Saturday 3 November 2018

எறும்புகளின் மனிதர் தினம்

ஒரு மனிதன் =*=ஒரு எறும்பு =*=ஒரு கனவு
***********************************************************
கிணற்றடியில் அமர்ந்து கொண்டு
நகம் வெட்டிக்கொண்டிருந்தேன்.
யாரோ அழைத்தது போலிருந்தது.
வெட்டியெறிந்த நகங்களை
சுமந்து கொண்டிருந்து எறும்புகளில் ஒன்றுதான்..
எனை விளித்திருக்கவேண்டும்.
குனிந்து பார்த்தேன்..
பார்க்க பார்க்க
நானும் சிறிதாகி சிறிதாகி
எறும்புடன் நிற்கலானேன்
என் பெயர் விளம்பி..
எறும்பின் குரல் என் காதில் கேட்டது.
என் பெயர் என என் குரலை உயர்த்தும் முன்
உங்கள் பெயர் மகிழ்நன்
உங்கள் தந்தையார் உங்களை அழைக்கும்போது கேட்டுள்ளோம்.
கருவேப்பிலை மர நிழலில் நனைந்து அதன் வேருக்கும்
மண்ணுக்குமான ஒரு சிறிய சந்தில் எறும்புடன் நுழைந்தேன்.
நான் விழுந்துவிடாது பற்றிக்கொண்டது.
சிறிய வெளிச்சத்தில் பள்ளத்தாக்கு போல் தெரிந்தது.
மிகப் பழமையான இந்த வசிப்பிடத்தில்
உங்களை வரவேற்பதில் நாங்கள் மகிழ்கிறோம்.
இன்று மனிதர்கள் தினம்.
வேப்பம் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பீடம் ஒன்று.
இது எறும்பனார் நினைவு இடம்.
இயற்கை வீசி எறிந்த கொடி மின்னலால்
பார்வையற்ற பின் எறும்பனார் தன் குழுவினரால்
கட்டியது இந்தப் புற்றுக்கண்.
100 ஆண்டுகள் பழமை மிக்கது.
இதன் ஒரு பகுதி இடிக்கப்பட்டு குடியிருப்பாய் மாற
அதன் மேல் 10 வருடமாய் நீங்கள் வசிக்கிறீர்கள்.
கேட்க வியப்பாய் இருந்தது எனக்கு.
ஆதியில் இந்த வனத்தை ஆண்ட
கார்கோடன் பாம்பின் கடைசிச் சட்டை இது.
நான் பயந்தபடி தொட்டுப்பார்த்தேன்.
குறுக்கும் நெடுக்குமாய் சாரை சாரையாய்
எறும்புகள்
நகரத்து வீதிகளில் பறக்கும் கார்களைப் போல
புகையின்றி போய் கொண்டிருந்தது.
இவள் பெயர் முகில்
மழை வேண்டி தவம் இருக்கிறாள்.
யானையும் பாம்பும் அற்புத ஓவியம்
மண்ணும் தானியம் கொண்டு எழுதப்பட்டிருந்தது.
வண்ணன் என்று வரைந்தவன் பெயர் எழுதியிருந்தது.
ஒரு பகுதியில்
உணவுப் பொருட்களாய் நிரம்பிக்கிடந்தன
வெண் சர்க்கரை¸ தேநீர் காபி பொடிகள் உப்பு
அரிசி¸ பருப்பு தானியங்கள் நிறைய அழகாய் தொகுக்கப்பட்டிருந்தன.
இவை அனைத்தும் உங்கள் சமையல் அறையில் சிந்தி வீணடிக்கப்பட்டவை.
இது நினைவிறுக்கிறதா..
சிவப்பாய் கரும்பு போல நீள நீளமாக.. யோசித்தேன்.
உங்கள் மனைவி உண்டாகி இருந்தபோது
உண்ணாமல் கீழே விழுந்த குங்குமப்பூ.
எத்தனை வருடங்கள்
நினைவுகளில் யாரோ வயலின் வாசித்தார்கள்.
திடீரென ஒரு எறும்பு விளம்பனில் காதில் படபடத்தது.
ஓரே கட்டளையில் ஆயிரம் ஆயிரம் எறும்புகள் ஓடின.
என்ன என வினவினேன்.
பக்கத்து வயலில் குழாய் பதிக்க
தந்தம் இல்லா இரண்டு இரும்பு யானைகள் வந்துள்ளனவாம்.
அந்த குழுக்களின் உணவு மற்றும் இருப்பிடத்தை மாற்ற
உதவி செய்ய பணியாளர்களையும் வீரர்களையும் அனுப்பினேன்.
நீங்களும் இடர் வரும் போதுதான் உதவிக்கொள்வீர்களா?
இல்லை எப்போதும் உதவிக்கொள்வோம்.
அவைகளின் கழிப்பிடம்¸ நீர்நிலை
சீராக வடிவமைக்கப்பட்ட அனைத்தும் கண்டேன்.
உங்கள் குழுவின் ராணி எங்கே?
அவள் எங்களின் குழு எண்ணிக்கையை அதிகரிக்க
காமம் தோய்ந்த இறகுகளோடு காதலன் தேடலில் இருப்பாள்.
இரண்டு எறும்புகள் அவரை வணங்கின.
இவள் சுடர்¸ அவள் தோழி சுவை இருவரும் என் மகள் போன்றவர்கள.;
அடுத்த அறையில் இனிப்பின் மணம் வந்தது
என்னைவிட உயரமாக இருந்தது அந்த இனிப்பு.
உயரே அழைத்துச் சென்று காட்டினான்.
அது ஒரு கேக்குத்துண்டு¸ எனக்கு நினைவு வந்ததது.
சென்ற வாரம் கொண்டாடிய
என் மகளின் 5ஆம் பிறந்தநாள் விழா மகிழ்வின் துண்டு.
அமைதியானேன்.
உங்கள் மகளின் பிறந்த நாள் இனிப்புதான்.
எங்களுக்காக அவள் கொடுத்தது.
அந்த விழாவிற்கு எங்களை அழைத்திருந்தாள்
நாங்கள் வந்திருந்தோம்.
உங்களின் மகள் எங்கள் வரவில் மகிழ்ந்திருந்தாள்.
என் கண்கள் கலங்கின.
விளம்பன் தன் கை கொண்டு எனை அணைத்தான.
உங்களைப் போன்ற நல்லவர்கள் வாழும்
இதே உலகில் கொடியவர்களும் உள்ளனர்.
வருந்துகிறோம்.
ஒழுக்கமில்லா மானிடர்களின் பாதகச் செயலால்
உயிர் இழந்த உங்கள் மகள்¸ எங்களின் தோழியின்
மறைவுக்கு வருந்துகிறோம்.
இன்று மனிதர்கள் நாள்.
***************************************************
நான் மீண்டும் மனிதனாக
மாறிக்கொண்டிருந்தேன்.
*****************************************************

No comments:

Post a Comment