Saturday, 3 November 2018

ஹைக்கூ

#ஹைக்கூ' கவிதை வடிவம் ..... குமுதத்தில் நட்சத்திர எழுத்தாளர் பன்முக படைப்பாளி திரு. ரங்கராஜனின் (அதாங்க ''சுஜாதா'' - இவர் மேல் கொண்ட பற்று காரணமாக என் அக்காள் மகள் என் மருமகளுக்கு 'சுஜாதா' ன்னே பெயர் வைத்தேன் 1980ல் ) மூலமே அறிமுகம் ....
------------------------------------------------------------------------------
'ஹைக்கூ' எழுத பல மரபுகள் இருந்தாலும் அதில் முக்கியமானது, மூன்றே வரிகள் இருக்க வேண்டும், மூன்றாவது வரியைப் படிக்கும் வரை முதல் இரண்டு வரிகளில் என்னதான் சொல்ல வருகிறார்கள் என்று சஸ்பென்சாக இருக்க வேண்டும், மூன்றாவது வரியில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட வேண்டும். அந்த வகையில் அழகான சில என்னுடைய படைப்புக்கள் ''ஹைக்கூக்கள்''...... இதோ:-
***********************************************************************
* பணக்காரன் ஆகிவிட்டான் பாகன்
இன்றும் பிச்சையெடுக்கிறது
கோவில் யானை.....
------------------------------------------------------------
* ஆணி பித்துக் கொண்ட கால்களுடன்
தைக்கிறான் செருப்புக்களை
செருப்பு தைக்கும் கிழவன் ....
--------------------------------------------------------------
* ஆயிரம் பெற்றோர்கள் உண்டு
முத்தமிட ஒரு குழந்தை இல்லையே
முதியோர் இல்லம் ..........
----------------------------------------------------------------
* நெடுஞ்சாலை விபத்து
உயிருக்கு போராடி இறந்தார்
ஆம்புலன்ஸ் டிரைவர்........
-------------------------------------------------------------------
* எரிவாயு விலை ஏற்றத்தை கண்டித்து
போராடியோர் எரித்துவிட்டனர்
ஏழை குடிசைகளை.......
-----------------------------------------------------------------
*பட்டினி சாவை எதிர்த்து
ஊர் மக்கள் அனைவரும்
இன்று உண்ணாவிரதம்.......
------------------------------------------------------------------
* அதிக வலியில் அழும் போது
"அம்மா" என்று கத்திவிடுகிறது
அனாதை குழந்தை......
-------------------------------------------------------------------
கமெண்டுங்க மத்யமர்ஸ் ...ப்ளீஸ் !!!!

கல்யாண சாவு

2009 அக்டோபர் 17 சனிக்கிழமை.தீபாவளி திருநாள்
--------------------------------------------------------------------------------
காலை ஒரு எட்டுமணி .....நாங்கள் கிறிஸ்டியன்ஸ் ஆகவே கொண்டாட்டம்ன்னாலே அசைவமே பிரதானம் ////பிரமாதம்!!!!!
ஒரு சேவலை கழுத்தை முறித்து கொன்றேன் . இனி வெந்நீரில் முக்கி இறக்கை இன்னபிறவற்றை சுத்தம்செய்து மஞ்சள் தடவி மங்கலக் குளியல் நடத்தி அப்பால ..
வெட்டு குத்து தான் ...வேறென்ன ....
------------------------------------------------------------------------------
ஒரு பொடியன் ஓடோடி வந்தான் ...'பெரியப்பா செத்துட்டாரு' ன்னு நாக்கு குழற சொல்லி ... சொன்னவன் ஓடியே போனான் ...
ஏற்கனவே இரண்டு ஆண்டுகாலம் படுக்கையில் இருந்தவரே ...'' 86 வயது '' ......எனவே பெரிய சோகமில்லை.போனதும் ஆறுதலான விஷயமே ...கல்யாண சாவு ...ன்னே சொல்வேன் ....
ஆனா தீபாவளி அன்னிக்கு..அதுவும் சனிப்பொணம் ..இதான் என்னோட மனசில் மின்னல் அடிச்ச ஒரே விஷயம் ..
பக்கத்துக்கு தெரு உறவுகள் ஒவ்வொண்ணா வந்து கடைக்கோடியில் இருந்த என்னோட வீட்டு வழியாக வடக்கு பக்கம் போய் கிழக்கில் பெரியப்பா வீடு ...
எங்க அப்பா உடன் பிறந்தோர் அவரையும் சேர்த்து மொத்தம் 10பேர்கள் ...ஏழு ஆண்கள் மூன்று பெண்கள் ...
பாலாம்மை மாமி தலைச்சன் ...அப்புறம் முத்துச்சாமி (இறந்தவர்) ...எங்க அப்பா அஞ்சாவது ....ஒரு அக்காள் மூன்று அண்ணன்கள் இரண்டு தங்கைகள் மூன்று தம்பிகள் ...கணக்கு சரியா?
பெரியப்பா பனையேறி & விவசாயி ...
கையளவு நிலம் இல்லாமல் பனையேறி பதநீர் /கருப்பட்டி வணிகம் ..ஆடு மாடு கால்நடை செல்வம் பலுகி பெருகி இறக்கும்போது சுமார் பதினான்கு ஏக்கர் ப்ளஸ் நிலம் ஒரே இடத்தில அவருக்கே சொந்தம்...தென்னந்தோப்பு உண்டு ...
அவருக்கு மக்கள் எட்டு பேர்.ஐந்து பெண்கள் மூன்று ஆண்கள் .
நல்ல சிலம்பாட்டக்காரர்.வர்ம அடி///கலை நிபுணர். பெரிய பலசாலி .
ஒரே ஒரு எ.கா: 1971-ல் எனக்கு அப்போ 10வயசு ஆரம்பம் ...பெரியப்பா கூட வயலுக்கு போனேன்....அது ஒரு ஞாயிறு அன்று.....
பெரியப்பா இரண்டு வாழைக்குலைகளை கயிற்றில் முடிந்து தோளில் துண்டு போல போட்டுக்கொண்டு பக்கத்து ஊரில் சந்தையில் விற்கப் போகும் வேலை...வாழைக்குலையில் தலா நூறுக்கு மேல் காய்கள் ...அப்போ மொத்தம் இருநூறு ....உயரம் மூன்றடிக்கு மேலேயே ...எனக்கு தோள் உயரம் ...இருந்த நினைவு உண்டு ....
நானும் கூடவே போனேன் ..வழியில் ஆட்களை குசலம் விசாரித்து வெற்றிலை போட்டுக்கொண்டு பொறணி பேசி..இப்படியே சந்தை போன நேரம் ஒரு மணி இருக்கும் ..அவர் அந்த வாழை குலைகளை தோள் மாற்றவே இல்லியே...இன்னும் சில சம்பவங்கள் அப்பால தனியா சொல்வேன்...
பெரியப்பா வீடு முன்னால் பெரிய கூட்டம் ..அவங்க வீடு மெய்ன் ரோடு.எங்க உறவுகள் எக்கச்சக்கம் உள்ளூரிலேயே ....எல்லோருமே குஞ்சு குளுவானுங்க கூட ...
யாருக்குமே பெரியப்பா தீபாவளிக்கு செத்துப்போனது பெரிய துக்கமாக இல்லை ....இனி கொண்டாட முடியாதே ன்னு தான் ஒரே சோகம் ....சிலர் எண்ணெய் தேய்த்ததை துண்டால் வழித்தபடியே வந்த்து கலந்து கொண்டது..சோகமே !!!!
பொறவென்ன .... காரியங்கள் மாலையில் முடிந்து வந்து குளித்து இரவுக்கு சேவலை போட்டுத்தள்ளி ...நாட்டுக் கோழிக்குழம்பு...ருசிக்கு கேக்கணுமா என்ன ..கோலாகல தீபாவளி சாப்பாடு மதியம் மாறி இரவு ஆகிப்போனது எனக்கு ஒன்றும் சோகமில்லை ...
ஆனால் எங்க அப்பாவைவிட என்னைக்கவர்ந்த பெரியாவின் மறைவு அப்புறமா கொஞ்சங்கொஞ்சமா என்னை அழ வைச்ச சோகம் ....அது என்னோட சுய சோகம் ...அவரது கல்லறைக்கு போவேன்...தனியாக இருந்து பழசெல்லாம் நினைப்பெனுங்க ...அது ...சொன்னா புரியுமா ?.....ம் ஹூம் !!!!!
எங்க அப்பா மும்பை குவைத் ன்னு பொழைப்ப தேடிப்போனதால அவர் இல்லாத குறையை தீர்த்தவர் பெரியப்பாவே ...
எனக்கு ஸ்பெஷலா ஒரு பனையில் நல்ல இனிப்பு பதநீர் இறக்கி சில்லாட்டையால் வடிகட்டி ஈ எறும்பு நீக்கி ஒரு பூவரசு மரத்தடியில் வைத்து அவரு தரும் ..அது நினைவில்...கண்ணில் நீர் கசிவு...நான் போகும் வரை அந்தப்பனையில் பதநீர் இறக்க மாட்டார் ...எம்பேர்ல அத்தனை பிரியம் ..அன்புள்ள என்னோட பெரியப்பா ....!!!!!
ஒருநாளில் சுமார் நூறுக்கு மேலேயே பனை காலை மாலை ஏறி இறங்கும் உடல் உரம் ...விவசாயப்பணிகள் ..பெரிய மீசை உண்டு ...இன்னும் இன்னும் ...என்னே எண்ணங்கள் !!!!!
இப்போ அதே மீசை என்னோட தம்பி ஜெகராசா அவர் இரண்டாம் மகன் என்னோட செட்டு தானுங்க ......வைத்துள்ளான் ..அனுமதி கேட்டு போட்டோவை போடுறேன் ...ஓகே!!!!
என்னென்னவோ சொல்லி ...அதையெல்லாம் நினைவுக்கு கொண்டு வந்த பதிவைப்போட்ட அட்மின் திரு கீர்த்தி வாசன் ராஜாமணிக்கு ஒரு ஓ போடுங்க !!!!!
நன்றி திருவாளர் ....KR அவர்களே !!!!!!

