அமாவாசை. வெள்ளிக்கிழமை. இரவு. மண்டை ஓடு.
இந்த நான்கு வார்த்தைகளைக் கொண்டு இது ஒரு பயங்கரமான பேய் கதை என்று நீங்கள் ஊகித்திருந்தால்........ நான் உங்களுக்குத் தமிழ் வாசிக்கத்தெரியும் என்று மட்டும் ஒத்துக்கொள்கிறேன். பத்தில் எட்டு பேய்க்கதைகள் இப்படித்தானே துவங்குகின்றன. நாமும் பழகின வழியிலேயே போவோம். அப்போதுதான் அதிக பயம் இருக்காது.
உங்களுக்குப் பேய் கதைகள் மேல் நம்பிக்கை இருக்கிறதா ? சும்மாதான் கேட்டேன். தொடர்ந்து படியுங்கள்.
குப்பையோடு குப்பையாக இருளில் அந்த மண்டை ஓடு விகாரமாக வாய் பிளந்து கிடந்தது. கட்டடம் கட்ட அஸ்திவாரம் தோண்டின போது தட்டுப்பட்டதாம். அதன் உடலில் இருந்து பிரித்துக் குப்பையில் வீசிவிட்டிருக்கிறார்கள். சுடுகாட்டின் மேல் எழும்பிக் கொண்டிருக்கும் கட்டடம். எங்கள் துறைக்காக அரசுப் பணத்தில் புதுசாய் விரசாய் எழும்பிக் கொண்டிருக்கிறது.
நேராக அந்த மண்டை ஓட்டின் பார்வை படும் திசையிலேயே கட்டடச் சுவரில் கரியில் எழுதியிருக்கிறது அந்த வாக்கியம்.
பத்தடி தூரத்தில் வாட்ச்மேன் கைலாசம் தாத்தா கடிகாரத்தில் மணி ஒன்றடிக்கவும் கொட்டாவி துரத்திவிட்டுத் தன் நாற்காலியில் அமர்கிறார். இரண்டு கம்பளிகள் கொண்டு இருக்கை சூடாக்கிய உலோக நாற்காலி. தன் 74 வருஷங்களையும் கோவையிலேயே கழித்தவர் கைலாசம். இதே நிலம் சுடுகாடாய் இருந்தபோது இரண்டு மூன்று இழவுகளுக்காக வந்திருக்கிறார், கொலை வழக்குகள் உட்பட. வாலிபத்தில் கத்தி பிடித்த கை, இப்போது ஒரு கம்பைத் தரையில் தட்டிக் கொண்டு கடனே என்று காவலுக்கு உலாத்திக்கொண்டிருக்கிறது.
சுற்றுப்பட்டுப் பேய்க்கதைகள் அத்தனையும் , சிலபல பேய்களும் கூட அவருக்கு அத்துப்படி. அவரின் பேரன் ஒருவன் எப்போதாவது வரும்போது எங்களிடம் மட்டையும் பந்தும் கடன் வாங்கி தப்புத்தப்பாக விளையாடுவார். அப்படித்தான் பழக்கம். விடுதிக்குப் பக்கத்தில் எழும்பிக் கொண்டிருக்கும் புதுக் கட்டடத்தின் பேய் வரலாற்றை எங்களுக்கு அவர்தான் சொன்னார். இதுவரை ஏழெட்டு மண்டை ஓடுகள் தட்டுப்பட்டிருக்கிறதாம். இதில் ஏதோ தப்பு நடக்குதென்று கிட்டத்தட்ட தினமும் எங்களிடம் சொல்கிறார்.
"கடலைக் காட்டையும், களத்துமேட்டையும் கட்டடமாக்கலாம். புல்லு பூண்டால பெரச்சினை வராது. இப்பிடி சுடுகாட்டில தூர் வாரினா புதைச்சு வெச்சதுக்கெல்லாம் ரோஷம் வந்துருமே. என் கெரகம்..... நானே பாக்கப் பொதைச்சதுக்கெல்லாம் நானே காவல் காக்க வேண்டியிருக்கு. ராவைப் போல அடிக்கடி வெளியே வராதீங்க தம்பீ இந்தப் பக்கம்..."
