சென்னை பெருங்களத்தூர்.
மாலை நேரத்தை விழுங்கி இரவு மெல்ல தலை நீட்டத் தொடங்கி இருந்தது. மப்பும் மந்தாரமுமான மழைக்கால குளிரில் வெளியே தலை நீட்டாமல் நிலவு , இருளைப் போர்த்தி உறங்கிக் கொண்டிருந்தது.
விடிந்தால் தீபாவளி. ஊருக்குச் செல்வதற்காக காத்துக் கிடந்த மக்கள் வெள்ளத்தில் மூழ்கிய பெருங்களத்தூர் பஸ்நிலையம் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது.
பஸ்நிலையத்திற்கு முன்னூறு நானூறு மீட்டர் முன்னதாகவே ஏரிக்கரையை ஒட்டி ஒரு முஸ்லிம் , மலிவான துணிகளை கடையாய் பரப்பி வைத்திருந்தார். அவர் கடை வரை பஸ்சுக்காக காத்திருப்பவர்களின் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது.
கொஞ்சம் வசதி குறைந்தவர்கள் பேரம்பேசி துணிகளை வாங்கிச் சென்றார்கள். அரைமணி நேரமாய் அந்த வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருந்த ஒருவர் மெல்ல அவரிடம் கேட்டார்.
"நானும் அரைமணி நேரமா பாக்குறேன்... நீங்க நூத்தம்பது ரூபா சொல்லி அவங்க நூறு ரூபாய்க்கு கேட்டாக் கூட குடுத்தீங்க. சரி ... ஆனா கடைசியா ஒருத்தர் நீங்க சொன்ன நூத்தம்பது ரூபாய குடுத்தப்போ நீங்க நூறை மட்டும் எடுத்திட்டு ஐம்பதை திருப்பிக் குடுத்தீங்களே ஏன்? "
"இது ஒரே விலைனு போர்டு போட்ட கடை இல்ல தம்பி. ஏழைபாலைங்க அவங்க பொருளாதாரத்துக்கு ஏத்தாப்புல வாங்குவாங்க. அவங்களுக்கு தரம் முக்கியமில்ல. சொன்ன விலையிலருந்து குறைச்சு வாங்கியே பழக்கப்பட்டவங்க. எனக்கு நூறு ரூபா பொருளுக்கு பத்து ரூபா கெடச்சாப் போதும். அதனாலதான் நூத்தம்பது சொல்லி நூறுக்கு குடுத்திருவேன் . அவங்களுக்கும் மனசு திருப்தி. எனக்கும் நியாயமான வருமானம். கடைசியா வந்தவர் பேரம் பேசாம குடுத்தார். நானும் மனசாட்சியோட திருப்பிக் குடுத்துட்டேன்"
"ஆமா நீங்க எங்க போகணும் தம்பி "
"திருநெல்வேலி போகணும் பாய்"
"இன்னைக்கெல்லாம் பஸ் ஏறிப் போறது செத்துப் பொழைக்கிறதுக்கு சமம். பார்த்தா படிச்சவங்க மாதிரி இருக்கீங்க. ரயில்லயோ பஸ்லயோ ஒரு மாசம் முன்னாலயே ரிசர்வ் பண்ணி இருக்கலாம்ல"
" கார் இருக்கு. எப்பவும் அதுலதான் ஊருக்குப் போவேன். இன்னைக்கு மத்தியானம்தான் காருக்கு அடில போய் சென்சார் ஒயர எலி கடிச்சிருச்சு. ஒர்ஷாப்ல உடனே ரெடி பண்ண முடியாதுனுட்டாங்க. அதான் பஸ்ல போலாம்னு பார்த்தா, ரொம்ப சிரமமாயிரும் போலயே .. "
"கொஞ்சம் லேட்டானா இடம் கிடைக்கும். வெயிட் பண்ணுங்க தம்பி" என்றவர் மணி பார்க்கிறார். 7.25
என்றது கடிகாரம். "அடடா இரவு தொழுகைக்கு நேரமாச்சே. தம்பி நான் தொழுகைக்கு போய்ட்டு வாரேன். உங்களுக்கு பஸ் வர்ற வரைக்கும் பார்த்துக்கிறீங்களா ... பஸ் வந்தா போயிருங்க , ஆண்டவன் பாத்துக்குவான்"
"சரிங்க பாய் "
அவர் தொழுகைக்குப் போய் வருவதற்குள் எண்ணூறு ரூபாய்க்கு வியாபாரம் செய்து வைத்திருந்தார். நாகர்கோவில் சென்ற இரண்டு ஆம்னி பஸ்களையும் ஒரு அரசு பஸ்ஸையும் தவற விட்டிருந்தார்.
