Wednesday 2 May 2018

அப்புசாமி தாத்தா-சீதாப் பாட்டி

திரு பாக்கியம் ராமசாமி – அப்புசாமி தாத்தாவையும் சீதாப் பாட்டியையும் படைத்தவர். ஒவ்வொரு தடவையும் அப்புசாமி தாத்தா, சீதாப்பாட்டியிடம் சவால் விட்டு, பின் மாட்டிக் கொண்டு முழிப்பதும், பாட்டியின் கண்டிப்பு நமக்கு முதலில் கோபம் வரவழைத்தாலும், கடைசியில் தாத்தாவைக் காப்பாற்றுவதற்கு அவர்தான் வர வேண்டியிருக்கிறது என்பது தெரிகிறது. அப்புசாமியின் நண்பர்கள், ரசகுண்டு, பீமாராவ், அரை பிளேடு அருணாசலம் எல்லாரையுமே நமக்குப் பிடிக்கிறது. சீதாப் பாட்டியோடு தைரியமாக மோதும் ஒரே ஆள் – ரசகுண்டுவின் பாட்டி கீதாப் பாட்டிதான். ஒவ்வொரு தடவையும் ஏதாவது ஏடாகூடம் செய்து விட்டு, சீதாப் பாட்டியிடம் மூக்கு உடைபட்டாலும், தன் முயற்சியில் கீதாப் பாட்டி மனம் தளர்வதேயில்லை. அவங்க அப்படி இருப்பதால்தான் நமக்கும் படிக்க, குலுங்கிக் குலுங்கி சிரிக்க, ஏராளமான நாவல்கள் கிடைத்திருக்கின்றன. சீதாப்பாட்டியின் தமிழிஷ் பேச்சும், அப்புசாமித் தாத்தாவின், பேச்சுத் தமிழும், படிக்க படிக்க இனிமை.
இப்போது அப்புசாமி.காம் என்ற இணைய தளத்தை நடத்தி வருகிறார். ட்ரஸ்ட் ஒன்றும் நடத்துகிறார். சிறந்த ஜோக்குகளுக்கு பரிசளிக்கிறார். சமீபத்தில், ஓவியர் திரு ஜெயராஜ் அவர்களுக்கு இந்த ட்ரஸ்ட் பாராட்டு விழா நடத்தியது. இதைத் தவிர, சென்னையில், ஒவ்வொரு மாதமும் மூன்றாம் சனிக்கிழமையன்று, “அக்கறை” என்ற பெயரில் ஒரு சந்திப்பை நடத்துகிறார்கள். இதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொண்டு பேசலாம். தலைவர், அடுத்த பேச்சாளர் என்றெல்லாம் கிடையாது. வருகை தரும் அனைவருக்கும் வாய்ப்பு தரப்படும். ஐந்து நிமிடத்துக்கு மட்டும் பேசலாம். சமீபத்தில் திரு ஜ.ரா.சுந்தரேசன்(பாக்கியம் ராமசாமியின் இயற்பெயர்) அவர்களுக்கு சென்னையில் சதாபிஷேகம் நடந்தது.
திரு அகஸ்தியன். கடுகு, பி.எஸ்,ரங்கநாதன் என்ற பெயர்களிலும் எழுதுவார். ரொம்பவும் டீஸண்ட் ஆன நகைச்சுவை இவருடையது என்று முன்பே சொல்லியிருக்கிறேன். அப்புசாமி-சீதாப் பாட்டி தம்பதிகளைப் போலவே, இவரும் மிஸஸ் & மிஸ்டர் பஞ்சு தம்பதிகளைப் படைத்தார். ஆனால் ஏனோ அவர்களை வைத்து தொடர்ந்து எழுதவில்லை. இந்தக் கதாபாத்திரங்களையும் இந்தக் கதையில் வரும் இன்னொரு பெண் – மிஸ் பிரியம்வதா.
