Tuesday, 29 May 2018

சரஸ்வதி ஆறு

சரஸ்வதி நதி இருந்ததாகப் பண்டைய புராணங்கள், வேதநூல்கள் அனைத்தும் ஆணித்தரமாகக் கூறுகின்றன. ஆனால் அந்த நதி தற்போது எங்கிருக்கிறது என்பது யாருக்கும் தெரியாத ரகசியமாக உள்ளது. அது பூமிக்கடியில் இன்றும் பாய்ந்து கொண்டிருப்பதாக ஒரு கருத்து வலுவாக இருந்தாலும் அதற்கு மாற்றுக் கருத்தும் இருக்கத்தான் செய்கிறது.
மிகப் பழமையான இந்த மத நூல்களில் முதன்மையானதாகக் கருதப்படுவது ரிக்வேதம் ஆகும். அதில் சரஸ்வதி நதியைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நதி யமுனை நதிக்குக் கிழக்கிலும், சட்லெஜ் நதிக்கு மேற்கிலும் இருந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. ஆக இவ்விரு நதிகளுக்கும் இடையே சரஸ்வதி நதி இருந்தது இதன்மூலம் நிரூபணமாகிறது.
ரிக்வேதத்தின் நான்காவது பாதம் தவிர பிறவற்றில் சரஸ்வதி நதி பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ரிக் வேதத்திற்குப் பிந்தைய நூல்கள் பல சரஸ்வதி நதியின் மறைவைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.
யஜூர் வேதத்திலும் சரஸ்வதி நதி பற்றிக் கூறப்பட்டுள்ளது. சரஸ்வதியை நோக்கி ஐந்து நதிகள் பாய்வதாகவும், பின்னர் நிலத்தில் ஐந்து மடிப்புகளோடு கூடிய சரஸ்வதி நதியாக அவை ஆகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கங்கையும் யமுனையும் சந்திக்கும் இடம் ‘திரிவேணி சங்கமம்’ என்றழைக்கப்படுகிறது. திரிவேணி என்றால் மூன்று என்று பொருள். அப்படியானால் கங்கை மற்றும் யமுனை நதிகளைத் தவிர வேறொரு நதியும் அங்கு சங்கமமாகி இருந்தால் மட்டுமே அது திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்பட்டிருக்கும்.
அப்படியானால் அந்த இன்னொரு நதி எது?
நிச்சயமாக அது தற்போது காணாமல் மறைந்து போயிருக்கும் சரஸ்வதி நதி என்றே நம்பப்படுகிறது.
ஆய்வாளர் உவாதா என்பவர் தனது ஆய்வின் மூலம் சரஸ்வதியின் ஐந்து கிலை நதிகளைக் கண்டறிந்துள்ளார். அவை, பஞ்சாப் மாநிலத்தின் திரிஷத்வதி, சட்லெஜ், சந்த்ரபாகா, விபாஸா மற்றும் ஐராவதி ஆகியவனவாகும்.
இதேபோல ஸ்க்ந்த புராணமும் சரஸ்வதி நதியைப் பற்றிக் குறிப்பிடுகிறது. பிரம்மாவின் நீர்க் குவளையில் இருந்து இந்நதி உருவாவதாக அதில் கூறப்பட்டுள்ளது. இமயத்தின் பிளாக்சா வழியாகப் பாயும் சரஸ்வதி, பின்னர் மேற்கில் கேதாராவில் திரும்பி நிலத்திற்கு அடியில் பாய்வதாகக் குறிப்பிட்டுள்ளது.
