Monday 28 May 2018

ஜீலம் நதிக்கரையில் இரு ஒற்றர்கள்

கி.மு 326 ஆம் ஆண்டு, குளிர் உறையும் மாதம் ஒன்றின் நள்ளிரவு, கௌரவனும், நீல்பாண்டேயும் உயரமான குன்றின் மரமொன்றின் கிளையில் ஒட்டியபடி கிடக்கிறார்கள்,நிலவு இவர்களின் தலைக்கு மேலே உலகத்தை உளவு பார்த்துக் கொண்டு மேகங்களின் இடையே மறைந்து கொள்கிறது, பனியும், குளிரும் உடலில் நடுக்கத்தை உண்டாக்கினாலும் கௌரவன் பழகி இருந்தான், பல முறை இதுமாதிரியான சூழலில் பாலைவனங்களில், அடர்ந்த காடுகளில் மாற்று அரசுகளின் நடவடிக்கை குறித்து பேரரசர் போரசுக்கு தகவல்கள் அளிக்கும் பணியை நீண்ட நாட்களாக கௌரவன் செய்து கொண்டிருக்கிறான், கௌரவனுக்கு வயது இருபத்து ஏழு, பாண்டே இன்னும் வயது இளையவன், பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் புதிய உளவுப் படையின் உறுப்பினன், பல்வேறு நம்பிக்கையான பயிற்சிகளுக்குப் பின்பு பாண்டேயை இந்தப் பணியில் தான் இணைத்துக் கொள்வதாக கௌரவன் மன்னரிடத்தில் சொன்ன போது அவர் கொஞ்சம் வியப்படைந்தார், உயரத்திலும், உடல் எடையிலும் மிகச் சிறிய மனிதனாய்க் காட்சி தரும் இவனை ஏன் கௌரவன் தேர்வு செய்தான் என்று? இருப்பினும் அரசருக்குத் தெரியும் கௌரவனின் தேர்வு எப்போதும் சரியானதாய் இருக்கும் என்று, பின்னர் ஒரு நாள் மன்னர் இது குறித்துக் கேட்ட போது கௌரவன் இப்படிச் சொன்னான், “பேரரசே, உருவத்தில் சிறியவர்களே மரங்களில் ஏறுவதற்கும், குறுகலான இடங்களில் ஒளிந்து கொள்வதற்கும் சரியானவர்கள், உடல் எடை குறைந்தவர்களின் பசி பெரிய அளவில் பணிகளில் இடையூறு செய்யாது”.
இன்று இரவு முழுதும் இப்படித்தான் கழியும், அவர்களின் பணி உளவு பார்ப்பது, இருப்பினும் இத்தனை கடுமையான சூழலில் உளவு பார்ப்பது இருவருக்கும் இதுதான் முதல் முறை, ஜீலம் நதிக்கரைக்கு அப்பால் ஒரு சதுப்பு நிலத்தில் திட்டுத் திட்டாய் சில குன்றுகள், யாரும் எளிதில் நெருங்கி விட முடியாத அடர்ந்த வனங்களைச் சுற்றி வளைந்து நெளிந்து இரைச்சலோடு விரைந்து கொண்டிருக்கும் நதியின் ஒலி, இருளை அச்சம் கொள்ள வைக்கிறது, தொலைவில் நகரும் வெளிச்சப் புள்ளிகளை கௌரவன் பார்த்து விட்டான், ஆம், அவை இயல்பாக நகரும் கிராமங்களின் நள்ளிரவுக் கூட்ட விளக்குகளோ, இல்லை நமது படையினரின் பாதுகாவல் விளக்குகளோ அல்ல, வரலாற்றின் பக்கங்களில் எப்போதும் இடம் பிடிக்கப் போகிற ஒரு மிகப் பெரிய போரின் துவக்கப் புள்ளிகள் அவை, வெளிச்சப் புள்ளிகள் மெல்ல நகர்ந்து தொலைவில் வேகம் குறைகிறது, நதியின் இரைச்சலை விழுங்கியபடி தடதடக்கின்றன குதிரைக் குளம்படிகள், உயர்ந்த அந்த மரத்தின் மீது இருந்து கொண்டு மாவீரனும் உலகை வெல்லும் படைகளை வழி நடத்தும் அலெக்ஸாண்டரின் படைகளை முதன் முதலாகப் பார்த்ததில் கௌரவனுக்கு ஒரு விதமான மலைப்பு