அமுத அன்னம்

பூமிக்கு பச்சை பட்டு ஆடை அணிந்தது போல், பச்சை பசேல் என இருக்கும் நெல் வயலில், சிதறி கிடக்கும் பயிர்களை உண்ணும் பறவைகளின் சத்தம், நடக்கும் வழி பாதை எல்லாம் தென்னை , மா மற்றும் பல மரங்களின் நிழல், அதனுடன் கூடிய குளிர்ந்த காற்று வீச, தர்மனின் வீட்டை நோக்கி சென்றான் முருகன் .
“ஐயா…” என்கிற குரல் கேட்டதும், வீட்டிலிருந்து அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் வெளியே வந்தார்.
“நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேணும்?”
“என் பெயர் முருகன். இந்த பேப்பர்ல, வயலும் தோப்பும் விற்பனைக்குன்னுற விளம்பரத்தை பார்த்தேன். அதன் வந்தேன்”
“யாருக்கு வேணும்? உங்களுக்கா!!”
“ஆமாம்”
“உங்கள பார்த்தா, படிச்ச புள்ள மாதிரி தெரியுது. நீங்க இந்த வயலை வாங்கி, என்ன பண்ண போறிங்க”
“இந்த வயல் தோப்பை எல்லாம் அழிச்சிட்டு, வெளிநாட்டுக்கு மாமிசங்களை ஏற்றுமதி பண்ற தொழிற்சாலை ஒன்னு கட்ட போறேன். இந்த இடம் ஊருக்கு வெளிய இருக்கு. அதுமட்டுமில்லாமல் நல்ல தண்ணீர் வசதியும் இருக்கு. அதான்”
“ஓ….. அப்படியா!!” என்று பேசிக்கொண்டே இருவரும் நடந்தனர்
மின் இயந்திரத்தில் தண்ணீரை நீர் விழ்ச்சியை போல், சுழற்றி ஊற்றிக்கொண்டிருக்கும் இடத்தில் அமர்ந்தனர்.
“இது என்ன ஐயா? இவ்வளவு வேகமாக தண்ணீரை கொட்டுது”
“இது பம்பு செட்டுப்பா”
“இந்த தண்ணி எங்க போகுது?”
“இங்க இருக்கிற மாமரம், தென்னை மரம், வேப்பமரம்முன்னு எல்லாத்துக்கும் போகுது.
இங்க இருக்கிற சில மரத்துக்கு என்னோட வயசு. எங்க அப்பா நான் பொறந்தப்ப வைச்சது. இதோ உன் பக்கத்துல இருக்கிற மரம், என் பையன் பொறந்தப்ப நான் வைச்சது”
“உங்க பையன் எங்கே? நீங்க மட்டும் தனியாவா இருக்கிங்க?”
“இல்லப்பா, என்கூட இந்த மரங்களும், நான் வளர்க்கிற ஆடுகள், மாடுகள் கோழிகள் என நான் ஒன்னத்தான் இருக்கிறேன். இந்த மரங்களையும், வயலையும் பார்த்தாலே நான் தனியா இருப்பது போல எனக்கு தோனாது”
“அப்போ உங்க மனைவி எங்க?”
“எனக்கு ஒரே பையன். அவன் இந்த வயல் வேலையெல்லாம் செய்யகூடாதுன்னு, நல்லா படிக்க வச்சேன். அவனும் படிச்சு முடிச்சுட்டு அமெரிக்கா போயிட்டான். அங்க போனவன் எங்களை மறந்துட்டு, அங்கேயே ஒரு பொண்ண கல்யாணம் செஞ்சுகிட்டான். அதுவே எங்களுக்கு ஒரு வருஷத்துக்கு அப்புறம்தான் தெரியும். எனக்கு பேத்தி பொறந்திருக்குன்னு, அத பார்க்க யாரும் இல்லன்னு என் பொண்டாட்டிய, அமெரிக்கா கூட்டிட்டு போனான்.
அங்க ஆறு மாசத்துக்கு முன்னாடி, கேன்சர்ல என் மனைவி இறந்த செய்தி போன் மூலம் வந்துச்சு. எனக்கு பாஸ்போர்ட் இல்ல. அதனால உடனடியா என்னால போக முடியல. அங்கிருந்து பாடிய கொண்டுவர நிறைய செலவாகுமுன்னு, என் பையன், எல்லா காரியத்தையும் அங்கே முடிச்சிட்டான். அமெரிக்கா போகும்போது அவளை நான் கடைசியா பார்த்தது” என கூறும் போதே தர்மனின் கண் கலங்கியது. அதை கேட்ட முருகன் மனம் கலங்கினான்.
“அப்போ ஏன் இந்த இடத்தை விற்குறிங்க” என முருகன் கேட்க, “என் பையன் வினோத்துக்கு அமெரிக்கால பிஸ்னஸ் தொடங்கனுமாம். அதனால இந்த இடத்தை எல்லாம் விற்றுட்டு, நானும் அவன்கூட வரணும்னு கண்டிப்பா சொல்லிட்டான். நாளைக்கு அவன் வந்துடுவான். நீங்களும் நாளைக்கு வந்தா பேசி முடிச்சிடலாம்” என தர்மன் பதிலை கேட்டு, அவ்விடம் விட்டு நகர்ந்தமுருகன், அந்த வயல் மரங்களுடனான தர்மனின் பந்தத்தை எண்ணி வியந்து சென்றான். தானும் இது போன்ற ஒரு இயற்கை சூழலில் வளரவில்லையே என்ற ஏக்கத்துடன் தன் பயணத்தை தொடர்ந்தான்.
மறுநாள் வினோத் மனைவி மகளுடன், அமெரிக்காவிலிருந்து வீட்டிற்கு வந்தான். தர்மனும் முதன் முதலாக வந்த தனது பேத்தியை கண்டு ஆனந்தம் கொண்டார். அச்சு அசலாக தன் மனைவியை போல் பிறந்திருந்த அவளை, எடுத்துக்கொண்டு வயலை சுற்றி காண்பித்தார். பேத்தியின் கையால் புதிய ஒரு மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார். பின்பு வீட்டிற்கு வந்த தர்மன், நிலத்தின் பத்திரத்தை எடுத்து, வினோத்திடம் நீட்டினார். அத்துடன் ரமேஷ் வந்ததையும் கூறினார்.
பத்திரத்தை கையில் வாங்கிய வினோத், “நான் அம்மாவ இழந்துட்டேன். அவங்க பாசத்த விட்டு நான்தான் ரொம்ப தூரம் போய்டேன். சந்தோசம் என்பது நம்முடன் இருக்கும் வரை, அதன் அருமை தெரியாது. அது இல்லை என்ற போதுதான், அதன் அருமையும், இழப்பும் நமக்கு புரியும். அம்மாவிற்கு வந்த கேன்சர் கெமிக்கல் நெறஞ்ச உணவால வந்ததுன்னு டாக்டர் சொன்னங்க.
என் அம்மாவை இழந்தது போல, என் குழந்தையும் நான் இழக்க விரும்பல. நம்ம வயல்ல, கெமிக்கல் இல்லாத நல்ல தானியங்களா விவசாயம் பண்ணி, நோயில்லா வாழ்க்கையை உருவாக்கணுப்பா, மனுஷன் உயிர் வாழ ரொம்ப முக்கியம் உணவு. அந்த உணவே விஷமா மாறி, நம் உயிரை எடுக்க கூடாது.
எனக்கும் உங்கள போலவே நல்ல விவசாயம் செய்யறது எப்படின்னு கத்து கொடுங்க. இனி வரும் சமுதாயம் நம்ம பாரம்பரிய உணவை உண்டு, ஆரோக்கியமான வாழ்வை வாழட்டும். நாம் நம் பரம்பரையை காப்பாற்றி, அடுத்த தலைமுறைக்கும், இதனை கற்பித்து, அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாய் திகழ்வோம்” இதை கேட்ட தர்மன், உற்சாகத்தில் தன் மனைவி போல் இருக்கும் தன் பேத்தியை அரதழுவி முத்தமிட்டு தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
நம் நாட்டின் முதுகுஎலும்பான விவசாயத்தையும் விவசாயிகளையும் ஆதரிப்போம். இயற்கை உரங்களை உபயோகித்து, வளமானதொரு பாரதத்தை உருவாக்கி, நம் வாழ்நாளை நீட்டிப்போம்.
**********************************************************************
சோறு /அன்னம் சம்பந்தமான ஒரு கொசுறு கதை
--------------------------------------------------------------------------------
அடையாள சிக்கல் - Identity Crisis.
இதன் தொன்ம குறியீடு கர்ணன்.
மனித துயரங்களில் அடையாள சிக்கல் எனும் அவலம் பிரதானமானது.
அருந்ததி ராய் "The God of small things" நாவலில் கர்ணனை பற்றி சொல்வது இப்படி!
A brilliant Clown in a bankrupt circus!
கர்ணனின் தோல்வி தோல்வியே அல்ல.
In his miserable defeat lies Karna’s supreme triumph!
...
கிரா கேட்டார் என்னிடம்
"கர்ணன் செய்யாத தர்மம் என்ன தெரியுமா ?"
சொல்லுங்க அய்யா - நான் திரும்ப கேட்டேன்.
" பசித்த வயிறுக்கு சோறு '"
'ஏன் தெரியுமா .கர்ணன் பொண்டாட்டி அவனுக்கே சோறு போட மாட்டாள் . தேரோட்டி மகன் என்ற பூர்வீகம் பட்டத்தரசிக்கு தெரிந்த விஷயம் என்பதால் கர்ணன் மீது அலட்சியம் .அவனுக்கே சோறு கிடைக்காத போது அவன் மற்ற பசித்த வயிறுகளுக்கு எப்படி சோறு போடுவான்?!'
....
கவிஞர் சுகுமாரன் ஒரு கட்டுரையில் கர்ணன் பற்றி அபூர்வ தகவல்கள் கொடுத்திருந்தார்.
கர்ணன் எழுபது ஆண்டுகள் உயிர் வாழ்ந்தான்.
அவனுடைய வளர்ப்பு பெற்றோர் அதிரதன், ராதை இருவரும் அவனுக்கு சூட்டிய பெயர் வசுஷேணன்.
கர்ணனுக்கு இரண்டு மனைவியர். வ்ருஷாலி, சுப்ரியை.
மூன்று புத்திரர்கள்.
இரண்டு பேர் மூத்த தாரத்து பிள்ளைகள். சுப்ரியை யின் ஒரு மகன்.
கவிஞர் சுகுமாரன் ' மகாபாரதத்தின் இலக்கிய மேன்மை - இதிலுள்ளது வேறு பல இடங்களில் இருக்கலாம். ஆனால் இதில் இல்லாதது வேறு எங்கும் இருக்காது.'
+++++++++++++++++++++++++++++++++++++++++++++

