Sunday 15 April 2018

ஜெயகாந்தனின் சபை !
-----------------------------------
BY பிரபஞ்சன்
------------------------------------------------------------------------------------------------------------------
எழுத்தாளர் சுப்ரமணிய ராஜு தொலைபேசியில் கூப்பிட்டு, 'இன்னிக்கு சாயங்காலம் சபாவுக்குப் போறோம், வாங்க’ என்றார்.
'சபா?’
'ஜெயகாந்தனின் ஆழ்வார்பேட்டை சபைக்குத்தான்.’ அப்போதெல்லாம் (1979...களில்) ஒவ்வொரு நாள் மாலையிலும் ராஜுவை அவருடைய (டி.டி.கே) கம்பெனியில் சந்திப்பது, பிறகு மாரீஸ் ஹோட்டலில் மது  அருந்துவது மற்றும் உண்பது வழக்கம்.
தமிழ் இலக்கியம் பற்றி உரையாடுவது, படித்ததைப் பகிர்ந்துகொள்வது, எழுதியதைப் படித்து விமர்சிப்பது, விமர்சனத்தை எதிர்கொள்வது என்கிற இலக்கியப் பயிற்சியைக் கடுமையாக நான் மேற்கொண்டிருந்த காலம் அது. ஜெயகாந்தன் எழுதியவற்றில் அநேகமாக அனைத்தையும் நான் படித்திருந்தேன். அவர் மேல் எனக்கு பெரும் மரியாதை இருந்தது. அவரை நேரில் சந்திக்கப்போகிறோம் என்பதில் எனக்குக் கிளர்ச்சி எதுவும் இல்லை; ஆனால் மகிழ்ச்சி ஏற்பட்டது. என் கல்லூரிப் பருவத்திலேயே (1964-1970) தமிழின் பெரிய ஆளுமைகளான
தி.ஜானகிராமன், எம்.வி.வெங்கட்ராமன், கரிச்சான் குஞ்சு, கிருத்திகா எனப் பலரும் எனக்குப் பரிச்சயமாகி இருந்தார்கள். இன்னும் சிலரும்கூட.

எழுதுபவர்களை புத்தகத்தில் மட்டுமே சந்திப்பது நல்லது என்பதை என் அனுபவம் எனக்குக் கற்றுத்தந்திருந்தது.

தேவர்களைச் சந்திக்கப்போகிறோம் என நினைத்துக்ªகாண்டு போனால், அகந்தைப் பேய்களும் ஆணவப் பிசாசுகளும் முன்வந்து வெட்கமற்று ஆடுவதைக் கண்டு நான் சலித்துப்போயிருக்கிறேன்.

ஜெயகாந்தன், அப்படியான உணர்வை எனக்கு ஒருபோதும் ஏற்படுத்தியது இல்லை.

சபை என்பது, ஒரு வீட்டு மாடி. ஒரு பெரிய மேசை. அதைச் சுற்றி ஆறு ஏழு நாற்காலிகள். வாசலைப் பார்த்து, நடுவாந்திரமாக ஒரு நாற்காலி. அது ஜே.கே-யின் ஆசனம். எனக்கும் ராஜுவுக்கும் நாற்காலிகள் தரப்பட்டன. ராஜு, விலை உயர்ந்த விஸ்கி பாட்டில் ஒன்றை ஜே.கே. முன் குரு காணிக்கையாக வைத்தார். அதற்கு முன்பே சபை களைகட்டி இருந்தது. மூன்று நான்கு பேர்களின் முன் இருந்த டம்ளர்கள் காலியாகி இருந்தன.

கஞ்சா நிரம்பிய சிலும்பி வலம்வந்துகொண்டிருந்தது. ஜே.கே. சிலும்பியைச் சுவாசக் கேந்திரம் முற்றும் நிறைக்கப் புகையை இழுத்து 'தம்’ கட்டிக் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவிட்டபடி சிலும்பியை என்னிடம் நீட்டினார். நான் நன்றி கூறி மறுத்துவிட்டேன். என்னவோ... கஞ்சா பழக்கம் என்னைத் தொற்றவில்லை.

'என்னப்பா இது?’ என தனக்கு முன்னால் ராஜுவால் வைக்கப்பட்ட தட்சணையைப் பார்த்துக் கேட்டார். விஸ்கியின் தரம், உலகப் புகழ், அதன் மேன்மை முதலானவற்றை விரிவாக எடுத்து விளம்பினார் ராஜு. எல்லாவற்றையும், கஞ்சாவால் சிவந்த கண்களோடு அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த ஜே.கே., 'இருக்கட்டும். இருந்தாலும் நம்ம கடா மார்க் சாராயத்துக்கு இது இணையாகுமோ?’ எனத் தீர்ப்பு வழங்கினார்.

