Friday 2 June 2017

பூலாங்குளம் என்ற ஊரில் எழிலரசன் என்ற குட்டி எலி ஒன்று இருந்தது. அது அரண்மனையில் சந்தோசமாக வாழ்ந்து வந்தது.
ஒரு நாள் அரண்மனையை விட்டு வெளியே வரும்போது அதனை பூனை ஒன்று துரத்தியது. பூனை துரத்தியவுடன் குட்டி எலி மறைவிடம் தேடி ஓடி ஒளிந்து கொண்டது.
“எலியை விட பூனைதான் உலகில் பலசாலி. எனவே நாம் பூனையாக மாறினால் உலகின் பலசாலியாக இருக்கலாம்” என்று எண்ணியது.
கடவுளிடம் தன்னைப் பூனையாக மாற்றும்படி வேண்டிக் கொண்டது.
குட்டி எலியின் வேண்டுதலை கேட்டு இறைவன் எலியை பூனையாக மாற்றினார். பூனையாக மாறியவுடன் ‘நான் உலகின் பலசாலி’ என்று கூறி எலி மிகவும் மகிழ்ச்சி அடைந்தது.
சில நாட்கள் கழித்து பூனை நாய் ஒன்றினைக் கண்டது. நாயைப் பார்த்தவுடன் பூனைக்கு பயம் ஏற்பட்டது.
‘பூனையை விட நாயே பலசாலி’ என்று நினைத்து கடவுளிடம் “என்னை நாயாக மாற்றுங்கள் இறைவா” என்று வேண்டியது.
இறைவனும் பூனையை நாயாக மாற்றினார். மிக்க மகிழ்ச்சியுடன் நாய் இங்கும் அங்கும் ஓடியது.
ஒரு நாள் கடைத் தெருவில் சென்ற நாயினை மனிதன் ஒருவன் அடித்து விட்டான். அதனைக் கண்ட நாய் “மனிதனே பலசாலி” என்று நினைத்தது.
கடவுளிடம் “என்னை மனிதனாக மாற்றுங்கள் இறைவா” என்று வேண்டியது. கடவுளும் நாயினை மனிதனாக மாற்றி விட்டார்.
சந்தோசமாக இருந்த மனிதன் ஒரு நாள் காட்டு வழியே பயணம் செய்தான். அப்போது சிங்கம் ஒன்று எதிரே வந்தது. சிங்கத்தைக் கண்ட மனிதன் பயந்து புதரில் மறைந்து கொண்டான்.
சிங்கமே உலகின் பலசாலி என்று எண்ணி மனிதன் கடவுளிடம் “கருணைமிக்க இறைவா, என்னை சிங்கமாக மாற்றுங்கள்” என்று வேண்டினான்.
மனிதனின் வேண்டுகோளை ஏற்று கடவுளும் மனிதனை சிங்கமாக மாற்றினார். சிங்கமாக மாறியவுடன் “உலகில் நானே பலசாலி” என்று கூறி கர்ஜித்தது.
மகிழ்ச்சியாக காட்டில் வாழ்ந்து கொண்டிருந்த சிங்கம் ஒரு நாள் வலையில் அகப்பட்டுக் கொண்டது. அப்போது அவ்வழியே வந்த எலி ஒன்று வலையைக் கடித்து சிங்கத்தைக் காப்பாற்றியது.
சிங்கம் “எலியே உலகின் பலசாலி” என்று எண்ணி கடவுளிடம் “என்னை மீண்டும் எலியாக மாற்றுங்கள் இறைவா” என்று வேண்டியது.
கடவுளும் சிங்கத்தை மீண்டும் எலியாக மாற்றிவிட்டார்.
குழந்தைகளே!, எலி பிறரைப் பார்த்து ஏக்கப்பட்டு அவரைப் போல மாறியது. அப்படி பல முறை மாறிய போதும் அதற்கு மகிழ்ச்சி இல்லை.
நாமும் பிறரைப் போல் மாற வேண்டும் என்று
எண்ணாமல், நமது பலம் பலவீனங்களை அறிந்து சிறப்பாகச் செயலாற்ற வேண்டும் என்பதை மேலே உள்ள கதையின் மூலம் அறிந்து கொண்டீர்கள் தானே.

No comments:

Post a Comment