போகன் வில்லா பூக்கள்

#காகித மலர் - சிறப்பு சிறுகதை
*********************************************
அரக்கு நிறத்தில் ஆரஞ்சு கலர் பார்டர் வச்ச பட்டுப் புடவையில் வசுமதி தேவதையாக ஜொலித்தாள். கிறிஸ்டல் மற்றும் மணி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஆரஞ்சு கலர் ஜாக்கெட் இன்னும் அவளின் அழகை கூட்டியது. இடையை மீறி நீண்டிருந்த கருநாகம் போன்ற ஜடையில் மூன்று வரிசைகளாக தொங்கவிடப்பட்டிருந்த மொட்டு மலராத மல்லி அவளுக்கு மேலும் அழகு சேர்த்துக் கொண்டிருந்தது. குறுகிய நெற்றியும், வகிட்டில் வைக்கப்பட்ட சிகப்பு நிற குங்குமமும் அவள் அழகை மேலும் பிரகாசமாக்கின.
அவள் அழகிற்கு தானும் சளைத்தவனில்லை என காட்டிக் கொண்டான் கமலேஷ். வயலட் கலர் முழுக்கை சட்டையும், அடர்ந்த கறுப்பு நிற ஜீன்ஸ் பேண்டும், தூக்கி வாரிய ஹேர் ஸ்டைலும் அவனை ஆணழகனாக்கின.
“என்னடா வசு, ரெடியா? இதோ, அதோன்னு சொல்லி ஒரு மணி நேரமாச்சு. உன் அண்ணன் குழந்தைய தொட்டிலில் போட தான் போறோம். நீ வரும் வேகத்தை பார்த்தால் பிறந்த நாளுக்கு தான் போவோம் போலிருக்கே”ன்னு கிண்டல் செய்தான்.
”சாரிபா. இதோ ரெடியாயிட்டேன். புது பட்டுப்புடவையில கொசுவம் வைக்க வரல. அதான் லேட் ஆய்டுச்சி. நீங்க காரை ஸ்டார்ட் பண்ணி வைங்க. நான் வீட்டை பூட்டிட்டு வரேன்”
வசுமதியும், கமலேஷும் காதல் மணம் புரிந்தவர்கள். இருவரும் ஒரே ஜாதியாக இருந்ததால் திருமணம் யார் தடையுமில்லாமல் இனிதே முடிவு பெற்று வருசம் பத்தாகி விட்டது. யார் கண்பட்டதோ இந்த ஆதர்ச தம்பதிகள் கொஞ்சி மகிழ குழந்தை செல்வம் இல்லை.
கமலேஷ் செல்வத்தில் திளைப்பவன். வேலைக்கு சென்று சம்பாதிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லைன்னாலும், அப்பா விட்டுச் சென்ற பிஸினசை திறம்படவே நடத்தி வருகிறான். உடன் பிறந்தவர்கள் என்று யாருமில்லை. கமலேஷுக்கு பத்து வயதாக இருக்கும் போதே அவனை பெற்றவள் இறந்து போனாள். தந்தையும் இவனுக்கு மணம் முடித்த கையோடு புண்ணியஸ்தலங்கள் நோக்கி பயணப்பட்டார்.
வசுமதி முற்போக்கு சிந்தனை கொண்டவள். குழந்தை இல்லை என்ற வருத்தம் உள்ளுக்குள் இருந்த போதிலும் அதை வெளிக்காட்டியதில்லை. அப்படி வெளி காட்டிக் கொண்டால பார்ப்பவர்களின் இரக்கத்திற்கு ஆளாக கூடும் என்பதால் அதை தவிர்த்தாள். குழந்தை இல்லை என்பதற்காக ஒருபோதும் சாமியையோ, சாமியாரையோ நாடிச் சென்றதும் இல்லை.
அவளுடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணன், ஒரு தங்கை. அண்ணனுக்கு போன தையில் தான் திருமணம் முடிந்திருந்தது. இதோ குழந்தையும் பெற்று தொட்டிலில் போட போகிறான். தங்கைக்கு திருமணமாகி பத்தாவது மாதமே பெண் குழந்தையை பெற்றெடுத்தாள். இப்போது அந்த குழந்தைக்கு ஒரு வயதாகிறது.
கமலேஷும், வசுமதியும் விசேஷத்துக்கு வந்து இறங்கிவிட்டார்கள். சம்பிரதாய விசாரிப்புகள் எல்லாம் முடிந்து அனைவரும் குழந்தையோடு தொட்டிலருகே சூழ்ந்தனர். வயதில் மூத்த பழம் ஒன்று குழந்தையை தொட்டிலில் போட்டுவிட்டு அதன் காதில் பெயரையும் கிசுகிசுத்துவிட்டு சென்றது. "கொழந்தைக்கு அத்தைங்க வந்து கொழந்தே காதுல பேரை சொல்லிட்டு போங்கோ" என்று அழைத்தவுடன் வசுமதி கணவனுடன் தொட்டிலருகே சென்றாள்.
அதை பார்த்து அங்கிருந்த அனைவரும் ஒருவருக்கொருவர் குசுகுசுவென பேசிக்கொண்டனர்.
அந்த சமயம் பார்த்து வசுமதியின் தாய் பொற்கொடி அவளை தடுத்து, "வசு, நீ முதல்ல போக வேண்டாம்மா. உன் தங்கை போகட்டும். எல்லாரும் முடிச்ச பிறகு நீ போ. நான் சொல்ல வர்றது உனக்கு புரியும்னு நினைக்கறேன். எல்லாம் குழந்தையோட நன்மைக்குதான்மா சொல்றேன்" என்றதை கேட்டு வசுமதிக்கு நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சியது போன்றிருந்தது.
அப்படியே பின்னோக்கி வந்து நின்றாள்.
தங்கை சுமதி கையில் தன் குழந்தையோடு தவித்து கொண்டிருப்பதை பார்த்து விட்டு வசுமதி அவளிடம் சென்று, " சுமி, நீ போய் குழந்தைக்கு பேர் சொல்லிட்டு வா. அதுவரைக்கும் நான் உன் பொண்ணை பார்த்துக்கறேன்" என்றாள்.
"அய்யோ.... இல்ல வசு.... அவ யார்கிட்டயும் அவ்வளவு சீக்கிரம் போக மாட்டா. அழுவ ஆரம்பிச்சுடுவா. உனக்கு எதுக்கு வீண் சிரமம். நானே வச்சுக்கறேன்" என்று நாசூக்காக குழந்தையை தராமல் தவிர்த்தாள்.
