Friday, 25 May 2018

நீலவேணி டீச்சர்


மையல் அம்மாதான் என்றாலும் கூடமாடச் செய்யாமல் தீராது. ஐந்து மணிக்கு அலாரம்வைத்து எழுந்தாலும் குளித்து, உடுத்தி, ஒப்பனைகள் செய்து, இரண்டு தோசையோ, மூன்று இட்லியோ பிட்டுப்போட்டு, கைப்பைக்குள் மதிய உணவுப் பாத்திரம் நுழைத்து, அப்பாவைச் சத்தம் காட்டினால், அவர் சாரத்தை மடித்துக்கட்டி, வண்டியை இறக்கித் தெருவில் நிறுத்தி, ஸ்டாண்ட் போட்டு, ஸ்டார்ட் செய்வார். பின்னால் ஏறி அமர்ந்து ஏழே காலுக்கு சிங்கநல்லூர் கரும்புக் கடை நிறுத்தத்தில் நின்றால், சுல்தான்பேட்டை பேருந்து கிடைக்கும். 67 நெருங்கும் அப்பாவுக்கும் முன்போல் முடிவது இல்லை. அவரது டி.வி.எஸ். 50க்கும் முதுமைதான். சின்ன வண்டி ஒன்று வாங்கி, சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நிறுத்திவிட்டு நெடிய வழி போகலாம். காலையிலும் மாலையிலும் அப்பாவை அலையவைக்க வேண்டியது இல்லை.
ஏது காரணம் பற்றியோ, மாதத்தில் இரண்டு மூன்று நாட்கள் பேருந்து தவறிவிடும். சூலூர் போய் இறங்கி, வண்டி மாறி, பாடசாலை போவதற்குள் பெரும்பாலும் முதல் மணி அடித்துவிடும். தெரிந்தே முகப்பில் காத்து நிற்பார் தலைமை ஆசிரியர், புழுபோல் பாவித்துப் பார்த்துக்கொண்டு. முன்பெல்லாம் தாமதங்களைப் பொருட்படுத்தாமல்தான் இருந்தார். ஒருநாள் முறுக்கிக்கொண்டாயிற்று.
எல்லோருக்கும் ஒரு நினைப்பு. 39 வயதிலும் திருமணமாகவில்லை. பாலுறவுக்குக் கொதித்துக்கொண்டுகிடப்பாள் என. கனிந்த ரஸ்தாளிப் பழம்போல தொடப் பொறுக்காமல் கையோடு அடர்ந்து வந்துவிடும் என்று. அவரது மனைவியும் சில ஆண்டுகள் செஞ்சேரிமலையில் உடன் பணிபுரிந்தவர்தான். மிகக் கனிவான டீச்சர். தலைமை ஆசிரியரிடம் கேட்டதுதான் தப்பாகிப்போயிற்று. ‘ஏன் சார்? கமலம் டீச்சரை அவங்க பள்ளித் தலைமை ஆசிரியர் கூப்பிட்டா விடுவீங்களா?’ என்று.
பொதுவாகவே, தமிழாசிரியை என்றால் யாவர்க்கும் இளப்பம்தான். மாணவர்தாம், ‘அன்னா தமிள் போகுது’ என்றால், உடன் பணிபுரிபவரும், ‘என்னா, தமிள் இன்னைக்கு விடுப்பா?’ என்கிறார்கள்.
தமிழ், ஆண் பாலா, பெண் பாலா, பலவின் பாலா? இல்லை, பெண் கருப் பறித்தெடுக்கும் கள்ளிப் பாலா? எல்லாக் கனவான்களுக்கும்தான் ஆளுயுர ஃப்ளெக்ஸ் போர்டு வைத்து கன்னித் தமிழே, அன்னைத் தமிழே, முத்தமிழே, சங்கத் தமிழே என அவமானம் செய்கிறார்கள்.
