Sunday 14 October 2018

பயம் - ஓர் பால்ய அனுபவம்

முதல் அனுபவம்...
=================
{{{ஒரேடியாய் கற்பனையை ஓட்டாதீங்க .........
அப்புறம் ...ஏமாறுவீங்க }}}
முதல் பயம்:- 
******************
நாலாப்பு (நாலாம் வகுப்பு) படிக்கையில (1970-71) ....அப்போ எல்லாம் ஞாயிற்றுக்கிழமை என்றாலே காலை காடி /கூழ் / சோளக்கஞ்சி குடிச்ச பொறவு காட்டில் போய் விறகு பொறுக்கப் போகும் வழக்கம்.
எல்லோரது வீட்டிலும் ஒருவர் / இருவர் போவது எழுதப்படாத அன்றைய கால பொது விதி...
அப்போ எங்கூர்ல விறகு அடுப்பு தான் எல்லா வீட்லேயும்..
எல்லோர்கிட்டேயும் தீப்பெட்டி இருக்காது. பக்கத்து / எதிர்த்த வீட்டில் - அது பொதுவா சொந்தக்காரங்க வீடாவே இருக்கும் ....தீ கங்குகளை தேங்காய் சிரட்டையில் / கொட்டாங்கச்சியில் / பனையோலை சில்லாட்டையில் .... கடன் வாங்கி அடுப்பு பத்த வைப்பது ரொம்பவே சாதாரணம்....
ஊருக்கு அப்பால காட்ல போய் ....பனை மரக் கழிவுகள்= காவோலை,சில்லாட்டை, காய்ந்த அலவரல்,பன்னாடை....கள்ளி கட்டைகள்,காட்டு மரங்கள் = காய்ந்த சுள்ளிகள், குறண்டு செடி....இன்னபிற சேகரித்து பெரிய பனையோலை கடவத்தில் கொச்ச கயிறு வைத்து கட்டி தூக்கி வரணும்....
மேக்காத்து , ஆடிக்காத்து சமயங்களில் விறகுகட்டை கொண்டு வருவது உன்பாடு என்பாடல்ல .....பெரும்பாடு...எதிர்க்காற்றில் போகமுடியாது....இசைந்த காற்றில் சமாளிக்க முடியாது...அது பெரிய சர்க்கஸ் / கழைக்கூத்தாடி திறமை .....அது பழகிடும் ...எல்லாமே ட்ரைனிங் எடுத்தா செய்வாங்க ...செய்ய செய்ய கைவந்த கலை ஆகிடுமே .....
ஒரு ஞாயிறு...
நானும் சின்ன அக்காளும் அம்மோவோடு விறகு பொறுக்கப் போனோம்...எங்களோட ஊரின் தெற்குப்பகுதி...கொஞ்சம் அத்துவானக்காடு...ஆளரவம் ரொம்ப இல்லை....பேய் பிசாசு பயம் மதியம் & இராப்பொழுதுகளில் மட்டுமே ...அதென்னமோ உச்சிப் பொழுது
..மதியம் சரியா பனிரெண்டு மணிக்கு காத்து கருப்பு எல்லாம் வரும் ங்கறது ....என்ன நம்பிக்கையோ ...
அந்த காட்ல நல்ல காய்ந்த கள்ளிகட்டை கிடைக்கும். சைசா வெட்டி எடுப்பது ஒரு தேர்ந்த 'டெக்னிக்'...
நான் எட்டு வயது பொடியன் ....விறகு பொறுக்காமல் வீண் பொழுது போக்குவேன் ...சோளத்தட்டையில் பனையோலை காத்தாடி செய்து உடை முள்ள சொருவி ஆட்டாம்புழுக்கை 'சேப்டி' வால்வு வைத்து விளையாடிக்கொண்டே போனேன்....
இது அன்னிக்கு வெள்ளாடின ....எங்க 'குரூப்' ஆட்களுக்கு தெள்ளென புரிந்துவிளங்கும்..புரியாதவங்க ..ம் ..சரி சொல்றேன் .....கேளுங்கோ ....
பனையோலையை ஒரு அரையடி நீளம் ஒன்றிரண்டு அங்குல அகலத்தில் சைஸ் பண்ணி அதன் மத்திய பாகத்தில் துளையிட்டு நாட்டு உடைமுள்ளை அதுல சொருகி ...கூர்மையான ஊசி போன்ற பாகம் சோளத்தட்டையின் பஞ்சு போல இருக்கும் பகுதியில் சொருகினால் காத்தாடி ரெடி....மனம் கூத்தாட மகிழ்வாய் ஆடலாங்க ......
அங்கன ....அம்மாவும் அக்காவும் கள்ளிகட்டை வேட்டை....விறகு வகைகள் பொறுக்குதல் ...
நானு ஒரு வாகை மரத்து அடியில் காத்தாடி கன ஜோரா சுத்தறத ரசிச்சு லயித்துப்போனேன்...மாட்டுவண்டி மையை வேற அதுல அப்பி..... காத்தாடி சுழலும்போது வட்டமாய் ஒரு டிசைன் வருமே ...ஆஹா ..அந்த வயசில் அதாங்க மேஜிக்...மனதை கொள்ளை கொள்ளும்பரவசம் ...மாய வினோத வித்தைகள்....
அப்போ நான் அடியில நின்னு கிட்டு இருந்த வாகை மரத்துல ஒரு கிளையில் இருந்து பச்ச பாம்பு ...நல்ல நீளம் ....'சரசர' வென இறங்கியது....
திடீரென கண்டவுடன் உடம்பே வெலவெலத்துப் போச்சு...கை கால் எல்லாமே சிலீரென ஒரு சில்லுன்னு குளுருல கதி கலங்கிப் போச்சு.....
பச்ச பாம்பு விஷம் கெடையாதுன்னு அப்போ தெரியவும் தெரியாது....பாம்புன்னா படையே நடுங்கறப்போ நான் ஒரு பொடியன் பயந்ததுல வியப்பென்ன?....
இதாங்க பயத்தை என்னோட வாழ்க்கையில நானு உணர்ந்த முதல் அனுபவம்...
அடுத்து மொத திருட்டு & பொய் சொல்லி மாட்டின அனுபவம்......கேக்க ஆசையா ....
அடுத்த பதிவுல போட்றலாமே ..கொஞ்சம் பிரேக் வுட்டு போடறேன் ..
-------------------------------------------------------------------------------
நாளை கொலு பதிவு சூப்பரா ரெடி பண்ணிட்டேன் ...வெய்ட் மத்யமர்ஸ் !!!!!!
--------------------------------------------------------------------------------
பனையோலை காத்தாடி கெடைக்கல..தென்னை ஓலை தான் கெடைச்சுது .....சமாளிப்போம் ...மாதவா !!!

No comments:

Post a Comment