Saturday, 30 December 2017

ஸ்ருதி என்றால் என்ன?
சூப்பர் சிங்கரில் அடிக்கடி கேட்கும் வசனம் என்றால் "ஸ்ருதி கொஞ்சம் வெலகிடுச்சு"
சுருதினா என்னங்க? அது எப்புடிங்க விலகும்?
நான் ஒரு விளக்கம் தரேன்.
இசையில் எழு ஸ்வரங்கள் இருக்கிறது.
ச ரி க ம ப த நி
இன்னும் டெக்னிகலா சொன்னா ரி க ம த நி... இந்த ஐந்து ஸ்வரங்களுக்கும் இரண்டு நிலை உள்ளன. ரி1, ரி2, க1, க2, ம1, ம2, த1, த2, நி1, நி2 என்று சொல்லலாம். ஆங்கிலத்தில் இவற்றை செமிடோன்ஸ் (semitones) என்பர்.
எனவே மொத்தம் பன்னிரண்டு செமி டோன்ஸ் (ச, ரி1, ரி2, க1, க2, ம1, ம2, ப, த1, த2, நி1, நி2 or C, C# D, D#, E, F, F#, G, G#, A, A#, B) இருக்கின்றது என்பதை அறிகிறோம்.
இது என்ன பன்னிரண்டு கணக்கு என்பதை வேறு ஒரு பதிவில் டீடைலாக சொல்கிறேன்.
இப்போது ஒரு கேள்வி உங்களுக்கு...
கீழே உள்ள படத்தை பாருங்கள். ஒரு புள்ளி தான் உள்ளது. அந்த புள்ளி வழியாக செல்லும் எத்தனை நேர் கோடுகளை உங்களால் வரைய முடியும்?
How many lines can you draw which can pass through a single point?
விடை 'முடிவிலி' (infinity) ஆகும்.
இப்போது இந்த படத்தை பாருங்கள். இரண்டு புள்ளிகள் உள்ளன.
இப்போது நீங்கள் மறுபடியும் நேர்கோடு வரையவேண்டும். அந்த கோடு இந்த இரண்டு புள்ளிகளின் வழியாகவும் செல்லவேண்டும். இது போன்ற எத்தனை கோடுகளை உங்களால் வரைய முடியும்?
How many lines can you draw which can pass through two points?
விடை: ஒன்று.
ஒரே ஒரு கோடு மட்டும் தான் உங்களால் வரைய முடியும்!
அந்த கோடு தான் சுருதி.
அந்த இரண்டு புள்ளிகள் தான் 'ச', 'ப' என்னும் இரண்டு ஸ்வரங்கள்.
'ச', 'ப' என்னும் இரண்டு ஸ்வரங்களையும் ஏற்றிச் செல்லும் கோடு தான் சுருதி.
ஒவ்வொரு ஸ்வரத்திற்கும் ஒவ்வொரு அதிர்வெண் (frequency) உள்ளது. பொதுவாக 'ச' என்னும் ஸ்வரத்திற்கு '265.6 Hz' அதிர்வெண் இருக்கும்.
ஒரு பாடல் பாடப்படும்போதோ வாசிக்கப்படும்போதோ ஒரே ஸ்ருதியில் (ஒரே நேர் கோடு) இருக்க வேண்டும். சில நேரம் நாம் நம்மை அறியாமல் 'ச', 'ப' வின் அதிர்வெண்ணை மாற்றி விடுவோம். அதாவது இரண்டு புள்ளிகளின் இடம் பாரி விடும். அப்போது மாறிய இடங்களில் உள்ள புள்ளிகளை இணைக்க வேறு ஒரு கோடு தான் நாம் வரைய வேண்டும். வேறு ஒரு கோடு என்றால் வேறு ஒரு ஸ்ருதி என்று அர்த்தம். இதுவே சுருதி விலகுதல் ஆகும்.
உதாரணம் சொன்னால் இன்னும் நன்றாக புரியும்...
இரண்டு பேர் சேர்ந்து ஒரு பாடலை பாடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். இருவரும் முதலில் சரியான ஸ்ருதியில் படுகிறார்கள். நடுவில் ஒருவர், தன்னை அறியாமல், 'ச' வின் அதிர்வெண்ணை சற்று அதிகரித்து பாடி விடுகிறார். இன்னொருவர் மாற்றாமல் அதே நிலையில் பாடுகிறார் என்றால், கேட்பவருக்கு ஒரு பாடகர் ஸ்ருதியை மாற்றி விட்டார் என்பது தெரிந்து விடும்.
சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் ஒருவர் சோலோவாக பாடுகிறார், ஆர்செஸ்ட்ராவுடன் என்றால், இசைக்குழுவும், பாடுபவரும் ஒரே ஸ்ருதியில் பாட வேண்டும். பொதுவாக வாசிப்பில் ஸ்ருதி அதிகம் பிறழாது, அதுவும் கீபோர்ட் போன்ற எலக்ட்ரானிக் வாதியங்களில். எனவே பாடகர், எங்கேயாவது 'ச' அல்லது 'ப'வின் அதிர்வெண்ணை மாற்றினால், அப்போது இசைக்குழுவின் ஸ்ருதிக்கும் பாடகர் ஸ்ருதிக்கும் உள்ள வேறுபாடு தெரிந்துவிடும்.

No comments:

Post a Comment