Saturday, 3 November 2018

அமுத அன்னம்

பூமிக்கு பச்சை பட்டு ஆடை அணிந்தது போல், பச்சை பசேல் என இருக்கும் நெல் வயலில், சிதறி கிடக்கும் பயிர்களை உண்ணும் பறவைகளின் சத்தம், நடக்கும் வழி பாதை எல்லாம் தென்னை , மா மற்றும் பல மரங்களின் நிழல், அதனுடன் கூடிய குளிர்ந்த காற்று வீச, தர்மனின் வீட்டை நோக்கி சென்றான் முருகன் .
“ஐயா…” என்கிற குரல் கேட்டதும், வீட்டிலிருந்து அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் வெளியே வந்தார்.
“நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேணும்?”
“என் பெயர் முருகன். இந்த பேப்பர்ல, வயலும் தோப்பும் விற்பனைக்குன்னுற விளம்பரத்தை பார்த்தேன். அதன் வந்தேன்”
“யாருக்கு வேணும்? உங்களுக்கா!!”
“ஆமாம்”
“உங்கள பார்த்தா, படிச்ச புள்ள மாதிரி தெரியுது. நீங்க இந்த வயலை வாங்கி, என்ன பண்ண போறிங்க”
“இந்த வயல் தோப்பை எல்லாம் அழிச்சிட்டு, வெளிநாட்டுக்கு மாமிசங்களை ஏற்றுமதி பண்ற தொழிற்சாலை ஒன்னு கட்ட போறேன். இந்த இடம் ஊருக்கு வெளிய இருக்கு. அதுமட்டுமில்லாமல் நல்ல தண்ணீர் வசதியும் இருக்கு. அதான்”
“ஓ….. அப்படியா!!” என்று பேசிக்கொண்டே இருவரும் நடந்தனர்
மின் இயந்திரத்தில் தண்ணீரை நீர் விழ்ச்சியை போல், சுழற்றி ஊற்றிக்கொண்டிருக்கும் இடத்தில் அமர்ந்தனர்.
“இது என்ன ஐயா? இவ்வளவு வேகமாக தண்ணீரை கொட்டுது”
“இது பம்பு செட்டுப்பா”
“இந்த தண்ணி எங்க போகுது?”
“இங்க இருக்கிற மாமரம், தென்னை மரம், வேப்பமரம்முன்னு எல்லாத்துக்கும் போகுது.
இங்க இருக்கிற சில மரத்துக்கு என்னோட வயசு. எங்க அப்பா நான் பொறந்தப்ப வைச்சது. இதோ உன் பக்கத்துல இருக்கிற மரம், என் பையன் பொறந்தப்ப நான் வைச்சது”
“உங்க பையன் எங்கே? நீங்க மட்டும் தனியாவா இருக்கிங்க?”
“இல்லப்பா, என்கூட இந்த மரங்களும், நான் வளர்க்கிற ஆடுகள், மாடுகள் கோழிகள் என நான் ஒன்னத்தான் இருக்கிறேன். இந்த மரங்களையும், வயலையும் பார்த்தாலே நான் தனியா இருப்பது போல எனக்கு தோனாது”
“அப்போ உங்க மனைவி எங்க?”
“எனக்கு ஒரே பையன். அவன் இந்த வயல் வேலையெல்லாம் செய்யகூடாதுன்னு, நல்லா படிக்க வச்சேன். அவனும் படிச்சு முடிச்சுட்டு அமெரிக்கா போயிட்டான். அங்க போனவன் எங்களை மறந்துட்டு, அங்கேயே ஒரு பொண்ண கல்யாணம் செஞ்சுகிட்டான். அதுவே எங்களுக்கு ஒரு வருஷத்துக்கு அப்புறம்தான் தெரியும். எனக்கு பேத்தி பொறந்திருக்குன்னு, அத பார்க்க யாரும் இல்லன்னு என் பொண்டாட்டிய, அமெரிக்கா கூட்டிட்டு போனான்.
அங்க ஆறு மாசத்துக்கு முன்னாடி, கேன்சர்ல என் மனைவி இறந்த செய்தி போன் மூலம் வந்துச்சு. எனக்கு பாஸ்போர்ட் இல்ல. அதனால உடனடியா என்னால போக முடியல. அங்கிருந்து பாடிய கொண்டுவர நிறைய செலவாகுமுன்னு, என் பையன், எல்லா காரியத்தையும் அங்கே முடிச்சிட்டான். அமெரிக்கா போகும்போது அவளை நான் கடைசியா பார்த்தது” என கூறும் போதே தர்மனின் கண் கலங்கியது. அதை கேட்ட முருகன் மனம் கலங்கினான்.
“அப்போ ஏன் இந்த இடத்தை விற்குறிங்க” என முருகன் கேட்க, “என் பையன் வினோத்துக்கு அமெரிக்கால பிஸ்னஸ் தொடங்கனுமாம். அதனால இந்த இடத்தை எல்லாம் விற்றுட்டு, நானும் அவன்கூட வரணும்னு கண்டிப்பா சொல்லிட்டான். நாளைக்கு அவன் வந்துடுவான். நீங்களும் நாளைக்கு வந்தா பேசி முடிச்சிடலாம்” என தர்மன் பதிலை கேட்டு, அவ்விடம் விட்டு நகர்ந்தமுருகன், அந்த வயல் மரங்களுடனான தர்மனின் பந்தத்தை எண்ணி வியந்து சென்றான். தானும் இது போன்ற ஒரு இயற்கை சூழலில் வளரவில்லையே என்ற ஏக்கத்துடன் தன் பயணத்தை தொடர்ந்தான்.
