நான் ஐந்து ஆறாம் வகுப்புகளில் படிக்கும்போதெல்லாம் எங்கள் ஊரில் ஒவ்வொரு தெருவிலும் வாசலில் திண்ணை வைத்துக் கட்டப் பட்ட வீடுகளே அதிகம் இருந்தன.
திண்ணைகள் பெரும்பாலும் வேறு எதற்குப் பயன்பட்டதோ என்னவோ சாயந்திரம் ஆறு மணியானால் கதை கேட்கக் கூடும் சின்னப் பிள்ளைகளுக்கு அது ஒரு பட்டறை மாதிரி தான் !!!
தெருவுக்குத் தெரு இப்படிப் பட்ட கதை சொல்லிக் களங்கள் அந்த நாட்களில் எங்கள் ஊரில் நான்கைந்து இருந்தன ,சுமார் முன்னூறு வீடுகளில் எண்ணி ஐம்பது அல்லது அறுபது சிறுவர் சிறுமிகள் அப்போது இருந்தோம் என்று வைத்துக் கொண்டால் ஒவ்வொரு கதை சொல்லிக் களத்திலும்(திண்ணை தான்!!!) பத்துப் பதினைந்து பேராக சேர்ந்து உட்கார்ந்து கதை கேட்டிருப்போம் என்று நினைக்கிறேன்.
இப்போது நினைத்துப் பார்த்தால் அது ஒரு கோலாகலம் தான்!!! ஆறுமணிக்குக் கதை கேட்க மதியம் சாப்பாடுப் பீரியட் முடிந்ததிலிருந்தே நேரத்தைப் பிடித்துத் தள்ளிக்கொண்டே இருப்போம் .அது வேறு சதி செய்யும்! அப்போது பார்த்து சீகிரமே கடைசி பெல் அடிக்கும் நேரம் வரவே வராது...அது பாட்டுக்கு மந்தமாக நேரம் போவதைப் போல் இருக்கும்.
எப்போதடா சாயந்திரம் ஆகும்?
எப்போதடா பள்ளியில் கடைசி பெல் அடிப்பார்கள் ?
எப்போதடா வீட்டுக்குப் போய் புத்தகப் பையை வீசி விட்டு ஒரு பேருக்கு கையைக் காலைக் கழுவிக் கொண்டு எதையோ கொறித்து விட்டு கூட்டாளிகளுடன் வீதிக்கு ஓடுவோம் என்று இருக்கும்!!!
வீதியில் இறங்குவதோடு முடிந்து விடுமா என்ன?
இன்றைக்கு எந்தத் திண்ணையில் கதை சொல்பவர்கள் உட்காருவார்கள் என்றும் தெரிந்து கொள்ள வேண்டுமே?
பொதுவாக அப்போதெல்லாம் அவரவர் அப்பா ...அம்மாக்களை விட கதை சொல்வதற்கென்றே ஒரு சில தாத்தா பாட்டிகள் இருப்பார்கள் ஊர் ஊருக்கு!!அல்லது கல்யாணத்திற்கு காத்திருக்கும் ஒரு சில அக்காக்கள் இருப்பார்கள்!!!அதுவும் இல்லையெனில் கண்டிப்பாக ஒரு பெரிய பையன் அல்லது பெரிய பெண் இருப்பாள்
(பெரிய பையன்..பெரிய பெண் என்றால் வேறு ஒன்றும் இல்லை அவர்கள் எங்களை விட கொஞ்சமே கொஞ்சம் (ஒரு மூன்று அல்லது நான்கு வயது மூத்த பெண் அல்லது பையன்) பெரியவர்கள் ஆனால் இப்படிக் கதை கேட்பதில் சீனியர்கள்!!! அவ்வளவே?!
