Tuesday, 10 April 2018

மூன்று கட்டளைகள்

மன்னருக்கு மழித்து சவரம் செய்து முடிவெட்டும் அரண்மனை நாவிதர் ஒருவர் மன்னரும் மந்திரிப் பிரதானிகளும் அரசாங்க சாங்கித்தியம் ( ஆட்சி பரிபாலனம் ) செய்யும் காட்சிகளை அடிக்கடி நேரில் கண்டும் ரசித்தும் அதன் காரணம் ஆக ஒரு வினோதமான ஆவல் கொண்டார்....


அதாவது தானும் ஒரு முறையாவது அரசாங்க அதிகாரத்தை ...அந்த மாய போதையை அனுபவிக்க வேண்டும் என்று....

ஒரு சமயம் மன்னர் நல்ல "மூடு " ல இருக்கும் போது சவரம் செய்யும் ஒரு ஏடாகூடமான (......கத்தியை கழுத்தில் வைத்த சமயம் ன்னு தான் வைச்சுக்குங்குளேன் ... )

" மாமன்னரே இந்த அடிமைக்கு ஒரு ஆசை".... என ஒரு வழியாக தனது விண்ணப்பத்தைப் போட்டு மன்னரைக் கலங்க வைத்தார்.

மன்னரும் குஷி மூடுடன் இருந்த பொழுது ஆனதாலும் ...மேலும் (கத்திய கழுத்துல வேற வெச்சுருக்கான்ல ) அவரை ப்ரீதிப்படுத்தும் முகமாக “அதுக்கென்ன இன்னிக்கே அதுக்கு தக்க ஏற்பாடு பண்றேன்” னு சொல்லி ....

அமைச்சரை அழைத்து சங்கதிய சொன்னாரு.....

அமைச்சர் ரகசியமாக தலையில் அடித்துக்கொண்டார். ஆனாலும் மன்னரின் ஆணை ...எனவே ''பண்டார மலை'' எனும் சமஸ்தானம் தாசில்தார் பதவியை கொடுக்க சிபாரிசு செய்து மன்னரும் ஓலை எழுதச்சொல்லி ராஜ முத்திரையை பொறித்து நாவிதரிடம் கொடுத்து "அப்பனே உன் ஆசைப்படியே பதவி கொடுத்து விட்டேன்... ஜமாய் என்றார்.

நாவிதர் பவ்யம் காட்டி " மாமன்னரே இந்த அடிமைய ஆண்டானக்கினதுக்கு வந்தனம் ...ஆனாக்க எனக்கு முன்பின் அனுபவம் இல்லாததால் இந்த ராஜாங்க காரியம் பற்றி நல்லது கெட்டதுகளை விளக்கி கொஞ்சம் புத்தி சொல்லி அரசாங்க காரியத்த செய்ய “ அறிவுரை ”கொடுங்க ன்னாரு....

மன்னரும் அது ஒரு பொடலங்காயும் இல்லே ...நீர் முக்கியமா மூணே மூணு விஷயத்தை கடை பிடிச்சா போதும்ன்னு மூன்று விசயங்களை சொன்னாரு ....

மன்னர் சொன்ன மூன்று விஷயங்கள் :
1. ராஜாங்க காரியம் பார்க்கும் நமது முகம் எப்பவுமே கருப்பாக இருக்க வேண்டும்.
2. யாரிடம் பேசினாலும் காதைக்கடித்து மட்டுமே பேசலாம் .
3. நமக்கு கீழ் உள்ள பணியாட்கள் குடுமி நம்ம கையில் இருக்கணும் ....

'அவ்வளவு தான்' ன்னாரு ....

நாவிதர் அகம் மிக மகிழ்ந்து மன்னரை பணிந்து பண்டார மலை நோக்கிப் புறப்பட்டார்.வழி நெடுக மன்னர் கொடுத்த “டிப்ஸ்” மனதில் அலை பாய்ந்தது ....


தனது மனதில் மன்னரிடம் சபாஷ் ன்னு பேரெடுக்க சங்கல்பம் செய்து கொண்டார்...

பண்டாரமலைக்கு நம்ம நாவிதர் போன விதம்

கால் நடையாகவே பயணம் போய் தன்னோட சாகசம் காட்ட விரும்பி மன்னரும் அமைச்சரும் அளித்த குதிரை மற்றும் துணை ஆட்களை மறுத்து ...நடைப்பயணம் செய்தே சில நாட்களில் பண்டார புரம் சமஸ்தான எல்லையை அடைந்தார்.

மன்னரின் மூன்று கட்டளைகளும் மனதில் செப்புப்பட்டயம் போல பதிந்து இருந்தன....

..”முகம் கருப்பாக இருக்கணும் “..அது அல்லவோ மன்னரின் முதல் கட்டளை ...

எனவே கையோடு கொண்டு வந்த சிரட்டையை எரித்து அந்த கரித் துண்டுகளைக் கல்லில் தேய்த்து முகத்தில் பவுடர் போல முழுக்கப் பூசி மன்னரின் முதல் கட்டளையை நிறைவேற்றிக் கொண்டார்...

ஆனால் பூரணமாய் கரி பூசிய கோரமான தனது முகம் தனக்கே பிடிக்காமல் ஒரு அங்கவஸ்திரத்தை எடுத்து முக்காடிட்டு முகத்தை மறைத்துக்கொண்டார்.

