே மலரே படத்தின் பாடல். நமது மரபிசை ராகத்தின் மீது மேற்கத்திய வண்ணம் பூசப்பட்ட ஒரு ஹாண்டிங் மெலடி. துருத்திக்கொண்டு நம்மை துன்புறுத்தும் மேற்கத்திய தாளங்கள் (அதுவும் கூட மிகவும் பாமரத்தனமாக) அலறும் அஞ்சலிப்பட பாடல்கள் போலன்றி இந்த கானம் ஒரு நதியோரத்து நாணலின் அழகைக் கொண்டது. சொந்தங்களை வாழ்த்தி சிந்து பாடுவேன், மாலை பொன்னான மாலை இளம் பூவே நீ வந்த வேளை போன்ற கேட்பதற்கினிய பாடல்களும் இதில் இருக்கின்றன.
கீழே உள்ளது எழுபதுகளில் எம் எஸ் வி அல்லாத பிற இசை அமைப்பாளர்களின் இசையில் வந்த சில ஏகாந்தப் பாடல்கள். இதையும் விட அதிகமான அளவில் பல சுவையான பாடல்கள் இருக்கின்றன. அவற்றை சேகரிப்பதில் இருக்கும் சிரமம் இந்தப் பதிவை இன்னும் நாள் கடத்தும் என்பதால் சிலவற்றை மட்டுமே குறிப்பிட்டுள்ளேன்.
பேசு மனமே நீ பேசு பேதை மனமே பேசு- புதிய வாழ்க்கை.இசை-கே வி எம். எஸ் பி பியின் துவக்ககால அற்புதங்களில் ஒன்று.
இரவுக்கும் பகலுக்கும் இனியென்ன வேலை இதயத்தில் விழுந்தது திருமண மாலை, கல்யாண ஆசை வந்த காரணத்தைச் சொல்லவா?- எங்கள் தங்க ராஜா. கே வி எம்.
கல்யாண கோவிலின் தெய்வீக கலசம்- சத்யம்.கே வி எம். சற்றே தெலுகு சாயல் வீசும் பாடல். ரசிக்கவைக்கும் கானம்.
நதிக்கரையோரத்து நாணல்களே என் நாயகன் அழகைப் பாருங்களேன்- காதல் கிளிகள். கே வி எம். இந்தப் பாடலைப் பற்றி ஒரு ஆச்சர்யமான தகவல் உண்டு. அது தமிழ்த்திரையிசையில் இந்தப் பாடலில்தான் மிக வேகமாக தபலா இசைக்கப்பட்டிருக்கிறது என்பதே. இரண்டு சரணத்திலும் வரும் தபலா இசையைக் கேட்டால் இந்தத் தகவல் பொய்சொல்லவில்லை என்று நாம் உணரலாம்.
ஆடுவது வெற்றி மயில் மின்னுவது தேவி இதழ் - அக்கா தங்கை. சங்கர் கணேஷ்.
ராதையின் நெஞ்சமே கண்ணனுக்கு சொந்தமே- கனிமுத்து பாப்பா,- டி வி ராஜு. ஷர்மிலி என்ற ஹிந்திப் படத்திலுள்ள Khilte hain gul yahan பாடலின் நகல். இதற்கு இசை எஸ் டி பர்மன்.
மணிவிளக்கே மாந்தளிரே மதுரசமே ரகசியமே- உன்னைத்தான் தம்பி. -விஜய பாஸ்கர்.
பொன்னை நான் பார்த்ததில்லை பெண்ணை தான் பார்த்ததுண்டு- கண்ணாமூச்சி வி குமார்.
பனிமலர் நீரில் ஆடும் அழகை ரசிக்கும் மனதில் சுகமே, மிக நவீனமாக அமைக்கப்பட்ட பாடல். ஏறக்குறைய எண்பதுகளின் மேற்கத்திய சாயலைக் கொண்ட பாடல். மோகனப் புன்னகையின் ஊர்வலமே மன்மத லீலையின் நாடகமே - உறவு சொல்ல ஒருவன். விஜய பாஸ்கர்.
ஆவணி மலரே ஐப்பசி மழையே -தொட்டதெல்லாம் பொன்னாகும் விஜய பாஸ்கர். ஆஹா! என்ன ஒரு அற்புதக் கானம்! இதைக் கேட்கையில் மேகத்தில் ஊர்வலம் போவதைப் போன்ற உணர்வைப் பெறலாம்.
கண்ணெல்லாம் உன் வண்ணம் நெஞ்செல்லாம் உன் எண்ணம்- ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு- வி குமார்.
ஆனந்தம் அது என்னடா அதை காணும் வழி சொல்லடா,தொடவரவோ தொந்தரவோ - இரு நிலவுகள். இசை ராஜன் நாகேந்திரா. இரண்டுமே ஓடை ஒன்றில் பாதம் நனைய நடக்கும் சுகமானவை.
