Sunday 14 October 2018

யானையார்

ஒரு யானை பற்றிய க(வி)தை 
============================
உறையூர் குறத்தெரு திருப்பத்தில்
பேருந்து வளைகையில்
இடது ஓரம் யானை சென்றது.
கனவுக் கையால் யானையின் முதுகைத் தொட்டு
மகிழ்ந்து நெளிந்தாள்
முன் இருக்கை இருந்த பள்ளிச் சிறுமி.
அசைந்து அசைந்து ஆடிய
யானையின் பொச்சைக் கண்டு
குனிந்து சிரித்தாள் அவளின் தோழி.
யானைக்காகப் பாகனும்
பாகனுக்காக யானையும்
பிச்சைக் கேட்கிறார்கள்.
முதுகில் இருப்பவனுக்காய் முதல்வனும்
முதலில் நடப்பவனுக்காய் முனிவனும் கேட்கும் பிச்சை.
முடிவில்லா நாடகத்தின் முகவரி தரிசனம்.
ஓடாய் தெரிந்த யானையின் முகத்தில்
ஓட்டாண்டி முக விபூதிப் பட்டை
பாகன் ஓவியன் என்பதைப் பறை சாற்றியது.
பட்டையின் அக்கரை – காவிரியின்
அக்கரைச் சேர்ந்ததும் நாமம் ஆகும்.
வறுமையில் விழுந்தவனுக்கு
அடையாளமின்மையே அடையாளம்.
திங்கட்கிழமை ஆட்சியாளர் அலுவலப் படிக்கட்டில்
மனு கொடுக்க காத்திருக்கும்
காமாட்சிப் பாட்டியைப்போல்
கவலையில் இருந்தது அந்தப் பிடி.
யானையின் வலது உடம்பில்
ராக்கெட் குண்டுகளால் அடிபட்ட
காஷ்மீரியன் வீட்டைப் போல் இரண்டு கருப்புக் காயக் குழி.
அடைக்கலம் தந்த நாட்டில்
சிறு ரொட்டிக்காய் கையேந்தும் சிரியாச் சிறுமி போல்
மனித நிழலைக் கண்டவுடன் கையை நீட்டுகிறாள் யானை.
அனைவரும் வரவேற்க அவள் ஒன்றும்
ஐ நாச் செயலர் இல்லை.
பல்லுப் போன பழைய யானை முதுகு
வில்லைப் போல் வளைந்தும் நிற்கிறது.
விழும் நாள் வெகு தூரத்தில் இல்லை -அதற்குள்
அழும் நாளைக் குறைக்க ஆசைப்படுகிறது யானை.
நெகிழிக் கடையிலிருந்து சிறுமி ஒருத்தி
ஓடி வந்து இரண்டு வாழைப்பழம் கொடுத்தாள்.
என்னைப் போல் எளிதில் நெகிழ்ந்த யானை
கட்டிப்பிடிக்கத் துதிக்கை சுழற்றியது.
பாகன் கால்கள் நெற்றியை அழுத்த
நிதானமாக யானை சிறுமியை ஆசீர் வதித்தது.
வெள்ளை கோசா அணிந்த அவளின் தாய்
வெளியே வந்து யானையை வணங்கினாள்.
யானைக்காகப் பாகனும்
பாகனுக்காக யானையும்
கருணையைக் கேட்கிறார்கள்.
கண்ணீரில் மனு எழுதி
தண்ணீருக்கு உரிமை கோரும்
தஞ்சை உழவனைப் போல
சுடும் தெருவில் ஏங்கும் இரு இதயங்கள்.
யானையின் கண்ணில் படப்போகும்
மாந்தர்கள் நெஞ்சில் துளிர்க்க
கருணையின் ஈர நீர்க்கொடி
யானையின் முன்னே செல்வது என் கண்ணில் தெரிகிறது.
பேருந்துப் பாகன்
பிரேக்கிலிருந்து காலை எடுத்தான்.
யானை துளியாய் மறைந்து மனதுள்
கருணை காட்டு(ம்) யானையாய் நடந்தது.

No comments:

Post a Comment