இந்தக் கதாபாத்திரங்களை, படமாக வரைந்து, தன் பத்திரிக்கை பணியைத் துவக்கியவர் நடனம் என்ற ஓவியர். “முதல்வன்” திரைப்படத்தில் அர்ஜுனுக்கு அப்பாவாக நடித்தார். மகனுக்கு மனைவியாக வருகிறவள் எப்படி இருப்பாள் என்பதையும், மகனின் ராஜயோகத்தையும் கார்ட்டூனாக வரைவார், நினைவிருக்கிறதா! அவர்தான் ஓவியர் நடனம். சென்னையில் பிரபலமான ஒரு டிரெயினிங் இன்ஸ்டிட்யூஷனின் நிறுவனராகி விட்டார் இப்போது.
அகஸ்தியன் அவர்கள் தன் கதைகளில் மனைவி கமலா, மச்சினன் தொச்சு, தொச்சுவின் மனைவி அங்கச்சி, கதவின் பின்னால் நின்று பேசும் மாமியார், இவர்களைக் கொண்டு படைக்கும் நகைச்சுவை நம்மை நினைத்து நினைத்து சிரிக்க வைக்கிறது.
திரு அகஸ்தியன் ”ஐயோ பாவம் சுண்டு” என்ற நாவல் எழுதியிருக்கிறார். பல வருடங்களுக்கு முன்னால் தினமணி கதிரில் தொடராக வந்தது இது. ஓவியர் ஜெயராஜ் அவர்கள் இந்தக் கதைக்கு படங்கள் வரைந்தார். சர்க்கஸில் பஃபூன் ஆக இருக்கும் ஒரு குள்ள மனிதனான சுண்டுதான் கதாநாயகன். இந்தக் கதையில் நகைச்சுவை மட்டுமல்ல, நிறைய சஸ்பென்ஸும் இருந்தது. திரு கமலஹாசன் நடித்த ”அபூர்வ சகோதரர்கள்”, “மைக்கேல் மதன காமராஜன்” இரண்டு படங்களிலுமே இந்த நாவலின் சாயலும் அமைப்பும் நிறையவே இருந்தன. (திரு கமலஹாசன் அவர்கள் நிச்சயம் இந்தப் பகுதியைப் படித்து, எப்படி இந்த மாதிரி சொல்லப் போயிற்று என்று கோபித்துக் கொள்ள மாட்டார் என்று நினைக்கிறேன்(!)). திரு அகஸ்தியன் அவர்கள், தன்னுடைய படைப்புகளையும் சிந்தனைகளையும், கடுகு_அகஸ்தியன்.ப்ளாக்ஸ்பாட்.காம் என்ற ப்ளாக்கில் வெளியிட்டு வருகிறார். அவருடைய டெல்லி அனுபவங்கள், எத்தனை முறை படித்தாலும் சுவாரசியம் குறையாமல் இருக்கும்.
இவரது கால கட்டத்திலேயே பல நகைச்சுவை கதைகள் எழுதிய இன்னொரு எழுத்தாளர் திரு முகுந்தன் அவர்கள். பல வருடங்களுக்கு முன்னால் ஒரு தீபாவளி மலரில் இவர் எழுதிய ஒரு சிறுகதையைப் படித்து, பல முறை வாய் விட்டு சிரித்திருக்கிறேன். எல்லாவற்றிலும் மூக்கை நுழைக்கும் பக்கத்து வீட்டுக்காரர், அவருடைய அதிகப் பிரசங்கித்தனம், அவரிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் இளம் தம்பதி (மார்க்கெட்டுக்குப் போக வேண்டும் என்றால் கூட வருவது, அங்கே எல்லோருடனும் தகராறு செய்வது, இவர்கள் வீட்டில் வேலை இருக்கு என்று சொல்லித் தப்பிக்கப் பார்த்தால், நானும் உதவி செய்கிறேன் பேர்வழி என்று ஆட்டுக்கல்லை காலில் போடுவது, ஏரியல் கட்டித் தருகிறேன் என்று ஷாக் அடிக்க வைப்பது) அப்பப்பா!