வரவேண்டும் மஹராஜன் தரவேண்டும் சுக ராகம்- பகடை பனிரெண்டு இசை- சக்கரவர்த்தி. அருமையான பாடல். கேட்ட நொடியிலேயே என்னை வீழ்த்திவிட்டது இந்தப் பாடல். இதை எப்படி வர்ணிப்பது என்று தெரியவில்லை. வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். ஜன்னலருகில் அமர்ந்திருக்கையில் திடீரென ஒற்றைக் காற்று ஒன்று முகத்தை முத்தமிட்டுச் செல்வதைப் போன்ற ஒரு திடீர் சுகம் இந்தப் பாடல். ஒருமுறை இந்தப் பாடலைக் கேட்டுகொண்டிருந்தபோது அங்கு வந்த என் நண்பனின் மகன் "இதையெல்லாம் எப்படிக் கேட்கிறீர்கள்?" என்று அதிர்ச்சியடைந்தான். "இன்னும் இருபது வருடம் ஆனதும் இதற்கான பதிலை நீயே தெரிந்துகொள்வாய்." என்றேன் நான் அவனிடம்.
ஒரு முறை ஒரு சாலையோரக் கடையொன்றில் இரவு உணவு எடுத்துக்கொண்டிருந்தபோது அருகிலிருந்த டிபிகல் சென்னைவாசிகள் மூவர் தங்கள் புதிய அலைபேசி பற்றி அளந்துகொண்டிருந்தார்கள். ஒருவன் சொன்னான்; "புதுசா ஒரு ரிங்டோன் வச்சிருக்கேன். கேளுங்கடா". எதோ பாண்டி நாட்டு கொடியின் மேலே தாண்டிக் குதிக்கும் மீனப் போல ரகப் பாடல் ஒலிக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் நான் கேட்ட பாடல் என்னை சற்று திகைக்க வைத்தது. இதையெல்லாம் கூட இந்த அனிரூத் தலைமுறையினர் கேட்கிறார்களா என்ற ஆச்சர்யம் எழுந்தது. அந்தப் பாடல்: இளைய நிலா பொழிகிறதே இதயம் வரை நனைகிறதே. அவன் உற்சாகமாகச் சொன்னான் : "இந்தப் பாட்டு எப்பிடியிருக்கு பாத்தியா? என்னா மீசிக்? இன்னொரு பாட்டு போடுறேன். இந்த பாட்டையும் கேளேன்." சற்று நேரத்திற்குப் பிறகு ஒலித்தது நான் பாடும் மவுன ராகம் கேட்கவில்லையா. அவனுடைய குதூகலிப்பும் ரசனையும் என்னை மிகவும் வசீகரித்தது. அவன் கண்டிப்பாக ஊதா கலரு ரிப்பனு வகைப் பாடல்களை தனது ரசனையின் அடையாளமாகக் கொண்டவனாக இருக்க அதிக வாய்ப்புகள் இருந்தாலும் அதைத் தாண்டி இளையராஜாவின் இன்னிசைத்துளிகளைக் கேட்க அவன் காட்டிய ஆர்வம் ஒரு விதத்தில் அவனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்வது ஒரு ஆரோக்கியமான நிகழ்வு. 2014இல் ஒரு இளைஞன் 1980களை வியப்புடன் பார்ப்பது ஒரு முதிர்ந்த ரசனைதான். ஆனால் 1980களைச் சேர்ந்தவர்கள் அதே எண்பதுகளில் நின்றுகொண்டு எழுபதுகளையும் அறுபதுகளையும் இகழ்ச்சியுடன் நோக்குவது ஒரு வீழ்ந்த ரசனை.
வாழ்கையின் வழிகளில் சில வெளிச்சங்களைத் தேடும் விருப்பம் சில சமயங்களில் நமக்கு ஏற்படும் ஒரு கட்டாயம். இந்தத் தேடல்களே நமது அனுபவங்களை செழுமையாகக்குகின்றன. கடந்த கால வண்ணங்களின் வசீகரத்தை நமக்கு நினைவூட்டுகின்றன. இந்தத் தேடல்தான் என்னை வேறு பாதைக்கு இட்டுச் சென்றது. புதிய கதவுகளைத் திறந்தது. எல்லையில்லா வானத்தில் நிலவைத் தாண்டி ஒளிரும் ஏராளமான இசை நட்சத்திரங்களை அடையாளம் காட்டியது. குளங்கள்தான் எத்தனை பெரியவை என்ற எண்ணம் இயல்பானதுதான். ஆனால் அது கடல்களைக் காணும் வரைதான்.

கூண்டுப் பறவையின் ......