உடனடியாக ஒருவர், பையை எடுத்துக்கொண்டு சாராயம் வாங்கப் புறப்பட்டார். இதுபோன்ற பணிகளுக்குத் தம்மை ஒப்புக்கொடுத்த சிலர் சபை நிழலில் இருந்தார்கள். கஞ்சாவைத் தேய்த்துத் தேய்த்து உள்ளங்கையில் குழிவிழுந்த மனிதர் ஒருவர் அங்கே இருந்தார்.

இவர்கள் எல்லாம் ஜே.கே-விடம் இருந்து என்ன பெற்றார்கள்?

ஜே.கே. இந்தச் சபைக்கு என சில ஒழுக்கங்களை நிர்மாணம் செய்திருந்தார். சபை மேசையில் வைக்கப்பட்ட எந்தப் பொருளையும் நாற்காலிக்காரர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். சாராயம் முதல் நொறுக்குத் தீனிகள், விலை உயர்ந்த விஸ்கி எதுவானாலும், விரும்புபவர்கள் சிகரெட் புகைக்கலாம். கஞ்சாவையும் பகிர்ந்துகொள்ளலாம்; குடிக்கலாம். அவரவர் பாத்திரத்தில் மதுவை வேண்டிய அளவு நிரப்பிக்கொள்ள அனைவருக்கும் உரிமை உண்டு.
ராஜு கொண்டுவந்திருந்த விஸ்கியை மேசையைச் சுற்றி இருந்த நண்பர்கள் அனைவருக்கும் ஜே.கே-வே டம்ளர்களில் ஊற்றினார். ராஜு மனம் பதைத்தது. குருவுக்கு மட்டுமே என வாங்கி வந்த இத்தனை விலை உயர்ந்த மதுவை மேசைக்குத் தருகிறாரே! இது ஜே.கே. வழக்கம். எந்த அன்பளிப்பையும் தனக்கு என அவர் வீட்டுக்கு எடுத்துச் செல்வது இல்லை.
சபை என்பது கேளிக்கைக்கான இடம் என்றே பலரும் நினைத்தார்கள். போதையை நோக்கமாகக்கொண்டவர்கள் அங்கே யாரும் இல்லை. எல்லோருமே, அவரவர் அளவில் படைப்பாளராகவே இருந்தார்கள். உண்மையில், அந்தக் காலங்களில் ஜெயகாந்தன் நிறைய எழுதிக்கொண்டிருந்தார். அந்தக் கதைகளின் மூலம் அவர் நிர்வாகம் செய்ய விரும்பிய கருத்துக்கள், தத்துவங்கள் ஆகியவற்றைச் சொல்லி, விவாதித்து, தனக்குத்தானே ஒரு தெளிவை ஏற்படுத்திக்கொள்ளவே அவர் சபையை ஓர் இடமாகப் பயன்படுத்தினார். பகல் முழுக்க எழுத்து, மாலையில் எழுதப்போகிறவற்றின் உள்ளீடுகள் பற்றிய சிந்தனை என்பதாக அவர் வாழ்க்கை அன்று இருந்தது.
சிந்தனைகளின் ஊடாக அவர் மது அருந்தினார்... குடித்தார் என நான் சொல்வது இல்லை. அவர் சிந்தனையின் தாக்கம், உரையாடல் இல்லை. பேசுவது, பேசுவதைக் கேட்பது என்பது அவர் வழக்கம் இல்லை. அவர் மட்டுமே பேசுவதுதான் வழக்கம். சபைக்கு வருபவர்களை பார்வையாளர்களாக மாற்றி பிரசங்கம்புரிவது அவர் பாணி. 1975-க்குப் பிறகு அவர் எழுதாமல்போனதற்கு, எதிர்ச் சிந்தனைகளுக்கு இடம்கொடுக்க மறுத்த அவரது போக்கும், ஒரு துரதிர்ஷ்டமான காரணம்.
சபையில் ஒருமுறை அவர் சொன்னார்... 'விமர்சனம் என்பது என்ன தெரியுமா? ஒருவருடைய எழுத்தை விமர்சையாக எடுத்து உரைப்பது. அதைத்தான் நான் விமர்சனம் என ஒப்புக்கொள்வேன்.’
இலக்கியம், சினிமா எனப் பல விஷயங்கள் பற்றியும் கூர்மையான விமர்சனம் செய்த அவர், தன் மேல் வைக்கப்பட்ட விமர்சனங்களை அக்கறையோடு ஏற்றுப் பரிசீலிக்கவில்லை.