எட்டாவது பயிலும் பெண், சக மாணவன் எழுதிய காதல் கடிதத்தைக் கொண்டுவந்து நீட்டினாள் ஒருநாள். பயிற்சிப் புத்தகத்தில் கிழிக்கப்பட்ட அரைத் துண்டுக் காகிதத்தில், ‘வன்சளா நான் உன்னைக் கதளிக்கிறேன்’ எனச் செம்மொழி வன்புன்னகை காட்டிற்று. கூப்பிட்டு இரண்டு அடி போட்டாள். காதலித்ததற்காக அல்ல. பையைச் சோதித்துப்பார்த்ததில் வழவழப்புக் காகிதங்களில் வண்ணங்களில் அச்சிடப்பட்ட குட்டைப் பாவாடையும் கச்சையும் மட்டும் அணிந்த வெளிநாட்டுப் படங்கள் நிறைந்த கோடம்பாக்கக் குறும்பாக்கள். அதில் ஒரு வரி, ‘உன் முத்தம் என்னுதட்டில் அக்கினித் திராவகமாக எரிந்தது.’ உதட்டையே அரித்துத் தின்னும் முத்தங்கள்போலும்!
அன்று வண்டி போய்விட்டது. 19 சி பேருந்து பிடித்து, கவிந்துகிடந்த வாதநாராயண மர நிழலில், சுல்தான்பேட்டைக்குத் திரும்பும் இடத்தில் நின்றாள் நீலவேணி.
முன்தலை வழுக்கையும் இனி எந்தக் காலத்திலும் எப்பாடு பட்டாலும் கரைக்க முடியாத மகோதரமும் அரசு ஊழியருக்கேயான கைப்பையுமாக ஒருவன் உற்றுப்பார்த்தவாறு நின்றான். கருவாட்டை பூனை பார்ப்பதுபோல, பைக்குள் கைவிட்டு ஒரு ரூபாய் நாணயமா… இரண்டு ரூபாய் நாணயமா என விரல்களால் தடவி உணர முற்படுவதைப்போல. அவள் பேருந்து வந்ததும் ஏறி அமர்ந்துகொண்டாலும், அந்த முகம் எங்கோ கண்டு அயர்த்ததுபோலத் தட்டுப்பட்டது.
முகங்கள் புதுப் பொருள் எதனையும் புலப்படுத்துவது இல்லை. அலுப்பு, ஆயாசம், ஆசை, அலப்பு எனக் குறிப்பான சில பொருட்கள் தவிர்த்து உற்சாகமான முகங்கள் இளைஞருக்கும் மாணவருக்கும் மட்டுமே வாய்க்கின்றன.
என்றாலும், சிந்தனை அவன் குறுகுறு நோக்கை ஒட்டி ஒழுகிக்கொண்டு இருந்தது. தெரிந்து பார்த்தானோ, தெரிவதற்கான நோட்டமா, இல்லை, வாழ்க்கையைத் தொலைத்துவிட்டுத் தேடுகிறானோ? எங்கென்று தேடுவான் காண்?
குப்பைக் கூளங்கள் நிறைந்த, வர்ணம் மங்கிய, அரவம் பரப்பிய, ஓட்டை உடைசல் பேருந்து. கறட்டுக் கம்புக்கு முரட்டுக் கோடரியாக ஒப்புரவுத் துறந்த சாலை. அடுத்தவன் கலத்தில் கைவிட்டு அள்ளித் தன் பக்கறை நிறைக்கும் சீலர்கள் நிறைந்த காலம்.
என்றாலும் அவன் யாவன்? தூர்த்து வாரிப் புடைத்துப் பார்த்தது மனம். முதல் பத்துப் பேருக்குள் வந்து பார்த்துவிட்டுப் போன, பிரகாசமான வாய்ப்புக்கொண்ட, சுயம்வர மண்டபத்து இளவரசுகளின் முகங்களில் ஒன்றாக இருக்கலாம்.
42 என்பது தற்போதைய வரிசை எண். எத்தனை எத்தனை காரணங்கள் நிராகரிப்புக்கு?
ஐந்து பவுன் பேரத்தில் தட்டியது, மாற்றல் கிடைக்காது என வழுகியது, நிறக் குறைவு என நிராகரிப்பானது, மூங்கில் கழி போல் என்றும், முன்பல் தூக்கல் என்றும், வக்கை நாடி என்றும், ஏறு நெற்றி என்றும், கொக்குக் கழுத்து என்றும், கூனல் முதுகு என்றும், மூல நட்சத்திரம் என்றும், என்ன ‘உம்’ கொட்டுகிறீர்கள்? நாற்பத்து இரண்டையுமா சொல்லவியலும்?
