Friday, 2 June 2017

அது ஒரு பிரபலமான ஆசிரமம். அதன் மடாதிபதி அதை நல்ல முறையில் நிர்வகித்து வந்தார். தினமும் உபன்யாசம், தியானம், பூஜை என்று ஏகப்பட்ட பக்தர்கள் குவிந்து வந்தனர்.
ஆனால் அந்த மடாதிபதியின் மகனோ ஒரு தறுதலை. பொறுப்பில்லாமல் ஊர் சுற்றி வந்தான். ஒருநாள் மடாதிபதி மகனை அழைத்து "இனிமேல் நீ இங்கிருக்க வேண்டாம். உன் பங்கை எடுத்துக்கொண்டு ஓடிவிடு." என்று ஒரு கழுதையையும் கொஞ்சம் பணத்தையும் கொடுத்து விரட்டிவிட்டார்.
மகனும் ஊர் ஊராகச் சுற்றி பணத்தையெல்லாம் காலி செய்துவிட்டான். கழுதையும் நோய் வாய்ப்பட்டு ஒருநாள் இறந்து விட்டது. இவன் கழுதையை ஒரு இடத்தில் புதைத்துவிட்டு அதன்மேல் மண் மேடாக்கிவிட்டு பக்கத்தில் அமர்ந்து கண்களை மூடி இனிமேல் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
ஊர் மக்கள் இதைப் பார்த்துவிட்டு யாரோ ஒரு மகானின் சமாதியருகில் ஒரு சாமியார் தவம் செய்துக் கொண்டிருக்கிறார் என்று ஊர் முழுக்க செய்தியை பரப்பிவிட்டனர். கூட்டம் கூடிவிட்டது. மக்கள் காசு போட ஆரம்பித்து விட்டனர்.
இவனும் சமாதியின் மேல் பீடம் கட்டி சுற்றிலும் சுவர் எழுப்பி கோவிலாக்கிவிட்டான். வாய்க்கு வந்ததை எல்லாம் அருள்வாக்கு என்று கூறினான். அவனுடைய தந்தையின் ஆசிரமத்தை விட இவனது ஆசிரமம் பிரபலமாகி விட்டது.
இந்த ஆசிரமத்தை பற்றி கேள்விப்பட்ட அவனது தந்தை இவனைக் காண வந்தார். வந்து பார்த்தால் தன மகன்.
"மகனே எப்படி இவ்வளவு வளர்ந்தாய்?" என்று கேட்டார். மகன் நடந்ததைச் சொன்னான். "இந்த சமாதியில் இருப்பது நீங்கள் கொடுத்த கழுதைதான்." என்றான்.
தந்தை சொன்னார் "மகனே நம் ஆசிரமத்தில் இருக்கும் சமாதியில் இருப்பது இதனுடைய தாய்தான்." என்றார்.
எந்தெந்த ஆசிரமத்தில் எந்தெந்த கழுதைகள் புதைக்கப் பட்டுள்ளதோ...
இந்தியாவில் குருமார்களுக்கு பஞ்சமேயில்லை. போலி வேஷதாரிகளை குருவாக கொள்வர் சீரழிவர். இறைவனிடம் பக்தி செய்து நல்ல குருவை காட்ட வேண்டுவோம்.

No comments:

Post a Comment