அவரின் கம்புச் சத்தம் காற்றில் மேலேறி வரும்போது அவரின் புலம்பல் சத்தம்தான் கேட்கிறது. நிலவற்ற நிர்மல இருளின் கீழ் மொட்டை மாடியில் வரிசையாகப் பாய் போட்டுப் படுத்திருக்கிறோம் நாங்கள். நான், ராகேஷ், அர்ஜுன், சித்தார்த், அருள். இன்னும் கொஞ்ச தூரங்களில் ஆங்காங்கே இன்னும் சில பல போர்வைகள்.
நான் மல்லாந்து பார்த்து இருளை வெறித்தவாறே கேட்டேன், " ஏன் மச்சி, இந்தப் பேய் கதை எல்லாம் பாதி சுடுகாட்டிலயும் மீதி சூசைடிலயும் தான் வருதில்லே ? "
இருளே இறங்கி வந்து அசரீரியாய்ப் பேசுவது போல ராகேஷின் குரல் வந்தது, "ஆமாண்டா..நீதான் மச்சி புதுசா ஏதாவது எழுதணும். இங்கேயே பாரு.. முதல் வருஷம் அந்தத் தற்கொலைக் கேசு.. ரெண்டாம் வருஷம் அந்த பாத்ரூம் பேய். அதுவும் சூசைடு. இப்போ கடைசியா சுடுகாட்டுக் கதையும் கேட்டாச்சு இங்கே."
"இது போருடா ராகேஷ். அந்த ரெண்டு கதைலயாவது பேய்க்கு ஒரு முகம் இருந்துச்சு. சுடுகாடுன்னு சும்மா சொன்னா ஒரு பயமே வரல. கிழடுகட்டைங்களதான் மூடியிருப்பாங்க. பாப்போம். நீ எழுதி வெச்சதுக்கு ஏதாவது யூத்தா ஒரு பேய் பதில் சொல்லுதான்னு", சித்தார்த்தும் கலந்து கொண்டான்.
எழுத்துப் பிழையோடு அந்தக் கட்டடத்திலிருந்த கரி வாக்கியம் ராகேஷ் எழுதினதுதான். ஒரு மணி நேரத்துக்கு முன்னால் அவனும் நரேனும் நாலைந்து பேரிடம் பந்தயம் கட்டி, சரியாகப் பன்னிரெண்டு மணிக்கு, கைலாசம் தாத்தா வைகை ஹாஸ்டல் பக்கம் போன நேரத்தில் மறைந்து சென்று அந்த மண்டை ஓட்டுப்பேய்களுக்கு எழுதி வைத்து வந்த தகவல். பேயெல்லாம் புளுகு என்றும் தனக்குப் பயம் இல்லை என்றும் நிரூபிக்க நடந்த பந்தயம்.
தொடர்ந்து பேச்சும் அரட்டையும் பேய்களையே புரட்டி வந்தது. பேச்சு கொஞ்சம் சூடு பிடிக்கும் நேரத்தில் சடாரென்று அருள் கூவினான, "டேய்.. அங்க பாரு.. எரியுது"
தூரத்தில் மருதமலை உச்சியில் கொழுந்து விட்டு எரியும் ஜுவாலை தெரிந்தது. முருகன் படிக்கட்டுகள் பாதி மலையிலேயே முடிந்துவிடும். அதற்கும் மேலே யாரும் அறியாத மலை உச்சிக்காடுகளில் பல இரவுகள் இபடிப் பற்றி எரிவதைப் பார்த்திருக்கிறோம் எங்கள் மொட்டை மாடியிலிருந்து. சிலர் காட்டுத்தீ என்கிறார்கள். அங்கே ஆதிவாசிகள் இருப்பதாகவும் ஒரு பேச்சு உண்டு. கைலாசம் மாதிரி ஆட்கள் மூலம் சில பேய் விளக்கங்களும் உண்டு. இந்தப் பேச்சின் தொடர்ச்சியோடு, பற்றி எரியும் நெருப்பைப் பார்க்கையில், அந்த மண்டை ஓட்டுப் பேய்களுக்கு ரோஷம் வந்துதான் விட்டதோ என்றொரு சிறு பிரமை ஏற்பட்டது.
நான் ராகேஷிடம் கேட்டேன், "மச்சி இது ஒரு வேளை நீ எழுதினதுக்குப் பேய் சொல்ற பதிலோ? அந்த நெருப்பிலே ஒரு மண்டை ஓடு ஷேப் தெரியல உனக்கு?"