கண்ணாடி பார்த்து நரை மயிர் பறிக்கும் பருவம். இன்னும் ஓராண்டு போனால், தெரிவை கடந்த இறுதிப் பருவம் பேரிளம் பெண். நாற்பதுக்கு மேல் நாடி ஒடுங்குவது வரை. ஒப்பனைகள் சில காலம் முகத்தில் பொய் எழுதும். பின்பு ஒப்பனைகளும் சண்டையில் தோற்றதாயின் இளிப்புக் காட்டும். காசுடையவர் காதின் பின்பக்கம், நாடியின் கீழ்ப் பக்கம் கீறித் தோலிழுத்துக் கட்டி சுருக்கங்கள், தொய்வுகள் அகற்றி முகத்தை விறைப்பாக்கலாம். மத்தளத்துக்கு வார் பிடிப்பதைப்போல, தொய்ந்து தளர்ந்த தனங்களை எடுத்துக் கட்டலாம். அளகம் கறுத்து மினுங்க சாயம் தோய்க்கலாம். வாரந்தோறும் எண்ணெய் தேய்க்கும்போது தோலும் சடைத்துக்கொள்கிறது.
ஏன் இப்படி யோசனை செம்போத்துப்போலப் பாய்கிறது, கதிக்கத் தாழ்ந்து?
தூங்கிவிட்டாள் என்றெண்ணி அப்பா, அம்மாவிடம் கவன்றுகொண்டு இருந்தார்.
”எல்லாம் சரியா இருக்கு… பொருத்தமும் இருக்கு! பையன் தரமாட்டும் இருக்கான். நல்ல ஆளுகள். ஆனா, ஒரு காரியந்தான் யோசிக்கணும். பையனுக்கு ரெண்டாங் கெட்டு.”
”அது எப்படி?” என்றாள் அம்மா.
39 முடிந்து 40 நடந்துகொண்டு இருப்பவளுக்கு, ரிஷ்ய சிருங்கர் போலப் பெண் வாசம் முகராத ஆண் மகன் கிடைப்பான் என எதிர்பார்க்கிறாள் போலும்!
எல்லாம் கூடி வந்தது. வெற்றிலை கைமாற நாள் குறித்தார்கள். குறித்த பின் மாமியாராக வரும் பேறுடைத்தவள் மாரடைத்து இறந்துபோனாள். ‘அக்கியானியம்’ வந்துவிட்டது மாப்பிள்ளை வீட்டாருக்கு.
36-வதாக வந்தவன் பார்த்துப் போன மறுநாள் குறுஞ்செய்தி அனுப்பினான் – ஆடையற்ற பால் தருவாளா என்று. அம்மாவிடம் குடித்தே இருக்க மாட்டான்போலும்.
பெற்றோர் பெரிதாகக் கவல்வதாயும் இல்லை. தீபாவளி வந்தது, திருக்கார்த்திகை வந்தது, பொங்கல் வந்தது, சித்திரை பிறந்தது, கோகுலாஷ்டமி, திருவாதிரை, தைப்பூசம், சிவராத்திரி, வைகாசி விசாகம், சூரன்பாடு எல்லாம் வந்தன வந்தன, வந்தனம் தந்தன தந்தன…
23-ம் வயதில் பி.எட்., படிக்கும்போது ஒருவன் கேட்டான், ‘ஓடிப் போய்ப் பதிவுத் திருமணம் செய்துகொள்ளலாமா?’ தற்செயலாக சகமாணவி சொன்னாள், ‘அவன் ஏற்கெனவே மூன்று முறை ஓடிப்போனவன்’ என.
கூடப் படித்தவள் மகள் சடங்குக்கு வந்து சொல்லிப் போனாள். பக்கத்துத் தெரு, எங்ஙனம் ஒழித்து மாறுவது? அந்தரங்கக் காட்டில் வழி தவறி நடந்தததில் பேருந்து நின்றது, பள்ளியின் வாசலில்.
மறுநாள் காலையில் அம்மா கேட்டாள், ”டப்பாவுக்கு கொழுக்கட்டை வைக்கவா, தயிர்சாதம் கொண்டுபோறயா?”
தயிர் சாதம் வைக்கச் சொன்னால், ”தொட்டுக்கிட நெல்லிக்காயா, நார்த்தங்காயா?” என்பாள்.