இந்த கூத்தையெல்லாம் கமலேஷ் கண்டும் காணாதவன் போல இருந்தான். வசுமதிக்கு ஆறுதல் சொல்ல போக அது மேலும் அவளை கழிவிரக்கம் கொள்ளச் செய்யுமே என்று அமைதியாக இருந்தான். இனிமேல் அங்கிருப்பதில் பிரயோசனமில்லை என்று உணர்ந்தவளாய் வசுமதி தாயிடமும், அண்ணன் மனைவிடமும் சொல்லிவிட்டு கிளம்பலாம் என அவர்களிடம் சென்றாள்.
"அண்ணி, எனக்கு குழந்தையை தூக்கும் தகுதி தான் இல்லாம போச்சு. இந்த செயினையாவது குழந்தைக்கு போடுவீங்களா?" என்று கேட்டவுடன் .....
அண்ணி அவசர அவசரமாக, " என்ன வசு அப்படி கேட்டுட்ட? தாராளமா செயினை போடலாம்" என்றாள் வாயில் முப்பத்திரண்டு பற்களும் தெரியும்படி.
வசுமதி அந்த செயினை குழந்தைக்கு அணிவிக்காமல் அண்ணியின் கையில் கொடுத்துவிட்டு, தாயிடம் சொல்லிவிட்டு கணவனுடன் கிளம்பிச் சென்றாள்.
"என்னங்க, வண்டிய பீச்சுக்கு விடுங்க. கொஞ்ச நேரம் பேசிட்டு போகலாம்"
"எனக்கு தெரியும் வசு, கண்டிப்பா பீச்சுக்கு போக சொல்லுவேன்னு" என்றபடி உதட்டில் மெல்லிய புன்னகையை தவழவிட்டு காரை பீச் ரோடு பக்கம் திருப்பிச் சென்றான்.
இருவரும் ஆள் நடமாட்டம் குறைந்த இடத்தை தேர்வு செய்து அமர்ந்தார்கள். சிறிது நேரம் பலவித எண்ணங்கள் மனதில் அலைமோத கடலலைகளை வெறித்து பார்த்து விட்டு சகஜ நிலைக்கு மீண்டு பேச தொடங்கினாள் வசுமதி.
"குழந்தை இல்லாம இருக்கறது அவ்வளவு பெரிய சமூக குற்றமாங்க? நாமா குழந்தை பிறப்பை தள்ளி போடுறோம்? நமக்கு மட்டும் குழந்தையை கொஞ்சும் ஆசை இல்லையா என்ன? இன்னைக்கு பங்சன்ல கவனிச்சீங்களா? என்னை பெத்த தாயே அண்ணன் குழந்தையை நான் முதல்ல தூக்கி பேர் வைக்க கூடாதுன்னு சொன்னாங்க.கூட பிறந்த தங்கையே அவ குழந்தையை என்கிட்ட தந்தா குழந்தைக்கு ஏதாவது ஆகிடுமோன்னு பயந்து தர தயங்கினா. பெத்தவங்களும், கூட பிறந்தவங்களுமே என் மனசை புரிஞ்சிக்காத போது இந்த ஊரும் உலகமும் புரிஞ்சுக்காம போனதுல என்ன தப்பு இருக்க முடியும்? இவங்களோட இந்த ஈனத்தனமான செய்கையால என் மனசு எந்த விதத்துலயும் காயப்படல.
குழந்தை இல்லையேன்னு மண்ணோட மண்ணாகி போற அளவுக்கு நான் தளர்ந்தும் போகல. அது பிறக்கும் போது பிறக்கட்டும். எனக்கு நம்ம மேல நம்பிக்கை இருக்கு. இதனால கோயில் கோயிலாவும் நான் அலைய போறதில்ல. இவங்களுக்கு பதில் சொல்ற காலம் வரும்போது நான் இவங்கள பார்த்துக்கறேன். கடைசி வரைக்கும் உங்களோட அன்பும், புரிதலும், அரவணைப்பும் இருந்தா அதுவே போதுங்க எனக்கு" என்று ஆதரவாக அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
அவள் பேசி முடிக்கும் வரை காத்திருந்து, அவளுடைய முன் நெற்றி முடிகளை ஒதுக்கி விட்டபடி, " எனக்கு தெரியும் டா வசு, இன்னைக்கு பங்க்சன்ல நீ கண்டிப்பா மூட் அப்செட் ஆவேன்னு. உனக்கு அங்கேயே ஆறுதல் படுத்த நினைச்சேன். அது மேலும் உன்னை கவலைப்பட செய்யுமேன்னு சொல்லாம விட்டுட்டேன். உன்னோட இந்த தன்னம்பிக்கையும், தெளிவான சிந்தனையும் இருந்தாலே போதும் எதுவும் சாத்தியமே. உனக்கு எந்த துறையில் ஆர்வமிருக்கோ அதுல நீ உன்னை ஈடுபடுத்திக்க. உன் எல்லா முன்னேற்றங்கள்லயும் நான் துணையா இருக்கேன். குழந்தை பிறக்கும் போது பிறக்கட்டும். அதுவரை நமக்கு நாமே குழந்தைகளா இருப்போம்" என்று அவளின் மென்மையான கைகளை எடுத்து கன்னத்தில் வைத்துக் கொண்டான்.
மேலும், இரண்டு வருடங்கள் கடந்து விட்ட நிலையில் வசுமதி, தனக்கு பதினைந்து நாட்கள் தள்ளி போனதை தெரிந்து கொண்டு பதட்டப்படாமல், உணர்ச்சி வசப்படாமல் கணவனிடம் சொன்னாள். அவனும் அவ்வாறே உணர்ச்சியை வெளிகாட்டிக் கொள்ளாமல், தாமதிக்காமல் அன்று மாலையே அவர்களின் குடும்ப டாக்டரிடம் சென்றார்கள். செக்கப்பெல்லாம் முடிந்து அவள் தாய்மையடைந்திருப்பதை உறுதி செய்தார். இருவரும் அப்போதும் உணர்ச்சிகளை வெளிகாட்டிக் கொள்ளாமல், வரும் வழியில் ஒரு தரமான இனிப்பகத்தில் இனிப்புகளை வாங்கி குவித்துக் கொண்டு பக்கத்தில் இருந்த அனாதை இல்லத்திற்கும், முதியோர் இல்லத்திற்கும் சென்று அவர்களின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள்.
வீட்டிற்கு வந்தவுடன் மனதில் இத்தனை நாள்பட்ட அவமானங்கள், வேதனைகளை கண்ணீரால் கழுவினாள். அவள் கர்ப்பமாக இருப்பதை கூட பிறந்த வீட்டிற்கு தெரியப்படுத்த விரும்பவில்லை. சரியாக பத்தாவது மாதம் அவள் அழகையும், கமலேஷ் அழகையும் சரிபாதியாக கொண்டு இளவரசன் போல் ஒரு மகன் பிறந்தான். அந்த குழந்தையை தொட்டிலில் போடும் விசேஷத்திற்கு பிறந்த வீட்டினரை அழைத்திருந்தாள். அனைவரும் வந்திருந்தனர்.