அப்போதுதான் சட்டென்று அவனும் கவனித்தான். எரியும் ஜுவாலையில் ஒரு மண்டை ஓட்டு உருவ இருள் அப்பட்டமாகத் தெரிந்தது. "டேய் சிவா.. நெஜமா மச்சி. அங்க பாரேன் தெரியுது. ஆனா ஏண்டா இங்க எழுதினா அங்க எரியுது ?"
அவன் பதிலைக் கிழித்தபடிக்கு ஒரு மின்னல் சடாரென்று அருகில் பாய்ந்தது. அருள் மறுபடியும் கூவினான், "டேய் ராகேஷ்.. இதோ வந்திருச்சு பாரு பக்கத்துலயே பதில்"
"ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி உன்னை கவனிச்சிட்டிருக்கு மச்சி.. உன்னைப் பேய் பொறாண்டப் போகுது பாரு" நான் இன்னும் கொஞ்சம் ஆழம் கூட்டி அமைதியாகச் சொன்னேன். ஒரு சின்ன நெருக்கடியான அமைதி தொடர்ந்தது.
அர்ஜுன் தான் கலைத்தான். "டேய் சும்மா உளறாதீங்கடா. தூங்குங்கடா மூதேவிங்களா" என்று எரிச்சலாகப் பேசி விட்டுப் போர்வைக்குள் போய்விட்டான். ஆனால் அவன் இப்போதைக்குத் தூங்கமாட்டான். இப்படி நான்கு பேர் பேசிக் கொண்டிருக்கையில் நான் மட்டும் தூங்கப் போகிறேன் என்று நடுவில் போர்வைக்குள் போனவன் எவனும் என்றும் தூங்கிப் போனதாகச் சரித்திரமே இல்லையே.
மீண்டும் இரண்டு மின்னல்கள் நெருங்கித் தெறித்தன. குளிரும் இருளும் போட்டியிட்டுக் கூடின. எந்த நட்சத்திரமும் கண்ணில் படவில்லை. அவ்வப்போது காற்று வந்து வேகமாக அறைந்து போனது.
"சித்தார்த்து.... இது ஜென்மம் X, மர்ம தேசத்துல வர்ற மாதிரியே இருக்குல்லடா?"
அவன் பேசவில்லை. எவனுமே பதில் பேசவில்லை. நிசப்தம் இருளில் பெருகித்தெரிந்தது.
"மச்சி மச்சி எனக்கொண்ணு தோணுதுடா" - மூன்றாம் முறையாக அருள் கூவினான். இம்முறை அவன் அமைதியைக் கலைத்த விதம் கொஞ்சம் திகிலாகத்தான் இருந்தது. திகிலோடே தொடர்ந்தான், "எங்க ஊருல இதே மாதிரி மொட்டை மாடியில தூங்கும்போது விடியுற நேரத்துல வெள்ளை உருவமா ஆவி கண்ணுக்குத் தெரியும்னு சொல்லுவாங்கடா. அப்போ படக்குன்னு கையைக் காலை அசைக்க முடியாம இறுகிக்குமாம். ரொம்பக் குளிருமாம். எங்க பாட்டி கூட சொல்லுவாங்க..."
"வெள்ளை ஆவி.... விடியற நேரம்.... நான் கூடக் கேள்விப்பட்டிருக்கேன்டா. எங்க ஊருல இசக்கிப்பேய்னு ஒண்ணு தினமும் காலைல வெள்ளந்திப் பசங்களையெல்லாம் மொட்டை மாடில வந்து எழுப்புமாம்"
நான் மிக அமைதியாகக் கேட்டேன். "ஏன் அர்ஜுனு , நீ எதும் பேயைப் பாத்திருக்கியாடா மொட்டை மாடில?"
அவன் ஈனஸ்வரத்தில் முனகினவாறே போர்வையை விலக்கிச் சொன்னான், "டேய் தூங்க விடுங்கடா...வேற பேச்சே கெடக்கலையா உங்களுக்கு, பயமா இருக்குடா".... நான் சொல்லலை, போர்வைக்குள் போகிறவனெல்லாம் தூங்கிப் போவதாகச் சரித்திரமே கிடையாது!