சூஃபி கதைகள் ஒரே ஒரு கருத்தையோ, தத்துவத்தையோ மட்டும் வெளிப்படுத்துவதில்லை. வெளிப்படையாகத் தெரிவதையும் தாண்டி, நுட்பமாக அவை உணர்த்தும் கருத்துகள் அபாரமானவை. அப்படிப்பட்ட ஒரு சூஃபி கதை இது…
சூஃபி
அந்த வியாபாரி, சமூகத்தில் வெற்றிபெற்ற மனிதன். அழகான மனைவி, அன்பான குழந்தைகள், பிரமாண்டமான மாளிகை, செல்வம், ஊரில் செல்வாக்கு… எல்லாம் இருந்தால், சமூகத்தின் பார்வைக்கு வெற்றிபெற்ற மனிதன்தானே! இவை மட்டுமல்ல… அவன் தனக்குத்தானே கர்வப்பட்டுக்கொள்ள யாரிடமும் இல்லாத ஒன்று அவனிடம் இருந்தது; அது ஒரு விசித்திரமான பாடும் பறவை. வீட்டுத் தோட்டத்தில் ஒரு பெரிய கூண்டில், வேண்டிய அனைத்து வசதிகளுடன் அதைப் பாதுகாப்பாக வைத்திருந்தான். அந்தப் பறவைக்குப் பிடித்தமான உணவுகள் அனைத்தையும் கொடுத்து வளர்த்து வந்தான். வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தால், அவர்களை பறவையிடம் அழைத்துச் செல்வான். பறவை பாடும். அதைக் கேட்டு, வந்தவர்கள் மெய் மறந்து நிற்பார்கள். வியாபாரி, பெருமையுடன் எல்லோரையும் பார்ப்பான். பிறகு, பறவைக்கு சுவையான நொறுக்குத்தீனிகளை அள்ளி வீசுவான். வீடு திரும்புவான்.
ஒரு நாள் வியாபாரி ஓர் அயல்நாட்டுப் பயணத்துக்காகக் கிளம்பினான். மனைவி, மகள்கள், பிள்ளைகளிடம், வெளிநாட்டில் இருந்து திரும்பி வரும்போது என்ன வாங்கி வர வேண்டும் என விசாரித்தான். நகைகள், பட்டு, பொம்மைகள், ஆபரணங்கள்… என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம். அத்தனையையும் கேட்டுக்கொண்டான். தோட்டத்துக்குப் போனான். அவனுடைய செல்லப் பறவையிடம், தான் வெளிநாட்டுப் பயணத்துக்குச் செல்வதைச் சொன்னான். “உனக்கு என்ன வேண்டுமோ கேள்! வாங்கி வருகிறேன்’’ என்றான்.
“எது கேட்டாலும் கிடைக்குமா?’’
“நிச்சயமாக… என்ன வேண்டும் கேள்!’’
“வெளிநாட்டில் அல்லது போகும் வழியில் என் இனத்தைச் சேர்ந்த பறவை எதையாவது பார்த்தால், ஒன்றை மட்டும் சொல்ல வேண்டும்… முடியுமா?’’
“என்ன அது/’’
“நான் இங்கே எப்படி இருக்கிறேன், என் நிலை என்ன என்பதை மட்டும் சொன்னால் போதும்.’’
“அதற்கென்ன… சொல்லிவிடுகிறேன். வேறு ஒன்றும் வேண்டாமா? நீ உன்னைப் பார்த்து ரசிக்க தங்கத்தால் அலங்கரித்த கண்ணாடி, விலையுயர்ந்த சுவையான பருப்பு, தானியங்கள்..?’’
“வேண்டாம்.’’ சொல்லிவிட்டு பறவை கூண்டின் உயரே இருந்த மர ஊஞ்சலில் போய் அமர்ந்துகொண்டது.
சூஃபி கதை
வியாபாரி வெளிநாட்டுக்குப் போனான். வியாபாரம் நல்லபடியாக முடிந்தது. வீட்டில் உள்ளவர்கள் கேட்ட பொருள்களைத் தேடித் தேடி வாங்கினான். எல்லா வேலைகளும் முடிந்தன. இறுதியாக அவன் வளர்த்த பறவையின் விருப்பம் நிறைவேற வேண்டுமே! அதன் இனத்தைச் சேர்ந்த பறவைகள் எங்கேயாவது இருக்கின்றனவா எனத் தேடினான். ஊர் முழுக்க அலைந்த பிறகு, ஒரு நந்தவனத்தில் அவற்றைப் பார்த்தான். ஒரு மரத்தின் மேல், இவன் வளர்க்கும் பறவை இனத்தைச் சேர்ந்த மூன்று பறவைகள் அமர்ந்திருந்தன. அவற்றின் அருகே போனான். தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.