அவளுடைய தாய் பொற்கொடி குழந்தையை தூக்கி கொஞ்ச ஆவலோடு அருகில் வந்தாள். உடனே வசுமதி, "அம்மா, ஒரு நிமிஷம், என்னுடைய விருந்தாளிகள் வந்துடட்டும். அவங்க தூக்கி ஆசிர்வதிச்சு பேர் வச்சி தொட்டில்ல போட்ட பிறகு நீங்க தூக்கினா போதும்" என்றாள் அமைதியாக.
பொற்கொடி அதை கேட்டு விதிர்விதிர்த்து போய் நின்றாள். இருக்கும் அத்தனை முக்கிய உறவுகளும் வந்துவிட்டார்கள். இன்னும் இவள் யாருக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள் என அனைவரும் ஆவலாக இருந்தார்கள்.
அப்போது வீட்டினுள் ஒரு பெண்கள் கும்பல் வந்து நுழைந்தது. அவர்களை பார்த்து வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் கேலியும், கிண்டலும் செய்து முகம் சுளித்து நகைத்தார்கள். ஏனென்றால் வந்திருந்த பாதி பேர் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், பாதி பேர் சமுதாயத்தால் மேடையின்றி 'ஏழரை ஒன்றரை', 'ஒன்போது', 'ரெண்டுங்கெட்டான்', 'அரவாணிகள்' என பல பட்டங்கள் சூட்டப்பட்ட திருநங்கைகள்.
அதில் வந்திருந்த வயதில் மூத்த திருநங்கையில் ஒருவரிடம் வசுமதி, குழந்தையை எடுத்து தந்து ஆசிர்வதிக்க செய்து பெயரிடச் சொன்னாள். அந்த அம்மாளும் மிகுந்த சந்தோஷத்துடனும், கண்களில் கண்ணீரோடும் குழந்தையை ஆரத்தழுவி உச்சி முகர்ந்து பெயரிட்டு தன்னாலான அன்பளிப்பை வசுமதி மறுத்த போதும் குழந்தையின் கைகளில் தந்துவிட்டு வசுமதிவிடம், "அம்மா, தாயே உன்னோட இந்த உயர்ந்த குணத்துக்கு, நீ புருஷன் புள்ளைகளோட நூறு வருசம் நல்லாயிருக்கணும்.
எல்லாரும் உன்னை மாதிரியே நல்ல மாதிரி சிந்திச்சா எங்களுக்கு இந்த நிலைமை ஏன் வர போவுது? எங்க சொந்தங்கள் கூட எங்களை வீட்டு விசேஷத்துக்கு அழைச்சதில்ல. நீ இத்தன வருசம் கழிச்சு குழந்தை உண்டாகி பெத்தெடுத்திருக்க. எங்களையும் ஒரு மனுசியா மதிச்சு கூப்பிட்டு பெத்தவங்களையும் ஒதுக்கி வச்சுட்டு எங்களை முன்னாடி சபைல நிக்க வச்சி கெளரவ படுத்திட்ட மா. எங்களுக்கு இந்த மரியாதையே போதும். ரொம்ப சந்தோஷமா இருக்குமா" என்று கண்களில் நீர் பெருக்கோடு உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.
வசுமதி அடுத்தடுத்து நீண்டகாலம் குழந்தைபேறு இல்லாத பெண்களை அழைத்து குழந்தைக்கு பெயரிடச் சொல்லி வாழ்த்தி செல்லும்படி கேட்டுக் கொண்டாள். அவர்களும் அளவிலா மகிழ்ச்சி கரைபுரண்டோட குழந்தையின் பெயரை காதில் சொல்லி ஆசை தீரும் மட்டும் குழந்தையின் அழகை கண்டு ரசித்து கொஞ்சி விட்டு சென்றனர்.
இவர்களெல்லாம் முடித்தபிறகு தாயின் பக்கம் திரும்பினாள். "என்னம்மா, நம்ம வீட்டுக்கு சிறிதும் சம்பந்தமில்லாதவங்கள அழைச்சு குழந்தைய தொட்டில்ல போல சொன்னேன்னு பார்க்கறீங்களா? என்னை இதுபோல ஒரு நல்ல விஷயத்தை செய்ய உத்வேகமா இருந்தவங்களே நீங்கதானே. அதுக்காக என்னோட நன்றியை தெரிவிச்சுக்கறேன். நீங்க தானே அண்ணனோட குழந்தையை தொட்டிலில் போட்டு பெயர் சொல்ல நான் வந்தபோது குழந்தையில்லாதவள்னு தடுத்தீங்க? நானும் உங்க வயித்துல தானே பொறந்தேன். அண்ணனை போலவும், தங்கச்சிய போலவும் நானும் ஒரு குழந்தைக்கு தாயாவேன்னு ஏன் நம்பல. எப்பவும் பட்ட மரமாவே இருப்பேன்னு முடிவே பண்ணிட்டீங்களாமா? தங்கச்சி கூட அவ குழந்தைய என்கிட்ட தந்தா ஏதாவது ஆகிடுமோன்னு நினைச்சி தரல. இப்படிபட்ட குறுகிய சிந்தனையுள்ள உங்களை அழைச்சு முதல்மரியாதை தருவதை விட, இவ்வளவு நாள் குழந்தையில்லாம நான்பட்ட மனவேதனைகளையும், ரணங்களையும், வலிகளையும் தினம் தினம் சந்திச்சுட்டு இருக்கும் இவங்கள அழைச்சு தந்தா உண்மையான சந்தோஷமும், மனபூர்வ ஆசீர்வாதமும் கிடைக்கும்னு தெரிஞ்சி தான் இவங்கள கூப்டேன்.
மணமில்லாத காகித மலரை யாரும் தலையிலும் வைக்க மாட்டாங்க. கடவுளுக்கும் மாலையாக்கி போட மாட்டாங்க. குழந்தையில்லாதவங்களும், திருநங்கைகளும் இன்னைக்கு அந்த நிலைமைல தான் இருக்காங்க.
போதும். இந்த பன்னிரண்டு வருஷத்துல உறவுகளோட உண்மையான முகங்களை நான் பார்த்துட்டேன். நான் பண்ண ஒரே புண்ணியம் எனக்கு கிடைத்த கணவர். அவரோட துணையில்லாம என்னால இத்தனை முள் பாதைகளை கடந்து நான் வந்திருக்கவே முடியாது. எனக்கு இந்த உறவுகளே போதும்" என அவள் உணர்ச்சி பிரவாகமாக மாறி பேசியதை கண்டு அவள் தாய் உட்பட வந்திருந்து அனைத்து உறவுகளும் தலைகுனிந்தனர்.
தன் தாய் பேசுவது முற்றிலும் நியாயமே என்று ஆமோதிப்பது போல தன் பொக்கை வாய் காட்டி சிரித்தது தொட்டிலில் இருந்த குழந்தை.
*******************************************************************