இவர் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு முன்னால் ஆனந்த விகடனில் ஒரு தொடர்கதை எழுதினார். கதாநாயகன், தன் மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்வதற்காக, ஒரு ரோபோவை வாங்கிக் கொடுக்கிறான். பெண் வடிவத்தில் வடிவமைக்கப் பட்ட ரோபோ அது. கொஞ்ச நாளைக்கப்புறம், அந்த ரோபோ வித்தியாசமாக நடந்து கொள்கிறது என்று மனைவி புகார் செய்கிறாள். கதாநாயகனும் அதை உணர்கிறான். இறுதியில் அந்த பெண் ரோபோ, தான் கதாநாயகனைக் காதலிப்பதாகவும், அது நிறைவேறாது என்பதால், தற்கொலை செய்து கொள்வதாகவும் சொல்லி, ஜன்னல் வழியே குதித்து விடுவதாகவும், கதையை முடித்திருந்தார்.
உங்களுக்கு எந்தத் திரைப்படம் நினைவுக்கு வருகிறது?
(இந்தப் பகுதியை நிச்சயம் டைரக்டர் ஷங்கர் படிக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்(!!!)
குமுதம் பத்திரிக்கையின் நிறுவனரும் ஆசிரியருமான திரு எஸ்.ஏ..பி அவர்கள் எழுதிய சில நாவல்களைப் படித்திருக்கிறேன். திரு எஸ்.ஏ.பி அவர்களைப் பொறுத்த வரையில், தான் எழுதுவதை விட தன்னுடைய டீம் நன்றாக எழுத வேண்டும் என்பதைத்தான் ஊக்குவிப்பாராம். தினமும் குமுதம் அலுவலகத்தில் காலையில் ஒரு பெப் டாக் (PEP TALK) கொடுப்பாராம். அவர் தங்களை எப்படி எல்லாம் உற்சாகப்படுத்தி, எழுத வைப்பார் என்பதை திரு ஜ.ரா.சுந்தரேசன்(பாக்கியம் ராமசாமி) அவர்கள் ஒரு கட்டுரையில் சுவையாக சொல்லியிருக்கிறார். வைரமாக இருந்தாலும் அது பட்டை தீட்டப்பட வேண்டும் இல்லையா!
திரு எஸ்.ஏ.பி. அவர்கள் எழுதிய “நீ”, “காதலெனும் தீவினிலே”, “மூன்றாவது”, “நின்னையே ரதியென்று” ஆகிய நாவல்களை படித்திருக்கிறேன். ஒரு நாவலில், நீல நிற வானத்தைப் பற்றி, ‘வெண்மை அழகான நிறம்தான், ஆனால் அழகான நீல நிற வானத்தைப் பார்த்தபோது, அதில் உலவும் வெண்மை நிற மேகங்கள் நீல நிறத்தின் அழகுக்குப் பொருத்தமில்லாமல் இருந்ததன எனத் தோன்றுகிறது” என்று சொல்லியிருந்தார். இப்போதும் அழுத்தமான நீல நிற வானத்தைப் பார்க்கும்போது இந்த வர்ணனை நினைவுக்கு வரும்.
“மூன்றாவது” என்ற நாவலில் மிக வேடிக்கையான ஒரு காரக்டரை படைத்திருந்தார். அதாவது, அந்த காரக்டர் என்ன நினைக்கிறானோ, அதற்கு நேர் எதிராக அவன் முகபாவம் இருக்கும் என்று. அவன் மிகவும் அன்பாகப் பார்க்க வேண்டும் என்று நினைத்தால், அவன் முகத்தில் கோபம்தான் தெரியும்!. இந்தக் கதாபாத்திரத்தை நினைத்து வியப்பும் சிரிப்பும் வரும்.
எழுத்தாளர் சாவி – இவரால் உருவாக்கப்பட்ட, உற்சாகப்படுத்தப்பட்ட எழுத்தாளர்கள் எத்தனை எத்தனை பேர்! சுபா, பட்டுக்கோட்டை பிரபாகர், ராஜேஷ் குமார், மாலன், பாலகுமாரன், சுப்ரமண்ய ராஜு... சொல்லிக் கொண்டே போகலாம். மிகப் பிரபலமாக இருக்கும் “மஙகையர் மலர்” பத்திரிக்கையின் தற்போதைய எடிட்டர் அனுஷா நடராஜன், மற்றும் “குமுதம் சினேகிதி” பத்திரிக்கையின் எடிட்டர் லோகநாயகி, இருவருமே எழுத்தாளர் சாவி அவர்களின் பத்திரிக்கையான “சாவி”யில் பயிற்சி பெற்றவர்கள்.