“என் மாளிகையில் உங்கள் இனத்தைச் சேர்ந்த பறவை ஒன்று இருக்கிறது. அது தன் இனத்தைச் சேர்ந்த பறவைகளைப் பார்த்தால் அதன் நிலைமையைச் சொல்லச் சொன்னது. சுகமான மெத்தை, ஊஞ்சல், வேளைக்கு அறுசுவை உணவுகள் அனைத்தையும் கொடுத்து, ஒரு கூண்டில் அதை வளர்த்துவருகிறேன்…’’
சூஃபி - பறவைகள்
அவன் முழுமையாகக்கூடச் சொல்லி முடிக்கவில்லை. கேட்டுக்கொண்டிருந்த பறவைகளில் ஒன்றின் உடல் நடுங்கியது. அது மரத்தின் உச்சியில் இருந்து `சொத்’தென்று தரையில் விழுந்தது. லேசாகத் துடித்து, பிறகு மூச்சுப் பேச்சில்லாமல் அடங்கிப்போனது. வியாபாரியால் இதைத் தாங்க முடியவில்லை. அந்தப் பறவை இறந்துபோனதை உணர்ந்தான். `அது ஏன் இறந்தது?’ என்கிற கேள்வி அவன் மனதைப் பிசைந்தது. பெரும் துயரத்தோடு தான் தங்கியிருந்த இடம் நோக்கி நடந்தான்.
திரும்பி வரும் வழியெல்லாம் `அந்தப் பறவை ஏன் இறந்தது?’ என்கிற கேள்வி அவனைத் துளைத்துக்கொண்டே இருந்தது. வியாபாரத்தில் சம்பாதித்த பணம், மனைவி, பிள்ளைகளுக்காக அவன் கொண்டு செல்லும் விலையுயர்ந்த பொருள்கள்… எதுவும் அவன் நினைவில் இல்லை. மரத்தில் இருந்து அந்தப் பறவை இறந்த காட்சி மட்டுமே திரும்பத் திரும்ப வந்து அவனை அலைக்கழித்தது. சாப்பாடு இறங்கவில்லை, கப்பலில் உடன் வந்தவர்களுடன் பேசக்கூடப் பிடிக்கவில்லை. ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தான்.
மனைவி, மகள்கள், பிள்ளைகள் அவன் கொண்டு வந்த பரிசுப் பொருள்களைப் பார்த்து பிரமித்துப் போனார்கள். அவனைப் பாராட்டித் தள்ளினார்கள். அவன் எல்லாவற்றுக்கும் லேசாகத் தலையசைத்து, புன்னகைத்தானே தவிர, பதில் பேசவில்லை. தன் வளர்ப்புப் பறவையை எப்படிப் பார்க்கப் போகிறோம், அதற்கு எப்படி நடந்ததைச் சொல்வது என்கிற வேதனை அவனை வதைத்துக்கொண்டிருந்தது.
அடுத்த நாள் ஒருவழியாக, தன்னைத் தேற்றிக்கொண்டு அந்தப் பறவையிடம் போனான். அது, கூண்டின் மேலே இருந்த சிறிய மரக்கட்டை ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்தது. வியாபாரி, தயங்கித் தயங்கி, பறவைகளைப் பார்த்ததையும் நடந்ததையும் சொன்னான். அவ்வளவுதான்… கேட்டுக்கொண்டிருந்த பறவையின் உடல் நடுங்கியது; அது ஊஞ்சலில் இருந்து `சொத்’தென்று கீழே கூண்டுக்குள் விழுந்தது. அசைவற்று அப்படியே கிடந்தது. அவன் பதறிப்போனான். அவசர அவசரமாகக் கூண்டைத் திறந்தான். நடுங்கும் கரங்களால் அந்தப் பறவையைத் தூக்கினான். உள்ளங்கைகளில் வைத்துக்கொண்டு தேம்பி அழ ஆரம்பித்தான். திடீரென்று அது நடந்தது… அந்தப் பறவை சட்டென்று தன் சிறகுகளை அசைத்து, அவன் கைகளில் இருந்து பறந்துபோய் அருகில் இருந்த ஒரு மரத்தின் மேல் அமர்ந்துகொண்டது.
சூஃபி - பறவை
பறவை தன்னை ஏமாற்றிவிட்டது என்பதை அவன் புரிந்துகொண்டான். பிறகு ஒருவாறாகத் தன்னைச் சமாதானப்படுத்திக்கொண்டு அதனிடம் கேட்டான்… “இது என்ன தந்திரம்? உனக்கு நான் என்ன குறை வைத்தேன்? இறந்ததுபோல் ஏன் நடித்தாய்? சொல்!’’
“நீ பார்த்தாயே… என் உறவுக்காரப் பறவை… அது என் அழகு, வாழ்க்கை மொத்தமும் இந்தக் கூண்டுக்குள் சிறைவைக்கப்பட்டிருப்பதை எனக்கு உணர்த்திவிட்டது. என் குரலுக்கு மயங்கினாய். பாட வைத்தாய். நீ பாடச் சொல்வதும், அதற்கு இணங்கி நான் பாடுவதும்கூட எனக்குப் பிடித்துத்தான் இருந்தது. ஆனால், எந்தப் பறவையும் கூண்டு வாழ்க்கையை விரும்புவதில்லை. அந்த வாழ்க்கை எனக்கு இனி வேண்டாம். பறத்தல்தான் என் இயல்பு, எனக்கு வேண்டியது சுதந்திரம்…’’
அந்தப் பறவை வானில் கிளம்பி, சிறகசைத்துப் பறந்து அவன் கண்ணில் இருந்து மறைந்தது.