என்னோட யோக ஜாதகம்

என்னோட யோக ஜாதகம் :- பனை ஓலைச்சுவடி
*****************************************************************
பிறந்தேன் மாசி மாசம் 30 இரவில் பங்குனி 1 அதிகாலையில் .....
ஆங்கிலம் ன்னா ....மார்ச் 13 -14....நேரம் அதிகாலை 3-4 க்குள் ...சரியான வேளை...தெரியாது ...
பொக்கிஷம் போல இந்த பனையோலை சுவடிகளை வைத்துள்ளேன் ...
எங்கு போனாலும் கூடவே கொண்டு போவேன் ....
கஸாக்ஸ்தானில் ஆயிரம் அமெரிக்க டாலர் வரை பேரம் பேசி கைப்பற்ற பார்த்தவர்கள் உண்டு...
ஏதோ பரம ரகசிய அபூர்வ ஓலைச்சுவடின்னு நண்பர் ஒருத்தர் கொளுத்திபோட்ட புண்ணியம் ...
இப்போதுள்ள மத்யமர்ஸ் இளையோருக்காக பதிவிடுகிறேன் ...நிறைய பேர்களுக்கு கண்டிப்பாக தெரிய / தெரிந்திருக்க வாய்ப்பு ?.....நஹி
ஏனையோரும் கண்டுகளியுங்கள் ....
லைக்குங்கள் கமெண்டுகளை வாரி வழங்கி தீபாவளி சிறப்பு பரிசாக கொடுத்து கொண்டாட உதவுங்கள் ....
🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍🙏🙏🙏🙏🙏🙏🙏

