Sunday 14 October 2018

யுத்தம்

பலராமன் & கண்ணனின் அற்புத யுத்த சாகசம் :-
****************************************************************
அடிவானத்தில் வெள்ளி முளைத்து விட்டது. இன்னும் சற்று நேரத்தில் பொழுது விடிந்து விடும். எங்கும் கருக்கிருட்டு படர்ந்திருந்தது.
அப்போது திடீரெனப் பல நூறு கழுகுகள் சப்தமிடுவது போல் அனைவருக்கும் ஒரு பலத்த ஓசை கேட்கவே, அனைவரும் திரும்பிச் சுற்றும் முற்றும் பார்த்தனர். ஒரு மாபெரும் ராக்ஷதன் ஒருவன் என்னவென்றே இனம் காண முடியாததொரு ஆயுதத்தை எடுத்துக் கொண்டு அவர்கள் மேல் பாய்ந்தான்.
உற்றுக் கவனித்ததில் கலப்பை எனப் புரிந்தது. கழுகைப் போல் தோற்றமளித்த சில உருவங்களும் அவனைப் பின் தொடர்ந்து அவர்கள் மேல் பாய்ந்தன. வில்லாளிகளும், வாள் வீரர்களும் சடசடவென அந்தக் கலப்பையால் அடிக்கப் பட்டனர். கண்மூடித் திறப்பதற்குள் பல வீரர்கள் கீழே விழ, மற்றவர்கள் பயந்து ஓட, ஓடுபவர்கள் முன்னால் இருப்பவர்களைத் தள்ள, முன்னால் இருப்பவர்கள் கீழே விழ, அனைவரும் அவர்கள் மேல் விழ என ஒரே களேபரமாக ஆகியது.
யாருக்கும் முதலில் என்ன செய்யவேண்டும் என்று புரியவில்லை. தாக்கியவர்களோ அவர்கள் புரிந்து கொண்டு செயலாற்ற இடமும் கொடுக்கவில்லை. ரதங்கள் உடைபட்டன. குதிரைகள் கட்டவிழ்த்து விடப் பட்டன. குதிரைகள் கனைத்துக்கொண்டு அடக்குவாரின்றி அங்குமிங்கும் ஓடியதில் பல வீரர்கள் மிதிபட்டனர். சில குதிரைகள் பயத்தில் தங்கள் மேல் இருந்த வீரர்களைக் கீழே தள்ளிவிட்டுக் காட்டை நோக்கி ஓடின. உடைந்த ரதங்கள் விழுந்து வீரர்களுக்கு அடிபட்டது.
இத்தகையதொரு திடீர்த் தாக்குதலை எதிர்பார்க்காத ஜராசந்தனும், அவன் வீரர்களும் தங்களைச் சமாளித்துக் கொள்வதற்குள் இவை அனைத்தும் நடந்துவிட்டன. ஜராசந்தனும் அவன் நண்பர்களும் தங்கள் ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தயார் ஆவதற்குள்ளாகப் பலருடைய மண்டைகள் கதாயுதங்களால் உடைபடும் சப்தம் கேட்டது. கூடவே கழுகின் கீச்சுக்குரல்களும் கேட்கவே அந்த அதிகாலை கருக்கிருட்டில் தங்களைத் தாக்குவது யார் என்றே அவர்களால் அறிந்து கொள்ள முடியவில்லை.
குழப்பம் நீடித்தது. இங்கே நடந்து கொண்டிருக்கும் அதிசயங்களைப் பார்க்கும் ஆசையில் உதய சூரியனும் கொஞ்சம் பயத்துடனேயே மெல்ல மெல்லத் தன் சிவந்த கிரணங்களை வெளியிட்டான். செக்கச் சிவந்த சூரியனின் கிரணங்களின் பிரதிபலிப்பா? அல்லது அங்கே ரத்த ஆறு ஓடியதா? திகைத்த அவர்கள் அனைவரும் கண்டது அவர்களுக்கு எதிரே கையில் ஏர்க்கலப்பையோடு சத்தம் போட்டு உறுமிக் கொண்டும், கத்திக்கொண்டும், ஒரு ராக்ஷதன் போல் காட்சி அளித்த பலராமன் தான்.
பலராமனுக்குச் சற்றுத் தள்ளி மலைப்பாறை ஒன்றின் மேல் கையில் வில்லும், அம்புகளும் ஏந்திக்கொண்டு காற்றைவிடக் கடிதாக விரைந்து செல்லும் அம்புகளை ஏவிக்கொண்டிருந்தான் கிருஷ்ணன்.