"இந்தாங்க பாய் எண்ணூறு ரூபாய் ... துணி கேட்டு வந்தவங்களுக்கு நீங்க விக்கிற மாதிரியே குடுத்தேன்"
"மாஷா அல்லாஹ்.... அல்லா உங்களை சுவனவாசி ஆக்கட்டும். ஆமா ... உங்களுக்கு ஒரு பஸ்சும் வரலயா "
"வந்துச்சு. நான்தான் போகல பாய். என்னை நம்பி பொறுப்பை குடுத்துட்டு போய் இருக்கீங்க. அதை அம்போனு விட்டுட்டுப் போயிருந்தா என்னால நிம்மதியா தீபாவளி கொண்டாடி இருக்க முடியாது பாய்"
"நல்லது தம்பி. இன்னும் பஸ் வந்துகிட்டுதான் இருக்கும். கண்டிப்பா சீட் கிடைக்கும். ஆமா உங்களுக்கு எத்தனை குழந்தைங்க "
"ஒரே பையன்தான். ஏழு வயசாகுது"
"ஓ ...." என்றவர், அந்தப் பையனுக்குத் தகுந்தாற்போல் தன்னிடம் இருந்ததிலேயே விலையுயர்ந்த(!) ஒரு பென்சில் பேண்ட்டையும் ஒரு டீசர்ட்டையும் ஒரு கேரிபேக்கில் போட்டு அவரிடம் கொடுத்தார்.
"இந்தாங்க தம்பி. உங்க பையனுக்கு என்னோட தீபாவளி பரிசா வச்சுக்குங்க"
"அய்யோ ... வேண்டாம் பாய். நீங்க சொன்னதே போதும். நான் ஏற்கனவே புதுத் துணி எல்லாருக்கும் எடுத்துட்டேன்."
"பரவால்ல .... நீங்க போடுற அளவு ரிச்சான துணிகள் என்கிட்ட இல்ல. இருந்திருந்தா குடுத்திருப்பேன். பையன் போடாட்டாலும் உங்க வீட்டுப் பக்கம் இருக்கிற ஒரு ஏழைப் பையனுக்கு குடுங்க. ஆனா நீங்க இதை வாங்கிக்கிட்டாதான் எனக்கு சந்தோசமா இருக்கும்"
"என்னங்க பாய் இப்படி வற்புறுத்துறீங்க" என்று வாங்கிக் கொண்டார். தன் இரண்டு பைகளில் ஒன்றைத் திறந்து துணியை வைத்துக் கொண்டவர், அதிலிருந்து பெரிய ஸ்வீட் பாக்ஸ் ஒன்றை வெளியில் எடுத்து ஒரு கேரிபேக்கில் போட்டு அவரிடம் நீட்டினார்.
"இந்தாங்க பாய், குப்தா ஸ்வீட்ஸ். வீட்டுக்கு கொண்டு போங்க."
"குப்தா ஸ்வீட்சா ... ரொம்ப காஸ்ட்லி ஆச்சே. பிள்ளைக்காக வாங்கி இருப்பீங்க. நீங்க கொண்டு போங்க தம்பி"
"அப்போ நானும் டிரெஸ்சை திருப்பித் தந்திருவேன்"
"சரிசரி குடுங்க தம்பி" என்று ஸ்வீட்சை வாங்கி ஒரமாய் வைத்தவர், " வோய் கரீம் பாய் ... இங்க என்னவே பண்றீரு" என்ற குரல் கேட்டு திரும்பினார். கடையை ஒட்டி ஓரமாய் நின்றிருந்த காரில், ஸ்டீயரிங்கைப் பிடித்தபடி சார்லஸ் அமர்ந்திருந்தார். பக்கத்து இருக்கையில் அவர் மனைவி.
"தீபாவளி வியாபாரம் பாக்குறேன் வோய். பாத்தா தெரியல "
"பத்து வருசம் முன்னால இருந்த அந்த நக்கலும் நையாண்டியும் இன்னும் உம்மை விட்டுப் போகல வோய் .... எப்படி இருந்த மனுசன். தாம்பரத்துலயே கொடிகட்டிப் பறந்த ஜவுளிக்கடை முதலாளி. உன் கடைய ஒட்டி அந்தப் பாலம் மட்டும் வராம இருந்திருந்தா உன் கடையும் இடிஞ்சிருக்காது. நீயும் இந்த நிலைமைக்கு வந்திருக்க மாட்டே. எல்லாம் நேரம் வோய்"
"முடிஞ்சத பேசி பிரயோஜனம் இல்ல சார்லசு. நடப்பதெல்லாம் நன்மைக்கே. எல்லாம் அவன் செயல்" என்று மேலே கையை உயர்த்தினார் பாய்.
*******
அதே நேரம் திருநெல்வேலி செல்பவருக்கு போன் வந்தது.
"என்னடி சரசு "
"ஏன்னா பஸ் ஏறிட்டேளா"
"இன்னும் இல்ல. பஸ் ஸ்டேன்ட்லதான் வெயிட் பண்ணின்டிருக்கேன்."
