Tuesday, 26 December 2017

தவறாகப் புரிந்து கொள்ளப்படும் தமிழ்ப் பழமொழிகள்!





 சில பிரபல தமிழ்ப் பழமொழிகள் பொருள் மாறிப்
புரிந்து கொள்ளப்படுகின்றன. வேறு அர்த்தமும் சரியாகவே பொருந்துவதால் அதைச்
சரிப்படுத்தும் சிரமத்தை அதிகம் யாரும் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் அந்தப்
பழமொழிகளின் உண்மையான வடிவமும், பொருளும் அறிந்து கொள்வதே நல்லது அல்லவா? அப்படித்
தவறாகப் புரிந்து கொள்ளப்படும் சில தமிழ்ப் பழமொழிகளைப் பார்ப்போம்.




1) தவறு: மண் குதிரையை நம்பி ஆற்றில்
இறங்காதே!


 
சரி: மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே!


மண் குதிர் என்பது மண் குவியல்.
ஆற்றின் நடுவில் தெரியும் மண் குதிர் நம்மை திடமாகத் தாங்கும் என்று எண்ணி அதை
நம்பி ஆற்றில் இறங்கக்கூடாது. அதில் கால் வைத்தால் அந்த மண் குதிர் சரிந்து நாம்
விழ நேரிடும்.




2) தவறு: கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு?

 
சரி: கைப்பூணுக்குக் கண்ணாடி எதற்கு?


பூண் என்பது ஆபரணம். கையில் அணியும் பூண்
அழகாக உள்ளதா என்று பார்க்கக் கண்ணாடி எதற்கு என்று கேட்பதாகவே பழமொழி பிறந்தது.




3) தவறு: ஆனைக்கு ஒரு காலம் வந்தால்
பூனைக்கு ஒரு காலம் வரும்.


 
சரி: ஆ நெய்க்கு ஒரு காலம் வந்தால் பூ நெய்க்கு ஒரு காலம் வரும்.


ஆ நெய்  என்பது
பசுவின் நெய். பூ நெய் என்பது பூவின் தேன்.
அதாவது பசுவின் நெய் உண்ண ஒரு காலம் வந்தால், தேன் உண்ண ஒரு காலம் வரும்.  இளம் வயதில் பசுவின் நெய் அதிகம் உண்ணலாம்.
ஆனால் வயதான காலத்தில் தேன் உண்பதே சிறந்தது. நெய் உண்ணும் காலம் வந்தால், பின்
தேன் உண்ணும் ஒரு காலமும் வரும் என்பதே இதன் பொருள்.




4) அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ
மாட்டான்.

இங்கு அடி என்பது இறைவனின் திருவடி என்பதையே
குறிக்கும். இறைவனுடைய திருவடியைப் பற்றிக் கொள். அவன் திருவடி உதவுவது போல்
அண்ணன் தம்பி கூட உனக்கு உதவ மாட்டார்கள் என்பதே உட்கருத்து.




5) தவறு: கழுதைக்குத் தெரியுமா கற்பூர
வாசனை?


 
சரி: கழு தைக்கத் தெரியும் கற்பூர வாசனை!


இங்கு கழு என்பது ஒருவகைக் கோரைப்புல்.
அந்த கழு கோரைப்புல்லில் பாய் நெய்யும் போது கற்பூர வாசனை இயல்பாக வரும். அதையே
ஆரம்ப காலத்தில் பழமொழியாகக் குறிப்பிட்டிருந்தார்கள்.




6) தவறு: கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.
நாயைக் கண்டால் கல்லைக் காணோம்!



சரி: கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம், நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்!


நாயகனான இறைவனின் சிலையைக் கல்லாகவே
கண்டால் இறைவன் தெரிய மாட்டான். இறைவனாகவே கண்டால் கல் தெரியாது. இதில் நாயகன்
என்பதே மருவி நாயாக மாறி விட்டது.

No comments:

Post a Comment