மேலிடுகிறது, பாண்டேயின் உடல் குளிரில் நடுங்குவதைப் போலத் தெரியவில்லை கௌரவனுக்கு, இருப்பினும் மெல்லிய குரலில் பாண்டேயின் அச்சத்தை நீக்க முயற்சி செய்கிறான் கௌரவன், நமது பேரரசரின் யானைகளுக்கு முன்னாள் இந்தப் படை சின்னஞ்சிறியது என்று சொல்லி விட்டுப் புன்னகைக்கிறான் கௌரவன், கௌரவனின் முகத்தில் புன்னகை வர மறுப்பதை பாண்டே அந்த இரவின் மெல்லிய நிலவொளியில் கண்டு கொள்கிறான், மீண்டும் அமைதி குடி கொள்கிறது இருவரிடத்திலும், தீவட்டிகளின் ஒளியில் நிறுத்தப்பட்டிருக்கும் அந்த மாபெரும் படையை அருகில் காண்பது ஒரு அரிய காட்சி மட்டுமில்லை மிகுந்த ஆபத்தானதும் கூட என்பதை கௌரவன் நன்கறிவான். இருப்பினும் படை குறித்த தெளிவான செய்திகளை அவன் பேரரசர் போரஸ் இடம் கையளிக்க வேண்டும், அந்தச் செய்தியும் அதன் சாரமும் தான் நமது தேசத்தின் வல்லமையை, அதன் மரியாதையை உலகம் உள்ள வரைக்கும் பறை சாற்றப் போகும் அடிப்படை என்பதால் உயிர் பற்றிய துளிக் கவலையும் இருவருக்கும் இல்லை, அவர்கள் ஒரு எழுச்சி பெற்ற மன நிலையில் வாழ்ந்து பழக்கப்பட்டிருக்கிறார்கள், தங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியம் என்று அவர்கள் நினைக்கும் ஒரே நிகழ்வு, அவர்கள் பேரரசர் போரசை எந்த நேரத்திலும் எந்தச் சூழலிலும் சந்திக்கும் வல்லமை பெற்றவர்கள் என்பது தான்,
பலம் பொருந்திய அரேபியக் குதிரைகள், கம்போளினக் குதிரைகள் என்று முன் வரிசையில் கம்பீரமாகத் தலையசைத்தபடி குன்றுகளின் கீழிருக்கும் சம வெளியை அடைகிறது மாவீரன் அலெக்ஸாண்டரின் படை. அவை முதன் முதலாய் ஆசியாவின் ஒரு நிலப்பகுதிக்குள் நுழைகின்றன. ஏறக்குறைய 35,000 காலாட்படை வீரர்கள், 10,000 குதிரை வீரர்கள் பல ஆயிரம் கிலோ மீட்டர்களைக் கடந்து ஆசியாவுக்குள் நுழைகிறார்கள், ஏறத்தாழ ஒரு நகரம் இடம் பெயர்ந்து வருவது மாதிரியான நிகழ்வு, போரிடும் படைகளைத் தவிர படைகளுக்கு உணவு தயாரிக்கும் பணியாளர்கள், படையினரை உற்சாகம் செய்ய வந்திருக்கும் கலைஞர்கள், வழியில் வெற்றி கொண்ட நாட்டின் அடிமைகள், நிலப்பரப்பு குறித்த அறிவு மிகுந்த புவியியல் அறிஞர்கள், அலெக்ஸாண்டரின் தனி ஆலோசனைக் குழு, தளபதி கிரேடோரஸ், ஆறுகளைக் கடக்க உதவும் படகுகள், ஏனைய ஆயுதங்களைத் தாங்கி வரும் தனிப் பணியாளர்கள், இவர்கள் எல்லாம் சேர்ந்து 50,000 தென்கிழக்கு ஐரோப்பிய மனிதர்கள், நெடிய உயரமும், உயர்ந்த தோள்களும், வெளுத்த தோலும் கொண்ட மொழியறியாத மனிதர்கள், கௌரவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை, உடனடியாக மன்னரிடத்தில் தகவல்களைச் சொல்லி விட வேண்டும், இந்தப் இடப்பெயர்வு ஏனைய இடப்பெயர்வுகளைப் போல எளிதாகக் கையாளப்பட இயன்றது அல்ல, மிகுந்த கவனத்தோடும், சிரத்தையோடும் அணுக வேண்டிய ஒரு நிகழ்வு.