சாவி அவர்களின் “வாஷிங்டனில் திருமணம்” யாரால் மறக்க முடியும்!! இதுவரை இந்த சூப்பர் நகைச்சுவை நாவலைப் படிக்காதவர்கள் www.chennailibrary.com சென்று படிக்கலாம். அவருடைய மற்றொரு படைப்பான “ஆப்பிள் பசி’ நாவலும் அங்கே அப்லோட் செய்திருக்கிறார்கள்.
திரு சாவி அவர்களின் படைப்பில், இதயத்தைத் தொடும் ஒரு நாவல் என்றால், “விசிறி வாழை” என்ற நாவலை சொல்லலாம்.
அண்ணன் மகனை வளர்ப்பதற்காக, திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து விடும் உயர்ந்த குணம் படைத்த பெண்மணி, அவரை ஒரு முறை பெண் பார்க்க வந்து விட்டு, பின் பதில் சொல்லாமல் சென்று விட்டவரை, இளமைக்காலம் முதிர்ந்த நிலையில் சந்திக்கிறார். இருவரின் மனதிலும் அன்பு இருக்கிறது. இப்போதாவது வாழ்க்கையில் இணைவார்களா என்று வாசகர்களை எதிர்பார்க்க வைத்தார் திரு சாவி அவர்கள். கோபுலு அவர்களின் ஓவியங்களுடன் ஆனந்த விகடன் பத்திரிக்கையில் வெளி வந்த தொடர்கதை இது. இந்தக் கதைக்கான கரு(ஐடியா)யாரால் தரப்பட்டது தெரியுமா! சேவற்கொடியோன் என்ற புனைபெயரை உடைய திரு எஸ்.பாலசுப்ரமணியம்(திரு எஸ்.எஸ்.வாசன் அவர்களின் மகன்). இந்தக் கதை நிறைவடைந்த பின் திரு சாவி அவர்கள் தனது கட்டுரையில், கதையைப் படித்த வாசகர்கள் யாரேனும் ஒரு துளி கண்ணீர் விட்டிருந்தால் அதுவே தனக்கு மிகப் பெரிய வெற்றி என்று நினைத்திருந்ததாகவும், ஆனால் ஏராளமான வாசகர்கள், கதையின் முடிவைப் படித்து, கண்ணீர் விட்டதாகவும் எழுதியிருந்தார்.
ராஜேஷ் குமார் – த்ரில்லர் கதைகளை எழுதி, ஏராளமான ரசிகர்களைப் பெற்றிருக்கிறார். கலைஞர் டி.வி.யில் இவரது கதைகள் “விசாரணை” என்ற தொடராக தற்போது ஒளிபரப்பாகிறது. அப்படியே அவரது கதைகளைப் படிப்பது போன்ற உணர்வு. அவரது எழுத்தில் இருக்கும் சுவாரசியத்தை திரையில் கொண்டு வந்திருக்கிறார்கள். விவேக், ரூபலா, விஷ்ணு காரகடர்களை வைத்து துப்பறியும் தொடர்களை ரசிக்கும்படி எழுதி வருகிறார். தனது கதையை திரைப்படமாக்க எடுக்கப்பட்ட முயற்சியில் ஏற்பட்ட அனுபவத்தை, “கோயம்புத்தூருக்கு ஒரு டிக்கட்” என்ற சிறுகதையாக எழுதியிருந்தது நன்றாக இருந்தது. மிக அதிக நாவல்களை எழுதிய எழுத்தாளர் என்ற முறையில், இவரது பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடப் பெறுவதற்கான பரிசீலனையில் இருக்கிறது என்பது சமீபத்திய செய்தி. ராஜேஷ் குமார் ரசிகர்களுக்கும், வாசகர்களுக்கும் ரொம்ப மகிழ்ச்சியான செய்தியும் கூட.