எங்கள் ஊரில் ,அந்தமான் தாத்தா வீட்டுத் திண்ணை தான் ரொம்ப பேமஸ் கதை கேட்க நாங்கள் கூடும் இடங்களில் அது தான் டாப் .அங்கே தான் பேமஸ் கதை சொல்லிகள் "சரசக்கா ...சீரங்கபுரம் முருகன் ,ஜோதி அத்தை...கறுப்பி மீனாச்சி இவர்களெல்லாரும் ஆஜர் ஆவார்கள் .
இவர்களில் ...
சரசக்கா மாயாஜாலக் கதைகள் சொல்வதில் தேர்ந்தவள் ,அவள் கதை சொல்லிக் கொண்டிருக்கும் பொது சில நேரம் நமக்கே பயம் வந்து விடும் "எங்கே எந்த மந்திரவாதி வந்து நம்மைத் தூக்கிக்கொண்டு போய் விடுவானோ என்று?)"நான் உத்தம பத்தினி என்றால் ஏய் தொடையே நீ இரண்டாகப் பிளந்து இந்த மீன் முள்ளை எல்லாம் யார்கண்ணுக்கும் தெரியாமல் மறைத்து விடு "என்று குத்துவிளக்கு(கதை நாயகி ) தன் இறந்து போன தாயை நினைத்துக் கொண்டு ஆணையிட்டால் அவளது தொடை இரண்டாகப் பிளந்து அவள் சொன்னதை செய்யும்...சரசக்கா இதை நமக்கு கண்கூடாகப் பார்க்க வைப்பது போலவே சன்னதம் வந்து பேசுபவர்கள் போல கதை சொல்வாள் .
சரசக்கா இப்போது எங்கிருக்கிறாளோ ? அவள் சொன்ன கதை மட்டும் நெஞ்சோடு நீங்காமல்!!!
முருகன் சொல்லும் கதைகள் பெரும்பாலும் ஹீரோ ...கொள்ளைக் கூட்டம் ..இந்த வகையறாக்கள் தான் .கண்டிப்பாக கடைசியில் ஹீரோ கொள்ளைக் கூட்டத்தை ஜெயித்து ஊர் மக்களைக் காப்பாற்றுவார் .ஒரே ஒரு கதையை முடிக்க அவனுக்கு பத்துப் பதினைந்து நாட்கள் கூட ஆகும்(பாதர் ஆப் மெகா சீரியல் வேர்ல்ட் என்று அவனுக்குப் பட்டம் கொடுத்தால் கூட தவறே இல்லை).
T.v (TELEVISION)கூடப் பிரபலமில்லாத அந்தக் காலத்தில் அவன் எங்களுக்கு இடையில் உணவு இடைவேளை எல்லாம் கூட விட்டுக் கதை சொன்னான் என்றால் மெகா சீரியல் தந்தை என்ற பட்டம் தரலாம் தானே?
ஜோதி அத்தை நிறைய சாமிக் கதைகள் சொல்லுவார்.ஆயிரம் கண் மாரியம்மாள் கதை,நீலி கதை...கருப்ப சாமி வேட்டைக்குப் போகும் கதை...அய்யனார் கதை...இப்படி நிறைய!
கருப்பு மீனாச்சிக்கு எம்.ஜி.ஆர் என்றால் கொள்ளைப் பிரியம் .அவளது கதைகளில் எல்லாம் எம்.ஜி.ஆர் தான் ஹீரோ ...வில்லன் பெரும்பாலும் அசோகன் தான்(நம்பியாரை அவளுக்குப் பிடிக்காதோ என்று எங்களுக்கெல்லாம் சந்தேகம்) அப்போது அவளிடம் இதைக் கேட்கவில்லை இப்போது அவள் எங்கிருக்கிறாளோ?
கதை சொல்லிகள் என்று தனியாக ஆட்களைத் தேடாமல் எங்களுக்குள் வாழ்ந்து இன்று எங்கேயோ இருந்தாலும் அவர்கள் எல்லோரையும் எதோ சில சமயங்களில் நினைக்க வைப்பது அவர்கள் சொன்ன கதைகள் தானே!!!
ஞாபகம் வந்ததால் இதைப் பதிந்தேன் .
No comments:
Post a Comment