அடுத்த ஒரு மணி நேரம் மிகக் கவனமாக கண்களால் குறிப்பெடுக்கிறான் கௌரவன், நிலவைப் பார்த்து நேரத்தைக் கணிக்கிறான் பாண்டே, நள்ளிரவு கடந்து இரண்டு மணி ஆகி இருக்க வேண்டும், பாண்டேயும் பணியில் இணைந்து கொள்கிறான், கீழே குனிந்து மரத்தின் நிழலைப் பார்க்கிறான் கௌரவன், மரக்கிளைகளின் நிழலில் சிதறிக் கிடக்கும் நிலவொளி, தவளை ஒன்றை விரட்டிச் செல்லும் அரவம், இவை தவிர வேறொன்றும் இல்லை. இன்னும் ஒரு மணி நேரம் இருந்து விட்டு மெல்ல நகர வேண்டும், தவழ்ந்து தவழ்ந்து சமவெளிக்குச் செல்ல வேண்டும், சமவெளியில் இருந்து சரியும் மணல் பள்ளத்தின் வழியாக ஆற்றுக்குள் குதித்து மெல்லோராவில் கரை ஏற வேண்டும் என்பது தான் கௌரவனின் திட்டம், அடுத்த அரை மணி நேரத்தில் அரவம் துரத்திச் சென்ற தவளையின் கதறல் மழைக் குன்றுகளில் பட்டு எதிரொலிக்கிறது, அரவம் வெற்றிகரமாய் தனது இரையை ஆட்கொண்டு விட்டது, இந்த மாபெரும் தேசத்தின் கரைகளில் யாரும் அறியாமல் ஒரு மிகப்பெரிய ஆற்றல் பொருந்திய அரவம் கூடாரம் அடித்திருக்கிறது, இந்த அரவத்தின் வரவு நாட்டின் எதிர்காலத்துக்கும், பேரரசரின் ஆட்சிக்கும் அத்தனை நல்ல காலம் இல்லை என்பதை அந்த எளிய ஒற்றர்கள் இருவரும் அறிவார்கள், ஆயினும், தங்கள் கடமைகளில் அவர்கள் கண்ணும் கருத்துமாய் இருந்தார்கள்.
கௌரவனுக்கு இப்போது ஏதோ பொறி தட்டியது, வித்தியாசமான ஒலிகளை அந்த இரவில் அவன் கேட்கிறான், பாண்டேயைக் கீழே இறங்கி தப்பிச் செல்லுமாறு சொல்கிறான், ஆபத்துக் காலங்களில் பயிற்சியில் இருக்கும் இளையவர்களைத் தப்ப வைப்பதே சிறந்த உளவு முறை என்கிற எளிய போர்முறையை கௌரவன் நன்கறிவான், பாண்டே மலைச்சரிவில் முன்னரே கட்டி வைக்கப்பட்டிருந்த கயிற்றின் உதவியோடு சறுக்கியபடி தப்பி விட வேண்டும், பிடிபடும் நிலை உண்டானால், கௌரவன் பிடிபட்டு கூடுதல் தகவல்களை மன்னருக்குக் கொண்டு சேர்க்க முடியும், அருகில் சென்று படைகளை அவற்றின் ஆற்றலை உளவு பார்க்க முடியும் என்பதே அவனது திட்டமாக இருந்தது, குதிரைக் குளம்படிகள் மலைச்சரிவில் நெருங்கி வரும் ஓசையை ஒரு விதமான குழப்பத்தோடு கவனிக்கிறான் கௌரவன், ஒரு மரப் பல்லியைப் போல கிளைகளில் ஒட்டியபடி.அதிகமான குதிரைகள் இல்லை, மூன்றே குதிரைகள், குதிரைகளின் செந்நிற உரோமம் நிலவொளியில் பட்டு வெள்ளிக் கம்பிகளைப்போல மின்னுகிறது, ஒரு தேவதையின் கூந்தலைப் போல வாலில் செதுக்கப்பட்டிருக்கும் குதிரைகளின் கூந்தல் படைகளை அலெக்ஸாண்டர் எவ்வாறு உயிர்ப்போடு வைத்திருக்கிறான் என்பதை கௌரவனுக்கு அறியத் தருகின்றன. மரத்தின் அடியில் குதிரைகள் கணைக்கும் ஒலி மட்டுமே கேட்கிறது, அறியாத நீட்டி முழக்காத குறுகிய சொற்றொடர்களால் ஆன மொழியில் அங்கொரு உரையாடல் கேட்கிறது, இருவர் பேசி முடித்த பின்னர் கௌரவனின் மொழியில் அதட்டல் குரல் ஒன்று அவனை நோக்கி வருகிறது.