பட்டுக்கோட்டை பிரபாகர் – திரில்லர் மட்டும் அல்லாது, அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளை அலசி, தெளிவான பார்வையைத் தரும் விதமாக, நிறைய எழுதியிருக்கிறார். இப்போது சின்னத்திரையிலும், சினிமாவிலும் வெற்றிகரமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட ஆறு உதவியாளர்களை வைத்துக் கொண்டு, சினிமாவுக்கும் சின்னத்திரைக்கும் எழுதுகிறார் என்று இவரைப் பற்றி சுஜாதா வியப்புடன் குறிப்பிட்டிருந்தார்.
எழுத்தாளர் ம.வே.சிவகுமார். இவரது ”பாப்கார்ன் கனவுகள்” என்ற தொடர்கதை கல்கியில் வெளிவந்தது. லைம் லைட் என்ற வெளிச்சத்துக்கு வந்து, பிரபலமாக வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். சராசரிக்கும் மேலேயே ரசிகனாக இருக்கும் ஒருவன், பிரபலமாக ஆவதற்கு முயற்சித்தால் என்ன ஆகும்? வங்கியில் வேலை பார்க்கும் இளைஞன், சினிமாவில் நடிக்க முயற்சிக்கிறான். நகைச்சுவையும் யதார்த்தமும் கலந்த சிறப்பான படைப்பு இது. மனைவியின் நகைகளை அடகு வைத்து விடுகிறான் கணவன். மாமனார் எல்லாவற்றையும் மீட்டுத் தருகிறார். நகைகளை அணிந்து கொண்டு, மனைவி நமஸ்காரம் செய்கிறாள். “ நகைகளுடன் சேர்த்து, இத்தனை நாள் இந்த அழகையும் அல்லவா அடகு வைத்து விட்டோம்” என்ற குற்ற உணர்வு ஏற்படுவதாக எழுதியிருந்தது அருமை.
இவரது சிறுகதைத் தொகுப்பு “வாத்தியார்”. கொஞ்சம் தைரியமான எழுத்து என்றே சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் பற்றி எழுதியிருப்பார். ஒரு நடிகனின் ரசிகனாக இருக்கும்போது, அவரது போட்டியாளராக இருக்கும் இன்னொரு நடிகனை நாம் கிண்டல் செய்யவும், வெறுக்கவும் வேண்டும் என்று பழக்கப்படுத்திக் கொள்கிறோம். ஆனால் நம்மால் கிண்டல் செய்யப்பட்டவர், அவரது தகுதியை, சிறப்பை, வெளிப்படுத்தும்போது, ஏன் அவர் அவ்வளவு பெரிய ஆளாக இருக்கிறார், நாம் ஏன் அவரை விமரிசனம் செய்யும் இடத்திலேயே தங்கி விடுகிறோம் என்பது புரிய ஆரம்பிக்கிறது. எம்.ஜி.ஆர். அவர்களை ஒரு காரக்டராகவே ஆக்கி, எழுதிய சிறுகதை இது.
இவரது இன்னொரு நாவல் ”வேடந்தாங்கல்”. நான் இந்த நாவலை முழுவதுமாக படிக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அத்தியாயங்கள் மட்டுமே படிக்க முடிந்தது. பெரியப்பாவின் வீட்டில் படிப்பதற்காக கொண்டு வந்து விடப்படும் சிறுவனின் பார்வையில் சொல்லப்பட்ட கதை இது. கண்ணாடி போட்டுக் கொண்டு, இடுப்பில் கை வைத்தவாறு, பூஜை அறை படத்தில் இருக்கும் கிருஷ்ணரைப் போல சிரிக்கும் பெரியப்பா, அப்பளத்தை ஒடித்து, அதை ஸ்பூன் போல உபயோகித்து, சாம்பார் சாதத்தை எடுத்து சாப்பிட்டவாறே “இது அப்பள ஸ்பூன்” என்று சொல்வது, இதெல்லாம் நினைவிருக்கிறது. வேடந்தாங்கல் என்ற தலைப்பைப் படித்த போது, வெவ்வேறு இடங்களில் இருந்து வரும் பறவைகளின் சரணாலயமாக பெரியப்பாவின் வீட்டைப் பற்றி சொல்லப் போகிறார் என்று நினைத்தேன். ஆனால் கதையின் முடிவில், இனி எப்போதும் நிஜத்தை சொல்லப் போவதில்லை, வேடம் தாங்கிக் கொண்டே இருப்பேன், வேடம் + தாங்கல் என்று முடித்து, வியக்க வைத்தார்.