ஜெயகாந்தன், ஒரு சுயசிந்தனையாளர். எதையும் படித்து அவர் தன் கருத்துக்களை உருவாக்கிக்கொள்ளவில்லை. மாறாக, மக்கள் என்ற உயிர்த் திரளுக்கு எது நன்மை பயக்கும் என யோசித்து, தொடக்கக் காலத்து கம்யூனிஸ்ட்கள் தந்த வெளிச்சத்தில் தன் எழுத்து உருவங்களை உருவாக்கினார். 'அக்கினிப் பிரவேசம்’ அந்தக் காலத்தில் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அதுபற்றி புதிதாக சபைக்கு வந்த ஒருவர், அவர் கதையை உயர்த்தி, அவர் கதைக்கு எதிராக அல்லது மாற்றாக ஒரு பெண் எழுத்தாளர் எழுதிய கதையைக் கடுமையாகப் பேசத் தொடங்கினார். அதுவரைக்கும் அமைதியாக இருந்தவர், அந்தப் பெண் எழுத்தாளர் வாழ்க்கை பற்றி பேசத் தொடங்கியதும் உடனே நிறுத்தச் சொன்னார்; சபையைவிட்டு வெளியேறவும் சொன்னார்.
ஜெயகாந்தன், சாதனை எனச் சொல்லத்தக்க பலவற்றைச் செய்திருக்கிறார். தமிழ் மாதிரி மூடுண்ட சமுதாயத்தில் ஆண் - பெண் குறித்த பல திறப்புகளை அவர் செய்தார். அந்தரங்கம் என்பது அவரவர்க்கு உரியது, அதில் மற்றவரின் தலையீடு வன்முறை என அவர்தான் சொன்னார். தந்தையின் மற்றொரு பெண் உறவை விசாரணை செய்ய மகனுக்கும் உரிமை இல்லை என அவர் கதையால் சொன்னார். ஒரு காமுகன் சேற்றை வாரி வீசினான் என்பதால், அந்தப் பெண் கெட்டுப்போக மாட்டாள் என அவர் எழுதினார். இலக்கியத்துக்குள் அன்று வரை இடம் காணாத விளிம்பு மக்கள் அவர் கதைகளில் பேரிடம் பெற்றார்கள். அங்கீகரிக்கப்பட்ட பழைமைக்கு எதிராக, அங்கீகரிக்கப்படவேண்டிய புதுமைகளை அவர் கதைகள் சொல்லின. 1975-ம் ஆண்டு எழுதுவதை நிறுத்திய ஓர் எழுத்தாளனை, 2015-ம் வருடம் வரை சமூகம் பேசுகிறது என்பதே அவர் எழுத்தின் பெருமைக்கு சான்று. இன்னும் பல ஆண்டுகள் பேசும்!
சபையில் பல சமயங்களில் பழைய தமிழ் இலக்கியம் பற்றிப் பேச்சு திரும்பும். சித்தர்கள் பாடலில் ஜெயகாந்தனுக்குப் பிரேமை அதிகம். பல பாடல்கள் சொல்வார். ஆழ்வார்கள், கம்பன், பாரதி கவிதைகளில் நல்ல புலமை அவருக்கு உண்டு. மார்க்சியமே அவர் முதல் அறிமுகம் என்றாலும், காந்தியத்தில் அவருக்குப் பற்று மிகுந்திருந்தது. இந்திய, குறிப்பாக தமிழ் அருளாளர்கள் வள்ளலார், தாயுமானவர் மற்றும் பாரதி போற்றிய மெய்ஞானத்தோடு மார்க்சியத்தை இணைக்க முடியும் என நம்பினார். இந்த நம்பிக்கைக்குச் சற்றும் குறையாமல், இந்திரா காந்திக்கும் அவரது பிள்ளைகளுக்கும் பிரசாரம் செய்தார். அதைப் பற்றிய குற்றவுணர்வு அவரிடம் ஒருபோதும் இல்லை. தான் நம்பியதை, உணர்ந்ததை எந்தச் சூழலிலும் எவருக்கு முன்னும் வைக்கத் தயங்காதவர் ஜே.கே.!

No comments:

Post a Comment