கொக்கு கதை- மகாபாரதம்

News Feed


சேற்றில் செந்தாமரை பூப்பதைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். ஆனால் பாற்கடலில் கள்ளிச் செடி முளைக்குமா? உயர்ந்த, நல்ல குலத்தில் மோசமானவர்கள் தோன்றுவார்களா? ஏன் தோன்ற மாட்டார்கள்? ஒருவன் நல்லவனாக இருப்பதும் கெட்டவனாக இருப்பதும் அவனவன் வளர்ந்த விதத்தினாலும் நண்பர்களின் சகவாசத்தாலும் தானே தவிர, பிறப்பில் என்ன இருக்கிறது? பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். அவரவர் நடத்தை தானே அவரவரின் பண்பு நலனைத் தீர்மானிக்கிறது? அப்படித்தான் பிறந்தான் கௌதமன். மிக நல்ல குலத்தில் தோன்றியவன் தான். ஆனால் நண்பர்கள் சேர்க்கை சரியில்லை. எனவே மருந்துக்குக் கூட அவனிடம் நல்ல குணம் இருக்கவில்லை.
ஆனால் அவன் காலத்தில் ராஜதர்மன் என்ற பெயரில் ஒரு கொக்கு வாழ்ந்து வந்தது. தேவர்களும் போற்றும் நற்குணங்கள் நிறைந்த கொக்கு. பறவைக் குலத்தையே பெருமைப்படுத்திய பறவை அது. அதே சமகாலத்தில் விரூபாட்சன் என்ற ஓர் அரக்கனும் வாழ்ந்து வந்தான். அவன் பிறந்ததோ அரக்கர் குலம். ஆனால் அவனை அவனது உயர்ந்த நற்குணங்களுக்காக வானவர்களும் கொண்டாடினார்கள். ஒரு மனிதன், ஒரு பறவை, ஓர் அரக்கன் என்ற இந்த மூன்று பாத்திரங்களை உள்ளடக்கி, நன்றியுணர்வின் பெருமையையும் விருந்தோம்பலின் மேன்மையையும் விளக்கி மகாபாரதம் ஓர் அழகிய கதையைச் சொல்கிறது: கௌதமன் வடிகட்டின சோம்பேறி. பிறரது உழைப்பில் வாழ்வதைத் தனது தர்மம் போல் கொண்டிருந்தான்.
தந்தை பெரிய பண்டிதர். அவர் கடின உழைப்பின் பேரில் சம்பாதித்த பணத்தில் உலகின் எல்லா சுகங்களையும் சந்தோஷமாக அனுபவித்தான். கணவனை இழந்த ஒரு பெண்ணின் மேல் அவனுக்கு மையல் வந்தது. அவளுடன் வாழ்க்கை நடத்தலானான். தந்தையான அந்தப் பண்டிதர், இவனது அட்டகாசங்கள் தாங்காமல், துயரவசப்பட்டு அந்தத் துயரக் கடலிலேயே மூழ்கிக் கரைசேர முடியாமல் ஒருநாள் மூழ்கிவிட்டார். தந்தை உழைப்பில் சொகுசாக வாழ்ந்துவந்த கௌதமனுக்கு, இப்போது சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. வேட்டையாடிப் பிழைக்கலானான். உயர்ந்த குலத்தில் பிறந்த அவன் உயிர்க்கொலை பாவம் என்பதைப் பொருட்படுத்தவில்லை. உயிர்களைக் கொல்வது அவனுக்கு ஒரு விளையாட்டுப் போல் இருந்தது. வெளியூரில் இருந்த அவன் தந்தையின் நண்பர் ஒருநாள் அந்த ஊருக்கு வந்தார். கௌதமனின் செயல்களைக் கண்டார். அவர் அடைந்த வருத்தத்திற்கு அளவே இல்லை. ‘எப்பேர்ப்பட்ட தந்தையின் மகன் அப்பா நீ? உயிர்க்கொலை செய்யலாமா? ஏதாவது வியாபாரம் செய்து பிழைக்கப் பார்!’ என்று அவர் அன்போடு அறிவுறுத்தி விட்டுச் சென்றார்.
பூர்வ ஜன்ம நல்வினை காரணமாகவோ என்னவோ கௌதமன் மனம் அந்த அறிவுரை பற்றிச் சிந்தித்தது. சரி, உயிர்க்கொலையை விட்டுவிடுவோம் என்று முடிவுசெய்தான். வியாபாரம் பழக வேண்டுமானால் முதலில் ஏதாவது வியாபாரிகளின் கூட்டத்தோடு இணைந்து தொழில் கற்றுக் கொள்ள வேண்டுமே? அந்த ஊருக்குத் தற்செயலாக வியாபாரிகளின் குழு ஒன்று வந்தது. அவர்கள் காட்டு வழியாக வேறெங்கோ சென்று கொண்டிருந்தார்கள். அவன் அவர்களிடம் அனுமதி பெற்று அவர்களுடனேயே நடக்கலானான்.