இவனுக்கு மட்டும் ஒரு சரித்திரம் உண்டு. அர்ஜுன்.. இவன் ஆரோக்கியா பால் அர்ஜுன் இல்லை. ஒரு அப்பாவி பயந்தாங்கொள்ளி அர்ஜுன். இரண்டு பேய்களைப் பார்த்ததாக உறுதியாக நம்புகிறவன். அதில் ஒன்று நாங்கள் நடத்தின நாடகம் என்று இன்னும் தெரியாது அவனுக்கு. இன்னொன்று யார் நடத்தின நாடகம் என்று எங்களுக்கும் கூட தெரியாது. நிஜத்தில் பேய் கண்டால் இவனெல்லாம் பயந்து செத்தே பேயாவது உறுதி. அவ்வளவு தைரியம்! என்னதான் கும்மிருட்டில் கதவடைத்து, விளக்கணைத்து, சரவுண்ட் சவுண்டில் பேய் படங்கள் பார்த்தாலும், சில படங்கள் கிச்சுகிச்சு மட்டும்தான் மூட்டும், அப்பேற்பட்ட சம்பவங்களைக் கூட சுவாரசியமாக்குவதற்கு ஒரு பயந்தாங்கொள்ளி நண்பன் கூட்டத்தில் தேவை. அப்படித்தான் எங்களுக்கு அர்ஜுன். சுருக்கமாகச் சொன்னால், சந்திரமுகி பார்த்ததற்கே இரண்டு இரவுகள் தனியாக ஒண்ணுக்கு போகப் பயந்த வீரன் ! ராகேஷின் அறைத்தோழன்.
அர்ஜுனின் கருணை மனுவை ஏற்றுக்கொண்டு நாங்களும் பேயுரையாடல்களை முடித்துக் கொண்டு போர்வைக்குள் போனோம். மணி இரண்டரை. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு மூச்சு விடுவது கேட்குமளவு நிசப்தம் மூழ்கியது, இடையில் சில நாய் ஊளைகள். பேய் நடமாட்டம் நாய் கண்ணுக்குத் தெரியுமாமே !
நீண்ட நிசப்தத்துக்குப் பிறகு, தூரத்தில் ஒரு கட்டைக் குரல் கேட்டது. படக்கென்று அர்ஜுன் விழித்தெழுந்தான். புதுக்கட்டடத்தின் திசையிலிருந்து அவனுக்குக் குரல் கேட்கிறது. "நரேன், நரேன் ..... ராகேஷ்.. ராகேஷ்.... இது உங்களுடைய இடம் இல்லை. எங்களுடைய இடம்.. நரேன்.. ராகேஷ்.." தூக்கிவாரிப்போட்டது அவனுக்கு. மிகத் துல்லியமாக வந்தது குரல். இதே விஷயத்தைத் தொடர்ந்து இரண்டு மூன்று முறை சொன்னது. அர்ஜுன் வியர்த்துப் போனான். சுற்றிப் பார்க்கிறான். மற்ற அனைவரும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
அர்ஜுன் சித்தார்த்தை உலுக்கி உலுக்கி எழுப்புகிறான், "மச்சி, உனக்குக் கேக்குதா?"
உறக்கம் கலைந்த உளைச்சலில் சித்தார்த்துக்கு ஒன்றும் புரியவில்லை. அர்ஜுன் மீண்டும் படபடத்தான், "டேய் நல்லாக் கேளுடா, உனக்கு எதுவுமே கேக்கலையா?"
சித்தார்த் முயற்சி செய்து கூர்ந்து கவனித்தான்.
"... ராகேஷ்... இது உங்களுடைய இடம் இல்லை... எங்களுடைய இடம்.... நரேன்.."
"எதுவும் கேக்கலையேடா , என்னடா உளர்றே , லுச்சா லூசு, போய்த் தூங்குடா"
"கேக்கலையா .. " அர்ஜுன் லேசாக நடுங்கத் தொடங்கினான். அவன் காதில் இன்னும் ஒலிக்கிறது அந்தக் குரல். "உன்னைப் போய் கேட்டேன் பாரு.. செவிட்டு மூதேவி. தூங்குடா.. நான் பாத்துக்கிறேன்"
சித்தார்த் போர்வைக்குள் மறைந்து கொண்டான். அர்ஜுன் முழுத்தூக்கமும் கலைந்து பயந்து உறைந்தான். ராகேஷை எழுப்பலாமா? ஒரு வேளை அவனைப் பார்த்ததும் பேய் ஏதாவது பண்ணிவிட்டால்? நரேன்..... நரேன் கீழே அவன் அறையில் உறங்குகிறான். அவனுக்கு எதுவும் ஆகிவிட்டதா?