“கீழே இறங்கு, தப்பிக்க எண்ணாதே, உன்னை மேன்மை பொருந்திய மாமன்னர் அலெக்ஸாண்டர் பார்த்து விட்டார்”.
குறு வாளைக் கையில் ஏந்தியபடி கீழே குதிக்கிறான் கௌரவன், தாக்குதல் நடத்தித் தப்பிக்கலாம் அல்லது தன்னையே அழித்துக் கொள்ளலாம் என்கிற எண்ணம் கௌரவனிடத்தில் மேலோங்கி இருக்கிறது, தன்னிடம் இருந்து எந்தத் தகவலையும் அலெக்ஸாண்டர் அறிந்து கொள்ளக் கூடாது, அது தனது தேசத்தின் அழிவுக்கு வழி வகுக்கும் என்கிற வீர உணர்வு அது. கீழே குதித்த மறு நொடி கௌரவனின் கைகளை மடக்கிப் பிடிக்கிறது வலிமை மிகுந்த மாவீரன் அலெக்ஸாண்டரின் கரங்கள், உடனடியாகக் குறுவாள் பிடுங்கி எறியப்படுகிறது,
விலங்குகளால் பூட்டப்படுகின்றன கௌரவனின் கைகள். நிலவொளியில் ஜொலிக்கும் அந்த மிகப் பெரிய வீரனின் கண்களை நேருக்கு நேர் சந்திக்கிறது கௌரவனின் கண்கள், அந்தக் கண்களில் அறிவுப் பேரொளி படர்ந்து கிடக்கிறது, உலகை வெல்லும் அவன் கனவின் வீரியம் காட்சியாய் விரிந்து கிடக்கிறது கௌரவனின் கண்களில், அந்தக் கண்களை நேருக்கு நேர் சந்திக்கும் ஆற்றலை கௌரவன் வரவழைத்துக் கொள்கிறான், அலெக்ஸாண்டர் சில கேள்விகளை கௌரவனை நோக்கி வீசுகிறான், அது மொழி பெயர்க்கப்படுகிறது அந்த நள்ளிரவில், உனது அரசனின் படை பலம் என்ன? அவனிடத்தில் இருக்கும் யானைகளின் எண்ணிக்கை எவ்வளவு? தேர்ப்படையின் முக்கியத்துவம் என்ன? என்பது மாதிரியான வழக்கமான கேள்விகள் இல்லை அவை, நீ என்னுடன் இருக்க ஒப்புக் கொள்கிறாயா? என்பது தான் அலெக்ஸாண்டரின் முதல் கேள்வி, உயிர் இருக்கும் வரை மாட்டேன் என்பது கௌரவனின் பதில், எனது படையினரின் வருகை உன் மன்னனுக்கு எப்படி முன் கூட்டியே தெரியும், இந்தச் செய்தியை உனது மன்னனுக்குச் சொன்னது யார்? இது இரண்டாவது கேள்வி, மௌனம் ஒன்றே பதிலாக வருகிறது கௌரவனிடம் இதற்கு, மூன்றாவது கேள்வி உன்னோடு இங்கே இருந்த இன்னொரு மனிதன் எங்கே? மூன்றாவது கேள்வி மரத்தடியில் படிந்து கிடக்கும் காலடித் தடங்களை நிலவொளியில் உற்று நோக்கியபடி வருகிறது அலெக்ஸாண்டரிடம் இருந்து, அவன் தப்பிச் சென்று விட்டான் என்று துணிவோடு சொல்கிறான் கௌரவன்.