கஸாக் தீபாவளி

சிறுவயது முதல் கொண்டாடிய தீபாவளிகள் வரிசை கட்டி நிக்குது ..
அணையா தீபமும் வாடா மலரும் கொண்டு வசந்த உற்சவம் ஆக கொண்டாடிய தீபாவளிகள் ...
அப்பா முறை இந்து உறவுகளின் பாச வலையில் சிக்கி ஆனந்த மயமாக கொண்டாடிய உள்ளூர் கொண்டாட்டங்கள் ....
பள்ளி நண்பர்கள் நிறைய பேர்கள் இந்துக்கள் உண்டு என்பதால் அவர்கள் வீட்டுக்கே போய் கொண்டாடிய வளரிளம்பருவம் ஸ்பெஷல் கொண்டாட்டங்கள் ...
கல்லூரியில் திருச்சி தில்லை நகரில் பிலிம் டிஸ்ட்ரிபியூஷன் தொழிலாளி (அவர் முதலாளி என சொல்வதில்லை ) திருவாளர் ராமசாமியோடு திருச்சி மலைக்கோட்டையில் தாயுமானவார் சுவாமி கோயில் அருகே அவரது குடும்ப நண்பர் ஒருவர் சுற்றத்தாருடன் கொண்டாடிய தீபாவளி ....{{{திரு ராமசாமி கட்டை பிரமச்சாரி }}}
சென்னையில் லயோலா காலத்திய நண்பர்கள் ஸ்ரீனிவாசன் ராகவன் சூளைமேடு , அனந்தகுமார் ஆயிரம் விளக்கு பகுதி , புதுப்பேட்டை கண்ணன் ....இவர்களுடன் கொண்டாடிய தீபாவளி ...
1991ல் மும்பையில் மலாடு வெஸ்ட் ஜெய் ஜனதா நகர் கொண்டாட்டம்....
ஒருவாரம் பட்டாசு ஒளி&ஒலியில் ...யம்மாடி மங்களூர் ஷெட்டி குரூப் இளையோர்களின் அதகள கொண்டாட்டங்கள் ...அருமை ...
எனக்கு ஒலி மாசு அலர்ஜி ...ஆனாலும் அவர்களின் பண்டிகைக்கால கொண்டாட்ட உற்சாகம் பாராட்டி மெச்சத்தக்க ஒன்றே என்பதில் உடன்பாடு தானுங்க !!!!
மீண்டும் 1993-95சென்னை திருவான்மியூர் வீட்டில் ....
ஆனா ....
1996 ல் மத்திய மேற்காசிய கஸாக்ஸ்தானில் கொண்டாடிய ''தலை'' சிறந்த ''தலை'' தீபாவளி பற்றியே இப்பதிவு .....
****************************************************************
அங்கு அல்மாட்டி நகரில் ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில் ஆடிட்டர் பணியில் ...
அங்குள்ள புகழ் பெற்ற மருத்துவக் கல்லூரியில் இந்திய மாணவர்கள் பல மாநிலம் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன் அவர்களின் விடுதியில் கொண்டாடிய ஒரிஜினல் இந்தியா நாட்டு தீபாவளி பற்றி சொல்லவே விரும்புகிறேன்.
எண்ணெய்க்குளியல் நஹி ...
இந்திய வகை பட்சணங்கள் இல்லை ....
பட்டாசு லேது ...
ஆனால் அந்த தீபாவளியில் எங்கள் அன்பே எண்ணெய் என எல்லோரையுமே ஆகர்ஷித்து ....
உற்சாமான உரையாடலே இனிப்பு தித்திக்கும் பலகாரங்கள் ஆகி .....
அதிர் வேட்டு சிரிப்புக்களே பட்டாசு தோற்கும் முழக்கமாகி ...
ஆஹா அதுவல்லவோ பேரானந்தம் ...இன்பம் கொள்ளையோ கொள்ளை !!!!
அதெல்லாம் மனக்கண்ணில் திரையில் ஓடுதுங்க !!!!புளகாங்கிதம் .....
-----------------------------------------------------------------------------
இன்று 22 ஆண்டுகளுக்கு பின்னர் என் எண்ணத்தில் உறைந்து போன மகத்தான அந்த என்ன அலைகளை உயிர்ப்பித்து மத்யமர்ஸ் உங்களோடு பகிர்வதில் எல்லையில்லாத ஆனந்தமே ....
----------------------------------------------------------------------------
காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை உள்ள அத்தனை இந்தியக் குடிகளின் ஒன்று சேர்ந்த இணைப்பில் தீபாவளியின் இலட்சணங்கள் இல்லாமல் போனாலும் ...அந்த கொண்டாட்டம் தந்த உவகை உற்சாகம் ஈடு இணை இல்லாதது என அடித்துச் சொல்வேன் ...
பீகாரி புவனா , ஒரிய அனுபமா , குஜராத் மங்களா , ஆந்திரா நிர்மலா ,பஞ்சாபிய ரஞ்சனி ,டில்லி பிரஷாந்தி ....இன்னும் இன்னும் ஆண்கள் பெயர்கள் சொல்லணும்ன்னா ரமேஷ், முஹிதீன் ,தாமஸ் ,மைக்கேல் , மணிபிரபு, சோமாஸ்கந்தர்...அது பெரிய லிஸ்ட் ...
பெயர்கள் நினைவில் நிற்க காரணம் ஆட்டோகிராப் புத்தகமே ...ஓகே
அதற்கு முன்னரும் அப்புறமும் எவ்வளவோ தீபாவளியை இந்த 56 பிளஸ் வருட ஆயுளில் கொண்டாடினாலும் .....
இதுவே ''தலை'' என சிறப்பு பெற்று விளங்கும்...''தலை தீபாவளி'' ..!!!!No automatic alt text available.