"பட்டுக்கோட்டைலருந்து அத்திம்பேர் குடும்பமெல்லாம் வந்துட்டாங்கோனா. பத்மநாபன் இன்னும் பஸ்ஸே ஏறலயா. பணம் போனா பரவாயில்லே. டாக்சி பிடிச்சுண்டு வரச் சொல்லுனு சொல்றாங்கோ."
"இன்னும் அரைமணிநேரம் வெயிட் பண்ணிட்டு பஸ் கிடைக்கலேனா டாக்சி பிடிச்சுடலாம்னுதான் இருக்கேன்"
"ஏன்னா ... ரகு, குப்தா ஸ்வீட்லருந்து பலகாரம் கேட்டானே ... வாங்கிட்டேளா "
"அந்தப் பக்கம் போக பொழுதே ஒழியலடி. அங்க வந்து சாந்தி ஸ்வீட்ஸ்ல வாங்கிடலாம்"
"என்னமோ போங்கோ ... ரகுவை நீங்க சமாளிச்சுண்டா சரி"
""சரி போனை வை. பஸ் ஏறிட்டு போன் போடுறேன்"
*******
"ஏம்பா சார்லசு ... நாகர்கோயிலுக்கா போற"
"ஆமா வோய். தொடர்ச்சியா நாலுநாள் லீவு. அதான் ஊரைப் பாக்க போய்ட்டு வரலாம்னு கிளம்பிட்டோம் "
"வழில யாரையாவது பிக்கப் பண்றியா"
"அதெல்லாம் இல்ல வோய். நாங்க ரெண்டு பேர் மட்டும்தான்."
"அப்போ எனக்கு ஒரு உதவி செய்வியா"
"என்ன செய்யணும் ... உன்னை தூக்கிட்டுப் போய் திருநெல்வேலில போடணுமா" என்று கலகலவென சிரித்தார் சார்லஸ்.
"அட கூவ. என்னை இல்லடே ... அந்த தம்பிய கூட்டிப்போய் திருநெல்வேலில இறக்கிரணும்"
"அந்த தம்பி யாரு"
"என் நண்பர்தான்"
"எனக்குத் தெரியாம உனக்கு ஒரு நண்பனா வே ... ரொம்ப மாறிட்ட வோய். உன் நண்பர்னு சொல்ற. உன் நண்பர் எனக்கும் நண்பர்தான். மூணாம் மனுசன் மாதிரி கேட்டுக்கிட்டு நிக்கிற ... உள்ள ஏத்தி விடும்வோய் ... "
"தம்பி ... இவன் சார்லஸ். என் பால்ய நண்பன். இவன் நாகர்கோவில் போறான். உங்களை திருநெல்வேலில இறக்கிருவான். ஏறிப் போங்க தம்பி"
பத்மநாபனுக்கு சட்டென்று முகம் பிரகாசமாகியது. கையை பிடித்துக் கொண்டார். "பேருதவி செஞ்சீங்க பாய்"
"அதெல்லாம் ஒண்ணுமில்ல. ஏறுங்க என்ற பாய், மறக்காமல் சொன்னார்.... "உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் தம்பி"
"ரொம்ப தேங்க்ஸ் பாய் " என்ற பத்மநாபன் காரில் ஏறி அமர்ந்தார்.
"டேய் ... ஆக்கங்கெட்ட கூவ ... மழை வர்ற மாதிரி இருக்கு. துணியெல்லாம் மூட்டை கட்டிட்டு வீடு போய் சேரு"
"சரிடா ... ரோடெல்லாம் ரஷ்ஷா இருக்கும். பத்திரமா பார்த்துப் போ."
அனைவரும் கைகளை ஆட்டிக் கொண்ட பின் கார் மெல்ல ஊர்ந்து போகத் தொடங்கியது.
கரீம் பாய் துணிகளை எல்லாம் பேக் செய்து விட்டு , அந்த ஸ்வீட் பாக்ஸை இப்போதுதான் கூர்ந்து கவனிக்கிறார். அதன் மேல்பகுதியில் ரோஸ் நிற இரண்டாயிரம் ரூபாய் தாள் ஒன்று செருகப்பட்டிருந்தது. கள்ளம் கபடமில்லாமல் காந்தி தாத்தா பொக்கை வாய் திறந்து சிரித்துக் கொண்டிருந்தார்.
"யா அல்லாஹ்" என்று அனிச்சையாய் கார் சென்ற திசையை திரும்பிப் பார்க்கிறார். அது பல்லாயிரம் சிவப்பு புள்ளிகளுக்கிடையே கலந்து போயிருந்தது, மனதால் கலந்து போன இந்த மூன்று மனித(ங்)ர்களைப் போல 😍
No comments:
Post a Comment