“நீ இந்த உலகத்தின் மிகப் பெரிய வீரனிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் என்கிற அச்சம் உன் கண்களில் காணக் கிடைக்கவில்லை” என்கிறான் அலெக்ஸாண்டர், “நான் உன்னிலும் மிகப் பெரிய வீரனிடம் பணியாற்றுகிறேன்”, “உன்னை வெற்றி கொண்டு இந்த தேசத்தின் வீர வரலாற்றை உன் குதிரைகளின் குழம்புகளில் முத்திரையாகப் பதிக்கப் போகும் போரஸின் உளவுப் பிரிவுத் தளபதி நான்” என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்கிறான் கௌரவன். அலெக்ஸாண்டர் குதிரையில் இருந்து கீழே குதிக்கிறான், அவனது வாளை அகற்றி அருகில் இருக்கும் படை வீரனிடம் கொடுக்கிறான் அலெக்ஸாண்டர், நெருங்கி மிக அருகில் வருகிறான் அலெக்ஸாண்டர், கௌரவனின் தோளில் தனது கையை வைத்து அழுத்தி அவனது உரையாடலை ஆமோதிக்கிறான் அலெக்ஸாண்டர், நான் வீரர்களை நேசிக்கிறேன், நான் வீரர்களோடு போரிடவே விரும்புகிறேன், உனது மன்னன் ஒரு தூய்மையான வீரனாய் இருப்பான் என்கிற நம்பிக்கை எனக்கு இப்போது இருக்கிறது, உன்னையே என் தூதுவனாய் அனுப்புகிறேன், நான் போரஸின் வீரத்தோடு போரிட வந்திருக்கிறேன் என்று அவனிடம் போய்ச் சொல், இந்தியாவை வெற்றி கொள்ள வேண்டும் என்கிற என் தந்தை பிலிப்பின் கனவுகளை என் கூடவே அழைத்து வந்திருக்கிறேன், அந்தக் கனவுகள் தான் என்னை வழி நடத்துகின்றன என்று உனது அரசனிடத்தில் போய்ச் சொல். உயிர் மீது அச்சம் இருந்தால் பரிசுப் பொருட்களை அனுப்பி என்னை வரவேர்க்கச் சொல், இல்லையென்றால் போருக்கான உங்கள் இந்தியச் சங்கை என் செவிப்பறைகளில் செலுத்தட்டும் உனது மன்னன்” சொல்லி விட்டுப் புன்னகைத்தான் அலெக்ஸாண்டர்.
விலங்குகளை அவிழ்த்து விடுமாறு அருகில் இருந்த படை வீரனிடத்தில் கண்களால் சொல்கிறான் அலெக்ஸாண்டர், கௌரவனுக்கு உடல் ரோமங்கள் சிலிர்த்துக் கொண்டன, மரியாதை செய்யும் வண்ணம் முழங்காலைத் தாழ்த்தி வணக்கம் சொல்கிறான் கௌரவன், அது ஒரு வீரனுக்குரிய வணக்கம், ஆயுதங்கள் அற்ற மனிதர்களை அவமதிக்காத எவனும் வீரன் என்று போரஸ் அடிக்கடி சொல்வது கௌரவனின் காதுகளில் பட்டு எதிரொலிக்கிறது. அலெக்ஸாண்டர் தனது குதிரையின் கழுத்தில் கையை வைத்தபடி அதன் கண்களைக் கூர்ந்து கவனிக்கிறான், கழுத்துக் கூந்தலுக்குள் தனது விரல்களை நகர்த்தி குதிரையை அவன் வருடிக் கொண்டிருக்கிறான், அவனது குதிரை கணைத்தபடி முன்னங்கால்களை உயர்த்தி குளம்புகளைத் தரையில் மோதுகிறது. பயணிக்க அவன் தயாராகி விட்டதை குதிரைக்கு முன்னரே உணர்த்தி விட்டான் அலெக்ஸாண்டர், அந்த மலைக் குன்று ஒரு முறை ஆட்டம் கண்டது போலிருக்கிறது, குதித்து ஏறுகிறான் அலெக்ஸாண்டர் தனது குதிரையில், குதிரை ஒரு முறை திரும்பி வேகத்தைக் கூட்டுகிறது, மலைச்சரிவில் பயணிக்கும் அந்த மாவீரனை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறான் கௌரவன்.