Friday, 26 October 2018

MADHYAMAR-Praise

மத்யமரை போற்றி ஒரு புகழ் மாலை / துதி ???!!!
******************************************************************
(((.....கேப்பில் அலங்கார துதியும் உண்டு/அது ஒருவித கவன ஈர்ப்பு சங்கதி ....-
{{{நன்றி ஸ்ரீமதி செல்வி ஷங்கர்-மத்யமர் }}}.... )))
--------------------------------------------------------------------
டாக்டர் ரோஹிணி கிருஷ்ணா அட்மின்களில் ஒருவர் என் தங்கை லதா போஸ்கோவுக்கு வழி காட்டி அவர் என்னை இந்த மத்யமரில் இணைத்தார்.
முதலில் என்னமோ வழக்கமான முகநூல் குழு என்றே வெள்ளந்தியாக என்ட்ரி...
********************************************************************
மத்யமர் ஒரு பொழுது போக்கு அல்ல ...பொழுதை ஆக்கும் அமைப்பு !!!!
இங்கு கிடைத்த நல்ல நட்புக்களை நினைவு கூர்கிறேன் ....
பெயர்களை சொல்லணும்ன்னா ...
அட்மின்ஸ் எல்லோருமே - ஸ்ரீ ஷங்கர் ராஜரத்தினம் , கீர்த்திவாசன் ராஜாமணி , சிவசங்கரன் சுந்தரேசன்,சுவாமிநாதன் ராமசுப்ரமணியன் ,ஸ்ரீமதி ரோஹிணி கிருஷ்ணா, மீனாட்சி ஒலகநாதன் , ரேவதி பாலாஜி
உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேல் இருக்காங்க ...
***********************************************************************
2004 முகநூல் மார்க் சூகர்பர்க் தொடங்கிய பெப்ருவரி தாண்டி மார்ச் மாதம் என்னோட பொறந்த நாள் நேரம் புத்தம் புது கூகிள் மெயில் அக்கவுன்ட் & முகநூல் கணக்கு தொடக்கம் ....
ஆரம்பம் ஒண்ணுமே நல்லாவே இல்லீங்க ...ஒரே ரவுசு ...எனக்கு கணக்கை தொடங்கி தந்தவர் சென்னை தியாகராஜன் ....கணினி தொழில் நுட்பத்தில் ஒரு விற்பன்னர் ...குவைத்தில் எங்களோட ஆடிட் ஆபீசில் வந்து இணைந்த புது நபர் ....என்னோட பழகும் திறமையால் ஒரே வாரத்தில் தீவிர நட்பாகியவர்....
முகநூல் 2008 வரையில் பெரிய மோகம் அல்ல...முள் தான் ...அப்புறம் பாருங்க ஜெட் ஸ்பீட் ....
2010ல் குவைத் விட்டு ஊர் திரும்பினேன்...ஒரு ரெண்டு ஆண்டுகள் எட்டு முகநூல் கணக்குகள் ...ஒவ்வொன்றும் ஒருவகை .....பள்ளி நண்பர்கள் , எங்க ஊர் மக்கள், என்னோட குவைத் ஆடிட் நண்பர்கள் ....இன்னும் பல வகைகள் ...தலா ஒண்ணுன்னு ...
நல்ல பொழுது போக்கு ...நிறைய படிக்கவும் எழுதவும் காலநேரம் ...முக்கியமாய் இன்டர்நெட் வேகம் அதிவேகம் ஆனது ...wimax கனெக்ஷன் 2012ல் பெரிய வரப்பிரசாதம் ....சாதமே வேணாம்ன்னு குழந்தைத்தனமாய் ஆகிப்போனது ....
***********************************************
பல குழுக்களில் மெம்பர் ...ஆனாலும் மத்யமர் போல யாருமே ஆகர்ஷித்து ..என்னையே உள்ளிழுத்துக் கொள்ளவில்லை ...
ஒரே காரணம் மெம்பர்ஸ் இந்த மாதிரி பன்முகத்தன்மையை கொண்டோரில்லை...
*************************************************
என்னோட முகநூல்களில் (8) சுமார் லட்சம் பதிவுகள் + உண்டு....செக் பண்றவங்க பண்ணலாமே ....ஒரே நாளில் 300+ கூட ....போட்டதுண்டு ....நிறைய சரக்கு உண்டு ....வலைத்தளங்கள் / இணைய சரக்கும் அவற்றில் உண்டு ...
எட்டு வயதில் வாசிப்பு தொடக்கம் ....
பத்து வயதில் எங்க ஊர்ல ''தேன்கூடு கழகம்'' ன்னு ஒரு அமைப்பில் மெம்பர் ...
அதில் எழுத ஆரம்பித்து ...கதை,கவிதை,கட்டுரை,நாடகங்கள் ....
இன்றைக்கும் கைவசம் பல ஆயிரம் உண்டு....தமிழ் ஆங்கிலம் ரெண்டிலும் எழுதுவேன் ...
திருச்சி செயின்ட் ஜோசப் & சென்னை லயோலா படிப்பு ...பள்ளி செயின்ட் தெரசாள் & பெனடிக்ட் பள்ளிகள் ....
*******************************************************
இன்று மத்யமர் தளத்தில் நாள் ஒன்றுக்கு சிலமணி நேரங்கள் கட்டாயம் ...பலமணி நேரங்கள் சிலாக்கியம் ....
வார்த்தைகளில் ஜாலம் என் கைவண்ணம் ..கமென்ட் களில் பார்க்கலாம் ..
போட்டோ கமெண்ட்களில் ...தீர்ப்பினை மத்யமர்களே சொல்லட்டும் ...
------------------------------------------------------------------------------
மீண்டும் ரீபீட் :-
==============
மத்யமர் ஒரு பொழுது போக்கு அல்ல ...பொழுதை ஆக்கும் அமைப்பு !!!!
இங்கு கிடைத்த நல்ல நட்புக்களை நினைவு கூர்கிறேன் ....
பெயர்களை சொல்லணும்ன்னா ...
அட்மின்ஸ் எல்லோருமே - ஸ்ரீ ஷங்கர் ராஜரத்தினம் , கீர்த்திவாசன் ராஜாமணி , சிவசங்கரன் சுந்தரேசன்,சுவாமிநாதன் ராமசுப்ரமணியன் ,ஸ்ரீமதி ரோஹிணி கிருஷ்ணா, மீனாட்சி ஒலகநாதன் , ரேவதி பாலாஜி
உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேல் இருக்காங்க ...
வரிசைப்படுத்தினால் ...பயம் இல்லை ..ஆனா பேதமில்லாமல் செய்வது பகீரதப் பிரயத்தனமே ...வேண்டாங்க ...
என்னோட பதிவுகளை பார்த்தாலே தெரிஞ்சுக்கலாம்...
---------------------------------------------------------------------------------
என் சுய புராணம் எதுக்குன்னா மத்யமர் முகநூல் புகழ எனக்கு பல குழுக்கள் சேர்ந்து பங்கெடுத்து பலதும் கண்ட ....எனக்கு...... சிறப்பான தகுதி உண்டென சுட்டி காட்டும் ஒரு சான்றாகவே ....ஓகே
----------------------------------------------------------------------------------
எல்லோருக்குமே நன்றிகள் பல கோடிகளில் ....திசைகள் 10 - வட தென் மேல் கீழ் வடமேற்கு வடகிழக்கு தென்மேற்கு தென்கிழக்கு மேல்பக்கம் கீழ்ப்புறம் லிருந்து வணங்குகிறேன் !!!!
*******************************************************************
நன்றி !!!!😍😍😍💪💪💪🙌🙌🙌😂😂😂