அத்தனை தெய்வங்களையும் வேண்டிக் கொண்டு எழுந்து அந்தக் குரல் வரும் திசையில் நடக்கத் தொடங்கினான். எதையோ முணுமுணுத்துக் கொண்டே போனான். நடக்க நடக்க குரல் இன்னும் தெளிவாகக் கேட்டது. அத்தனையும் ஒரு நிமிட நேரத்துக்குள் நடந்து கொண்டிருக்கிறது, வழியில் ஏதோ ஒரு போர்வையில் அவன் கால் படவும், போர்வைக்குள் இருந்தவன் வன்மையாகப் புரண்டு உருண்டு படுத்தான். அந்தக் குரல் சட்டென நின்றுவிட்டது.
அர்ஜுன் உறைந்து நின்றுவிட்டான். உருண்டு போனவனோ மூச்சு பேச்சில்லாமல் கிடக்கிறான். முகம் தெரியவில்லை. குரல் கேட்கவில்லை. குனிந்து பார்க்க பயம். திரும்பி நடக்க பயம். நேராக நடக்கவும் பயம். இருளில் ஒரு பேயை எதிர்த்து நிர்க்கதியாய் நிற்கிறான். அப்படியே ஐந்து நிமிடங்கள் கழிந்திருக்கும்.
"நரேன், நரேன்... ராகேஷ்... ராகேஷ்... இது உங்களுடைய இடம் இல்லை...."
மீண்டும் அதே குரல். அப்போது உருண்டவன் இன்னும் அப்படியே உயிரற்றுக் கிடக்கிறான். ஒரு நொடியில் அத்தனை அட்ரினலினும் பீய்ச்சிப் பாய, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கீழே ஓடுகிறான் அர்ஜுன். நேராக அவன் அறைக்குள் புகுந்து, கதவைத் தாழிட்டு, விளக்கையெல்லாம் போட்டு, சிரமப்பட்டு மூச்சு விடுகிறான். அலமாரியைத் திறந்து வியாயகர் அருகிலிருந்து விபூதியை வாரிப் பூசுகிறான். ஏதோ தப்பு நடந்திருக்கிறது. கைலாசத்தின் குரல் இப்போது காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அந்த அமானுஷ்யக் குரலை நினைத்தாலே பயத்தில் மூத்திரம் வருகிறது. ஆனால் தனியாகப் போகவும் முடியாத பயம். மர்ம அவஸ்தை !
அந்த அமானுஷ்யம் நரேனையும் ராகேஷையும் தேடிக் கொண்டிருக்கிறதா ? என்ன ஆனான் அந்தப் போர்வைக்குள் இருந்தவன்? ஒன்றுமே தெரியாமல் மேலே ராகேஷ் தூங்கிக் கொண்டிருக்கிறானே?
இரண்டு மூன்று பூச்சுகள் விபூதி அப்பிக் கொண்டு ஒரே ஓட்டமாக மீண்டும் மொட்டை மாடிக்கு வந்தான் அர்ஜுன். இடது பக்கம். அந்தப் போர்வைக்குள்ளிருந்தவன் அப்படியே கிடக்கிறான், அசைவே இல்லை. வலது பக்கம் திரும்பினால், பெரிய அதிர்ச்சி... வெறும் போர்வைகள்தான் இருக்கின்றன. எங்கள் நால்வரையும் காணவில்லை. நாய் ஒன்று ஏப்பம் விடுவது போல தூரத்தில் ஊளை இடுகிறது.
கையெல்லாம் நடுங்க நடுங்க, தன் செல்லை எடுத்து என்னை அழுத்துகிறான் அர்ஜுன். முதல் முறை மணியிலேயே பட்டென்று நான், "டேய் எங்கடா போனே? உடனே நரேன் ரூமுக்கு வா" என்று பதட்டமாகப் பேசி அணைத்துவிட்டேன். அர்ஜுன் தன் பயம் ஊர்ஜிதமான அதிர்ச்சியில் அரக்க பரக்க ஓடி வந்தான்.