எல்லோருக்கும் காலம் போய்க்கொண்டு இருந்தது. எல்லோரும் காலம் போக்கிக்கொண்டு இருந்தனர். அல்லது காலம் என்பதுவே ஓர் கற்பனையோ? நாகணவாய்ப் புட்கள் இரண்டு சுற்றுச் சுவரில் நடந்துகொண்டு இருந்தன. நாகணவாய்ப் புள் என்றதும் மகேந்திரவர்மப் பல்லவன் காலத்துக்குத் தாவ வேண்டும் என்றில்லை. நம்மூர் மைனாக்கள்தான்.
நெருக்கமான நட்பெனப் பழகினார் ஆங்கிலம் பயிற்றிய தங்கசாமி. கைமாற்றுக் கேட்பார், ஊறுகாயில் பங்கு கேட்பார், சொந்தச் சங்கடங்கள் சொல்வார், ஆலோசனைகள் கேட்பார். பண்டிகை நாளன்றின் மறுதினம் பலர் விடுப்பு எடுத்து, ஆசிரியர் அறையில் ஆட்கூட்டம் இல்லாதபோது, தனித்து இருக்கையில் தன்னின்பம் துய்த்தல் பயிற்ற முனைந்தார், சாதுர்யமாக. ஒழிந்தால் செய்துகாட்டுவார்போல. தோழி ஒருத்தி அடிக்கடி சொல்வதுண்டு, பர புருடர் யாவர்க்குமே மறைவான நிகழ்நிரல் உண்டென. ஆடை கழற்றினால் யாவும் நிர்வாணம் என்பதுபோல, ஆண் மனத் தோலைச் சுரண்டினால், அரிப்பெடுக்கும் சேனைக் கிழங்கின் சிவப்புத் தெரிகிறது. புளிவிட்டு அவித்தாலும் தணியாத அரிப்பு, ஊரல், நாக்குத் தடிப்பு.
புரண்டு புரண்டு படுத்தும் தூக்கம்கூட மறுத்தது. பயணத்தின் சாலைத் தூசி. வெயிலின் வியர்வைக் கசகசப்பு. உடல் நாறியது. சற்றே சோம்பல் தவிர்த்திருந்தால், குளித்திருக்கலாம். எதைப் புதுக்கி எவர்க்குக் கொலுவிருக்க? அறிகுறிகள் சாற்றின, ஆண்டுகள் ஒன்றிரண்டில் ஈஸ்ட்ரோஜன் அரணும் அழிந்துவிடும் என.
கனவுகளிலும் திருத்தப்பட வேண்டிய கட்டுரை நோட்டுக்களே வந்தன, கட்டுக்கட்டாக. அங்ஙனம் கனவு வந்தால் பலன் என்ன என்று ஃப்ராய்டு கூறிச் சென்றாரா எனத் தெரியவில்லை.
ஒழிந்த மாலையில் வாசற்படியில் உட்கார்ந்து வழமை பேசிக்கொண்டு இருந்தபோது, பக்கத்து வீட்டு மார்வாரி சேட்டு அம்மா சொன்னாள். ‘தான் தான் மே லிக்கா ஹ§வா ஹை, கானே வாலேக்கா நாம்’ என்று.
உண்ணப் போகிறவனின் பெயர் ஒவ்வொரு தானிய மணியிலும் எழுதப்பட்டு இருக்குமாம். கேள்வியன்று எங்கு பொறிக்கப்பட்டு இருக்கும்? கிளைக் கேள்வி ஒன்றுகூடவே எழுந்தது – பெண் என்பவள் உண்ணப்படும் பொருளா என. ஆனால், அந்தத் தாய்க்கு அதெல்லாம் புரியாது.
அன்று பள்ளி விடுமுறை. எல்லா அர்த்தங்களும் இழந்துபோன நினைவு நாட்களில் ஒன்று. காலையில் எழுந்ததும் சிற்றுண்டி அருந்தி அப்பா புறப்பட்டாயிற்று. கையில் புரோகிதர்கள் வைத்திருப்பதைப் போன்றதொரு ரெக்சின் பை. சாதகக் குறிப்புகள் குப்பைபோலக் கிடந்தன அவற்றுள். சிலருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி இருக்கலாம். கடவுள் பொறுக்கட்டும் – சிலர் செத்தும்கூடப் போயிருக்கலாம். எண்ணற்ற சாதகக் குறிப்புக்களை ஒன்றுக்கு மூன்று சோதிடர்கள் சோதிக்க உடன் இருந்து, சோதிடமும் செவி பழகி, அவரே முக்காலே அரைக்கால் சோதிடராகவும் ஆகிப்போனார்.