திருமதி சிவசங்கரி – எழுத்துக்காக இவர் எந்த அளவுக்கு உழைத்திருக்கிறார் என்பதை நினைத்துப் பார்க்கும்போது, பிரமிப்புதான் ஏற்படுகிறது. “பாலங்கள்” மூன்று தலைமுறை காலகட்டங்களை விவரிக்கும் நாவல். இப்போது இந்தியாவின் எல்லா மாநிலங்களுக்கும் சென்று, அனைத்து மொழிகளிலும் உள்ள சிறந்த படைப்புகளைத் தொகுத்து, நான்கு பகுதிகளாக வெளியிட்டிருக்கிறார். இதை ஒரே ஒரு வாக்கியத்தில் நான் இங்கே சொல்லியிருக்கிறேன். ஆனால் இதற்காக அவர் செய்திருக்கும் பயணங்கள், சந்தித்திருக்கும் எழுத்தாளர்கள், எடுத்துக் கொண்டிருக்கும் கால அவகாசம், இவையெல்லாம் எண்ணிப் பார்க்கும்போது, ஒரு காரியத்தில் இறங்கினால் அதை முடிக்கத் தேவையான மன உறுதியையும், உழைப்பையும் முழுமையாக அர்ப்பணித்து, எப்படி ஒரு தவம் போலவே செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு ரோல் மாடலாக இருந்திருக்கிறார் என்று பாராட்டத் தோன்றுகிறது.
கதைகள், நாவல்கள் தவிர, இவர் எழுதிய “சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்துவது” என்ற சுய முன்னேற்ற நூல் எல்லோரையும் மிகவும் கவர்ந்த ஒன்று. சரளமான எழுத்து நடை, தினசரி வாழ்க்கையில் நாம் சந்திக்கும் மனிதர்களை உதாரணமாக சொல்லி பிரச்னைகளுக்கு விடை சொன்ன விதம் எல்லாம் ரொம்பவும் நன்றாக இருந்தது. குழந்தையில்லாத தம்பதியினர், வாடகைத்தாய் மூலம் தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று முயற்சி எடுப்பதையும், அதனால் ஏற்படும் பிரச்னைகளையும் கதைக்களனாக வைத்து, “ஒரு சிங்கம் முயலாகிறது” என்ற பெயரில் சிவசங்கரி ஒரு கதை எழுதினார். அதே கால கட்டத்தில், கிட்டத்தட்ட இதே போன்ற கதையை, எழுத்தாளர் இந்துமதியும் “குங்குமம்” பத்திரிக்கையில் தொடர்கதையாக எழுதினார். “GREAT MINDS THINK ALIKE”!
எழுத்தாளர் திரு மணியன் அவர்கள் ஆனந்த விகடனில் எழுதிய “தேன் சிந்தும் மலர்” என்ற தொடர்கதை, மிகவும் வரவேற்பைப் பெற்ற ஒரு நாவல். இவர் ஆனந்த விகடனில் எழுதும் கதைகளின் லே-அவுட் கவனத்தைக் கவருவதாக அமைந்திருந்தது. பெரும்பாலும் ஓவியர் மாயா அவர்கள்தான் மணியனின் தொடர்களுக்கு படம் வரைவார். கதைகளை விட, ”இதயம் பேசுகிறது” என்ற தலைப்பில் இவர் எழுதிய பயணக் கட்டுரைகள், வாசகர்கள் விரும்பிப் படித்தார்கள். ஒரே சமயத்தில் இவர் ‘இதயம் பேசுகிறது’, பத்திரிக்கையையும், திரு சாவி அவர்கள் ’சாவி’ பத்திரிக்கையையும், ஆரம்பித்தார்கள். ‘குங்குமம்’ பத்திரிக்கையும் இதே காலகட்டத்தில்தான் ஆரம்பிக்கப் பட்டது.