நரேன் அறை வாசலில் அவன் கண்ட காட்சி........
நானும் அருளும் நரேனைக் குண்டுக்கட்டாகத் தூக்கிக்கொண்டு வருகிறோம். கூடவே பதட்டமாகவும் குழப்பமாகவும் மற்றவர்கள். நரேனுடன் அறையிலிருக்கும் ரத்னகுருவுக்கே ஒன்றும் புரியாமல் விழித்துக் கொண்டிருந்தான். உள்ளே கொண்டு சென்று கட்டிலில் கிடத்தினால், நரேன் ஏதோ எல்லாம் தெரிந்த ஞானி மாதிரி எதையோ வெறித்து விழித்துக்கொண்டிருக்கிறான்.
அர்ஜுன் பயத்தோடும் பதட்டத்தோடும் கேட்டான், "டேய் என்னடா ஆச்சு.... இவனுக்கு என்ன ஆச்சு? எங்க இருந்தான்?"
ரத்னகுரு சொன்னான், "அர்ஜுன், ஒரு பத்து நிமிஷம் முன்னாடி நான் எந்திரிச்சு பாத்ரூம் போகப் போனேன். எழுந்தப்பவே இவனை ரூமில காணோம். போய்ப் பாத்தா பாத்ரூமுக்குள்ள இவன் படுத்திட்டிருக்கான்டா இதே மாதிரியே எதையோ வெறிச்சு மொறைச்சுகிட்டே, தலைக்குக் கையை அண்டக் குடுத்து ஸ்ரீரங்கநாதர் மாதிரி போஸ் குடுத்திட்டிருக்கான். புடிச்சு எழுப்பி விசாரிச்சா, எதுவுமே ஞாபகம் இல்லைங்கிறான். நாலு வருஷத்தில இவன் இந்த மாதிரியெல்லாம் தூக்கத்தில நடந்ததேயில்லைடா"
"நடந்தது இவன் இல்லை குரு.. இங்கே என்னென்னமோ நடக்குது. எனக்கு இப்போ கொஞ்ச கொஞ்சமாப் புரியுது. ராகேஷ்.. ராகேஷ் எங்கே? அவனை உடனே காப்பாத்தணும்? நீங்க எப்போடா கீழே வந்தீங்க?"
சித்தார்த் சொன்னான், "குருதான் மச்சி செல்லில கூப்பிட்டான். உடனே ஓடி வந்தோம். என்னடா புரியுது உனக்கு?"
"நான் உன்னை எழுப்புனேனே ஞாபகமிருக்கா? எனக்குக் கேட்டுச்சுடா.... அந்தக் குரல் கேட்டுச்சு எனக்கு. இவனையும் ராகேஷையும் தேடிட்டிருக்கு அது இப்போ" . எல்லாரும் உறைந்து போய் ராகேஷைப் பார்க்கிறார்கள். அவன் பயந்து போய் நரேனைப் பார்க்கிறான்.
தண்ணீர் தெளித்து, சகஜமாக்கி, மூச்சு விட நிறைய காற்று விட்டு நரேனிடம் துருவித்துருவி விசாரித்தோம். அவனுக்கு ஒன்றுமே ஞாபகமில்லை. நொடிக்கு நொடி திகில் கூடிக் கொண்டே போனது. விளக்கை எல்லாம் எரியவிட்டு ராகேஷையும் நரேனையும் சுற்றி எல்லாரும் அமர்ந்து கொண்டோம்.
அர்ஜுனுக்கு மட்டும் குரல் கேட்டிருக்கிறது. அதுவும் துல்லியமாக கணீரென்று கேட்டிருக்கிறது. அதுதான் அவனை இன்னும் கொஞ்சம் பயமுறுத்தியிருக்கிறது. மற்றவர்களை விட அவன் ரொம்பப் பயந்து போயிருந்தான். பேயை எவனும் பார்க்கவில்லை. அது பிறாண்டிவிட்டுச் சென்றவனுக்கும் ஞாபகமில்லை. அர்ஜுன் மட்டும்தான் கேட்டிருக்கிறான். அவன் ஏதாவது செய்ய வேண்டும் என்று துடித்தான். ஏன் தனக்கு மட்டும் கேட்க வேண்டும் என்று பயந்து குழம்பினான். நேரம் மெல்ல மெல்ல இருளை விழுங்கி வீங்கிக் கொண்டே போனது.
