Saturday, 7 April 2018

பக்கத்துக்கு ஊரில் டூரிங் டாக்கீஸில் தெலுங்கு மாயாஜால டப்பிங் சினிமா போடும்போதெல்லாம் ........(பிடித்த ஆண்பால் ....பெயர் ஏதாவது போட்டுக்குங்க)....னுக்கு கொண்டாட்டம் தான். 

சிங்காரிகளுடன் சி ஐ டி , ஜாக்பாட்டில் சி ஐ டி , மர்ம மனிதன் , பறக்கும் ரதம்....இம்மாதிரி திரைப்பட டைட்டில் - பெயர்களே அவனுக்கு ஒருவித ஈர்ப்போடு கூடிய போதை தந்து விடும் .....

படிப்பது பத்தாம் வகுப்பு...அம்மாவை நச்சரித்து எப்படியாவது காசை பிடுங்கி விடுவான். தரை டிக்கெட் என்னமோ ஐம்பது பைசா தான்...

அப்போது “பால நாகம்மா” படம் போட்டிருந்தார்கள் . ஸ்ரீதேவி நடித்ததல்ல ...அதற்கு முன்னரே அஞ்சலிதேவி ஆடிய படம் ....

முந்தின நாளே வகுப்புத்தோழர்கள் சிலர் பார்த்திருந்ததால் போட்டியாளன் நண்பன்?!!!! ....

ரவிசங்கர் பார்த்துவிட்டு கதையை ரீல் ரீலா சொல்லி உசுப்பேத்தி விட்டான். அதிலும் மந்திரவாதியின் மாயக் குகை அசுரன் ஒருவன் காலை அகட்டி இருக்கும் பிரமாண்டமான சிலை பற்றி சொன்னது இவனுக்கு போதையேற்றியது ......

இன்று எப்படியும் ஆறரை / ஏழு மணி மாலை / முன்னிரவுக்காட்சி பார்க்கத் தீர்மானித்து விட்டான். 

நாலு கிலோமீட்டர் சாலை. தினமும் பள்ளிக்கு செல்லும் வழி தான். என்றாலும் பகல் நேரத்தில் போவது வேறு. இரவு ………கதை வேறு அல்லவா?...

அதுவும் ஊரின் எல்லையில் ஆரம்பித்து பக்கத்துக்கு ஊர் தியேட்டர் வரை எத்தனை பூதங்கள் பிசாசுகள் பேய்கள் ....வகை வகையான டெக்னிக் கலர் கதைகள்....

இரவு வந்தாலே இவை யாவும் வந்து அட்டெண்டன்ஸ் கொடுத்து இம்சை பண்ணும் வழக்கம் ..............அது தான் கிராமத்து திகில் வாசனை . 

அதனால் துணைக்கு எவனாவது சிக்குவானா என சல்லடை போட்டுத் தேடியதில் ................இவனைப் போல தெலுங்கு டப்பிங் / ரீமேக் ரசனை இல்லாத நண்பர்கள் கூட்டத்தில் ஒருத்தனும் சிக்க வில்லை .

துணிவே துணை என சைக்கிளில் கிளம்பி ஒருவழியாக சினிமா தியேட்டரில் டிக்கெட் வாங்கி படமும் பார்த்தான்..படம் எதிர் பார்த்ததைவிட பிரமாதமே.

முழு திருப்தி.. 

பேய்களும் பூதங்களும் மாயாஜாலக்காட்சியும் கன ஜோர் ...

ஆனால் நிஜத்தில் க்ளைமாக்ஸ் வேற மாதிரி ஆகிப்போச்சு. யாராவது ஊரில் இருந்து வந்திருப்பார்கள் ......

அவர்கள் துணையோடு கூடவே சைக்கிளில் போகலாம் என்ற நினைப்பில் மண்...

அதோடு அன்று நல்ல அமாவாசை இருட்டு.....காரிருள் சூழ்ந்த கனத்த மழைக்கால இருள்.... 

சைக்கிளில் துணிச்சலாய் ஏறி மிதித்து ஊரின் கடைக்கோடி தாண்டி தெற்கில் திரும்பியதும் கசகசவென ஒருமாதிரியாக வேர்த்தது...

வழியில் இருந்த குளத்துக்கு நீர் போகும் வாய்க்கால் பாலத்தில் கால்கள் ஊன்றி .......சற்றே யோசித்தான்...