வழியில் கிடைத்த வண்ண வண்ண காட்டு மலர்களை பறித்தும் புல் கொடி வகைகளை மூட்டையாக கட்டிக்கொண்டும் தாறுமாறான கோலத்தில் எல்லைப் பகுதி சென்று அடைந்தார்...

சமஸ்தான எல்லையில் தாசில்தாரை வரவேற்க வந்த முக்கிய அரசாங்க அலுவலர்கள் இவரை யாரோ ஆண்டிப் பரதேசிப் பயலோ அல்லது வழிப்போக்கன் என்று நினைத்து ...எங்களுக்கு புதிதாக வரும் தாசில்தாரை பற்றி உமக்கு ஏதும் தெரியுமா என விசாரிக்கப்போக.....

“நான் தான் யா அது” என்று தன் கருப்பான மூஞ்சியைக்காட்டி “மெர்சல்” ஆக்கினார்.

ராஜ முத்திரை பொறித்த உத்தரவு ஓலையை காட்டினார். ராஜ கட்டளை கண்டபின்னர் ....

அவரை தடபுடலான வரவேற்புடன் பஞ்ச கல்யாணி குதிரை பூட்டிய அலங்காரமான தேரில் அழைத்துச் சென்று கச்சேரியில் (அலுவலகம்) கொண்டு விட்டார்கள்.

நாவிதருக்கு மிகுந்த மகிழ்ச்சி. முதல் கட்டளையை “ஓஹோன்னு” நிறைவேற்றிய மகிழ்வுடன் கச்சேரியில் அமர்ந்து ராஜாங்க காரியம் பார்க்கத் தொடங்கினார் .

காரியஸ்தர் அவரிடம் வந்து ஐயா என அழைத்ததும் உதட்டின் மீது விரலை வைத்து எச்சரிக்கும் பாணியில் சைகை செய்த தாசில்தார் (நாவிதர்) அவரைக் கை சைகையிலேயே அருகில் அழைத்தார்.

அவர் பவ்யமாக அருகில் வந்ததும் வராததுமாய் தலையை குனியச் சொல்லி தம் வாயின் அருகில் அவரது காதைக் கொண்டுவரச் சொன்னார். காரியஸ்தர் ஏதோ இரகசியம் எனக் கருதி காதை வாயருகில் கொண்டு சென்ற உடனேயே அதை முன் பற்களால் எக்கச்சக்கமாக ...கவ்வி ஏதோ கேட்டார்.

காரியஸ்தர் “ஐயோ !!!ஐயோ !!!!” என அலறி காதை விடுவிக்க பெரும்பாடு பட்டார். ஆனால் அவரது காது அப்பம் போல வீங்கி சிவந்து போகும்படியாக வன்மையாகக் கடித்த பின்னரே அவரை விடுவித்தார் நம்மாளு .

காரியஸ்தர் வீட்டிற்கு கூட போகாமல் பஞ்சகச்சம் வைத்து கட்டிய வேட்டிய தூக்கிப் பிடிச்சுகிட்டு ஓட்டமாய் ஓடி மன்னரை காண தலைநகரம் ஓட்டமாய் ஓடிச் சென்றார்.

இனி மூணாவது கட்டளை ...எல்லோரது குடுமியும் நம்ம கையில இருக்கோணும்..நாவிதர் யோசித்தார்...எப்படி இந்த பயலுவ குடுமிய சிரைக்கிறது?!!!

அப்போது மாலை ஆடல் பாடல் கேளிக்களை நடத்தி அரசாங்க அலுவலரான தம்மை குஷிப்படுத்த ஏற்பாடுகள் நடப்பதைக் கவனித்தார். மின்னலென ஒரு யோசனை உதித்தது...

எல்லோருக்குமே நன்கு தின்னவும் குடிக்கவும் கொடுத்து அதில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து எல்லோரும் அயர்ந்து தூங்கிப்போகும் அளவு செய்ய முடிவெடுத்து கட்டளைகளை பிறப்பித்தார்.....

விருந்து அமர்க்களமாய் போய்க்கொண்டு இருந்தது ....நிகழ்சிகளின் கோலாகலத்தில் களைத்து எல்லோரும் அரச மண்டபத்திலேயே உறங்கியே போனார்கள்.

தாசில்தார் அவதார நாவிதரின் வேலை சுலபம் ஆகிப்போச்சு......

தயாராக கையிலேயே வைத்து இருந்த கத்திரி போட்டு எல்லாரது குடுமியையும் வெட்டினார் ...அதனை வேட்டி துணியிலேயே ஒரு மெகா மூட்டையாக்கினார்....

என்ன ஒரு மகிழ்ச்சி ...பூரிப்பு !!!!!

மன்னரின் அரண்மனை நோக்கி குதிரையில் கிளம்பிப் போனார். ஒரே குஷி தான் போங்கோ ...!!!!!

நம்ம சாதனா சக்தி மன்னரையே அசத்திப்போடும் என்று ஏக மகிழ்வுடன் ....தலைநகரம் நோக்கி விரைந்தார் ...

அப்புறம் ?......

No comments:

Post a Comment