வேத காலத்திற்குப் பிந்தைய காலக்கட்டத்தில் இந்நதி பொதுவாக கக்கார் நதியுடன் அடையாளம் காணப்பட்டது. இதனை கிறிஸ்டியன் வாசன், மாக்ஸ் ம்யூலர் போன்ற ஆய்வாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சரஸ்வதி நதியானது சட்லெஜ் மற்றும் யமுனை நதிகளைத் தனது உபநதிகளாகக் கொண்டிருந்தது என்றும், புவியியல் மாற்றங்கள் காரணமாக சட்லெஜ் நதி சிந்து நதியை நோக்கியும், யமுனை கங்கையை நோக்கியும் திசை மாறியதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கடலைச் சென்றடைய நதிக்குப் போதுமான அளவு நீர் இல்லாமல் போனதன் காரணமாக தார் பாலைவனத்தில் வறண்டு போனதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
சரஸ்வதி நதியானது 1500 மைல் நீளத்திற்குப் பாய்ந்தோடி, கட்ச் பகுதியில் கடலில் கலந்தது என்பது புராணங்கள் அறிவிக்கும் உண்மை. இவ்வாறு சரஸ்வதி ஓடிய பகுதியில்தான் இன்று தார் பாலைவனம் உள்ளது.
சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சரஸ்வதி நதிக்கரையில் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முன்னதாகவே நாகரீகம் தழைத்தோங்கி இருந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பஞ்சபாண்டவர்கள் நடமாடியதாகக் கருதப்படும் இந்த நதி, கி.மு. 2 ஆயிரம் ஆண்டுவாக்கில் பூகம்பம் போன்ற இயற்கைப் பேரழிவால் அழிந்து பட்டிருக்கக்கூடும் என்று பலரும் கருதுகின்றனர்.
சரஸ்வதி நதிதற்போது செயற்கைக் கோள் வரைப்படம் ஒன்று தனது புகைப்படக் கருவி மூலமாக் சரஸ்வதி நதி இருந்ததைப் படம் பிடித்துள்ளது. சிந்து, கங்கை, யமுனை நதிகளின் படுகைகள், சமவெளிகள் போன்றவற்றை செயற்கைக்கோள்கள் படம் பிடித்ததில், பழங்காலத்தைப் பற்றிய பல்வேறு புதிய தகவல்கள் கிடைத்தன.
அதாவது ராஜஸ்தான், அரியானா ஆகிய பகுதிகளைப் படம் பிடித்ததில் முற்காலத்தில் சட்லெஜ் நதி தெற்காகவும், யமுனை நதி தென்மேற்காகவும் பாய்ந்தது தெரியவந்துள்ளது.
மேலும் வறண்ட ஆற்றுப்படுகைகளும் இந்தப் படங்களில் பதிவாகி உள்ளன. இதனைத் தொடர்ந்து ஆய்வாளர்கள் தீவிரமாக நடத்திய ஆய்வில் சரஸ்வதி ஆறு இருந்ததற்கான சான்றுகளாக இவற்றை எடுத்துக் கொள்ள முடியும் என்று தெரிவித்திருப்பது சற்று வியப்பூட்டும் செய்தி.
1977 ஆம் ஆண்டு வடோதராவில் உள்ள பல்கலைக்கழகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை ஒன்று சரஸ்வதி நதி பற்றிய புதிய தகவல்களை வெளியிட்டது.
வேதங்கள் என்பது மதம் சார்ந்தது மட்டுமல்ல; அவை வரலாற்றுப் புவியியல் பதிவுகளாகவும் கருத வேண்டியவை என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஏறத்தாழ கி.மு.6000 முதல் 3000 ஆண்டுகளில் சரஸ்வதி ஆறு பாய்ந்தோடியதை வேதங்கள் வாயிலாக நன்கு அறிய முடிகிறது என்றும், இமயமலையின் கைலாயத்தின் கீழ் மானசரோவர் ஏரியில் உற்பத்தியாகி பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் பாய்ந்ததாக அறியமுடிகிறது என்று கூறுகிறது அந்த ஆய்வுக்கட்டுரை.
தொல்பொருள் ஆய்வாளர்கள் சரஸ்வதி நதி பற்றி இருவேறு கருத்துக்களைக் கொண்டிருக்கின்றனர். அதாவது சிந்து மற்றும் கங்கை நதிகளுக்கு இடையே சரஸ்வதி நதி பாய்ந்திருக்கலாம் என்பது ஒரு சாரார் கருத்து.