எழுத்தாளர் திரு தி.சா.ராஜு அவர்கள். இவர் ராணுவத்தில் பணிபுரிந்தவர். காந்திய சிந்தனைகளில் பற்றுள்ளவர். ஹோமியோபதி மருத்துவத்தைப் பற்றி நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கிறார். ஹோமியோபதி மருத்துவத்தைப் பற்றி, மிகவும் சுவாரசியமான விஷயங்களை, சிறுகதைகளின் மூலமாக, அருமையாக சொல்லியிருக்கிறார். இந்த மருத்துவத்தைப் பற்றி ஆர்வத்தைத் தூண்டும் கதைகள் அவை.
லட்சுமி சுப்ரமணியம் என்ற எழுத்தாளர். இவர் எழுத்தில் என்னைக் கவர்ந்த குறு நாவல் ஒன்று - இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு, நீண்ட இடைவெளிக்குப் பின், மனைவி கர்ப்பம் தரிக்கிறாள். மூன்றாவது பிரசவத்துக்காக, மனைவியை ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டு, கணவன் தங்களது வாழ்க்கை அனுபவங்களை அசை போடுகிறான். “நாற்பது மணி நேரம்” என்ற அருமையான குறுநாவல் இது. மிகவும் அழகான, மென்மையான, உவமைகளும், வர்ணனைகளும், இவர் கதைகளில் நிறைந்திருக்கும். உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன். “வாசனைப் பொருட்கள் நிறைந்திருக்கும் அலமாரியைத் திறந்ததும் எழும் மணம் போல, மனமெங்கும் நிரம்பியது” என்று ஒரு வர்ணனை.
எங்கள் வீட்டு ஹாலில், சுவற்றில் பதித்த ஒரு அலமாரி உண்டு. அந்த அலமாரியைத் திறந்தால், அதில் ஒரு நறுமணம் எழும். சோப்புக்கள், வாசனைத் திரவியங்கள் வைத்திருந்தார்களோ, என்னவோ. சிறுமியாக இருந்த போது, சும்மாவேனும் அந்த அலமாரியைத் திறந்து, திறந்து, மூடுவேன் – அந்த வாசனையை ரசிக்க. பல வருடங்களுக்குப் பின், இந்த எழுத்தாளரின் இந்த வர்ணனையைப் படித்தபோது, அது மனதில் நின்று விட்டது.
பி.வி.ஆர். பல்வேறு பின்னணிகளில் நாவல்களை எழுதிக் குவித்தார் என்றுதான் சொல்ல வேண்டும். கோர்ட் சம்பவங்களை வைத்து எழுதப் பட்ட “மிலாட்”, மதுரையை களமாக வைத்து “மதுர நாயகி”, சென்ட்ரல் ஸ்டேஷனைக் கொண்டு “சென்ட்ரல்” என்று பல நாவல்கள்.