சற்று தூரத்தில் அடர்ந்த ஆளுயர 
கள்ளிச்செடி வேலி...கள்ளிப்புதர்கள் மிகுந்த 
அடர்த்தியாக ...........அங்கு ஏதோ ஒரு “விளக்குப் பேய்” உண்டு என்பது தொன்று தொட்டு யாவரும் நம்பும் பொதுவான வழக்கம். 

அடர்ந்த வேலிக்குள் அமர்ந்து சுடர் விடும் ஒளி விளக்கை கையில் வைத்து ஊஞ்சல் போல ஆட்டி வசியம் செய்யும் மாய மோகினி .....பெண் பேய் !!!!! 

ஜூலை மாத சாரல் மழையின் அறிகுறியாக அடர் மேகக்கூட்டம்....லேசான பன்னீர் தூறல்...சூழலே அமானுஷ்யமாய் .....

அடி வயற்றில் அமிலம் சுரந்து ...போவதா ...திரும்பி தியேட்டர் பக்கமே போய் வாட்ச்மேன் கூட படுத்துவிட்டு காலையில் போவதா....

அப்படியும் சில வேளைகள் நடந்தது உண்டு...அது அவனிடம் சைக்கிள் இல்லாத கசந்த / கஷ்ட காலம்...நடைராஜா சர்வீசில் படங்கள் பொதுவில் ஆட்களோடு தான் ...அபூர்வமாக தனியாகவும் பார்த்த அனுபவம் உண்டு ....

ஆனால் இன்று திரும்பி போவதாய் இல்லை .....எனும் தீர்மானம் வலுத்து மெதுவே சைக்கிளை மிதித்து கிளம்பினான்...

முதல் இடப்பக்க சாலைத் திருப்பம்...புனரமைப்பு பணிக்காக சரளைக்கற்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தது...சற்று முன்னதாகவே ஹாண்டில் பாரை திருப்பியதில் சைக்கிளின் முன் சக்கரம் கற்கள் குவியல் மீதேறி சறுக்கி இடப்புறமாய் வேகமாய் விழுந்தான்.

இடது முழங்கால் சிராய்த்து இரத்தம் வடிந்தது ...பயம் இன்னமும் கூடிப்போனது...இரத்தம் குடிக்கும் காட்டேரி இரத்த வாசனை இழுத்து ஓடி வருவதாய் ...............மூளை பேய்க்கதை சொன்னது....மெய் சிலிர்த்துப்போனது... மார்புக் கூட்டின்............... “லப் டப்” வேகம் கூடியது....... ...

இன்னும் ஒரு பர்லாங் தான் விளக்குப் பேயின் ஜாகை ...இடப்பக்கம் தலையை திரும்பாமல் பிடிவாதமாய் நேரே பார்த்தபடி போனாலும் ...பாழும் மனித குரங்கு மனம் ...இடது கண் ஓரம் ...லேசாய் சாய்த்து பார்த்தான்...இதயம் துள்ளி விட்டது ..மெல்லிய ஒளியின் கீற்று ...ஆற்ஹா ..பலம் கொண்ட மட்டும் ஓங்கி பெடலை மிதித்து காற்றைப் பிளந்து பாய்ந்தான்...

அடுத்து ‘ கிராப்ட் வாத்தியார் ’ தோட்டம் ...அதைக்கடந்து போகையில் சாலை வளைவில் சுருட்டுப்பேய் ...அதுவும் கள்ளிச் செடி வேலி தான்...அங்கும் ஒரு குளத்துக்கு தண்ணீர் போக இருந்த தரை சுரங்கப்பாலம்...அருகில் செல்லும்போதே பாலத்தின் அடியில் விசித்திர மிருக ஒலி...முனகலாய் கேட்டது...ஹான்டில் பாரை பிடிக்க இயலாமல் கை வேர்த்து வழுகியது...

வேர்வையில் நனைந்த சட்டை காற்றில் படபடத்த சத்தம் திகில் பட மியூசிக் போல ...

அடுத்து ஒரு தாழ்வான ஆற்றுப்பாலம் சரேலென தாழ்வான இறக்கத்தில் போகும்போது அடுத்து வரும் தலைப்பாகை கட்டிய இருபதடி உயர கொள்ளிவாய் பேயின் நினைப்பு தேவையில்லாமல் வந்து தொலைத்தது...

