Wednesday 2 May 2018

கௌதம புத்தர் (எ) சித்தார்த்தனின் பிறப்பு - கதை

வழக்கம் போல ஆஷாடவிழா வந்தது. நகர மக்கள் அவ்விழாவை நன்கு கொண்டாடினர். அரண்மனையில் அரசியாராகிய மாயாதேவியாரும் இவ்விழாவைக் கொண்டாடிய பிறகு ஏழாம் நாளாகிய ஆஷாடபௌர்ணமியன்று மாயாதேவியார் நறுமண நீராடி நல்லாடையணிந்து ஏழை எளியவருக்கும் ஏனையோருக்கும் உணவு உடை முதலியன வழங்கினார். பின்னர் தாமும் அறுசுவை உணவு அருந்தி அஷ்டாங்கசீலம் என்னும் நோன்பு நோற்றார். இரவானதும் படுக்கையறை சென்று கட்டிலிற் படுத்துக் கண்ணுறங்கினார். இரவு கழிந்து விடியற் காலையில் ஒரு கனவு கண்டார்.
மாயாதேவியார் கண்ட கனவு இது: இந்திரனால் நியமிக்கப்பட்ட திக்குப்பாலர்களான திருதராட்டிரன், விரூபாக்கன், விரூளாஷன், வைசிரவணன் என்னும் நான்கு தேவர்கள் வந்து மாயாதேவியார் படுத்திருந்த படுக்கையைக் கட்டிலோடு தூக்கிக் கொண்டுபோய், இமயமலைக்குச் சென்று அங்கிருந்த மனோசிலை என்னும் பெரிய பாறையின் மேலே ஒரு சால மரத்தின் கீழே வைத்து ஒருபுறமாக ஒதுங்கி நின்றார்கள். அப்போது அந்தத் தேவர்களின் மனைவியரான தேவிமார் வந்து மாயாதேவியாரை அழைத்துக் கொண்டுபோய் அருகிலிருந்த அநுவதப்தம் என்னும் ஏரியில் நீராட்டினார்கள். நீராட்டிய பின்னர் உயர்தரமான ஆடை அணிகளை அணிவித்து நறுமணச் சாந்து பூசி மலர் மாலைகளைச் சூட்டினார்கள். பிறகு, அருகிலே இருந்த வெள்ளிப் பாறையின் மேல் அமைந்திருந்த பொன் மாளிகைக்குள் மாயாதேவியாரை அழைத்துக் கொண்டுபோய் அங்கிருந்த ஒரு கட்டிலில் மேற்குப்புறமாக தலைவைத்துப் படுக்கவைத்தனர்.
மாயாதேவியார் படுத்திருந்தபோது, அருகிலிருந்த மலைகளின் மேலே மிக்க அழகுள்ள வெள்ளையானையின் இளங்கன்று ஒன்று உலாவித் திரிந்து கொண்டிருந்தது. அந்த யானைக் கன்று பொன்நிறமான பாறைகளின் மேலே நடந்து மாளிகை இருந்த வெள்ளிப் பாறைக்கு வந்தது. பாறையின் வடபுறமாக வந்து தும்பிக்கையிலே ஒரு வெண்டாமரைப் பூவை ஏந்திக்கொண்டு பிளிறிக்கொண்டே மாளிகைக்குள் நுழைந்து மாயாதேவியார் படுத்திருந்த கட்டிலருகில் வந்தது. வந்து கட்டிலை மூன்று முறை வலமாகச் சுற்றி, தேவியாரின் வலது பக்கமாக அவர் வயிற்றுக்குள் நுழைந்துவிட்டது.
இவ்வாறு மாயாதேவியார் விடியற்காலையில் ஒரு கனவு கண்டார். போதி சத்துவர், தாம் எழுந்தருளியிருந்த துடித லோகத்தை விட்டு இறந்கிவந்து மாயாதேவியாரின் திருவயிற்றில் கருவாக அமைந்தருளியதைத்தான் தேவியார் வெள்ளை யானைக்கன்று தமது வயிற்றில் நுழைந்ததாகக் கனவு கண்டார்.
இவ்வாறு கனவு கண்ட மாயாதேவியார் விழித்தெழுந்து தாம் கண்ட கனவை அரசரிடம் கூறினார். சுத்தோதன அரசர், நூல்களைக் கற்றறிந்த அந்தணர் அறுபத்து நால்வரை அழைத்து, அறுசுவை உணவுகளை உண்பித்து, அரசியார் கண்ட கனவை அவர்களுக்குக் கூறி அதன் கருத்து என்னவென்று கேட்டார். கனவை ஆராய்ந்து பார்த்த அந்தணர்கள் அதன் கருத்தைத் தெரிவித்தார்கள். அரசியாருக்குக் கருப்பம் வாய்த்திருப்பதை இக்கனவு தெரிவிக்கிறது; அரசியாருக்கு ஒரு ஆண் மகவு பிறக்கும்; அந்தக் குழந்தை பெரியவனாக வளர்ந்து இல்லற வாழ்க்கையை மேற்கொள்ளுமானால் பெரிய சக்கரவர்த்தியாக விளங்கும்; இல்லறத்தில் புகாமல் துறவறத்தை மேற்கொள்ளுமானால் பெறுதற்கரிய புத்த ஞானம் பெற்று புத்தராக விளங்கும் என்று அவர்கள் கூறினார்கள்.