ருக்மி கிருஷ்ணனை அடையாளம் கண்டு கொண்டு அவனைத் தெரியாத அனைவருக்கும் கண்ணனைச் சுட்டிக் காட்டினான். “அதோ, அவன் தான் கண்ணன்! விடாதீர்கள் அவனை!” என்று கத்தினான். அவந்தி நாட்டு இளவரசர்கள் விந்தன், அநுவிந்தன், மற்றும் கோனார்டின் இளவரசன் அனைவரும் தங்கள் கைகளில் கிடைத்த பாறைகளை எடுத்துக்கொண்டு கண்ணன் மேல் வீசி எறிந்தனர். கண்ணன் அவர்கள் மேல் ஒரு கண்ணை வைத்துக் கொண்டே தன்னுடைய வில்லையும் அம்புகளையும் கருடன் விநதேயனிடம் கொடுத்துவிட்டுத் தன்னுடைய சக்ராயுதமான சுதர்சனத்தைக் கையில் எடுத்தான்.
அது என்ன ஆயுதம் என எதிரிகள் நிதானிப்பதற்குள்ளாகக் கண்ணனின் கைகளில் இருந்து பறந்து வந்தது சக்கராயுதம். அது பறந்து வரும்போது ஒளிவீசிக் கொண்டு வந்ததையும், “ஓம்” என்ற ரீங்காரத்தையுமே கேட்டனர் அனைவரும். கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் வரும் அந்த ஆயுதத்தை அவர்கள் தடுப்பதற்குள்ளாக இளவரசன் கோனார்டின் தொண்டையை அது அறுத்துத் தள்ளியது. மீண்டும் அதே வேகத்தோடு கண்ணனின் கைகளுக்குள் சென்றுவிட்டது. இது என்ன புதுமையான ஆயுதம்?? எதிரியை வீழ்த்திவிட்டு மீண்டும் சொந்தக்காரர் கைகளுக்கே சென்று விடுகிறதே? ஜராசந்தனும், அவன் ஆட்களும் ஆயுதத்தின் புதுமையையும், வேகத்தையும், எதிரியை அது வீழ்த்திய விதத்தையும் கண்டு ஆச்சரியப் பட்டார்கள் என்றால் கண்ணனின் ஆட்களோ, ஏற்கெனவே ஆயுதம் இப்படி வேலை செய்யும் எனக் கண்ணன் சொல்லி இருந்தாலும், அதை நேருக்கு நேர் கண்ட அதிசயத்தில் ஆழ்ந்து போனார்கள்.
அநுவிந்தன் கண்ணனைக் கொல்வதற்காக தன்னுடைய வில்லில் அம்பைத் தொடுத்து நாண் ஏற்றினான். கண்ணனோ அவனைப் பார்த்து, “அநுவிந்தா, நாம் இருவரும் ஒரே குருகுலத்தில் படித்தவர்கள். நாம் சகோதரர்கள் ஆவோம். நமக்கு குரு சாந்தீபனி எப்படி ஒரு தகப்பன் ஸ்தானத்தில் இருக்கிறாரோ, அப்படியே நாம் குருகுல சகோதரர்கள். அதை மறக்காதே! நாம் ஒருவரோடு ஒரு வர் சண்டையிடுவது நம் குருவிற்கு உவப்பாய் இராது!” சொல்லிக் கொண்டே கண்ணன் சும்மா இருக்கவில்லை.
தன் சக்கரத்தை மீண்டும் ஏவினான். என்ன ஆச்சரியம்? அந்தச் சக்கரம் இப்போது அநுவிந்தனின் தலைக்கு மேலே விர்ர்ர்ர்ர்ரென்று சுழன்று கொண்டிருந்தது. தன் நடுங்கும் கைகளை மறைத்துக் கொண்ட அநுவிந்தன், அம்பை வில்லில் இருந்து எடுத்தான். உடனே சொல்லிக் கொடுத்தாற்போல் சக்கரம் கண்ணனின் கைகளுக்குப் போனது. அதைக் கண்ட ருக்மி ஆத்திரத்தோடு தன் வில்லில் இருந்து அம்பை உடனடியாகக் கண்ணன் மேல் ஏவ, கண்ணனின் சக்கரமோ அதை விட வேகமாய் வந்து அம்பைப் பொடிப் பொடியாக்கியதோடு அல்லாமல் ருக்மியின் கையில் இருந்த வில்லையும் பொடியாக்கிவிட்டுக் கண்ணனிடம் திரும்பியது.

No comments:

Post a Comment