அட்ரீனலின் சுரப்பில் நம்பர் ஒன் நான் ஆஜார் என்றது...இன்னமும் ரெண்டு பர்லாங் தூரத்தில்.......ஊர்...ஆனால 

சட்டென ...அது என்ன சத்தம் எழுத்தில் கொண்டுவர முடியாத மெல்லிய முனகலாய் விட்டு விட்டு சத்தம் கேட்டதும் சப்த நாடியும் ஒடுங்கிப்போனது...

ஆனாலும் ஊரினருகில் வந்த தெம்பில் சைக்கிளை நிறுத்தி காலை தரையில் ஊன்றி காதை சாய்த்து ஈர்ப்புடன் உற்றுக் கேட்டான்... 

கய்ங் கய்ங் என ஒரே சுருதியில் மெல்லிய யூகிக்க முடியாத வினோத சப்தம் ...

‘லப் டப்’ வேகம் கூடி எகிறியது... ஆனால் ஆர்வம் அதை மிஞ்சியதால் தைரியமுடன் சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு ....சாலை ஓரம் தாண்டி புற்களுக்கு மத்தியில் போய் நின்றான்...
இப்போது அடுத்து இருந்த ஆவாரஞ்செடி மூட்டுக்குள் இருந்து ஓசை வருவது புரிந்தது... மீண்டும் திரும்பி 
வந்து சைக்கிள் டைனோமோவை அத்திசை பக்கம் திருப்பி முழு வெளிச்சம் வெள்ளமாய் பாய்ச்சி பளீரிட்ட ஒளிக் கீற்றில் கண்ணை கூராக்கி உற்றுப்பார்த்தான்...

சற்று தொலைவில் ... இரண்டு மின்னும் கண்கள் ...மீண்டும் உற்றுப் பார்த்தான்...

ஒரு பெரிய முயல்...மனதில் ஒரு நூதனமான வேகம் ....படபடப்பு ....சட்டென நடந்து ....மேலும் ரெண்டடி எடுத்துப்போய் ஆவாரை செடியின் மேற் கொப்புகளை தூக்கினான்.... 

.....கண்ட காட்சியில் .....மனம் பயம் தெளிந்து சட்டென குதுகலம் ஆகிப்போனது...சிறுபிள்ளையாய் அகம் மகிழ்ந்து போனான் ...

அப்போது தான் ஈன்ற ரெண்டு முயல் குட்டிகள் ...’கையின்க் கீய்ன்க்’........... ...என்னவோ எழுத்தில் தர முடியாத ஒலியின் நூதனமான ஓசை ...

ஆர்வமுடன் அருகில் போய் குட்டி ஒன்றை கவனமாய் இடக் கையில் தூக்கினான். அப்போதுதான் ஈன்ற பாங்குட்டி...கொழ கொழ வென பலவகை திரவ பிசுபிசுப்புடன் ...ஆனால் அருவருப்பு இல்லை ..இம் நிணம் கலந்த ஒரு இதுவரை நுகராத மென் மணம்...

வலக்கை பாதுகாப்பாய் தயார் நிலையில் எதிர்த் தாக்குதலுக்கு முன்னெச்சரிக்கை சிக்னலுடன் ...

குட்டி ஈன்ற தாய் முயல் குட்டி தூக்கப்பட்டதுமே மூர்க்கமாய் ....முரட்டுத் தைரியமுடன் வேகமாய் அவனை நோக்கி ஓடி வந்தது...சட்டென குட்டியை மீண்டும் தரையில் வைத்து தூரமாக விலகினான்.....

ஒரு ஆசுவாச பெருமூச்சு அனிச்சையாக கிளம்பியது ........ 

ஒரு நம்ப முடியாத அதிசய அனுபவம் ....பேய் பூதம் 
மோகினியை எதிர்பார்த்து புதிதாக பிறந்த முயல்குட்டிகளை கண்ட பரம ஆனந்த அனுபவம் ...

மனம் பாரம் விலகி பயம் தெளிந்து பட்டென லேசாகியது ... 

சைக்கிளை மீண்டும் கிழக்கில் திருப்பி ஊரை நோக்கி மெதுவாக மிதித்து சென்றான். 

ஏனோ மனம் லேசாகி ஒரு மகிழ்ச்சி மனதில் துள்ளியது ....வாய் தன்னையும் அறியாமல் உல்லாசமாய் மெல்லிய சீழ்க்கையொலி எழுப்பி குதுகலமாக சைக்கிள் சவாரியில் லயித்து ஊரின் தொடக்கத்தில் வந்து ....

வலப்புறம் திரும்பி தனது தெருவில் நுழைந்தான் ......................

No comments:

Post a Comment