மாயாதேவியாரின் திருவயிற்றிலே கருவாக அமர்ந்த போதி சத்துவர் இனிது வளர்ந்து வந்தார். தேவியாரும் யாதொரு துன்பமும் இல்லாமல் மகிழ்ச்சியோடு இருந்தார்.
மாயாதேவியார் வயிறுவாய்த்துப் பத்துத் திங்கள் ஆயின. அப்போது அவருக்குத் தமது பெற்றோரைக் காணவேண்டும் என்னும் ஆசை உண்டாயிற்று. தமது எண்ணத்தை அரசருக்குத் தெரிவித்தார். அரசரும் உடன்பட்டு, கபிலவத்து நகரத்திலிருந்து தேவியாரின் பெற்றோர் வசிக்கும் தேவதகா நகரம் வரையில் சாலைகளை அலங்காரம் செய்வித்தார். பிறகு, தோழியரும் ஏவல் மகளிரும் பரிவாரங்களும் அமைச்சரும் புடைசூழ்ந்து செல்ல, தேவியாரைப் பல்லக்கில் ஏற்றி அவரைத் தாயகத்திற்கு அனுப்பினார். இவ்வாறு தேவதகா நகரத்திற்குப் புறப்பட்டுச்சென்ற தேவியார், இடைவழியிலே இருந்த உலும்பினிவனம் என்னும் சோலையை அடைந்தார்.
அன்று வைசாகப் பௌர்ணமி நாள். உலும்பினி வனம் அழகான பூக்கள் நிறைந்து மணம் கமழ்ந்து திவ்வியமாக விளங்கிற்று. குயில், மயில், கிளி முதலிய பறவையினங்கள் மரங்களில் அமர்ந்து இனிமையாகப் பாடிக் கொண்டிருந்தன. அவை கண்ணுக்கும் காதுக்கும் இனிமை பயந்தன. மலர்களில் தேனைச் சுவைத்த தேனீக்களும் தும்பிகளும் வண்டுகளும் அங்குமிங்கும் பறந்து கொண்டிருந்தன.
அந்த உலும்பினிவனத்திற் சென்று அவ்வனத்தின் இனிய காட்சிகளைக் காணவேண்டுமென்று மாயாதேவியார் ஆசை கொண்டார். அவர் விரும்பியபடியே அவருடன் சென்றவர்கள் அவரை அவ்வனத்திற்கு அழைத்துச் சென்றார்கள். தேவியார் உலும்பினிவனத்தின் இனிய காட்சிகளையும் பூக்களின் வனப்பையும் கண்டு மகிழ்ந்தார். கடைசியாக அந்தத் தோட்டத்தின் ஓரிடத்திலே இருந்த அழகான சாலமரத்தின் அருகில் வந்தார். அந்த மரம் முழுவதும் பூங்கொத்துக்கள் நிறைந்து மலர்ந்து மணங்கமழ்ந்து நின்றது. தேவியார் மரத்தடியில் சென்று அதன் கிளையொன்றைப் பிடிக்கக் கையைத் தூக்கினார். அப்பூங்கிளை அவர் கைக்குத் தாழ்ந்து கொடுத்தது.
அவ்வமயம், அவர் வயிறு வாய்த்துப் பத்துத் திங்கள் நிறைந்து கருவுயிர்க்கும் காலமாயிருந்தது. அவருக்குக் கர்மஜவாயு சலித்தது. இதனை அறிந்த அமைச்சரும் பரிவாரங்களும், அரசியாரைச் சூழத் திரைகளை அமைத்து விலகி நின்று காவல் புரிந்தார்கள். தேவியார் சாலமரத்தின் பூங்கிளையை ஒரு கையினால் பிடித்துக்கொண்டு கிழக்கு நோக்கியிருந்தார். இவ்வாறு இருக்கும்போதே அவர் வயிற்றிலிருந்து போதிசத்துவர் குழந்தையாகப் பிறந்தார். தாயும் சேயும் யாதொரு துன்பமும் இல்லாமல் சுகமே இருந்தார்கள்.

No comments:

Post a Comment