Monday, 28 May 2018

செம்போத்து பறவைக்கு ....

ஈரமண்ணை வாங்கிவாங்கிக்
கொத்தும் மண்வெட்டியென
மாறி மாறிக் காற்றைக் கொத்தும்
செம்போத்தொலி
எதிரெதிர்க் கரை நடுவே
துணியடிப்பின் ஒலி நடுவே
ஆற்றில் அடித்துச் செல்லப்படுபவனாய்
உழன்று மிதக்கிறேன்
செம்போத்தின் தொடரொலியில்
இடைவிடா வீழ்தலின்
தாம்பளத்தன்ன
செம்போத்தின்
அதிர்வொலியில்
உயிர்ப்புக்கும்
மரிப்புக்குமிடையே விரிவுகொள்கிறேன்
வீடுகளின்
பேருந்துகளின்
ரயில்களின் ஜன்னல் வழியே
கண்டதுவும்
இப்போது ஒலிப்பதும்
அதே செம்போத்தென்ற உணர்வே
ஒலிவந்து சேர்க்கும்
ஒற்றைச் செம்போத்துடையான்
என் உயிர்ப்பும் மரிப்பும்
இவ்வகை விரிவு கொள்ளுமெனில்
அத்தனை செம்போத்தும் உடைத்தவர்
உயிர்ப்பும் மரிப்பும்
எவ்வகை விரிவு கொண்டிருக்கும்
அலகிலாச் செம்போத்துடையார்
தலைவர் அன்னவர்க்குச்
சரண் நானே

No comments:

Post a Comment