Friday 2 June 2017

மே31 சர்வதேச புகைத்தல் எதிர்ப்பு தினமாகும்.
அதனை முன்னிட்டு புகைத்தல் பற்றிய பார்வையை இங்கு விளக்குவோம்.
இன்று கெட்ட பழக்கமாக இருக்கும் சிகரெட், சுருட்டு, பீடி போன்றவை ஆரம்ப காலத்தில் பரவலாக இல்லாமல் இருந்த காரணத்தினாலும் இவற்றுக்கும் பயன்படுத்தப்படும் புகையிலை முதலானவற்றினால் விளையும் சுகாதாரக் கேடுகள் பற்றி அன்று அறியப்படாமல் இருந்த காரணத்தினாலும் புகைத்தல் பற்றி தெளிவான கருத்துக்கள் வழங்கவில்லை. 
அண்மைக் காலம் வரை புகையிலையின் தன்மை, புகைத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றிய அறிவுபூர்வமான, விஞ்ஞான ரீதியிலான தெளிவான முடிவுகள் பெறப்படாததனால் புகைபிடித்தல் பற்றிய தீர்ப்பிலும் கருத்து வேறுபாடுகள் நிலவி இருக்கின்றன. சிலர் புகைத்தல் தவறு என்றார்கள். வேறு சிலர் பிழையானதல்ல என்றார்கள். ஏன் தவறு எனக்காண்போம்.
1.போதையை எற்படுத்துதல்:
புகைத்தல் போதையை ஏற்படுத்துகின்றது. குறிப்பாக ஆரம்பபழக்கமுடையோருக்குச் சிறிது கூடுதலாகவே போதை ஏற்படுகிறது. ஏனைய போதை பொருட்களைப் பாவிப்பதன் மூலம் ஏற்படுகின்ற அளவுக்குப் போதை ஏற்படாத போதும், மிகக் குறைந்த அளவிலாவது புகைப்பவர்கள் போதை கொள்கிறார்கள். 'குறைந்தளவு போதையை ஏற்படுத்தக் கூடியதும் தவறே.
2.சோர்வை ஏற்படுத்தல்:
புகைப்பதனால் போதை ஏற்படுவது இல்லை என்று வாதிப்போரும் புகைத்தல் சோர்வை ஏற்படுத்துகிறது என்பதை மறுப்பதில்லை. உடல் உறுப்புக்களில் சோர்வை ஏற்படுத்தக் கூடியவற்றையும் தடுத்து விலக்குவதே நன்று.புகைப்பதனால் மூன்று வகையான தீமைகள் விளைகின்றன.
(i) உடல் நலனுக்கு ஏற்படும் கேடு:
புகைப்பதனால் உடல்நலனுக்கு ஏற்படும் பயங்கரமான பாதிப்புக்களை பற்றியும் சுகாதாரக் கேடுகளைப் பற்றியும் நவீன மருத்துவம் மிக விரிவாகப் பேசுகிறது. ஒரு காலத்தில் புகைத்தலால் ஏற்படும் பாதிப்புக்கள் பற்றி உறுதியான, முடிவான, அறிவியல் ரீதியான ஆய்வுகள், முடிவுகள் இருக்கவில்லை என்பதனால் இது பற்றிய நிலைப்பாடுகளும் வேறுபட்டன. ஆனால் இன்று இதன் கேடுகள் குறித்து எத்தகைய சந்தேகத்தையும் ஏற்படுத்த முடியாத அளவுக்கு இது பற்றிய ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
தொண்டை அல்லது வாய்ப் புற்றுநோய் அபாயத்தை புகைப்பிடித்தல் தோற்றுவிக்கிறது. மேலும் புகைப் பிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்கள் உணவுக்குழல், இரைப்பை புற்றுநோயினால் இறக்கும் அபாயம் அதிகம் இருக்கிறது. புகைப்பிடிக்காதவர்களைவிட புகை பிடிப்பவர்கள் சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரக புற்றுநோய் ஆகியவற்றாலும் தாக்கப்படும் ஆபத்தும் அதிகம் என ஆய்வுகள் கூறுகின்றன.
புகைப்பிடித்தல் இருதய நோய்;களுக்கும் முக்கிய காரணமாக விளங்குகிறது. புகைக்கப்படும் சிகரெட்டின் எண்ணிக்கை அதிகரிக்கும் அளவுக்கு மாரடைப்பு ஏற்றபடுவதற்கான வாய்ப்பும் தீவிரமடைகிறது. சிகரெட்டில் நிகோடின் அடங்கலான 4000 கேடு விளைவிக்கும் இரசயானப் பொருட்கள் இருப்பதாக விஞ்ஞானம் கூறுகிறது.
புற்றுநோய், இருதய நோய்கள் மட்டுமன்றி புகைப்பிடிப்பதால் அபாயகரமான சுவாசக் கோளாறுகளும் ஏற்படுவதாக அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. மார்புச் சளி, ஆஸ்துமா, எம்பிஸிமா(Emphysema) உட்பட மற்றும் பல சுவாசக் கோளாறு நோய்களை புகைத்தல் தீவிரப்படுத்துகிறது என்பதற்கு போதிய அறிவியல் ஆதாரங்கள் கிடைக்கின்றன.
(ii) பொருள் நஷ்டம்:
இரண்டாம் வகைக் கேடு பொருள் நஷ்டமாகும்.
புகைப்பிடிப்பதனால் பணம் விரயமாகிறது. உடலுக்கோ, ஆன்மாவுக்கோ எத்தகைய பயனுமளிக்காத ஒன்றிற்காக பணம் விரயமாக்கப்படுகிறது. வீண்விரயம் செய்வதை யாரேனும் விரும்புவரோ?.
(iii) ஆன்மாவுக்கு ஏற்படும் தீங்கு
புகைத்தலுக்கு பழக்கப்பட்டவர்கள் தமது மனோவலிமையை இழந்து இத்தீய பழக்கத்துக்கு அடிமையாகி விடுகின்றனர்.ஏதோ காரணத்தால் புகைபிடிக்கின்ற சந்தர்ப்பத்தை இழக்கின்ற வேளையில் இத்தகையோரின் நடவடிக்கைகள் எவ்வளவு தூரம் கேவலமானதாகவும் கீழ்த்தரமானதாகவும் அமைகின்றன என்பதை அன்றாட வாழ்க்கையில் நம்மால் காண முடியும்.
எனவே, சுகாதார கண்ணோட்டத்தில் நோக்கினாலும், பொருளாதார கண்ணோட்டத்தில் பார்த்தாலும் ஆன்மீகக் கண்ணோட்டத்தில் அணுகினாலும் புகைபிடித்தல் தவறு என்ற கருத்தே மிகைத்து, பலமானதாக விளங்குகிறது.

No comments:

Post a Comment