என்ன துரதிர்ஷ்டம்! கானகத்தில் மதம் பிடித்த யானைக் கூட்டம் அவர்களைத் துரத்தித் தாக்கியது. உயிர் பிழைத்தால் போதும் என்று எல்லோரும் ஓடினார்கள். கௌதமன் ஒரு மரத்தின் மேல் ஏறி நடுநடுங்கியவாறு இரவைக் கழித்தான். பொழுது விடிந்ததும் பார்த்தான், யானைக் கூட்டம் எங்கோ சென்றுவிட்டிருந்தது. வணிகர்கள் பலரும் காட்டு யானைகள் தாக்கியதால் உயிர் விட்டிருந்தார்கள். கௌதமனுக்கு உயிர் என்பது என்ன, வாழ்க்கை என்பது என்ன என்பன போன்ற கேள்விகள் மனத்தில் எழத்தொடங்கின.
அவன் மெல்ல நடந்து பக்கத்தில் அதிக அபாயம் இல்லாத நந்தவனம் போன்ற ஒரு காட்டுக்கு வந்துசேர்ந்தான். மரங்களில் பழுத்திருந்த கனிகளைப் பறித்து உண்டான். எங்காவது இளைப்பாற வேண்டும் எனத் தேடியபோது பிரமாண்டமான ஓர் ஆலமரம் தென்பட்டது. பறவைகளுக்கெல்லாம் அடைக்கலம் தரும் அந்த ஆலமர நிழல் தனக்கும் அடைக்கலம் தரட்டும் என்று எண்ணியவனாய் அதன் நிழலில் காலோய்ந்து படுத்து மெல்லக் கண்ணயர்ந்தான். சற்று நேரம் கழித்துக் கண்விழித்துப் பார்த்தபோது ஒரு பெரிய கொக்கு அவன் அருகே அமைதியாக உட்கார்ந்திருந்தது. அது தன் மாபெரும் சிறகுகளால் அவனுக்குக் காற்று வரும்படி விசிறிக் கொண்டிருந்தது!
பறவையின் செயலைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த கௌதமன், ‘‘யார் நீ?’’ என்று அந்தக் கொக்கிடம் விசாரித்தான். அவனைப் பரிவோடு பார்த்தது கொக்கு. ‘‘ஐயா! என் பெயர் ராஜசிம்மா. இது நான் வசிக்கும் ஆலமரம். இந்த மரம் தான் என் வீடு. இதில் நான் கூடு கட்டிக் கொண்டு பல ஆண்டுகளாக வாழ்கிறேன். இந்த மர நிழலை நீங்கள் இளைப்பாறத் தேர்ந்தெடுத்தது என் பாக்கியம். இப்போது நீங்கள் என் வீட்டுக்கு வந்த விருந்தாளி ஆகிறீர்கள். விருந்தினரை மனம் கோணாமல் உபசரிக்க வேண்டியது தர்மமல்லவா? காற்றில்லாமல் உங்கள் நெற்றி முத்து முத்தாய் வியர்ப்பதை மேலிருந்து பார்த்தேன். அதுதான் கீழே இறங்கி வந்து சிறகுகளைக் கொண்டு உங்களுக்கு விசிறிக் கொண்டிருக்கிறேன். தங்கள் பெயர் என்னவோ? தாங்கள் எதன் பொருட்டாக இங்கு வந்திருக்கிறீர்கள்?’’ என்று அன்புடன் கேட்டது.
ஒரு கொக்கு மிகுந்த பண்போடு மதுரமாகப் பேசுவது கௌதமனை ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியது. ‘‘பறவைக் குலத்தைச் சேர்ந்த ராஜசிம்மா! என் பெயர் கௌதமன். நான் வறுமையால் வாடுகிறேன். பணமில்லாத கஷ்டம் என்னை வதைக்கிறது. எப்படியாவது கொஞ்சம் பணம் கிடைக்காதா என்று தான் எல்லா இடங்களிலும் அலைந்து கொண்டிருக்கிறேன். நான் இந்தக் கானகத்திற்கு வந்ததும் பணத்தைத் தேடித்தான்!’’ என்று பரிதாபமாக பதிலுரைத்தான்.
கொக்கு சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்தது. பிறகு எதையோ கண்டுபிடித்தது போல் மலர்ச்சியுடன் சிரித்தது. பின் கௌதமனிடம், ‘‘கௌதமரே! நீங்கள் என் விருந்தினர் மட்டுமல்ல. இப்போது என் நண்பரும் ஆகிவிட்டீர். உங்களுக்கு எல்லா வகையிலும் உதவ வேண்டியது என் கடமை.