இப்போது கௌரவனின் மனத்திரையில் தெளிவாக ஒரு செய்தி உணர்த்தப்படுகிறது, நமது தேசம் தோல்வியை முதல் முறையாகச் சந்திக்கப் போகிறது, இந்த மாவீரன் வெறும் உடல் வலிமையை நம்பி இத்தனை தொலைவு பயணம் செய்திருக்கவில்லை, இவன் தனது அறிவையும், திட்டமிடுதலையும் நம்பிச் செயல்படுகிறவன், படைகளை நிலை நிறுத்துகிற அதே இரவில் உளவாளிகள் குறித்த இந்திய மரபுகளை இவன் அறிந்து கொண்டிருக்கிறான், எதிரியின் உளவாளி ஒளிந்திருக்கிற பழக்கப்பட்டிராத நிலப்பரப்பின் மலைக் குன்றை நள்ளிரவில் அவனே அடையாளம் காண்கிறான் என்றால் இவன் நமது நிலப்பரப்பு குறித்த ஆழ்ந்த அறிவை முன்னரே தயார் செய்திருக்கிறான், ஆழ்ந்த கனவுகளின் மீது கட்டப்பட்டிருக்கும் நம்பிக்கையை ஆயுதமாய்க் கொண்டிருக்கும் இவனிடம் போர் குறித்த அச்சமோ அவநம்பிக்கையோ இல்லை. போரிடப் போகிற நிலப்பரப்பின் மொழியை அந்த மொழி பேசும் மக்களை இவன் முன்னதாகவே அறிந்து வைத்திருக்கிறான்.ஒவ்வொரு படை வீரனிடம் மாவீரன் அலெக்ஸாண்டருக்கு இருக்கும் நெருக்கத்தை அவனது குறிப்புகள் உணர்த்துகின்றன, இரவிலும் காலடித் தடங்களை வைத்து அங்கே இன்னொரு மனிதன் இருந்தான் என்பதை உணரும் அவனது கூர்மையான பார்வை விரிந்து பரந்த அவனது அறிவை உணர்த்துகிறது. கூடவே ஆயுதங்கள் அற்ற மனிதர்களிடம் தனது வீரத்தை எடுத்துரைக்கவும், பறை சாற்றவும் அவனது கைகள் எப்போதும் தயங்குகின்றன. உயிரை உறைக்கும் குளிர் காற்றின் வீச்சை வலிமை மிகுந்த அவனது தோள்கள் சட்டை செய்யவே இல்லை, இயற்கையோடு பேசுகிற, குதிரைகளை சிலிர்க்க வைக்கிற போர்க் கலைகளை அலெக்ஸாண்டர் சிறுவனாய் இருக்கும் போதே கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும் என்பதை அவனது குதிரையில் கால்கள் உணர்த்துகின்றன.
மெல்ல நடக்கிறான் கௌரவன், வழக்கமான தனது குறிப்புகளை பேரரசரின் கைகளில் ஒப்படைக்க வேண்டும், தன்னால் இயன்ற உளவுக் குறிப்புகளைக் கொண்டு மன்னரின் திட்டமிடுதலை வலிமை செய்ய வேண்டும், ஜீலம் நதியின் கரைகளை நோக்கி கௌரவன் நடந்து கொண்டிருக்கையில் அலெக்ஸாண்டர் தனது படுக்கையில் புரள்கிறான், உளவு வேலை செய்யும் ஒரு மனிதனின் கண்களில் காணக் கிடைத்த துளியும் அஞ்சாத வீரத்தில் தான் இந்த தேசம் வெற்றி அடைந்திருக்கிறது, போரஸ் அத்தனை எளிதாக வெற்றி கொள்ளப்படுகிற மன்னன் இல்லை என்பதை உணர்ந்தபடி திட்டங்களை நோக்கித் தன் கனவுகளை விரட்டி விட்டு உறங்கச் செல்கிறான். சூரியன் இரவில் நடந்த எந்த நிகழ்வும் தனக்குத் தெரியாது என்கிற அசட்டையில் மெல்ல எழும்பி மேலே வருகிறான். அலெக்ஸாண்டரின் காலடித் தடங்களை வரலாறு தன்னுள் ஏந்திக் கொள்கிறது. ஜீலம் நதி வழக்கம் போலவே இரைச்சலோடு ஓடிக் கொண்டிருக்கிறது, வரலாற்றைத் தன் கரைகளில் அலையடித்தபடி………..
************************************************************************************

No comments:

Post a Comment