இன்னொரு சாராரோ அவ்வாறு சரஸ்வதி நதி பாய்ந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும், சிந்து நதியையே வேத காலத்தவர்கள் கவிநயத்துடன் சரஸ்வதி என்று அழைத்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.
தார் பாலைவனத்தின் அடியில் சரஸ்வதி நதி மறைந்து போய்விட்டதாகவும் ஒரு கருத்து நிலவி வருகிறது.
மிஷல் தனினோஇன்னொரு ஆய்வாளர் மிஷல் தனினோ என்பவர் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம். பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த இவர் கோயமுத்தூர்வாசியாக தற்போது இருந்து வருகிறார். இவர் சரஸ்வதி நதி பாய்ந்ததாகக் கூறப்படும் அனைத்துப் பகுதிகளையும் நன்கு ஆய்வு செய்து ஆய்வுக் குறிப்புகளைத் தொகுத்து சுவாரஸ்யமாக ‘த லாஸ்ட் ரிவர்: ஆன் த ட்ரையல் ஆஃப் சரஸ்வதி (The Lost River: On the Trail of the Saraswathi) என்னும் தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளார்.
அதில், சரஸ்வதி நதி கற்பனை அல்ல என்றும், இமயமலையின் ஷிவாலிக் என்ற இடத்தில் பிறந்து, அரியானா, ராஜஸ்தான் வழியாகப் பாய்ந்து குஜராத்தில் அரபிக் கடலில் கலந்தது என்று அழுத்தம் திருத்தமாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நதிக் கரையில் வாழ்ந்த மக்கள் இதன் நீரைப் பெருமளவு பயன்படுத்தியதாலும், நிலநடுக்கம் கார்ஸ்ணமாகவும் இதற்கு நீரைத் தரும் ஆறுகள் வேறுவேறு திசைகளில் திரும்பியதாலும் நாளடைவில் நதி வற்றிச் சுருங்கிவிட்டதாக அப்புத்தகம் தெரிவிக்கிறது.
பண்டையகால தட்பவெப்ப நிலையை ஆய்வு செய்ததில், ஹாரப்பா நாகரீகம் உச்ச கட்டத்தில் இருந்தபோது அங்கு வறண்ட ஊழல் நிலை நிலவியது என்று ஏழு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இன்னும் ஏழு ஆய்வுகள் வேறு விதமாகத் தெரிவிக்கின்றன. அதாவது, அதே காலகட்டத்தில் அந்தப் பகுதியில் அதிக அளவில் மழை பெய்ததெனக் கூறுகின்றன.
ஆக, அதிக வறட்சியோ அல்லது அதிக மழைப் பொழிவோ அங்கு ஏற்பட்டு சர்வ நாசம் ஏற்பட்டுள்ளது என்பது ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் சரஸ்வதி நதி மறைந்து போயிருக்கலாம் என்ற கூற்றில் உண்மை இருப்பதாக மிஷல் தனினோ அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இஸ்ரோ நடத்திய ஆய்வுகளும் சரஸ்வதி நதி இருந்திருப்பதை உறுதிப்படுத்தத்தான் செய்கின்றன. அந்தப் பகுதியில் தொன்மை காலத்திய நதிப்படுகைகள் இருக்கின்றன என்றும், அவை பெரும்பாலும் சரஸ்வதி நதியின் படுகைகளாகவே இருக்க வேண்டும் என்றும் உறுதியாகத் தெரிவிக்கிறது இஸ்ரோ.
ஆய்வுகளும் வேதங்களும் சரஸ்வதி நதி பற்றிக் கூறினாலும், அது பூமிக்கடியில் தற்போது பாய்ந்தோடிக் கொண்டிருப்பதாக நம்பப்பட்டாலும் இவை எதுவும் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையிலேயே இருந்து வருகிறது. எனவே சரஸ்வதி நதி குறித்த மர்மம் இன்றுவரை மர்மமாகவே உள்ளது.
LikeShow more reactions

No comments:

Post a Comment