உங்கள் வறுமையை என்னால் போக்க முடியும். எனது மிக நெருங்கிய நண்பர் ஒருவர் இருக்கிறார். விரூபாட்சன் என்பது அவர் பெயர். அரக்கர் குலத்தைச் சேர்ந்தவர். நற்பண்புகளின் மொத்த வடிவம் அவர். நாளை காலை புறப்பட்டு அவரிடம் செல்லுங்கள். என் நண்பர் நீங்கள் என்று சொல்லுங்கள். உங்களுக்குத் தேவையான செல்வத்தை அவர் தந்து உங்களை வழியனுப்புவார்’’ என்றது. கௌதமன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான். அரக்கன் விரூபாட்சனின் இருப்பிடம் எங்கே இருக்கிறது எனக் கேட்டறிந்து அப்போதே புறப்பட்டுச் சென்று அரக்கனைச் சந்தித்தான். தன் நண்பனும் பறவையுமான கொக்கினால் அனுப்பப்பட்டவன் கௌதமன் என்றறிந்ததும் விரூபாட்சன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
பொன்னும் மணியும் வாரிவாரிக் கொடுத்தான். அத்தனை செல்வத்தையும் தூக்க முடியாமல் தூக்கிச் சுமந்துகொண்டு திரும்பி வரும் வழியில் மீண்டும் ராஜசிம்மக் கொக்கைச் சந்தித்தான், கௌதமன். அவன் கொக்கு இருந்த இடத்திற்கு வருவதற்குள் இரவு தொடங்கிவிட்டது. கொக்கு அவனை அன்போடு வரவேற்றது. அவனுக்குச் செல்வம் கிடைத்தது பற்றி மகிழ்ச்சி தெரிவித்தது. அன்றிரவு அவன் படுக்க மரத்திலிருந்து இலை தழைகளைப் பறித்து வந்து சுகமான படுக்கை தயாரித்தது. ‘‘இன்றிரவு இங்கேயே உறங்கிவிட்டு நாளை புறப்படுங்கள்!’’ என்று வேண்டிக்கொண்டது. கௌதமனை விலங்குகள் தாக்காமல் இருக்கச் சற்று தூரத்தில் நெருப்பு மூட்டியது. பின்னர் உறங்கும் கௌதமனின் அருகேயே தானும் படுத்து உறங்கத் தொடங்கியது.
சிறிது நேரத்தில் உறக்கம் கலைந்து எழுந்தான் கௌதமன். அருகே வெள்ளை வெளேர் என்று மாமிசக் கொழுப்புடன் சலனமற்று உறங்கும் அந்தப் பெரிய கொக்கைச் சற்று நேரம் உற்றுப் பார்த்தான். தொலைவில் நெருப்பு எரிவதையும் பார்த்தான். நாம் நம் ஊரை அடைய இன்னும் வெகுதூரம் நடந்து செல்ல வேண்டும். நாளைய சாப்பாட்டுக்கு என்ன செய்வது? அவனுடைய பழைய கிராதக மனம் விழித்துக் கொண்டது. ‘உம்.. வேட்டையாடு. வேட்டையாடி வாழ்ந்தவன்தானே நீ?’ என்று அது அவனை உசுப்பிவிட்டது. தீய சக்திகளின் கட்டளைக்குப் பணிந்தவன்போல் அவன் திடீரென்று எழுந்தான்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கொக்கை அள்ளி எடுத்தான். சடாரென அதை நெருப்பில் போட்டு அதன் மாமிசத்தை உரித்து எடுத்து மறுநாள் சாப்பாட்டுக்கு வைத்துக் கொண்டு, அதிகாலையில் அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டு வேகவேகமாக நடக்கலானான். இதைத் தேவலோகத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தேவேந்திரன் திகைப்பில் ஆழ்ந்தார். இப்படிக் கூட மனிதர்கள் நடந்துகொள்ள முடியுமா என்றெண்ணி அவர் விழிகள் கண்ணீர் உகுத்தன. நாள்தோறும் ராஜசிம்மக் கொக்கு ஒருமுறையேனும் பறந்து சென்று தன் அரக்க நண்பனான விரூபாட்சனோடு உரையாடி விட்டு வருவது வழக்கம். ‘என்ன இது? ஓரிரு நாட்களாக கொக்கைக் காணோமே? அதுவும் கொக்கு என்னிடம் அனுப்பிய மனிதனான கௌதமன் அவ்வளவு நல்லவனாகத் தெரியவில்லை. கொக்கின் மனம் அதன் உடல்போல் வெளுத்தது. அது எல்லோரையுமே நல்லவர்களாக நினைக்கிறது. இந்த கௌதமன் அதைக் கொல்லாமல் இருக்க வேண்டுமே?’ என்று வேதனைப்பட்ட விரூபாட்சன் தன் படைவீரர்களை அனுப்பி கொக்கு குறித்து அறிந்துவரச் சொன்னான். கொக்கின் பிய்ந்த இறக்கைகளைத்தான் அவர்கள் கொண்டு வந்தார்கள்.