4 : 30 . எல்லாரும் அர்ஜுனையே பார்த்துக் கொண்டிருக்கிறோம். திடீரென்று அவன் மௌனம் குலைத்துப் பயந்தவாறே முனகினான் , "டேய் , ஒரே வழிதான் இருக்கு. எல்லாம் வாங்க, கைலாசம் வாசல்லதான் இருப்பாரு. அவரைப் பாப்போம். அந்தக் குரலும் இப்ப அமைதியாயிடுச்சு." சொல்லிவிட்டுக் கதவைத் திறந்து முன்னே நடக்கவும் தொடங்கிவிட்டான்.
அறைக்குள்ளே அரை நிமிஷம் எல்லாரும் மாறி மாறி பார்த்துக்கொண்டோம். பின்பு ஒரு வெடிச்சிரிப்புச் சத்தம் கேட்டது. வெளியே நடந்த அர்ஜுன் குழம்பி ஓடி வருகிறான். ராகேஷ் வயிற்றைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்து பைத்தியம் பிடித்தது போல சிரிக்கிறான், "டேய்... சொல்லிருங்கடா.. யப்பா முடியலைடா .. நாலு மணி நேரம் ஆச்சு"
அர்ஜுனுக்குக் குழப்பத்தில் கண்ணீர் வந்துவிட்டது. நானும் சிரித்துக் கலங்கின கண்களுடன் அவனுக்கு முன்கதை விளக்கம் சொன்னேன். ஒரு குரலை நாங்களே செல்லில் பதிவு செய்து வைத்து, அலாரம் டோனாக வைத்து, செல்லை தூரமாக வைத்துவிட்டு, வேண்டுமென்றே மொட்டை மாடியில் ஒன்றரை மணி நேரம் பேய்க் கதையாகப் பேசிப் பேசி, கீழே நரேனின் அறையையும் ஒருங்கிணைத்து ஒரு உச்சகட்ட திகில் நாடகத்தை ஒரே ஒருவனுக்காக அரங்கேற்றியிருக்கிறோம். மருதமலைத் தீயும் அந்தப் போர்வைக்குள் பிணமாய்த் தூங்கினவனும் முருகனாய்ப் பார்த்துக் கூட்டிச் சேர்த்த திருவிளையாடல்கள்.
சிரிப்பினூடே சிரமப்பட்டு அர்ஜுனுக்குப் புரியவைத்தேன். ஏமாற்றமும் பயமும் கோபமும் கொப்பளிக்க அவன் எங்களைக் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டிவிட்டு ஓடிவிட்டான். பரவாயில்லை. அவமானத்தில் அழுதமாதிரி கூட இருந்தது. பின்னால் உதவும். நரேன் நடித்து முடித்த பரவசத்தில் ஆச்சரியமாகக் கேட்டான், "செம கெத்து மச்சி... இந்த நாளை அவன் மறக்கவே மாட்டான்....." அந்த அலாரம் வைத்த செல்லை எடுத்துத் தடவியவாறே "செம சத்தம்டா இது.. அவனுக்கு மொட்டை மாடியில கேட்ட அலாரம் டோன் எனக்கு கிரவுண்ட் ஃப்ளோர் பாத்ரூம் வரைக்கும் கேட்டிருக்கே"
"என்னது மொட்டை மாடில வெச்ச அலாரம் உனக்கு மூணு மாடி தாண்டி கீழே கேட்டுதா... காமெடி பண்ணாதேடா டேய்" நாங்கள் அனைவரும் சிரித்த திருப்தியில் அப்படி அப்படியே பிய்த்துக்கொண்டோம்.
நரேன் மட்டும் குழப்பமாக குருவிடம் சொல்வது கேட்டது, "டேய் குரு. உனக்குக் கேட்டிச்சா டா? நான் நெஜமாவே கேட்டேனே.. குழப்பமா இருக்கே.. ஒருவேளை................."