நீலவேணிக்கு, நீலமேக சியாமள வண்ணனான 43-வது வருகைக்குக் காத்திருப்பு. பெண் பார்க்கும் படலத்துக்கு எனச் செய்து, மீந்த பலகாரங்கள் தின்னக் கூசுகிறது. நீத்தாருக்குப் படைத்த பின்பு அது பிரசாதம் எனில், இந்தப் படையல் மிச்சத்துக்கு என்ன பெயர்? 42 முறை எச்சில் தட்டுக்கள், காபி டம்ளர்கள்… வாய்த்திருந்தால் இந்த 42-ல் ஒன்றில் நிரந்தரமாக வாழ்நாள் பூரா எச்சில் தின்றிருக்க வேண்டும். விருந்தென வேண்டாவாம் மனைவிக்குக் கணவனின் எச்சில் புசித்து வாழின்.
தின்ற தட்டுக்களே எச்சில் எனில், திரும்பத் திரும்பத் துய்க்க என மொய்த்த கண்ணெச்சில் பெண்ணா? மொய்த்து, நிராகரித்து, சலித்து, ஊசி நூலிழுத்து, புளித்து, நுரைத்துப் புழு தெறித்து விழும் மெய்யா? எனப் புலம்பும் பட்டினத்துப்பிள்ளை இதை யோசித்துப்பார்த்திருப்பாரோ?
நேற்றுப் புலர் காலையில் வெளிநாட்டுத் தொலைபேசி மணி அடித்தது. ஓராண்டுக்குப் பிறகு, போராடி விடுமுறை வாங்கி, பயணச் சீட்டுக்கள் சமாளித்து, அண்ணன் குடும்பம் டெக்சாஸில் இருந்து, அடுத்த வாரம் ஊருக்கு வருகிறது. பேசப்படாத உண்மைக் காரணம், சென்ற ஆண்டில் தனது 52 வயதில் புற்றுநோயில் செத்த மாமியார் திவசம் என்பது யாருக்கும் தெரியாது.
அண்ணனுக்குப் பிடிக்கும் என அதிரச மாவு திரட்ட, இனிப்பு மனகாவலம் பிழிய, பொரி உருண்டை பிடிக்க யத்தனங்கள் கூட்டுவாள் அம்மா. எள் என்பதற்குள் எண்ணெயும் பிண்ணாக்குமாக நிற்பார் அப்பா. வீடெங்கும் எண்ணெயில் முறுகும். சர்க்கரைப் பாகு, பச்சரிசி மாவு எனக் கலந்து புகை மண்டும். வேலைக்காரன் வைத்து வீடு துப்புரவு ஆகிக்கொண்டு இருந்தது. அவள் படுக்கும் அறையை ஒழித்துக்கொடுக்க வேண்டும் அண்ணனுக்கும் மதினிக்கும். அவனுக்கு இரவுறங்க மனைவியின் ஷாம்பு வாசம் வீசும், நக்கீரன் மறுப்புச் சொல்லத் தேவையற்ற, கூந்தல் நறும்புனல் தெளித்த மேனி வேண்டும்.
குழந்தைகள் தனியறையில் படுத்துப் பழகியவை. அம்மா- அப்பா அறையை ஒழித்து, துப்புரவு ஆக்கி, தூசிகள் தட்டி, விரிப்புகள், உறைகள் மாற்றி, கொசு வலைகள் பொருத்தி, நறும்புகை காட்டித் தயாராக்கிக்கொண்டு இருந்தனர்.
கூடத்தில் பாய் விரித்து அப்பா, அம்மா, நீலவேணி எனும் வரிசைக் கிரமத்தில், ஈழப் போர்க்களத்தில் அடுக்கிய பிணங்கள்போல, தலையோடு பொதிந்து மூடி உறங்க என்பது நியதி.
அவள் மணமாகிப் போகாமல் இருப்பது அண்ணனுக்கு ஆறுதல் பெருமூச்சு. பெற்றோர் தனிமை, முதியோர் இல்லம், உடல்நலக்குறைவு, அகாலத் தொலைபேசி அழைப்பு என நேரத்தையும் நிம்மதியையும் கொலைக்குக் கொடுக்க வேண்டாம்.
நீலவேணியைவிட நான்கு வயது இளையவள் மதினி. சுற்றி வளைத்து, மிகைச் சொற்கள் தவிர்த்துக் கேட்க முனைந்ததை விளம்ப இவண் விசனமுண்டு. எனினும் விளம்பாமல் கதையும் முடியாது.