இவர் எழுதியதில் என்னை மிக மிகக் கவர்ந்தது “காகிதப்பூ” என்ற நாவல். பெற்றோரை இழந்த பின்னால், வசதியான அக்காவின் வீட்டில் வளரும் பெண் அகிலா. அக்காவின் பெண்ணும், இவளும் கிட்டத்தட்ட சம வயதினர். தன் பெண்ணைப் போலவே இவளை வளர்த்து, கல்யாணம் செய்து கொடுக்கிறார்கள், அக்காவும் அவள் கணவரும். செல்லமாக வளர்ந்ததினால், கொஞ்சம் அதிகமாகவே “இம்பல்சிவ்” ஆக நடந்து கொள்கிறாள் அகிலா. நினைத்ததை அப்படியே பேசுவது, அவளுடைய துடுக்குத்தனமாக மற்றவர்களுக்குப் படுகிறது. டெல்லியில், கணவனோடு ஆரம்பிக்கும் எளிமையான வாழ்க்கை வாழ்க்கை அவளுக்குப் பிடிக்கவில்லை. நல்ல பெண்தான், ஆனால், அவளை எப்படி சரி செய்வது என்று யாருக்கும் புரியவில்லை. அக்கா வீட்டுக்கே திரும்பவும் வருகிறாள். ஒரு நாள் அவளைப் பார்க்க, அவளது மாமியார் வருகிறார். ஒரு வார்த்தை கடும் சொல் இல்லை, ஏன் இப்படி என்ற விசாரணைத் தோரணை இல்லை, அன்பாக, சாதாரணமாக, பேசி விட்டுப் போகிறார். அந்த இயல்பான அன்பே, அகிலாவை, தன்னை உணர வைக்கிறது. மிகவும் அருமையான நாவல் இது.
கதைகள், நாவல்கள் என்றில்லாமல், ஒரு பக்க கட்டுரைகள், பயணக் கட்டுரைகள், கேள்வி பதில்கள் இப்படி வேறுபட்ட வடிவங்களில் தன் கருத்துகளை எழுதி, மனம் கவர்ந்திருப்பவர் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள். தமிழை பட்டப் படிப்பாக எடுத்துப் படித்தவர் இவர். சாதாரணமாக மற்றவர்களுக்கு புத்திமதி சொல்வது ரொம்பவும் சிரமமான விஷயம். ஆனால் இவர் எழுதியிருக்கும் ஒரு பக்க கட்டுரைகள் எல்லாமே விரும்பிப் படிக்கக் கூடியதாக இருப்பதன் காரணம், நம் நலத்தில் அக்கறை உள்ள ஒரு நண்பர் பேசுவதைப் போன்ற தொனியில் இருப்பதுதான் என்று நினைக்கிறேன்.
என்ன, ஒரே பகுதியில் நிறைய பேரைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன் என்று நினைக்கிறீர்களா?
ஆம், இத்துடன் இந்தப் பகுதியை நிறைவு செய்கிறேன். இதுவரை என்னைக் கவர்ந்த எழுத்தாளர்களைப் பற்றி உங்களுடன் பகிர்ந்து கொள்ள முடிந்தது எனக்குக் கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு. இன்னும் எத்தனை முறை அட்மின் அவர்களுக்கு நன்றி சொன்னாலும், எனக்கேற்பட்டிருக்கும் மன நிறைவை விளக்கி சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.
எழுத ஆரம்பிக்கும்போது சின்ன தயக்கம் இருந்தது. இன்றைய வேகமான உலகில், எழுத்தாளர்களைப் பற்றி சொல்வது, நம் தோழிகளுக்கு எவ்வளவு தூரத்துக்கு சுவையாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், ஒவ்வொரு பகுதியிலும், உற்சாகமாக பின்னூட்டம் கொடுத்து, இன்னும் நிறைய விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள வைத்தீர்கள். இந்தப் பின்னூட்டங்கள் எனக்குக் கொடுத்திருக்கும் அற்புதமான ஊக்கத்திற்கு மிகவும் நன்றி.
வாசகர்களால் மிகவும் விரும்பப்படும் எழுத்தாளர்களான, திரு கல்கி, திரு சுஜாதா, திரு சாண்டில்யன் இவர்களைப் பற்றியெல்லாம் நான் எழுதவில்லை. காரணம், இவர்களது படைப்புக்களைப் பற்றி, இன்னும் எத்தனையோ விதத்தில், ரசித்து, வியந்து, எழுதக் கூடிய தோழிகள் நம்மிடையே நிறையப் பேர் இருக்கிறார்கள். மாறுபட்ட கோணங்களில், அவர்கள் தரும் சொற்சித்திரங்களைப் படிக்க, எனக்கும் ஆவலாக இருக்கிறது. எனென்றால், எனக்கும் இவர்கள் உள்ளம் கவர்ந்த எழுத்தாளர்கள் ஆயிற்றே!

No comments:

Post a Comment