-------------------------------------------------------------------------
திங்கட்கிழமை மதியம். நரேன் எங்களெல்லாரையும் அழைத்து வைத்து அமைதியாக நிற்கிறான். அவன் முகத்தில் ஒரு படபடப்பு குவிந்திருக்கிறது. கொஞ்சம் நடுக்கத்துடன் தன் செல்லில் எடுத்து வைத்திருந்த புகைப்படத்தைக் காட்டினான்.
காட்டிவிட்டு எங்களனைவரையும் மேலும் கீழும் பார்த்தான். பின்பு வேகமாக எல்லோரையும் இழுத்துக் கொண்டு அந்தக் கட்டடச் சுவர் பக்கம் ஓடினான், "என்ன எழுதியிருக்கு , வாசி...."
"என்னடா நரேன் . அதேதானே இது?"
"டேய் சிவா.. நல்லாப் பாருடா. நாங்க எழுதுன தமிழில எழுத்துப்பிழை இருக்கு. இப்போ அதை யாரோ திருத்தியிருக்காங்க. நீங்க யாராவது செஞ்சீங்களா இதை?"
ஒருவரை ஒருவர் பார்த்து மறுத்து மண்டையாட்டினோம். நரேன் தொடர்ந்தான், "அந்த 'டை'யை யாரோ திருத்தியிருக்காங்க. நம்ம தலைமுறைல 'டை' எழுதணும்னா துணைக்கால்தான் போடுவோம். இப்படிக் கொம்பு போடுற பழக்கம் ரொம்பப் பழசு.......... கிட்டத்தட்ட இங்கே புதைச்சு வெச்ச பொணமெல்லாம் உயிரொட இருந்த காலம்"
"டேய் என்னடா உளர்றே... என்ன சொல்ல வர்றே?"
"இல்லடா..... யோசிச்சுப் பாரு. நம்ம அலாரம்ல வெச்ச குரல் எனக்கும் கேட்டிச்சு. எனக்கென்னமோ............."
அவன் பேச்சை முடிப்பதற்குள் அர்ஜுன் அங்கிருந்து பிய்த்துக்கொண்டு ஓடினான். நாங்கள் அதிசயித்து உறைந்து நின்றோம். ஐந்து நிமிடம் கழித்து நரேன் செல்லில் அழைத்தான். "டேய் கன்ஃபார்ம்டா..கைலாசம் ரெண்டு நாளா வேலைக்கு வரலே, வெள்ளிக்கிழமை ராத்திரிதான் மத்த எல்லா வாட்ச்மேனும் அவரைக் கடைசியா பாத்திருக்காங்க. சனிக்கிழமை காலைல கூட அவரை யாரும் பாக்கலை. அன்னிக்கு ராத்திரி இங்கே ஏதோ தப்பு நடந்திருக்கு"
-------------------------------------------------------------------------
திங்கட்கிழமை. அதே நேரம்.
கைலாசம் தாத்தா வீட்டு வாசலில் கவலை தோய்ந்த முகங்கள். ஓரமாய் உட்கார்ந்தொருவன் பாடை கட்டிக் கொண்டிருக்கிறான். இழவு விழுந்த வீடு துக்கத்தைக் காற்றில் தெளித்துக் கொண்டிருக்கிறது. கைலாசம் தாத்தாவின் பேரன் ஒரு தபால் காகிதக் கட்டிலிருந்து ஒன்றை உருவி, தலைப்பு எழுதுகிறான்.
பட்டென்று அவன் தலையில் தட்டி, கைலாசம் தாத்தா அவனிடமிருந்து வாங்கித் தானே அதைத் திருத்திவிட்டுத் தொடர்ந்து எழுதுகிறார்.
'நேற்று அதிகாலை எனது அண்ணன் புஷ்பவனம் மாரடைப்பால்......'
"என்னத்த இங்கிலீஷு மீடியத்துலே படிக்கிறீங்களோ. இந்தக் காலத்து இளசுகளுக்கு ஒரு வாக்கியம் எழுதத் தெரியலையே நல்ல தமிழில..."
-------------------------------------------------------------------------
உங்களுக்குப் பேய் கதைகளில் நம்பிக்கை உண்டா?
சும்மாதான் கேட்கிறேன்.
நரேனுக்கும் கேட்டிருக்கிறதே !
No comments:
Post a Comment