மிகக் கரிசனத்துடன் நீலவேணியை முன்னால் முதுகு காட்டி உட்காரவைத்து, சீப்பெடுத்துத் தலைவாரிச் சிக்கெடுக்கும் பாவனையில் பேச்சுக் கொடுத்தாள்.
”தலைமுடி நீளம் இல்லாவிட்டாலும் நல்ல அடர்த்தி உங்களுக்கு. பாப் கட் பண்ணிவிட்டா, உங்க முக அமைப்புக்குப் பிரமாதமா இருக்கும்.”
”ஆமா, அது ஒண்ணுதான் எனக்குக் கொறச்சல்?”
”ஏன்… உங்களுக்கென்ன? வயசு தோணிக்காத உடம்பு. பெரம்பு மாதிரி இருக்கு. பின்னே, நீங்க அக்கறையா உடம்பைப் பராமரிக்கிறதில்லே!”
”இனி கெவுனிச்சுக்கிடுகேன்.”
”எங்க அப்பாவும் அப்பிடித்தான். அம்மை போன பிறகும் வாக்கிங், டயட் எல்லாம் செய்து உடம்பை நல்லாவெச்சிருக்கா… யாரும் 50 வயசுக்குத்தான் மதிப்பா.”
”…. …. …”
”ஒரு வருசமாட்டு மாசம் 18 ஆயிரம் பென்சன் வருது. எண்ணாலும் சும்மா இருப்பாளா? தினசரி ரெண்டு மட்டம் தென்னந் தோப்பைச் சுத்திப் பாத்துத் தீரும்… காலையிலே குளிச்சு கோயிலுக்குப் போயித் தீரும்.”
”சாப்பாட்டுக்கு என்ன செய்யா?”
”சோழபுரத்துப் பெரியம்மைதான் பொங்கிக் குடுக்கா. அவுகளுக்கும் முடிய மாட்டங்குன்னு பொலம்புகா. எத்தனை நாளைக்கு நிப்பாளோ?”
”நீங்க ஒத்தைக்கு ஒரு மகதானே! கூடக் கூட்டீட்டுப் போங்க.”
”நானா மாட்டங்கேன்? வரணும்லா?”
”பின்னே, ரெண்டாந் தாரமா யாரையும் பாத்துக் கெட்டி வைக்கலாம்லா? குறை காலத்துக்கும் தனியாட்டா இருப்பா?”
”அதைத்தான் சொல்ல வந்தேன். மதினி தப்பாட்டு எடுத்துக்கிட மாட்டேள்னா, ஒரு காரியம் கேக்கட்டா?”
”என்னா?”
”அப்பாவுக்கு விருப்பம் இருக்கு… உங்களுக்கும் சம்மதம்னா சிம்பிளா முடிச்சிரலாம்…”
நீலவேணிக்குச் சிரிப்பு வந்தது. கூடவே, கண்கள் சிவந்து பொங்கின.
”என்ன ஒண்ணுமே சொல்ல மாட்டங்கியோ?”
”அண்ணனுக்குத் தெரியுமா?”
”பேசீட்டேன்…”
”அவனுக்குச் சம்மதமா?” எனக் கேட்க, குரல் கம்மியது.
மதினி விரல்கள், சீவி முடித்துக் கூந்தலைப் பின்னல் போடுவதில் இருந்தன. சற்றுப் பொறுத்துச் சொன்னாள். ”அவங்க சம்மதம் இல்லாட்டா கேப்பனா?”
காலமெனும் கொதிக்கும் எண்ணெய் உருளியில் முறுகிச் சிவக்கின்றன உறவுகள்.
மழையில் நனைந்த மத்தளம் கொட்ட, கீறி உடைந்த வரிசங்கம் நின்றூத, அண்ணன் மாமனார் வந்து கைத்தலம் பற்றக் கனாக் காணும் நேரம்தான்.
43…. நல்ல வரிசை எண்ணா?
குறிப்பு:
தமிழ் மரபு பெண்ணுக்குப் பருவங்கள் ஏழு எனப் பிரிக்கிறது.
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்பன பெண்பாற் பருவங்கள்.
இதில் தெரிவை என்பது 31 வயது முதல் 40 வயது வரை

No comments:

Post a Comment