தன் நண்பன் கொக்கின் இறக்கைகளைக் கண்ட அரக்கனின் கண்களில் கண்ணீர் வழிந்தது. ‘‘எங்கே அந்த கௌதமன்? பிடித்து வாருங்கள் அவனை!’’ என்று கர்ஜித்தான். கௌதமன் உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு இழுத்து வரப்பட்டான்.
‘‘இவனை வெட்டி அந்த மாமிசத்தைச் சமைத்துச் சாப்பிடுங்கள்!’’ என்று உறுமினான் அரக்கன்.
‘‘அரசே! அவன் உடலை வெட்டுகிறோம். ஆனால் நன்றி கொன்றவனின் மாமிசத்தைச் சாப்பிடும் அளவு நாங்கள் கேவலமானவர்கள் அல்ல!’’ என்ற அரக்கர்கள் அவன் உடலை வெட்டினார்கள். காட்டு விலங்குகளிடம் அந்த உடல் எறியப்பட்டது.
‘‘இந்த நன்றி கொன்றவனின் மாமிசத்தை நாங்கள் தொடக் கூட மாட்டோம்!’’ என்று விலங்குகள் அனைத்தும் விலகிச் சென்றன. தன் கொக்கு நண்பனான ராஜசிம்மனின் எஞ்சிய உடலை சந்தனச் சிதையில் வைத்துக் கண்ணீர் மல்க எரிக்க முற்பட்டான் விரூபாட்சன். அப்போது அங்கே தேவேந்திரன் தோன்றினார். ‘‘விருந்தோம்பலில் சிறந்த இந்த அற்புதமான பறவையை நான் மீண்டும் உயிர்ப்பிக்கிறேன்!’’ என்று கூறி, அதற்கு உயிர் கொடுத்தார். என்ன ஆச்சரியம்! மறுகணம் எரியூட்டப்படவிருந்த சந்தனச் சிதையிலிருந்து ராஜசிம்மக் கொக்கு சிறகுகளைச் சிலிர்த்துக் கொண்டு எழுந்து நின்றது!
விரூபாட்சன் ஓடோடிச் சென்று அதைக் கட்டி அணைத்துக் கொண்டு அதன் சிறகுகளைக் கோதி விட்டான். நடந்தது அனைத்தையும் கேட்டறிந்தது, கொக்கு. தேவேந்திரன், ‘‘நட்பைப் போற்றும் என் அன்புப் பறவையே! உனக்கு ஒரே ஒரு வரம் தர விரும்புகிறேன்! நீ வேண்டியதைக் கேட்டுப் பெற்றுக் கொள். செல்வமா? நீண்ட ஆயுளா? இன்னும் அழகிய உடலா? இனிமையான குரலா? சொல். உனக்கு வேண்டிய ஏதாவது ஒரே ஒரு வரத்தை மட்டும் கேள்!’’ என்று பரிவோடு சொன்னார்.
தேவேந்திரனைக் கம்பீரமாகப் பார்த்த ராஜசிம்மக் கொக்கு, ‘‘தேவேந்திரரே! என் விருந்தாளியும் நண்பனுமான மனிதன் கௌதமன் மீண்டும் உயிர் பிழைக்குமாறு தாங்கள் வரம் தரவேண்டும். நான் மறுபடி பிழைத்தது மாதிரி என்னைக் கொன்ற என் விருந்தினனும் பிழைக்க வேண்டும் என்பதே நான் கேட்கும் ஒரே வரம்!’’ என்றது. தேவேந்திரன் கொக்கின் அற்புதமான பண்பைப் பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். வானுலகத்திலிருந்து எல்லாத் தேவர்களும் கொக்கின் மேல் பூமாரி பொழிந்தார்கள்.
மீண்டும் உயிர் பெற்று எழுந்த கௌதமன் கொக்கிடம் மன்னிப்பு வேண்டிக் கண்ணீர் உகுத்தபோது, கொக்கு அதன் சிறகுகளால் அவன் கண்ணீரைத் துடைத்து அவனை அணைத்துக் கொண்டது. விரூபாட்சனின் கண்களிலிருந்தும் கண்ணீர் பெருகியது. குணம் பல நேரங்களில் குலத்தால் அமைவதில்லை. குலம் எதுவானால் என்ன? குணத்தால் உயர்ந்தவர்களே உண்மையில் உயர்ந்தவர்கள் என்ற உண்மையை மனித குலம் இந்த நிகழ்ச்சி மூலம் புரிந்துகொண்டது.
மனசாந்தி தரும் இந்தக் கதை மகாபாரதம் சாந்தி பருவத்தில் வருகிறது.