மறுநாள் வினோத் மனைவி மகளுடன், அமெரிக்காவிலிருந்து வீட்டிற்கு வந்தான். தர்மனும் முதன் முதலாக வந்த தனது பேத்தியை கண்டு ஆனந்தம் கொண்டார். அச்சு அசலாக தன் மனைவியை போல் பிறந்திருந்த அவளை, எடுத்துக்கொண்டு வயலை சுற்றி காண்பித்தார். பேத்தியின் கையால் புதிய ஒரு மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார். பின்பு வீட்டிற்கு வந்த தர்மன், நிலத்தின் பத்திரத்தை எடுத்து, வினோத்திடம் நீட்டினார். அத்துடன் ரமேஷ் வந்ததையும் கூறினார்.
பத்திரத்தை கையில் வாங்கிய வினோத், “நான் அம்மாவ இழந்துட்டேன். அவங்க பாசத்த விட்டு நான்தான் ரொம்ப தூரம் போய்டேன். சந்தோசம் என்பது நம்முடன் இருக்கும் வரை, அதன் அருமை தெரியாது. அது இல்லை என்ற போதுதான், அதன் அருமையும், இழப்பும் நமக்கு புரியும். அம்மாவிற்கு வந்த கேன்சர் கெமிக்கல் நெறஞ்ச உணவால வந்ததுன்னு டாக்டர் சொன்னங்க.
என் அம்மாவை இழந்தது போல, என் குழந்தையும் நான் இழக்க விரும்பல. நம்ம வயல்ல, கெமிக்கல் இல்லாத நல்ல தானியங்களா விவசாயம் பண்ணி, நோயில்லா வாழ்க்கையை உருவாக்கணுப்பா, மனுஷன் உயிர் வாழ ரொம்ப முக்கியம் உணவு. அந்த உணவே விஷமா மாறி, நம் உயிரை எடுக்க கூடாது.
எனக்கும் உங்கள போலவே நல்ல விவசாயம் செய்யறது எப்படின்னு கத்து கொடுங்க. இனி வரும் சமுதாயம் நம்ம பாரம்பரிய உணவை உண்டு, ஆரோக்கியமான வாழ்வை வாழட்டும். நாம் நம் பரம்பரையை காப்பாற்றி, அடுத்த தலைமுறைக்கும், இதனை கற்பித்து, அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாய் திகழ்வோம்” இதை கேட்ட தர்மன், உற்சாகத்தில் தன் மனைவி போல் இருக்கும் தன் பேத்தியை அரதழுவி முத்தமிட்டு தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
நம் நாட்டின் முதுகுஎலும்பான விவசாயத்தையும் விவசாயிகளையும் ஆதரிப்போம். இயற்கை உரங்களை உபயோகித்து, வளமானதொரு பாரதத்தை உருவாக்கி, நம் வாழ்நாளை நீட்டிப்போம்.
**********************************************************************
சோறு /அன்னம் சம்பந்தமான ஒரு கொசுறு கதை
--------------------------------------------------------------------------------
அடையாள சிக்கல் - Identity Crisis.
இதன் தொன்ம குறியீடு கர்ணன்.
மனித துயரங்களில் அடையாள சிக்கல் எனும் அவலம் பிரதானமானது.
அருந்ததி ராய் "The God of small things" நாவலில் கர்ணனை பற்றி சொல்வது இப்படி!
A brilliant Clown in a bankrupt circus!
கர்ணனின் தோல்வி தோல்வியே அல்ல.
In his miserable defeat lies Karna’s supreme triumph!
...
கிரா கேட்டார் என்னிடம்
"கர்ணன் செய்யாத தர்மம் என்ன தெரியுமா ?"
சொல்லுங்க அய்யா - நான் திரும்ப கேட்டேன்.
" பசித்த வயிறுக்கு சோறு '"
'ஏன் தெரியுமா .கர்ணன் பொண்டாட்டி அவனுக்கே சோறு போட மாட்டாள் . தேரோட்டி மகன் என்ற பூர்வீகம் பட்டத்தரசிக்கு தெரிந்த விஷயம் என்பதால் கர்ணன் மீது அலட்சியம் .அவனுக்கே சோறு கிடைக்காத போது அவன் மற்ற பசித்த வயிறுகளுக்கு எப்படி சோறு போடுவான்?!'
....
கவிஞர் சுகுமாரன் ஒரு கட்டுரையில் கர்ணன் பற்றி அபூர்வ தகவல்கள் கொடுத்திருந்தார்.
கர்ணன் எழுபது ஆண்டுகள் உயிர் வாழ்ந்தான்.
அவனுடைய வளர்ப்பு பெற்றோர் அதிரதன், ராதை இருவரும் அவனுக்கு சூட்டிய பெயர் வசுஷேணன்.
கர்ணனுக்கு இரண்டு மனைவியர். வ்ருஷாலி, சுப்ரியை.
மூன்று புத்திரர்கள்.
இரண்டு பேர் மூத்த தாரத்து பிள்ளைகள். சுப்ரியை யின் ஒரு மகன்.
கவிஞர் சுகுமாரன் ' மகாபாரதத்தின் இலக்கிய மேன்மை - இதிலுள்ளது வேறு பல இடங்களில் இருக்கலாம். ஆனால் இதில் இல்லாதது வேறு எங்கும் இருக்காது.'
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

No comments:

Post a Comment